அவ(ன்)ள் 5

இடைவரை நீண்டிருந்த கூந்தலில் நீர்த்திவளைகள் சொட்ட சொட்ட இறைவனின் சந்நிதியில் மனம் முழுவதும் வேண்டுதலுடன் நின்றிருந்தாள் பிருந்தா. 

கிருஷ்ணா கூறியிருந்தபடியே மகேஷ்வரிக்கு  இன்று ஆப்ரேஷன் என்று முடிவாகி இருக்க பயத்திலும், பதற்றத்திலும், மருத்துவமனையில் நிற்க முடியாமல் விஷ்ணுவை இருக்க வைத்துவிட்டு கோவிலுக்கு வந்தவளின் அலைபேசி அழைத்தது.

“ஹலோ…  பிந்து” 

பேசவே அரை நாழிகை பிடித்தது அவளுக்கு “சொல்லு சொல்லு அஞ்சு?” வார்த்தைகள் பதற்றத்துடன் ஒலித்தது

 “பிந்து  எங்க இருக்க?”

“ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருந்த கிருஷ்ணர் கோவில்ல” 

“அங்க என்னடி பண்ற? இன்னும் அரைமணி நேரத்துல ஆப்ரேஷன் ஸ்டார்ட் ஆகிடும் நீ இங்க இருக்க வேண்டாமா?”

“அஞ்சு எனக்கு பயமா இருக்கு…” என்று அவள் கண்களில் நீர் கோர்த்து குரல் தழுதழுக்கவும் தோழியின் நிலையை கண்டுக்கொண்டவள்

“அழாத பிந்து… முதல்ல நீ கிளம்பி இங்க வா…  நான் இருக்கேன் கிருஷ்ணா இருக்கான் அப்புறம் என்ன…   பாவம் விஷ்ணு, அவனை விட்டுட்டு போயிருக்க!” என்று அஞ்சலி  சிறு கோபத்துடன் எடுத்து கூறவும்

“சரி அஞ்சு… வறேன்” என்று சுரத்தே இல்லாமல் கூறியவள் கால்கள் துவண்டது… வாடிய மலரை போல் இருந்தவள் மீண்டும் ஒரு முறை மனதார கடவுளை பிராத்திட்டு விட்டு மருத்துவமனையை நோக்கி நடந்தாள்.

நேற்று மருத்துவமனையில் கிருஷ்ணா ஆப்ரேஷனை பற்றி கூறிவிட்டு சென்ற பத்தினைந்தே நிமிடத்தில் திரும்பி வந்தவன் “நாளைக்கு காலைல பத்து மணிக்கு அப்ரேஷன் கன்பார்ம் பிருந்தா… நீங்க பணத்துக்கு இனி கவலைபட வேண்டாம்” என்றான் இருக்கையில் சாய்ந்து.

“டாக்டர்” என்றாள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த குரலில்

 “ஆமா… பிருந்தா நீங்க பணம் கட்ட வேண்டியதில்லை… ஹஸ்பிட்டல் டிரஸ்டி  உங்க அமௌண்ட்டை கிளியர் பண்ணிடுவாங்க… உங்க கையில இருக்க பணம் நீங்க மத்த பர்பஸுக்கு யூஸ் பண்ணிக்கோங்க” என்றதும் அஞ்சலி அவனை வியப்பாக பார்த்தாள். 

அவளுக்குத்தான் தெரியுமே மருத்துவமனை வழிமுறைகள் பாதி நிர்வாகம் கிளியர் பண்ணிவிடும் என்றாள் கூட மீதி மீதி கட்டித்தானே ஆக வேண்டும் என்று எண்ணியவள் அவனை ஆராய்ச்சி கண் கொண்டு பார்த்தாள்.  

அஞ்சலியின் பார்வையை உணர்ந்த கிருஷ்ணா கண்களால் எதுவும் கூற வேண்டாம் என்று சமிஞ்சை செய்ய.

பிருந்தா அறியாமல் தலை அசைத்தவள் “அதான்  கிருஷ்ணா சொல்லியாச்சில்ல கவலைபடாம இரு…”  என்றாள் சிறு கண்டிப்புடன்.

“நீங்க செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல டாக்டர்”  என்றவள் குரல் உணர்ச்சிகுவியலாய் இருந்தது…  அதை உணர்ந்துக் கொண்டவன் 

“நானும் உங்களுக்கு அஞ்சலி மாதிரி பிரெண்ட் தான் பிருந்தா… சோ நோ பார்மலிட்டிஸ்…  என்று கூறி அவர்களை அனுப்பியவன் அவள் கண்களில் தெரிந்த நிம்மதியில் தானும் நிம்மதியாக உணர்ந்தான். 

….

மருத்துவமனையில் ஏதோ ஒரு பாடலை ஹம் செய்த படி தனது அறைக்குள் நுழைந்த கிரியை வரவேற்றது யோசனையோடு அமர்ந்திருந்தது அஞ்சலியின் முகம் 

‘என்ன பெருச்சாளி ஏதோ யோசனைல இருக்கு’ என்று அவள் முன் சொடுக்கிட்டு “என்ன எலி யோசனை?” என்றான்.

“நம்ம புன்னகை மன்னனை பத்திதான் டா” என்றவளை விசித்திரமாய் பார்த்தவன் 

“அவனுக்கு என்னடி?”.

“வர வர அவன் போக்கே சரியில்லை டா” 

“ஏன்?… அவன் எப்பவும் போற ரூட்ல தானேடி போறான்?”.

“போ… எருமை எங்கேயவாது ஆத்துல குளத்துல விழுந்து தொலை” என்னை வெறுப்பேதாத என்று அவனை திட்டியவள் மீண்டும் யோசனையொடு இருக்க

“ஓகே.. ஓகே… பீ சீரியஸ் சரி சொல்லு என்ன பண்ணான்? என்றான் பொறுமையாக

பிருந்தாவிடம் கிருஷ்ணா பேசியவற்றை கூறியவள் “எனக்கு அவன் மேல கொஞ்சம் டவுட்டா இருக்குடா… பிந்து எனக்கு பிரெண்டு நான்தானே முதல்ல ஹெல்ப் பண்ணனும்… இவன் எதுக்குடா பண்ணன் அதுவும் அவ்வளவு பெரிய அமௌண்ட் டா..?  அவ அழுதா இவன் கவலைபடுறான்… அவ கஷ்டப்பட்டா இவன் கலங்குறான்” என்றாள் நடந்த எல்லாவற்றையும் கிரகித்து

கேட்டுக்கொண்டு இருந்தவன் “முதல்ல அந்த பிரெண்டை காட்டு?” என்றிட

அஞ்சலி தன் போனில் இருந்த பிருந்தாவின் புகைபடத்தை காட்ட 

“உன் பிரெண்டா இது?!”

“ஆமா டா”

“அதான் எலி… என்னால நம்பவே முடியல…  இவ்வளவு அழகான பிரெண்டா உனக்கு?” என்று அவளை வெறுப்பேற்ற

“அடச்சீ… விஷயத்துக்கு வா… எனக்கு யோசிச்சி யோசிச்சி தலைவலியே வருது…”

“அதுக்கு ஏன் எலி டென்ஷன் ஆகுற? பையனை நைசா தள்ளிட்டு போய் விஷயத்தை கறந்திடுவோம்… நீ வைட் பண்ணு நான் அவனை தள்ளிட்டு வறேன்…  புன்னகை மன்னனை புண்ணாக்கிடலாம்” என்றான் நம்பியாரின் பாவனையில்.

……

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவிற்கு உஷ்ணமாக இருந்தார் செண்பகத்தின் அண்ணன் கார்மேகம்.

சுவாமிநாதன் எவ்வளோ எடுத்துச் சொல்லியும் கனல் கக்கும் பார்வையோடு தங்கையை முறைத்துக்கொண்டு இருந்தவரை சமாதானம் செய்ய முடியாமல் கடையை பார்க்க கிளம்பி விட்டார் அவர்.

வந்ததிலிருந்து பச்சை தண்ணீரை கூட பருகாமல் அமர்ந்திருந்தவரிடம் “அண்ணா ஒரு வாய் காபி குடிச்சிட்டு அப்புறம் பேசுவோமே” என்று அண்ணனின் கோவத்தை குறைக்க முயன்றார் செண்பகம்.

“அதான் என் உறவே வேண்டான்னு சொல்லிட்டிங்களே அப்புறம்.எதுக்கு இந்த உபச்சாரம்?” 

“இது அவன் முடிவுண்ணே வாழபோறது அவங்க… கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்க வைக்க முடியுமா? என்றார் எதிர்  கேள்வியாக

“உறவு வேணும்னு நினைச்சா எல்லாம் முடியும் செண்பகம்… என்ன வயசாகிடுச்சி அப்படி என் மருமகனுக்கு… என் பொண்ணை கட்டிக்கிற முறை தானே..”. என்றார் ஆத்திரமும் கோவமுமாக

‘ம்கூம் இதேயே நான் அவன்கிட்ட சொன்னா உள்ள தூக்கி வைச்சி கம்பி எண்ண வைப்பாங்கன்னு சொல்லிட்டு போயிட்டான்… இப்போ நீயாண்ணா என்று உள்ளுக்குள் நொடித்தார் செண்பகம்’

“இருண்ணே கிருஷ்ணா  வர்ற டைம் தான்…  இருந்து பார்த்து பேசு… நீயாச்சி உன் மருமகன் ஆச்சி” என்றவர் நீள் இருக்கையில் ஒரு ஓரத்தில் அமர்ந்துக்கொண்டார்.

“வரட்டும் ரெண்டுல ஒன்னு நானே கேக்குறேன்” என்றபடி அவரும் அமர்ந்து மருமகனுக்காக காத்திருந்தார்..

மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வரவேண்டியவன் நண்பர்களின் அடாவடியில் வீட்டிற்கு வர இரவு மணி 7ஆனது. வாயில் ஏதோ பாடலை விசில் செய்தபடி வீட்டிற்குள்  நுழைந்தவன் ஹாலில் அம்மாவும் மாமாவும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்திருப்பதை பார்த்து அவர்கள் பக்கத்தில் வந்தான்.

“எப்போ மாமா வந்திங்க? எப்படி இருக்கிங்க?” என்றான் விரிந்த புன்னகையுடன்.

அவனை பார்த்ததும் எழுந்தவர் “நல்ல இருக்கேன் மாப்பிள்ளை” என்று எங்கோ பார்த்து பதிலை கூற

தாயை பார்த்து என்ன என்றான் சைகையில் அவரும் சைகையில் கோவமாக இருப்பதை தெரிவிக்க சிரித்துக்கொண்டவன் 

“அம்மா மாமாவுக்கு சாப்பாடு எடுத்து வைங்க.. நான் ப்ரெஷ் அப் ஆகிட்டு வர்றேன்” என்று அறைக்குள் செல்ல முன்னேறினான்.

“அதெல்லாம் வேண்டாம் மாப்ள… உங்க கிட்ட பேசிட்டு போலாம்னு தான் வெய்ட் பண்றேன்” என்றார் கராராக

“அதுக்கென்ன மாமா தாராளமா பேசலாம் வாங்க… ஆனா நான் ப்ரெஷ் ஆகிட்டு வந்துடேறேனே” என்றான் தன்மையாக

மறுப்பு கூற முடியாமல் வேண்டா வெறுப்பாக அமர்ந்தார் கார்மேகம். பதினைந்து நிமிடங்களில் டி ஷர்ட் டிராக்ஸுடன் அறையிலிருந்து வெளியே வந்தவன் அவரின் எதிர் இருக்கையில் அமர்ந்து “சொல்லுங்க மாமா” என்றான்.

“என் பொண்ணுக்கு என்ன மாப்ள குறைச்சல்…? ஏன் வேண்டான்னு சொன்னிங்க…? எவ்வளவு ஆசை ஆசையா இருந்தேன்” என்றார் ஆதங்கத்துடன்.

பேச வேண்டியதை எல்லாம் தெளிவாக  யோசித்தவன் “அஷ்வினிக்கு நான் தான் மாமா குறைச்சல்…. அதான் வேண்டாம்னு சொன்னேன்”  என்றான் மறையாத பொறுமையுடன்.

கார்மேகம்  சட்டென கிருஷ்ணாவை பார்க்கவும் “ஆமா மாமா அஷ்வினிக்கு நான் நல்ல கணவனா இருக்க முடியாது… உங்க வற்புறுத்தலுக்காக கல்யாணம் நடந்தாலும் அது இன்னும் கொடுமையா தான் இருக்கும்… 

அவ லைஃப் இது இல்ல மாமா” என்றான் அமைதியாக

“என்ன மாப்ள சொல்றிங்க” என்றார் அவன் கூற வருவது புரியாது .

“அஷ்வினி படிக்க வேண்டிய பொண்ணு மாமா…  பிரைட் ப்யூச்சர் இருக்கு…  அதுக்குள்ள எதுக்கு கல்யாணம் குடும்பம் குழந்தைன்னு அவளை அடைக்கிறிங்க…  அவ அச்சிவ் பண்ண வேண்டிய கோல்ஸ் நிறைய இருக்கு” என்றான் தெளிவாக

“இதெல்லாம் சப்பக்கட்டு மாப்ள.. வேண்டாம்னு சொல்றதுக்கு  ஆயிரம் காரணம் எதுக்கு…?  ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும்… யார் வேண்டான்னு சொல்லுவா? நீங்களே சொல்லுங்க மாப்ள?” என்று அவனை மடக்க பார்க்க

“சாரி மாமா…  என்னை கம்பெல் பண்ணாதிங்க…  நீங்க என்ன சொன்னாலும் என்னால அஷ்வினிய கல்யாணம் பண்ண முடியாது மாமா… அவ லைபும் ஸ்பாயிலாகும்… என் லைபும் ஸ்பாயில் ஆகும்…” என்று திட்டவட்டமாக அழுத்தி கூறி திருமணத்தை மறுத்தவன் மேலும் அங்கு நின்று வாதிட்டு அவரை நோகடிக்க விருப்பமின்றி  அறைக்குள் சென்று விட்டான்.

“நல்ல மரியாதைம்மா… நல்ல மாரியாதை…  உன் புள்ள நல்ல மரியாதை பண்ணிட்டான்… எவ்வளவு ஆசையா வந்தேன்.- எல்லாம் ஒரு நிமிஷம் அவசரத்துக்கு.அள்ளி தெளிச்ச கோலமா  போச்சி  இனி உனக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல இனி இந்த வீட்டு வாசப்படிய கூட மிதிக்க மாட்டேன்” என்று கர்ஜித்தவர் அன்றிரவே ஊருக்கு பயணமானார்.

…..

பிருந்தாவிற்கு எல்லாம் நேற்று நடந்தது போல இருந்தது  தாயின் நிலை குறித்து கவலையில் இருந்தது எல்லாம் எங்கோ மாயமாய் மறையச் செய்திருந்தான் அந்த மாய கிருஷ்ணன்…  

இன்றோடு ஆப்ரேஷன் முடிந்து இரண்டு நாட்கள் கடந்து சென்றிருந்த நிலையில் நேற்று இரவு நார்மல் வார்டிற்கு மாற்றியிருந்தான்.  

சீராண சுவாசம் கொண்டு கண்மூடி துயில் கொண்ட தாயின் முகம் பார்த்த விஷ்ணு “அக்கா இனி அம்மா சேஃப்ல கா?” என்றான் ஆசுவாசமாக

“ஆமா விஷ்ணு… இப்ப தான் எனக்கு நிம்மதியா மூச்சே விட முடியுது” 

“ம்”…. என்றவனின் மனநிலையும் அவ்வாறே இருக்க…  “நீ இன்னும் சாப்பிடவே இல்லையே நான் உனக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேனே”.

“இல்லடா எனக்கு எதுவும் வேணா… அப்பா நேத்து கோவிலுக்கு போனாரு, இன்னும் வரலையே…”

” வந்துட்டு இருப்பாரு கா . ஒரு வாரம் அவர் அவராவே இல்ல.. இப்பதான் கொஞ்சம் தெளிஞ்சி இருக்கார்… பஸ் ஏறிட்டாராம் வந்துடுவாரு … ஆமா சாப்பாடு ஏன் வேணா?” என்றான் அதட்டும் தோணியில்

” பச்…  பசிக்கல டா” என்றாள் சலிப்பாக

“இப்படியே சொல்லிட்டு இருந்தா, அம்மாவுக்கு பக்கத்துல நீயும் ஒரு பெட்டுல படுத்துக்க வேண்டியதுதான்”. என்றதும் அவனை முறைத்தாள் பிருந்தா

“முறைச்சா மட்டும் அது பொய் ஆகிடுமா… பாரு எப்படி இருக்கன்னு” எனும் போது கதவை தட்டும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பினர்.

“டாக்டர் ரவுண்ட்ஸ் வர்றாங்க.நீங்க வெளியே இருங்க” என்று செவிலியர் கூறவும் வெளியே இருவரும் வந்தனர்.

“அக்கா”… என்றான் குரலில் வியப்பை தேக்கியிருந்து.

“ம் என்னடா” என்று  விஷ்ணுவை பார்த்தாள் பிருந்தா.

அங்கு அலையாலையான கேசத்துடன் அழகான புன்னகையை உதட்டில் தாங்கி நடந்து வரும் கிருஷ்ணாவை பார்த்து அக்கா… ஆளு “செம ஸ்மார்ட் கா என்ன ஹேண்ட்சமா இருக்காரு” என்று விஷ்ணு ரசித்து கூறிட

“டேய் நீ ஆம்பள பையன்டா…  அவரைப்போய் ரசிக்கிற?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ரகசியமாக முகம் சுளித்தாள்.

“பையன் பொண்ணை மட்டும் தான் ரசிக்கனுமா? அழாக இருந்த பையனை ரசிக்கக்கூடாதா?” என்று கேட்டு அக்காவிடம் முறைப்பை வாங்கியவன் கிருஷ்ணாவையே பார்க்க அவர்கள் இருவரையும் கடந்து அறைக்குள் நுழையும் முன் பிருந்தாவை பார்த்து சின்ன இதழ் முறுவலுடன் தலையசைத்து உள்ளே சென்றான் அவன்.

விஷ்ணுவிற்கு  மனதில் இப்படியெல்லாம் தன் அக்காவிற்கு மாப்பிள்ளை வரவில்லையே என்ற எண்ணம் இருக்க

“ப்பபபா…  என்ன ஸ்டைலா சிரிக்கிறார்” என்று பிருந்தாவின் காதை கடிக்க அவன் முதுகில் பட்டும் படாமலும் ஒரு தட்டு தட்டியவள் “டேய் நீ ரசிக்கிறத்துக்கு வேற ஆளே கிடைக்கலையா… இத்தனை நாள் இங்க தானே இருந்தார்… அப்போ தெரியலையா உனக்கு”  என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

 “ம்கூம் அப்போ யார் அவரை பாக்குற ஸ்டேஜ்ல இருந்தா… என்று நக்கலடித்தவன் ஏன் அவருக்கென்னா?”  என்று  சிறு குரலில் இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வெளியே வந்த கிருஷ்ணா  “ரொம்ப சீரியஸ் டிஸ்கஷன் போல” என்றான் சன்ன சிரிப்புடன் 

சட்டென அமைதியானவர்கள் “அப்படி ஒன்னுமில்லை டாக்டர் சும்மா பேசிட்டு இருந்தோம்…  அம்மா எப்படி இருக்காங்க” என்றாள் தங்கள் கள்ளத்தனத்தை மறைத்து

இரு நாட்களாக அவள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் நிம்மதியும்  கிருஷ்ணாவையும் சூழ்ந்திருக்க … 

“எவ்ரிதிங் பர்பெக்ட் பிருந்தா… அவங்க நர்மலாகிட்டு வர்றாங்க இன்னும் இரண்டு நாள்ல வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்….  பட் அவங்க ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண கூடாது… இரண்டு மாசம் கம்பீளிட் ரெஸ்ட் வேணும்” என்றான் ஒரு மருத்துவனாய்…

“தெங்கஸ் டாக்டர்… பாத்துக்குறேன்” என்று கூறியவள் அவனுக்கு விலகி வழி விட “ஓகே பிருந்தா…சீ யூ லேட்டர்” என்றவன் அவர்களை கடந்து செல்லவும் விழியகற்றாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவை இடித்தவள் “வழியுது… துடை டா” என்று அவனை நக்கலாய் பார்த்தாள் .

அவள் நக்கலில் சிரித்தவன்  “என்ன சொல்லுக்கா…  இன்னையிலிருந்து நான் அவரோட ஃபேன்” என்றவன் தன் இரு பேன்ட் பாக்கெட்டிலும் கையை விட்டு ஸ்டைலாய் நின்றான்.

……