அவ(ன்)ள் 13

அழாகய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே…

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்

அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்

காதலன் கை சிறை காணும் நேரம்

மீண்டும் ஒரே கருவறை கண்டதாலே

கண்ணில் ஈரம்…

என்ற பாடல் போனில் ஒலித்துக்கொண்டிருக்க கண்களை மூடி கேட்டுக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

“அடேய்… கேக்குறதுல கூட ஞாயம் வேண்டாமாடா பாட்டுல கூட காதலை சொல்லாத பாட்டுதான்  கேப்பியா?”  என்று அவனை வறுத்தபடி வந்தமர்ந்தான் கிரி.

கிரியின் குத்தல் பேச்சில் கடுப்பான கிருஷ்ணா  “டேய் காதலிச்சி கல்யாணம் பண்ண உனக்கே என் பிலீங்கஸ் பாத்தா கிண்டலா இருக்கா” என்று அருகில் இருந்த எழுதும் பேடை அவன் மேல் தூக்கி எறிந்தான்.

“நோ வன்முறை… மீ பாவம் நீ இப்போ எல்லாம் மாறிட்ட… அடிக்கிற திட்டுற… அடிக்கடி கோபப்படுற… என்று அவன் அடியிலிருந்து தப்பித்தபடி பேசியதும் 

அவன் செய்கையில் சிரித்துவிட்ட கிருஷ்ணா அதை அடக்கியபடி “அடேய் ஏன்டா படுத்துற… நானே வீட்டுக்கு போனா அம்மாவ ஏதாவது பேசிடுவேனோன்னு பயந்து இங்க வந்து இருக்கேன் என்னை தேடி கண்டு புடிச்சி வம்பு பண்றியா என்றான் தன்னையே நொந்தவனாக

நண்பனின் பேச்சில் விளையாட்டை கைவிட்ட கிரி அதை கேக்கத்தான் வந்தேன் கிருஷ்ணா…  நேத்தும் வீட்டுக்கு போகல இன்னைக்கும் போகல… நாளைக்கு நீ லண்டன் கிளம்பனும் அதுக்கும் எந்த ஸ்டெப்பும் எடுக்கல என்னதான் உன் மனசுல ஓடுது….  என்று கூறிடும் போதே கதவை திறக்கும் சத்தம் கேட்டு இருவரும் யார் என பார்த்தனர்.

அஞ்சலிதான்  கிருஷ்ணாவின் பெட்டியை தள்ளிக்  கொண்டு வந்திருந்தாள். அவளையும் அவள் தள்ளி வந்த பெட்டியையும் பார்த்து முறைத்த கிரி “கடங்காரி கடங்காரி எதுக்குடி நீ இதை எடுத்துட்டு வந்த” என்றான் கோபமாய்

“டேய்  மாங்கா … அவன் கேட்டான் நான் செய்தேன்… இதுக்கு அவனை திட்ட வேண்டியது தானே  ஏன்டா என்னை திட்டுற” என்றாள் அவளும் சலைக்காமல்

“அடியேய்… நீ செய்யலன்னு சொல்லி இருந்தா  அவன் வீட்டுக்கு போய் இருப்பான்டி அதை கெடுத்துட்டியே?” என்று  கடிந்துக் கொள்ள

“மூஞ்சி…. என்னமோ நான்தான் போவேன்னு அடம்பிடிச்ச மாதிரி பேசுற…அவன் எவ்வளவு சொன்னாலும் கேக்கலடா” என்று அவளும் பதிலுக்கு பதில் வாயடித்தாள்.

இருவர் சண்டையிலும் காதை பொத்தியவன் “ஸ்டாப் இட் ஸ்டாப் இட் இப்போ ரெண்டு பேரும் எதுக்கு சண்டைய போடுறிங்க…” என்று சண்டைக்கு காரணமான அவனே  அவர்களை விலக்கிவிட இருவரும் கிருஷ்ணாவை முறைத்தனர். 

“அய்யோ தெய்வங்களா தெரியாம உங்ககிட்ட ஹெல்ப் கேட்டுட்டேன் அதுக்கு ஏன் இப்படி முறைக்கிறிங்க” என்று இருவரையும் சமாதானம் செய்து மலை இறக்கியவன் 

“டேய்… நான்தான்டா அஞ்சலிக்கிட்ட என் திங்கஸை எடுத்துட்டு வர சொன்னேன் நாளைக்கு இயர்லி மார்னிங் பிளைட் அம்மாக்கு போன் பண்ணி எடுத்து வைக்க சொல்லி இருந்தேன்… வீட்டுல போன் பேசிட்டு தான் இருக்கேன் அங்க போனா அம்மா  ஏதாவது பேசுவாங்களோன்னு ஒரு பயம் இருக்குடா அதான் இங்கயே இருக்கேன்” என்றான் நண்பர்களிடம் தன்நிலையை மறைக்காது.

“நீ ஏண்டா பயப்புடுற…  காதலிக்கிற விஷயத்தை அம்மாகிட்டயாவது சொல்லேன்டா”

“என் விருப்பத்தையே இன்னும் பிருந்தாகிட்ட சொல்லாத போது அம்மாகிட்ட எப்படிடா சொல்ல முடியும்” என்றான் தலையை அழுந்த கோதி தன் உணர்வுகளை மறைத்தான்..

“அப்போ பிருந்தா கிட்டயாவது உண்மைய சொல்லு இதுக்கு ஒரு முடிவு தெரியாம ஆசைய மனசுல வளர்த்துக்கிட்டு அவதிப்பட வேண்டாம்  இல்லையா” என்றான் யோசனையாய்.

“எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியாது கிரி… இது லைப் ஏற்கனவே ஒரு வடு அவ மனசுல ஆழமா இருக்கும்போது அவ மனசை மாத்தாம என்னால லவ்வை சொல்ல முடியாது”. என்றான் மறுப்பாய்.

“கிர்ஷ் எனக்கு என்னமோ அவ மனசு மாறி இருப்பான்னு தோனுதுடா… இவன் சொல்றது இரிட்டேடா இருந்தாலும் அதுதானே நிதர்சனம்… அவளுக்கு ஒரு பிரெண்டா உன்னை பிடிச்சிருக்கு இது அடுத்த ஸ்டேஜ் போகுமான்னு இனி நீ டிரை பண்ணாதான் தெரியும் அவ இல்லன்னு சொல்லிட்டா  உனக்கும் கஷ்டம் தானேடா”  என்றிட

“எம்மா…. அறிவாளி இன்னைக்காவது நான் சொன்னதுக்கு சரின்னு சொன்னியே ரொம்ப நன்றிமா” என்று கிரி அஞ்சலியை  கிண்டலடிக்க 

“சீ போ எருமை… சிரீயஸா பேசும் போது காமெடி பண்ணிட்டு இருக்க” என்று அவனை சீறியவள் “நீ ஊருக்கு போறதை பிந்து கிட்ட சொல்லிட்டியா” என்றாள் கிருஷ்ணாவிடம் திரும்பி.

“மார்னிங் கால் பண்ணி சொன்னேன் அஞ்சு “என்றிட

“ஓகே கிருஷ்ணா… டேக் கேர் பை… அவர் கார்ல வைட் பண்றாரு நான் கிளம்புறேன்… சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடு” என்றவள் பை கீரிப்புள்ள என்று கிரியையும் சீண்டிவிட்டே செல்ல அடிங்க என்று அவன் எகிறும் முன்னே வெளியே பறந்துவிட,அவளை தொடர்ந்து கிரியும் வெளியேறி இருந்தான். கிருஷ்ணா அடுத்து என்ன என்ற யோசனையுடன் அமர்ந்தான்.

….

கிருஷ்ணா ஊருக்கு சென்று இரு நாட்கள் கடந்திருந்தது. பிருந்தாவின் செயல்களை கவனித்த வண்ணம் இருந்தான் விஷ்ணு… எப்போதும் போனும் கையுமாக திரிந்துக் கொண்டிருந்தவளை விசித்திரமாக பார்த்தான். 

“அக்கா இப்போ எல்லாம் நீ  போனை கீழ வைக்கவே மாட்டன்ற என்ன விஷயம்” என்றான் சற்று ஆர்வமாக

“விஷ்ணு, கிருஷ்ணா ஊருக்கு போய் இரெண்டு நாள் ஆகுது டா ஒரு போன் கூட பண்ணல… அட்லிஸ்ட் அங்க ரீச் ஆகிட்டேன்னு சொல்லி கூட ஒரு மெசஜ் பண்ணல…” என்றவள் மறுபடி போனை ஓபன் செய்து மேசேஜை பார்க்கலானாள்.

“அப்படியா கா!!… அவர் அங்க ஏதாவது வேலையா இருப்பாரு… அவர் போனது செமினார்க்காக அது சம்மந்தமா கொஞ்சம் பிஸியா இருந்து இருக்கலாம்” என்றான் சாதரணமாக

“பச்… ஆமாடா நான் தான் மறந்துட்டேன்… எப்பவும் பேசிக்கிட்டே இருப்பாரா இப்போ ஏதோ மிஸ் ஆகுற மாதிரி இருக்கு” என்ற முகத்தில் சோகம் குடிக்கொண்டது.

“நீ ஏன் கா அஞ்சலி அக்காவுக்கு போன் பண்ண கூடாது… கிருஷ்ணா சார் இல்லனா என்ன அஞ்சலி அக்கா பேசுவாங்களே” என்றான் அவளின் மனநிலையை கணிக்கவென்று.. 

அதுவும் சரிதான் என்று நினைத்தவள் அவளை அழைக்க இரண்டு முன்று அழைப்புகளுக்கு பிறகு அஞ்சலியே பிருந்தாவை அழைத்து பேசினாள்.

“சாரி பிந்து நான் அவர் கூட வெளியே போயிருந்தேனா, அதான் போன் அட்டன் பண்ண முடியல…. சாரி சாரி டி” என்று அத்தனை முறை சாரி கேட்டாள்.

“ஹேய் பைத்தியம் நான்தான்டி சாரி கேக்கனும்… உன் ஹஸ்பண்டு கூட இருக்கும் போது டிஸ்டார்ப் பண்ணிட்டேன்… சாரி நீ என்ஜாய் பண்ணு அஞ்சு” என்று போனை வைத்தவளின் மனது சங்கடமாக இருந்தது…

“கிருஷ்ணா மாதிரியே எல்லாரையும் நினைச்சிட்டேன்… சே…”  என்று போனை எடுத்து தலையில் தட்டிக்கொண்டாள். இதை பார்த்தும் பார்க்காத மாதிரியே அவள் அறையை கடந்து சென்ற விஷ்ணுவின்  இதழ்கள் சிரிப்பில் வளைந்தது.

இந்த ஒரு வாரத்தில் அவள் செய்த அலப்பறைகள் அதிகம் லன்சு பாக்ஸை மறப்பது… பர்ஸை மறப்பது… ஆபீஸ் பைலை மறந்து வைத்துவிட்டு தேடுவது என்று இருந்தவள் போனை மட்டும் மறக்காமல் கைகளிலேயே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வாள். அவன் அழைப்பிற்கு மிகவும் ஆவலாய் எதிர்ப்பார்த்தாள்.

…….

இந்த ஒரு வாரமும் கிருஷ்ணாவிற்கு அவளின் நினைவாகத்தான் இருந்தது. அலைபேசியை இயக்க அவன் கரங்கள் பரபரக்கும் மனதை அடக்கியபடி அதை உயிர்பிக்காமலே இருந்தான். பிருந்தாவிற்கு தன்னை உணர வைக்கும் சிறு முயற்சியாய் இதை கையாண்டான். லண்டனில் இருந்து திருச்சி வந்திருங்கிய அன்றே பிருந்தாவை விருந்தளிக்க ஒரு பெரிய ரெஸ்டாரன்டிற்கு அழைத்திருந்தான்.

இளம் பச்சை நிற டிசைனர் சேலையில் ஆங்காங்கே நட்சத்திர சிதறலாய் வெண் மணி முத்துக்கள் பதிந்த புடவையில் பாந்தமாய் வந்தவளை பார்த்தவன் கண்கள் விரிந்துக் கொண்டது.

கிருஷ்ணாவும் ஒன்றும் சாதரணமாய் வரவில்லை அவன் உயத்திற்கும் நிறத்திற்கும் ஏற்ற வகையில் உடையை உடுத்தி இருந்தான்.  அவன் அணிந்திருந்த உடை அவனை இன்னும் அழகனாக காட்டியது.

பிருந்தாவிற்காக காத்திருந்தவன்  “ஹாய் பிருந்தா” என்றிட புன்னகையுடன் “ஹாய் கிருஷ்ணா என்றவள் ரொம்ப நேரம் வெய்ட் பண்ணீங்களா?” என்றாள் சற்று சங்கடமான குரலில்.

“நோ.. நோ.. ஜஸ்ட் இப்போதான் வந்தேன்… நீ உள்ள வாம்மா” என்று அவளை அழைத்து சென்றான்.

ஒருவாரத்திற்கு பிறகு அவனிடமிருந்து வந்த மா என்று அழைப்பை கேட்டவளுக்கு அகமும் முகமும் பிரகாசமாகி விட “ம் போலாம்” என்றபடி அவனோடு நடந்தாள். 

“அஞ்சலியும் கிரியையும் கூப்பிட்டு இருக்கலாம் கிருஷ்ணா… இன்னும் நல்லா இருந்திருக்கும்… என்று அவள் மனதில் தோன்றியதை கூறிட.

“இது உனக்கான டீரீட் பிருந்தா….” என்று அவளிடம் கூறியவன் மனதில் மட்டும் ‘நீதான் என்னோட ஸ்பேஷல் கெஸ்ட்’ அதான் இந்த டீரீட் உனக்கு மட்டும் என்று நினைத்தபடி அவளோடு நடந்தவன் இருக்கையை காட்ட இருவரும் அமர்ந்தனர்.

“என்ன திடீர்னு டீரீட் எல்லாம்” என்றாள் அவனை பார்த்து

“லண்டன் ல நடந்த செமினார் சார்பா பெஸ்ட் ஹார்ட் சர்ஜன்னு அவர்ட் கொடுத்தாங்க பிருந்தா” என்று கூறியபடி இரு கைகளையும் டேபிள் மேல் வைத்தான்.

“ஓ.. வாவ் காங்ராட்ஸ் கிருஷ்ணா”  என்று சந்தோஷத்துடன் அவன் கரங்களை பிடித்து வாழ்த்தியவள் “எனக்கு சொல்லவே இல்லையே என்று அவள் கோபித்து கொள்ள

“அவள் உரிமையான கோவம் அவனை பரவசமாக்கிட இதழில் உறைந்த புன்னகையுடனே “நானே உன்னை நேர்ல பாத்து சொல்லனும்னு வெய்ட் பண்ணேன் மா… அதான் அஞ்சலியை கூட சொல்ல வேண்டாம்னு சொன்னேன்”. என்றான் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில்

அதில் சமாதானம் ஆனவள் “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கிருஷ்ணா… நீங்க அவார்ட் வாங்கினது…. சொல்லி இருந்தா ஏதாவது கிப்ட் வாங்கி வந்து இருப்பேன்ல” என்றாள் முகத்தை சுருக்கி

அவள் முகம் சுளிப்பை கூட ‘சோ ஸீவீட்’ என்று மனதில் அவளை ரசித்தாலும் “நீ வந்ததே கிப்ட் தான்… நீ எப்படி இருக்க பிருந்தா… “என்றான் ஆழ்ந்த குரலில்

“உண்மைய சொல்லட்டுமா பொய் சொல்லட்டுமா கிருஷ்ணா…” என்று தலையை ஒரு பக்கம் சாய்த்து அழகாய் கேட்டாள்.

“இது என்ன கேள்வி ???. சரி உண்மையே சொல்லு என்னன்னு கேட்போம்” என்றான் சிரித்துக் கொண்டே

“ம்… அப்படின்னா நான் நல்லா இல்ல” என்றாள் பட்டென

“என்ன சொல்றமா.. ஏதாவது பிரச்சனையா” என்று அதிர்ச்சியில்  சற்று முன்னே வர

“பிரச்சனையா.. அதெல்லாம் ஒன்னுமில்ல…  நீங்க ஒன் வீக்கா கால் பண்ணவே இல்ல…  நான் எல்லாத்தையும் உங்ககிட்ட ஷேர் பண்ணி பண்ணி பழகிட்டேனா .. நீங்க போன் பண்ணலன்னதும் ஏதோ இழந்த மாதிரி, ரொம்ப லோவா பீல் பண்ணேன்” என்றாள் ஆதங்கமாக

அவன் கேட்ட வார்த்தைகளை அவனாலேயே நம்ப முடியவில்லை என் ஏஞ்சல் என்னை ரொம்ப தேடி இருக்காளா  என்று நினைக்கும் போதே அப்படி ஒரு ஆனந்தம் “நிஜமா என்னை நினைச்சியா பிருந்தா?” என்று வாய்விட்டு கேட்டுவிட

“ஹலோ டாக்டர் இதுல பொய் வேற சொல்றாங்களா?? அத விடுங்க இனி எங்க போனாலும் போன் பண்ணாம இருக்காதிங்க… அட்லீட்ஸ் ஒரு குட் மார்னிங் குட் நைட் மெசேஜ் ஆவது போடுங்க” என்றாள் கட்டளை போல

“தங்கள் சித்தமே என் பாக்கியம்”  என்று கிருஷ்ணா தலைகுனிந்து அதை ஏற்றிட

“பாக்கலாம் எவ்வளவு தூரம் இதை மெய்ண்டெய்ன் பண்றிங்கன்னு” என்றாள் நக்கலாக அதற்குள் பேரரை கூப்பிட்டு சாப்பிட ஆர்டர் செய்திருக்க அதனை சாப்பிட்டபடியே பேசிக்கொண்டிருந்தனர்.

பேச்சு வாக்கில் “கிருஷ்ணா அவார்டு எல்லாம்  வாங்கிட்டிங்க… அடுத்தது கல்யாணம் தானே… அன்னைக்கு அஞ்சலி கூட சொல்லிட்டு இருந்தாளே எப்போ குட் நீயூ சொல்ல போறிங்க” என்றாள்.

“நீ சரின்னு சொன்னா அடுத்து நம்ம கல்யாணம் தான்” என்றான் அவளை அழுத்தமாக பார்த்தபடி. சொல்லி விட்டான்… தன் காதலை அவளிடம் சொல்லியே விட்டான்.

ஆனால் கேட்ட பிருந்தாவிற்கு தான் கிருஷ்ணாவின் வார்த்தைகள் அதிர்ச்சியை கொடுத்தது. விழி விரித்து அதனை கிரகிக்க முடியாது சிலையாய் உறைந்தாள் பிருந்தா.