உனைத் தேடும் உறவெதுவோ – டீசர்

ஜெர்மெனியின் அந்தஆளில்லாத சாலையில் இருந்த இருக்கையை ஆக்கிரமித்திருந்த அவனின் கண்கள் தள்ளி இருந்த வீட்டை நோட்டம் விட்டபடி இருந்தது.

முன்னே இருந்த செடிகளுக்கு நீர் ஊற்ற அவள் வரும் நேரம் கடந்து பத்து நிமிடங்கள் சென்றுவிட்டது.

அவன் பார்வையில் ஒரு தேடல் இருக்க, தேடலின் காரணமானவள் அவனுக்கு காட்சி அளித்தாள் கையில் பூவாளியுடன்.

இளஞ்சிவப்பு வண்ண ஸ்கர்ட் அணிந்து அவளது கார்குழல் காற்றில் ஆட வெளியில் இருந்த மலர்களுக்கு அவள் நீரூற்ற, இங்கே இவனுள் கவிதையின் பிரவாகம்…

“பூவுக்கு நீரூற்றும் பூவே
உன் இதழில் பனிதுளியாய்
நான் மாறிடவா?”

வாய்விட்டு சொல்லிபார்த்த அவனுக்கே அடுத்த நொடி அது மிகவும் மொக்கையாக இருப்பதாக தோன்ற,

“பூவுக்கு எதுக்கு கவிதை.. அதுவே ஒரு கவிதை” என்று அவனுக்கே அவன் சமாதானம் சொல்லிக்கொள்ள,

அவள் பூவாளியோடு உள்ளே போய் விட்டாள்..

“நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாளி யின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே..”

இவன் இங்கு பாடிக்கொண்டிருக்க,

அவன் தலையில் நச்சென்று ஒரு கொட்டு விழுந்தது.

“எவ்ளோ நேரம் தான் டா வாகிங் போவ? அங்க என்ன லுக்கு?” என்று அவனது அறைத் தோழன் அருண் வினவ,

‘வந்துட்டான் கரடி.’என்று மனதில் அவனை திட்டிகொண்டு,

“கால் வலின்னு சைட்ல உட்கார்ந்தேன்.” என்று காரணம் சொன்னா ஷியாமை முறைத்த அருண்,

“அதெப்படி டா தினமும் இந்த நேரம் உனக்கு கால் வலி வருது. உன் மாமா வைப் டாக்டர் தானே. போன் போட்டு கேட்போமா?” என்று அவனும் விடாமல் கேள்வி எழுப்ப,

“டேய் அக்கா சைல்ட் ஸ்பெசலிஸ்ட் டா.” என்று பல்லைக் கடித்தான் ஷியாம்.

“நீ தான் இன்னும் குழந்தை மாதிரி தினமும் வீட்டுக்கு கால் பண்ணி பேசிட்டு இருக்கியே. அப்போ அவங்க தான் சரியான ஸ்பெசலிஸ்ட் உனக்கு.” என்று வாய் பொத்தி சிரித்தவனை வயிற்றில் குத்தி, தோளில் கை போட்டு தங்கள் வீடு நோக்கி நடந்தான் ஷியாம்.

“டேய் ஜோக்ஸ் அபார்ட். அந்த பொண்ணை நீயும் ஒரு வருஷமா இப்படியே பார்த்திட்டு இருக்க, பேச வேண்டியது தானே டா” என்று கேட்க,

“அவளும் என்னோட தான் யுனிவர்சிட்டில படிக்கிறா மச்சி. மெதுவா பேசுவோம்.. என்ன அவசரம்?” என்று சாவகாசமாக நடை போட்டவனுக்கு தெரியாது அவள் அடுத்த வாரமே இந்தியா கிளம்பி சென்று விடுவாள் என்று.


குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தாள் ஷான்வி. இரண்டு வயதாகியும் வீட்டிற்கு வந்த பின் அனைத்திற்கும் அம்மா வேண்டும் என்று அடம் பிடிக்கும் அவளது மகன் பூர்வேஷை நினைக்க அவளுக்குள் சிரிப்பு முகிழ்ந்தது.

சரணும் இப்படித்தான். வீட்டில் இருந்தால் அவள் மடியில் தான் தஞ்சம் கொள்வான். அவனைப் போலவே அவன் பிள்ளையும் ஷான்வியின் அருகாமையை கொஞ்சமும் இழக்க விரும்ப மாட்டேன். அவளும் வீட்டிற்கு வந்த பின் அவனை தனியே விட மாட்டாள்.

நாளெல்லாம் பாட்டியிடம் சமர்த்தாக விளையாடும் பூர்வேஷுக்கு அன்னை வந்துவிட்டால் வால் முளைத்துவிடும்.

இவர்கள் இருவரும் விளையாடும் அழகை ரசித்து சிரிப்பான் சாய் சரண்.

அன்றும் குழந்தையை உறங்க வைத்து விட்டு கணவன் அருகில் வந்து அமர்ந்த ஷான்விக்கு பெருமூச்சு கிளம்பியது

அவளை தன்னிடம் இழுத்துக்கொண்டு அணைவாக அமர்ந்த சரண்,

“என்னாச்சு டாக்டரம்மா இன்னிக்கு இவ்ளோ பெரிய பெருமூச்சு?” என்று கேட்க,

“இல்ல இன்னிக்கு ஒரு குழந்தை சரியா சாப்பிடல அப்படின்னு சொல்லி கூட்டிட்டு வந்தாங்க. அதை நினைச்சேன். அதான் இப்படி” என்று வாகாக அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

“ஏன் என்னாச்சு?” என்று அவள் கூந்தலை ஒதுக்கி சரண் வினவ,

“அவன் என்ன சாப்பிடலன்னு சொன்னாங்க தெரியுமா? சீரியல்,சாண்ட்விச், டோஸ்ட், பாயில்ட் எக் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்னு சொன்னாங்க.”

“வயசு என்ன?” என்று அவன் வினவ,

“ம்ம்.. ரெண்டு” என்று கடுப்புடன் மொழிந்தாள்.

அவன் சட்டென்று வாய்விட்டு சிரித்துவிட,

“சரண். சிரிக்காதிங்க. சின்ன பிள்ளைக்கு இட்லி, தோசை, இப்படி ஏதாவது கொடுத்தா சாப்பிடும். டோஸ்ட் எல்லாம் எப்படி சாப்பிடும்?” என்று அவள் குறைபட,

“வேலைக்கு போற அப்பா அம்மாவா இருப்பாங்க ஷானு.” என்று சொன்னவன்,

“ஈஸி டயட் சொல்லி அனுப்பி இருப்பிய” என்று அவளை அறிந்தவனாக வினவ,

“ம்ம் ஆமா. சொல்லி கொடுத்தேன். மண்டையை ஆட்டிட்டு போச்சு அந்த பொண்ணு. ஆனா நம்பிக்கை இல்ல எனக்கு. கூடவே குழந்தைக்கு விட்டமின் ட்ராப்ஸ் எழுதி கொடுத்தேன். அப்போ என் கண்ணுல பூர்வேஷ் தான் வந்து போனான்.” என்று அவள் சொல்ல,

என்னவென்று புருவம் தூக்கி வினவினான் சரண்.

“சூழ்நிலை புரிஞ்சு அழகா பொருந்தி இருக்கான் பாருங்க. பகல்ல அத்தை கிட்ட ரகளை பண்றது இல்ல. என்கிட்ட ஓயாம ஆட்டம் போடுறது. அவன் சந்தோஷமா இருக்கான். எல்லா பிள்ளைகளும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்?” என்று உள்ளே போன குரலில் அவள் கூற,

“எல்லாருக்கும் நம்ம வீடு மாதிரி அமையாது ஷானு” என்று சரண் சொல்ல,

“உண்மை தான் சரண்” என்று உணர்ந்து கூறினாள் ஷான்வி.


குட்டி டீஸர் இப்போ. செப்டம்பர் 1 தேதி முதல் எபிசோட் போடுறேன் பிரெண்ட்ஸ்.