அவ(ன்)ள் 16

பர்வதம் கூறியதை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற செண்பகம்  “எங்க பிள்ளைகளை நான் கேட்கறது இருக்கட்டும், இவ்வளவு உரிமையா இந்த பொண்ணை கேக்குறியே நீ யாரு?”… என்றார்  ஆற்றமையுடன் 

” நான்  அவளோட பெரியம்மா ” என்று பர்வதம் திமிராகவே பதிலளிக்க 

“ஆண்டி அவங்க அப்படித்தான் தேவையில்லாதது எல்லாம் பேசுவாங்க…  நீங்க மேல வாங்க…” என்று அங்கிருந்து செண்பகத்தை கிளப்ப முயன்றாள் பிருந்தா. 

அவளுக்கு  செண்பகத்தின் முன்பும் கிருஷ்ணாவின்‌ முன்பும் இப்படி நிற்கவைத்து கேள்வி கேட்கிறாரே இந்த பெரியம்மா என்று பர்வதத்தின் மீது ஆத்திரமாக வந்தது.  கிருஷ்ணாவின் முகம் பார்க்க கூட பிருந்தாவிற்கு கூசியது.

“நீ சும்மா இரு பிருந்தா… யாரவது ஒரு ஆள் இப்படி கேட்டாதான் கொஞ்சம் உரைக்கும் அப்போதான்‌ அடுத்த வீட்டு பொண்ணை  இப்படி பேசக்கூடாதுன்றது  புரியவரும் என்று காட்டமாக பேசியவர்

” பெத்த அம்மாவா இருந்தா கூட கேட்கலாம்… ஆனா நீ பெரிரிரியயயய அம்மா தானே உன் பேச்சை எல்லாம் கேட்க முடியாது… அப்படி கேக்குற ரகமும் நாங்க இல்ல” என்று பர்வதத்தை போன்றே திமிராக பதிலை கொடுத்த செண்பகம். பர்வதத்தை  அற்ப புழுவை பார்ப்பது போல பார்த்துவிட்டு “கிருஷ்ணா, நீ பிருந்தாவை கூட்டிட்டு வா… கண்டவங்களோட நமக்கென்ன பேச்சி” என்று முன்னால் நடந்தார்.

செண்பகத்தின் பேச்சிலும் பார்வையிலும் வெகுண்ட பர்வதம்‌ “ஏய் நில்லு… நில்லு… எங்க வந்து யாரை குத்தி பேசுற.. என்னடி இந்த அம்மாவை கூட்டிவந்து பேச விட்டு வேடிக்கை பாக்குறியா? முதல்ல ஒருத்தன் கூட ரோட்டுல நின்னு பேசி வீட்டு மானத்தை வாங்கின… இப்போ வேலைக்கு போறேன் வேலைக்குப் போறேன்னு, எவன் கூடவோ சுத்திக்கிட்டு இருக்க  இன்னைக்கு அவனை வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டியா? என்று கோவத்தில் கண்டமேனிக்கு வார்த்தைகள் எனும் அக்னி திராவகத்தை அவள் மேல் அள்ளி வீச. 

இந்த வார்த்தைகளை கேட்கவும் கிருஷ்ணா கோவத்தில் பல்லை கடித்தான். அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாமல் பிருந்தாவை விலக்கிவிட்டு கீழே இறங்க முற்பட 

“இன்னொரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது இந்த இடத்துல ஒரு கொலையே விழும்…. ஜாக்கிரதை… என் பொண்ணை பத்தி பேச நீ யாரு…?” என்று அந்த இடமே அதிர பரசுவின் குரல் கர்ஜனையாக ஒளித்தது.

பரசுவின் அதட்டல் அனைவருக்குமே  அதிர்ச்சி இந்த நான்கு வருடமாக யாரிடமும் சத்தமாக கூட பேசாத மனிதர் இவ்வளவு கோவத்துடனும் கர்ஜனையுடனும் சீறியது பர்வதத்தை கொஞ்சம் பின்னுக்கு தள்ளியிருந்தது.

பிருந்தாவின் நிலையை கேட்வும் வேண்டுமோ கண்களை சாசரை போன்று விரித்து அவரையே பார்த்தாள்… அவளிடம் பரசுவின் மனமாற்றத்தை  பற்றி விஷ்ணு கூறியிருந்தான் ஆனால் அதை நேரிலேயே கண்டவளுக்கு கண்களில் நீர் வழிந்து இதயம் விம்மியது. 

கிருஷ்ணாவிற்கு சந்தோஷம் கரைபுரண்டு ஓடிட  அப்படி போடுங்க மாமா… செமையா  கலக்குறிங்க… என்று உள்ளுக்குள்ளேயே அவருக்கு ஒரு சபாஷை போட்டவன் பரசுவின் அதிரடியை ஆவலாக பார்த்தான்.

“என் பசங்களை பத்தி எனக்கு தெரியும்… எங்களுக்கே இல்லாத அக்கறையும் உரிமையும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது… இன்னொரு முறை என் பொண்ணை பத்தி தப்பா பேசினிங்க பேசுற வாய் இருக்காது ஜாக்கரதை… 

இதுவரை என்‌ அண்ணனுக்காக தான் பொறுத்தேன்  இனியும் அப்படி பொறுத்து போக மாட்டேன்… எனக்கு என் பொண்ணு முக்கியம் அதோட அவ வாழ்க்கை ரொம்ப முக்கியம்… 

உங்க பேச்சை கேட்டு  என்  பொண்ணோட வாழ்க்கைய நானே சீரழிச்சேன்… இன்னும் உங்க மனசு ஆறலையா… அவளை  என்ன செய்யனும்னு நினைச்சிட்டு இருக்கிங்க…”  என்று ஆத்திரத்துடன் கத்தியவர் “நீங்க உள்ள போங்கம்மா… தம்பி நீங்க பிருந்தாவை கூட்டிட்டு போங்க” என்று இருவரிடமும் கூறிட

“அய்யோ அய்யோ என்று வாயிலும் வயிற்றிலும்  அடித்துக் கொண்டவர் “இதை கேட்க யாருமே இல்லையா?… வீட்டு மானம் போகுதேன்னு நான் சொன்னா என்னையே யாருன்னு கேக்குறாங்களே!… இது அந்த கடவுளுக்கே அடுக்குமா?…” என்று அக்கம் பக்கத்தில் சத்தம் கேட்கும் படி பர்வதம் ஒப்பாரியை வைக்க.  மாத்திரையின் உதவியால் தூங்கி இருந்த வாசன் தூக்கம் கலைந்து  எழுந்து வெளியே வர 

அனைவரின் இருப்பை கண்டு என்னவோ  ஏதோ என்று பயந்தவர்

“என்னடி கத்தி ஊரை கூட்டிட்டு இருக்க?.. எதுக்கு இப்படி பண்ற?” என்று மனைவியை கேள்வி கேட்வும் பர்வதம் நடந்ததை சொல்ல “யாரை பார்த்துடி இந்த வார்த்தைய கேட்ட?” என்று இரண்டு கன்னங்களும் வீங்கும் அளவிற்கு செவிலே பிய்யும் அளவிற்கு பளார் என அறை விட்டார்.

கணவரின் அதிரடி செயலில் கன்னத்தில் கையை வைத்தபடியே அதிர்ச்சியில் சிலையாய் உறைந்தார் பர்வதம். இதை கண்ட செண்பகத்திற்கு இப்போதுதான் மனதே குளிர்ந்தது. பரசுவின் வார்த்தைகளில் வராத சந்தோஷம் வாசன் அடித்ததில் வந்தது அவருக்கு.

“ஒழுங்கு மரியாதையா வீட்டுல இருக்க முடிஞ்சா  இரு… இல்லையா பெட்டிய கட்டிக்கிட்டு வெளியே போடி ஒரு பொம்பளையா என்னைக்காவது அடுத்தவங்களுக்கு நல்லதை நினைச்சிருக்கியா?…

நீ உன் புள்ளைங்க உன் குடும்பம் அது மட்டும் தான் வாழ்க்கையா? என்னடி… என்னடி பாவம் பண்ணுச்சி அந்த அப்பாவி பொண்ணு…. அது வயித்தெறிச்சலை ஏன் இப்படி கொட்டிக்குற… நீ செய்ற பாவம் உன் புள்ளைங்க  தலையில விழும் டி பாவி… பாவி…”  என்று கழுத்தை பிடித்து நெறிக்க வந்தவர் சனியனே உன்னை கொன்னுட்டு நான் ஏன்டி ஜெயிலுக்கு போகனும்…  நீ போடி வெளியே…  என்று ஆத்திரத்தோடு வீட்டைவிட்டு வெளியே தள்ளிட இரண்டு அடி முன்னால் இருந்த சுவரில் மோதி தள்ளாடி சுவற்றை பிடித்து  நின்றார்.,

“இப்படியே போயிடு நீ தேவையே இல்லை…. குடும்பம் உடைஞ்சிடக் கூடாதேன்னு பார்த்தா  ஓவரா போகுதே உன் ஆட்டம்…” என்று பர்வதத்தை ஒரு பிடி பிடிக்க கணவரின் இந்த புது அவதாரத்தில் கண்கள் இரண்டும் தெறித்து விடும் அளவிற்கு விழித்தவருக்கு மனதிற்குள் கிலிபிடித்தது.

இதுவரை ஒரு வார்த்தை கூட தன்னை எதிர்த்து பேசாத கணவன்  இப்படி காதே கிழியும் அளவிற்கு செவிலில் அறைந்ததும் இல்லாமல் நாலு பேரு முன்னிலையில் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது அவரால் நம்பவே முடியவில்லை… அதே சமயம் அவமானமாகவும் உணர்ந்தார்.

அடித்ததில் காது ஒரு பக்கம் மந்தமானது போன்ற உணர்வு இருக்க வயது முதிர்ந்த காரணத்தால் கால்கள் வெடவெடத்தது. இதற்கு மேலும் வெளியில் நின்றால் வாசன் அப்படியே துரத்தி விட்டுவிடுவாரோ என்று அச்சம் வர மனதில் அவரை கருவியப்படியே சத்தமில்லாது வீட்டிற்குள் செல்ல முயன்றார் பர்வதம்.

உள்ளே செல்ல போன பர்வதத்தை “ஹேய் நில்லு… நான் சொன்னது எல்லாம் கேட்டுச்சா?” என்று வாசன்  அதட்டிட “கேட்டுச்சி” என்று சத்தமில்லாது கூறியவர் அனைவரின் பார்வையிலிருந்தும் தப்பிக்க வீட்டிற்குள் சென்று மறைந்தார்.

“பரசு நீ இவங்களை அழைச்சிட்டு உள்ள போ… இனி அவ எதுவும் பேசமாட்டா” என்ற வாசன் “என் பொண்டாட்டி பேசினதுக்கு நான் மன்னிப்பை கேட்டுக்குறேன் மா… தம்பி நீங்களும் மன்னிச்சிடுங்க… என்று இருவரிடமும் மன்னிப்பை வேண்டியவர்

“பிருந்தா  அவங்கள உள்ள கூட்டிட்டு போடா” என்று அனுசரனையாக தம்பி மகளிடம் கூறியவர் அவரது வீட்டிற்குள் செல்ல அனைவரும் பிருந்தாவின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

பேய்மழை அடித்து ஒய்ந்தது போல இருந்தது அனைவருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க அவர்களில் முதலில் சுதாரித்த செண்பகம்  சூழ்நிலையை தனதாக்கி கொண்டவர்,  

“என்ன எல்லாரும் இப்படி அமைதியா இருக்கிங்க?…  கிருஷ்ணா பிருந்தாவை இப்படி உட்கார வை… என்னம்மா இப்போ கால்வலி தேவலையா?”  என்று பிருந்தாவை விசாரிக்க

“ம்” என்பது போல் தலையாட்டியவள் “நீங்களும் உட்காருங்க ஆண்டி ” என்றாள் மரியாதை நிமித்தமாக அவளுக்கு வெளியே நடந்தது எதுவுமே நம்பமுடியாது கனவை போல் இருக்க, அந்த அதிர்விலேயே இருந்தாள்.  பிருந்தாவை அமரவைத்ததும்  அவள் பார்வை படும் தூரத்தில்  நின்றுக்கொண்டான் கிருஷ்ணா.

“இருக்கட்டும் மா… வந்ததுல இருந்து பாக்குறேன் அம்மாவை காணும்…” என்னும் போதே இவர்களின் பேச்சு சத்தத்தில் தூக்கத்திலிருந்து விழித்து அறையை விட்டு வெளியே வந்த மகேஷ்வரி புருவம் சுருக்கி அனைவரையும் கண்டார். 

மகேஷ்வரியை கண்ட செண்பகமோ பலநாள் பழக்கம் கொண்டவரை போல் “வாங்கம்மா… வாங்க… இப்படி உட்காருங்க… உடம்பெல்லாம் சவுரியமா இருக்கா…  நான் செண்பகம் இது என் பையன் கிருஷ்ணா… இவனை உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன்” என்று படபடவென்று தங்களை பற்றி புன்முறுவலோடு அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“கிருஷ்ணாவை பார்த்தும் கண்டுக்கொண்ட மகேஷ்வரி “தம்பியை மறக்க முடியுமா? இன்னைக்கு நான் உயிர் வாழ்றதே டாக்டர் தம்பியால் தானே… உட்காருங்க தம்பி… ” என நன்றியை  மலர்ச்சியோடு கூறிட.

“அப்போ எனக்கு  வேலை கம்மின்னு சொல்லுங்க”… என்றார் செண்பகம் புன்னகையோடு

“என்ன.. என்ன வேலைங்க.?” என்று மகேஷ்வரி புரியாது விசாரிக்க

|அதை சொல்லத்தானே இவ்வளவு தூரம் வந்தேன்… ஆமா எங்க உங்க வீட்டுக்காரர் இங்கதான இருந்தாரு!?” என்று வீட்டை சுற்றி தேடியவர் ஒரு ஓரமாக இவர்களின் பேச்சை கேட்டபடி அமர்ந்திருந்த பரசுவை பார்த்ததும்  

“அய்யா இப்படி வந்து உட்காருங்க… உங்க இரெண்டு போர்க்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்”. என்றார் செண்பகம்  தீவிர முகபாவத்துடன்

செண்பகம் கூப்பிடவும் சற்று தயக்கமாகவே மனைவியின் எதிரில் வந்து அமர்ந்தார் பரசு. மகேஷ்வரி அவரை கண்டும் காணாததை போல பார்வையை திருப்பிக்கொண்டு செண்பகத்தை பார்த்தார்.

“என்னடா இவங்களையே இப்போதானே பாக்குறோம் அவங்களை பத்தி எதுவுமே தெரியாதே… எடுத்தவுடனே இப்படி கேட்டுட்டாளேன்னு நினைக்காதிங்க…  என் மனசுல சரின்னுபட்டதை தான் கேக்குறேன்..” என்று பீடிகையுடன் ஆரம்பித்தவர் கிருஷ்ணாவை பார்க்க அவனும் சிரித்தபடியே  கண்களை மூடி தன் சம்மதத்தை தெரிவிக்க செண்பகம் பேச்சினை தொடர்ந்தார்.

“என் பெயர் செண்பகம் என்  வீட்டுகாரர் பெயர் சுவாமிநாதன் சொந்தமா கடை வச்சு வியாபாரம் பண்ணுறார்… இவன் டாக்டர் கிருஷ்ணா உங்களுக்கே தெரியும்… ஒரளவு வசதி வாய்ப்புக்கு குறையில்லை… எங்களுக்கு ஒரே பையன் தான்…” என்று சரசரவென தங்களை பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டே வந்தார். 

செண்பத்தின் பேச்சில் ஒன்றும் விளங்காமல் மகேஸ்வரியும் பரசுவும் அவரை பார்த்து விழிக்க  கைகளை பிசைந்தபடி கிருஷ்ணாவை வெட்டும் பார்வை பார்த்தாள் பிருந்தா. ஒரளவு செண்பகம் பேசவருவது புரிவது போல இருக்க எழுந்து உள்ளே செல்லவும் முடியாது அங்கு அமர்ந்திருக்கவும் முடியாது  தவித்துப் போனாள். 

அவளது முகபாவங்களை கண்ட காதல் கள்வனோ அன்னையை பேசவிட்டு அவளை ரசித்தபடி அமர்ந்திருந்தான்.  செண்பகத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் அவனை தீயாய் முறைத்தாள் கண்களால் காதல் மொழி பேசி அவளை சமாதானம் செய்ய, அதனை சந்திக்க முடியாமல்  பார்வையை தழைத்துக் கொண்டவளின்  செந்நிற அதரங்கள் அவனை தாளித்து கொட்டியது… ‘இப்படி செண்பகத்தை பேச விட்டு வேடிக்கை பாக்குறானே’ என்று இதயம் முரசு கொட்ட படபடக்கும் விழிகளுடன் அமர்ந்திருந்தவள் அவனுக்கு ஓவியமாக தெரிந்தாள்.

” நான் சுத்தி வளைச்சி பேசல நேரடியாவே கேக்குறேன் உங்க மக பிருந்தாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என் மருமகளாக ஆக்கிக்கனும்னு ஆசைப்படுறேன் இதுல என் மகனுக்கும் விருப்பம் தான். எங்க பையனுக்கு உங்க பொண்ணை கொடுக்க உங்களுக்கு சம்மதமா…” என்று பட்டென விஷயத்தை உடைத்தவர் அவர்களின் கலவரமான முகத்தை பார்த்தவுடன் கனிவு பிறக்க

மகேஷ்வரியின் கைகளை பற்றி உடனே சொல்லனும்னு அவசியம் இல்லை…  பிருந்தாவை கலந்து பேசி ஒரு நல்ல முடிவா சொல்லுங்க… ஆனா இதுக்கு மேலையும் இதை தள்ளி போடுறது எனக்கு நல்லதா படல… நாலு பேரு பேச நாம எதுக்கு இடம் கொடுக்கனும்…  அதான் சூட்டோட சூட்டா கேட்டுடேன் தப்பா எடுத்துக்காதிங்க” என்றார் அதே மலர்ந்த முகத்துடன்.

கணவன் மனைவி இருவருக்குமே இது ஆனந்த அதிர்ச்சிதான். மகளுக்கு நல்வாழ்க்கை அமையாதா என்று ஏங்கி இருந்தவர்களுக்கு இறைவன் கொடுத்த வரமாய் கிருஷ்ணா தெரிந்தாலும், மகளின் கடந்த காலம் கண்முன் தடையாய் தெரிய கைகளை பிசைந்தபடியே “அது.. வந்து…” என்று தயங்கிய மகேஷ்வரி “எங்க பொண்ணு பத்தி உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும்னு தெரியலை” என்றவருக்கு கலக்கத்தில் குரல் தழுதழுத்து கண்கள் கலங்கியது.

“இப்போ நீங்க ஏன் இவ்வளவு யோசிக்கிறிங்கன்னு தெரியுது…. எங்களுக்கு பிருந்தாவை பத்தி முழுசா தெரியும்…  நீங்க கவலையே படவேண்டாம்… அவளோட கடந்த காலம் தேவையில்லாத குப்பை அதையே ஏன் யோசிட்டு இருக்கிங்க…  உங்களுக்கு சம்மதமா உங்க பொண்ணுக்கு சம்மதமான்னு மட்டும் பேசிட்டு சொல்லுங்க… உங்க பதிலுக்காக காத்திக்கிட்டு இருக்கோம்…”  என்று உரிமையாக அவரை கடிந்து கொண்ட செண்பகம் அப்போ நான் கிளம்புறேன் என்று இருவரிடமும் விடை பெற்றவர் 

பிருந்தாவிடம் வர அவரை கண்டதும் பிருந்தா எழுந்துக்கொள்ள “பாத்து பாத்து நீ முதல்ல உட்காரு” என்று உரிமையுடன்  அதட்டி உட்கார வைத்து “பழைசையே நினைச்சி மனசுல போட்டு குழப்பிக்காதமா நல்லா யோசிச்சி ஒரு முடிவை சொல்லு… உன் முடிவுக்காக நான் வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்” என்று ஆதுரமாக அவள் தலைகோதியவர்… “நான் வறேன் மா காலை பாத்துக்க ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத” என்று கூறிவிட்டு மகனை பார்த்தார். 

பரசுவிடமும் மகேஷ்வரியிடமும் சொல்லிக்கொள்ள வந்தவன் “பிருந்தாவை  கம்பல் பண்ணாதிங்க அவளே யோசிக்கட்டும்… நல்ல முடிவை சொல்லுவான்னு தான் எதிர்ப்பாக்குறேன்… அப்போ நான் வறேன்” என்றவன் பிருந்தாவிடம் கண் அசைவால் விடைபெற்றான்.

அவர்கள் இருவரும் வெளியேறியதும் பரசுவிற்கு மனம் அடித்துக்கொண்டது எங்கே மகள் வேண்டாம் என சொல்லி விடுவாளோ என்று தானே முந்திக் கொண்டவர் பேசாமல் தவிர்த்த மனைவியிடம் “மகேசு நான் தான் அவசரப்பட்டு ஒரு முறை தப்பு பண்ணிட்டேன்… இதை சொல்லக்கூட எனக்கு தகுதியில்லைன்னு எனக்கு தெரியும்… ஆனா மனசு கேக்கல பையனை பாத்தாலும் நல்ல புள்ள மாதிரி தான் தெரியுது… நல்லா யோசித்து ஒரு முடிவை எடுங்க”  என்று கரகரப்பான குரலில் கூறி முடிவை அவர்கள் கையில் கொடுத்தவர்  தளர்ந்து போய் ஒரு இருக்கையில் அமர்ந்துக்கொண்டார். மகேஷ்வரி யாசிப்பாக பிருந்தாவை பார்க்க அன்னையின் பார்வையை தவிர்த்தவள் கால்வலியையும் பொருட்படுத்தாது  தனது அறைக்கு சென்று கதவை அடைத்தாள்.