அவ(ன்)ள் 2

அவ(ள்)ன் – 2

செண்பகம் தன் மெல்லிய குரலில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாடிய படியே சமயலறையில் கணவருக்கு சுடச்சுட காபியை தயாரித்துக் கொண்டிருந்தார்.

சுவாமிநாதன் மார்கெட்டில் பலசரக்கு கடையை வைத்திருக்க, செண்பகம் இல்லத்தை நிர்வகித்து வந்தார். இவர்களின் ஒற்றை செல்வமகனாய் பிறந்தவன் தான் கிருஷ்ணா..

“என்னங்க எப்பவும் நம்ம சண்முகம் வந்து கடை சாவிய வாங்கிட்டு போவான்…  இன்னைக்கு இவ்வளவு நேரம் ஆகுது இன்னும் வரலியே” என்று கேட்டபடியே கணவரிடம் காபியை நீட்டினார் செண்பகம்.

“சண்முகத்தோட பிள்ளைக்கு முடியலையாம் செண்பா… இன்னைக்கு லீவு சொல்லிட்டான் அதான் நானே  கடையை தொறக்க போறேன்” என்றபடி தனது டிவிஎஸ் பிப்டியை துடைத்துக் கொண்டிருந்தவர் மனைவியிடமிருந்து காபியை வாங்கினார்.

“சரிங்க… பார்த்து போயிட்டு வாங்க காலை பலகாரத்தை நானே கொண்டு வர்றேன்… நீங்க கடைக்கும் வீட்டுக்கும் அல்லாடாதிங்க” எனும் போது  வாசலில் ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து இறங்கியவனை பார்த்ததும் செண்பகம் கோவமாக உள்ளே சென்று விட்டார்.

ஆராய்ச்சியாய் மகனை பார்த்த சுவாமிநாதன்  “வா கிருஷ்ணா… என்னப்பா ஆட்டோல வர்ற? கார் என்ன ஆச்சி?” என்று கேள்வியை எழுப்பினார்.

“கார்  வழியில பிரேக் டவுன் ஆயிடுச்சிப்பா… டிரைவர் கார் எடுத்துட்டு வருவார் …  எனக்கு ஒரு எமெர்ஜென்ஸி கேஸ் அதான் நான் பஸ்ல வந்துட்டேன்”. என்று நாதனுக்கு பதிலை கூறியவன் வீட்டிற்குள் நுழைந்து தாயை தேட செண்பகம் சமயலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்..

அம்மா….

“…..”

அம்மாஆ..…

“…..”

என்று அவரை அழைத்துக்கொண்டே வந்தான் கிருஷ்ணா.

சத்தம் கொடுக்காமல் கோபமாக இருப்பதை போல காட்டிக் கொண்டே செண்பகம்  முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அவனுக்கு காபியை தயாரித்துக் கொண்டிருந்தார். 

இரு கைகளையும்  இடுப்பில் ஊன்றி சமயலறை வாசலில் நின்றவன் “இங்கதான் இருக்கிங்களா…? எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்  சத்தமே கொடுக்காம சைலண்டா இருக்கிங்க” என்று தாயின் தோளில் கை போட்டு சமயலறையில் இருந்து வெளியே அழைத்து வர.

“ஹேய் என்ன பண்ற? இருடா காபி போடுறேன்”… என்பதை கூட காதில் வாங்கதவன் 

“அதை அப்புறம் பாத்துக்கலாம் நீங்க வாங்க என்னாச்சி  ஏன் இந்த காரம்? என்றான் இதழில் தோன்றிய மென்நகையுடன்.

மகனின் சிரிப்பு அவரின் கோபத்தை போக்கி விட வலுக்கட்டாயமாக அதை இழுத்து பிடித்தவர் “அது எல்லாம் ஒன்னும் இல்ல….” என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டார்.

“எங்க அம்மா முகம் இப்படி இருக்காதே!!… எப்பவும் சிரிச்ச மாதிரி இருப்பாங்க… இன்னைக்கு அந்த சிரிப்பு மிஸ் ஆகுதே!!” என்று அவரின் முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்ப அவன் கைகளை தட்டி விட்டவர்… “ஆமா உன் மேல கோவமாதான் இருக்கேன்… ஊர்ல நடக்குற கல்யணாத்துக்கு எல்லாம் போயிட்டு வர …  நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற” என்றார் கண்களில் ஆசையுடன்.

“ஹோ… அதுதான் எங்கம்மா சோகமா இருக்க காரணமா… ம் என்ன செய்யலாம்” என்று யோசிப்பது போல் பேசியவன்  “சரி கல்யாணம் பண்ணிக்கிறேன் இப்போ சந்தோஷமா” என்று கிருஷ்ணா வினவியதும்  முகம் மலர்ந்தார் செண்பகம்.

“உண்மையாதான் சொல்றியா கிருஷ்ணா??.  அப்புறம் பிடிக்கலன்னு சொல்ல மாட்டியே?” என்றார் கண்களில் கலவரத்துடன்.

“நிச்சயமா சொல்லமாட்டேன்… போதுமா” என்று கன்னம் குழி விழ சிரித்தவன் கையை உயர்த்தி சோம்பல் முறித்தபடி “நைட்டெல்லாம் டிராவல் பண்ணது ரொம்ப டயர்டா இருக்கு மா.. குளிச்சிட்டு வந்துடுறேன்… டியூட்டிக்கு கிளம்பனும்”. என்று எழுந்துக் கொண்டான்.

“சரி சரிப்பா நீ போய் ரெடியாகு … நான் உனக்கு டிபனை  ரெடி பண்ணிடுறேன்”. என்றவர் குஷியுடன் சமையலை கவனிக்க சென்றார்.

தாயின் செய்கையில் சிரித்தபடியே தன் அறைக்குள் நுழைந்த கிருஷ்ணா, அரைமணி நேரத்தில் குளித்து முடித்து  டியூட்டிக்கு கிளம்பும் அவசரத்தில்  அறையிலிருத்து வெளியே வந்தான். 

மகனுக்கு சுடச்சுட இட்லி பாசிப்பருப்பு சாம்பார், கார சட்னி, ஊத்தப்பம்.. என்று வகைவகையாய் பரிமாறிய செண்பகம் அருகில் அமர்ந்துக் கொண்டார். ‘நாளைக்கு அண்ணனை லட்டுவோட ஜாதகத்தை எடுத்துக்கிட்டு வரச் சொல்லனும் சீக்கிரமே கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாளை பார்க்கனும்’ என்று தன்போக்கில் மனகோட்டை கட்டிக்கொண்டிருந்தார்.

சாப்பிட்டு முடித்த கிருஷ்ணா  “சரிமா நான் கிளம்புறேன் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க… பிபி மாத்திரைய மறக்காம போடுங்க… அதை செய்யுறேன் இதை செய்யுறேன்னு வேலையை இழுத்து போட்டுக்கிட்டு செய்யாதிங்க” என்று தாயிடம் கூறியவன் தன் பைக்கில் வேலைக்கு கிளம்பினான்.

…..

வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக மருத்துவமனை வாயிலில் வந்து இறங்கிய பிருந்தா  படபடக்கும் இதயத்துடன் தாயை அனுமதித்து இருக்கும் வார்டை நோக்கி நடந்தாள்.

கவலைபடிந்த முகத்துடன் இருந்த விஷ்ணுவை கண்டு அவன் அருகில் ஓட்டமும் நடையுமாக  வந்தவள் “விஷ்ணு  அம்மா எப்படி இருக்காங்க?”  என்றாள் பதற்றமான குரலில்.

“அக்கா வந்துட்டியா…  அம்மாவை பாருக்கா இன்னும் ஐசியூல தான் இருக்காங்க…” என்றவன் அவள் தோளில் சாய்ந்து அழுதான்… 

அவனும் எவ்வளவு நேரம் தான் கண்ணீரை கட்டுப்படுத்துவான் சாய்ந்து அழ ஒரு தோள் கிடைக்காதா என்ற ஏக்கதில் இருந்தவனுக்கு பிருந்தாவை கண்டதும் திடம் முழுவதும் வடிந்து விட குழந்தையாய் மாறி கண்ணீரை வடித்தான்.

“அழாத விஷ்ணு அம்மாக்கு ஒன்னும் ஆகாது.. அம்மா நம்ம கூடவே வீட்டுக்கு வந்துடுவாங்க” என்று அவனை தேற்றியவளும் அழுகையில் கரைய அவனறியாமல் அதை  துடைத்தவள் “டாக்டர் என்ன சொன்னாங்க விஷ்ணு” என்றவள் குரல் தழுதழுத்தது..

“டாக்டர் இன்னும் வரலைக்கா  வந்தாதான் தெரியும்…   இப்போ என்ன சொல்லுவாங்களோன்னு  பயமா இருக்குக்கா..” என்று கலங்கியவனை  ஒருவாறாக தேற்றி, கண்ணாடி தடுப்பின்  வழியாக தெரிந்த தன் அன்னையை கண்களால் நிறைத்துக் கொண்டவள்.

“விஷ்ணு அப்பா எங்கடா..?”  என்றாள் தகப்பனை கண்களால் தேடியபடியே 

“அவர் இங்கதானேக்கா  இருந்தார்” என்று பார்வையை சற்று வெளிபுறம் நகர்த்திட தூரத்தில் வருபவர்களை பார்த்ததும் முகம் மாறியது அவனுக்கு  “இப்போ எதுக்குக்கா அவங்க இங்க வர்றாங்க..?” என்றான் கோபமாக

அவன் காட்டிய திசையில் பார்த்தவளுக்கு சலிப்பாக இருந்தது… “பச் வந்தா வந்துட்டு போட்டும் விடு விஷ்ணு” 

“அவங்க சும்மா இருப்பாங்கன்னு நீ நினைக்கிறியா… உன்னை கடிச்சி கொதறாம போகாது அந்த பொம்பளை” என்றான் ஆத்திரத்துடன்.

“இது ஆஸ்பிட்டல் விஷ்ணு. இங்க சட்டுன்னு பேசிட முடியாது… அப்படி பேசினாக்கூட என்னைத்தானே பேசுவாங்க பேசட்டும்… எனக்கு இது ஒன்னும் புதுசு இல்லையே… நீ அப்பா எங்கன்னு  பாரு… ” என்றாள் கெஞ்சலாக

“உன்னை பேச அவங்களுக்கு என்னக்கா உரிமை இருக்கு… நீ விட விட தான் அவங்க பேசுறாங்க” என்று கொதித்தவன்,  “நீ கெஞ்சாத இரு நான் போய் அவரை பார்த்து கூட்டிட்டு வந்துடுறேன்” என்று தந்தையை தேடி சென்றான். 

மனைவியின் நிலையை எண்ணி சித்தம் தடுமாறி   பார்வையில் எங்கோ வெறித்திருந்த பரசுவை  கண்டவன் “அப்பா அக்கா வந்துட்டாங்க வாங்க” என்று கூறி கை பிடித்து அவரை அழைக்க,  மகன் பேசியது ஏதோ கிணற்றுக்குள்  இருந்து பேசியது  போல் இருந்தது பரசுவிற்கு, மகனின் இழுப்பிற்கு அவனுடன் நடந்து வந்தார்.

“இவ எப்போங்க இங்க வந்தா?” என்று கணவரிடம் விசாரித்துக் கொண்டே பிருந்தாவை நெருங்கி இருந்தனர்.  அவளுடைய பெரியம்மா பர்வதமும்  அவருடைய கணவர் வாசனும். 

தந்தையின் உடன் பிறந்த வாசன் ஒரளவு அவள் மேல் பாசம் கொண்டலும் பர்வதத்தின் பார்வையில் அது எல்லாம் சூரியனை கண்ட பனியை போல காணமல் போய்விடும். இறுக்கமான முகத்துடன் வந்த பெரியப்பா பெரியம்மாவை  பார்த்து பிருந்தாவிற்கு இங்கு என்ன பேசுவார்க்ளோ என்று நினைத்தே கலவரமாக இருந்தது.

 “நீ எப்போ வந்த?” என்று பர்வதம் கேட்டதும்

“காலைல தான் பெரியம்மா” என்று கூறியவளின் குரல் உள் சென்றிருந்தது.

“எதுக்கு வந்த? உன்னை பார்த்து இன்னும் அவ பொட்டுன்னு போகவா?” என்று பர்வதம் நெஞ்சில் ஈரம் இல்லாமல் பேசவும் “பெரியம்மா” என்றாள் அதிர்வாக.

“என்னடி பெரியம்மா உன்னை பார்த்து பார்த்து தானே இந்த நிலைமையில இருக்கா… கல்யாணம் பண்ணி கொடுத்த மூனே மாசத்துல வாழா வெட்டியா வந்து நின்னா  குளுகுளுன்னு இருக்குமா” எனும் போதே விஷ்ணு வந்துவிட “உங்களை யாரு இங்க கூப்பிட்டா… ஏன் தேவையில்லாம பேசுறிங்க வந்திங்களா… பாத்திங்களா…  போயிட்டே இருங்க” என்றான் காட்டமாக

“பாத்திங்களா… பிள்ளை பூச்சிக்கு கொடுக்கு முளைச்சிருக்கறதை…” என்று அவனை சாடியவர் “அய்யோ பாவமாச்சே கூடமாட ஒத்தாசைக்கு ஆள் இல்லையேன்னு வந்தா…  பேசுவடா…. பேசுவ.. இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ… என்னங்க பார்த்துக்கிட்டு சும்மா நிக்குறிங்க.,  நான் பார்த்து பொறந்த பய எப்படி எடுத்தெறிஞ்சி பேசுறான் என்னன்னு கேக்காம நிக்குறிங்க” என்று கணவரை ஏவியதும்

“விஷ்ணு” என்று அதட்டலாக அழைத்த வாசன் “கிளம்பு  பர்வதம் நாம போலாம்” என்றவர் மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.. 

இங்கு இருந்தால் மனைவி மேற்கொண்டு என்னென்ன பேசுவாளோ??? ஏற்கனவே நொந்துப்போய் இருக்கும் குடும்பத்தில் இவளுடைய திராவக பேச்சு மேலும் வேதனையை தரும் என்று தெரிந்தவர் துரிதமாக அவரை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

பர்வதம் பேசியதில் பலமாக அடிப்பட்டது பிருந்தாவின் மனது… ‘நானா நானா வாழத்தெரியாதவ இன்னொருத்தி கூட வாழந்துக்கிட்டு இருக்கவன் கூட எப்படி என்னால வாழ முடியும்’ என்று ஊமையாய் அழுதவள் அப்படியே சுவற்றில் சாய்ந்துக்கொண்டாள்.

விஷ்ணுவிற்கு அக்காவின் நிலையை நினைத்து கஷ்டமாக இருக்க தந்தையை நாற்காலியில் அமரவைத்தவன் தானும் ஒரு இடத்தில் அமர்ந்துக் கொண்டான்

அதே நேரம் அங்கு மருத்துவரிடம் பேசியபடி வந்த கிருஷ்ணா  ஐசியூ அறைக்குள் நுழையும் சமயம் தான் அறை வாசலில் கண்ணீரோடு நின்றிருந்த பிருந்தவை கவனித்தான். என்ன இவங்க இங்க நிக்குறாங்க என்ற எண்ணத்துடன் “ஹாய்… நீங்க.. நீங்க இங்க என்ன பண்றிங்க…” என்றான் ஆச்சர்யமாக

தன் எண்ணப்போக்கில் இருந்தவள் கிருஷ்ணாவின் அழைப்பில் திடுக்கிட்டு விழித்தாள்.

“நீங்க இங்க” என்று கேட்கவிருந்தவள் அவன் வெள்ளை கோட்டையும் கழுத்தில் போட்டிருந்த ஸ்டெதஸ்கோப்பையும் பார்த்து புரிந்தவளாக “எங்க அம்மாவ தான் அட்மிட் பண்ணி இருக்கோம் டாக்டர்” என்றாள் கரகரப்பான குரலில்.

“ஓ.. அப்படியா?” என்றவன்  கையில் இருந்த கேஸ் பையிலை திறந்து பார்க்க அப்போதுதான் புரிந்தது  தான் பார்க்க வந்திருக்கும் நபர் அவளுடைய தாய் என்று  வேகமாக கேஸ் பையிலை ஆராய்ந்தவன் வருத்தமாக “நான் அவங்கள பார்த்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றான். 

டாக்டர் கிருஷ்ணா அது தான் அவன் அடையாளம் கடந்த ஆறு வருடங்களாக சிறந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் என்று பெயர் பெற்று  இருந்தான். இன்று பிருந்தாவின் தாய் உடல் நிலை மோசமாகவும் மருத்துவமனை நிர்வாகம் அவனை உடனடியாக வரவழைத்து இருந்தது.

கிருஷ்ணா  வெகுநேரம் பேசாமல் அமர்ந்திருப்பதை பார்த்த பிருந்தாவிற்கு இதயம் வேகமாக துடித்தது. பரிசோதனைக்குப் பின் பேசவேண்டி பிருந்தவை அறைக்கு வரச் சொல்லியவன் அவளிடம் விஷயத்தை எப்படி கூறுவது என்ற சிந்தனையில் இருந்தான்.

“டாக்டர் …”

சிந்தனையில் இருந்தவனை கலைத்தது அவள் குரல் “ஆஹ்… சொல்லுங்க பிருந்தா?” என்றான் அவள் முகம் பார்த்து.

“நீங்க தான் சொல்லனும்… அம்மாவுக்கு என்ன?” என்றாள் திக்கி திணறியவளாக

“உங்க கூட வேற யாரும் வரலையா பிருந்தா?” என்றான் அவளிடம் எப்படி சொல்வது என தயக்கமாக

“எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்டயே சொல்லுங்க டாக்டர்… எங்க அம்மாவுக்கு என்ன ஆச்சி?” என்றாள் படப்படப்புடன் 

ஆழ்ந்த பெருமூச்செடுத்து தன்னை நிலைபடுத்தியவன் “ஓகே…  பிருந்தா அவங்களுக்கு இதயத்துல போற வால்வுல தான் பிரச்சனை….  அதை உடனடியா ஆப்ரேட் செய்து சரி பண்ணியாகனும்….  இல்ல அவங்க உயிருக்கே ஆபத்தாகிடும் இப்பவே மூச்சி விட ரொம்ப சிரமப்படுறாங்க… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆப்ரேஷன் பண்ணியாகனும்”  என்றான் வருத்தமாக.

கேட்டவளுக்கோ பூலோகமே காலடியில் இருந்து நழுவியதை போல இருந்தது. கதறி அழக்கூட தெம்பில்லாமல் அமர்ந்திருந்தவளுக்கு கண்களில் மட்டும் கண்ணீர் நிற்கவே இல்லை… 

அவள் தவிப்பையும் கண்ணீரையும்  கண்டவனுக்கு வருத்தமாகவும் கவலையாகவும்  இருந்தது.  “பிருந்தா ஸ்டே ஸ்ட்ராங்… அம்மாவை  சரிபண்ணிடலம்… நீங்க அழாதிங்க… கண்ட்ரோல் யுவர் செல்ப்”  என்று அவளுக்கு தைரியம் கூறினான். 

…..

“விஷ்ணு நான் கனகு மாமாகிட்ட கடனா பணம் கிடைக்கும்மான்னு கேட்டுட்டு வறேன்…  நீ அம்மாக் கூட இருந்து பாத்துக்கோ…  அப்பா உன் கூடவே இருக்கட்டும்….” என்றவள் மருத்துவமனையில் இருந்து கனகுவின் வீட்டிற்கு சென்றாள்..

“நீ கேக்குறது பத்து லட்சம்…   பெரிய தொகையாச்சேம்மா இப்போ என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே… ஒன்னு செய் உன் வீடு இல்ல நிலத்தோட பத்திரத்தை கொண்டா… நம்ம கணபதி அண்ணாச்சிக்கிட்ட  அடமானமா வச்சி கேட்டுப் பாக்கலாம்…. ஒரு இடத்துல இல்லன்னா என்ன ரெண்டு மூனு இடத்துல விசாரிப்போம்மா தப்பில்ல” என்றார் கனகு..

“சரி மாமா…  இதோ நான் போய் நில பத்திரம் எடுத்துட்டு வர்றேன் நீங்க கொஞ்சம் ரெடியா இருங்க” என்றவள் அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றாள்.