அவ(ன்)ள் 9

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

பகுதி 9

மஞ்சள் நிற மின் விளக்குகள் எங்கும் தங்கமாய் மினுமினுக்க மெல்லிய இசை காற்றில் மிதந்து காதை வருடியது அந்த ரெஸ்டாரன்டில். பிருந்தாவும் அஞ்சலியும் அமர்ந்திருக்க.

சர்வர் வந்து ஆர்டர் கேட்கவும் இன்னும் 5 நிமிடத்தில் ஆர்டர் தருவதாக கூறியவர்கள் கிருஷ்ணாவின் வருகைக்காக காத்திருந்தனர்.

பிருந்தா வேலைக்கு சென்று ஒரு வாரம் கடந்திருக்க அன்று கிருஷ்ணா கேட்டுக் கொண்டதற்காக இன்று இருவரையும் ரெஸ்ரண்ட்க்கு அழைத்திருந்தாள் பிருந்தா.

சிறுவயது கதைகளை பேசியபடி இருந்தவர்கள் தங்களை பற்றி பகிர்ந்துக்கொள்ளவும் அதுவரை சிரித்த முகமாக இருந்த அஞ்சலியின் முகம் கனலாக மாறியது. 

“அவனை சும்மாவா விட்ட பிந்து லெட்ப் அன்ட் ரைட் வாங்கி லாக்கப்ல தள்ளி இருக்க வேண்டாமா?” என்று கோவப்பட

அவள் சத்தமிட்டதில் சிலர் திரும்பி பார்க்கவும் “ஹேய் எல்லாரும் பாக்குறாங்க அஞ்சு…” என்று அவளை அமைதி படுத்திய பிருந்தா “அவனே வேண்டாம்னு வந்துட்டதுக்கு அப்புறம் இதுவெல்லாம் எதுக்கு, தேவையில்லாத ஆணிதானே ”  என்றாள் அழகான புன்னகையுடன்.

“உன்னால எப்படி பிந்து இப்படி நார்மலா இருக்க முடியுது…? எனக்கு கொதிக்குதுடி உன் பெரியம்மாவயோ இல்ல அப்பாவையோ  பாத்தா நாக்கை பிடிங்குக்குறா மாதிரி கேள்வி கேட்பேன்” என்றாள் காட்டமாக

“பச் விடு அஞ்சு… அதெல்லாம் நினைக்க கூட பிடிக்காத விஷயம்” என்று கூறியபடி திரும்பி பார்க்க தூரத்தில் கிருஷ்ணா வருவது தெரிந்தது.

 “ஹேய் அங்க பாரு கிருஷ்ணா வந்துட்டாங்க… முகத்தை நார்மலா வைச்சிக்க ப்ளீஸ ப்ளீஸ் விஷயம் எதுவும் தெரிய வேண்டாம்”  என்று பிருந்தா அவள் கைகளில் அழுத்தம் கொடுக்க,  

“என் முகத்தை பார்த்தாலே கண்டு பிடிச்சிடுவான்.. நான் பேஷ் வாஷ் பண்ணிட்டு வறேன்” என்று அஞ்சலி கழிவறை சென்றாள்.

தனியே இருந்த பிருந்தாவை கண்டுக்கொண்ட கிருஷ்ணாவின் கண்கள் பூக்களை மொய்க்கும் வண்டாய்  அவளையே மொய்த்தது.  ‘ஐ.. நம்ம ஆளு தனியா வந்துருக்காளா!’ என்று மனம் துள்ளியது… அதுவும் இன்று பீச் கலரில் அவள் அணிந்திருந்த புடவை  அவள் நிறத்திற்கு மேலும் அவளை அழகியாய் காட்ட பிருந்தாவிடமிருந்து கண்களை விலக்க முடியாமல் தவித்தான் கிருஷ்ணா. 

தன் காதலை அவளிடம் உரைக்க வேண்டும் என்ற ஆவளோடு நெருங்கியவன் படாய்படுத்திய தன் மனதை திசை திருப்பி இயல்பாக   “ஹாய் பிருந்தா” என்று அவள் முன் அமர்ந்தான்.

கிருஷ்ணாவிற்கு பிருந்தாவின் அருகே அமர ஆசைதான் ஆனால் அவளின் மை விழிகளையும்  சிரிக்கும் அதரங்களையும் ரசிக்க முடியாதே என்ற காரணத்தால் அவளின் எதிர் இருக்கையை தனதாக்கி கொண்டான். 

அவனை புன்னகை முகமாக வரவேற்ற பிருந்தாவிடம் “வந்து ரொம்ப நேரம் ஆச்சா… வைட் பண்ண வைச்சிட்டேனா…” என்று வாட்சை பார்த்தான் தன் டிரேட் மார்க் புன்னகையுடன். 

“இல்ல இல்ல ஜஸ்ட் இப்போதான் வந்தோம்…”    என்ற பிருந்தா ஆர்டரை தருவதற்காக சர்வரை அழைத்தாள்.

“ஹாய் கிருஷ்ணா” என்ற அஞ்சலியின் குரலில் ‘இவளும் வந்துருக்காளா!?’ என்று திரும்பியவனுக்கு உற்சாகம் எல்லாம் வடிந்தது.

“ஹாய் அஞ்சலி.. நீ எப்போ வந்த” என்றான் கடனே என்று புன்னகைத்து,  அவனுக்கு தன் மனம் கவர்ந்தவளுடன் தனியே இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவன் முகத்திலேயே தெரிய,

அஞ்சலி கிருஷ்ணாவின் நடவடிக்கைகளை கவனித்த வண்ணம் இருந்தாள்.  

அவன் கண்கள் பிருந்தாவை பார்த்ததும் பளிச்சிட்டதையும் அவன் பார்வையை திசை திருப்ப முடியாமல் தடுமாறுவதையும் கண்டபடி வந்தவள் தான் வந்தது தெரியவும் அவன் முகம் பொலிவிழந்ததையும் கவனித்தாள்.

என்னதான் கிருஷ்ணா அவள் மேல் அபிப்பிராயம் இல்லை என்று சொல்லி விட்டாலும் இந்த ஒரு வாரத்தில் அவனின் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை கவனித்திருந்தாள் அஞ்சலி .

அதை கிரியிடம் கூறியதற்கு அஞ்சலியை தான் காய்ச்சினான். “உன்னாலதான் அவன் கிட்ட பிருந்தாவை பத்தி பேசி மொக்கை வாங்கினேன்… இதை மறுபடி என்கிட்ட கொண்டு வராதே” என்று கடித்து குதறி விட தானே கண்டுபிடிக்க நினைத்தாள்.

அதன் பொருட்டு அஞ்சலி அவனையே ஆராய்ச்சியாக பார்த்து கொண்டிருக்க இதை கருத்தில் கொள்ளாதவனோ  “கங்ராட்ஸ்” என்று பிருந்தாவிடம் கையை நீட்டினான்.

பிருந்தா முதலில் சற்று தங்கினாலும் நாகரீகம் கருதி பட்டும் படாமலும் “தெங்க்யூ” என்று அவனுக்கு கையை குலுக்கியவள் “சாப்பிடுங்க” என்றாள் இருவரையும் பார்த்து.

அவள் மென்பட்டு கரங்களை பிடித்தவனுக்கு உள்ளுக்குள் பனிசாரல்  அடித்தது… மூவரும் சிரித்து பல கதைகளை பேசியபடி உண்டுக்கொண்டு இருந்தனர். 

அதே உற்சாகமான மனதுடன் “அப்புறம் பிருந்தா நினைச்சபடி வேலைக்கும் போயாச்சு.. இனி அடுத்த மூவ் என்ன?” என்றான் அவள் திருமணத்தை பற்றி பேசுவாளா என்ற எதிர்ப்பார்ப்புடன்.

செண்பகம்  திருமண விஷயத்தில் தீர்மானமாக சொல்லி விட்டதில் இதை பற்றி பிருந்தாவிடம் இன்றே பேச வேண்டும் என்று நினைத்தவன் அவள் எண்ணத்தை அறிய இந்த கேள்வியை கேட்டான்.

“அப்புறம் என்ன இருக்கு கிருஷ்ணா.. எப்போவும் போல நல்லா சம்பாரிச்சி குடும்பத்தை பாத்துக்கனும்… தம்பி வேலைக்கு போகனும் அவன் லைப் செட்டில் ஆகனும்” என்று அடுக்கிக்கொண்டே செல்ல,.

சப்பிட்டபடி இருந்தவனுக்கு புரையேற “எனாஃப் எனாஃப் பிருந்தா நான் உங்களே பத்தி கேட்டேன் உங்க லைப் உங்க வாழ்க்கை இப்படி ஏதாவது” என்றான் அவன் எதிர்ப்பார்த்த பதிலை பெருவதற்கு

கிருஷ்ணாவின் இது மாதிரியான கேள்வியில் பிருந்தாவிற்கு அவனை பற்றி தவறான அபிப்பிராயம் உண்டாகி விடுமோ என்ற பயந்த அஞ்சலி “அவளை விடுங்க  டாக்டர் சார்… முதல்ல உங்களை பத்தி சொல்லுங்க… ஆண்டி ரொம்ப தீவிரமா இருக்காங்கலாமே இந்த வருஷம் உனக்கு கல்யாணம் பண்றதுல!?” என அஞ்சலி கூறியதும்

சட்டென  முகம் மாறிய கிருஷ்ணா பிருந்தாவை தவிப்பாக பார்த்து விட்டு, “அஞ்சலி” என்றான் பல்லை கடித்து அவளை நிறுத்தும் வழி அறியாது.

அவன் கலவர முகம் கண்டாலும் நிறுத்தாமல் “ஆமா கிருஷ்ணா… … கிரி தான் சொன்னான்…” என்று மேலும் கிருஷ்ணாவை பதறவைக்க

“ஹேய் சூப்பர்… கங்ராட்ஸ் கிருஷ்ணா சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடுங்க” என்றாள் பிருந்தா மகிழ்வாக 

அவள் வாழ்த்தியதில்  அஞ்சலியை தீயாய் முறைத்த கிருஷ்ணா. “பிருந்தா என் கல்யாணம் இருக்கட்டும்… நான் உங்க கல்” என்று ஆரம்பிக்கும் போது அஞ்சலியின்  செல்போன் ஒலி எழுப்பவும் போனை எடுத்து அஞ்சலி காதில் வைத்து ஹலோ என்றிட அவர்கள் பேச்சு தடைபட்டு போனது.

“ஏய் வெள்ளெலி எங்க இருக்க?” என்றான் கிரி 

அதற்கு சம்மந்தமே இல்லாமல் “அப்படியா” என்றாள் அதிர்ச்சியாக

அதில் கடுப்பானவன் “இப்ப எதுக்கு இந்த ஷாக்கு?” என்று கோபமானான்.

அதை பொருட்படுத்தாது “ரொம்ப சீரியஸா…” என்றாள் பதற்றமாக

“ஏய்  என்னடி நடக்குது அங்க யாருக்கு முடியல” என்றான் அவர்களது விவாதம் புரியாது.

“ஓகே ஓகே கொஞ்ச நேரம் மேனேஜ் பண்ணுங்க… இன்னும் 20 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்…” என்றாள் அவசரம் போல

“அடிபாவி ஒன்னுமே புரியலையே… எங்க இருக்கிங்கன்னு கேட்டு போன் பண்ணதுக்கா இப்படி குழப்பி விடுற…!! இனி சத்தியமா போன் பண்ண மாட்டேன் டி…”  என்று புலம்பிய கிரி குப்புற படுத்து தூங்க முற்பட்டான்.

போனை வைத்த அஞ்சலி “கிருஷ்ணா ஹாஸ்பிட்டல்ல இருந்துதான்டா போன்… ஒரு எமெர்ஜென்ஸி கேஸ் ரொம்ப கிரிட்டிக்கல் பொஷிஷன் நான் வண்டி  எடுத்துட்டு வரல டா… நீ என்னை ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணிடேன்” என்றாள் பதட்டமாக

கிருஷ்ணா தவிப்பாய் பிருந்தாவை பார்த்தான்…  அவன் எண்ணப்போக்கை புரிந்துக் கொண்ட அஞ்சலியோ “என்ன கிருஷ்ணா பாத்துட்டு இருக்க டைம் இல்ல” என்று அவனை அவசரப்படுத்த 

“சாரி பிந்து… இது சீரியஸ் கேஸ் கண்டிப்பா போய் ஆகனும்… இன்னொரு நாள் மீட் பண்ணலாம் சாரி டி சாரி”  என்று கூற

“பரவாயில்லை அஞ்சு நீங்க கிளம்புங்க நானும் கிளம்ப தான் போறேன்  இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என்று அவர்களை வழியனுப்பினாள் 

“தெங்க்ஸ் பிந்து…” என்ற அஞ்சலி பிருந்தா ஏதாவது கிருஷ்ணா மனம் வாடும்படியாய் அவள் திருமணத்தை பற்றி  கூறிவிடுவாளோ என்று பயந்தவள்   ஏறக்குறையாக அங்கிருந்து அவனை இழுத்துக் கொண்டு போக வேறு வழியில்லாமல் அவளுடன் சென்றான் கிருஷ்ணா…

….

“இப்போது எதுக்கு அஞ்சலி அவசர அவசரமா என்னை அங்கிருந்து அழைச்சிட்டு வந்த?” என்று கடுகடுத்தான் கிருஷ்ணா.

“ஏன் உனக்கு தெரியாதா…” என்ற அஞ்சலியின் நக்கல் பேச்சில் கோபமானவன் “தெரியல… தெரியல… அதான் கேக்குறேன் எதுக்கு என்னை அழைச்சிட்டு வந்த” என்று கத்தினான் கிருஷ்ணா… 

அஞ்சலியும் கிருஷ்ணாவும்  மேம்பாலத்தை ஓட்டிய சாலையில் வண்டியை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

கிருஷ்ணாவின் கோபத்தில் ஆச்சர்யம் கொண்ட அஞ்சலி “கோபமே வராத கிருஷ்ணாவுக்கு இன்னைக்கு கோபம் வருதா… சேஞ்ச் நல்லா இருக்கு” என்றாள் கிண்டலாக

“ஷட்டப் அஞ்சலி நான் என்ன கேக்குறேன் நீ என்ன சொல்ற?” என்று  அவன் சிடுசிடுக்கவும்

“எல்லாம் காரணமாத்தான் செஞ்சேன் கிருஷ்ணா… அவ மேல பீலிங்ஸ் இல்லன்னு சொல்லிட்டு நீ என்னப் பண்ணிட்டு இருந்த?” என்று சட்டென கேட்டதும் அவளை கூர்மையாக நோக்கியவன் 

“அது உனக்கு எப்படி தெரியும்…..?” என்று இருகைகளையும் மார்பின் குறுக்கே கட்டி அவளை அழுத்தமாய் பார்த்தான்.  

“இப்போ ஏன் அப்படி பாக்குற கிருஷ்ணா… நீ பிருந்தாவை லவ் பண்றதை உன்னோட நடவடிக்கையை வைச்சி தான் கண்டுபிடிச்சிட்டேன்… ஆனா உன்னோட காதல்  அவள ரொம்ப காயப்படுத்தும்” என்றாள் தோழியின் நிலை அறிந்து

“யூ மீன்” என்றான் அதே அழுத்த பார்வையுடன்.

“சாரி கிருஷ்ணா சொல்ல கஷ்டமாதான் இருக்கு… நீயும் அவளும் எனக்கு ஒன்னு தான்.. எனக்கு நீங்க ரெண்டுபேருமே முக்கியம்… ஆனா இந்த காதல் உங்க ரெண்டு பேரையும்  கஷ்டப்படுத்தும் அவ இதுக்கு சரின்னு சொல்ல மாட்டா” என்றாள் பூடகமாக

அஞ்சலி… பேசியதில் பொறுமை இழந்த கிருஷ்ணா “நீ என்ன சொல்ல வர்றன்னு ஒரு மண்ணும் புரியல அஞ்சலி… என் காதல் அவளை எப்படி காயப்படுத்தும்… நான் நேரடியா பிருந்தாகிட்டயே கேக்குறேன்…” என்று வண்டியில் ஏறப்போனவனை தடுத்து நிறுத்திய அஞ்சலி

“நானே சொல்றான் கிருஷ்ணா அவ பாஸ்ட் தெரிஞ்சாலும் இதே லவ்வோட அவளை நீ ஏத்துக்குவியா?” என்று அவன் முகம் பார்த்தாள்.

“உனக்கு சத்தியம் செய்யனுமா அஞ்சலி…?  இல்ல என் மனசு பூரா அவதான் இருக்கான்னு திறந்து காட்டனுமா…? அவ பாஸ்ட் என்ன வேணா இருந்துட்டு போகட்டும் அது எனக்கு தேவையில்லாதது…  பிருந்தாவோட மனசு மட்டும் எனக்கு போதும்” என்றதும்

“அவ ஒரு டைவசின்னாலுமா?!” என்று கூறி தீர்கமாக அவனை பார்த்தாள்.

ஒரு நொடி அனைத்தும் ஸ்தம்பித்து  அவன் நின்று விட கிருஷ்ணா என்று மெல்லிய குரலில் அழைத்தவள் “உனக்கு அதிர்ச்சியாதான் இருக்கும் கிருஷ்ணா… ஆனா இதுதான் உண்மை… அவ கல்யாணத்தின் மூலமா அனுபவிச்ச வலியை நீ உன் காதலை சொல்லி அதிகமாக்கிடுவியோன்ற பயத்துலதான் உன்னை இங்கே அழைச்சிட்டு வந்தேன்”. 

“முதல்ல அவ வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க கிருஷ்ணா… அப்போ தான் உன்னால அவளையும் அவ மனசையும் புரிஞ்சிக்க முடியும்.. ஒரு நல்ல பிரெண்டா நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சேரனும்னு நான் அசைப்படுறேன்” என்றாள் நெகிழ்ந்த குரலில

கைகளால் தலையை அழுந்த கோதி தன்னை கட்டுக்குள் வைத்தவன் கலங்கிய முகத்துடன் அவளை பார்க்க அஞ்சலியும் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

அன்று

“உன் பொண்ணுக்கு வரவர பயம்றதே இல்லாம போச்சி… என்ன நெஞ்சழுத்தம் இருந்தா ஆயிரம் பேர் கூடுற பஸ்டண்டுல ஒருத்தன் கூட நின்னு  பேசுவா…”

“போறவங்க வர்றவாங்க பாப்பாங்கன்னு கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம அவன் கூட நின்னு பேசுறான்னா அவன் கொடுத்த தைரியம் தானே இதுக்கு காரணம்….  வரட்டும் காலை ஒடைச்சி முளையில உட்கார வைக்கிறேன்…” என்று கண்டமேனிக்கு கத்திக் கொண்டு இருந்தார் பரசு.

“கொஞ்சம் அமைதியா இருங்களேன்… நடந்தது என்னன்னு தெரியாம எதுக்கு இப்படி திட்டிட்டு இருக்கிங்க வந்ததும் பொறுமையா கேளுங்க” என்ற மகேஷ்வரியின் கன்னம் பழுத்தது பரசுவின் அரையில்.

“வளர்க்க தெரியாம புள்ளைய வளர்த்துட்டு பொறுமையா பேசுங்கன்னா சொல்ற?… அண்ணி சொல்றாங்கடி இதை எனக்கு எவ்வளவு அசிங்கமா இருந்தது தெரியுமா!.. பொம்பள புள்ளைக்கு சொல்லி வளக்கனும்டி அப்பா இப்படி அப்படின்னு” என்று மீண்டும் அறைய முற்பட விஷ்ணு ஓடி வந்து அவர் கரங்களை பற்றிக் கொண்டு “அப்பா அம்மாவை அடிக்காதிங்க” என்று கெஞ்ச ஆர்மபித்து விட்டான்.

பரசுவின் கோவத்திற்கு எல்லையே இல்லை அதுவும் ஒரு வார்த்தை தனக்கு எதிர்ப்பாக வந்தாலும் அவ்வளவு தான்  மனிதர் விலாசி விடுவார் அதற்கே பயந்து அமைதியாகி விடுவார்கள் பிள்ளைகள். இன்று பர்வதம் வேறு பஸ்ஸிலிருந்து பார்த்ததை ஒன்றிற்கு இரண்டாக பரசுவிடம் சொல்லியிருக்க அதன் சுவடுதான் பரசுவின் வீட்டில் எதிரொலித்தது.

வாசலுக்கும் வீட்டிற்கும் நடையாய் நடந்தார் பிருந்தாவின் வருகையை எதிர்ப்பார்த்து. வீட்டில் நடப்பது ஏதும் அறியாத பிருந்தாவோ தன் கடைசி வருட தேர்வை எழுதியதிலும் நண்பர்களுடன் இன்றைய பொழுதை கழித்ததிலும் மகிழ்ச்சியாய் வீட்டிற்குள் நுழைந்தவளை பரசுவின் கொடிய வார்த்தைகள்  சிலையாய் நிற்க வைத்தது.