அவ(ன்)ள் 8

ஊஞ்சலில் பேப்பரும் கையுமாக அமர்ந்திருந்த வாசனிடம் மேல் மூச்சி கீழ் மூச்சு வாங்க பேசிக்கொண்டு இல்லை இல்லை என்று கத்திக் கொண்டு இருந்தார் பர்வதம்.

நீ சொல்வது எதுவும் என் காதில் விழவில்லை என்ற ரீதியில் அமைதியாக இருந்த வாசன் அன்றைய செய்திதாளில் முக்கிய செய்திகளை புரட்டிக் கொண்டிருந்தார்.

“நான் இங்க ஒருத்தி தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன்… நீங்க, செவிடன் காதுல ஊதினா சங்கு மாதிரி அமைதியா இருக்கிங்களே” என்று கோபத்தில் அவர் கரங்களில் இருந்த செய்திதாளை வீசி எறிந்தார் பர்வதம்…

பர்வதத்தின் செயல் வாசனுக்கு கோபத்தை உண்டாக்க  “சே… என்னைக்காவது மனுஷன நிம்மதியா இருக்கா விடுறியாடி.. எப்போ பார்த்தாலும் லோலோன்னு கத்திட்டு இருக்க வேண்டியது… இப்போ என்னடி உன் புள்ளைக்கிட்ட இந்த வீட்டை தூக்கி கொடுத்திட்டு நாம நடுத்தெருவுல நிக்கனும் அதானே உன் ஆசை…”  என்று கோவமாக ஊஞ்சலில் இருந்து எழுந்தார்.

கணவர் தன்னை எதிர்த்து பேசவும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்ற பர்வதம் அடுத்த நொடியே தன்னை சமாளித்து 

“என்னைக்கு நீங்க அவன் மேல நம்பிக்கைய வைச்சி இருக்கிங்க உங்க தம்பி புள்ளைங்க மேல வைச்ச பாசத்தை கூட என் புள்ளைங்க மேல வைக்கலையே…” என்று வாயை பொத்தி அழுவது போல் பேசி வாசனின் கவனத்தை மகன் மேல் திருப்ப முயன்றார் .

“போதும் நிறுத்து பர்வதம் உன் நாடகத்தை… நீ பேசி பேசி அந்த புள்ளையோட வாழ்க்கையே போச்சி இன்னும் உன் கண்ணுக்கு என்ன உருத்திக்கிட்டே இருக்கு” என்றார் சற்றே கோவமாக 

வாசன் பர்வதம் தம்பதியருக்கு ஒரு மகள் ஒரு மகன் மூத்தவள் ராகினிக்கு பக்கத்தூரில் கொஞ்சம் பெரிய இடத்தில் திருமணம் முடித்திருக்க,  இளைய மகன் தினேஷின் நடவடிக்கைகள் அவ்வளவாக சொல்லிக் கொள்வது போல் இல்லாமல் இருந்தது. ஒரு தொழிலை தொடங்கி கொடுத்தால் உருப்படுவான் என்ற நினைப்பில் வீட்டை அல்லது கடையை வைத்து பணம் தருமாறு கணவரிடம் நச்சரித்துக் கொண்டிருந்தார் பர்வதம்.

ஒரு உயிரை காப்பற்றுவதற்காக வீடேறி வந்து கெஞ்சிய பிருந்தாவை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் ஓட ஓட வார்த்தையால் விரட்டியடித்து விட்டு இப்போது தன் மகனுக்கு என்று வரும்போது மட்டும் அடமானம் வைக்கலாமா விற்று விடலாமா என்று கேட்கும்  மனைவியை என்ன செய்வது என்று கடுப்பனவர்…

பர்வதத்திடம் சண்டை போடவோ அல்லது வாக்குவாதம் செய்யவோ விருப்பமற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

வாசனும் பரசுவும் இருப்பது இரு அடுக்குமாடிகளை கொண்ட வீடு இது அவர்களது சொந்த உழைப்பில் உருவானது. அரிசி கடையும் இருவரது பெயரில் இருந்தது. எப்போது பிருந்தாவின் வாழ்க்கை கேள்விக் குறியானதோ கடைக்கு செல்வதை அடியோடு நிறுத்தி இருந்தார் பரசு. வீட்டு பத்திரமும் கடை பத்திரமும் பெரியவரான வாசனிடம் இருக்க பர்வதத்திற்கு அதை பரசுவின் குடும்பத்திற்கு கொடுக்க மனமில்லாமல் போனது.

பர்வதத்திற்கு அனைத்தும் தம் பிள்ளைகளுக்கு மட்டுமே சேர வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டமையால் இளையவரது பிள்ளையான  பிருந்தா, விஷ்ணுவின் மேல் வெறுப்போடு இருந்தார். அவர் மட்டும் இல்லாமல் அவரது பிள்ளைகளும் அவ்வழியையே பின்பற்றினர்.

தான் சொல்வதை காது கொடுத்து கூட கேட்காத வாசனின் மீது கோபம் வர வீட்டுக்கு  வரட்டும்… அப்புறம் இருக்கு அந்த மனுசனுக்கு… என்று கருவியபடி உள்ளே சென்றார்.

வெளியில் மழை வெளுத்து வாங்கியது.  பூஜை அறையில் விளக்கேற்றிய செண்பகம் ஹாலில் அமர்ந்து மகனின் வரவிற்காக வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார்…

மகனின் கார் சத்தம் கேட்கவும் வாசல் வரை சென்று பார்த்தார்…  முழுவதும் நனைந்த நிலையில் கிருஷ்ணா காரில் இருந்து  இறங்கி வரவும் “என்ன கிருஷ்ணா இப்படி நனைச்சிருக்க?” என்றார் அதிர்ச்சியாக

இதற்கு என்ன பதிலை சொல்வது என்று விழித்தான் கிருஷ்ணா…  

‘பிருந்தாவிற்காக காரிலிருந்து இறங்கினேன் என்ற சொல்ல முடியும்’ என்ன பொய் சொல்லலாம் என்று யோசித்தவன் 

“அது வந்து மா வண்டி பாதில நின்னுடுச்சி அதை இறங்கி சரிபார்க்கும் போது நனைஞ்சிட்டேன்” என்றவன் செண்பகத்திடமிருந்து அம்பாய் புறப்படும் அடுத்த கேள்வியிலிருந்து தப்பிக்க தன் அறைக்குள் புகுந்தான்.

“முதல்ல இந்த வண்டிய சரிபண்ணு அன்னைக்கும் அதே மாதிரி தான் பாதில மக்கர் பண்ணுச்சி.. இன்னைக்கும் மக்கர் பண்ணுது…” என்று அவனுக்கு யோசனையை கூறியவர் சரி கிருஷ்ணா “நீ போய் குளிச்சிட்டு வா  உனக்கு சூடா காபி தறேன்”. என்றபடி அடுக்கலைக்குள் நுழைந்தார்.

அம்மாவிடமிருந்து தப்பித்து வேகமாக அறைக்குள்  சென்ற கிருஷ்ணா தலையை வெளியே நீட்டி “ஒரு பத்து நிமிஷத்துல வறேன் மா” என்று குளியலறையில் புகுந்தான்.

செண்பகம்  காபியை கொண்டு வரும்போது கிருஷ்ணா தலையை துவட்டியபடி அறைக்குள் ஏதொ ஒரு பாடலை ஹம் செய்தபடி இருக்க,

“இந்தா கிருஷ்ணா” என்று அவனிடம் காபியை நீட்டியவர் கூடவே தரகர் அளித்த புகைபட கவரையும் கொடுத்தார்.

தலை துவட்டியபடியே வாங்கியவன் “இது என்னம்மா?” என்றான் கவரை முன்னும் பின்னும் திருப்பி கேள்வியாக

“கல்யாணத்துக்கு பொண்ணுங்க போட்டோ கிருஷ்ணா… இதுல மூனு போட்டு இருக்கு அதுக்கு பின்னாடியே அவங்க தகவல் இருக்கு.. எல்லாம்  உனக்கு தகுந்த இடம் தான் பார்த்துட்டு சொல்லு” என்றவர்  அறையை விட்டு வெளியேறினார்.

செண்பகம் கூறியதும் தூக்கி வாரிப் போட்டது கிருஷ்ணாவிற்கு “அம்மா அம்மா…” என்று அழைத்தபடி அவர் பின்னோடு செல்லவும்

“சொல்லு கிருஷ்ணா” என்று செண்பகம் கூறியதும் சட்டென்று போட்டோக்களை அவர் கரங்களில் திணித்தவன் “இதுல யாரையும் எனக்கு பிடிக்கலம்மா” என்றான்.

அந்த கவர் இன்னும் பிரிக்கப்படாமலே இருக்க “நீ இன்னும் கவரை பிரிச்சி பாக்கலையே கிருஷ்ணா… அதுக்குள்ள வேண்டாம்னு சொல்ற?” என்றார் சந்தேகமாக

“நான்…  எல்லாம் விளக்கமா சொல்றேன் மா… அதுவரை எதுவும் பண்ணாதிங்க…”  என்று கெஞ்சலாக கூறவும்

‘அய்யோ இப்போ என்ன சொல்ல போறான்னு தெரியலையே உனக்கு கல்யாணம் முடிக்கறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆகுதேடா’என்று நினைத்து தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்து அவனை பார்த்தார்.

கெஞ்சலாக பார்த்தவனை உறுத்து பார்த்த செண்பகம்”நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிதானே இதெல்லாம் செய்யறேன்… அப்புறம் இப்படி சொன்னா என்ன அர்த்தம் கிருஷ்ணா…” என்றார் சற்று கண்டிப்பும் படபடப்புமாக

படபடப்புடன் இருந்த செண்பகத்தின் கையை பற்றிய கிருஷ்ணா “அம்மா…  பதறாதிங்கம்மா… நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கிறேன்… . ஆனா கொஞ்ச நாள் எனக்காக வைட் பண்ணுங்க… நான் எல்லாத்தையும் கிளியரா முடிச்சிட்டு அப்புறம் பண்ணிக்கிறேனே…” என்று அவரை சாந்தப்படுத்த முயல கோபமாக அவன் கையை விலக்கிய செண்பகம் “என்ன முடிக்க போற கிருஷ்ணா” என்றார் கராராக…

‘பிருந்தாவிடமே தன் காதலை சொல்லாத நிலையில் அம்மாவிடம் எப்படி சொல்லி சம்மதிக்க வைப்பது’ என்று நினைக்க அதில் கிருஷ்ணாவிற்கு  புரையேறியது.

இருமியபடியே “அது வந்து மா ஒரு ஒரு என்று தடுமாறியவன் எனக்கு ஒரு 6 மாசம் ஹெவி வொர்க் மா ஒரு ரிசர்ச் போயிட்டு இருக்கு இப்போ கல்யாணம் பண்ண ரொம்ப கஷ்டம் அதனால ஒரு ஆறு மாசம் கழிச்சி பண்ணலாம் மா…” என்று சரளமாக பொய்களை அவிழ்த்து விட்டு தவிப்பாக தாயின் முகம் பார்த்தான்.  

அவர் நம்பினாரோ இல்லையோ எப்படியாவது இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தான் அவன்.

“என்னடா இப்படி பண்ற 3மாசத்துல உனக்கு கல்யாணம் முடிக்கலாம்னு நினைச்சா… இப்படி தள்ளி தள்ளி போடுறியே என்றார் கட்டமாக…”

“அம்மா ப்ளீஸ் எனக்காக” என்று மேலும் அவர் கன்னத்தை பற்றி கெஞ்சலில் இறங்க

அதில் சற்றும் மனம் இளகாத செண்பகம்  “இதுக்கு மேல வெய்ட் பண்ண முடியாது கிருஷ்ணா.. நீ பண்றதை பண்ணு… உன்னை யாரும் தடுக்கலையே… இந்த சாக்கு போக்கு சொல்ற வேலை எல்லாம் வைச்சிக்காத பொண்ணு போட்டோவை பாரு அப்புறம் பேசலாம்…”  என்று  கட்டளை போல கூறி எழுந்து கொள்ள 

“அம்மா என்னை புருஞ்சிக்குங்க” என்று கூற வந்தவனை  “போதும் கிருஷ்ணா… நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டி தலையாட்டி எனக்கு அலுத்துப்போச்சி… உன் எண்ணப்படி தானே எல்லாம் நடக்குது…  இதுலயாவது என் பேச்சை கேளு” என்று முடிவாக கூறியவர் அங்கிருந்து அகன்று விட செய்வதறியாது விழி பிதுங்கி நின்றான் கிருஷ்ணா.

….

“அக்கா அவர் செம கேரக்டர்லக்கா” என்று புகழ்ந்தபடி வந்தான் விஷ்ணு.

“யார் விஷ்ணு?” என்ற பிருந்தா சாலையில் ஓடிய மழைநீரில் புடவையை நனையாதபடி  தூக்கி பிடித்து அவனோடு நடந்தாள்.  .

“அதான் கா கிருஷ்ணா சார் …செம ஸ்வீட் பர்சன் கா…” என்றிட

“டேய்” என்று அவனை மிரட்டியவள் “போதும் டா உன் லொல்லு தாங்கல அவரு பாவம் விட்டுறா” என்றாள் சிரிப்பை வாயில் அதக்கியபடி.

“எல்லாம் ஒருஜாலி தானே கா” என்று சிரித்தவன் “உனக்கு அவரை முன்னாடியே தெரியுமா கா?” என்று அவளோடு நடந்தான்

“தெரியாது விஷ்ணு… திருச்சிக்கு பஸ்ல வர்ற அன்னைக்கு தான் பார்த்தேன்… கேக்காமலேயே ஹெல்ப் பண்ணாரு… ரொம்ப ஜென்யூன் பர்சன் டா” என்றாள் அவனை பாரட்டுவது போல

“பரவாயில்லை கா அவரை பார்த்தாலும் நல்ல மாதிரிதான் தெரியுது” என்று  உள்ளார்ந்து கூறிட

“ம்கூம்” என்று நொடித்தவள் “அவரை தான் நீ எப்பவும் கலாய்ச்சிட்டே இருக்க மறந்துடாத” என்றாள் சற்றே அவனை முறைப்பது போல் 

“நான் சொல்றது உண்மையோ பொய்யோ… ஆனா  நீ சிரிக்கிறியே அது போதாது” என்று நெகிழ்ந்த குரலில் கூறியவன்  “நாமெல்லாம் வீட்டுல சிரிச்சி பேசி எவ்வளவு நாளாச்சி தெரியுமா கா… முன்னாடி எல்லாம் வீட்டுக்கு வரவே பிடிக்காது சாதாரணமா பேசக்கூட முடியாது… இப்போதான் ஏதோ பேசி பேருக்காவது சிரிக்கிறோம்…” என்று தன் மனதிலிருப்பதை அக்காவிடம் கொட்டினான்.

அதுவரை சிரித்தமுகமாய் இருந்தவள் வெற்று பார்வையால் அவனை பார்த்து “எல்லாம் என் நேரம் டா…” என்று கசந்த குரலில் கூறியவள் “அதை விட்டு தள்ளுடா இனிமே நாம இப்படியே இருக்கலாம்…  எதை பத்தியும் யோசிக்க வேணாம்” என்று அவனை தேற்றினாள்.. 

நாள் பார்த்து நேரம் பார்த்து.ஆயிரம் பேர் அட்சதை தூவி ஆசிர்வதித்த வாழ்க்கை மூன்றே மாதத்தில் பல் இளித்த கதையை யாரிடம் சொல்வாள்…  மனதுக்குள்ளயே வெம்பியவள்  அதை மனதோடே மறைத்தபடி திடமாய் நடந்தாள்.

“அப்படி சொல்லாத கா அப்பா பண்ண வேலை.. ஏன் உனக்கு படிப்பு இல்லையா.. இல்லை அழகு இல்லையா… அப்பா பொருமையா தேடி இருந்தா… அடுத்தவங்க பேச்சை கேட்காம இருந்தா… கண்டிப்பா  கிருஷ்ணா சார் மாதிரியே நல்லா மாப்பிள்ளையா உனக்கு கிடைச்சிருப்பாரு நீயும் நல்லா இருந்து இருப்ப” என்று மனதில் இருந்ததை விஷ்ணு ஆதங்கமாக வெளிப்படுதினான்.

அவன் கூறவும் ஒரு நொடி தடுமாறியவள் “டேய் என்னடா பேசுற…  அறிவு இருக்கா உனக்கு…” என்று அதட்டிட விஷ்ணு  அவளை பாவமாக பார்த்தான்.

விஷ்ணுவின் வாடிய முகம் காணவும் அமைதியானவள்  “சாரி டா… நீ அவரை மாதிரின்னு சொல்லவும் சட்டுன்னு கோவம் வந்துடுச்சி…   இங்க பாரு விஷ்ணு இதுதான் லாஸ்டா இருக்கனும்…  இந்த மாதிரி பேச்சி இனி வரவே கூடாது புரியுதா அவர் இருக்கும் போதும் சரி இல்லாத போதும் சரி கவனமா பேசு” என்றாள் கண்டிப்புடன்

விஷ்ணுவின் மனதில் கிருஷ்ணாவை பார்த்ததும் சிறு எதிர்ப்பார்ப்பு எழுந்தது  என்னவோ உண்மை அதை அக்காவிடம் பேச்சி வாக்கில் வாய் விட்டு சொல்லி விட அவள் ஒரு பிடி பிடிக்கவும் தவறு செய்த பிள்ளையாய் தலையை குனிந்தபடி சரி என்றவன் வீட்டை நோக்கி நடந்தான்…

இன்று நடந்தவை எல்லாம் மனக்கண்ணில் தோன்றி அவளை ஆட்டி படைக்க  இரவு வேலையை முடித்து உறங்க வந்தவளுக்கு உறக்கம் எங்கோ தொலைந்து போயிருந்தது.

விஷ்ணு பேசியதற்கே இப்படி கோபப்படுபவள் கிருஷ்ணா தன் காதலை வெளிப்படுத்தினால் என்ன ஆகுமோ…