உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 18 & 19

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

“என்னடா கவலை உனக்கு? சொன்னா தானே தெரியும்” என்றவன் கேட்க,

“நான் உனக்கு ஏத்தவ தானா இளா?” என வேணி மனதின் வலியை முகத்தில் தேக்கி அவனை நோக்கி கேட்க,

அவளின் கேள்வியில் திகைத்தவன்,
“உன்னை தவிர எனக்கு வேற யாரும் பெஸ்ட் பேர்ரா இருக்க முடியாதுடா இந்த ஜென்மத்துல” என்றான் இளா அவள் விழிகளில் தன் பார்வையை ஊடுருவச் செய்து.

“நான் ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்கேன்ல இளா. பாரு மஹா மதிய மரியாதையா பேசுறா…. வீடு வாங்கிட்டாங்க. அவங்க பிள்ளைகள் வரைக்கும் பியூசர் ப்ளான் வச்சிருக்காங்க. ஆனா நான் இன்னும் உன் கூட சண்டை போட்டுகிட்டு சமையல் கூட ஒழுங்கா செய்ய தெரியாம உன்னை படுத்தி எடுத்திட்டு இருக்கேன்ல” என்று பாவமாய் வேணி கேட்க,

அவளை அருகிலழைத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன், “அவங்கவங்க அவங்கவங்களா இருந்தா தான்டா நல்லாயிருக்கும். மஹா வேற வேணி வேற தானே. நீ நீயா இரு…  எனக்கு நீ இப்படி இருந்தா தான் பிடிக்கும். என்ன கொஞ்சம் பொறுப்பு வரணும். அது வரவேண்டிய நேரத்துல வரும்” என்று அவள் தலையை வருடி அவன் கூற, சற்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாளவள்.

தற்பொழுதெல்லாம் அவனுக்கு முத்தம் கொடுப்பது இயல்பான விஷயமாய் மாறிப்போயிருந்தது வேணிக்கு. அவ்வாறு இயல்பாக்கியிருந்தான் இளா அவளை.

அவளின் முத்தத்தில் முகம் மலர்ந்தவன், “சரி மேடம் பொறுப்பு வந்து என்ன ஃப்யூசர் ப்ளான்லாம் யோசிச்சீங்க” என்றவன் கேட்க,

“முதல்ல உன்னை பப்ளிக் ப்ளேசுல மரியாதையா பேசனும்” என்றவள் தீவிரமாய் கூறியதும் அதிர்ந்து விழித்தவன்,

“எப்போதுலருந்து இந்த ஞானோதயம். உங்கம்மா சொல்லும் போதே கேட்காத ஆளு தானே நீ” என்றவன் கேட்க,

“மப்ச் நான் உன்னை எப்படி வேணாலும் பேசுவேன். அது எனக்குள்ள உரிமை. அதை வச்சி வெளி ஆளுங்க யாரும் அவன் பொண்டாட்டியே அவனை மதிக்கிறதிலனு சொன்னா என் மனசு ரொம்ப கஷ்டப்படும். அதான்”

“சூப்பர். ட்ரையலுக்கு ஒரு நாள் நம்ம வாணிய வீட்டிக்கு வர வச்சி நீ எப்படி என்னை மரியாதையா பேசுறனு பார்க்கலாம்” என சிரித்தான்.

“அய்யோ அவளா… வேற வினையே வேண்டாம். அவளே என்னை குழப்பி விட்டுருவா” என்று கூறியவள் தன் ப்யூசர் ப்ளானை தொடர்ந்து கூற,

“சரி அம்முகுட்டி. நம்ம சம்பாதிச்சி வீடு கட்டி பணம் லாம் சேர்த்து வச்சி யாருக்குமா கொடுக்கப் போறோம். அனாதை ஆசிரமத்துக்கா” என கிண்டலாய் அவன் கேட்க,

“ஏன் அனாதை ஆசிரமத்துக்கு கொடுக்கனும். நம்ம பெத்துக்கப்போற பிள்ளைக்கு கொடுப்போம்” என்றாளவள் வெள்ளந்தியாய்.

“ஹோ சரி. பிள்ளை எப்படி தானா மரத்திலயிருந்து குதிக்குமா?” என நமட்டு சிரிப்புடன் அவன் கேட்க,

அதன்பின்பே அவன் கூற வருவதன் பொருள் உணர்ந்தாளவள்.

அதன் அர்த்தம் விளங்கியதும் அவள் உடல் விரைத்துக் கொள்ள, “எனக்கு தூக்கம் வருது” எனத் தள்ளி படுத்துக் கொண்டாள்.
“என்னடா அம்ஸ். உனக்கு இதுல என்ன பிரச்சனைனு சொன்னா தானே எனக்கு தெரியும்” என்றவளருகில் சென்று அவன் கேட்க,

“என்னனு சொல்ல தெரியலை இளா. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அன்னிக்கு நீ சொன்னியே தாம்பத்தியம் நீயில்லாம நானில்லை அந்த ஃபீல் உன்னை உன் உயிரை நான் தாங்கனும்ங்கிற அந்த ஆவல் எனக்கு வரனும் இளா”

“நான் உன்னை கஷ்டப்படுத்துறேனு தெரியுது…” என துக்கமாய் அவளுரைக்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லை அம்முகுட்டி. உன் ஃபீலிங்க்ஸை தெரிஞ்சிக்க தான் கேட்டேன். இதெல்லாம் தெரிஞ்சி பேசி தானே மேரேஜ் செஞ்சோம். அதனால இது என்னிக்குமே எனக்கு டிஸ்அப்பாய்ன்மெண்ட்டா இருந்ததில்லை” என்றுரைத்தவன்,

“அதுக்காக தள்ளி தான் படுக்கனும்னு அவசியமில்லை” என்றவன், அவளை தன் கைவளைக்குள் வைத்து உறங்கச் செய்தான்.

அவளுறங்கியதும் அவளின் நெற்றியில் முத்தமிட்டவன், “என் செல்ல அம்முகுட்டி. நீ இப்படி என் கைக்குள்ள இருந்தாலே போதும்டி. தள்ளியிருந்தவ இப்படி என்னை ஒட்டிக்கிட்டு தூங்கிற அளவுக்கு வந்திருக்கியே. அதைப்போல அதுக்கும் உன் மனம் மாறும். அதுவரை நான் காத்திட்டு இருப்பேன்டி தங்கம்” என தன் மனதிற்குள் பேசிக் கொண்டான்.

நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
இந்த இதயம் தாங்கவில்லை
காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனாள்
அந்த கன்னி என்ன ஆனாள்

பக்கத்து வீட்டிலிருந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்த பாடல் ஜன்னலின் வழியாக இவனின் செவியை தீண்ட தன்னவளை எண்ணிய ஏகாந்த மனநிலையில் உறங்கிப்போனான் இளா.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, சென்னையில் தங்களின் புதிய ஃப்ளாட்டில் செட்டிலாகி இருந்தனர் மஹாவும் மதியும்.

ஒரு நாள் மாலை மஹா வீட்டை அடைந்த நேரம், தான் வர சிறிது நேரமாகுமென கைபேசியில் அழைத்து கூறினான் மதி.

எட்டு மணி வரை இரவுணவு தயாரித்துவிட்டு மெத்தையில் மஹா அமர்ந்த நேரம், ஒலித்தது வீட்டு அழைப்பு மணி. சென்று கதவை திறந்தாள் மஹா.

வேலையால் ஏற்பட்ட சோர்வு முகத்தில் இருந்தாலும் அவளை கண்டதும் உண்டாகிய பளீர் புன்னகையுடன், “ஹாய் டார்லிங்” என்றபடி உள் நுழைந்தான் மதி.

“நான் ரிஃப்ரஷ் ஆயிட்டு வரேன். டின்னர் எடுத்து வைக்கிறியா?.. செம்ம பசில இருக்கேன்” என்றவன் உரைக்க,

“ஹ்ம்ம் டின்னர் ரெடி தான் மதிப்பா. நீங்க டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றவள் முகப்பறையில் இருந்த மெத்தையில் அமர்ந்தாள்.

மதி குளியலறை சென்று ரிஃப்ரஷாகி முகப்பறை வந்துப் பார்க்க, மெத்தையின் நீளத்திற்கு ஏற்றவாறு தன் உடலை சுருக்கி படுத்திருந்தாள் மஹா.

அவனுக்காக காத்திருந்தவள், அயர்வில் அவளறியாது உறங்கியிருந்தாள்.

மென்னகையுடன் அவளைப் பார்த்திருந்தவன், அவளருகே இருந்த சிறு இடைவெளியில் அவளை அணைத்துக்கொண்டு அவள் முகத்தை தன் மார்பில் தாங்கிக் கொண்டு இவன் படுக்க,

அந்த அசைவினில் சிறிது கண் விழித்தவள், “பசிக்குதுனு சொன்னீங்களே. வாங்க சாப்பிடலாம்” என அவள் எழப் போக,

“இல்லடா. இப்படியே கொஞ்சம் நேரம் இருக்கலாம்” எனக் கூறி அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டான்.

“என்னடா இன்னிக்கு ரொம்ப வேலையா? டயர்டா தெரியறியே?” என்றவன் கேட்க,
அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவள் முகத்தை நிமிர்த்தி அவன் முகம் நோக்கி,

“ஆமாப்பா… இடுப்பு ரொம்ப வலிக்குது” என இடுப்பில் கை வைத்து வலியில் முகத்தை சுருக்கி அவள் கூறிய நொடி, அவளை தன் கையில் ஏந்தியவன் படுக்க வந்திருந்தான் அவளை தங்களின் கட்டிலில்.

“இரு நான் மூவ் தடவி விடுறேன்” எனச் சொல்லி அதை எடுக்க அவன் விலக,

அவன் கைகளை பற்றியவள், “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல சாப்பிடுவோம்” என அவன் கைகளை பற்றிக்கொண்டு சாப்பிடும் அறைக்கு அழைத்துச் சென்றாள் அவனை.

இருவரும் மற்றவருக்கு ஊட்டிவிட்டு உணவினை உண்டு முடித்ததும், அவளை கட்டிலில் படுக்கச்செய்து முதுகுலிருந்து இடுப்பு வரை மூவ் தடவி நன்றாக நீவி விட்டான்.

அவனின் அழுத்தமான மசாஜில் வலி குறைந்து தூக்கத்தில் அவள் கண்கள் சொருக, அவனை இழுத்து தன்னருகில் படுக்கச் செய்தவள் வலி நிவாரணியாய் மாறிய அவன் கைகளுக்கு முத்தமிட்டு அவன் மார்பில் சாய்ந்து உறங்கிப்போனாள்.

மறுநாள் காலை அவளை எழுப்பியவன், “முதல்ல ஆபிசுக்கு லீவ் சொல்லு. மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் ஹோட்டல்ல சாப்டுக்கலாம். அப்புறம் டாக்டர் பார்க்க போறோம். நான் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டேன்” எனக் கூறி மஹாவை கிளம்பச்சொன்னான்.

“அய்யோ சின்ன இடுப்பு வலிக்கு டாக்டரா?? அதெல்லாம் வேண்டாம் மதி. ஐம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் நௌ” என்றாள் மஹா.

“நான் சொல்றதை இப்ப கேட்கப்போறியா இல்லையா” என்றவன் சற்று அதட்டலாய் கூற,

அவனுக்கு ஒழுங்கு காட்டியவள் குளிக்கச் சென்றாள்.

பின் இருவரும் கிளம்பி உணவகத்தில் காலை உணவை உண்டுவிட்டு பிசியோதெரபிஸ்ட்டை காணச் சென்றார்கள்.

அந்த டாக்டர் மதியின் பள்ளித் தோழர் என்பதால் சிநேகமாகவும் கிண்டலும் கேலியுமாகவே இருவரிடமும் பேசினார். பின் தன் பணியின் காரணமே இவ்வலி வந்ததாய் மஹா கூறவும் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை உரைத்தார்.

“பொதுவாகவே ஐடில வேலை செய்றவங்களுக்கு இந்த முதுகு வலி இடுப்பு வலி காமென் ஹெல்த் இஸ்யூவாகிப் போச்சி. அதுக்கு காரணம் அவங்க சேர்ல உட்காருர பொசிஸன் தான். நாங்க ஐடி கம்பெனிகளுக்கு போகும் போது அவங்களுக்கு கொடுக்கக் கூடிய கவுன்சிலிங்கை உங்களுக்கு நான் சொல்றேன். அதை நீங்க ஃபாலோ செஞ்சீங்கனா, இந்த வலிலாம் இருக்கவே இருக்காது” என்றவர்,

தன் கையில் ஒரு வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு விளக்கவாரம்பித்தார்.

1. உங்க கண் பார்வை மானிட்டருக்கு நேரா இருக்கனும். அப்படி இருக்குற மாதிரி சேர் அட்ஜஸ்ட் செஞ்சி உட்காருங்க. மேலயோ கீழயோ பார்வை இருக்க மாதிரி உட்கார்ந்தா நீங்க கழுத்தை அதற்கேற்றார்ப்போல் அசைக்கும் போது கழுத்து வலி ஏற்படும்.

2. உங்க முதுகு மற்றும் இடுப்பு நிமிர்ந்து நேரா இருப்பது போல் அமரனும். அப்படி அமரும் போது உங்கள் முதுகையும் இடுப்பையும் சேர் பேக்சைட் சப்போர்ட் செய்யனும். ஒரு சில சேர்ல இடுப்புப்பக்கம் இடைவெளி இருக்குற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த கேப்ல சின்ன பில்லோ வச்சி உட்காரலாம். மொத்தத்தில் இடுப்பு முதுகு இரண்டும் பின்னாடி ரெஸ்ட் ஆகிறது போல உட்காரனும்.

3. கீபோர்டு அண்ட் மௌஸ் உங்க கைக்கு நேரா இருக்குறது போல வையுங்க. கையை தூக்கியோ இல்ல இறக்கியோ நீங்க டைப் செய்றது போல சேர் பொஸிஷன் இருக்கக்கூடாது. ஹேண்ட் அண்ட் கீப்போர்டு ஷுட் பி இன் ஈவன் பொஸிஷன்.

4. Arm rest and foot rest கண்டிப்பா தேவை.

இதில்லாம நாங்க சொல்ற அடிஷ்னல் அட்வைஸ், “ப்ளீஸ் பிளிங்க் யுவர் ஐஸ். வேலை செய்ற ஆர்வத்துல கண்ணை சிமிட்ட மறந்திடுவோம். வேலை செய்யும் போது கண் சிமிட்ட மறக்காதீங்க. அப்புறம் ஒன்ஸ் இன் எவ்ரி ஒன் ஹவர் ஆர்  டூ அவர் சேரை சாச்சு கண்மூடி கண்ணை ரிலாக்ஸ் பண்ணுங்க. டிரிங்க் மோர் வாட்டர். அடிக்கடி எழுந்திருச்சி கொஞ்சம் வாக் பண்ணுங்க. அப்படியே உட்கார்ந்துட்டே இருக்காதீங்க. இதெல்லாம் பின்பற்றினாலே உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுக்காக்க முடியும்” என்று தன் உரையை முடித்தவர் வலி நிவாரணியாய் சில மாத்திரைகளை வழங்கி வலி அதிகம் இருக்கும் சமயத்தில் மட்டும் உபயோகிக்குமாறு கூறினார்.

இவற்றை நன்றாய் கேட்டுக்கொண்டனர் மஹாவும் மதியும்.

பின் சிறிது நேரம் டாக்டர் நண்பனுடன் பேசிவிட்டே கிளம்பிச்சென்றனர் மதி தம்பதியர்.

வீட்டிற்கு வந்ததும் டாக்டர் கூறிய அனைத்தும் அவள் பின்பற்ற வேண்டுமென்ற கண்டிப்பான உத்தரவையும்  அவன் போட தவறவில்லை.

ஜனவரி 2013

ஆஷிக் ரஹானா திருமணம் ரஹானாவின் ஊரான ஆரணியில் நடந்து முடிந்திருந்தது. அதற்கான வரவேற்பு மறுநாள் சென்னையில் வைத்திருந்தனர்.

ஆஷிக்கிற்கு நண்பர்கள் அதிகம் என்பதால் அவனுடைய பள்ளி கல்லூரி தோழமைகள் பெரும் படையாய் வந்திருந்து கேக் வெட்ட செய்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.

அந்நேரத்தில் வந்தனர் வாணி மற்றும் ப்ரண்ட்ஸ் குழாம். வாணி தன் தந்தையுடன் வந்திருக்க, வேணி இளாவுடனும், மஹா மதியுடனும் தம்பதியராய் கலந்துக்கொண்டனர்.

வாணியைப் பார்த்ததும் கேபிக்கா என அணைத்துக் கொண்டாள் ரஹா.

“ஹே எப்படி கண்டுப்பிடிச்ச?” என ஆச்சரியமாய் வாணி வினவ,

“ஆமா இது கண்டுபிடிக்கிறது பெரிய விஷயம் பாரு. நான் கேபினு கூப்பிடறதுக்கு ஏத்த சைஸ்ல தானே நீயும் இருக்க. என்ன இப்ப கொஞ்சம் அகலமாகிட்ட” என ஆஷிக் கூற,

“டேய் நல்ல நாள் அதுவுமா அடிக்க கூடாதேனு பார்க்கிறேன்” என அடிக்குரலில் சீறினாள்.

வாணியின் பேச்சில் சிரித்துக் கொண்டிருந்தாள் ரஹானா.

“எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை அடுத்து பார்க்கும் போது வச்சி செய்றேனா இல்லயா பாரு” என வாணி உரைக்க,

“ஆஆஆ அம்மாஆஆஆ பயந்துட்டேன்” என அவளுக்கு ஒழுங்கு காட்டியவன்,

“இங்க ஒருத்தி புருஷனை அடிக்கிறேனு சொல்றா. நீ கெக்கபெக்கேனு சிரிச்சிட்டு இருக்க. அவளை இந்நேரம் ஒரு வழிப் பண்ணி உன் புருஷன் பக்திய காமிச்சிருக்க வேண்டாமா” என ரஹானாவிடம் வீரமாய் அவன் வசனம் பேச,

“ரஹாப் பொண்ணு, உன் புருஷனை நான் அடிச்சா தானே தப்பு. எனக்கு பதிலா நீ அடிச்சிடுடா” என கண்சிமிட்டி வாணி கூற,

“கேபிக்கா சொன்னா சரி தான்” என சிரித்துக் கொண்டே வழிமொழிந்தாள் ரஹானா.

“நல்லா கூட்டு சேர்ந்திருக்கீங்க எனக்குனு. அவ அடிய எப்படி சமாளிக்கனும்னு எனக்கு தெரியும். அதுக்கெல்லாம் பயிற்சி எடுக்காமலா மேரேஜ் கிணத்துல குதிப்போம் நாங்க” என கேலியாய் அவன் கூற, வாய் விட்டு சிரித்தனர் அனைவரும்.

“இதே போல இரண்டு பேரும் எப்போதும் சந்தோஷமா நிம்மதியா இணைப்பிரியாம விட்டுக்கொடுத்து வாழனும். விஷ் யூ போத் எ ஹேப்பி ஹேப்பி மேரீட் லைஃப்” என வாழ்த்தினாள் வாணி.

“தேங்க்ஸ் எ லாட் கேபி” என மனநிறைவாய் கூறினான் ஆஷிக்.

இவர்களின் இச்சம்பாஷணையை அருகிலிருந்து கண்டிருந்திருந்தார் வாணியின் தந்தை. அவரும் அவர்களின் நட்பில் பூரித்து தான் போனார்.

மே 2013

வேணி இளா திருமணம் முடிந்து நான்கு மாதமாகிய நிலையில்,

வேணி செகண்ட் ஷிப்ட் சென்ற அந்த நாளில், இளாவுடன் கேஃபிடேரியாவில் அமர்ந்து, தான் சமைத்து எடுத்து வந்த உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தாள் அவனுக்கு.

தட்டில் சாப்பாடு வைத்தும் உண்ணாமல் இளா எங்கோ வெறித்து நோக்க, எங்கிவன் பார்க்கிறானென அவன் பார்வையின் திசையைப் பின்பற்றி இவளும் பார்க்க, அங்கே ஓர் பெண் புடவை அணிந்து நீளமான தலைமுடியை பின்னலிட்டு பூச்சூடி அழகாய் சிரித்துக் கொண்டே தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“அங்கென்ன பார்வை? கண்ணை நோண்டிடுவேன்” என்றுரைத்துக் கொண்டே இளாவின் கையை நறுக்கென அவள் கிள்ளி வைக்க,

ஆஆஆவென அலறியவன்,
“ஸ்ஸ்ஸ் லூசாடி நீ… இப்படி கிள்ளி வைக்குற” எனக் கையை தடவிக்கொண்டே கூறினான்.

“உனக்கே தெரியும் நான் மாசாமாசம் முடி கட் பண்ற ஆளு. உனக்காக தான் நான் முடியை வெட்டாம நீளமா வளர்த்துட்டு இருக்கேன். இந்த மூக்குத்திக் கூட உனக்காக தான் உனக்கு பிடிக்குமேனு தான் குத்தினேன். நீ என்னடானா என் முன்னாடியே இன்னொரு பொண்ணை சைட் அடிச்சிட்டு இருக்க” என உக்கிரமாய் உரைத்து முகத்தை திருப்பிக் கொள்ள,

அவளின் பொஸஸிவ்னஸ் நிறைந்த இக்கோபத்தில் அவன் மனம் குத்தாட்டம் போட, மெலியதாய் சிரித்தவன் அவளை மேலும் சீண்டும் பொருட்டு பேசலானான்.

“டேய் அம்முக்குட்டி, என்னடா நீ இதுக்கு போய் கோவிச்சிக்கிற. எத்தனை தடவை உன் கிட்ட இந்த பொண்ணு அழகா இருக்கு. அந்த பொண்ணு அழகா இருக்குனு காமிச்சிருக்கேன். நீயும் என் கூட சேர்ந்து ஆமானு சொல்லி பார்ப்பியே” என்றவன் கூற,

“அது அப்போ இது இப்போ” என்று முறைத்தாள் அவனை,

வாய்குள்ளே சிரித்துக் கொண்டவன், “ஏன் என்ன வித்தியாசம் வந்துச்சாம் அப்போக்கும் இப்போக்கும்” என்றவளை வம்பிழுக்க,

“அதெல்லாம் அப்படி தான். இப்போ என்னை தவிர அழகுனு யாரயாவது பார்த்தே கொன்றுவேன்” என ஆங்காரமாய் கூறியவள்,

பின் மெல்ல அவள் கண்களில் நீர் திரையிட அவனை நோக்கியவள், “ஏன் இளா நான் அழகா இல்லையா?” என்று கேட்ட நொடி,

எதிர் இருக்கையில் இருந்தவன் அவளருகில் இருந்த இருக்கைக்கு மாறி அமர்ந்து அவள் கைகளை தன்னுடன் கோர்த்தவன்,

“என்ன பேச்சு பேசுற நீ? என்னை பத்தி உனக்கு தெரியாதா? உன்னை வம்பிழுக்க தான் அந்த பொண்ணையே நான் பார்த்தேன். நம்ம மேரேஜ்க்கு பிறகு நான் எந்த பொண்ணை பத்தியாவது உன் கிட்ட பேசிருக்கேனா இல்ல பார்த்திருக்கேனா?” என அவள் விழி நோக்கி அவன் வினவ,

“சாரி இளா” என்றாள் தன் தலையை குனிந்தவாறே,

“தட்ஸ் ஓகே. சாரி நானும் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன் வம்பிழுக்கிறேனு” என மனம் வருந்தி அவன் கூற,

“அதெல்லாம் பரவாயில்லை இளா. உனக்கு பிடிச்ச கத்திரிக்காய் காரக்குழம்பு வச்சிருக்கேன் இன்னிக்கு” என்றுக் கூறி அந்த தட்டை அவனிடத்திற்கு வைக்க,
சாப்பாட்டை பிசைந்து உண்டவன்,

“செம்மயா தேறிட்டடா அம்முகுட்டி. சூப்பரா டேஸ்டா இருக்கு” என்றுரைத்துக் கொண்டே அவளுக்கு ஊட்ட கையை கொண்டுப் போக,

“அய்யோ இது ஆபிஸ்” என்றவள் பின் வாங்க,

“என் வைஃப்க்கு நான் ஊட்டுறதுக்கு எவன் என்ன சொல்லுவான்” என்று அவளுக்கு ஊட்டிவிட்டே சாப்பிட்டான்.

அந்நேரம் அங்கு வந்த இளாவின் டீம்மெட் ஷில்பாவிற்கு இளாவை வம்பிழுக்கத் தோன்ற, அவர்களின் அருகே சென்றவள், “இளா யூ ஆர் லுக்கிங் சோ ஸ்மார்ட் டுடே” என்றுக் கூற,

“அச்சச்சோ இப்ப தான் என் பொண்டாட்டிய மலையிறக்கி சாப்பிட வச்சிட்டிருக்கேன். இவ திரும்பவும் அவளை மலையேத்திடுவா போலயே” என மைண்ட்வாய்ஸில் பேசிக்கொண்டவன்,

அவளின் புகழுரைக்கு நன்றிக் கூறி சிரித்துக் கொண்டிருக்க, இங்கே இளாவை முறைத்துக் கொண்டிருந்தாள் வேணி.
சற்று நேரம் பேசிவிட்டு ஷில்பா செல்ல,

“இங்க பாரு இளா… உன் மீசை மட்டுமில்ல… நீ மொத்தமா எனக்கு மட்டும் தான் பாத்தியப்பட்டவன். எனக்கு மட்டும் தான் உன்னை ரசிக்கிற உன்னை வர்ணிக்கிற உரிமை இருக்கு. சொல்லிட்டேன். இனி எவளாவது இப்படி சொல்லும் போது ஈஈனு இளிச்சிட்டு இருந்தேனு வை… பல்லதட்டி கையில கொடுத்திடுவேன்” என்று கோபமாய் உரைத்துவிட்டு அவள் அங்கிருந்து எழப்போக,

அதுவரை அவளின் பேச்சை ரசனைப் பாவத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவன், அவள் எழப்போகவும் கோபம் உச்சமேற, “நான் இப்ப சாப்பிடவா வேண்டாமா அம்ஸ்” என்றான்.

உடனே தன் இருக்கையில் அவள் அமர, அவளுக்கு ஊட்ட அவன் கைகள் நீண்டதும் வேண்டாமென அவள் தலையசைக்க, “சரி எனக்கும் வேண்டாம்” எனக் கூறி அவன் எழ முற்பட, அவன் கைகளைப் பற்றி அமர வைத்தவள் தானே அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

பின் இருவரும் உண்டு முடித்து கைகழுவியதும் வேணியிடம் சிறிது பேச வேண்டுமெனக் கூறி அவர்களின் அலுவலகத்தில் பூங்கா போன்ற அமைப்பிலிருந்த ஒதுக்குப்புறமான இடத்தில் பெரிய ஆலமரத்தின் கீழிருந்த அமர்வு இருக்கையில் அமரச் செய்தான் அவளை.

அவளருகில் அமர்ந்து அவள் கைகளை தன் கைக்குள் வைத்து மிருதுவாய் தடவிக்கொண்டே பேசவாரம்பித்தான்.

“அம்முகுட்டி ஆர் யூ ஃபீலிங் இன்செக்யூர்டு?” என்று கேள்வியாய் அவன் அவளைப் பார்க்க,

“தெரியலை இளா. ஆனா ரொம்ப கெட்டப்பொண்ணாக்கிட்டேன்டா. இப்பல்லாம் ரொம்ப பொறாமைபடுறேன். உன்கிட்ட எந்த பொண்ணாவது ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து பேசினா ரொம்ப கோவம் வருது” என்றவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டுக் கூற,

“ஹாஹாஹாஹா” என வாய்விட்டு சிரித்தவன்,

“அப்புறம்” என்றான்

“உன் கூடவே இருக்கனும் போல தோணுது. ஒரு நாள் உன்னை பார்க்கலைனாலும் மனசு வலிக்குது. என்னென்னமோ தோணுதுடா. மொத்தத்துல எப்பவும் உன்னையே தான்டா நினைச்சிட்டு இருக்கேன். என்னை விட்டு போய்ட மாட்டல இளா. என் அளவுக்கு உனக்கும் என்னை பிடிக்குமா இளா?” என அவன் தோளில் சாய்ந்து தன் மனவுணர்வுகளை அவள் கூற,

அதுவரை சிரிப்பாய் கேட்டிருந்தவன், என்னை விட்டு போய்ட மாட்டல என்ற கேள்வியில் விக்கித்துப் போனான்.
அந்தளவிற்கா அவள் தன்னை நேசிக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு மயிற்கூச்செறியச் செய்தது.

“உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு கூடிய சீக்கிரத்துல காமிக்கிறேன்” என கண்ணடித்து அவன் கூற,

“என்னமோ வில்லங்கமா பேசுறனு தெரியுது. இதுக்கு மேல இங்கிருந்தா சரிக்கிடையாது” என்று இருக்கை விட்டு எழுந்தவள்,

“வா போய் ஒழுங்கா வேலைய பார்ப்போம். சம்பளம் கொடுக்கிற எஜமானுக்கு கொஞ்சமாவது உழச்சி போடனும்ல” என்றவாறு பேசிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர் இருவரும்.

வேணிக்கு ஏனோ இன்று சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டுமென மனம் பரபரக்க, இரண்டாம் ஷிப்டில் இரவு 11 மணிக்கு கிளம்பிச்செல்பவள், இன்று 8 மணிக்கே கிளம்புவதாய் உரைத்து பெர்மிஷன் வாங்கிச்சென்றாள்.

இளாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க எண்ணி இவள் அவனிடம் கூறாது வீட்டிற்குச் சென்றுப் பார்க்க அவன் வேலைப்பளுவால் அலுவலகத்தை விட்டு கிளம்பாது இருந்தான்.

அவன் கைபேசிக்கு அழைத்து வீட்டிற்கு வந்துவிட்டதை உரைத்தவள், அவனுக்காக அவனுக்கு பிடித்தமான இரவுணவு தயாரிக்கலானாள்.

மணி பத்தை தாண்டியும் அவன் வீட்டிற்கு வராமலிருக்க, அவன் கைபேசிக்கு அழைத்தாளவள்.

அங்கு இளா அவனின் மேனேஜர் மற்றும் டீம் லீட் அவனை அவனின் கணினியை புடைச்சூழ அமர்ந்திருக்க, ஒரு இஷ்யூவை இன்றே சரி செய்யவேண்டுமென்ற முனைப்புடன் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் சரியாய் அவனின் கைபேசி அலற, எல்லோரிடமும் எக்ஸ்க்யூஸ் சொல்லி அழைப்பையேற்றான்.

“என்னடா அம்மு… சாப்பிட்டியா? எனக்கு வேலை இருக்குடா… எப்ப வருவேனே தெரியாது. எனக்காக வெயிட் செய்யாத… சாப்ட்டு தூங்கு” என்றுரைத்து விட்டு கைபேசியை வைத்தான்.

“ந்யூலி மேரீட்ல. கொஞ்சம் நாளைக்கு அப்படி தான். நேரத்துக்கு சாப்பிடீங்களா இல்லையானு தவறாம ஃபோன் வரும். அப்புறம் இப்டி ஒரு ஆளு இருக்கோம்ன்றதே மறந்துடுவாங்க” எனக் கேலியாய் அவனின் லீட்கூற,


அவரின் நியூலி மேரிட் என்ற விளிப்பில் அவன் முகத்தில் சிறு வெட்கம் படர அமைதியாய் அமர்ந்துக்கொண்டு வேலை பார்க்கலானான்.

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து அவள் அழைக்க, இங்கே இஷ்யூ சால்வ் செய்ய முடியாமல் நீண்டுக்கொண்டே போவதின் எரிச்சலில் இருந்தவன்,

“எக்ஸ்க்யூஸ் மீ” என தன் இடத்தைவிட்டு நகர்ந்து வந்து அழைப்பை ஏற்றவன்,

“அறிவிருக்காடி உனக்கு. இங்க மனுஷன் என்ன வேலைல இருக்கேன். சாப்டாச்சானு போன் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருக்க” என்று அடிக்குரலில் கத்த,

மறுப்பக்கம் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் ஒரு துளி நீர் விழ, “போடா கோவக்காய்” என்றுரைத்து போனை வைத்துவிட்டாள்.

அத்தியாயம் 19

மறுப்பக்கம் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் ஒரு துளி நீர் விழ,”போடா கோவக்காய்” என்றுரைத்து போனை வைத்துவிட்டாள்.

அவளின் கோவக்காய் என்ற விளிப்பில் அவனின் எரிச்சலையும் மீறி சிரிப்பு வந்தது அவனுக்கு.

“என் செல்ல ராட்சசிடி நீ” என மனதில் அவளை சீராட்டிக் கொண்டவன்,

“இரு வீட்டுக்கு வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்” என்று மனதில் எண்ணிக்கொண்டே தன் வேலையை கவனிக்கச் சென்றான்.

அங்கே கட்டிலில் படுத்திருந்தவள், “போடா கோவக்காய் பாவக்காய். நீ எக்கேடு கெட்டுப்போ. எனக்கு என்ன வந்துச்சு. போடா புடலங்காய்” என அவனை வசைப்பாடியவள்,

“ச்சே திட்டுறதுக்கு நாலு வார்த்தை கத்து வச்சிக்கனும். அவனை நல்லா திட்டினதும் என் கோபம் குறைஞ்சி போற அளவுக்கு அந்த வார்த்தை இருக்கனும்” என அவனை திட்டியோ இல்லை வசைப்பாடியோ ஏதோவொரு வகையில் மனதில்  அவனை எண்ணிக்கொண்டே உறங்கிப்போனாள்.

காலை மூன்று மணிக்கு தன்னிடமிருந்த வீட்டு சாவியை வைத்து உள் நுழைந்தவன் மற்றொரு அறைக்கு சென்று தன்னை ரிப்ரெஷ் செய்துக் கொண்டு தங்களினறைக்குச் சென்றுப்பார்க்க,

அங்கே கண்ணில் காய்ந்த கண்ணீர் கோடுடன் உறங்கியிருந்தாள் வேணி.
அவளின் கண்ணீரை கண்டதும் இவன் மனம் வலியைக் கொடுக்க,”சாரிடா அம்முக்குட்டி” என்றுரைத்து அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன், அவளை தன் கைவளைக்குள் கொண்டு வந்து தன்னுடன் சேர்த்தணைத்து உறங்கிப் போனான்.

காலை எட்டு மணியளவில் கதிரவன் ஜன்னலைத் தாண்டி முகத்தில் அறைந்த நேரம் விழியை மெல்ல திறந்துப் பார்த்த வேணி, தன்னை ஏதோ கயிறு கொண்டு கட்டிப்போட்டதைப் போல் உணர்ந்தாள்.
இளாவின் இரும்பு பிடிக்குள் இருந்தாள்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என மனதில் அவனை வைதவள், தட்டு தடுமாறி அவனின் பிடியிலிருந்து வெளிவந்தாள்.

“ம்ப்ச் அம்ஸ் எங்கப் போற?” என தன் கைகளை துழாவி அவன் அவளை தேட,
தள்ளி அமர்ந்து சிரித்துக் கொண்டே அதைப் பார்த்திருந்தவள், இன்னமும் அவளைத்தேடி அவன் கைகள் துழாவிக்கொண்டே இருக்க, அவனருகில் வந்தவள் தானாய் அவன் கையை தூக்கி தன் இடையைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள்.

முந்தைய நாளின் வேலைப்பளுவால் சோர்ந்திருந்தவனுக்கு தானாய் கண்கள் மீண்டும் தூக்கத்திற்கு இழுத்துச்செல்ல ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றானவன்.

அவனின் தூங்கும் முகத்தையே இமை சிமிட்டாது பார்த்திருந்தவள் இதற்கு மேல் அமைதியாய் படுக்கவியலாதென எண்ணிக்கொண்டு எழும்ப முயற்சித்தாள்.

அவனின் நித்திரை கலைக்காது எழுந்தவள் பதித்தாள் அவனின் நெற்றியில் தன் இதழை.


இது இளாவின் ஆணை.

படுக்கையறைக்கு கைபேசி எடுத்துவரக்கூடாதென்ற ஆணைப் போல் காலை முதலில் விழிப்பவர் மற்றவருக்கு முத்தம் கொடுத்துவிட்டே எழவேண்டும். இருவரும் நன்றாகவே பழகியிருந்தனர் இந்த நடைமுறைக்கு.

காலை கடன்களை முடித்து முகம் கழுவிவிட்டு வந்தவள் சமையலறைக்குச் சென்றாள் காபி போடுவதற்காக. பாலை அடுப்பில் வைத்து நின்றிருந்த சமயம் அவள் எழுந்ததும் இளா அவளை தேடிய நிகழ்வு மனதிலாட அவளுக்கான அவனின் செயல்கள் அனைத்தும் அவளின் மனக்கண்ணில் படமாய் ஓட “என் மேல எவ்ளோ அன்புடா உனக்கு” எனக் கூறிக்கொண்டவளின் மனம் அவனின் அன்பில் பூரித்தது. அவளின் வாய் தன்னால் அப்பாடலை பாடியது.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை

புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு

தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…

தன்நன் நானான என இடையை ஆட்டி ஆடிக்கொண்டிருந்தவள் பால் பொங்கப்போவதைப் பார்த்து அவசரமாய் அதை அணைக்க, அவளை பின்னிருந்து அணைத்திருந்தான் இளா. அவன் இதழ் அழுத்தமாய் பதிந்தது அவளின் கன்னத்தில்.

அவள் உடல் சிலிர்த்து மின்சாரம் பாய்ந்தது போன்றதொரு உணர்வில் தூக்கிப்போட்டது.

இந்த அணைப்பும் முத்தமும் இன்று முற்றிலும் மாறுபட்டதாய் தோன்றியது வேணிக்கு. இளாவின் அன்பு செய் முறையாகத் தான் எப்பொழுதும் இருக்கும் அவனின் முத்தமும் அணைப்பும். தந்தையோ தமையனோ பாசமாய் தரும் அணைப்பும் முத்தமாய் தான் இதுவரை இருந்திருக்கிறது.

ஆனால் இன்று அவள் திருமணமான புதிதில் அவன் தந்த முத்தத்தில் அவள் உடல் ஷாக் அடித்ததுப்போல் உணர்ந்ததன் தாக்கம் இருந்தது.

இடையில் தவழ்ந்த அவன் கரங்களின் இறுக்கம் அதிகரித்து அவளை இன்னும் தன்னோடு இறுக்க அவனிதழ் அவள் பின்னங்கழுத்தில் பதிய அவளின் மொத்த உடலில் நடுங்கவாரம்பித்தது.

“இளா” மென்மையாய் வந்து விழுந்தது அவளின் வார்த்தை.

“ஹ்ம்ம்” என்றானே ஒழிய, விலகவில்லை அவளை விட்டு.

முழு மயக்கத்தில் இருந்தானவன்.

அவன் மீதிருந்த கோபம் மறைந்திருந்தது.
அவனிடம் சண்டையிட வேண்டுமென்ற எண்ணம் மறந்திருந்தது.

அவளும் ரசித்தாள் சுகித்தாள் இந்நொடியை.

சற்று நேரம் கழித்து தட்டு தடுமாறி வார்த்தைகள் தந்தியடிக்க, “இளா காபி போடனும்” அவனை கலைத்தாள்.

மயக்கத்திலிருந்து சற்றுத் தெளிந்தவன் அவளை முன்புறம் திருப்பினான்.
தன்னை விழுங்கும் பார்வை பார்க்கும் அவளிமைகளில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

அவள் சமையல் மேடையை ஒட்டி நிற்க, தன் இரு கைகளையும் அவளிருப்பக்கமும் மேடையில் வைத்து அவளை சிறை செய்திருந்தவன் கூறினான் அவள் காதில்,

“லவ் யூ அம்ஸ். கண்டிப்பா நீ இல்லாம வாழ முடியாதுடி என்னாலயும்” கண்களில் காதல் பொங்க கூறினான் அவளிடம்.
அவள் இதயத்தில் படபடப்புடன் கூடிய மெல்லிய வருடலை செய்வித்தது அவனின் இவ்வரிகள்.

பின் நகர்ந்து தன் தலையை அழுந்த கோதியவன், “எப்படிடி உன்னை விட்டு நான் இருப்பேன்?” என்றான் வேதனைக் குரலில்.

அத்தனை தவிப்பு அவன் முகத்தில்.

அவனின் இவ்வார்த்தையில் பதறியது அவளுள்ளம்.

அவன் கன்னங்களை தன் இரு கரங்களால் தாங்கியவள், “ஏன் ஏன்டா என்னைய விட்டு நீ இருக்கனும். நான் உன் கூடத் தான் இருப்பேன். நீயே போக சொன்னாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.” சாய்ந்திருந்தாள் அவன் தோளில். அணைத்திருந்தாள் அவனை.

அவன் கூறிய பிரிவின் சொல்லிலேயே நடுங்கி கொண்டிருந்தது அவளின் உள்ளம்.

அவள் தலை கோதியவன், “நேத்து என் மேனேஜர் சொல்லும் போது எனக்கும் உன்னை போல் இப்படி உடம்பு பதற செஞ்சிதே தவிர, சந்தோஷப்படலை” என்றான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “என்ன சொன்னார் உன் மேனேஜர். இந்த பொண்ணு உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணுது. அதனால டிவோர்ஸ் பண்ணுனு சொன்னாரா. நீ அந்த மேனேஜர டிவோர்ஸ் பண்ணு முதல்ல. உன்னை உட்கார வச்சி நான் சோறு போடுறேன்” என வீர ஆவேசமாய் அவள் பேச,

இதுவரை இருந்த மனதின் இறுக்கம் தளர்ந்து மனம் குளிர சிரித்தானவன்.

“என் செல்ல அம்முகுட்டி” என அவளின் கன்னம் பிடித்து செல்லம் கொஞ்சியவன்,
“என்னை ஆன்சைட் போக சொல்றாங்கடி. சிங்கப்பூர் போக சொல்லிட்டாங்க. அதுவும் நாளைக்கே” என்றான் சோகமாய்.

“ஹே வாவ்! வாட் எ ஆப்பர்சூனிட்டி” அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு துள்ளிக்குதித்தாள்.

“அடியேய் கழுதை. கழுத்து வலிக்குதுடி” எனக்கூறி அவளை விலக்கி நிறுத்தினான்.

“இதுக்கு தான் சோக கீதம் வாசிச்சியா நீ. நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன். ஆமா உடனே விசா கிடைக்காதே. உனக்கு முன்னாடியே விசா அப்ளை பண்ணிட்டாங்களா? ஏன் என்கிட்ட சொல்லவேயில்ல” என்று அவனின் சட்டை காலரை அவள் பிடிக்க,

“அம்முகுட்டி பசிக்குதுடா. சாப்பிட்டுட்டே பேசலாமா?” என்றவன் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு கேட்க,
“சரி சரி நீ ஹால்ல உட்காரு. நான் ரெடி பண்ணி எடுத்து வரேன்.” என்று அவளை அனுப்பி வைத்தவளின் மனம் அவனின் பிரிவை எண்ணி வருந்தத்தான் செய்தது.

ஆனால் அதை அவனிடம் காண்பித்து அவனின் உத்யோக வளர்ச்சிக்கு தடையாய் இருக்க அவளுக்கு மனமில்லை.

சமையல் செய்துக்கொண்டே பலவித எண்ணிங்களில் சுழன்றுக் கொண்டிருந்தவள், “அம்மு ஸ்டெடி ஸ்டெடி அவனுக்கு முன்னாடி சோக கீதம் வாசிச்சுடாத” என மனதை தேற்றிக்கொண்டாள்.

பின் தயாரித்த உணவை இருவரும் சேர்ந்து உண்டப்பின்,

“அம்மு ஆபிஸ்க்கு லீவ் போடு. இன்னிக்கு பர்சேஸிங்கு போறோம்” என்றுரைத்து குளிக்கச் சென்றான் இளா.

“டேய் நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல” என்று அவனருகில் சென்று இவள் கேட்க, “டைம் ரொம்ப கம்மியா இருக்கு அம்ஸ். நாளைக்கு விடியற்காலை மூனு மணிக்கு ஃப்ளைட். டிக்கெட் கூட ரெடி. ஷாப்பிங்க் பண்ணிக்கிட்டே பேசலாம். இரண்டு பேரும் கிளம்பலாம் முதல்ல” எனக் கூறி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

“பயப்புள்ள எதுவும் மறைக்கிறானா நம்மகிட்ட. எப்ப விசாவுக்கு அப்ளை செஞ்சிருப்பான்? ஏன் சொல்லல என்கிட்ட?” என எண்ணிக்கொண்டே மதிய சமையலை செய்தவள், பின் தானும் குளித்து கிளம்பினாள் அவனுடன்.

அன்று முழுவதும் அவளை தன் கைவளைக்குள்ளே வைத்துக்கொண்டான்.

நிமிடமும் அவளை விட்டு பிரியவில்லை அவன்.

மதியத்திற்கு செய்து வைத்த உணவை இரவு வீடு வந்து உண்டனர்.

மணி பத்தை தாண்டிய வேளையில் தன் பேக்கிங் எல்லாம் முடித்து மெத்தையில் அவன் அமர, அவனுக்கு பால் எடுத்து வந்து கொடுத்தவள் தானும் அமர்ந்துக்கொண்டாள் அவனருகில்.

“ஏன் இளாப்பா இவ்ளோ சீக்கிரமா உடனே போக சொல்றாங்க?”

அவளின் அடிமனதில் அவனை கணவனாய் மட்டும் உணரும் வேளையில் அவளறியாது வரும் அழைப்பு இந்த இளாப்பா. அந்நேரம் கூடுதலாய் மரியாதையாகவே பேசுவாள் அவனிடம்.

அதை அவனும் அவதானித்திருந்தான் அவளுடன் பேசும் சமயங்களில். ஆனால் இப்பொழுது அவளின் இந்த விளிப்பில் அவளின் பரிதவிப்பை உணர்ந்தவன், அவளை தெளிய வைக்க எண்ணினான்.

“நேத்து இஸ்யூனு சொன்னேன்ல அது நானும் சிங்கப்பூருல இருக்க திலீப்பும் தான் பார்த்துட்டு இருந்தோம்.நேத்து நைட் அவரோட அம்மா ஹாஸ்ப்பிட்டலைஸ்டுனு தகவல் வந்துச்சு. அவர் உடனே கிளம்பனும்னு சொன்னாரு. ஆனா க்ளைண்ட் ஒத்துக்கலை. சோ மேனேஜர் எனக்கு விசா இருக்கவும் உடனே கிளம்ப சொன்னாரு. ஐ மீன் இன்னிக்கே போக சொன்னார். நான் தான் கெஞ்சி பேசி ஒரு நாள் தள்ளிப்போட்டேன். நான் அங்க போனா தான் திலீப் இங்க வந்து அவங்க அம்மாவ பார்க்க முடியும்” என தன்னிலை விளக்கம் அவனளிக்க,

“எப்ப விசா எடுத்த இளா? ஏன் அதை பத்தி எதுவும் சொல்ல மாட்டேங்கிற” என்றவள் கேட்க,

ஆழபெருமூச்செரிந்தவன், “நம்ம மேரேஜ் பத்தி உங்க அப்பா பேசின அந்த வாரம். நான் குழப்பத்துல உன் கிட்ட சரியா பேசாம சுத்தினேனே அந்த வாரம் விசா என் கைக்கு வந்துடுச்சு. எனக்கும் திலீப்புக்கும் ஒன்னா தான் விசா அப்ளை செய்ய சொன்னாங்க. யாருக்கு முதல்ல வருதோ அவங்களை அனுப்பலாம்னு. எனக்கு தான் வந்துச்சு. ஆனா எப்ப நீயே என்னை மேரேஜ் செய்ய சம்மதம் சொன்னியோ உன்னை விட்டுட்டு…. உன்னையோ இல்ல உங்க அப்பவையோ கஷ்டப்படுத்திட்டு போக மனசில்ல அம்ஸ். அந்த சூழ்நிலைல நம்ம மேரேஜ் நடந்தேயாகனும்னு தோணுச்சு. நீ தான் முக்கியம்னு தோணுச்சு. அதனால இப்ப எனக்கு ஆன்சைட் போக விருப்பமில்லைனு சொல்லிட்டேன். அடுத்து விசா கிடைச்ச திலீப்பை அனுப்பிட்டாங்க” என்றவன் கூறிய வார்ததைகளில், திகைப்பின் விளிம்பில் இருந்தாள் வேணி.

“ஆன்சைட் எவ்ளோ பெரிய விஷயம்டா. என்னை கல்யாணம் செய்துக்க அதை வேண்டாம் சொன்னியா?” இன்னும் திகைப்பு மாறாமல் அந்த தொனியிலேயே அவள் கேட்க,

“எப்பவுமே உன்னை கஷ்டபடுத்திட்டு ஒரு விஷயம் என்னால செய்ய முடியாது அம்ஸ். நீ ஃப்ரண்டா இருக்கும் போதே அப்படி தான். இப்ப நீ என் உயிர்டி. எப்படிடி உன்னை பிரிஞ்சி இந்த மூனு மாசம் இருக்கப்போறேன்” என அவள் தோள் சாய்ந்து வேதனைக்குரலில் இவன் கூற,

“அதெல்லாம் இருக்கலாம். தினமும் ஸ்கைப்ல பேசிக்கலாம். சட்டுனு மூனு மாசம் முடிஞ்சிடும்” என அவனுக்கு தேறுதல் கூறவதுப்போல் தனக்கும் கூறிக்கொண்டாள்.

இரவு பன்னிரெண்டு மணியளவில் விமான நிலையத்திற்கு கிளம்பினர் இருவரும்.

“வாணிய உன் கூட தங்க சொல்லிட்டேன். வீக்கெண்ட்ஸ் வாணி இல்லனா ஊருக்குப் போய்டு. உங்க வீட்டுல இல்ல நம்ம வீட்டுல எங்கனாலும் இரு. ஒன்னும் பிரச்சனையில்ல. நான் அம்மாகிட்ட பேசிட்டேன். கரெக்ட்டா டைம்க்கு சாப்பிடனும். அப்பப்போ இந்த அத்தானையும் நினைச்சிக்கோடா அம்முக்குட்டி” எனக் கூறி இறுக அணைத்திருந்தான் அவளை.

அவள் தோளில் பதிந்திருந்த இவன் விழிகளில் சிறு நீர்த்துளி எட்டிப்பார்க்க அவளறியாது அந்நீரை துடைத்தவன் அழுந்த முத்தமிட்டான் அவள் கன்னத்தில்.
முகம் முழுவதும் முத்தமிட்டவன் பிரிவின் வலியை ஆற்றிக்கொண்டிருந்தான் அவன் செயலில்.

“நான் வரவரைக்கும் இது போதும்” எனக் கண்ணடித்து அவன் கூற, மென்மையாய் சிரித்துக் கொண்டாள்.

கால் டாக்சி வரவழைத்து அதில் பயணித்தனர் இருவரும். அவன் தோளில் இவள் சாயந்திருக்க இருவரும் மற்றவரின் இருத்தலை சுகித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் செல்ல செல்ல அவள் மனம் ரணமாய் வலிக்கவாரம்பித்தது அவனின் பிரிவையெண்ணி.

முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தை வீட்டிலிருந்து கிளம்பி பள்ளி வாசலை அடையும் வரை குதூகலமாய் இருந்துவிட்டு பெற்றோர் விட்டுச் செல்லும் நொடி அழுது ஆர்ப்பாட்டம் செய்யுமே, அத்தகைய மனநிலையில் தான் இருந்தாள் வேணி.

அவன் உள் செல்ல சில நிமிடங்களே இருந்த நேரம், “பத்திரமா வீட்டுக்குப் போ. எனக்கு மெசேஜ் பண்ணு. நான் ஃப்ளைட்ல இருந்து இறங்கினதும் உனக்கு கால் பண்றேன்” எனக்கூறி அவன் விடைப்பெற்ற தருணம் , இவளின் மனம் தவித்து துடித்துக்கொண்டிருக்க, இளா என்றழைத்தவள் அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்திருந்தாள்.

விழிகளில் நீர் அருவியாய் கொட்டிக்கொண்டிருக்க, “லவ் யூ இளா. லவ் யூ இளா” என விடாது பிதற்றிக்கொண்டிருந்தாள்.

இது விமான நிலையத்தில் வழமையாய் நிகழும் காட்சி என்பதால் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

எவர் முன்னும் அழாமல் தன்னை கட்டுப்படுத்தும் தன் மனைவி இன்று  சுற்றத்தை மறந்து அவனை மட்டுமே மனதில் சுமந்து தன் காதலை உயிர்துடிப்பாய் உரைத்துக் கொண்டிருந்த இந்த வேளையில் மெய் சிலிர்த்து போனான் இளா.

அவன் கன்னம் தாங்கி தன் விழியின் உவர்நீர் அவன் கன்னம் தீண்ட முத்தமிட்டவள் மீண்டும் அவன் மார்பில் தலைசாய்த்துக் கொண்டாள்.

அவளால் அவன் விழிகளும் நீர் குளத்தில் மிதக்க தன்னை ஆசுவாசப்படுத்தியவன், அவளை தேற்ற கிண்டலில் இறங்கினான்.

“அடியேய் பொண்டாட்டி இந்த லவ் யூ வ முன்னாடியே சொல்லிருந்தா இந்நேரத்துக்கு உன் வயத்துக்குள்ள நம்ம பிள்ளைய டான்ஸ் ஆட விட்டிருக்கலாமேடி. எப்ப வந்து சொல்றா பாரு. நல்ல நேரம் பார்த்தடி உன் காதலை சொல்ல” என கிண்டலாய் கூறி அவளை சீண்ட, எதையும் காதில் வாங்காது அவனை அணைத்த கைகளையும் விலக்காது அமைதிக்காத்தாள்.

“என்னடா அம்ஸ்… இப்படி நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா நான் எப்படி நிம்மதியா போக முடியும்? சீக்கிரமா உனக்கு டிபெண்டன்ட் விசாக்கு அரேன்ஜ் செய்றேன். மூனு மாசத்துக்குள்ளே உனக்கு எப்ப கிடைச்சாலும் என் கூட வந்து இருந்திடு” எனக் கொஞ்சலாய் ஆரம்பித்து தன்னுடன் அவளிருக்கும் வழிவகை கூறி அவன் முடிக்க,

கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அவள் அவன் முகம் நோக்க, “யாருடா இது அழு மூஞ்சு பொண்ணுனு எல்லாரும் உன்னையே தான் பார்க்கிறாங்க” என சிரித்துக்கொண்டே கூற,

“பார்க்கட்டும். என் புருஷனை பிரிச்சியிருக்கிற கஷ்டம் எனக்கு தானே தெரியும்” என மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க அவள் கூற,

அவள் கன்னம் தாங்கி தன் பெருவிரலால் அவள் விழி நீர் துடைத்தவன், “என் செல்ல பொண்டாட்டி எப்பவும் யாருக்காகவும் யாரு முன்னாடியும் அழக்கூடாது. யாருக்காகவும் உன் பாலிஸிய நீ தளர்த்திக்க கூடாது. இப்ப சந்தோஷமா சிரிச்சி அத்தானை வழி அனுப்புவியாம். அத்தான் வேலைலாம் முடிச்சிட்டு வந்ததும் உன் வயித்துல நம்ம பிள்ளைய டான்ஸ் ஆட வைக்கிற வேலைய இரண்டு பேரும் சேர்ந்து பார்ப்போமாம்” என இதழ் விரிந்த சிரிப்புடன் கண் சிமிட்டி அவன் கூற,

எப்பொழுதும் அவன் சிரிப்பில் மயங்கும் தன் உள்ளத்தை அதன் போக்கில் விட்டவள், “அழகன்டா நீ” என வாய்விட்டு கூறியவள் இழுத்திருந்தாள் அவன் மீசையை.

“ஆஆஆஆ” என அலறியவன் கடித்திருந்தான் அவள் மூக்கை. இதழ் பதித்தான் அவள் மூக்குத்தியில்.

“நல்லா சாப்பிடு இளா. ரொம்ப ஸ்டெரஸ் எடுத்துக்காத. நேரத்துக்கு சாப்பிட்டு தூங்கனும் சரியா. தினமும் என்கிட்ட மறக்காம பேசனும். இப்போதைக்கு அவ்ளோ தான். மீதி எதுவும் நியாபகம் வந்தா மெசெஜ் பண்றேன்” என்றவள் கூறியதும் இருவரும் மற்றவரை இதமாய் அணைத்து விலகினர்.

மனம் நிறைத்த வேதனையுடன் பாரமான மனதுடன் இதயம் முழுக்க நிரம்பிய காதலுடன் அவன் சிங்கப்பூர் விமானத்தில் பயணிக்க இங்கு தன் வீட்டிற்கு கால் டாக்சியில் பயணித்துக் கொண்டிருந்தாள் இவள்.

— தொடரும்