அத்தியாயம் 26

காலையில் கிருஷ்ணாவின் மொபைல் ரிங்க்டோன் ஒலியில் உறக்கம் கலைந்தாள் துளசி. மொபைல் விடாமல் அடித்துக் கொண்டிருந்ததில் எரிச்சலானவள் கையை உயர்த்தி அவன் போனை எடுக்க முயல அப்போது தான் அவளைச் சுற்றி வளைத்திருந்த கிருஷ்ணாவின் கரங்களைக் கவனித்தாள்.

கிருஷ்ணாவின் கரத்தை விலக்க முயன்று தோற்றுப் போனவள் அவன் புஜத்தில் நறுக்கென்று கிள்ளி வைக்க சுரீரென்ற வலியில் “அம்மா!!!!” என்று அலறியபடி கண் விழித்தான் கிருஷ்ணா.

துளசியின் பெரிய நகத்தடம் படிந்த புஜத்தைத் தடவியபடி “ஏன்டி என்னை கிள்ளுன? ஷ்ஷ்… என்ன வலி வலிக்குது” என்று சொல்லிவிட்டு துளசியை முறைத்தான் கிருஷ்ணா.

அவனது முறைப்பைப் பொருட்படுத்தாமல் “நீ என்னை எதுக்கு ஹக் பண்ணிட்டுத் தூங்குனடா?” என்று பதிலுக்குக் கேள்வி கேட்டவளை

“அடிப்பாவி! இதுக்கா தூங்கிட்டிருந்த மனுசனை இந்தக் கிள்ளு கிள்ளுன? நான் அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டேன்… என் பொண்டாட்டியை ஹக் பண்ணிட்டுத் தூங்குனது அவ்ளோ பெரிய குத்தமா? ஏய், அது குத்தமாவே இருந்தாலும் நான் டெய்லி தைரியமா பண்ணுவேன்டி.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்று தெனாவட்டாக உரைத்துவிட்டு மீண்டும் உறங்க முயன்றான் கிருஷ்ணா.

துளசி அவனது தெனாவட்டில் எரிச்சலுற்றவள் அங்கிருந்த தலையணையை எடுத்து அவனை சராமாரியாகத் தாக்கத் தொடங்கவும் கிருஷ்ணாவால் அவளைச் சமாளிக்க முடியவில்லை. முகத்தில், முதுகில் என்று மாறி மாறி தலையணையால் அடி வாங்கியவன் “அம்மா தாயே! தெரியாம உன்னை ஹக் பண்ணிட்டேன்டி… மன்னிச்சுடு தெய்வமே” என்று சரணாகதி அடைந்த பின்னர் தான் துளசி அடிப்பதை நிறுத்தினாள்.

தன் முகத்தில் விழுந்த முடியை ஊதிக்கொண்டவள் “அந்த பயம் இருக்கணும் உனக்கு” என்று எச்சரித்துவிட்டு குளியலறையை நோக்கிச் செல்ல

கிருஷ்ணா “மம்மி! நீ பெத்தப் பிள்ளையை நீ கூட இப்பிடி அடிச்சது இல்லை… ஆனா ஒட்டடைக்குச்சியாட்டம் இருக்கிற தூசி துரும்புலாம் அடிச்சுட்டு வீரவசனம் வேற பேசுது… ஆள் தான் பார்க்கிறதுக்குக் குச்சி மாதிரி இருக்கா… அடி ஒவ்வொன்னும் ஜப்பான் சுமோ மாதிரி இருக்கு” என்று வாய்விட்டுப் புலம்ப, அவனது புலம்பலைக் கேட்டபடி குளித்து முடித்தாள் துளசி.

அவள் குளித்து உள்ளேயே உடை மாற்றிவிட்டு தலைமுடியை மட்டும் துவட்டியவாறு வெளியே வர, அவளை முறைத்தபடி நின்ற கிருஷ்ணா வேகமாகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

துளசி உதட்டைச் சுழித்துவிட்டு டிரஸ்ஸிங் டேபிளின் முன்னே உள்ள மோடாவில் அமர்ந்து தலையை ஹேர் டிரையரில் உலர்த்தத் தொடங்கினாள். தலைமுடி கழுத்தளவு தான் என்றாலும் அடர்த்தி அதிகம் என்பதால் அதை உலர்த்துவது அவளுக்குத் தினமும் ஒரு பெரிய இம்சை தான்.

அவள் தலை முடியை உலர்த்தி முடித்து அதைக் கலையாதவாறு சீவிக்கொண்டிருக்க, குளியலறையிலிருந்து வெளியே வந்த கிருஷ்ணாவின் கண்ணில் இக்காட்சி பட்டுவிட்டது.

“ஒரு மனுசனை அந்த அடி அடிச்சுட்டு சாவகாசமா ஹேரை செட் பண்ணுறியா மேடம்? இதோ வர்றேன்” என்று மனதில் எண்ணியபடி அவள் பின்னே சென்று நின்றான்.

கண்ணாடியை உற்று நோக்கியவனைக் கண்டு உதட்டைச் சுழித்த துளசி “என்ன கிரிஷ்? ஆபிஸ்கு இதே கோலத்தோட போறதா ஐடியாவா? போய் ஷேர்ட்டை மாத்துடா” என்று கட்டளையிடவே

கிருஷ்ணா “வாட் இஸ் திஸ் துளசி? நீ தலையைச் சரியா உலர்த்தாம விட்டுருக்க… இப்பிடியே விட்டுட்டா உனக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும்டி” என்றவன் தன் கையிலிருந்த டவலால் வேண்டுமென்றே உலர்ந்து போயிருந்த கூந்தலைக் காய வைக்கிறேன் பேர்வழியென அவள் தலைமுடியைக் கலைத்துவிட, துளசி தன் முகத்தை மூடியிருக்கும் டவலை விலக்க முயன்று தோற்றுப் போனாள்.

சில நிமிடப் போராட்டத்துக்குப் பின்னர் அவன் டவலை எடுத்துவிட்டு அவளது கலைந்த கூந்தலை கைகளால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கலைத்துவிட்டு “இப்போ தான் முடி ஈரமில்லாம இருக்கு… பை த வே, இந்த ஹேர்ஸ்டைல்ல நீ ஓ பேபி மூவியில வர்ற சமந்தா மாதிரியே இருக்க… என் கண்ணே உனக்குப் பட்டுடும் போல” என்று அவளுக்கு நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தான்.

துளசி கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தின் தலைமுடி கலைந்து போயிருப்பதைக் கண்டவள் கூந்தலைப் படியவைப்பதற்குத் தான் எடுத்த பிரயத்தனங்கள் நினைவுக்கு வரவே, கோபம் உச்சிக்கேற “கிருஷ்ணாஆஆஆ!” என்று கத்த

கிருஷ்ணா இதற்கு மேல் இந்த அறையிலிருப்பது தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று புரிந்து கொண்டவன் சட்டையின் பட்டன்கள் மாட்டியும் மாட்டாமலுமிலிருக்க அப்படியே அறையை விட்டுச் சிட்டாகப் பறந்துவிட்டான்.

துளசி மீண்டும் பிரயத்தனப்பட்டுக் கூந்தலைப் படியவைத்து அழகாக வாரி முடித்துவிட்டு எழுந்தவள் அறையை விட்டு வெளியேறி, கீழே சென்றாள்.

அங்கே கிருஷ்ணா குடும்பத்தினருடன் புன்னகை தவழும் முகத்துடன் பேசிக் கொண்டிருக்க அவனை நினைத்துப் பல்லைக் கடித்தபடி வந்தவளிடம் ரங்கநாயகி “துளசி ஏன்டாம்மா கொஞ்சநேரத்துக்கு முன்னாடி கிருஷ்ணானு கத்துன? இந்தப் பையன் எதாவது வம்பு பண்ணுனானா?” என்று கேட்க

துளசிக்கு முன் முந்திக்கொண்ட கிருஷ்ணா “அது ஒன்னுமில்லை பாட்டி! காலையில எழுந்ததும் பகவான் கிருஷ்ணனோட திருநாமத்தைச் சொன்னா புண்ணியம்னு துளசியோட பாட்டி அவளுக்குச் சின்னவயசுல சொல்லிக்குடுத்தாங்களாம்… அதான் மேடம் கிருஷ்ணானு சொல்லி நாளை ஆரம்பிக்கிறாங்க” என்று கூற அதையும் ரங்கநாயகி நம்பிவிட்டு துளசிக்குத் தான் எவ்வளவு பக்தி என்ற ரீதியில் சிலாகித்துப் பேச, துளசி வேறு வழியின்றிச் சிரித்து சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள்.

அவளை நீண்டநேரம் கொதிநிலையில் வைத்திருக்க விரும்பாத கடவுள் அவளைச் சாந்தமாக்குவதற்காக மித்ராவை அனுப்பிவைத்தார்.

“அம்மு” என்ற கூவலுடன் ஓடிவந்த மகளைக் கட்டிக்கொண்ட துளசி

“மித்தி இன்னைக்குச் சீக்கிரமா ரெடியாயிட்டாளே… குட் கேர்ள்” என்று மகளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட

மித்ரா “இன்னைக்கு அத்தை தான் என்னை ரெடி பண்ணி விட்டாங்க அம்மு” என்று கூறி சஹானாவைக் காட்டினாள்.

அதைக் கேட்ட ராகுல் துளசியிடம் “ஆமா துளசி… இது நாள் வரைக்கும் இவ என்னைக் கூட ரெடி பண்ணிவிட்டது கிடையாது தெரியுமா?” என்று முகத்தைப் பரிதாபமாக வைத்தபடி கூற அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது.

துளசி தந்தையைத் தேட அவர் ராகவேந்திரனிடம் ஏதோ பேசி சத்தமாகச் சிரித்துக் கொண்டிருக்க மனம் விட்டுச் சிரிப்பவரைப் பார்த்தபடி நின்றிருந்தவளை யாரோ தோளைத் தட்டி அழைக்கவும் யாரென்று திரும்பிப் பார்க்க, சுகன்யா தான் வழக்கம் போல பொட்டிக் செல்வதற்காகத் தயாராகி நின்றாள்.

“நீ கிளம்பிட்டியா சுகி? நானும் ரெடி… பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டுக் கிளம்புவோம்” என்று கூறியவளை வினோதமாகப் பார்த்துவைத்தாள் சுகன்யா. அவள் மட்டுமல்ல, அங்கே இருந்த பெண்மணிகள் அனைவருமே துளசியை வித்தியாசமாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

துளசி “ஏன் எல்லாரும் இப்பிடி குறுகுறுனு பார்க்கிறிங்க? நான் அப்பிடி என்ன சொல்லிட்டேன்? பொட்டிக் பக்கம் போய் நாளாகுது… சோ எப்போவும் போல சுகி கூட போறேனு சொன்னேன்… அதுக்கு ஏன் இப்பிடி ஆள் மாத்தி ஆள் என்னை ஏதோ ஏலியன் மாதிரி பார்க்கிறிங்க?” என்றபடி சின்ன மாமியார் மற்றும் அன்னைக்கு சாப்பாட்டை உணவுமேஜையில் எடுத்து வைக்க உதவ ஆரம்பித்தாள்.

மீனா “நேத்து தானே துளசி கல்யாணம் முடிஞ்சுருக்கு… இன்னைக்கே  அங்கே போகணுமா? கொஞ்சநாள் ரெஸ்ட் எடுத்துப் போகலாமே” என்று நயமாக எடுத்துக்கூற, மீராவும் அதை ஆமோதித்தார்.

“முன்ன மாதிரி வேலையே கதினு இருக்காதே துளசி… இப்போ உனக்குனு ஒரு குடும்பம் வந்தாச்சு… சோ உனக்கு டபுள் ரெஸ்பான்ஸிபிளிட்டி… இது ரெண்டையும் பேலன்ஸ் பண்ணுறதுல தான் உன்னோட திறமையே இருக்கு” என்று கூறிய மீராவின் கையை அழுத்தினார் அவர் அருகில் நின்றிருந்த சாரதா.

துளசி இது என்னடா புது தொல்லை என்ற ரீதியில் விழிப்பதை மீராவிடம் கண்ணால் சுட்டிக்காட்டினார் அவர்.

“அண்ணி! குடும்பப்பொறுப்பை இப்போவே அவ தலையில தூக்கி வைக்கணுமா? இந்தச் சஹானாவை பாருங்க, துளசியை விட மூனு வயசு பெரியவ… கல்யாணமும் ஆயிடுச்சு… ஆனா இன்னும் அவளுக்கு ஒரு குடும்பத்தை நிர்வகிக்கிற அளவுக்கு அறிவு வரலை… பிசினஸ் பிசினஸ்னு நேரம் காலம் பார்க்காம சுத்துறப் பொண்ணோட அம்மாவா என்னால துளசியைப் புரிஞ்சுக்க முடியும்… இந்த வயசுல கஷ்டப்பட்டு சம்பாதிச்சா தான் அவளுக்குனு ஒரு அடையாளத்தை அவளால உருவாக்கிக்க முடியும்… ஒரு மாமியாரா இல்லாம அம்மாவா அதுக்கு என்னால முடிஞ்ச சப்போர்ட்டை நான் துளசிக்குச் செய்வேன்…

துளசி! நீயும் பெரியவங்க என்ன நினைப்பாங்களோனு நினைச்சுக் கவலைப்படாதேடா… உன் வேலையை எப்போவும் போல முழுகவனத்தோட பண்ணு… மித்ராவைப் பார்த்துக்க தான் வீட்டுல நான் இருக்கேன், உன் சின்ன மாமா, பெரிய மாமாக்குலாம் இதை விட வேற என்ன வேலை இருக்கு? நீ தாராளமா முழு சுதந்திரத்தோட உன் வேலையைச் செய்யலாம்” என்று மனதாற கூறிவிட ராகவேந்திரனுடன் உரையாடிக் கொண்டிருந்த ராமமூர்த்திக்கு இந்த வார்த்தைகள் மனநிறைவைக் கொடுத்தது.

எப்படி மீனா மற்றும் சுகன்யாவுடன் துளசியும் மித்ராவும் இருக்கும் போது அவர் நிம்மதியாக உணர்ந்தாரோ அதே போல இன்று சாரதா மற்றும் துளசியின் புகுந்தவீட்டினரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகும் நிம்மதியாக உணர்ந்தார்.

துளசியின் பார்வை ரங்கநாயகியையும் சுபத்ராவையும் தயக்கத்துடன் தொட்டு மீளவே, ராகவேந்திரன்

“அம்மாவும் அத்தையும் வீட்டைத் தவிர வெளியுலகம்னு ஒன்னு இருக்கிறதையே பார்த்தது கிடையாதுனு சொல்லுவாங்கம்மா.. அதனால அவங்களோட பேத்திகள் தொழில்ல நல்ல இடத்துக்கு வர்றதை அவங்க பெருமையா தான் நினைப்பாங்க.. அப்பிடித் தானேம்மா?” என்று அவர்களிடம் கேட்டு துளசிக்கு உறுதி செய்தார் மருமகளின் உள்ளத்தைப் புரிந்து கொண்டவராக.

அதன் பின் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது என்று நிம்மதியடைந்தவளாய் குடும்பத்தினருடன் அமர்ந்து காலையுணவில் ஐக்கியமானாள் துளசி. கிருஷ்ணா சாப்பிடுவதற்காக அவள் அருகில் அமரவும் அவன் தனது தலையைக் கலைத்துவிட்டுச் சென்றது நினைவிற்கு வர “இருடா! உன்னை இதுக்குப் பழி வாங்கலை, என் பேரு துளசி இல்லை” என்று கறுவியபடி சாப்பாட்டில் கண்பதித்தாள்.

கிருஷ்ணா மித்ராவைத் தன் மடியில் இருத்திக்கொண்டு அவளுக்கு ஊட்டிவிட்டபடி சாப்பிட, அவன் புறம் குனிந்து மெதுவாக “ஊட்டி விட்டா மட்டும் உன் பொண்ணுக்கு செல்ஃப் கான்பிடென்ஸ் போயிடாதா?” என்று அவன் காதில் கேலியாகக் கேட்க

கிருஷ்ணா அதே குரலில் “உனக்கு ஊட்டி விடணும்னா நீ டேரக்டாவே கேக்கலாமே! எதுக்கு என் பொண்ணைப் பார்த்து பொறாமை படுற?” என்று சொல்லி அவளின் இரத்த அழுத்தத்தைக் கூட்டிவிட்டு ஏதும் அறியாதவனைப் போல மித்ராவைக் கொஞ்சியபடி அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்.

துளசிக்கு நாசியில் இருந்து புகை மட்டும் தான் வரவில்லை. கடுப்புடன் சப்பாத்தியைப் பிய்த்து வாயில் திணித்துக் கொண்டவளுக்கு அவளது மகளே அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாள்.

“அம்மு! அப்பா எனக்கு ஊட்டிவிட்டதால சாப்பிட முடியலை… நீங்க அப்பாவுக்கு ஊட்டி விடுங்க” என்று சொன்ன மகள் அப்போது துளசியின் கண்ணுக்குக் குலதெய்வமாகத் தெரிந்தாள்.

பெரியவர்கள் துளசியும் கிருஷ்ணாவும் மனவேறுபாடுகளை மறந்து வாழ ஆரம்பிப்பார்களா என்ற சந்தேகத்துடன் உழன்றவர்கள், மித்ரா இருந்தால் மட்டும் போதும், அவளைச் சாக்காக வைத்தே இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவர் என்று எண்ணி மகிழ்ந்தவர்களாய் நடக்கவிருக்கும் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.

துளசி கிருஷ்ணாவை நக்கலாகப் பார்த்தவள், சப்பாத்திக்குச் செய்திருந்த கிரேவியில் போடப்பட்டிருந்த நீளமான சிகப்பு மிளகாயை சப்பாத்தி விள்ளலில் மறைத்துக் கொண்டு கையில் எடுத்து “கிரிஷ்! ஆ காட்டு” என்று புன்னகையுடன் கூற, கிருஷ்ணாவும் இதை அறியாதவனாய் வாயைத் திறக்கவே, சப்பாத்தி விள்ளலை அவன் வாயில் வைத்து அடைத்துவிட்டாள்.

அவளுக்குத் தெரியும், கிருஷ்ணாவுக்குக் காரம் சுத்தமாக ஆகாது என்பது. துளி காரம் அதிகமானாலும் மூக்கு சிவந்துவிடும் அவனுக்கு. அப்படிப்பட்டவன் முழு சிகப்பு மிளகாயின் காரத்தை எப்படி சமாளிக்கிறான் என்று பார்க்க மிகவும் ஆர்வத்துடன் அவன் முகத்தை நோக்கினாள்.

கிருஷ்ணாவின் மூளை துளசியின் திடீர் பாசத்தைக் கண்டதும் அவனுக்கு அபாய அறிவிப்பைக் கொடுத்தாலும் பாழாய்ப் போன மனம் தான் அவள் ஆசையாய் நீட்டிய சப்பாத்திவிள்ளலைச் சாப்பிடும் படி அவனைத் தூண்டிவிட்டது.

கிருஷ்ணா ஆசையுடன் அதைச் சாப்பிட ஆரம்பித்தவன், வாய்க்குள் திடீரென்று காரம் தீயாய் பரவ ஆரம்பிக்கவும் நாசி விடைக்க, கண் கலங்க  தண்ணீர் டம்ளரைக் காலி செய்த வேகத்தைப் பார்த்து சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அவசரமாக அந்த இடத்தைக் காலி செய்த துளசி கை கழுவும் இடத்தில் சென்று வாய்விட்டு நகைக்க ஆரம்பித்தாள்.

அவள் சிரித்து முடிக்கவும், கிருஷ்ணா கை கழுவ வந்தவன் எல்லாம் அவளது வேலை தான் என்று எரிச்சலில் அவளிடம் ஏதோ கத்த வர அதற்குள் வேகமாய் அங்கிருந்து நழுவினாள் துளசி.

அவன் கை கழுவி விட்டு வருவதற்குள் சுகன்யாவை அழைத்துக்கொண்டு துளசி வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள்.

கிருஷ்ணா “துளசி ஈவினிங் வீட்டுக்குத் தானே வரணும் நீ… அப்போ வச்சிக்கிறேன் உன்னை” என்று பல்லை நறநறத்துவிட்டு விஷ்வாவை அழைத்துக் கொண்டு கோவை அலுவலகம் புறப்படத் தயாரானான்.

அவன் கிளம்பி சிறிது நேரத்திலேயே ராகுல் சஹானாவும் கூட கிளம்பிவிட பெரியவர்கள் மட்டும் வீட்டில் இருக்கவும், இது தான் வாய்ப்பு என்று அவர்களின் பழங்காலக்கதைகளைப் பேச ஆரம்பித்தனர்.

**********

மித்ராவைப் பள்ளியில் இறக்கிவிட்டுக் காரில் ஏறப்போன துளசியின் கரத்தைப் பிடித்து நிறுத்தினாள் மித்ரா.

துளசி மகள் உயரத்துக்குக் குனிந்தவள் “என்னடா மித்தி? அம்மு கிட்ட எதாவது சொல்லணுமா?” என்று கேட்டு மகளிடம் ஆதரவாகக் கேட்க

மித்ரா துளசியின் கன்னத்தில் முத்தமிட்டு “தேங்க்யூ அம்மு…உங்களால தான் எனக்கு அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா எல்லாரும் கிடைச்சிருக்காங்க… நான் என் கிளாஸ்ல போய் இன்னைக்கு ஹேப்பியா சொல்லுவேன் எனக்கும் அப்பா இருக்காங்கனு… அந்த ஜேக் இருக்கான்ல அவன் சொன்னான் என்னோட அப்பா காட் கிட்ட போயிட்டாராம்.. அதான் எனக்கு அப்பா இல்லாம அம்மு மட்டும் இருக்காங்கனு சொல்லிச் சிரிச்சான்… அவன் கிட்ட போய் நான் அப்பாவைப் பத்தி சொல்லப் போறேன் அம்மு.. அப்புறம் நெக்ஸ்ட் டைம் மீட்டிங்குக்கு அப்பாவையும் கூட்டிட்டு வந்து அவன் கண் முன்னாடி காட்டுவேன்” என்று அவள் அடுக்கிக் கொண்டே போக, துளசியால் மகளின் அப்பா பாசத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

யாரிடமும் எளிதில் பழகாத மித்ரா கிருஷ்ணாவிடம் பசை போட்டது போல ஒட்டிக்கொண்டதற்கு முழுமுதற்காரணம் அவனது உண்மையான பாசமே என்பதைப் புரிந்து கொண்டாள் துளசி. மித்ரா அவனுக்குப் பிறந்த குழந்தை இல்லை என்று தெரிந்ததும் கிருஷ்ணா தன்னை விட்டும், மித்ராவை விட்டும் விலகிவிடுவான் என்றே அவள் எதிர்பார்த்தாள்.

ஆனால் அதற்கு மாறாய் கிருஷ்ணா முன்பை விட அதிகப்பிரியத்தை மித்ரா மீது காட்டியது அவளுக்கே ஆச்சரியம். அவள் இத்திருமணத்துக்குச் சம்மதித்ததற்கு அதுவும் ஒரு முக்கியக் காரணமே.

இன்று மகளின் மனம் இவ்வளவு மகிழ்ச்சியில் உள்ளதென்றால் அதற்கு கிருஷ்ணாவின் கள்ளமற்ற அன்பே காரணம் என்று புரிந்து கொண்டவள் மகளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி வகுப்புக்குச் செல்லுமாறு கூறிவிட்டுக் காரை நோக்கி நடந்தாள். மனதின் சந்தோசத்தை முகம் பிரதிபலித்ததாலோ என்னவோ அன்றைக்கு முழுவதும் துளசியின் முகம் ஜொலித்தது. பொட்டிக்கில் பணிபுரியும் பெண்கள் அதைச் சுட்டிக்காட்டி துளசியைக் கேலி செய்ய, உதட்டில் ஒரு மென்னகையுடன் அன்று முழுவதும் வலம் வந்தாள் துளசி.