உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 13
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதே நேரம் மஹாவின் தந்தை தரணி “பொறுமையா பேசிக்கலாம் கலை. எதுக்கு இவ்ளோ கோபம் இப்ப உனக்கு” என்றுரைத்தவர்,
“மஹாம்மா இங்க வா… அப்பா பக்கத்துல உட்காரு” எனக் கூறி தன் மெத்தை இருக்கையின் கைப்பிடியில் அவளை அமர்த்திக் கொண்டார்.
“இப்ப சொல்லுடா… யார்மா அவன்?” என தரணி கேட்க,
இதுவரை பொறுமையாய் நிகழ்வுகளைப் பார்த்த மதி, அவளின் வெளிரிய முகத்தை காண சகிக்காது,
“நான் சொல்றேன் அங்கிள்” எனக் கூறி ஆழ பெருமூச்சொன்றை விட்டான்.
தன் இருக்கையிலிருந்து எழுந்தவன்,
“அது நான் தான் ஆன்டி. மஹாக்கு ப்ரபோஸ் செஞ்சது நான் தான்” என்றவன் கூறிய நொடி கலகலவென சிரித்தனர் தரணியும் கலையும்.
மஹாவும் மதியும் புரியாத பாவனையில் இருவரையும் பார்க்க, உன்னை நானறிவேன் என்பதாய் பார்த்தனர் தரணியும் கலையும்.
மஹா உடனே தன் தாயின் இருக்கை அருகில் சென்றவள் அவரின் மடியில் முகம் புதைத்து “போம்மா நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா” என அழவாரம்பித்தாள்.
“நீ இவ்ளோ கோபப்பட்டு நான் பார்த்ததேயில்ல. என் மேல உனக்கு நம்பிக்கையில்லையானு என்னன்னமோ தோணுடுச்சு தெரியுமா” எனக் கூறி மேலும் அவள் விசும்ப,
“நீ அவனுக்கு உடம்பு சரியில்லைனு என்னிக்கு பதறிக்கிட்டு ஹைத்ராபாத் போனியோ அன்னிக்கே நான் கண்டுபிடிச்சிட்டேன். நீ உன்னுடைய காதலை கண்டுப்பிடிக்க தான் இத்தனை நாள் ஆயிருக்கு” என்றுரைத்தவர்,
“மதி யாரோ ப்ரபோஸ் செஞ்சா இவன் இவ்ளோ கூலா வந்து சொல்ல மாட்டானே… ஏன்னா அவன் காதலும் தான் எங்களுக்கு தெரியுமே… அதான் சும்மா கலாட்டா பண்ணலாம்னு பார்த்தா அதுக்குள்ள பயப்புள்ள நடுல புகுந்து கெடுத்திருச்சு” என உரைத்து மஹா ஆறுதல் படுத்தினார்.
மதியின் அருகில் வந்த தரணி,
“என் பொண்ண சந்தோஷமா வச்சி பார்த்துப்பங்கிற நம்பிக்கை எனக்கு என்னிக்குமே உண்டுப்பா. உன்னை விட நல்ல மாப்பிள்ளை என் பொண்ணுக்கு கிடைக்காது. சீக்கிரம் அம்மா அப்பாவ கூட்டிட்டு வந்து பேசுப்பா. கல்யாணம் நிச்சயம் செய்யலாம்” என்றுரைத்து அவனின் தோளில் தட்டிக்கொடுத்தார்.
அன்றே மதி தன்னுடைய வீட்டினருடன் பேசி தன் காதலை தெரிவித்து அவர்களின் சம்மதத்தை பெற்றுக் கொண்டான்.
வரும் வாரயிறுதி நாளிலேயே வீட்டிலேயே பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்ளலாமென முடிவு செய்தனர் இருவரின் பெற்றோரும்.
அன்றிரவு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சென்னையிலிருந்து பெங்களுருக்கு பயணித்தனர் மஹாவும் மதியும்.
தன் உடல்நிலை ஓரளவு சீரான நிலையில் சென்னையிலிருந்து தனது தந்தையுடன் காரில் பெங்களுருக்கு பயணித்தாள் வாணி.
நிச்சயதார்த்த களைப்புமாய் புதுப் பெண்ணாய் கல்யாண மணமகனாய் மாறிய பூரிப்புமாய் அன்றிரவு சேலத்திலிருந்து கிளம்பினர் இளாவும் வேணியும்.
அங்கு சேலத்தில் இளாவும் வேணியும் பேருந்து இருக்கையில் அமர்ந்திருக்க,
“அம்ஸ்” என அழைத்தான்.
“ம்” என ஜன்னல் வழியே வெளியே நோக்கிக் கொண்டே ஒற்றை வார்த்தை உரைத்தாள்.
“அம்ஸ்” மீண்டும் அழைத்தான்
“ம்” மீண்டும் அதே ஒற்றை வார்த்தையோடு அவள்.
“அம்ஸ்” மீண்டும் அழைத்தான்.
கடுப்பானவள், “என்னடா வேணும் உனக்கு. அம்ஸ் அம்ஸ் னு ஏலம் விட்டுட்டு இருக்க” என்றவள் அவனை நோக்கி திரும்ப, அழகாய் சிரித்தான்.
அதில் முகம் கனிந்தவள், “நிச்சயத்துல இருந்து உன் சிரிப்பு ஸ்பெஷலா என்னை கவருதே… என்னவா இருக்கும்?” என தன் தாடையை தட்டி யோசித்தவள்,
“ஹை கண்டுபிடிச்சிட்டேன். இந்த மீசைனால தான்டா” எனக் கூறி அவனின் மீசையை அவளிழுக்க,
“ஸ்ஸ்ஸ் அடியேய் வலிக்குதுடி” என மெல்லமாய் எனினும் காட்டமாய் அவள் காதிற்குள் உரைத்தான்.
வலித்தாலும் அவளின் செயல் இந்த உரிமையான தொடுகை அவனின் மனதை சாரலாய் தீண்டி சென்றது.
“ரொம்ப சந்தோஷமாயிருக்கு அம்ஸ். ஏன்னு தெரியலை. நிச்சயம் முடிஞ்சதுல இருந்து மனசுல பட்டாம்பூச்சு பறக்குற மாதிரி லைட் வெயிட் ஃபீல்” என அவளின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டு அவன் கூற,
“ஏன் கரப்பான்பூச்சி ஊறுன மாதிரி இல்லையா?” என நக்கல் செய்தாளவள்.
“ம்ப்ச். உனக்கு ஓவர் நக்கலாகி போச்சு” என வருடிய அவள் விரலில் கிள்ளி வைத்தானவன்.
“ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ… விடுடா கைய” என உருவிக் கொண்டாள்.
“உனக்கு இப்டிலாம் தோணலையா அம்ஸ்” என ஆசையாக கேட்டான் இளா
“நீ சொல்றது போல சொல்ல தெரியலை இளா. ஆனா சந்தோஷமா இருக்கு. நான் இன்னிக்கு மேக் அப்ல செம்ம அழகா இருந்தேன்டா. அந்த அலங்காரம் அதெல்லாம் செம்மயா இருந்தது. நான் எக்ஸ்பெட் செஞ்சதோட நல்லாவே இருந்துச்சு. சோ ஐம் வெரி ஹேப்பி. ஆனா போட்டோ தான் எப்படி வந்துச்சுனு தெரியலை. ஆல்பம் வந்ததும் பார்க்கனும்” என படு சீரியஸாய் அவளுரைத்துக் கொண்டிருக்க,
“ஙே” என விழித்துக் கொண்டிருந்தான் இளா.
“நான் என்ன கேட்டா இவ என்னத்த சொல்றா பாரு. இந்த பொண்ணுங்களே இப்படி தானா?” எனத் தலையில் அடித்து கொண்டான்.
“என்னடா எப்பவும் பஸ் ஏறினதும் ஹெட்செட்டை மாட்டிடுவ… இன்னிக்கு இன்னும் போடாம இருக்க?” என்றவள் வினவ,
“ஹ்ம்ம் உன் கூட கொஞ்சம் நேரம் பேசலாம்னு பார்த்தேன். ஆனா பேசின நேரமே வேஸ்டுனு இப்ப தானே புரியுது” எனக் கூறிக் கொண்டே ஹெட்செட்டை மாட்டிக் கொண்டான்.
“போடா புடலங்காய்” என அவனை வசைபாடியவள் ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
—
அங்கு சென்னையில் பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த மதியும் மஹாவும் மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர்.
அவனின் முழங்கையை பற்றிக் கொண்டு தோள் சாய்ந்தவள், “இதே போல எப்பவும் அவனோட கை வளைக்குள்ள நான் இருக்கனும் இறைவா” எனக் கண் மூடி அவசரமாய் ஒரு வேண்டுதல் வைக்க,
“நீ இந்த நேரம் என்ன நினைச்சியோ அது கண்டிப்பா நிறைவேறனும்னு நானும் கடவுள்கிட்ட பிரார்திக்கிறேன்” என்று மதி உரைத்த நொடி,
அவனின் வார்த்தையில் மின்னலாய் மின்னிய விழிகளோடு அவனின் முகத்தை அவள் நோக்க, கண் சிமிட்டி சிரித்தான்.
“எப்படி…எப்படி மதி? நான் வேண்டும் போதெல்லாம் தேவர்கள் மேலேருந்து ததாஸ்து சொல்றது போல நீ கரெக்ட்டா சொல்ற” என வியப்பாய் அவள் கேட்க,
“அது அப்படி தான். ஒருத்தரோட ஆழ் மனசுல நாம இருக்கும் போது, அவங்களோட நுண்ணிய சிந்தனைக் கூட நம்மை தீண்டும்” என்றவனுரைக்க,
“அந்தளவுக்கா நான் உன்னை காதலிக்கிறேன்… அந்தளவுக்கு வெளில தெரியுற மாதிரியா நடந்துக்கிட்டேன்” என மேலும் வியந்தவள் வினவ,
“என் குட்டிம்மாவை விட என்னை யார் அதிகமா காதலிக்க முடியும்” என அவளின் தாடையைப் பிடித்துக் கொஞ்சியவன்,
“வெளில தெரியலை. ஆனா நான் தான் உன் மனசுக்குள்ள இருக்கேனே. அதனால எனக்கு தெரியும்” என மதி அழகாய் சிரித்துக் கூற,
அவனின் முழங்கையை பற்றியிருந்தவள் அவனின் தோளில் தன் தலையை சாய்த்து கண் மூடிக் கொண்டாள்.
அவன் மீண்டும் ஏதோ பேச வர,
“எதுவும் பேசாத மதி. எனக்கு உன்னை ஃபீல் செய்யனும். உன்னோட இந்த நொடி வாழ்க்கையோட இன்பமான நொடியா மனசுக்குள்ள புதைச்சுக்கனும்”
ஏனோ இதற்கு மேல் பேச பிடிக்கவில்லை அவளுக்கு. அவனுடனான இந்நொடியை ரசித்துக் கொண்டிருந்தாள்.
—
சேலத்திலிருந்து மூன்று மணி நேரம் பயணித்திருந்த பேருந்தில் ஜன்னலினருகே அமர்ந்திருந்த வேணிக்கு குளிரத் தொடங்கியது.
அந்த ஜன்னல் கதவை சாற்ற முடியாமல் போனதாலும், எப்பொழுதும் தன்னுடன் பையில் எடுத்து வரும் போர்வை நிச்சய வேலைப்பளுவினாலும் கிளம்பிய அவசரத்தினாலும் எடுத்து வைக்க மறந்ததாலும் வெளிக் குளிர் ஊதக் காற்றாய் அவளை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
அதிக நேரம் பொறுத்துப் பார்த்தவள், பேருந்து கிருஷ்ணகிரி வந்த நேரம் பற்கள் குளிரில் தடதடக்கவாரம்பிக்க எழுப்பினாள் இளாவை.
இளா எப்பொழுதும் குளிர் தாங்குபவன். அதனால் அவனை இக்குளிர் பாதிக்கவில்லை. அதோடு தன்னுடன் எப்போதும் போர்வை எடுத்து வர மாட்டான்.
அவளின் நிலையை பார்த்தவன், “என்னடா என்னை முன்னமே எழுப்பிருக்கலாம்ல. எப்படி நடுங்குற பாரு” எனக் கூறிக் கொண்டே தன் பையிலிருந்த சிறிது குளிர் தாங்கும் தடிமனான தனது சட்டையை அவளுக்கு கொடுத்து அணிவிக்க வைத்தவன், அவளின் தோளில் தன் கைகளை வளைத்துப் போட்டு தன் தோளோடு அவளை இறுக்கிக் கொண்டான்.
சற்று நேரத்தில் அவளின் குளிர் சிறிது மட்டுப்பட, தன் முகத்தை அவனின் தோளிலிருந்து நிமிர்த்தி அவன் முகம் பார்க்க, “என்னடா?” என கேட்டான் அவன்.
“தூக்கம் வர மாட்டேங்குது இளா” என சிறுப்பிள்ளையாய் அவள் கூற,
தன் காதலிருந்த ஒரு ஹெட்செட்டை அவளின் காதிற்கு வைத்து, “பாட்டு கேளு அம்ஸ். தூக்கம் வந்திடும்” என்றுரைத்து கைபேசியில் பாட்டை இயக்கினான்.
அவனுடலின் கதகதப்பில் இதுவரை குளிரில் தெரியாத அவன் அருகாமையின் சிலிர்ப்பு பெண்ணவளுக்கு இப்போது தோன்ற சிறு படபடப்பு பெண்ணின் இதயத்தில்.
அவன் தோளில் தாடையைப் பதித்து அவன் விழியை அவள் நோக்க, அவனுமே அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
சித்ராவின் செந்தேன் குரலில் செவிவழி அப்பாடல் ஒலிக்க, அதன் வரிகளின் தாக்கத்தில் தன்னவனின் விழிச்சிறைக்குள் கட்டுண்டவள் மனதில் இதமான வருடலாய் ஸ்பரிசித்திருந்த அவனின் பார்வை அவளை இம்சித்துமிருக்க கண் மூடி சுகமாய் உறங்கிப் போனாள்.
கைவளைக்குள் தன்னவள்…. அவளின் ஸ்பரிசம், அது தந்த இதமான மனநிலை, செவி தீண்டும் மென்மையான பாடல், சுகமான குளிர் காற்று… அந்நொடி உலகிலேயே தான் மட்டுமே இன்பமான மனிதனென தோன்றியது இளாவிற்கு. வெகுவாய் ரசித்தான் சுகித்தான் அந்நொடியை.
—
திங்கட்கிழமை விடியற்காலைப் பொழுதில் மூன்றுப் பெண்களும் தங்களின் அறையை வந்தடைந்தனர்.
மஹா அறையை வந்தடைந்த நேரம் வேணி வீட்டு வாசற் கதவை திறந்துக் கொண்டிருந்தாள்.
வேணியை பார்த்த நொடி, “ஹே புதுப்பொண்ணு” என்றவளருகில் வந்து அவளின் முகத்தை ஆராய்ந்தாள் மஹா.
“முகத்துல ஏதோ புதுசா பல்ப் எரியுதே… என்ன மாயமோ என்ன மந்திரமோ?” என மஹா கண் சிமிட்டி வேணியை கிண்டல் செய்ய,
“சீ போடி” என உரைத்து வீட்டிற்குள் ஓடினாள் வேணி.
“வெட்கம் தாளாமல் சீ போ என்றாள் மாது” என மஹா ராகமாய் பாடிக் கொண்டே அவளின் பின்னோடு செல்ல,
“மஹாஆஆஆ” எனக் கூறி பல்லைக் கடித்தாள் வேணி இப்பொழுது.
“சரி கூல் கூல் பேபி” என சிரித்தவள்,
“நிச்சயதார்த்தம் லாம் எப்படி போச்சு” என்று வினவினாள் மஹா.
“ஹ்ம்ம் செம்மயா போச்சுடி. போட்டோஸ் மொபைல்ல இருக்கு மொபைல் சார்ஜ் இல்லாம இருக்கு. சார்ஜ் போட்டுட்டு அப்புறம் காமிக்கிறேன்” என்றுரைத்துக் கொண்டிருந்த சமயம் உள் நுழைந்தனர் வாணியும் அவளின் தந்தை செல்வமும்.
“ஹே வாணி… உடம்பு எப்படி இருக்கு?” என ஒரு சேரக் கேட்டனர் மஹாவும் வேணியும்.
“ஹ்ம்ம் நல்லா இருக்குடி. இப்ப எவ்ளவோ பெட்டர்” என்றுரைத்தாள் வாணி.
பின் வாணியின் தந்தையிடம் நலம் விசாரித்தனர் வேணியும் மஹாவும்.
வாணியை அறையை விட்டு அவளை பத்திரமாய் இருக்கும்படி கூறி விட்டு அவளின் தந்தை கிளம்பி செல்ல வாணியின் கண்கள் கலங்கியது.
“என்னடி என்னாச்சு?” என்றவாறே அவளருகில் வந்தமர்ந்தனர் மஹாவும் வேணியும்.
“ம்ப்ச் ஹோம்சிக் தான்டி. இத்தனை நாள் வீட்டுல இருந்தேன்ல அதான்… போக போக சரியாயிடும்” என்றாள்.
“சரி நீங்க சொல்லுங்க. ஒரு வாரம் எப்படிப் போச்சு? என்னலாம் செஞ்சீங்க? என்னலாம் சமைச்சீங்க??” என வாணி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
“உன் போன் என்னடி ஆச்சு? எத்தனை தடவை ட்ரை பண்ணேன் தெரியுமா… கால் போகவேயில்லை” என வேணி கேட்க,
“போன் உடஞ்சிடுச்சுடி. நேத்து கிளம்பும் போது தான் புது போன் ஒன்னு வாங்கினேன்” என தனது புது மொபைலை காண்பித்தாள்.
“உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் போன் செஞ்சேன்டி” என தயங்கியவாறே தொடங்கினாள் வேணி.
“என்னதுடி?” எனக் கேட்டாள் வாணி.
வாணியின் கேள்வியில் தயங்கி தயங்கி வார்த்தை வராது வேணி தத்தளிக்க,
அவளுக்கு உதவும் நோக்கில் , “நேத்து அம்முக்கும் இளாக்கும் எங்கேஞ்ச்மெண்ட் ஆயிடுச்சுடி” என்றுரைத்தாள் மஹா.
“என்னாது?” எனத் தன் காதை குடைந்தவள், தன் காதில் தவறாய் ஏதும் விழுந்து விட்டதோ என்றெண்ணி திரும்ப சொல்லு என வாணி கேட்க,
“நேத்து எனக்கும் இளாக்கும் நிச்சயதார்த்தம் நடந்துச்சுடி” என்றாள் வேணி.
ஆச்சரியத்தில் பெரும் அதிர்ச்சியில் சிக்குண்டவள் போல் சிலையாய் அமர்ந்திருந்தாள் வாணி. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வதென தெரியவில்லை அவளுக்கு.
“அப்ப இளாவும் நீயும் லவ் பண்ணீங்களாடி. ஏன்டி எங்க கிட்ட இத்தனை நாளாய் சொல்லலை” என கோபமாய் வாணி கேட்க,
எந்த வார்த்தையை தன்னை எவரும் கேட்டுவிடக் கூடாதென்று எவருக்கும் கூற மனசில்லாது சென்றாளோ அவ்வார்த்தையே தன்னை நன்கு அறிந்த நெருங்கிய தோழியின் வாயிலிருந்து வரவும் ரௌத்திரமானாள் வேணி.
— தொடரும்