அத்தியாயம் 1

பகலவன் அவனின் வருகையால் தன் முகத்தின் மீது விழுந்த அவனின்  சுடரில் எழுந்தமர்ந்தான் தேவமித்திரன் ..  விடியும் வேளை தான் வந்து உறங்கியதால் அவனின் இருவிழிகளும் அவனிடம் ஓய்வு கேக்க மறுபடியும் உறங்க படுத்தவன்  அப்போது தான்   கீழே இருந்து வரும் சத்தத்தை உணர்ந்தவன் சலிப்புடன் மாடியிலிருந்து  கீழே இறங்கினான்..

அங்கே அவனின் மொத்த குடும்பமும் கூடியிருக்க தேவமித்திரனின் பாட்டியும் அவனின் தாயும் முறைத்தபடி நின்றிருந்தனர்… அவர்களை பார்த்தபடி வந்தவன் தனது தந்தையை பார்க்க அவரோ அவரின் தந்தையை பார்த்து கொண்டிருந்தார்…  இவன் வந்ததை யாரும் கவனிக்காது அந்த மாமியார் மருமகள் சண்டையை பார்த்து கொண்டிருக்க ” எதுக்கு இப்படி ரெண்டு பேரும் கத்திட்டு இருக்கிங்க ” என்றவனின் குரலில் அங்கிருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்… அவன் ஒருவனின் குரலுக்கு மட்டும் தானே அவனது தாயும் பாட்டியும் அமைதியாயிருப்பர்…

” தாத்தா  ரெண்டு பேரும் சண்டை போடுறது ரொம்ப ரசிச்சு பாத்துட்டு இருக்கிங்களா எல்லாரும் ..” என்றவனது குரல் நக்கலாய் கேட்டாலும் விழிகள் இரண்டும் கோவத்தை பிரதிபலித்தது…

பேரனின் கோவம் புரிந்தாலும் அதை சட்டை செய்யாதவர் ” மித்திரா அவுங்க சண்டை போடுறது உன் கல்யாண விஷயமா இதுல நான் என்ன சொல்லனும்னு நினைக்கிற நான் என் முடிவ சொன்னா நீ ஒத்துப்பியா … ” என்று கேட்டவரின் வார்த்தைகள் தன் காதிலே விழாதது போல் நின்றிருந்தான் தேவமித்திரன்…

இது இருவருக்குள்ளும் வழக்கமாக நடக்கும் வாக்குவாதம் ஆகையால் அவனது பாட்டி விசாலாட்சி  பேரனிடம் தனது கோரிக்கையை வைத்தார்… ” நீயே நியாத்த   கேளு சாமி இந்த வீட்டோட முத வாரிசான உன்னோட கல்யாணத்த ஊரு உறவெல்லாம் கூப்டு  எல்லாரும் பிரமிச்சு போறளவுக்கு பண்ணனும்னு இருக்காக … ஆனால் அதுக்கு என்மகள கூப்டவே கூடாதுனு  உங்கம்மா சொல்றா .. போறவன் வரவனெல்லாம் எம்பேரன் கல்யாணத்துக்கு வரலாம் .. ஆனா அவன தூக்கி வளத்தவள வரக்கூடாதுனு சொல்றது எந்தவிதத்துல சரி … நீயே சொல்லு உன் கல்யாணத்துக்கு உங்கத்தைய கூப்டுவியா மாட்டியா … ” என்று கண்கலங்கி  கேட்டவரின்  முகத்தை பார்த்தவனுக்கு  அவரின் ஆசையை மறுக்கும் எண்ணமில்லை…

ஆனால் அவனின் தாயோ இதற்கு ஒரு போதும் ஒத்துக்கொள்ள மாட்டாரே என்று கவலையுடன் பார்த்தவன்  ” எனக்கு அத்தை வந்தா சந்தோஷம் தான் பாட்டி… ” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான்…

மித்திரன் கூறியதை கேட்ட விசாலாட்சி தனது மருமகளை நோக்கி ” இப்ப என் பேரனே அவுங்க அத்தை வந்தா சந்தோஷம்னு  சொல்லிட்டான் இதுக்கு மேலயும்  என் மக லட்சுமி வரத நீ மறுப்பியா என்ன… ” என்று எள்ளலுடன் கேட்ட தன் மாமியாரின் மேல் அளவுகடந்த ஆத்திரம் தான் வந்தது  மித்திரனின் தாய் தெய்வநாயகிக்கு…

மகேந்திரன் விசாலாட்சி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள்… மூத்த மகன் குணசேகரன் அவரது மனையாள் தெய்வநாயகி…தெய்வநாயகி மகேந்திரனின் தங்கை மகள்…  இவர்கள் இருவருக்கும் தேவமித்திரன் , ஆதவன் என இரு புதல்வர்கள்… குணசேகரனுக்கு அடுத்ததாய் பிறந்தவர் விஜயலட்சுமி இவரை தெய்வநாயகியின்  அண்ணன் மற்றும் தனது தங்கை மகனாகிய பிரபாகரனுக்கே  மணமுடித்து வைத்தார்… இவர்களுக்கு ஆகாஷ், நிஷாந்தி, காவ்யா என மூன்று பிள்ளைகள்… விஜயலட்சுமிக்கு அடுத்தவர்  தனசேகரன் அவரது  மனைவி அன்புகரசி இவர் விசாலாட்சியின் அண்ணன் மகளாவார்… இவர்களுக்கு மாதவன் , மகிழினி என இரு பிள்ளைகள்… கடைசியாக அந்த வீட்டின் செல்ல மகளாய் பிறந்தவர் தான் லட்சுமி எனும் பவித்ரலட்சுமி … இவருக்கும் தெய்வநாயகியின் தம்பியான தினகரனுக்கும்  திருமணம் ஏற்பாடாகியிருந்தது… ஆனால் கடைசி நேரத்தில் லட்சுமி தினகரனின் நண்பன் வரதராஜனை   திருமணம் செய்து கொண்டார்… இதை லட்சுமியின் வீட்டினர் எதிர்க்க அவ்வூரை விட்டு தன் கணவனுடன் வெளியேறினார்..

இதில் மனமுடைந்த தினகரன் வீட்டை விட்டு வெளியேறினார்… அவருக்கு என்றாயிற்று என்று குடும்பத்தினர் அனைவரும் பரிதவிப்புடன் தேட அவர்களுக்கு தினகரனின் உயிரற்ற உடலே கிடைத்தது… மலையிலிருந்து குதித்து இறந்துவிட்டதாக அவரின் உடலை கண்டு அவர்களுக்கு தகவல் தெரிவித்தவர்கள் கூற திருமணம் நின்று போன விரக்தியில் இப்படி செய்து கொண்டான் என்று நினைத்தவர்களுக்கு  பவித்ரலட்சுமி மேல் அங்கிருக்கும் அனைவருக்கும் கோவம் உண்டாகியது… அதிலும் தங்கள் உடன்பிறந்தவனை இழந்த தெய்வநாயகிக்கும் , பிரபாகரனுக்கும் லட்சுமியை கொலை செய்யும் அளவுக்கு வெறுப்பு உண்டானது…  காலபோக்கில் அவ்வீட்டில் இருந்த  அனைவருக்கும் லட்சுமி மேல் இருந்த கோவம் குறைந்தாலும் அவரை யாரும் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை…

அதற்கு முக்கிய காரணம் தெய்வநாயகி தான் … அவருக்கு லட்சுமி மேல் இருக்கும்  கோவத்தின் அளவு இன்றளவும் குறையாதிருக்க மற்ற அனைவரும் அவரின் எண்ணங்களுக்கு மதிப்பளித்தனர்… இதில் விசாலாட்சி பாட்டிக்கு சற்று வருத்தம் தான்… தன் மகளிடம் விருப்பம் கேட்காமல் ஏற்பாடு செய்து அவளை அந்நிலைக்கு கொண்டு வந்தது தன் கணவரும் மருமகளும் தானே என்று அவர் மனது லட்சுமிக்காக அழும்…

வருடங்கள் கடந்தும் இன்று வரை தனது மகளை காண விடாது இருக்கிறார்களே என்ற கோவத்தில் இருந்தவருக்கு அவரின் சொந்தகாரர் ஒருவரின் மூலம் லட்சுமி பற்றி தெரியவர பல வருடங்கள் கழித்து தன் பெண்ணிடம் அலைபேசி வாயிலாக பேசியவர் அதனை  குடும்பத்தினரிடம் கூற அன்றிலிருந்து விசாலாட்சிக்கும் தெய்வநாயகிக்கும் ஆரம்பித்தது  வாக்குவாதம்…
இதில் பெரும்பாலும் வீட்டினர் யாரும் தலையிட முடியாது … மீறி இருவருக்கும் இடையில் சமாதானம் செய்ய யாராவது வந்தால் அவர்களின் பாடு திண்டாட்டம் தான்… இருவரும் கட்டுபடும் ஒரே நபர் மித்திரன் மட்டும் தான்…

மித்திரனுக்கும்  அவனது அத்தை மகள் நிஷாந்திக்கும் மற்றும் ஆகாஷ்க்கும் மகிழினிக்கும்  திருமணம் செய்து வைக்க   தெய்வநாயகியும் விஜயலட்சுமியும் முடிவெடுத்தனர்… அவர்கள் இருவரின் இந்த முடிவு  பல வருடங்களுக்கு முன்பே எடுத்ததால் வீட்டினர் அனைவருக்கும் சம்மதமே அதனால் உடனே  திருமண  ஏற்பாட்டினை தொடங்கினர்… இன்னும் ஒரு வாரமே திருமணத்திற்கு இருக்க விசாலாட்சி பாட்டி பவித்ரலட்சுமியின் குடும்பத்தினரை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று கூறினார்…

விசாலாட்சி பாட்டி கூறியதை கேட்டு கோவம் கொண்ட தெய்வநாயகி” இங்கே பாருங்கத்த என் தம்பிய கொன்னவ அவ … அவளோட மூச்சுகாத்து கூட இந்த வீட்ல படக்கூடாதுனு நினைச்சுட்டு இருக்கேன்… நீங்க அவள கல்யாணத்துக்கு கூப்டு சீராட்டா பாக்குறிங்களா …    என் புள்ள கல்யாணத்துக்கு அவ வரக்கூடாது…  ” என்று கோவத்தில் கூறினார்…

“ஏ மக இந்த வீட்டுக்கு வரக்கூடாதுனு நீ எப்படி சொல்லலாம்.. இந்த வீட்டுல உனக்கு இருக்க உரிமை அவளுக்கும் இருக்கு… அத மறந்துடாத… “

” அடேங்கப்பா ஓடிப்போனவளுக்கு என்ன உரிமை வேண்டிகிடக்கு… ” என்று  இடக்காய் கேட்ட தெய்வநாயகிடம்

” ஆமா .. என் மக ஓடிப்போனவ தான் அவளுக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணிக்க முடியாதுனு எம்புட்டு சொன்னா நீங்களாம் கேட்டிகளா … அவள கட்டாயப்படுத்தினிங்க அதான் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைகாக அவ போன … அந்த மனுஷனும் அவள ராணியாட்டம் தானே வச்சுருக்காரு… ” என்று பதிலடி கொடுத்தார் விசாலாட்சி…

” ஆஹான்.. அப்போ ராணியாட்டம் இருக்கவளுக்கு எதுக்கு இந்த வீட்ல உரிமை வேண்டிகிடக்கு… ” என்று தெய்வநாயகி பேசிக்கொண்டிருக்கும் போது தான் மித்திரன் வந்து பவித்ரலட்சுமி வரட்டும் என்று சொல்லி சென்றான்…

மகன்  இவ்வாறு கூறியதும் அதற்கு தனது மாமியாரின் எள்ளல் பேச்சும் சேர்ந்து தெய்வநாயகி மிகுந்த கோவத்துடன் இருந்தவர் தனதறைக்கு சென்று அவரின் அண்ணனுக்கு கைப்பேசியில் அழைத்தார்…

பிரபாகரன் தனது தங்கையிடம் இருந்து அழைப்பு வருவதை பார்த்தவர் அழைப்பை ஏற்றார் ” என்ன நாயகி  காலைலயே போன் போட்டுருக்க … என்ன விஷயம்.. “

” அண்ணே  இந்த வீட்ல என் பேச்சுக்கு மதிப்பில்லாம போச்சுணே … ” என்று அழுவது போல் பேசியவரின் குரலில் அவரின் உடன்பிறந்தவர் பதறினார்…

” என்னாச்சுத்தா … எதுக்கு இப்படி அழுதுட்டு பேசுற .. யாரு என்ன சொன்னாங்க… ” என்று பதட்டமாய் கேட்டார்..

” வேற யார்ணே இந்த வீட்ல என்னை திட்ட போற எல்லாம் அத்தை தான் … அவங்களுக்கு தான் நான் ஆகாத மருமகளாச்சே .. என் மனசு கஷ்டப்பட்டா அவுங்களுக்கு குளுகுளுனு இருக்கும் போல … “

” என்ன விஷயம்னே சொல்லாம இப்படி பேசுனா நான் என்னனு நினைக்குறது … முதல்ல அழாம  விஷயத்தை சொல்லு நாயகி… “

” நம்ம தம்பிய கொன்னுட்டு போன அவுங்க பொண்ணு இந்த வீட்டுக்கு வரனுமாம் அதுவும்  நம்ம பிள்ளைங்க கல்யாணத்துக்கு… “

” என்னாத்தா சொல்ற … அத்தையா இப்படி சொன்னாங்க.. “

“ஆமாண்ணே.. அவுங்க பொண்ணு கூட கொஞ்ச நாளா பேசிட்டு இருக்காங்கனு சொன்னேன்ல அப்ப இருந்தே எங்கூட ஒரே வழக்கு தான்… இன்னிக்கு அவ கல்யாணத்துக்கு வரனும்னு பேச ஆரம்பிச்சாகா… நான் முடியாதுனு மறுத்து பேசுனே … நான் செஞ்சதுல எதுவும் தப்பிருக்காணே… ” என்று  அழுதபடி கேட்ட தன் தங்கையின் கோவம் புரிந்தவர் அதே கோபத்துடன் தானும் இருந்தார்..

” எந்த மடப்பய இதை தப்புனு சொல்லுவான்… அவ பண்ண துரோகத்தை அதுக்குள்ள மறந்து சீராட்ட பாக்கிறாகலா … அவ பண்ண தப்புல பாதிக்கப்பட்டது நாமே தானே அவுக இல்லையே… அதால தான் அம்புட்டு சுலபமா போச்சு போல அவுங்களுக்கு… அவ எப்படி  ஊருக்குள்ள காலெடுத்து வைக்கிறானு நானும் பாக்குறேன்… ” என்று எரிமலையாய் வெடித்து கொண்டிருந்தவரின் பேச்சில் இடைபுகுந்த நாயகி ” உன் மருமகன் அவுங்க அத்தை கல்யாணத்துக்கு வரனும்னு முடிவா சொல்லிட்டு போயிட்டாணே… ” என்று கூறினார்…

” மித்திரனா இப்படி சொன்னான்… ” என்று சற்று ஆதங்கத்துடன் கேட்டவரிம் , ” ஆமாண்ணே அவன் தான் அவன்தான் சொன்னான்.. அவன் சொன்னதுக்கு இந்த வீட்ல யாரும் மறுத்து பேசல … அப்போ அவுங்களுக்கும் அவ வரதுல விருப்பம் தான் இருக்குது போல… நாம இது புரியாம இத்தனை நாள் முட்டாளா இருந்திருக்கோம்னு நினைக்க நினைக்க எனக்கு பைத்தியமே பிடிச்சுரும் போல … “

” நீ வருத்தப்படாம  இருத்தா… நாளைக்கு அண்ணன் இங்கே பத்திரிக்கை எல்லாம் கொடுத்து முடிச்சுட்டு வந்துருவேன்… வந்து அவுகள பேசிகிறேன்…  ” என்று கூறியவரின் குரலுக்கு அவரின் தங்கை அடிபணிந்தார்…