உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 20
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 20
நேரம் காலை மூன்று மணியாகியிருந்தது.
பெங்களுர் விமான நிலையத்திலிருந்து கிளம்பி வீட்டை வந்தடைந்தாள் வேணி.
முகப்பறையில் சோஃபாவில் அமர்ந்து தலையை பின்னே சாய்த்து கண் மூடினாள்.
மனம் முழுதும் அவனின் நினைவுகள். பாரமாய் நெஞ்சை அழுத்தியது அவனின் பிரிவு. அவனைக் கண்ட நாள் முதல் இன்றைய நொடி வரை அனைத்து நிகழ்வுகளும் ஓடியது அவளின் மனக்கண்ணில். கண்ணை திறந்தவள் தன்னருகிருந்த மெத்தையை தடவிக்கொடுத்தாள். அவன் அமரும் இடம். அங்கமர்ந்து அவன் கூறிய வார்த்தைகள் அன்றைய நிகழ்வுகள் அவள் நினைவிலாடின.
திருமணம் முடிந்து பெங்களூர் வந்திருந்த சமயமது. இவர்களை செட்டில் செய்துவிட்டு இவர்கள் வீட்டு பெரியவர்கள் ஊருக்கு செல்ல இவர்கள் வழியனுப்பிவித்து வந்த சமயமது.
அது மதிய நேரம்… இது வரை உடன் இருந்த உறவினர்களை வழியனுப்பி விட்டு, வெளியில் உணவு உண்டுவிட்டு தங்களின் பெங்களூர் வீட்டிற்கு வந்தனர் இளாவும் வேணியும்.
என்ன தான் இளா நண்பனாய் நன்கு பரிச்சயமானவனாய் இருந்தாலும், இவ்வாறு ஒரு வீட்டில் ஓர் ஆணுடன் தனித்து இருப்பது அம்சவேணிக்கு பெரும் தயக்கத்தை விளைவிக்க, அவளுடையப் பொறுப்புச்சுமை பற்றி அவளின் தாய் கூறிச்சென்றது வேறு அவளை வெகுவாய் வாட்ட, அதிலும் பெற்றோர்கள் ஊருக்குச் சென்றது புது மணப்பெண்ணாய் அவளின் மனதை வருந்தச் செய்ய, அனைத்துமாய் அவளின் மனதை அழுத்த, மனதில் கவலைக் குடிக்கொண்டது.
உடை மாற்றி விட்டு வந்த இளா, முகப்பறையில் அமர்ந்திருந்த வேணியின் வேதனை முகம் கண்டதும், அவளின் அருகில் அமர்ந்தவன்,
அவளின் கைகளைப் பிடித்து, “என்னாச்சு அம்ஸ்?” எனக் கேட்டு அவளின் தலையை வருட, அவளின் தலை தானாய் சாய்ந்து இளைப்பாறியது அவனின் தோளில்.
அவனின் முழங்கையை தன்னிரு கைகளால் பற்றியவள், தன் முகத்தை அவனின் தோளில் புதைத்தாள்.
எவர் முன்னும் தன் கண்ணீரை காண்பிக்காது கட்டுப்படுத்துபவள், இளாவிடம் மட்டுமே அவள் அவளாய் இருப்பாள். பெற்றோரின் பிரிவும் அவளை வருத்தியிருக்க கண்ணில் வழிந்த நீரை அவள் தோளில் புதைத்திருந்தாள்.
“அம்மா அப்பா ஊருக்கு போனதால கஷ்டமாயிருக்கா அம்ஸ்?” என இளா கேட்க, தோளிலிருந்து முகத்தை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவள்,
“எனக்கு பயமாயிருக்கு இளா. லைப் எப்படி போகும்? என்னமோ மனசு சங்கடமா இருக்கு. நீ என் ஃப்ரண்ட் ஆனதுல இருந்து இது வரை உன் கூட இருக்கும் போது நான் என்னிக்குமே என்னைய பத்தி கவலைப்பட்டது இல்லடா. ஏன் உன்னை பத்திக்கூட நான் யோசிச்சது இல்ல. ஆனா அம்மா போகும் போது என்னுடைய பொறுப்புகளைச் சொல்லும் போது தான் உனக்காக நான் இதுவரை யோசிக்கவே இல்லையேனு கில்டியா ஃபீல் ஆகுது இளா. நாம கல்யாணம் செய்ய டிசைட் செஞ்சதும், நான் எதை பத்தியும் யோசிக்காம ஃப்ரண்டாவே உன்னை நினைக்கனும்னு நீ சொன்னதுல நிஜமாவே எதையும் யோசிக்காம இருந்துட்டேனேடா. இப்ப அம்மா சொல்ல சொல்ல அடி வயித்துல அப்படியே ஒரு பயப்பந்து உருண்டுச்சு பாரு. ஆனா நீ பக்கத்துல இருந்தா இப்படி பயம் எதுவும் எனக்கு வரமாட்டேங்குது இளா” என அழுகையில் ஆரம்பித்து பயம் கலந்த தெளிவில் அவள் தன் பேச்சை நிறுத்த,
அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன், “அப்படி அத்தை என்ன தான் சொன்னாங்க? நீ இவ்ளோ பயப்படுற அளவுக்கு?” என இளா வினவ,
“நான் டெய்லி உனக்கு சமைச்சு தரனுமாம். வீட்டைலாம் கூட்டிப்பெருக்கி சுத்தமா வச்சிக்கனுமாம். உன்னை நல்லா சாப்பிட வச்சி உன் உடம்பை ஏத்துனுமாம். உன் துணி துவைக்கனுமாம்” இதெல்லாம் கூறும் போதே அவளின் கண்கள் மிரள அவனைப் பார்க்க,
“அடிப்பாவி இதுக்கு தான் இந்தப் பயம் கலந்த அழுகையா? நான் என்னென்னமோலாம் நினைச்சு உன் கூட கனவுல டூயட் பாட ஆரம்பிச்சிட்டேனே” என சிரித்துக் கொண்டே அவன் கூற, பட்டென்று அவன் முதுகில் ஓர் அடி வைத்தாள்.
“புருஷனை அடிக்கிற நீ… நீயெல்லாம் என்ன பொண்டாட்டி?” என மேலும் அவளை அவன் வம்பிழுக்க,
“உன்னைலாம் ஒரு அடியோட விட்டது தப்புடா” எனக் கூறிக்கொண்டே அவனின் தலை கைக்காலென அவள் அடித்து நொறுக்க,
அடிக்கும் அவளின் கையை அவன் தடுத்து நிறுத்தி பற்றப் போக, அவன் மேலேயே அவள் சரிய, அதையும் பொருட்படுத்தாது அவனை அடிப்பதைத் தொடர்ந்து அவள் செய்துக் கொண்டிருக்க,
அவளை சீண்டும் எண்ணம் மனதிலெழ கடித்தான் அவளின் கன்னத்தை.
அவள் அலறி அவன் முகம் பார்க்க, அடுத்ததாய் மறுகன்னத்திலும் அவன் கடிக்க செல்வதுப் போல் சென்று இதழ் பதிக்க, சட்டென்று அவன் மேலிருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டவள் அவன் மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள்.
“எதுக்குடி இப்ப என்னை கொட்டின?” என கொட்டுவதற்காய் அவள் மேல் பாயந்தான்,
“வேண்டாம் கோவக்காய் இதோட நிறுத்துக்கோ. அப்புறம் புடலங்காய் ஆக்கிடுவேன்” என அவன் கை தன் தலைக்கு வருவதைக் கண்டதும் கண்களை இறுக மூடி வேணிக் கூற,
அவளின் மூடிய கண்களை ஒரு நொடி பார்த்தவன் பதித்திருந்தான் தன் இதழை அவளின் நெற்றியில்.
அடிப்பான் அல்லது கடிப்பானென நினைத்தவள், அவன் முத்தத்தில் அதிர்ந்து கண்களை திறக்க, “இனி என்னை நீ அடிச்சீனா இது தான் பனிஷ்மெண்ட். ஒவ்வொரு அடிக்கும் ஒரு கிஸ்” என கண் சிமிட்டி இளா உரைக்க, எவ்வாறு இதற்கு எதிர்வினை ஆற்றுவதெனத் தெரியாது முழித்தாள் வேணி.
அவளின் முழிக்கும் பாவனையைக் கண்டவன், “ஏன்டி திருடனைப் பார்க்கிற மாதிரி என்னைப் பார்க்கிற?” எனக் கேலியாய் உரைத்துக்கொண்டே அவளை எழும்பச் செய்து தன் தோள் வளைக்குள் அமர்த்திக் கொண்டவன்,
“நீ சொன்னதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லைடா. சமையல், வீட்டு வேலை, பராமரிப்பு, சம்பள பட்ஜெட், கணக்கு வழக்கு இதெல்லாமே நம்ம டிஸ்கஸ் செஞ்சி ஷேர் செய்து ஒருதருக்கு தெரியாததை இன்னொருத்தருக்கு சொல்லிக் கொடுத்துனு செஞ்சிடலாம் அம்ஸ். ஏன்னா அதற்கான விட்டுக்கொடுத்தல் நம்ம இரண்டு பேர் கிட்டயுமே இருக்கு. ஆனால் இதெல்லாம் விட ஒரு பெரிய பிரச்சனை இருக்குடா. அதுக்கு உன் முழுமையான காதல் எனக்கு வேணும்”
தன் கைப்பேசியிலிருந்து ஒரு புகைப்படத்தை அவளிடம் காண்பித்து அதிலுள்ள வரியைப் படிக்கச் சொன்னான்.
அதில் கணவன் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்திருக்க கீழே இவ்வரிகள் இருந்தது.
One kiss on the forehead is much sweeter than the thousand kiss on the lips. No lust but full of love and respect.
(நெற்றியிலிடப்படும் ஒரு முத்தம் ஆயிரம் இதழ் முத்தத்தை விட இனிமையானது. அதில் காமமில்லை முழுக்க முழுக்க காதலும் மரியாதையும் மட்டுமே)
அதை அவள் படித்துவிட்டு அவனை நோக்க, “எனக்கு எப்பவுமே ஒரு தாட் உண்டு அம்ஸ். நம்மள பார்த்து தானே நம்ம பிள்ளைங்க வளருறாங்க. உண்மையா நேர்மையா வாழுறதுலாம் நம்மளை பார்த்து கத்துக்கிட்டு வளர்ற பிள்ளைங்க. காமம் இல்லாத உண்மையான காதலையும் அப்பா அம்மாகிட்ட பார்த்து அந்த அன்பை உணர்ந்து வளரனும்னு நினைப்பேன். அன்பாய் பாசமாய் கொடுக்கும் முத்தம் என்னிக்குமே காமத்தில் சேர்ந்தது இல்லை அம்ஸ். அன்பாய் எனக்கு நீயோ இல்ல உனக்கு நானோ முத்தமிடுவது, ஊட்டிவிடுறது, ஒருதருக்கொருத்தர் உதவி செய்றது, விட்டுக்கொடுத்து வாழுறது, சண்டைப்போட்ட உடனே சேர்ந்துக்கிறது…. இதெல்லாம் டே டு டே ஃலைப்ல பார்த்து வளர்ற நம்ம பிள்ளைகளுக்கு உண்மையான காதலுக்கு உதாரணமா நாம தான் தெரிவோம். எந்த காதல் படமும் காதல் கதையும் பெரிசா தெரியாது. அதனால இனி தினமும் காலையும் இரவும் அன்றைய நாளை முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடிப்போம். அப்படியே நம்ம காதலை டெவலப் செய்வோம். சரியா அம்முகுட்டி” என அவள் நெற்றியில் அவன் முட்ட,
காமமில்லாத அன்பு முத்தமா? என்ன சொல்றான் இவன்? என அவள் தன் மூளையை கசக்கி யோசிக்க,
“சரி விடுடா அம்ஸ். நீ ரொம்ப யோசிச்சு மண்டைய கொழப்பிக்காத. நான் முன்னாடி சொன்ன மாதிரி எல்லாம் தானா மாறும். நாம் வாழ போற வாழ்க்கைல அதுவா இயல்பா மாறும். மனசு முழுதும் காதலால் நிரப்பிக்கிட்டு நான் சொன்ன மாதிரியே வாழ்வோம். அப்ப உனக்கு புரியும்” எனக் கூறி தன் வேலையை பார்க்க சென்றான்.
அதன் அர்த்தம் இப்பொழுது புரிந்தது அவளுக்கு.
இத்தனை நாள் தான் வாழ்ந்த வாழ்க்கை காதல் மட்டுமே நிரம்பிய வாழ்க்கையென புரிந்தது அவளுக்கு.
அவனை நினைத்து மனதில் பெருமிதம் பொங்கியது. என் இளா என மனதில் கூறி பெருமைப்பட்டுக் கொண்டாள்.
அவளருகிலிருந்த மெத்தை எப்பொழுதும் அவன் அமரும் இடமதில் அவனிருப்பதாய் எண்ணிக்கொண்டாள். அவன் மடி சாய்வதாய் எண்ணி தலை சாய்த்துக் கொண்டாள்.
இரவு தூக்கமின்மை மற்றும் மனதின் சோர்வு அவளை ஆழ்ந்த நித்திரைக்கு தள்ளியது.
ஆழ்ந்த நித்திரையிலிருந்த வேணிக்கு யாரோ தூரமாய் கதவை தட்டுவதுப் போல் ஓசை கேட்க, தூக்கத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாய் நடப்புக்கு அவள் மூளை வந்திருக்க, அவள் வீட்டின் கதவை யாரோ பலமாய் தட்டும் சத்தம் கேட்டது.
அடித்துபிடித்து எழுந்தவள் ஓடிச்சென்று கதவை திறக்க, அங்கே கோப முகத்துடன் நின்றிருந்தாள் வாணி.
“ஏன்டி இப்படி காலைலயே வந்து என் தூக்கத்தை கெடுத்த?” எனத் தூக்கக் கலக்கத்தில் வேணி கேட்க,
“அடியேய் கண் முழிச்சி மணி என்னனு பாரு?” எனக் கத்தினாள் வாணி.
மணி மாலை நான்கு மணியை காண்பிக்க, “அச்சோ இவ்ளோ நேரமாவா தூங்கினேன். அய்யோ இளா கால் பண்ணிருப்பானே” என தன் மொபைலை தேடிச் சென்றாள் வேணி.
அப்பொழுது ஒரு மணி நேரம் முன்பு தான் ஒரு சிங்கப்பூர் நம்பரிலிருந்து கால் வந்திருந்தது. அவன் அங்குப் போய் சேர்ந்ததும் வந்து சேர்ந்துவிட்டதாய் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் அவளுக்கு.
பின் இளாவிற்கு நடந்தவைகளை வேணி மெசேஜ் செய்து அனுப்ப, ஸ்கைப்க்கு வருமாறு கூறினான்.
அவளறை சென்று லேப்டாப் உயிர்பித்துக் கொண்டிருந்த சமயம், அங்கு வந்த வாணி, “நீ இன்னிக்கு ஆபிசிக்கு லீவ் சொல்லல. நியாபகம் இருக்கா உனக்கு?” என்றவள் முறைத்துக் கொண்டு கேட்க,
“அச்சோ நீ இங்க தான் இருக்கியாடி. சாரிடி உன்னை மறந்தே போய்டேன்” என மன்னிப்பு கேட்டவள்,
“அய்யோ இளாவ தவிர எதுவுமே கண்ணுக்கும் தெரிய மாட்டேங்குது கருத்திலும் நிக்க மாட்டேங்குதே” என மனதில் கூறிக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்டாள் வேணி.
அவளின் செயல்களை கண்கள் இடுங்கப் பார்த்துக் கொண்டிருந்த வாணி, “என்னடி ஆச்சு உனக்கு? இளா அண்ணாவ பிரிஞ்சதுல பைத்தியம் கீத்தியம் பிடிச்சுப்போச்சா” எனக் கேட்க,
“ச்சீ போடி. ஓவரா தான் கிண்டல் பண்ற என்னை” என்ற வேணி, “ஆமா என்னமோ கேட்டியே முன்னாடி என்ன கேட்ட?” என்று வேணி வாணியை கேட்க,
“ஹ்ம்ம் சொன்னேன் சுரக்காய்க்கு உப்பு இல்லனு” என நொடித்துக் கொண்ட வாணி, “இன்னிக்கு நீ ஆபிசுக்கு லீவ் சொல்லலனு நியாபகம் இருக்கானு கேட்டேன்” என வாணி கூறிய நொடி,
“அய்யய்யோ” என பதறி எழுந்தாள் வேணி.
“சுத்தமா ஆபிஸ மறந்துட்டேன்டி. அந்த லீட் வேற இப்ப என்னை வகை வகையா திட்டிட்டு இருப்பாரே. ஏற்கனவே நிறைய லீவ் போடுறேனு கம்ப்ளைண்ட் பண்ணிட்டாரு” என வேணி புலம்ப,
“நிஜமாவே உனக்கு இளாண்ணா பைத்தியம் முத்திப்போச்சுடி. அவரை தவிர யாரும் உன் மைண்ட்ல இப்ப இல்லைல” என கேலியாய் வாணி கேட்க,
“ம்ப்ச் அதை விடுடி. இந்த லீடை எப்படி சமாளிக்கிறது. ஃபோன் செஞ்சி என்னனு அவர் கிட்ட சொல்றது. இரண்டு மணி ஷிப்ட்க்கு அஞ்சு மணிக்கு போன் பண்ணி வரலனு சொன்னா மனுஷன் கடுப்பாக மாட்டாரு” என கவலையாய் வேணி கேட்க,
“செய்றதெல்லாம் செஞ்சிட்டு இப்ப புலம்பினா என்ன செய்ய?” என வாணி கூற,
“என் செல்ல வாணில. என் குட்டு ஃப்ரண்டுல. அந்த லீடை சமாளிக்க ஒரு ஐடியா கொடுடி” என வாணியை கொஞ்சினாள் வேணி.
அவளின் கொஞ்சலில் வாய் விட்டு சிரித்தவள், “அதெல்லாம் நான் சமாளிச்சிட்டேன். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்றாள் வாணி.
“எப்படிடி? எப்படி சமாளிச்ச?” என்றவள் கேட்க,
“நான் மார்னிங் ஷிப்ட் தானே. இரண்டு மணிக்கு நீ வரலனதும் ஃபோன் பண்ணேன் எடுக்கலை. இளா அண்ணா மேல உள்ள லவ்ஸ்ல இப்படி லூசுத்தனமா எதுவும் செஞ்சிருப்பனு தோணுச்சு. அதான் நானே உனக்கு லீவ்னு சொல்லிட்டேன். அடிக்கடி லீவ் எடுக்குறனு கத்ததான் செஞ்சார்” என வாணி சொல்லி முடிக்க, ஸ்கைப்பில் வந்தான் இளா.
“சரி நீ அண்ணா கூட பேசிக்கிட்டு இரு, நான் ஹால்ல இருக்கேன். பேசி முடிச்சதும் என்னைய கூப்டு” எனக் கூறி முகப்பறைக்கு சென்று விட்டாள் வாணி.
அன்றைய நிகழ்வுகளை இளாவிடம் வேணிக் கூற, “ஹா ஹா ஹா. வாணி சொன்னது போல என் மேல அவ்ளோ லவ்ஸ் வந்துடுச்சா அம்ஸ் உனக்கு” என அவன் சிரிப்பாய் கேட்க,
“சீ போடா” என வெட்கப்பட்டாளவள்.
“நான் பக்கத்துல இருக்கும் போது என்னிக்காவது இப்படி வெட்கப்பட்டிருக்கியாடி. ஹ்ம்ம் புருஷன் பக்கத்துல இருக்கும் போது அவங்க அருமை எந்த பொண்டாட்டிக்கும் தெரியறதேயில்லை” என கேலியாய் அவன் பேச,
“போடா குரங்கு. அதெல்லாம் உன் அருமை எனக்கு எப்பவும் தெரியும். நான் யார் கிட்டேயும் உன் விட்டுக்கொடுத்ததில்ல தெரியுமா”
இவ்வாறாக இவர்களின் பேச்சு ஒரு மணி நேரம் கடந்துச் சென்றுக் கொண்டிருக்க, “எக்ஸ்க்யூஸ் மீ. நான் கொஞ்சம் வரலாமா?” என்று நுழைந்தாள் வாணி.
சிறிது நேரம் வாணியிடம் அளவளாவிய இளா, “வாணிம்மா இந்த அம்மு பொண்ணுக்கு பொறுப்பே இல்லம்மா. கொஞ்சம் நாள் அவக்கூடவே இருக்கியா ப்ளீஸ். இரண்டு பேரும் ஒரே ஷிப்ட் வாங்கிட்டு ஒன்னா போய்ட்டு வாங்களேன். அது தான் சேஃப்னு எனக்கு தோணுது. இல்லனா இவ இப்படி தான் வீட்டுல தனியா இருந்து மருகிட்டு இருப்பா” என இளா வேண்டுகோள் வைக்க,
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ணா. நீங்க கவலைப்படாதீங்க. இதுக்கு எதுக்கு பிளீஸ்லாம் சொல்லிக்கிட்டு” என்றாள் வாணி.
அதன்பின் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான் இளா.
அதன் பின் வந்த நாட்களில் மேனேஜரிடம் பேசி வாணி வேணி இருவரும் மூன்று மாதத்திற்கு ஒரே ஷிப்ட் வாங்கியிருந்தனர்.
நாட்கள் அதன் போக்கில் வேகமாய் செல்ல ஒரு மாதம் முடிவடைந்த நிலையில்,
ஆஷிக் அழைத்திருந்தான் வாணியின் கைபேசிக்கு.
ஆஷிக் ரஹானா திருமணம் முடிந்தும் ஆஷிக் பெங்களுரில் தனியே தான் தங்கியிருந்தான். ரஹானாவின் முதுகலைப் படிப்பு முடிவடைந்திடாத நிலையில் திருமணம் நிகழ்ந்ததால் அங்கேயே தங்கயிருந்து அவள் பரீட்சை முடிந்ததும் பெங்களுரில் வீடெடுத்து தங்கிக் கொள்ளலாமென கூறுயிருந்தான் ஆஷிக்.
அதுவரை வாரயிறுதி நாட்கள் இவன் ரஹாவின் ஊர் சென்று அவளை பார்த்துவிட்டு வருவான்.
இந்த வாரம் வாரயிறுதி நாளில் பெங்களுரில் இருப்பதால் வாணியை சந்திக்கலாமென எண்ணி அழைத்திருந்தான் அவளை.
“என்னங்க மேடம் எங்களைலாம் நியாபகம் இருக்கா?” என்றான் ஆஷிக் அவள் அழைப்பை ஏற்றதும்.
“டேய் அதை நான் கேட்கனும். கல்யாண ரிசப்ஷன்ல பார்த்தோட சரி. சார் ரொம்ப பிசி ஆயிட்டீங்க. இப்ப எதுவும் வேலை ஆகனும்னு தானே ஃபோன் பண்ண. எதுவும் டிக்கெட் புக் பண்ணி தரனுமா?” என வாணி கேட்க, சுர்ரென அவனுக்கு கோபமேற,
“மண்டையிலேயே நாலு போட்டிறுப்பேன் இப்ப நீ நேர்ல இருந்திருந்தீனா. என்ன நினைச்சிட்டு இப்படி பேசுற நீ? என்னைய பத்தி உனக்கு தெரியாது. தேவைக்கு மட்டும் ஃபோன் பண்ற ஆளா நானு” என்றவன் கேட்க,
“சாரிடா. ஏதோ ஃப்ளோல அப்படி வந்துடுச்சி. எக்ஸ்ட்ரீம்லி சாரி” என அவள் மன்னிப்பு கேட்க,
“சரி லோன்லியா ஃபீல் பண்றியா நீ. பிஜில தனியா இருக்கிறது கடுப்பா இருக்கா. அங்க யாரும் ஃப்ரண்ட் கிடைச்சாங்களா?” என ஆஷிக் கேட்க,
“இல்லடா இப்ப த்ரீ மன்த்ஸ் வேணி கூட தான் ஸ்டே” என இளாவின் ஆன்சைட் பற்றி கூறினாள் வாணி.
“அந்த பொண்ணுங்க உன்னை யூஸ் பண்ணிக்கிறாங்களா கேபி?” என சந்தேகமாய் அவன் கேட்க,
“ச்சே ச்சே. அப்படிலாம் இல்லடா. அவங்களுக்கு எப்பவுமே என் மேல அக்கறை அதிகம். இளா அண்ணா என்னை கேட்டிருக்கலனா கூட நான் வேணி கூட வந்து ஸ்டே பண்ணிருப்பேன். இதுக்கு கூட ஹெல்ப் பண்ணலைனா அப்புறம் என்னடா ப்ரண்டுனு இருந்துட்டு” என்றுரைத்தாள் வாணி.
“சரி நீ எதுக்கு ஃபோன் பண்ண? அதை சொல்லு முதல்ல” என்றாளவள்.
“நாளைக்கு நம்ம மீட் பண்ணலாமானு கேட்க தான் பண்ணேன்” எனக் கேட்டான் ஆஷிக்.
“என்னடா அதிசயமா இருக்கு. என்கேஜ்மெண்ட் ஆன நாள்லருந்து வீக்கெண்ட் ஆச்சினா கால்ல சக்கரம் கட்டின மாதிரி சென்னைக்கு பறந்துப்போவ. இப்ப அதிசயமா சனிக்கிழமை மீட் பண்ணலாமானு கேட்குற” என்றவள் வியப்பாய் கேட்க,
“அது அப்படி தான். நாளைக்கு நீ வரியா இல்லையா? ஈவ்னிங் சிக்ஸ் ஃபோரம் மால்ல மீட் பண்ணலாம்” என்றான்.
சரியெனக் கூறி அழைப்பை வைத்தாள்.
மறுநாள் ஃபோரம் மாலுக்குள் நுழைந்து அவர்கள் வழமையாய் சந்தித்துக்கொள்ளும் இடத்திற்கு அவள் செல்ல, கேபிக்கா என வாணியை அணைத்துக் கொண்டாள் ரஹானா.
ஆஷிக் ரஹானா நிச்சயத்திற்குப்பின் ரஹாவிடம் பேசிய நாளிலிருந்து இன்று வரை ஆஷிக்கை விட ரஹானாவுடன் அதிக பேச்சு மற்றும் குறுஞ்செய்தி தொடர்பில் தான் இருந்தாள் வாணி.
அவர்களுக்குள் ஓர் ஆழ்ந்த நட்பு உருவாகியிருந்தது.
“ஹே வாட் எ சர்ப்பரைஸ். ஏன்டா நேத்தே சொல்லல” என்றுக் கேட்டாள் வாணி.
“ஹ்ம்ம் சப்ரைஸ்ல இந்த முட்டைக்கண்ணு எவ்ளோ பெரிசா விரியுதுனு பார்க்கனும்னு ஆசையா இருந்துச்சி. அதான் சொல்லலை” என்றான் இளநகை முகத்தில் கூத்தாட,
“போடா டாங்கி” என அவனை கடிந்துக்கொண்டவள் ரஹா புறம் திரும்பி,
“இந்த பையன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா ரஹாப்பொண்ணு?இல்லனா சொல்லு நாலு காட்டு காட்டிடலாம்” என்று வாணி கேலி பேச,
“ச்சே ச்சே அதெல்லாம் வேண்டாம்க்கா. அவர் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறார். ரொம்ப கேரிங்க்கா” என்றாள் முகத்தில் நாணம் பூக்க,
“பார்ற புருஷனைப் பத்தி பேசினாலே இந்தப் பொண்ணு வெட்கப்படுது” என கன்னத்தில் கை வைத்து வியப்பாய் வாணி கூற,
“கத்துக்கோ என் பொண்டாட்டி கிட்ட இருந்து. பின்னாடி உனக்கு யூஸ் ஆகும்” என்றான் ஆஷிக்.
“ஆமா நீ தனியாவா வந்த?” ஆஷிக் கேட்க,
ஆமென அவள் தலையசைக்க,
“வாட் எ மெடிக்கல் மிராக்கல். கேபி கொஞ்சம் கொஞ்சமா பெரிய பொண்ணா மாறிட்டு வர போலையே” என்றான் ஆஷிக்.
“அவ்ளோலாம் இல்ல. ரெகுலரா போற இடத்துக்கு மட்டும் தனியா போக தெரியும். புது இடத்துக்குலாம் இப்பவும் நோ தான். எல்லாரும் எல்லா டைம்லயும் டிபண்ட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாதுல. அதனால கொஞ்சம் தனியா இருக்க ஹேண்டில் செய்ய பழகிட்டேன்” என்றாள் வாணி.
“வேணி எங்கே?” எனக் கேட்டான் ஆஷிக்
“அவ இளா அண்ணா ஊருக்கு போயிருக்கா. பாவம் அவ… ஒரு வாரம் இந்த வீடு ஒரு வாரம் அவ அம்மா வீடுனு அல்லாடிட்டு இருக்கா. அண்ணா வரவரைக்கும் அவளுக்கு அப்படி தான் போகும்” என்றாள் வாணி.
“அக்கா கேட்கனும் நினைச்சேன். என்ன இது முகத்துல ஒரே பிம்பிள்ஸ் ஹீட் பாயில்ஸா இருக்கு. ரிசப்ஷன் வரும்போது உங்களுக்கு இப்படி இல்லையே. எதுவும் அலர்ஜி ஆயிடுச்சா உங்களுக்கு?” எனக் கேட்டாள் ரஹானா.
“ஆமா ரஹா. ஒரு மாசமா தான் இப்படி இருக்கு” என்றாள் வாணி.
“டாக்டர் போய் பாத்தியா கேபி” எனக் கேட்டான் ஆஷிக்.
“அப்பாய்ண்மெண்ட் வாங்கினேன்டா. அப்புறம் தனியா போக மனசில்லாம விட்டுட்டேன். சென்னைக்கு போய்ட்டு அம்மா அப்பா கூட போய்க்கலாம்னு விட்டுட்டேன்” என்றாள் வாணி.
“நீ நாளைக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கு. நாளைக்கு நைட் தான் ரஹா கிளம்புவா. அவளும் நீயுமா போய் டாக்டரை பார்த்துட்டு வாங்க” என்றான் ஆஷிக்
“எதுக்குடா உங்களுக்கு வீண் சிரமம். நீங்க நல்லா சுத்தி பாத்து என்ஜாய் பண்ணுங்க. எனக்காக எதுக்கு உங்க டைம வேஸ்ட் பண்றீங்க?” என்றவள் கேட்க,
“இந்த ஹெல்ப் கூட பண்ணலைனா அப்புறம் நான்லாம் எதுக்கு ஃப்ரண்டுனு இருந்துட்டு?” என அவள் கூறிய டயலாக்கை அவளுக்கே அவன் கூற,
வாய்விட்டு சிரித்தாள் வாணி.
“சரி ஓகே. நாளைக்கு ஹாஸ்பிட்டல்ல மீட் பண்ணலாம். அட்ரெஸ்லாம் உனக்கு நான் மெசேஜ் செய்றேன்” எனக் கூறி கிளம்பினாள் வாணி.
“கேபி இரு தனியா தானே போகனும். நைட் ஆயிடுச்சுல. நாங்களும் கூட வர்றோம்” என்றவன்,
வாணியையும் ரஹானாவையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு, தன் பைக்கில் அந்த ஆட்டோவை தொடர்ந்து சென்றான்.
வாணியின் இருப்பிடம் வந்ததும், அவளிடம் விடைபெற்று ரஹாவை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு அவ்விடத்தை விட்டு கிளம்பினான்.
—
மறுநாள் வாணி அப்பாய்ண்மெண்ட் வாங்கிய மருத்துவமனையின் அருகிலிருந்த ஐஸ்க்ரீம் பார்லரில் அமர்ந்திருந்தனர் ஆஷிக்கும் ரஹானாவும். வாணியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
ரஹானாவிற்கு வெண்ணிலா ஐஸ்க்ரீம் பிடிக்குமென ஆர்டர் செய்தவன், அவனுக்காக பட்டர் ஸ்காட்ச் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருக்க,
“ம்ப்ச் எவ்ளோ நாள்ங்க இப்படி இருக்கிறது. உங்களை விட்டு பிரியுற வீக்கெண்ட்லாம் அந்த நைட் அழாம நான் தூங்கினதில்லை. நீங்க கூட இருந்தாக் கூட ஒழுங்க படிப்பேன் போல. இப்படி தள்ளியிருந்தா உங்க நினைப்பாவே இருக்கு” என ரஹானா தன் மனவருத்தத்தை புலம்பலாய் கூற,
“நீ இப்படி வருத்தப்பட்டு பேசுறதை கேட்க எனக்கு சந்தோஷமா இருக்கே” என்றுரைத்துவிட்டு கண்சிமிட்டி அவன் ஈயென இளிக்க,
“நான் துக்கப்படுறது உங்களுக்கு சந்தோஷமா இருக்கா? நீங்க ஒன்னும் என்கிட்ட பேச வேண்டாம்” என முகத்தை திருப்பிக்கொண்டாள்.
கோபத்தால் கோவப்பழமாய் சிவந்திருந்த அவளின் சிவந்த முகத்தை ரசித்துக்கொண்டிருந்தான்.
இவன் அவள் கையை பிடிக்க, தட்டிவிட்டாளவள்.
“நீங்க ஒன்னும் என்னை சமாதானம் செய்ய தேவையில்ல” எனக்கூறி மேஜையிலிருந்த நாளிதழை படிப்பதுப்போல் பிடித்து முகத்தை மூடிக் கொண்டாள்.
“எப்ப பார்த்தாலும் விளையாட்டு கிண்டல் கேலி தான். சீரியஸாவே எதையும் காது கொடுத்து கேட்கிறது கிடையாது” என வாய்க்குள் முனகி கொண்டாள்.
அவள் முனங்கினாலும் தெளிவாய் அவன் காதில் விழ, “ரஹா செல்லத்துக்கு என் மேல என்ன கோவமாம்” என அந்த நாளிதழை அவன் பிடித்து இழுக்க,
அவள் பேசாது மௌனமாய் அவனை முறைக்க,
“உன்னோட எல்லா ரியாக்சனுமே அழகுடி செல்லகுட்டி. ஆனா இப்படிலாம் நம்ம தனியா இருக்கும் போது ரியாக்ஷன் கொடுத்திருந்தீனா உன்னை ஸ்பெஷலா கவனிச்சிருப்பேன். இப்ப பப்ளிக்ல என்னை வச்சக்கண் வாங்காம பார்த்தா நான் என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்?” என அவன் அவளை வம்பிழுக்க,
“சீ பப்ளிக்ல பேசுற பேச்சை பாரு. நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன்” என தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஹா ஹா ஹா… எனக்கு மட்டும் உன்னை பிரிஞ்சிருக்கிறது சந்தோஷம்னு நினைக்கிறியாடா. அடுத்து வர்ற சனி ஞாயிறுக்காக மனசு ஏங்கிட்டு கிடக்கும். கொஞ்ச நாளுக்கு தானே. நீ நல்லா எழுதி ஸ்கோர் பண்றது தான் எனக்கு சந்தோஷம். இல்லைனா நல்லா படிச்சிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் செஞ்சி மனசை கலச்சிட்டேனு எனக்கு கில்டி ஃபீல் ஆகும்டா. என் நினைப்பு வரும் போதெல்லாம், இந்த வார்த்தையும் நியாபகம் வச்சிக்கோடா… ஆட்டோமேடிக்கா படிச்சிடுவ. உன் ஆசைப்படி உன்னை கண்டிப்பா ஒரு கவர்ண்மெண்ட் ஜாப்ல இல்ல ஒரு காலெஜ் லெக்ச்ர்னு ஒரு பொசிஷன்ல உன்னை பார்க்கிறது தான் என்னோட சந்தோஷம். அதுக்கு என்னாலான ஹெல்ப் நான் கண்டிப்பா செய்வேன்.”
“அங்கே பிஜி முடிச்சதும் இங்க எங்கயாவது லெக்சரா சேர்ந்திடு. அப்படியே பி எச்டி செய்டா இல்லனா பேங்க் எக்ஸாம் பிரிபேர் பண்ணு. உனக்கு எது விருப்பமோ அதை செய்மா. நடு நடுல ரொமேன்ஸ் செஞ்சிட்டு இரண்டு க்யூட் பாப்பாஸையும் பெத்துக்கலாம்” என சிரித்து அவன் கூற,
தனக்கான அவனின் திட்டமிடலில் விக்கித்து பார்த்தாளவள்.
“உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்குதே. லவ் யூ டியர்” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் ஸ்ருதியில்.
“ஹா ஹா ஹா. பப்ளிக்கா இப்படி உசுப்பேத்தினா நான் என்ன செய்யட்டும்” என அவள் கையை இவன் பிடிக்கப் போகவும், அவர்கள் ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம் வரவும் சரியாக இருந்தது.
தன் ஐஸ்க்ரீம் கப்பிலிருந்து ஒரு வாய் எடுத்து அவளுக்கு ஊட்ட, “ம்ப்ச் ஆளுங்க இருக்காங்க. என்ன பண்றீங்க?” என்றவள் வாங்க மறுக்க,
மீண்டும் அவன் அவளுக்கு ஊட்ட, அவள் மறுக்க, தன் ஐஸ்க்ரீமை பாதி சாப்பிட்டவன் அவளிடத்திற்கு நகர்த்தி விட்டு அவளின் ஐஸ்க்ரீமை தன் இடத்திற்கு மாற்றினான். “இப்ப என்ன செய்வ?” என்பதைப் போன்றதொரு பாவனை அவனின் முகத்தில்.
நாணங்கொண்டு சிரித்தவளின் வயிற்றினுள் தித்திப்பாய் இறங்கியது கணவன் தந்த ஐஸ்க்ரீம்.
பின் வாணி அந்த மருந்துவமனையை நெருங்கிவிட்டதாய் உரைத்ததும், அங்கிருந்து கிளம்பியவர்கள் மருத்துவமனையை அடைந்தனர்.
அங்கு சென்று சரும பிரச்சனைக்களுக்கான சிறப்பு மருந்துவரைக் காண உள் சென்றனர் வாணியும் ரஹானாவும்.
தன் சருமப் பிரச்சனையை வாணிக்கூற, அதை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தார் மருத்துவர்.
“உங்களுக்கு இதுக்கு முன்னாடி இந்தப் பிரச்சனை இருந்திருக்காமா??”
“இல்ல டாக்டர். இப்ப ஒரு மாசமா தான் நிறைய கட்டி பிம்பிள்ஸ் வருது” என்றாள் வாணி.
பின் வேலை அலுவல்கள் அவளின் பயணக்குறிப்புகள் பற்றிக் கேட்டறிந்துக் கொண்ட மருத்துவர், அவளின் இந்த பிரச்சனைக்கான காரணத்தை விவரிக்கலானார்.
“பொதுவாகவே சிஸ்டம் முன்னாடி ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் போது மானிட்டர்ல இருந்து வர்ற அந்த லைட் அண்ட் ரேஸ்(Rays) ரொம்ப ஹீட் ப்ரோடியூஸ் செய்யும். அது ஒரு சில பேருக்கு செட் ஆகாது.
அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். அதுல இருந்து ஸ்கின்னை பாதுகாக்க சன்ஸ்க்ரீன் லோஷன் யூஸ் செய்யலாம்.
இன்னொன்னு நீங்க நைட் ஷிப்ட் பார்க்க ஆரம்பிச்ச பிறகு தான் இந்த பிரச்சனை வந்ததுனு சொல்றனால இது உடம்பு ஓவர் ஹீட் ஆகுறனால வந்திருக்குனு தெரியுது.
பொதுவா ரொம்ப நேரம் சிஸ்டம்ல உட்கார்ந்து வேலை செய்றவங்களுக்கு பாடி ஹீட் ஆகும். அதுக்கேத்த ஃபுட் தான் சாப்பிடனும். அதிலும் நைட் ஷிப்ட் பார்க்கிறவங்களுக்கு ஓவர் ஹீட் ஆகும். அதுக்கு ஃபர்ஸட் சொல்யூஷன் காலைல எத்தனை மணிக்கு வீட்டுக்கு போனாலும் எவ்ளோ தூக்க கலக்கத்துல இருந்தாலும் குளிச்சிட்டு தூங்குங்க. பாடி ஹீட் நல்லா குறையும். அடுத்தது கண்டிப்பா தினமும் இளநீர்,மோர்னு உடலை குளுமையாக்குற இயற்கையான டிரிங்க்ஸ் குடிங்க. நாள்பட நாள்பட உங்க பாடி நார்மல் கண்டிஷனுக்கு வந்திடும். நான் உங்களுக்கு ஒரு சில க்ரீம்ஸ் எழுதி தரேன். அதை அப்ளை செஞ்சீங்கனா இப்ப இருக்கிற பிம்பிள்ஸ் தடயமில்லாம மறஞ்சிடும்” என நீண்ட உரையை முடித்து சில களிம்புகளை எழுதிக் கொடுத்தாரவர்.
மருந்துவரிடம் நன்றி கூறி வெளியே வந்த வாணி ரஹானாவிடம் உள்ளே மருத்துவர் கூறியவற்றை கேட்டுக்கொண்டான் ஆஷிக்.
பின் மூவரும் பேசிக்கொண்டே நடந்து வந்து பைக் நிறுத்தத்தில் நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
“என்னடா கேபி, எப்ப மேரேஜ் செய்றதா ஐடியா உனக்கு?… உங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்கிறாங்களா இல்லையா? என்னமோ எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல கரக்டா நடக்கனும்னு பெரிசா எனக்கு அட்வைஸ் செஞ்ச” என ஆஷிக் கேட்க,
“இப்போதைக்கு மேரேஜ் இல்லடா. என்னை யுகே ஆன்சைட் அனுப்ப பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு என் டீம்ல. அதுக்காக வைய்டிங்” என்று இயல்பாய் வாணி கூற,
“வாவ் கங்கிராட்ஸ் கேபி. எவ்ளோ பெரிய விஷயம்… அசால்ட்டா சொல்ற” என அவள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து ஆஷிக் கூற,
“வாவ் செம்மக்கா” எனக்கூறி வாணியை அணைத்துக் கொண்டாள் ரஹானா.
“உனக்கு தான் தெரியுமேடா. ஐடில எதுவுமே நிலையில்லனு. ஃபிளைட் ஏறி பறக்கும் வரை நாம போறோமா இல்லையானு நம்மளே கன்ஃபியூசன்ல தானே சுத்திட்டு இருக்கனும். கடவுள் அருள்ல எல்லாம் கன்பார்ம்மா செட் ஆனதும் சொல்லலாம்னு நினைச்சேன்” என்றாள் வாணி.
“உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும் கேபி. இங்கே தனியா வெளியப் போகவே பயப்படுவியே. அங்க எப்படி தனியா சமாளிப்ப?” என்றவன் வருத்தமாய் கேட்க,
“ஹ்ம்ம் அங்க பக்கத்து டீம் பொண்ணு ஒன்னு இருக்கு. சோ சமாளிச்சிடலாம். போய்செட்டில் ஆகுற வரை கண்டிப்பா பயம் இருக்கும். கிணத்துல குதிஞ்ச பிறகு நீச்சலடிச்சி தானே ஆகனும். பயந்தா முடியாதே… அப்படி தான் பெங்களூருக்கே வந்தேன். இப்ப பழகிக்கலையா. அதுவும் அப்படி பழகிடும். ஆனா நிஜமா ரொம்ப பயமாயிருக்கு ஆஷிக். வெளில தைரியமா பேசிட்டு திரியுறேன். உள்ளுக்குள்ள உதறுதுடா” என்றவள் தைரியமாய் ஆரம்பித்து நடுக்கமாய் கூற,
“அங்க தான் ஆளு இருக்குனு சொல்றல. சோ ஒன்னும் பிரச்சனை இருக்காது. உனக்கு ஏத்தா மாதிரி எல்லாம் செட் ஆயிடும். டோண்ட் வர்ரி” என்றானவன்.
“கேபிக்கா ட்ரீட் எப்ப? ஆன்சைட்லாம் போறீங்க” என ரஹானா கேட்க,
“ஹ்ம்ம் கண்டிப்பா. அடுத்த தடவை நீ பெங்களூர் வரும்போது பெரிசா வச்சிடலாம்” என்றவள் உரைத்ததும் அவ்விடத்தை விட்டு கிளம்பினர் மூவரும்.
“நீ ஒன்னும் தனியா போக வேண்டாம் ” என வாணியிடம் ஆஷிக் உரைத்ததும்,
“டேய் நான் வரும்போது தனியா தான்டா வந்தேன்” என்றாள் வாணி.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் உன் கூட இருக்கும் போது நீ தனியா போக கூடாது” என்றுரைத்தவன் ரஹானாவையும் வாணியையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு, அவ்வாட்டோவினை பின் தொடர்ந்து பைக்கில் சென்றான்.
அன்று வாணியை அவள் இடத்தில் சேர்பித்துவிட்டு ரஹானாவை அவள் இல்லம் செல்வதற்கான பேருந்தில் ஏற்றிவிட்டான்.
ஆகஸ்ட் 2013
இளா சிங்கப்பூர் சென்றிருந்த மூன்றாம் மாதத்தின் தொடக்கத்தில்.
“ஹாய் அம்ஸ்” என வேணியின் கைப்பேசியில் அழைத்திருந்த இளாவின் குரலில் அத்தனை சோகம்.
“என்னாச்சு இளா. காலைலயே மூட் அவுட்டா?ன? குரலே சரியில்ல” என வேணி கேட்க,
“ம்ப்ச் ஆமா அம்ஸ். மனசே சரியில்ல” என்றானவன்.
“ஏன் சரியில்ல. க்ளைண்ட் எதுவும் திட்டினாரா?” என்றவள் கேட்க,
“ம்ப்ச் அதில்லை அம்ஸ். இன்னும் ஒன் மன்த் என்னை எக்ஸ்டெண்ட் பண்ண சொல்லிட்டாங்க ஆன்சைட்ல” என்றவன் வேதனையுடன் கூற,
“ஓ அப்படியா” என்றவளின் மனவலி கண்ணீராய் கண்ணில் வர,
“அம்ஸ் அம்ஸ்” என்றழைத்தவன்,
மறுமுனையில் பதில் வராது போக,
“லைன்ல இருக்கியா அம்முகுட்டி?” என்றவன் கேட்க,
அவன் இல்லாம இன்னும் ஒரு மாசம் எப்படி இருப்பேன் என மனதில் எண்ணிக்கொண்டு மருகியவள், தன்னை சமன் செய்து மீண்டும் பேச,
“அழறியா அம்ஸ்?”என்று கேட்டானவன்.
— தொடரும்