உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 4

மே 2011

ஹெச் ஆரிடம் ரிப்போர்ட் செய்வதற்கான அந்த நாளில்…

“அடியேய் வாணி, எழுந்திருடி… இன்னிக்கு வேறொரு ஆபிஸ்க்கு போகனும். அந்த அட்ரஸ்ஸை கண்டுபிடிச்சுப் போக எவ்ளோ நேரம் ஆகுமோ?” என வாணியை எழுப்பிக் கொண்டிருந்தாள் மஹா.

அப்பொழுது குளித்து முடித்து வெளியில் வந்த வேணி, “அவ கிளம்பியிருந்து நம்மள எழுப்பின காலம் போயி… இப்ப நாம கிளம்பி அவளை எழுப்புற காலமாகிப் போச்சே… எப்படி இருந்த பொண்ணு இப்படி மாறிப் போச்சே” என வராத கண்ணீராய் துடைத்துக் கொண்டு வாணியைக் கிண்டலடிக்க,

துள்ளிக்குதித்தெழுந்த வாணி, “நீங்க தானடி மாத்துனீங்க! என்ன நடந்தாலும் டானு 9 மணிக்கு தூங்குற பொண்ண படம் பாக்கலாம் கார்ட்ஸ் விளையாடலாம்னு ஒரு மணி வரை தூங்க விடாம செஞ்சிட்டு இப்ப என்னைய குறைய சொல்றீங்க பக்கீகளா… அவ்ளோ நேரம் முழிச்சிட்டு இப்ப எப்டிடி சீக்கிரம் எழுந்திரிக்க முடியும்” என சிலிர்த்துக் கொண்டு பேச,

அவளின் பேச்சில் சிரித்த மஹா, “எங்க கஷ்டம் இப்ப புரியுதா உனக்கு. மூனு மாசமா காலைல எங்களை எழுப்பி கடுப்பேத்துவியே. இப்ப புரியுதா உனக்கு” என வில்லிப் போல் நடித்துப் பேச,

“என்னமோ போங்கடி. ஆனா உங்க கூட ரொம்ப சந்தோசமா, நான் நானா இருக்கேன்டி” என நெகிழ்ச்சியாய் கூறிவிட்டு குளிக்கச் சென்றுவிட்டாள்.

“எப்பவுமே உணர்வுபூர்வமா தான்டி நம்ம வாணி பேச்சை முடிப்பா” என வேணிக் கூற மென்மையாய் சிரித்துக் கொண்டாள் மஹாவும்.

இவர்கள் கிளம்பிச் சென்று அவர்களின் புதுக் கிளை அலுவலகத்தை அடைந்து தங்களின் பேட்ஜ் மக்களுடன் இணைந்து ஹெச் ஆர் தேவேந்தர் சிங்கை காணச் சென்றனர்.

இவர்களின் பேட்ஜ் மக்களை ப்ராஜக்டில் பணியமர்த்த இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹெச் ஆர் தான் தேவ். ஐடியில் அனைவரையும் பேர் சொல்லியே அழைக்க வேண்டும். பெரியவர் சிறியவர் வயதானவர் என்கின்ற எந்த பாரபட்சமும் பாராமல் பெயர் சொல்லி தான் அழைக்க வேண்டும். இது ஐடி யின் ஒரு விதி.
ஆகவே ஹெச் ஆர் தேவேந்தர் சிங்கை அனைவரும் தேவ் என்றே அழைப்பர்.

இவர்களுடைய பயிற்சிக்கேற்ற ப்ராஜக்டில் காலியிடங்கள் உள்ளதாயென அறிந்து அந்த ப்ராஜக்டில் இவர்களை பணியமர்த்துவதே ஹெச் ஆரின் வேலை.

எத்தனை காலியிடங்கள் உள்ளதோ அத்தனை மக்களை அந்த ப்ராஜக்டிற்கு பணியமர்த்த அந்த ப்ராஜக்ட் மேனஜரிடம் நேர்முகத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களே அந்த ப்ராஜக்டில் பணியமர்த்தப்படுவர்.

அனைவருக்கும் பணி இடம் பெங்களூர் தானெனவும் பணியிட மாற்றம் செய்யயிலாதெனவும் கூறிவிட்டார் தேவ்.
எனவே பெங்களூரிலிருந்து வரும் ப்ராஜக்ட் அழைப்புகளையேற்று நேர்முகத்தேர்வில் பங்கெடுத்துக் கொண்டு ப்ராஜக்ட் பெற்றுக்கொள்ள வேண்டுமென உரைத்து விட்டார் தேவ்.

பெரும் கவலையை விதைத்திருந்தது இச்செய்தி வாணிக்குள். சிறிது காலம் பெங்களூரில் வேலை பார்த்து விட்டு பணியிடமாற்றம் கேட்டால் தருவார்களெனக் கூறி வாணியைத் தேற்றினார்கள் மஹாவும் வேணியும்.

மூன்று மாதம் எவரும் தங்களின் ஊருக்குச் செல்லாமல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமையால் அனைவரும் இரண்டு நாட்கள் விடுபெடுத்துக் கொண்டுத் தங்களின் ஊருக்குச் சென்று வருவதாய் வேண்டுகோள் விடுத்தனர் ஹெச்ஆரிடத்தில்.

அவரும் ப்ராஜக்ட் கிடைக்கும் வரை வேலை ஏதுமில்லாததால் அவர்களின் விடுப்பிற்கு அனுமதி வழங்கினார்.

வாணி, ஆஷிக் மற்றும் மஹா உட்பட எட்டு நபர்கள் இருந்தனர் சென்னை செல்லவென அவர்களின் பயிற்சி வகுப்பு மக்களில்.

எனவே ஆஷிக்கும் மஹாவும் மதிய உணவு இடைவேளையில் சாந்தி நகர் பேருந்து நிலையம் சென்று கர்நாடக அரசுப் பேருந்தில் எட்டு பேருக்கு சென்னை செல்வதற்கான டிக்கெட் முன் பதிவு செய்தனர். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இல்லாத சமயமது.

வாணி தன் பெற்றோரிடம் அனைவருடன் சேர்ந்து வருவதாய்க் கூறி அனுமதிப் பெற்றிருந்தாள்.

வெகு நாட்களுக்குப் பிறகு தங்களின் ஊருக்கு செல்வதனால் உற்சாகமாய் கிளம்பினர் அனைவரும்.

வாணிக்கு, தாய் தந்தை அல்லாது முதல் முறை நண்பர்கள் தோழிகள் புடைசூழ பயணிக்கும் முதல் பயணம் அது.

அன்று இரவு அம்சவேணி அவர்களின் பிஜி அருகிலேயுள்ள தனியார் பேருந்தில் சேலத்திற்கு ஏறிச் சென்றிட, மஹா வாணி மற்றும் ஆஷிக் ஆட்டோவில் சாந்தி நகர் பேருந்து நிலையம் சென்றனர் சென்னை செல்வதற்காக. அவர்கள் சாந்தி நகர் வந்தடைய, சென்னைக்கு செல்லும் மற்ற தோழமைகளும் வந்துச்சேர சரியாகயிருந்தது. அனைவரும் அங்கிருந்த ஓர் உணவகத்தில் ஒன்றாய் அமர்ந்து அரட்டையடித்து இரவு உணவு உண்டுவிட்டு, தங்களின் பேருந்து நின்றுக்கொண்டிருந்த நடைமேடைக்கு வந்தனர்.

ஆஷிக் மஹாவிடம் தான் கொடுத்து வைத்த எட்டு நபருக்குமான பயணச்சீட்டை கேட்க, மஹா தேடினாள் தேடினாள் தேடிக்கொண்டேயிருந்தாள். ஆனால் பயணச்சீட்டு தான் கிடைத்தப்பாடாயில்லை.

அரைமணி நேரத்தில் பேருந்து கிளம்பத் தயாராய் இருந்த நிலையில் பயணச்சீட்டு காணவில்லை என்பது அனைவருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது. வாணி மஹாவின் பை முழுக்கத் தேடிப் பார்த்தும் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. தன்னால் மற்றவருககும் பிரச்சனையென எண்ணி கண்ணீர் வர ஆரமபித்தது மஹாவிற்கு.

தன்னுடைய ஜீன்ஸ் பாக்கெட்டில் தான் வைத்தேனென்று உரைத்தாளவள். ஆனால் பாக்கெட்டில் இல்லை.

ஆட்டோவில் ஏறி இறங்கும் போது கீழே விழுந்திருக்குமென சமாதானம் செய்துக் கொண்டனர் வாணியும் ஆஷிக்கும்.

பின் அப்பேருந்து நிலையத்திலிருந்த கர்நாடக அரசுப் பேருந்து அலுவலகத்திற்குச் சென்று டிக்கெட் தொலைந்து விட்டதாய் கூறி அதே இருக்கை எண்ணிற்கு வேறு டிக்கெட் கேட்க, மீண்டும் முழுப்பணம் செலுத்தினால் மட்டுமே டிக்கெட் கிடைக்குமென கூறிவிட்டனர் அவர்கள்.
பேருந்து கிளம்புவதற்கு கால் மணி நேரமேயிருக்க, ஆஷிக் அவசரமாய் ஏடிஎம் சென்று அனைவருக்குமாக அவனே மீண்டும் முழுப்பணமும் செலுத்தி டிக்கெட் வாங்கினான்.

பிறகு ஆஷிக் அந்த அலுவலரிடம் தங்களின் நிலையை எடுத்துரைக்க, அவர் ஒரு கடிதமளித்து, ஒரு மாதத்திற்குள் கர்நாடக அரசு பேருந்தின் தலைமை நிலையத்திற்கு சென்று இக்கடிதத்தைக் காண்பித்தால் பாதிப் பணம் திருப்பிச்செலுத்திவிடுவர் என உரைத்தார்.

ஒரு வழியாய் அவரவர் பேருந்து இருக்கையில் அமர, சென்னை பயணம் துவங்கியது.

வாணி மற்றும் மஹா இருக்கையின் பின் இருக்கையில் ஆஷிக் அமர்ந்துக் கொள்ள, பேருந்து கிளம்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே தன் கேலிப் பேச்சால் டிக்கெட் குளறுபடியால் சோர்ந்து போயிருந்த மஹாவை சிரிக்க வைத்திருந்தானவன்.

வாணி வெகுவாய் ரசித்தாள் இப்பயணத்தை.

நடுநிசி இரவில் பேருந்து திடீரென சடன் பிரேக் போட்டு ஓட்டுனரால் நிறுத்தப்பட்டது.

நன்றாக உறக்கத்திலிருந்த அனைவரும் முன் கம்பியில் மோதிக் கொள்ளுமளவு இருந்தது அந்த வேகம்.
_____

அதே நேரம் சேலத்திற்கு தனியார் பேருந்தில் ஏறிய அம்சவேணியின் இருக்கையினருகில் அமர்ந்திருந்தான் இளங்கோவன்.

“எப்ப பாரு பஸ் ஏறுன அடுத்த செகண்ட் காதுல ஹெட்செட்டைப் போட்டு தூங்கிட வேண்டியது” என்றவள் அவனின் காதிலிருந்த ஹெட்செட்டை உருவி எடுத்து,


“எவ்ளோ நேரமா கேட்கிறேன் இளா?? சொல்ல மாட்டேங்கிற… நான் இன்னிக்கு ஊருக்கு கிளம்புவேனு எனக்கே தெரியாது. உனக்கெப்படி தெரியும் இளா?” என வினவினாள் வேணி.

“அதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம் அம்ஸ்… தூங்க விடு என்னை” இளா தூக்க கலக்கத்திலுரைக்க,

“டேய் கோவக்காய்” அவனின் மண்டையை உலுக்கியவள்,

“பாதி வழில பஸ்ல ஏறி என் பக்கத்துல உட்கார்ந்து ஹாய் சொன்னதோட தூங்க ஆரம்பிச்சவன் தான்… எனக்குல இங்க மண்டை காயுது. போனா போகுதேனு உன்னை கொஞ்ச நேரம் தூங்க விட்டுட்டேன். இதுக்கு மேலும் முடியாது. இப்ப நீ பதில் சொல்லியே ஆகனும்” என அவனின் தலையைப்பிடித்து உலுக்கி அவனுறக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம்… உன்னை கண்காணிக்க ஸ்பை வச்சிருக்கேன். அவங்க சொன்னாங்க” என்றான் இளா.

“ஆமா இன்னிக்கு நீயும் எங்களை மாதிரி ஹெச் ஆர் கிட்ட ரிபோட் பண்ணனும் தானே ஆஃடர் டிரைனிங். காலையில் சென்னையில ரிப்போட் பண்ணிருந்தாலும் ஈவ்னிங் என்னை பாக்க உடனே கிளம்பி வந்துட்டியா? அம்புட்டு பாசமாடா என் மேல உனக்கு” என அவள் கண்ணை உருட்டிக் கேட்க, வாய்விட்டு சிரித்தான் இளா.

இவனின் சிரிப்பில் முன் இருக்கையிலிருந்த ஆளின் தூக்கம் கலைய, இளாவை திரும்பிப் பார்த்து முறைத்தாரவர்.

அவரின் முறைப்பில் வேணியின் காதருகில் ரகசியமாய், “எல்லாரோட தூக்கத்தையும் இப்படி பேசி டிஸ்டர்ப் பண்ணிட்டிருக்க நீ. நான் நாளைக்கு விலாவரியா சொல்றேன்” என்றான்.

அவனின் பேச்சில் முகத்தை மறுப்பக்கம் திருப்பிக் கொண்டு வேணி அமைதியாய் இருக்க, அதை காண சகிக்காது அவளின் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தவன்,
“இப்ப என்ன? நான் எப்படி பெங்களூர் வந்தேன்? நீ ஊருக்கு போறது எனக்கெப்படி தெரியும்னு தானே தெரிஞ்சிக்கனும். நான் பெங்களூர் ஆபிஸ்ல தான் ரிப்போட் பண்ணேன். எங்க பேட்ஜ் மக்களுக்கு பெங்களூர்ல தான் ப்ராஜக்ட் அலகேட் பண்ணுவாங்கனு சொல்லிட்டாங்க. சோ இனி எனக்கு பெங்களூர்ல தான் வேலை”

இதை அவன் கூறிய நொடி சட்டென திரும்பி அவன் முகம் பார்த்தவள் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

“ஹை நீயும் என் கூட பெங்களுர்ல தான் இருக்கப் போறியா… செம்ம” என பூரிப்பாயுரைத்தாள் வேணி.

“ஆமா…. இன்னிக்கு காலைல தான் வந்தேன் பெங்களுருக்கு. ஆபிஸ் ரிப்போட் பண்ணிட்டு உன்னை வந்து பார்க்கலாம்னு பார்த்தா நீயும் உன் பேட்ஜ் மக்களும் அங்க ஹெச் ஆர் கிட்ட பேசிட்டு இருந்தீங்க. அதை பார்த்தேன். அப்ப தான் நீங்க ஊருக்கு கிளம்புற ப்ளான் தெரிஞ்சுது. நீ தான் ஆஷிக் பத்தி ஏற்கனவே சொல்லிருக்கல. அங்கே ஆஷிக் மீட் பண்ணி அவன் நம்பர் வாங்கினேன். நீ எப்படி எந்த பஸ்ல வரேனு அவன் தான் சொன்னான். சும்மா சப்ரைஸ் கொடுக்கலாமேனு தான்”

“போடா உன் சப்ரைஸும் புடலங்காவும். நீ பிஜிக்கே வந்திருந்தீனா ஒன்னாவே பஸ் ஏறியிருந்திருக்கலாம்”  என்றாள் வேணி.

“கோவக்காய் புடலங்காய் திட்றதுக்கு காய் பேருலாம் யூஸ் பண்ணு. எதையும் திண்ணுடாத” என்றான் இளா.

“ஹி ஹி ஹி… சரி சரி… நான் தூங்கனும் டிஸ்டர்ப் பண்ணாத” என்றுரைத்து சீட்டை சாய்த்துக் கொண்டாள் வேணி.

“என் கெரகம் அம்ஸ் உன் கூடலாம் ப்ரண்ட்ஷிக் வச்சிக்கனும்னு” என்று புலம்பியவன், தானும் உறங்கலானான்.

அங்கே பெங்களுர் டூ சென்னை பேருந்தில் ஓட்டுனர் போட்ட பிரேக்கில் தூக்கம் கலைந்து அனைவரும் என்ன நிகழ்ந்ததென்று யூகிப்பதற்குள்ளேயே நடத்துனர் அனைவரையும் இறங்கச் சொல்லி அருகில் நின்றிருந்த மற்றொருப் பேருந்தில் ஏறச் சொன்னார்.

அப்பேருந்திலிருந்து இறங்கும் போது தான் தெரிந்தது இவர்களின் பேருந்து ஒரு காரில் மோதி பின் பகுதியை சட்ணியாக்கிருக்கிறதென்று. அதனால் விளைந்த ப்ரேக் தான் அதுவென உணர்ந்தனர் அப்போது.

எவருக்கும் ஏதுமாகவில்லையென உரைத்தார் நடத்துனர். பின் வேறோர் பேருந்திலேறி ஒரு வழியாய் சென்னை வந்தடைந்தனர் அவர்கள்.

ஆஷிக் மற்றும் வாணி சென்னை பூந்தமல்லியில் இறங்க, வாணிக்காய் காத்துக்கொண்டிருந்த அவளின் தந்தையிடம் வந்து நலம் விசாரித்து விட்டு பொறுப்பாய் வாணியை விட்டுச் சென்றான் ஆஷிக்.

அன்றைய அந்தப் பயணம் வாணிக்கு ஆஷிக்கின் மீது பெரும் மதிப்பைக் கூட்டியது. வாழ்வில் மறக்க முடியாத பயணமாய் அமைந்தது.

வேணியின் ஊருக்கருகில் இருக்கும் ஊர் தான் இளாவிற்கு. கல்லூரி படிக்கும் போது தான் இளா வேணிக்கு நண்பன் ஆனான்.

ஈரோடிலுள்ள மென்பொறியியல் கல்லூரியில் வெவ்வேறு டிபார்மெண்டில் பயின்றனர் இருவரும். எனவே கல்லூரி விடுதியிலேயே தங்கிப் பயின்றனர்.

ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு வாரயிறுதி நாட்களில் பயணம் செய்வர். அவ்வாறு ஒரு நாள் சேலம் செல்வதற்காக ஈரோடு பேருந்து நிறுத்தத்தில் வேணி பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தப் போது மயங்கி விழுந்து விட்டாள்.

அப்போது தானும் சேலம் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த இளா, இவள் மயங்கியதும் வந்து பார்த்து தன்னுடைய கல்லூரிப் பெண் இவளென கூட்டத்தினரிடம் உரைத்து அவளுக்காக முதலுதவி செய்து விழிக்கச் செய்திருந்தான்.

காலையில் தேர்வு அவசரத்தில் உண்ணாமல் சென்றது… அப்படியே தேர்வு முடிந்ததும் கிளம்பி வந்தது தான் மயக்கத்திற்கு காரணம் ஆகியது.
பிறகு அவளை உணவகத்திற்கு அழைத்துச் சென்று உண்ண வைத்து, எவ்வூர் செல்கிறாளெனக் கேட்டு தானும் அவ்வூருக்கு அருகில் தானெனக் கூறி அவளுடேனேயே பயணித்து அவளின் வீடு வரை சென்று நடந்ததை அவளின் தந்தையிடம் கூறி கவனித்துக் கொள்ளுமாறு உரைத்தான்.

அவனுக்கு நன்றயுரைத்த அவளின் பெற்றோர், கண்ணியமாய் அவன் நடந்துக் கொண்ட முறையிலும், தங்கள் பெண்ணிற்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாதென தானே அவளை அழைத்து வந்து நடந்ததைக் கூறிய அவனின் அக்கரையிலும் வெகுவாய் கவரப்பட்டனர். அவன் எவ்வூரென விசாரித்து அவனைப் பற்றிய அவனின் குடும்பத்தைப் பற்றிய தகவல்களை சேகரித்தவர்களுக்கு திருப்தியாக இருக்க, அவள் ஈரோட்டிற்கு திரும்பிச் செல்கையில் அவனுடனேயே அனுப்பி வைத்தனர்.

அன்றிலிருந்து எப்பொழுதும் சேர்ந்தே பயணித்தனர் இருவரும்.

இருவருக்கும் மற்றவரைப் பற்றி தெரியாத ரகசியம் இல்லை என்கின்ற அளவில் உற்ற நட்புக்களாயினர்.

ஆக அன்றைய பெங்களுர் டூ சேலம் பயணம் முடிவடைய இளாவும் வேணியும் போய் நின்றது வேணியின் வீட்டினில் தான்.

இளாவிற்கும் பெங்களூரில் பணி கிடைத்ததில் வேணியின் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

——

ஐடியில் பென்ச் பீரியட் என்று ஒன்று உண்டு. பணியில் புதிதாய் சேர்ந்தவர்களையும், ஏற்கனவே செய்துக் கொண்டிருந்த ப்ராஜக்ட் முடிந்து விட்டதுப் போன்ற தருவாயிலுள்ள பணியாளர்களையும் பென்ச்க்கு நகர்த்தி விடுவார்கள். காலியிடம் உள்ள ப்ராஜக்ட்டின் நேர்முகத் தேர்வுக்கு தயாராகி அதில் வெற்றிப் பெற்று அடுத்த ப்ராஜக்ட்டிற்குள் செல்வதே பென்ச்சில் உள்ளோரின் பெரும் வேலையாய் இருக்கும்.

இத்தகைய நிலையில் தான் இருந்தனர் வாணி அண்ட் ப்ரண்ட்ஸ்.

அன்றைய சென்னை பயணத்திற்குப் பின் தினமும் அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்கென ப்ராஜக்ட் ஒதுக்குவதற்காய் காத்துக் கொண்டிருந்தனர்.

ஜூன் 2011

இவ்வாறாக ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், பேட்ஜ் மக்கள் அனைவருக்கும் பெங்களுரிலிருந்த வெவ்வேறு கிளையில் ப்ராஜக்ட் கிடைக்க, நம் கதை மாந்தர்களான மஹா, ஆஷிக், ராஜேஷ், வேணி மற்றும் வாணிக்கு மட்டும் ப்ராஜக்ட் ஒதுக்கப்படாமல் இருந்தது.

ஒரு வாரம் கழித்து மஹா மற்றும் வாணியை மட்டும் அழைத்த ஹெச் ஆர் தேவ் அவர்களுக்கு ஒரு ப்ராஜக்ட் மேனேஜருடன் இன்றொரு நேர்முகத் தேர்வு இருப்பதாகவும் அதில் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் ப்ராஜக்டில் பணியமர்த்தப்படுவர் எனவும் கூறினார்.
அப்ப்ராஜக்ட்டில் இரு காலி இடங்கள் மட்டுமே இருந்ததால் இவர்கள் இருவரையும் நேர்முகத் தேர்விற்கு அழைத்தார் தேவ்.

இருவரும் ப்ராஜக்ட் மேனஜரை சென்றுப் பார்க்க, இருவருக்கும் தனித்தனியாய் நேர்முகத்தேர்வை நடத்தியவர், ஹெச் ஆர் தேவ் தேர்வானவர்கள் பற்றி அறிவிப்பார் என்றுரைத்தார்.

வாணியும் மஹாவும் தேவ்வை சென்று பார்க்கும் போதே எதற்காக இவர்களை அழைத்தார்களென்ற பதட்டத்திலிருந்த ராஜேஷ், அம்சவேணி மற்றும் ஆஷிக், இவர்கள் இடத்திற்கு வந்ததும் இருவரையும் சூழ்ந்துக் கொண்டனர்.
வாணி தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு சற்று தூர தள்ளி நின்று அழுதுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்.

மஹா நடந்த நேர்முகத் தேர்வை பற்றி மற்றவர்களிடம் எடுத்துரைக்க, வாணி அழுவதை பார்த்தவர்கள் அவளிடம் நகர்ந்தார்கள்.

அவர்கள் தன்னருகில் வந்ததும் தன் பேச்சை துண்டித்தவள், கண்களை துடைத்துக் கொண்டாள்.

வேணி அவளின் தோளை பற்றி “என்னடி ஆச்சு??ஏன்டி அழுற??யார் கிட்ட பேசின”எனக் கேட்க, வேணியின் கனிவானப் பேச்சில் மீண்டும் வாணியின் கண்கள் நீர் சொரிந்தது.

“நான் ஒழுங்கா இன்டர்வ்யூ அடெண்ட் பண்ணலடி. கேட்குற கேள்வி எதுக்குமே பதில் தெரியலடி. என் லைப்ல இப்படி நான் எங்கேயுமே பதில் தெரியாம முழிச்சதில்லைடி. ரொம்ப அவமானமா இருக்குடி. பென்ச்ல நல்லா ஆட்டம் போட்டு ட்ரைனிங்ல படிச்சதெல்லாம் மறந்துப் போச்சுடி” என அழுதுக் கொண்டேயுரைக்க,

“ஷப்பாஆஆஆஆ… இதுக்கு தான்பா இந்த மாதிரி படிப்ஸ் கூடலாம் சேரக் கூடாதுங்கிறது. இதில்லைனா இன்னொன்னு இதுலாம் சகஜம்னு தட்டிவிட்டுடு போறதை விட்டுட்டு… இதுக்குப் போய் தேம்பி தேம்பி அழுதுட்டு இருக்க…” என ஆஷிக் அவளை சமாதானம் செய்ய கிண்டலாய் ஆரம்பித்து சீரியஸாய் முடித்தான்.

வேணியும், “இதெல்லாம் போய் பெரிசா எடுத்துக்கிட்டு அதுக்கு வேற அழுதுட்டு… அடுத்த இன்டர்வியூல பார்த்துகலாம் விடு”

“சரி யார்க்கிட்ட இப்ப நீ அழுதுக்கிட்டே பேசின?” என ஆஷிக் கேட்க,

“அப்பாக்கு போன் பண்ணேன். நான் வீட்ல எதையும் சொல்லாம இருக்க மாட்டேன். முக்கியமா சந்தோஷம் துக்கம் எதுனாலும் கண்டிப்பா அப்பா அம்மா கிட்ட சொல்லிடுவேன்” வாணி நிமிர்வாய் உரைக்க,

“அடிப்பாவி… நான் கேபி னு கூப்பிட்டா… நிஜமாவ கேபி மாதிரி நடந்துக்கிறியே நீ… அம்மு அவ மண்டைலயே ஒன்னு போடேன்” என ஆஷிக் கூற,

“அறிவிருக்கா உனக்கு??” என வாணியின் தலையில் குட்டு வைத்திருந்தாள் மஹா.

“ஏன்டி அடிச்ச??ஏன்டா ஆஷிக்??நான் என்ன பண்ணேன்??” என்றபடி இருவரையும் முறைத்துக் கொண்டே அவள் கேட்க,

“நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்ல. வேலைப் பார்க்குற பெரிய பொண்ணு. அங்க ஏற்கனவே உன் அம்மா அப்பா பொண்ணு தூர தேசத்துல இருக்கா??எப்படி இருக்காளோ என்னமோனு கவலைப்பட்டுடு தான் இருப்பாங்க… இதுல நீ வேற ஃபோன் பண்ணி உன் கஷ்டத்தைச் சொன்னா அவங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்?? இனி உன் ப்ரச்சனையை நீயே ஹேண்டில் செய்யக் கத்துக்கணும். முடியலையா ப்ரண்ட்ஸனு நாங்க எதுக்கு இருக்கோம் எங்க கிட்ட சொல்லு. அப்பவும் முடியலைனா பேரண்ட்ஸ் கிட்ட சொல்லலாம். இப்படி நீ சின்ன சின்ன விஷயத்தையும் அவங்க கிட்ட சொன்னா அவங்க என்ன செய்வாங்க?? இதை மாத்திக்கோ நீ முதல்ல” என நீட்டி முழங்கி நீண்ட உரையாற்றினாள் மஹா.

வாணிக்கும் புரிந்தது தன் துன்பத்தைக் கூறி தாம் பெற்றோரை துயரத்தில் ஆழ்த்துகிறோமென. எனவே தன்னுடைய இந்த செயலை மாற்றிக் கொள்வதாய் உரைத்தாள் வாணி.

மஹா அந்த ப்ராஜக்ட்டில் தேர்வாகி பணியமர்த்தப்பட்டாள். இரு காலி இடங்கள் இருப்பதாய் உரைத்த அந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஒருவர் போதுமெனக் கூறி மஹாவை தேர்வு செய்திருந்தார்.
இந்த கலாட்டா கேலி கிண்டல் விளையாட்டு, தோழமைகளுடன் அரட்டைப் பயணம் இவையெல்லாம் வாணி வெகுவாய் ரசித்து அதனுள் மூழ்கி வேறெதிலும் மனம் லயிக்காமல் போனதால் வந்த விளைவே இந்த நேர்முகத் தேர்வின் தோல்வி.

மகிழ்ச்சியுடன் வாழ்வை அனுபவித்துக் கொண்டே காரியத்தில் கண்ணாய் இருந்தால் போதும் வாழ்வின் இலக்கை இன்பமாய் அடையலாம் என்ற வாழ்வின் பெரும் தியரியை கற்றுக் கொண்டவள், அதை செயல்படுத்தும் போது தோழமைகளுடன் செலவழிக்கும் நேரங்களில் தன் மனதினைச் செலுத்தி தன் காரியத்தில் கோட்டைவிட்டாள்.

மஹாவிற்கு ப்ராஜக்ட் கிடைத்து விட, ராஜேஷ், ஆஷிக், வாணி, வேணி ப்ராஜக்ட் கிடைக்காமல் பென்ச்சில் இருந்தனர்.
பிறகு ஒரு வாரம் கழித்து ராஜேஷ் தேவிடம் ப்ராஜக்ட்காக விசாரிக்க, தற்போது எந்த காலிஇடமும் இல்லையென்றும் சிறிது நாட்கள் பென்ச்சில் இருக்குமாறும் கூறிவிட்டார் ஹெச் ஆர் அவர்களிடம்.

இந்த ஒரு மாத பென்ச் பீரியடில் காலை மாலை பேருந்து பயணம், இரண்டு வேளை உணவு இடைவேளையென ஒன்றாக சுற்றிய ராஜேஷ், ஆஷிக்குடன் அதிகமாய் பழக வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் இருவரையும் மஹா வேணிக்கு இணையாய் தன் நெருங்கிய தோழர்களாய் மனதிற்கு நெருக்கமானவர்களாய் எண்ணி நட்பின் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தாள் வாணி. என்றும் இவர்களை தன் நட்பு வட்டத்திற்குள் வைத்திருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

அதற்கு தாங்கள் தகுதியானவர்களா என ராஜேஷும் ஆஷிக்கும் நிரூப்பிக்கும் தருணம் வரும்போது வாழ்வின் பாடத்தை கற்றுக் கொடுத்தனர் அவளுக்கு.

மஹா தேர்வாகியிருந்த ப்ராஜக்ட்டில் தன் பணியை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.

அந்த சென்னை பயணத்தின் பிறகு பெரும்பான வாரயிறுதி நாட்களில் ஆஷிக், மஹா மற்றும் வாணி அனைவரும் இணைந்தே சென்னைக்கு பயணப்பட்டனர். சிரிப்பும் பேச்சுமாகவே அந்த பயணங்கள் இருக்கும். வாணி வீட்டிற்குச் செல்வதைக் காட்டிலும் இப்பயணத்தினால் மிகவும் குதூலகமாய் இருந்தாள்.

ராஜேஷின் சொந்த ஊர் மதுரை என்பதால் இவர்களுடன் பயணம் செய்ய மாட்டான் அவன்.

எவரும் தங்களின் ஊருக்குச் செல்லாமல் அறையில் தங்கிருந்த ஒரு வாரயிறுதி நாளில் தங்கள் அறையின் பால்கனியில் மஹா தன் துணிகளை காயப்போட்டுக்கொண்டிருந்தவள் திடீரென்று தெருவில் தங்கள் அறையின் எதிரிலிருந்த மரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.

சட்டென பால்கனியிலிருந்து முகப்பறைச் சென்று கதவைத் திறந்து படிகளில் ஓடினாள் அம்மரத்தை அடைய.

முகப்பறையிலிருந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த வாணியும் வேணியும் அவளின் ஓட்டத்தைப் பார்த்து என்னமோ ஏதோவென அவள் பின்னேயே ஓடினர்.

— தொடரும்