அவ(ன்)ள் 18
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
விஷ்ணு தகவல் சொல்லிய இரண்டு மணி நேரத்தில் வாசனும் பர்வதமும் அடித்து பிடித்து தினேஷை காண மருத்துவமனைக்கு ஓடோடி வந்திருந்தனர்.
ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்குள் நுழைந்த பர்வதம் “அய்யோ… தினேசு… ஏண்டா இப்படி என் தலையில இடியை தூக்கி போட்ட?!…” என்று அழுது புலம்பியபடி மகனை தேடிவர வாசனும் பதட்டத்துடன் அவர் பின்னேயே வந்தார்.
தங்களை நோக்கி வரும் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்ட பிருந்தா இரத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட அசதியுடனே கையை பிடித்தபடி எழுந்தவள் “விஷ்ணு, பெரியப்பா வர்றாங்க” என்று தம்பியிடம் கூறிவிட்டு பர்வதத்தை காண பிடிக்காமல் அறை வாயிலிருந்து சற்று ஒதுங்கி நின்றாள்.
பிருந்தாவின் அருகில் பரபரப்புடன் வந்த வாசனோ ” பிருந்தா… தினேஷ் எப்படி இருக்கான் மா.. டாக்டர் என்ன சொன்னாங்க… அவனுக்கு ஒன்னுமில்லையே ” என்றார் பதட்டத்துடன்
அவரின் படபடப்பை கண்டு மனம் உறுகிய பிருந்தா ” பெரியப்பா… பயப்படாதிங்க… தினேஷ் நல்லா இருக்கான்… அவனுக்கு ஒன்னுமில்ல…. அதிகம் ரத்தம் போனதுனால கொஞ்சம் மயக்கத்துல இருக்கான் அவ்வளவுதான்… ” என்று சமாதானம் கூறி அவரின் பதட்டத்தை குறைக்க முயன்றாள்..
மகனுக்கு ஒன்னுமில்லை என்று அறியவும் சற்று ஆஸ்வாசமாகிய வாசன் மனைவியின் கடுஞ் சொற்களால் பிருந்தா காயப்பட்டாலும் மகனுக்கு செய்த உதவியை நினைத்து கலங்கியவர்
“உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல டா… இன்னேரம் உன் இடத்துலே வேற ஒருத்தர் இருந்தா இவ பண்ண வேலைக்கு எனக்கு என்னன்னு போயிருப்பங்க… நீ இவனை ஹஸ்பிட்டல் வரை கொண்டு வந்து சேர்த்திருக்க… இந்த நன்றியை மறக்க மாட்டேன் டா…” என்று குரல் தழுதழுக்க பிருந்தாவின் கரங்களை பற்றி நன்றியை கூறிட அவள்கரங்களில் இருந்த பிளாஸ்திரியை பார்த்தவர் “என்னம்மா… என்ன ஆச்சி உனக்கு?” என்றார் சற்று அதிர்ந்தவராக
“அது பெரியப்பா” என்று தயங்கி கையை பின்னுக்கு இழுக்க அருகில் நின்றிருந்த விஷ்ணு “ஏன் கா மறைக்குற?” என்று தன் அக்காவை கடிந்தவன் “அக்கா தான், பெரியப்பா தினேஷிக்கு பிளட் கொடுத்தாங்க” என்றான் பட்டென
பிருந்தாவை வியப்பாக பார்த்த வாசன் மனைவியை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தார்.
“பாருடி… நல்லா பாரு… நீ பாம்பு மாதிரி இந்த பொண்ணை கொத்தினாலும் உன் பையனை காப்பத்தி இங்க சேர்த்தது இந்த பொண்ணு தான்… ரத்தம் கொடுத்தது இந்த பொண்ணு தான்… அது இல்லன்னா உன் புள்ள இன்னைக்கு உசிரோட இல்லை…”
என்றதும் மகன் இருக்கும் நிலையின் நிதர்சனம் உறைக்க பிருந்தாவின் முகம் பார்க்க கூட கூனிகுறுகி போனார் பர்வதம்.
“உன்னை போலவே விஷம் மாதிரியே, உன் புள்ளயையும் வளர்த்து வச்சிருக்க… அந்த தருதலை என்னத்த பண்ணி தொலைச்சானோ தெரியல கையை அறுத்துக்கிட்டு படுத்துக் கெடக்கான்… இந்த பொண்ணுக்கு நீ செய்த பாவம் தான் உன் புள்ள தலையில வந்து விடிஞ்சிருக்கு…” என்று கணவரின் சுடுசொல் அவரை சாட்டையால் அடித்தது போன்று சுரீர் என்ற உணர்வை கொடுக்க அங்கு நிற்கவே முடியாது குற்ற உண்ரவுடன் தலை கவிழ்ந்திருந்தவர் அவளிடம் மன்னிப்பை கூட யாசிக்க அருகதையற்றவராக நின்றிருந்தார்.
“விடுங்க பெரியப்பா…” என்று பிருந்தா அவரை தடுத்தாலும் “நீ சும்மா இருடா… இவளுக்கெல்லாம் நல்ல புத்தியே வராது இப்படியாவது கொஞ்சம் தெளியட்டும்…. இவளாள இன்னும் என்னென்ன பார்க்க போறேனோ!!” என்று வாசன் சலித்தபடி பேசும் போதே, அங்கு வந்த கிருஷ்ணாவை கண்டார்.
பிருந்தாவை நிச்சயம் செய்யப் போகும் மாப்பிள்ளை என்று அறிந்த பின்னர் மனைவியின் குளறுபடிகளால் அவனிடம் பேச தயக்கம் வர பர்வதத்தை அழைத்துத்கொண்டு அமைதியாக தினேஷின் அறைக்குள் நுழைந்தார் வாசன்.
கிருஷ்ணா வந்ததும் அவன் அருகில் வந்த விஷ்ணு “மாம்ஸ் இங்க தானே இருந்திங்க!.. அதுக்குள்ள எங்க போயிட்டு வர்றிங்க?!…” என்றான் கேள்வியாய்.
“இங்கதான்டா பக்கத்துல போயிருந்தேன்… முதல்ல இதை பிடி” என்று அவன் கரத்தில் ஒரு பழரச கப்பை திணித்தவன் “இந்தா இதை உங்க அக்காகிட்ட கொடு” என்று மற்றொரு கப்பையும் அவனிடம் நீட்டினான்.
அவனை ஆச்சர்யமாக பார்த்த விஷ்ணு “ஏன்?? நீங்களே கொடுக்கறது…. இதுக்கு எதுக்கு தூது” என்று நக்கலாக கேட்கவும் “டேய்… நீயே கொடு டா” என்றான் கிருஷ்ணா அழுத்தமாக
“அதுசரி” என்ற விஷ்ணு அவன் கரங்களில் இருந்த மூன்று ஸ்டாராவை பார்க்கவும் “ஆமா ரெண்டு ஜூஸூக்கு, எதுக்கு மூனு ஸ்டாரா வாங்கியிருக்கிங்க?” என்றான் சந்தேகமாக
“அதுவா… அது ஒன் ப பை டூ டா மச்சா… என் பெட்டர் ஆப்பும் நானும் பாதி பாதி ஜூஸ் குடிக்க போறோம்… என்ன பிருந்தா எனக்கு பாதி ஜூஸ் தரமாட்டியா?!” என்றவனின் கண்களில் குறும்பு கூத்தாட இதழ்கள் குறுநகையில் மிளிர்ந்தது
கிருஷ்ணாவின் பேச்சில் பேந்த பேந்த விழித்த பிருந்தாவின் மனம் மத்தளம் வாசித்தது… ஏதே.. என்று அவரை அரண்ட பார்வை பார்த்தவள் விஷ்ணுவிடமிருந்து வாங்கிய ஜூஸை குடிக்காமல் கைகளிலேயே வைத்திருந்தாள்.
“ஹலோ மாம்ஸ் இது ஹாஸ்பிட்டலா? ரெஸ்ட்டாரண்டா?? ஒன் பை டூன்னு சீன் எல்லாம் சொல்றிங்க… பாவம் மாம்ஸ், நான் சின்ன பையன் இப்போ இங்க சீன் மாறிடாதுல” என்று விஷ்ணு பாவம் போல கிருஷ்ணாவை கேட்கவும் தம்பியையும் மனதில் சேர்த்து வறுத்தவள் வெளியே சொல்ல முடியாமல் முகம் கடுகடுக்க நின்றிருந்தாள்.
“அடிங்க… யாரு?… நீ சின்ன பையன்…” என்று அவனை வாரிய கிருஷ்ணா அவளை பார்த்து விஷ்ணு அறியாமல் கண்ணடித்து
“டேய் சீக்கிரம் அவளை குடிச்சிட்டு கொடுக்க சொல்லுடா… இல்லனா என்கிட்ட எக்ஸ்ரா ஸ்ட்ரா இருக்கு நானே வந்துடுவேன்” என ஸ்ட்ராவை அவள் முன் ஆட்டிக்காட்டவும் அதில் பதறிய பிருந்தா
சட்டென “ஹேய் விஷ்ணு இந்தாடா இதை அவரையே குடிக்க சொல்லு” என்று அவன் முன் ஜூஸை கடுப்பாக நீட்டினாள்.
அவள் முனுமுனுக்கும் இதழையும் ஜிவுஜிவுக்கும் முகத்தையும் கண்டு “அட இங்க பாருடா கோவத்தை!” என்று விஷ்ணுவின் தோள்மீது கரத்தை போட்டு “அவளையே குடிக்க சொல்லுடா” என்றவன் அவளை பார்த்தபடியே தான் மறைத்து வைத்த இன்னொரு ஜீஸை பிருந்தாவின் முன் குடிக்கவும் கிருஷ்ணாவை தீயாய் முறைத்தவள் முகத்தை வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்
“ஒ… எல்லாம் ஏற்பாடோட தான் வந்திருக்கிங்க… ம் என்னை வைச்சி காமெடி பண்ணி நீங்க ரெண்டு பேரும் உங்க லவ்வை டெவலப் பண்ணிக்கிறிங்க … இதெல்லாம் நல்லதுக்கில்ல மாம்ஸ்…” என்று விஷ்ணு கிருஷ்ணாவை விளையாட்டாய் மிரட்டிட அதில் சிரித்தவன் விளையாட்டை கைவிட்டவனாய்.
“ஓகே.. ஓகே.. ஜோக்ஸ் அப்பார்ட்… இப்போ நீங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு கிளம்புங்க… ரொம்ப நேரமாகிடுச்சி… அவ முகம் வேற டல்லடிக்குலு… வீட்ல போய் ரெஸ்ட் எடுக்கட்டும் … இங்க நான் பாத்துக்குறேன்” என்று கிருஷ்ணா பிருந்தாவிற்காக கூறியதும் தவிப்பாய் விஷ்ணுவின் முகம் பார்த்தாள் பிருந்தா.
அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் “இப்போ என்னடா?” என்று கிருஷ்ணா கேள்வியாய் இருவரையும் பார்த்தான்
“இல்ல மாம்ஸ்… தினேஷ் அம்மா ஒரு மாதிரி உங்களுக்கே தெரியும்… அதான், உங்கள ஏதாவது சொல்லிடு வாங்களோன்னு…” என்று விஷ்ணு தடுமாறிட
|ஹேய் விஷ்ணு, கூல் டா… ஆஸ்பிட்டலுக்கு வர்ற எல்லோருமே ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்.. நீ பிருந்தாவை பாத்து கூட்டிட்டு போ” என்று கூறியவன்
|பை ஏஞ்சல்.. ரெஸ்ட் எடு… டேக் கேர் மா…” என்றான். அவ்வளவு நேரம் பிருந்தாவை வம்பிழுத்தவன் அக்கறையாய் கூறியதும் கிருஷ்ணாவை திரும்பி பார்த்தபடியே வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்.
….
அறையினுள் சென்ற வாசனுக்கோ மகனிடம் கேள்விபட்ட விஷயங்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்து சென்றிருந்தது.
“என்னடா? என்ன சொல்ற??” என்று பர்வதம் பதறிட
“அப்பா… என்னை மன்னிச்சிடுங்கபா… ப்ளீஸ் எப்படியாவது என்னை காப்பத்துங்க பா… தப்பான பழக்க தோஷத்தால எடுத்துட்டு போன பணம் எல்லாத்தையும் டபுள் மணி டிரீபிள் மணின்னு ஆசை காட்டி கள்ள நோட்ல போட வைச்சிட்டாங்க.. இப்போ போலீஸ் எல்லாரையும் பிடிச்சிடுச்சிப்பா அந்த பயத்துல தான் நான் இப்படி பண்ணிட்டேன்” என்று தினேஷ் அழுகையுடன் சொல்ல
“அட படுபாவி… நீ நல்லா வருவன்னு தானேடா வாயை கட்டி வயித்தை கட்டி உனக்கு பணத்தை கொடுத்து அனுப்பினேன்… என் தலையில மண்ணை வாரி போட்டுட்டுட்டியேடா!!” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு பர்வதம் அழுதிட
கல்லாய் சமைந்த வாசனுக்கு உயிர் வர “போதுமா… அவனை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பார் உன்னோட எண்ணம்…” என்று மனைவியை கடுமையாக சாடியவர்
“உன்னை என்னால காப்பாத்த முடியாது தினேஷ் … போலீஸ்ல சரண்டர் ஆகிடு… நீ ஜெயிலுக்கு போய் செஞ்ச தப்புக்கு தண்டனைய அனுபவிச்சிட்டு ஒரு நல்ல மனுஷனா வா… உன் வாழ்க்கையில அடுத்து என் பண்ணனும்னு நான் சொல்றேன்… இனிமேலாவலு அப்பன் பேச்சை கேட்டு இரு… உனக்கும் தான்டி புருஷன் பேச்சை கேட்டு ஒழுங்கா நடக்குற வழிய பாரு…” என்று காட்டமாக கூறியவர் அடுத்து நடக்க வேண்டியவைகளை செயல்படுத்த தொடங்கினார்.
…..
காலத்தின் கட்டாயத்தில் நாட்களும் கரைந்து ஓடியிருந்தது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அவளை ஆச்சரியப்பட வைத்தான் கிருஷ்ணா..
நாள் பார்த்து நேரம் பார்த்து பிருந்தாவை நிச்சயம் செய்தனர் கிருஷ்ணாவின் வீட்டினர்… தினேஷின் தற்கொலை முயற்சிக்கு பின் பர்வதம் வெகுவாக அடங்கிவிட வாசனும் பரசுவும் கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். விஷ்ணுவும் அவ்வப்போது அவர்களுடனும், கிருஷ்ணாவுடனும் இணைந்து வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
மகேஷ்வரியின் உடல்நலனைக் கருதி கல்யாணத்திற்கு புடவை எடுப்பது முதல் தாலிக்கு தங்கம் கொடுப்பது வரை செண்பகமே அவளை தாங்கிக்கொள்ள கிருஷ்ணாவின் பார்வை அடிக்கடி அவளை தொட்டு மீண்டது..
இப்போது எல்லாம் தூக்கத்தை தொலைத்தவளாக வலம் வந்தாள் பிருந்தா. அவள் எடுக்க மாட்டாள் என்று தெரிந்தும் விடாது அனுப்பும் மேசேஜ்களும் போன் அழைப்புக்களும் நின்றபாடில்லை…
விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் கல்யாண மண்டபத்தில் தங்களது அறையில் கிரி மற்றும் சில நண்பர்களுடன் அரட்டையடித்தபடி இருந்தான் கிருஷ்ணா. கதவை தட்டி உள்ளே வந்த விஷ்ணு “மாம்ஸ் அக்கா உங்க கிட்ட ஏதோ பேசனுமாம்… மொட்டை மாடில வைட் பண்றாங்க” என்றதும்
“உங்க அக்கா கூப்பிடுறான்னாலே வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லா இரண்டு உருண்டை ஓடி தொண்டைய அடைக்குதுடா… இன்னைக்கு என்ன சொல்ல கூப்பிடுறான்னு தெரியலையே!?1” என்று அவனிடம் புலம்பிபடி கிருஷ்ணா மொட்டை மாடிக்கு செல்ல
பால்வண்ண நிலவை வெறித்தபடி நின்றிருந்தவளுக்கு இந்த நிமிடங்களை ரசிக்க முடியவில்லை… மனதில் ஏதோ குழப்பம்… இந்த கல்யாணம் தனக்கு தேவைதானா என்று மனதை உறுத்தியது…
“ஹாய் பொண்டாட்டி” என்று முகம்மாற புன்னகையுடன் அவள் முன்னாள் நின்றான் கிருஷ்ணா….
தயக்கமாக அவனை பார்த்தவள் “கிருஷ்ணா… நமக்குள்ள இந்த கல்யாணம் சரியா வரும்னு நினைக்கங்றிங்களா?” என்றாள் கண்களில் அலைப்புறுதலுடன்.
கிருஷ்ணாவிடம் பேசத்தான் வரச்சொன்னாள் ஆனால் இவ்வளவு சந்தோஷத்துடன் அவனை பார்க்கவும் சொல்ல வந்த வார்த்தைகளை சொல்ல முடியாமல் திக்கி திணறினாள்.
அவள் பதட்டமும் தவிப்பும் அவனையும் பாதிக்க அவள் கரங்களை பிரித்து தன் கைகளுக்குள் பத்திர படுத்திக் கொண்ட கிருஷ்ணாவிற்கு மனம் இளகினாலும்…சட்டென மூண்ட கோபத்தில்
“இன்னும் என்மேல நம்பிக்கை வரலியாடி உனக்கு??” என்று அவளை உரிமையுடன் கடிய எப்போதும் அவன் அதிரடியில் வாயடைத்து போவதுபோல் இன்றும் அவன் உரிமையான அழைப்பில் இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தாள்.
அவள் கருவண்டு விழிகளில் தன்னை தொலைத்தபடியே “உன்னால என்னை புருஷனா பாக்க முடியலன்னா பரவாயில்லை… பிரெண்டாவே பாரு… எனக்கு நோ ப்ராப்ளம்பா..… இப்போன்னு இல்ல எப்பவுமே நான் உனக்கு ஒரு நல்ல பிரெண்டு தான்…”
“ஆனா எனக்கு நீதான் பொண்டாட்டி.. அதுல எந்த மாற்றமும் இல்ல… உனக்கு எப்போ மாற்றம் வருதோ அப்போ நாம வாழ்க்கைய தொடங்கலாம்…” என்று அவள் முகம் பார்க்க அப்போதும் தெளிவில்லாமல் இருந்தவள்.
அவன் கரங்களிலிருந்து தன் கரத்தை உருவிக்கொண்டு சற்று பின்னால் நகர்ந்தாள்
“கல்யாணம் ஆனா என்னன்னென்ன நடக்கும்னு எங்களுக்கும் தெரியும்… நீங்க, பிரெண்டு அது இதுன்னு ஏதேதோ சொல்லி என்னை குழப்புறிங்க… இப்போ இப்படி சொல்லி அப்புறம்….” என்று அவள் மற்றதை கூற தயங்கவும் அவள் சொல்ல வரும் காரணங்களை புரிந்துக் கெண்டவனோ இதழில் குடிக்கொண்ட இளநகையுடனே அவளை பார்த்தான்
“வெல் நீ பயப்புடுற… ம்… ஓகே… உன் பயத்துக்கு ஒரு நல்ல மருந்து நானே கொடுக்கறேன்… உடனே சரியாகிடும்…” என்றவன் அவள் எதிர் பாராத நேரம் பட்டும் படாமலும் பிருந்தாவை அணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்து விலகி
“இதை விட என் காதலையும் என் மனசையும் எப்படி உனக்கு புரிய வைக்கறதுன்னு தெரியல… புரிஞ்சிக்கிற நிலமையிலும் இப்போ நீ இல்ல சோ… முழுசா நீ என் உரிமை ஆனாதுக்கு அப்புறம் புரியவைக்கிறேன்… நீ ஒன்னு கேட்டு என்னால இல்லன்னு சொல்ல முடியாது டா… ப்ளீஸ் மா…” என்று அவளை பேச விடாமல் வாயடைக்க வைத்தவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
நடந்த சம்பவத்தில் விழிகள் இரண்டும் தெறிக்க அதிர்வின் உச்சத்தில் இருந்தவளுக்கு விஷ்ணுவின் “அக்கா” என்ற அழைப்பு நிகழ் உலகிற்கு கொண்டு வந்தது… கனவில் இருந்து முழித்தவள் போல சுற்றும் முற்றும் பார்த்தவள் “அ… அவரு எங்கடா?” என்றாள்.
“போச்சிடா… அவரு கிளம்பினது கூட தெரியாம தான் நிக்குறியா?? மாம்ஸ் தான் மேல நீ தனியா நிக்குற கூட்டிட்டு போடான்னு சொல்லி அனுப்பினாரு… வாக்கா நேரம் ஆகிடுச்சி| என்றிட விஷ்ணுவிடம் எதையும் பேச முடியாது அவன் இழுத்த இழுப்பிற்கு கிழே சென்றாள்.
…
அடர்பச்சை நிற சாமுத்திரிகா பட்டில் கையளவு ஜரிகை வேய்ந்த புடவையில் மணமகள் அலங்கரத்துடன் தேவதையாய் அமர்ந்திருந்தாள் பிருந்தா.
அவளருகே இருந்த அஞ்சலி “ஹேய் பிந்து… ரொம்ப அழகா இருக்கடி.. இந்த கோலத்துல உன் ஆளு உன்னை பார்த்த, டோட்டலா பிளாட் ஆகிடுவான் போல” என்று அவளை வெட்கமுற செய்யும் வேலையில் ஈடுபட
“எனக்கு இது ஒன்னும் புதுசு இல்ல அஞ்சு… ஆனா பழசை…” என்று பேசிக்கொண்டே சென்றவளை “ஹேய் நிறுத்து” என அதட்டிய அஞ்சு
“என்ன பிந்து… இவ்வளவு தூரம் வந்துட்டு, இப்போ புதுசு பழசுன்னு பேக் அடிக்கிற மாதிரி பேசுற… அவன் உன் மேல உயிரையே வைச்சிருக்கான் டி…” என்று அவளை முறைத்த அஞ்சலி அவனை பற்றி ஆதி முதல் அந்தம் வரை அவளுக்கு தெரிந்ததை கூறிட அலையடித்து ஓய்ந்த பிருந்தாவின் மனம் அமைதியை தத்தெடுத்தது.
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ…” என்ற அய்யரின் குரலில் அறைக்குள் நுழைந்த செண்பகம் “வாம்மா” என்று அவளை அழைத்துத் கொண்டு மணவரையை நோக்கி சென்றார்.
பட்டுவேட்டி சட்டையில் அழகனாய் மணவரையில் அமர்த்திருத்த கிருஷ்ணாவின் கண்கள் அன்னநடையிட்டு அழகு சிலையாய் நடந்து வருபவளின் மேலேயே நிலைக்க, மாலையை சரிசெய்யும் சாக்கில் அருகில் வந்த கிரி “டேய் மச்சான் கண்ட்ரோல் டா” என்றிட பல்லை கடித்து அவனை விரட்டியவன் அவள் அருகில் அமரவும் அந்த நிமிடங்களை ரசித்தான்.
அய்யர் மத்திரம் ஓதிட மங்கள மேளம் முழங்க நாதஸ்வரம் ஓசை எழுப்ப முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்த்திசைக்க சபை நிறைந்தோரின் வாழ்த்துக்களுடன் அக்னியை சாட்சியாக வைத்து பிருந்தாவின் சங்குகழுத்தில் மங்கள நானை பூட்டி தன்னில் சரிபாதியாய் ஆக்கிக்கொண்டான் கிருஷ்ணா…
பரசுவின் கண்கள் நீரில் பளபளக்க கண்ணார மகளை கல்யாண கோலத்தில் கண்டவருக்கு உள்ளத்தை அழுத்திய பாரம் விலகியதை போல நிம்மதியாய் உணர்ந்தார்.
மகேஷ்வரியின் மனமோ தன் மகளின் வாழ்க்கையில் இனி நல்லதே நடக்க வேண்டும் என இறைவனை பிராதித்தது.. செண்பகமும் சுவாமிநாதனும் மனமார பிள்ளைகளை வாழ்த்தினர்.
அனைத்து திருமண சடங்குகளும் முடிந்த நிலையில் பெற்றவர்களிடம் வந்தவள் “அப்பா” என்று பரசுவை அழைத்தாள்.
நான்கைந்து ஆண்டுகளாக பேசாத மகள் தன்னிடம் பேசவும் சந்தோஷத்தில் ஆர்பரித்த பரசு “என்… என் பொண்ணு என்கிட்ட பேசிட்டா…” என்றபடி மகளின் கையை பிடித்து “என்னை மன்னிச்சிடுடா…” என்று குலுங்கி அழுத தகப்பனின் கண்ணீரை துடைத்தவள் “அழாதிங்கப்பா… நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் நீங்களும் மறந்துடுங்க…”என்று கூறி
தாயின் கரங்களை தந்தையிடம் ஒப்படைத்தவள்
“அம்மாவை நல்லா பாத்துக்குங்கப்பா” என்றாள். மகேஷ்வரிக்கும் சூழ்நிலையின் கணம் தாளாமல் கண்களில் நீர் நிறைய “அம்மா…நான் சந்தோஷமா தான், இந்த வீட்டை விட்டு போறேன்… நீங்களும் இனி என்னை நினைச்சி கவலைப்படாம அப்பாக் கூட பேசுங்க” என்றவள் விஷ்ணுவை கட்டிக்கொண்டு அழுதாள்.
அவனுக்கும் கண்கள் கலங்கியது அதை மறைத்தபடியே “என்னக்கா இங்க இருக்க மாம்ஸ் வீட்டுக்கே இத்தனை சீனா… என்ன ஹேண்சம் எங்க அக்கா அழுகுது நீங்க எதுவும் சொல்லலியா அவங்கிட்ட”
“நீ என்னடா சொன்ன?” என்று கிருஷ்ணா கேட்கவும்
“அதான், எங்க அக்கா கூடவே வீட்டோட மச்சானா வந்துடுறேன்னு சொல்லியிருந்தேனே… என்னையும் சோறு போட்டு வளர்த்து பத்தரமா பாத்துக்கோங்க”… என்றதும் அழுதுக் கொண்டிருந்தவர்களுக்கும் சிரிப்பு வந்துவிட
“எங்கியிருந்துடா கிளம்புறிங்க நீங்க…. இது என்ன டா ஒன்ப்ளஸ் ஒன் ஆஃப்ராடா… அக்காவை கட்டிக்கிட்டா தம்பி இலவசமா அனுப்ப…” என்று கிரி அலப்பறையை கூட்ட அங்கே சிரிப்பலை எழுந்தது
……
சன்ன கரையிட்ட காஞ்சி வெண்பட்டு பிருந்தாவின் உடலை தழுவியிருக்க கூந்தலில் சூடிய மல்லிகையின் வாசம் நாசியை தூளைத்தது. உடலை உறுத்தாத நகைகளை அணிந்து மெல்லிய ஒப்பனையில் அழுகு பதுமையாய் நின்றாள் பிருந்தா. கையில் இருந்த பால் சொம்பு அவளை பார்த்து பயம் காட்ட தடதடக்கும் இதயத்துடன் கிருஷ்ணாவின் அறை வாயிலின் முன் நின்றிருந்தாள்.
‘கதவை தட்டலாமா… வேண்டாமா..” என்ற யோசனையுடன் நின்றிருந்தவள் நடுங்கும் கரங்களுடன் கதவை திறந்தாள். அவள் எதிர்பார்த்து பயந்தது போல் அறையில் எந்த வித அலங்காரமும் இன்றி சாதரணமாக இருக்க ஆஸ்வாச பெருமூச்சுடன் அறையின் உள்ளே நுழைந்தாள்..
வெண்பட்டு புடவையில் அவன் அழைப்பது போலவே தேவதையாகவே வந்தவளின் வதனம் அவனை கிறங்க வைத்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், “அங்கயே ஏன் நின்னுட்டா உள்ள வா பிருந்தா” என்று சாதரணமாக அழைத்தான்
அறைக்குள் நுழைந்தவள் நடுங்கும் கரங்களுடன் பாலை அவனிடம் நீட்டிட பாலை வாங்கி டீபாயில் வைத்தவன் “இப்படி உட்காரு” என்றான்.
தறிகெட்டு ஓடும் இதயத்தை இழுத்து பிடித்துக்கொண்டு அவனை விட்டு சற்று தள்ளி பட்டும் படாமலும் மெத்தையில் அமர்ந்தவளுக்கு இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்ற படபடப்பில் வியர்க்க ஆரம்பிக்க அவள் கரங்கள் புடவை தலைப்பை கசக்கியது.
அவள் எண்ணவோட்டம் புரிந்தவன் “நான் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைக்கிறியா பிருந்தா…” என்றதும்
அவனை நிமிர்ந்து பார்க்கவே அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்க தலை குனிந்தபடியே “உங்களோட காதலுக்கும், அன்புக்கும் நான் தகுதியான இல்ல… கிருஷ்ணா” என்றவளின் குரல் உடைந்திருந்தது. அதை சொல்லவே அவ்வளவு கஷ்டப்பட்டாள்.
“சரி… உன் அகராதிப்படியே தகுதினா என்ன பிருந்தா… ?”
“அது… அது..” என்று தடுமாறியவள்… “என்னை கல்யாணம் பண்ணி உங்க வாழ்க்கைய வீணாக்கிட்டிங்க கிருஷ்ணா…” என்றாள் தவிப்பான குரலில்.
“வீணாப்போறத்துக்கு என் வாழ்க்கை என்ன காயா… பழமா…” என்று கிண்டலடித்தவனை சட்டென அவள் பார்க்க ஓகே ஓகே… நான் பேசல… நீ பேசு| என்று தன் வாய்மீது கை வைத்துக்கொள்ள
“இந்த ஜோக்கடிக்கரதை விட்டு கொஞ்சம் சீரியஸா பேசுங்க… உங்களுக்கு எல்லாமே விளையாட்டா இருக்கு…” என்று அவனை கொஞ்சம் அதட்டவும்.
“ஓகே மேடம்… பீ சீரியஸ் நான் எல்லாத்துலையும் தெளிவா இருக்கேன்.. நீதான் குழம்பி இருக்க… உன்னை எது குழப்புதுன்னு சொல்லு… அதுக்கான பதிலை நான் சொல்றேன்” என்று மார்பின் குறுக்கே கைகளை கட்டி அவளை தீர்கமாக பார்த்தான்.
அவன் பார்வையில் உள்ளுக்குள் குளிர் பரவினாலும் “என் குழப்பங்களை உங்களால தீர்க்க முடியாது கிருஷ்ணா” என்றாள் அவனை போலவே தெளிவாக
“பேசினாதானேம்மா தெளிவாகும்… நாம ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அன்ட் வைப் நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு…? பேசினா தீர்க்காத பிரச்சனையே இல்லையே” என்றதும்.
“எனக்கு அதுதான் பிரச்சனையே… இந்த உறவு இந்த வாழ்க்கை உங்களுக்கு புதுசா இருக்கலாம் இது எனக்கு பழசு… என்னால சட்டுன்னு மனச மாத்திக்க முடியல… கிருஷ்ணா… முடியல…” என்று உள்ளம் கொந்தளிக்க உணர்ச்சிவசத்தில் இறுக்க மூடிய விழிகளிலும் நீர் வழிய சத்தமிட்டு மேல் மூச்சி கீழ்மூச்சி வாங்கிட சிலையாய் நின்றாள்.
அவளருகே அமைதியாக வந்து நின்றவன்….”ரிலாக்ஸ் டா… ரிலாக்ஸ்…” என்று அவளை சாந்தப்படுத்தி “மெதுவா கண்ணை திற” என்றதும் இறுக்க மூடிய விழிகளை திறந்திட “குட்… இப்போ மூச்சை நல்லா இழுத்து விடு” என்று அவளை ஆஸ்வாசம் கொள்ள வைத்தவன் “ஒரே ஒரு நிமிஷம்… நான் சொல்றதை கவனி… கோவப்படாம இந்த ரூமை ஒரு முறை நல்ல பாரு” என்றான் வேண்டுகோளாக
அவன் குரலில் என்ன கண்டாளோ அவன் சொற்படியே அறையை சுற்றி பார்த்தவளிடம் “இது பார்த்தா பஸ்ட் நைட் ரூம் மாதிரியா தெரியது…” என்றான் கேள்வியாக
“இல்லை” என்று அவள் தலை ஆடியதும். “ஸீ.. பிருந்தா… இதை நீயா சொல்லனும்னு தான் வைட் பண்ணேன்… இந்த பிஸிக்கல் ரிலேஷனன்ஷிப்ல மட்டும் உனக்கு ஹஸ்பண்டா நான் இருக்க விரும்பல… உனக்கு எல்லாமுமா இருக்க ஆசைப்படுறேன்… உன் வலிக்கு நான் மருந்தா இருக்கனும்னு நினைக்கிறேன்… அது தப்பா….
“உன் கண்ணுல எனக்கான தவிப்பை பார்த்த பிறகுதான் என் காதலையே உன்கிட்ட சொன்னேன்… உனக்குள்ளும் அந்த காதல் இருக்கு அதை உணரும் காலம் வரும்…”
“உன் மனசு மாறுற வரை என்னால இதே காதலோடு காத்திருக்க முடியும்… நாமலும் மத்தவங்க மாதிரி குழந்தை குடும்பம்னு நார்மல் லைஃப் லீட் பண்ணுவோம்… அதுவரை என்னை நீ உன் பிரெண்டாவே நினைக்கலாம்மா தப்பில்ல…” என்று அவளின் தயக்கம் போக பேசியவன்
“ஹப்பா ரொம்ப பேசிட்டேன்…” என்று அவள் கொண்டு வந்த பாலை எடுத்து டம்பளரில் உற்றி அவளுக்கு பாதியை கொடுத்து தானும் பாதியை குடித்தான். அவள் குடிக்காமல் அவனையே பார்க்க பாலை “குடிச்சிட்டு நிம்மதியா படுத்து துங்குடா” என்றான் கனிவாய்…
அவன் பேச்சு அவளுக்கு இதம் கொடுக்க பாலை குடித்து விட்டு மெத்தையில் படுக்க கிருஷ்ணா அவள் அருகில் சற்று இடம் விட்டு தள்ளி படுத்தான்.
…..
கிருஷ்ணாவின் பேச்சுக்கள் அவளிடம் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தது… அதில் ஒன்று அந்த வீட்டில் இயல்பாய் வலம் வருவது.
ஆரம்பத்தில் ஒரு சில தயக்கங்கள் அவளை ஒதுங்க வைத்தாலும் செண்பகம் அவளை அனைத்திலும் ஈடுபட வைத்தார்… இந்த வீட்டில் தானும் ஒருத்தி என்ற உணர்வு வர உரிமையாக வலம் வர ஆரம்பித்தாள். நாதனும் மருமகளிடம் சாதாரணமாகவே பாசத்தை காண்பிக்க “அத்தை மாமா” என்று உரிமையுடன் அழைத்தாள். கிருஷ்ணாவிடம் மட்டும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது. கணவன் என்று கருத்தில் நிறைந்தாலும் மனம் ஏனோ அவனை தள்ளி நிறுத்தி, அவனுக்கு நியாயம் செய்யவில்லை என்று மனதின் ஓரம் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்… காலசக்கரத்தின் சுழற்சியில் நாட்கள் வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள் காலை வேளையில் மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா…
விஷ்ணுவிற்கு ஒருகுறுந்தகவலை அனுப்பியவன் கண்ணாடியில் தெரிந்த பிருந்தாவின் பிம்பத்தினை பார்த்தபடி தலை வாரிக்கொண்டிருந்தான் அவனுக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளுக்கு செல்போன் குறுந்தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்பவும் “பிந்துமா ஏதோ மெசேஜ் வந்தா மாதிரி இருக்கு பாத்தியா…?” என்று கேட்டான் கிருஷ்ணா .
“உங்களுக்கு கோட் எடுத்து வைச்சிட்டு அப்புறம் பாக்குறேங்க” என்றதும்
“நான் கோட் எடுத்துக்குறேன்… முதல்ல போனைபோய் பாரு” என்று அவளை அனுப்பியவன் அவளையே கவனித்துக் கொண்டிருந்தான்.
விஷ்ணு ஏதோ தகவலை அனுப்பி இருந்தான் அதை பார்த்தவளுக்கு கை காலெல்லாம் ஆட்டம் காண கண்களில் நீர் திரண்டு நிற்க முடியாது தள்ளாடினாள். அவளையே கவனித்திருந்தவன் அவள் தள்ளாடுவது தெரியவும் ஓடிச்சென்று தங்கிக் கொள்ள அச்சுழ்நிலையை எதிர்கொள்ள முடியாமல் அவனை இறுக்க அணைத்து அவன் மார்பினில் முகம் புதைத்து அழுதாள் பிருந்தா…
“என்னாடா” என்றான் கனிவாய் அவனிடமிருந்து பிரியாமலேயே கையை மட்டும் பின்பக்கம் இருந்த செல்போனை காட்டியவள் மேலும் அவனுள் புதைந்து அழுதிட அவள் தலையை ஆதுரமாக தடவிக் கொடுத்து”பாத்துட்டியா?” என்றதும் விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்து பிருந்தா “உ… உங்களுக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா?” என்றாள் அதிர்ச்சியுற்றவளாக.
“ம்… தெரியும்டா… உன்னை பத்தி தெரிஞ்ச அன்னைக்கே அந்த பொறுக்கிய பத்தியும் தெரிஞ்சிக்கிட்டேன்… என் பிரெண்ட் மும்பைலதான் S.P. யா இருக்கான் அவன்கிட்ட தான் இவனை பத்தி விசாரிக்க சொல்லி இருந்தேன்… அவனோட நேரம் இது மும்பைல என் பிரெண்ட் லீட் பண்ற கேஸா போயிடுச்சி”.
“பிரகாஷோட இருந்த பொண்ணு பெயர் சோனல் அவளுக்கு வேற ஒருத்தன் கூட அஃபேர் இருக்க போய் அதனால் அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏற்பட்ட சண்டையில் அவன் பெயர் எழுதி வைச்சிட்டு அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா… கேஸ் என் பிரெண்டு கிட்ட வந்துருக்கு அதான் எனக்கு அனுப்பினான்… நான் விஷ்ணுக்கு அனுப்பி உனக்கு பார்வர்ட் பண்ண சொன்னேன் எப்படியும் அவனுக்கு ஆயுள் தண்டனையாவது கிடைக்கும்” என்றான்.
அவனை அணைத்தபடியே கண்களில் வழிந்த நீருடன் கணவனை பார்க்க அவள் கண்ணீரை துடைத்து விட்ட கிருஷ்ணா “இது கடவுள் உனக்கு கொடுத்த நீதி பிருந்தா… எல்லோருக்கும் இது கிடைச்சிடாது… உனக்கு கிடைச்சிருக்கு மனசை அமைதியா வைச்சிக்கோ” என்றான் அவள் முதுகை வருடியபடி.
“எ…எனக்கு எதிலிருந்தோ விடுதலையான மாதிரி இருக்குங்க… இப்போ தான் நான் நானா இருக்கேன்… அவனுக்கு தண்டனைன்னு ஒன்னு நான் கொடுத்து இருந்தேன்னா இதிலிருந்து நான் எப்போவோ மீண்டு வந்திருப்பேன் போல…அதுதான் என் மனசை உறுத்திக்கட்டு இருந்திருக்குங்க…”
“அவனுக்கு தண்டனை கிடைச்சதும் தான் என்னை அழுத்திக்கிட்டு இருந்த ஏதோ ஒன்னு என்னை விட்டு விலகினா போல லேசா இருக்குங்க… என் மனசையும் என்னால உணர முடியுது” என்று தன் மனநிலையை அவன் மீது சாய்ந்தபடியே கூறினாள்.…
“எனக்கும் தோணுச்சி டா… உனக்கு இதுதான் பிரச்சனையா இருந்திருக்கும்னு… அதான் அவனை தேட சொல்லியிருந்தேன் இப்போ ஓகே வா இருக்கியா” என்றான். அவள் தலையின் தன் தாடையை பதித்து.
“ம்”என்றவள் நியாபகம் வந்தவளாக “ப்ராடு ப்ராடு நீங்களே இதை காமிச்சி இருக்கலாம்ல” என்று மூக்கை உறிந்தாள்.
“அப்போ இந்த மாதிரி ஒன்னு கிடைச்சி இருக்காதுல… இப்போ பாரு எனக்குள்ள நீ இருக்க…” என்று அவளை இறுக்கமாக அணைத்தபடி கிருஷ்ணா கூறவும்… கன்னங்கள் இரண்டும் சிவக்க நாணம் கொண்டு அவனிடமிருந்து விலகிட, அவள் கைபிடித்து இழுத்து தன் முகம் பார்க்க வைத்தவன் அவள் செந்நிற அதரங்களின் மேல் விரல்களை வைத்து வருடி மருத்துவ முத்தத்தை விடுத்து காதல் கணவனாக தன் முதல் இதழ் அச்சாரத்தை பதித்தான்..
…..
“என்னடா இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று சத்தமாக குரலை கொடுத்து வெளியே நின்று வாட்சை பார்த்திருந்தான் கிருஷ்ணா…
“ஒரு நிமிஷம் இருங்க… சும்மா குதிச்சிக்கிட்டே இருக்கிங்க…” என்று புடவை மடிப்பை எடுத்தவள் “சே முடியல” என்று புடவையை கட்டாமல் கட்டிலில் அமர்ந்து விட்டாள்.
“பிந்துமா” என்று அறைக்குள் நுழைந்தவள் அவள் அமரந்த நிலையை பார்த்து “என்னடா கிளம்பளையா?” என்றதும் அவனை பாவமாக பார்த்தவள் தன் மேடிட்டிருந்த ஆறு மாத வயிற்றை பிடித்தபடி எழுந்து “புடவை மடிப்பு வைக்க முடியல” என்றாள் பாவமாக.
அதில் வாய்விட்டு சிரித்தவன் “என் செல்ல குட்டிக்கு, நானே கட்டி விடுறேன்” என்று மடிப்புக்களை அழகாக வைத்து கட்டி விட கணவனின் கன்னம் வழித்து முத்தம் வைத்தாள்.
“இது அநியாயம் டி ஸ்ட்ரெய்டா லிப்புக்கு கிஸ் வைச்சா என்னவாம்… கையில் தொட்டு முத்தம் வைக்கிற” என்று கிருஷ்ணா கோபித்துக் கொண்டதும், அவன் கன்னத்தை திருப்பி முத்தம் வைக்க போனவள், சட்டென அவன் முகம் திருப்பவும் கணவனின் இதழுடன் தன் இதழை பதித்திருந்தாள்.
“ப்ராடு ப்ராடு” என்று அவன் நெஞ்சில் அடிக்கவும் அவள் கைகளை தடுத்தபடி இருந்த கிருஷ்ணாவிற்கு விஷ்ணுவிடமிருந்து போன் வந்தது…
“வந்துட்டே இருக்கேன் டா” என்று அவனிடம் கூறி போனை அணைத்தவன் “ஏஞ்சல் விஷ்ணு கால் பண்ணிட்டான் வாடி” என்றான் கெஞ்சலாக.
” பச்… என்று சலித்தபடி உங்களுக்கு நான் பெண்டாட்டியா இல்ல அவன் பொண்டாட்டியா எப்போ பார்த்தாலும் கொஞ்சிக்கிட்டே சுத்தறிங்க… உங்க ரெண்டு பேரோட அழிச்சாட்டியம் தாங்கல சாமி” என்று கடுப்பாக கூறினாலும் அவர்களின் பாசமும் அன்பும் பிடித்தே இருந்தது.
“நீ பார்க்கும் முன்னாடியே அவன் தான் டி என்னை பார்த்து சைட் அடிச்சது.. ஹேண்டசம்னு பேரு வச்சி ரசிச்சது…” என்று மனைவியை வம்பிழுத்தவன் அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணாவை முறைக்க முயன்று சட்டென சிரித்துவிட்டாள் பிருந்தா. இப்படியே இவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் எப்போதும் நிறைந்திருக்க நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்
நன்றி வணக்கம்.😍😍😍
கிருஷ்ணாவிற்கு பிருந்தா இன்றி அமையாது உலகு… பிருந்தாவிற்கு கிருஷ்ணா இன்றி அமையாது உலகு