அவ(ன்)ள் 10

வெண் பஞ்சுபொதி மேகங்களுக்கு இடையே புகுந்த, பறவையை போல தன் இயந்திர  சிறகை விறித்து பறந்த விமானத்தில் தடதடக்கும் மனதுடன், மஞ்சள் தாலி சரடு மார்பில் உறவாட கண்கள் இரண்டும் கலங்கியபடி   பிரகாஷின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் பிருந்தா…

“பிருந்தா அர் யூ ஓகே…” என்ற பிரகாஷின் கேள்வியில் “ம்”  என்று தலை அசைத்தவள் கண்களை இறுக்க முடிக்கொண்டாள். பிராகஷிடம் பேசவோ ,கேட்கவோ அவளின் மனநிலை இல்லாததால்  தூங்குவது போல இருந்தாள்.

இரு நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் முடிந்திருக்க மும்பையை நோக்கி தம்பதியர் இருவரும் சென்றுக்கொண்டிருந்தனர்.  

அன்று பரசு கேட்ட வார்த்தைகள் இன்று வரை அவளை ஊசியாய் உறுத்திக் கொண்டிருக்க அந்நாளைய நிகழ்விற்கு சென்றாள் பிருந்தா.

தேர்வு முடிந்து மகிழ்வுடன் திரும்பியவளை “என்ன எல்லாம் பேசி முடிச்சிட்டு வந்துட்டியா? எப்போ இழுத்துக்கிட்டு ஓடப்போற?” என்ற  தந்தையின் இறுகிய குரலில் ஸ்தம்பித்து நின்றவள் அடுத்த நிமிடமே “என்னப்பா என்ன கேக்குறிங்க?” என்றாள் நீரில் பளபளத்த விழிகளோடு.

“என்ன  புரியாத மாதிரி நடிக்கிறியா?” என்று பற்களை நறநறத்தவர்  “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா கண்டவன் கூட ரோட்டுல ஜோடியா நின்னு பேசிட்டு வருவ… இதுதானா நீ படிச்சி கிழிச்ச லட்சணம்… ரோட்டுல ஆயிரம் பேர் முன்னாடி என் மானத்தை வாங்கிட்டியே ஓடுகாலி கழுதை” என்றதும்

“என்னங்க கொஞ்சம் நிதானமா கேளுங்க..” என்ற மகேஷ்வரியின் சொற்களோ இல்லை “அப்பா ப்ளீஸ் பா” என்ற விஷ்ணுவின் பேச்சோ எதுவும் காதில் வாங்காமல் மகளை வார்த்தைகளால் குத்தி கிழித்தார் பரசு.

இருவரின் உரத்த குரலில் தன்னிலை உணர்ந்து  “அப்பா” என்று அலறியவள் “என்ன நடந்ததுன்னே தெரியாம இப்படி கேக்குறிங்க??? அப்படியே பேசி இருந்தாலும் அதுல என்ன தப்பை கண்டுபிடிச்சிங்க” என்றாள் கோவமோ ஆதங்கமோ ஏதோ ஒன்று அவள் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.

“சீ வாய மூடு இது தப்பில்லன்னு என்கிட்டயே வாதாடுறியா??? உன்னை படிக்க அனுப்பினேன் பாரு அது என் தப்பு” என்று கையில் இருந்த புத்தகத்தை வாங்கி துர எரிந்தவர் ஹேங்கரில் தொங்கிய பெல்டை எடுத்து அவளை அடிக்க பாய்ந்தார். அதற்குள் விஷ்ணு அவளை பாதுகாப்பது போல நின்றுக் கொள்ளவும் அந்த அடி அவன் மேல்  விழுந்தது. 

“என்னடா அவளை பாதுக்காகறிங்களோ இனி இது வேலைக்கு ஆகாது… இப்பவே நாலு பேர் பாக்க நின்னு பேசுறவளுக்கு என்னை எதிர்த்து கல்யாணம் பண்ற துணிவு வராதுன்னு என்ன நிச்சயம்… இது ஆகுற காரியம் இல்ல அண்ணி சொன்ன வரனுக்கே கல்யாணம் முடிச்சி வச்சி என் மானம் மரியாதைய நான் தான் காப்பத்திக்கனும்… எதுலயும் உங்கள நம்பினா இப்போ மாதிரி அப்பவும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி ஓடவிட்டு  வேடிக்கை பாப்பிங்க” என்று தன்போக்கில் திட்டியவரை

முடிந்த மட்டும் முறைத்தவள் 

“நீங்க சொல்ற படியெல்லாம் என்னால வளைய முடியாது… என்னால கல்யாணமும் பண்ணிக்க முடியாது” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி

“பாத்தியாடி பாத்தியா எப்படி எதிர்த்து வாயாடுறா பாத்தியா எல்லாம் படிச்ச திமிறு கொழுப்பேடுத்து அலையுது…” என்று கொதித்தெழுந்தார்.

நம்ப வேண்டிய தந்தையே அடுத்தவரின் பேச்சை கேட்டு தவறாய் பேச ‘இப்போ என்னப்பா தப்பா சொல்லிட்டேன்… நீங்க பெத்த பொண்ணு என்னை நம்பல அடுத்தவங்க சொல்றத நம்பி என்னை நிக்க வைச்சி கேள்வி கேக்குறிங்க… தப்பு தப்பா முடிவு எடுக்குறிங்க” என்றவளின் கண்ணீர்  கன்னத்தை விட்டு இறங்கினாலும் கேட்க நினைத்ததை கேட்டு விட்டே நின்றாள்.

“பார்த்துட்டு சொன்னதை கேட்டா குதிக்கிற… சரி அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கறதை விடு நீ அவன் கூட பேசுனியா இல்லையா” என்றார் கடுமையான குரலில்

அது உண்மை எனும் பட்சத்தில்

“ஆமா” என்று தலையை ஆட்டி ஒப்புக்கொள்ளவும் “எவ்வளவு தைரியம் பாத்தியாடி” என்று மனைவியை முறைத்தவர் மீண்டும் கண்டமேனிக்கு கத்தி வீட்டை ரணகளமாக்கி வெளியே சென்றிருந்தார்.

மகளை ஓடி வந்து அணைத்துக் கொண்டு அழத்தான் முடிந்தது மகேஷ்வரியால் தந்தையை வெற்று பார்வை பார்த்த பிருந்தா  அதன் பிறகு அவருடன் பேச்சை வைத்துக்கொள்ள வில்லை எல்லாமே அவர் விருப்பப் படியே நடந்தது. எவ்வளவு முயன்றும் அவரை சமாதனப்படுத்த முடியவல்லை. பர்வதத்தின் தூரத்து உறவு முறையில் இருந்த பிரகாஷின் குடும்பத்தில் சம்மந்தம் பேசி ஒரே மாதத்தில் திருமணத்தையும் முடித்து இதோ அவன் வேலை செய்யும் மும்பை மாநகருக்கும் அனுப்பி வைத்தாகி விட்டது.

ஊருக்கு வந்த ஒரு வாரத்தில் எல்லாம் சுமுகமாக சென்றது போல தான் இருந்தது அவளுக்கு, பிரகாஷின் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருந்தது. 

இரவில் அவளை நாடுபவன் பகலில் அலுவலகம் சென்று விடுவான். வந்ததிலிருந்து எங்கும் அழைத்து சென்றதில்லை அவளும் கேட்டதில்லை… 

இப்படியே நாட்கள் நகர்ந்துக் கொண்டிருக்க இரண்டு வாரங்கள் கழித்து அலுவலக வேலை விஷயமாக வெளியூர் சென்று வருவதாக கூறினான் பிரகாஷ்.  

அவர்கள் இருந்தது அடுக்கு மாடி குடியிருப்பில்  பக்கத்தில் மராட்டியர்களும்  அதற்கு அடுத்து ஒரு தமிழ் குடும்பமும் இருந்தது ஏறக்குறைய 80  பிளாட்டுகளை உள்ளடக்கிய குடியிருப்பில் தான் அவள் இருந்தாள். ஒரளவு இருவருக்கும் தாராளமாக இருந்தது அவளது வீடு… 

காய்கறி கடை மளிகை கடை எல்லாம் பக்கத்திலேயே இருந்தது…  அதனால் தேவையானவற்றை அவ்வப்போது தானே வாங்கி வரவும் பழகிக் கொண்டாள். இங்கு வந்ததிலிருந்து  விஷ்ணு தான் தினமும் போன் செய்து பேசுவான் மகேஷ்வரி பேசும் போதெல்லாம் அழுகையாகவே இருந்தது பரசுவிடம் பேசுவதையே தவிர்த்து இருந்தாள். பிரகாஷின் வீட்டிலும் அவ்வளவாக ஒட்டுதல் இல்லாமல் தான் இருந்தது.

பிரகாஷ் வேலை விஷயமாக  ஊருக்கு  சென்ற‌ அடுத்த நாளே மிகவும் சோர்வாக உணர்ந்தவள் கோவிலுக்கு செல்லலாம் என்ற எண்ணம் தோன்ற குகூல் மேப் உதவியுடன் கோவில் செல்ல ஆட்டோவில் ஏறியவளுக்கு பிரகாஷினை போன்ற தோற்றத்தில் ஒருவன் ஒரு பெண்ணுடன் காரில் செல்வதை பார்த்து குழம்பினாள் உடனே கணவனுக்கு போன் செய்தாள்.

“ஹலோ என்னங்க”

“ஹலோ… சொல்லு பிருந்தா”

“ஏங்க.. எங்க இருக்கிங்க?”

“எங்க இருக்கிங்கன்னா…!! வேலைலதான் இது என்ன கேள்வி?” என்று சிடுசிடுக்க

“இல்ல… சும்மா தான்… எப்போ வருவிங்க?” என்றாள் உள்சென்ற குரலில்

உப் என்ற ஆயாசகாற்றை வெளியேற்றிய பிராகஷ் “பிருந்தா… நிறைய வேலை இருக்கு… முடிச்ச அடுத்த நாளே‌ அங்க இருப்பேன்.. இப்போ பிஸியா இருக்கேன் அப்புறம் பேசுறேன்” என்று உடனே போனை வைத்து விட்டான்.

மனக் குழப்பத்துடனே இறைவனை தரிசித்து வீடும் வந்து சேர்ந்து விட்டாள்.

ஒரு வாரம் கழித்து வந்தவன் ஓய்வை கூட எடுக்காமல் அன்று மதியமே அலுவலகம் சென்று விட தனிமையே அவளுக்கு கொடுமையாகி போனது. இந்த நேரத்தில் தான் பக்கத்து விட்டு தமிழ் பெண் சிநேகிதம் கிடைக்கவும் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.

நாட்கள் வேகமாக சென்றுக் கொண்டே இருந்தது அடிக்கடி கணவனின் வெளியூர் பயணமும்‌ அவளுக்கு ஒரு வித எரிச்சலை கொடுக்க ஒரு நாள்

 “என்ன நினைச்சிட்டு இருக்கிங்க… வீட்டுல இருக்கவே மாட்டேன்றிங்க… வறிங்க‌, சாப்பிடுறிங்க, தூங்குறிங்க கிளம்பி போயிடுறிங்க‌… எனக்கு வீட்டுல தனியா இருக்க மாதிரியே இருக்கு பைத்தியமே புடிக்குது” என்றாள் தலையை பிடித்துக்கொண்டு

“ஹேய் பிருந்தா…. என்னடா இது?” என்று அவளை அணைத்து சாந்தப்படுத்தியவன்  “வேலை மா அதனால தான்டா உன்னை விட்டுட்டு போறேன் ம் இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சா ஒரு வாரம் லீவ் கிடைக்கும் நாம் வெளியே எங்காவது போயிட்டு வரலாம்” என்று அவள் கன்னம் தட்டி சமாதனம் செய்தவன் அலுவலகம் கிளம்பி விட தனக்கு கிடைத்த பெண் தோழியான கீதாவிடம்  வெளியூர் செல்வதாக கூறினாள்.

“ஹேய் சூப்பர் பிருந்தா… ஆனா இந்த மாதிரி சேரி எல்லாம் வேண்டாம். சூடி போட்டுக்கோ செமையா இருக்கும்… உன் ஹைட்டுக்கு சூப்பரா இருக்கும்.  எப்படியும் ஹில்ஸ் ஸ்டேஷன் தான் கூட்டிட்டு போவாங்க… அதனால் நிறைய அதுக்கு சம்மந்தமான டிரெஸ் வாங்கிக்க என்ன பாக்குற கிளம்பு வாபோலாம்” என்று கிட்டதட்ட அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்‌ கீதா.

இவர்கள் மாலுக்கு சென்று உடைகளை தேர்வு செய்ய அன்று பார்த்தது போல இன்றும் தன் கணவனின் சாயலில் தூரத்தில் லிப்டில் இருந்து இறங்கும் ஒருவனை பார்க்கவும் கீதாவையும் விடுத்து அவனை நோக்கி விறு விறு வென சென்றிட அவள் நெருங்கும் முன் காரில் ஏறி சென்று விட்டனர் அந்த ஜோடி.

மாலுக்கு வெளியேவே ஆட்டோ ஒன்று அவள் அருகில் நின்று ஹிந்தியில் ஆட்டோ வேணுமா என்று கேட்கவும் சட்டென அதில் ஏறியவள் அந்த காரை பாலோவ் பண்ணுங்க என்று ஆங்கிலத்தில் கூறிட அது ஒரு பெரிய அலுவலத்தின் முன் நின்றது.

வாயில் காவலாளி யார் என்று ஹிந்தியில் கேட்கவும் “இப்போ போராறே ஒருத்தர் அவரு யாரு” என்றாள் பிருந்தா 

“பிரகாஷ் சார்” என்று அவன் பதிலை கூறவும் “அவரை பாக்கனும்” என்றாள்.

“உள்ளபோங்க  மேம்” என்று ஹிந்தியில் உரைத்த காவலாளி மீட்டும் அவனிடம் அமர்ந்து கொண்டான்.

தொண்டை வற்றியது போல  உணர்வில் சிக்கியவளுக்கு இதயம் தாறுமாறாக துடிக்க கைகள் இரண்டும் சில்லிட அவனை காண ரிசப்ஷனை நோக்கி சென்றாள் .

“யாரை பாக்கனும்” என்று அந்த ரிசப்னிஸ்ட் தூய ஆங்கிலத்தில் கேட்கவும்

அவன் பெயரை உச்சரித்தாள் பிருந்தா. “வைட் எ மினிட் மேம்” என்ற‌ பெண்மணி அவனை ஒருவர் பார்க்க வந்திருப்பதாக கூறினாள்.

அதே நேரம் அவனோடு சுற்றிக்கொண்டே இருந்த பெண் அங்கு வந்து “பாய்  தேஜூ” என்று கையை ஆட்டி விடைபெற அவளை பார்த்த பிருந்தா “இவங்க யார்‌” என்றாள் அந்த ரிசப்ஷன் பெண்ணிடம்

“ஷி இஸ் பிரகாஷ் சார் பியான்ஸி” என்றதும் இடியே இறங்கியதை போல் உணர்ந்தாள் கால்கள் துவள தடுமாறி நின்றவள் .  கதவை திறந்து அவன் வருவதை பார்த்து அங்கிருந்து சட்டென கிளம்பி விட்டாள்.

…..

பிரகாஷ் வீட்டிற்கு வரும்போதே வீடே இருளில் முழங்கியது போல இருட்டாய் இருந்தது. “பிருந்தா… பிருந்தா… எங்க போயிட்டா வீட்டுல லைட் கூட போடாம?” என்ற படி விளக்கை போட்டவன் ஹால் சோஃபாவில் தலை விரி கோலமாய் மூக்கு நுனி  சிவந்து அழுதழுது  வீங்கிய கண்களோடு அவள் அமர்ந்திருப்பதை பார்த்து ஒரு நிமிடம் திக்கென்று இருக்க பயந்து விட்டான் பிரகாஷ் .

“ஹேய் என்ன இது இப்படி உட்கார்ந்து இருக்க?” என்று அவள்‌ அருகில் அமரவும் சட்டென அவனை விட்டு எழுந்தவளின் கையை பிடித்து தன்னுடன் அமர வைக்க முயன்றவனின் கையை‌ உதறி‌ பளார் என்று ஒரு அறையை‌ அவன்‌ கன்னத்தில் வைத்தாள்.

அவள் அடிக்கவும் விக்கித்து நின்ற பிராகாஷ் “என்னடி… திமிரா… கட்டின புருஷனை கை நீட்டி அடிக்கிற” என்றான் கோபமாய்.

“உன்னை‌ எல்லாம் அடிக்க கூடாது டா  நடு ரோட்ல நிக்க வைச்சி சுடனும்” என்றாள் கண்கள் சிவுசிவுக்க

“என்னடி சொன்ன?” என்று அவள் தலை முடியை கொத்தாக பிடிக்கவும் அவனை தன்னை விட்டு தள்ளி விட்டவள் “எவ கூடவோ ஊரை சுத்திட்டு வந்து என் மேல கையை வைக்கிறியா?” என்றாள் ஆவேசமாக

எதிர்பாரத நேரத்தில் தள்ளியதால் சோபாவில் விழுந்தவன் சாவதனமாக எழுந்தான். தான் சட்டையின் சுருக்கங்களை நீவீவிட்டு “இதுதான் உன் பிரச்சனையா?” என்று கூலாக கேட்டவன்

“அவ கூட சுத்திட்டு வந்து உன் மேல கைய வைச்சதுக்கு குதிக்கிறியே.. அவ கூட ஒரு வருஷமா லீவிங்… லிவிங்  டு கெதர் ரிலேஷிப்லதான் இருக்கேன்… அப்படின்னா என்ன தெரியுமா .. அவ கூட தாலி கட்டாம படுத்து இருக்கேன்னு அர்த்தம்… அவளை தொட்ட கையாலதான் உன்னையும் தொட்டு அனுபவிச்சி இருக்கேன்…” என்று அவன் சாதாரணம் போல் சொன்னான். அவனுக்கு பிருந்தா அறைந்ததில் வந்த கோவம் அவளை காயப்படுத்த வேண்டும் என்று கூறினான். 

அவனை பார்க்கவே அவளுக்கு அறுவறுத்தது தன்னையே வெறுத்தாள் உடலெல்லாம் எரிவது போல தகித்தது. கோவம் இயலாமை அறுவெறுப்பு ஆதங்கம் எல்லாம் சேர்ந்து அவளை நிலைகுலைய வைக்க உக்கிரத்தின் உச்சியில் இருந்தவள் அருகில் இருந்த பீங்கான் ஜாடியை தூக்கி கீழே போட்டு உடைத்தாள்… டேபிள் மேல் இருந்த எல்லா பெருட்களையும் கீழே தள்ளினாள்… ஆத்திரம் மேலிட கத்தினாள்… அழுதாள் புரண்டாள்…  அவன் சட்டையை பற்றி “ஏன்டா என்னை கல்யாணம் பண்ண ஏன் பண்ண அவ தான் வேணும்னா அவகூடவே இருந்து இருக்க வேண்டியதுதானே என் வாழ்க்கைய ஏன்டா சூனியம் ஆக்கின” என்று அவன் மார்ப்பில் அடித்து அவனை தாக்கினாள். 

“ஹேய்… ஹேய்… நிறுத்துடி” என்று அவள் கரங்களை பிடித்து கன்னத்தில் பட்டென அறைந்து அவளை தள்ளி விட்டவன்  “என்னடி விட்டா ரொம்ப ஆட்டம் போடுற… என்னடி உன் பிரச்சனை.. என்னடி ஆமா நான் அவ கூட இருக்கேன் இதுல உனக்கென்னடி கஷ்டம்… இருக்க இடம், போட்டுக்க துணி, நல்ல சாப்பாடு… கூடவே சுகத்தையும் கொடுக்கறனே…அது பத்தாதாடி உனக்கு… என்னையே கேள்வி கேக்குற…” என்று திமிராக நின்றவன்

“நீ மட்டும் யோக்கியமா உன்னை சந்தேகப்பட்டு தானே அவசர அவசரமா என்ன ஏதுன்னு கூட சரியா விசாரிக்காம உன் எப்பன் உன்னை என் தலைல  கட்டினான்… நான்தான்டி சொல்லனும் உன் அப்பன்  என் வாழ்க்கைய கெடுத்துட்டான்னு” என்று சற்றும் மனித தன்மையே இல்லாமல் பேசிட 

அவன் வார்த்தைகள் ஒவ்வென்றும் அவள் இதயத்தை அம்பாய் துளைத்தது…

“பாத்தியாடா நீ …நான் இன்னொருத்தன் கூட போனதை பாத்தியாடா…” என்று ஆங்காரமாக கத்தியவள் அவன் கட்டிய தாலியை கழட்டி அவன் முகத்தில் எறிந்தாள்.

அதை கையிலெடுத்தவன் “ஹேய் என்னடி பண்ற?” என்று பதறி அருகில் வர அவனை கை நீட்டி தூர நிறுத்தியவள்  

“நீ கட்டின தாலிய தூக்கி போட்டதுக்கே பதறுது… இப்படி தானேடா எனக்கும் வலிச்சி இருக்கும் என்னை தூக்கி எறிஞ்சிட்டியேடா… தாலி கட்டுன காரணத்தால மட்டுமே நான் உனக்கு அடிமை இல்லை… இந்த தாலி என்னோட கழுத்துல இருக்குற வரைக்கும் தான் புருஷன்ற மரியாதை உனக்கு… இப்போ இந்த தாலிக்கும் மதிப்பு இல்லை உனக்கும்  மதிப்பில்லை…  தலைலயிருத்து உதிர்ற முடிக்கு சமானம் டா உன்கூட நான் வாழுற  வாழ்க்கை  இந்த ஜென்மத்துல என் கண் முன்னாடி வந்துடாதடா…” என்றவள் அந்த இரவே வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள்.

மகள் தாலியில்லாது வெறும் கழுத்தோடும் கையில்  பெட்டியுடனும் வீட்டிற்கு வருவதை பார்த்த மகேஷ்வரிக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. 

செய்யும் வேலையை அப்படியே போட்டு பதற்றத்துடன் பிருந்தா… என்று அருகில் வந்தவர்  அவள் கன்னத்தில் பதிந்த கை தடத்தில் பயந்து பதறியவர் என்னடி இது என்று துடித்தார்.

“அம்மா..” என்று அவரை கட்டிக்கெண்டவள் அங்கு நடந்ததை கூறி அவரை அணைத்து கதறிட 

“என் பொண்ணு வாழ்க்கையை பாழடிச்சிட்டானே அந்த படுபாவி  பெத்த பொண்ணு சொல் பேச்சை கேட்டானா… எவளோ ஏதோ சொன்னான்னு என்  பொண்ணை தெருவுல நிக்க வைச்சிட்டானே”  என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதிட

அவர் போட்ட சத்தத்தில் கீழ் வீட்டிலிருந்து பருவதத்தின் குடும்பமும்  கடையிலிருந்து வந்த பரசுவும் ஒன்றாக மேலே வந்தனர்.

கணவர் வந்ததை பார்த்ததும் மொத்த கோவமும் அவரிடம் திரும்ப “போதுமாயா… போதுமா…  உன் பிடிவாதத்துக்கும்,  இதோ நிக்குதே இந்த அம்மாவோட பொறாமைக்கும் என் பொண்ணு வாழ்க்கையை  பழாடிச்சிட்டிங்களே…. நீங்க நல்லா இருப்பிங்களா…! நீ செத்தா கூட உனக்கு நல்ல சாவு வராதுய்யா… வயிறெறிஞ்சி சொல்றேன் நீங்க நல்லா இருக்க மாட்டிங்க… பொண்ணு வாழ்க்கையையே  குழிதோண்டி புதச்சிட்டியே” என்று கலங்கிட

“என்னடி பேசுற…”  என்று பர்வதம் எகிரிக்கொண்டு  வர

“ஆஹ்… நீங்க என் பொண்ணுக்கு பாத்து வச்சவன் இன்னொருத்தி கூட வாழ்த்துட்டு இருக்கான்னு சொல்றேன்” என்றார் மகேஷ்வரி வாயை பொத்தி அழுதபடி…  

பருவதத்திற்கு அதிர்ச்சி தான் அதை மறைத்தபடி “அதெல்லாம் ஒரு பொண்டாட்டின்னு வந்தா சரியா போயிடும்… நீ அதுக்குள்ள பொட்டிய தூக்கிட்டு வந்துட்டியா??  அவனை திருத்தி கூட வாழ்வியா… என்னமோ அழுதுக்கிட்டு இருக்க போ போயி ஊருக்கு போற வழிய பாரு”  என்று பர்வதம் முடிக்க கூட இல்லை

“இன்னொரு வார்த்தை பேசினா விளக்கமாறு பிஞ்சிடும்… வெளியே போடி…” என்று வாசலை கைகாட்டிய மகேஷ்வரி “ஏன் என் பொண்ணு அவனை திருத்தறத்துக்கு தான் பெத்து போட்டேனா? அவன் திமிரெடுத்து போய் இன்னொருத்திய சேத்துக்குவான் என் பொண்ணு பொறுத்து போகனுமா?” என்று கத்திட

இதையெல்லாம்  பார்த்த பரசு திக்பிரம்மையுடன் நின்றிருந்தார். “யோவ் நீ மனுஷனாயா அந்த பொண்ணு என்ன சொல்ல வர்றான்னு நீ கேட்டியா?? எதுவுமே அவனை பத்தி விசாரிக்காம கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு… யார் பேச்சையும் கேக்காம எல்லாத்தையும் கெடுத்துட்டியே டா படுபாவி” என்று கோபப்பட்டவர் அத்துடன் பரசுவிடம் பேசுவதை நிறுத்தி இருந்தார். 

மூன்றே மாதத்தில்  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி டைவர்ஸ் கேட்க அதில் கோபம் கொண்ட பிராகஷ் இரண்டு மூன்று வருடங்கள் இழுத்தடித்தான்.  போன  வருடம் தான் அவனிடமிருந்து போராடி விவாகரத்து வாங்கியவள், தந்தையுடன் இருக்க பிடிக்காமல் சென்னையில் வேலை பார்த்து அங்கேயே தங்க ஆரம்பித்து  இருந்தாள். 

……