அத்தியாயம் – 01
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
புதுபெண்ணின் வெக்கத்தைப் பூசியப் படி, தன்னின் செக்கர் சிவந்த வதன ஒளியை வான் எங்கிலும் பரப்பியபடி மேலெழுந்து வந்தான் பரிதியவன்.
எதிர்திசையில் மறையும் தன் காதல் பெண்ணான நிலவு மகளை கண்டுவிட்ட நிறைவால் விளைந்த அவன் வெக்கத்தின் வர்ண ஜாலத்தை, கண் கோடி கொண்டு பார்க்க வேண்டும் போல் இருந்தது அந்த அதிகாலை வேளையில்.
தமிழகத்தின் மையத்தில் தனக்கென்றே தனி அடையாளத்துடன் கம்பீரமாக இருக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்த அதிகாலையிலேயே படு சுருசுருப்பாக இயங்க ஆரம்பித்திருந்தது.
கோழித் தூக்கம் போட்டு தங்களின் வாழ்க்கையை, அன்றாட வாழ்வை சற்றேனும் மேம்பட்ட செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எத்தனை பேர் முயல்கின்றனர் என்பதை அந்த புலரா காலையில் கண் கொண்டு பார்த்திட முடிகிறது.
மெல்லிய தூரல் மழையும், விடியலின் துவக்கமும் ஒருவித ரம்மியம் என்றால், ரோடியோவில் பூபாள ராகப் பாடல்கள் இதமாய் இதயம் நுழைந்து மனதை கவரத் துவங்கியிருந்தது.
அதேப்போல், இந்த இயந்திர உலகில் இயற்கை என்ற மாபெரும் சக்தியை நின்று ரசிக்கத் தான் எத்தனை பேருக்கு நேரமும் காலமும் இருக்கிறது?
ஆனால் தங்களையும் தினமும் மெய் மறந்து, காதலாய் பார்த்து, உணர்வாய் உணர வரும் அவனுக்காக கூதல் காற்று விசுவிசு என்று வீசி, தன்னின் ஆதரவை தருவது போல் அணைத்துச் சென்றது.
அவனின் சுருட்டை முடியை இன்றாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காற்றானது முயல, அதற்கு தடைவிதித்து கழுத்திற்கு சற்று கீழ் வரை புரண்ட தன்னின் அடர் கேசத்தை கைகளால் அடக்கி, ஹெட் பேண்ட் (Head Band) உதவியால் அதை அடைத்தபடி நின்றிருந்தான் அந்த திருதள வாயிலில்.
அத்தளமானது காவேரியின் தென் கரையில், தொன்மையும் மகேந்திர வர்ம பல்லவனால் ஈர்க்கும் படியான கட்டிடக்கலையிலும், கிட்டத்தட்ட இமயத்தை விட பழமை வாய்ந்த மலையாகக் கருதப்படும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்.
கீழே மாணிக்க விநாயகனையும், தாயுமானவராய் விளங்கும் சிவனையும் அவரின் சரிபாதியாய் வீற்றிருக்கும் மட்டுவார்குழலியை பார்த்துவிட்டு அவர்களின் மைந்தனும் அங்கு சுயம்புவாக விளங்கும் உச்சி பிள்ளையாரப்பனை தினமும் அந்த அதிகாலை பொழுதே காண வந்துவிடுவான் அவன்.
வருபவனை தன்னின் தனி பெரும் எழிலால் களவாடிக் கொண்டது அழகிய இயற்கையும் திருச்சி மாநகரும்.
சில் என்று முகத்தில் வீசிய காற்றை நுரையீரல் முழுவதும் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து நிரப்பிய வண்ணம் கண்கள் மூடி, இரு கைகளையும் கட்டியபடி நின்றிருந்தவனை,
“மனோ, ஆரத்தி காட்டுறேன். உள்ளார வா” என்றார் சுவாமிகள்.
எதிர் பேச்சு ஏதும் இல்லாது வேஷ்டி ரசரசக்க, முழு நீள சட்டையை பாதிக்கு மேல் மடித்துவிட்டபடி வந்து நின்றவனை முகம் முழுக்க புன்னகை விரித்து சிரித்தபடி பிள்ளையார் துதி போற்றி, பார்வதி புத்திரனுக்கு ஆரத்தி எடுத்தார் சுவாமிகள்.
‘தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து’
என கணீர் என்று உரக்க பாடியவன் மனதினுள், “உன்கிட்ட நான் எனக்காக எதையும் கேட்கல, அவள நல்லா சௌக்கியமா, ஆரோக்கியமா பார்த்துக்கோ. அதுபோதும்” என்று இரு கை கூப்பி, கண்மூடாது எதிரே இருந்தவரிடம் மனதார உளதாய் பேசியபடி இருந்தான் அவன்.
முழுதாய் இருபது விநாடிகள் சென்ற பின்பே ஆரத்தியை எடுத்தவன், எதிரே இருந்த மூசிகனை கண்களில் நிறைத்துக்கொண்டும் அவரின் பிரசாதத்தை நெற்றியிலும் நிறைத்த வண்ணம் வெளிபுற படியில் அமர்ந்துவிட்டான், மனோரஞ்சன்.
மனோரஞ்சன், பெயருக்கு பொருத்தமான அழகன் தான். ஆறடிக்கு அதிகமான உயரத்துடன், சற்றே பூசிய உடல்வாகும் கண்களில் கருப்பு வண்ண சட்டம் வைத்த கண்ணாடி அணிந்தபடி, மாநிறத்தில் வேஷ்டியில் சுற்றம் இக்காலத்து இளைஞன்.
எதிரே தெரிந்த காவேரி ஆற்றின் அழகை பார்வையால் பருகியவனின் அருகே வந்தமர்ந்தார் சுவாமிகள்.
“தினேம் காலம்பர இவர பார்க்க வர நோக்கு, இந்த கணபதி ஸ்சீக்கிரமா ஒரு நல்லது பண்ணினா எல்லாம் ஷேமமா இருக்கும்” என்றார் அவன் முகம் பார்த்து.
அதில் சன்னமாய் சிரித்தவன், “மாமா, எனக்கு என்ன வேணும்’றது என்னவிட அவருக்குத் தான் நல்லா தெரியும்!” என்றவனை பார்த்திருந்தவர்,
“ஆனா அதுக்காக நீ சும்மா இருந்துட கூடாதே மனோ”
“காலம் கனியும் போது, கனியானவளும் என்னிடம் வருவாள், மாமா” என்றான் விரிந்த சிரிப்புடன்.
அவனின் பேச்சை கேட்டவர் சன்ன சிரிப்புடன் நகர்ந்துவிட, அவன் சிரிப்பில் விழுந்த கன்னக்குழியை நிரப்பி முத்தமிட்டது காற்று!
தன் முழு உருவத்துடன் தங்கமாய் ஜொலித்து, மெல்லமாய் நகர்ந்த காவேரி தாயைப் பார்த்தபடி படியிறங்கினான் மனோரஞ்சன்.
மணி என்னவோ ஆறரை தான் ஆகியிருந்தது. ஆனால் அவனுக்கான ஓட்டம் துவங்கியது அப்போதே.
வேஷ்டியை மடித்துக் கட்டியவன் தன்னின் மஞ்சளும் கருப்பும் கலந்த RE Meteorரை அத்தனை ஸ்டைலாக எடுத்து, மிதமான வேகத்தில் காந்தி மார்க்கெட் அடைந்திருந்தான்.
பின்னிரவுலேயே காய்கறி லோட்கள் வந்தவிட்டதால், கடைகள் திறந்தே காணப்பட்டன. சில்லரை வியாபாரிகள் தங்களின் ஜாகையை அமைத்தபடி காய்கறிகளை பரப்பி விட்டபடி காணப்பட்டனர்.
மார்கெட்டின் உள்ளே சென்றவன் அனைத்தையும் பார்வையிட்டபடியே சற்று உட்புறமாய் பெரிதாக இருந்த கடையின் முன்பு வந்து நின்றான்.
“அண்ணே இன்னும் வரல மனோண்ணா” என்றான் கடையினுள் இருந்த ஒரு பையன்.
“சேரி, இன்னிக்கு சரக்கு அனுப்பும் போது கூட சேர்த்து விட்டுடு.. லிஸ்ட்ட புடி, எல்லாம் சேரியா வந்திருக்கனும். வேலு வந்தோன பில்ல கடைக்கு அனுப்ப சொல்லு” என்றவன் திரும்பி செல்ல அவன் கண்ணை ஈர்த்தது அந்த தாமரை பூ.
பல்வேறு வண்ண ரோஜாக்கள் புடை சூழ இருந்தாலும், அதில் தனித்து இளஞ்சிவப்பில் அத்தனை ஈர்ப்பாய் அவளின் நினைப்பை அவனுள் ஏற்படுத்தி குளுமை ஊட்டியது அது.
அக்கடைக்கு சென்றவன் அந்த பூவின் மென்மையை உணர பார்க்க, “வா சாமி, எந்த பூவு எத்தன மொலம் வேணும்” என்று அவனின் செயலுக்கு தடைவிதிக்கும் படியான வினாவை எழுப்பினார் அக்கடைக்கார அம்மா.
“தாமர எவ்வளவு ம்மா”
“ஒத்த பூவு பத்து ரூவா, உனக்கு எத்தன போட சாமி”
“மாலையா கட்டி தருவீங்களா?” என்றவன் கேள்வியிட,
“பைய இன்னமும் வரல ராச. வந்த பின்னதென் கட்ட முடியும்” என்றவர் சொல்லுக்கு ஒரு நிமிடம் யோசித்தவன்,
“சேரி, ரெண்டு மாலையா கட்டி அந்தா வேலு கடை இருக்கே, அங்க கொடுத்துடுங்க. இப்போ ரூவா எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க” என்றவன் வேலையை முடித்தவுடன் வெளியேறினான்.
இன்று நடையில் எப்போதுப் இருக்கும் உறுதி இல்லாது, மனம் ஏனோ ஒரு நிலையில் நில்லாது அலைபுருவதை அவனால் நன்கு உணர முடிந்திருந்தது.
கடிவாளமிட்ட மனதானாலும் அவளின் நினைவு இன்றைய நாளை நிலைகொள்ளாமல் தான் செய்யும் என்று தெரிந்தும் கூட, அது அவனை பெரிதும் அழுத்தியது.
‘ரஞ்சா, அமைதியா இரு’ என்று தனக்குத் தானே சொன்னவனால் சற்றும் நிதானத்திற்கு வர முடியவில்லை.
அவளின் அழகு பிள்ளை முகம், அதில் அவனுக்கே அவனுக்காக தனித்து ஒளிரும் ஒற்றை சிவப்புக் கல் மூக்குத்தி என்று ஒன்றன்பின் ஒன்றாக மேலேந்து வர, மனது படபடத்தது.
“பூவீ” என்று தன்னை மறந்து மென்மையாய் அவளின் பெயரை உரைத்தவனின் குரலில் அத்தனை காதல் தாபங்கள்.
அதை பக்கம் இருந்து கேட்டது போல உணர்ந்தவள் தன்னை அறியாது கால் விரல்களை சுருக்கியபடி, “மாமா” என்றாள் தலையில் தண்ணீரை ஊற்றிய நொடி.
உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. தண்ணீர் உடலில் பட்ட நொடி, மனோவை அத்தனை தூரம் தேடியது அவள் மனதும் உடலும்.
அனிச்சையாக கண்கள் கலங்கிட, அவன் நினைப்பை புறம் தள்ளியவள் குளித்து முடித்து பச்சை வண்ணத்தில் பொடி தங்க கட்டங்களும் ஆழ்ந்த நீலத்தில் பெரிய பாடர் வைத்த சுங்குடி புடவையை பாந்தமாய் அணிந்தவளின் உடலில் தோன்றிய சிலிர்ப்பு தான் இன்னும் அடங்கிய பாடில்லை.
நேரே துளசி மடத்திற்கு சென்று பூஜை செய்த கையுடன் அவளின் ஆஸ்தான பெருமாளுக்கு துளசியை வைத்த பின்பு தான் அவளின் மனம் சற்றே சமன்பட்ட உணர்வு.
ஆனால், கைகள் இரண்டிலும் முள்ளாய் நீட்டி நின்ற மெல்லிய முடிகளை மாறி மாறி தேய்த்துவிட்டபடி இருந்தவளின் மூக்கை நிமிண்டியது நெய்யின் மணம். அதில் சற்றே கோபமும் முளைத்திருந்தது அவளிடம்.
முந்திரியும் பாதாமையும் பதமாய் நெய்யில் வறுத்தால் வரும் சுகந்த மணமே அவளுக்கு சொல்லியது அன்றைய நாளுக்கான ‘இனிப்பை’ அன்னை தயார் செய்கிறார் என்று.
மீண்டு சென்ற அழுகை வந்துவிடும் போல் மூக்கெல்லாம் விடைத்தபடி, கண்ணீர் கட்டிய கண்களுடன் தன் எதிரே தம்பதியராய் இருந்த நம்பெருமாள் – அரங்கநாயகி தாயார் புகைப்படத்திலேயே அவளின் பார்வை நிலைகுற்றியிருந்தது.
ஒரே எண்ணம் மனதெங்கிலும் சூழ்ந்து அவளை கொன்றிட, பல்லை கடித்து தன் உணர்வுகளை முடிவுக்கு கொண்டு வந்தவள், “அம்மா நான் காலேஜ் கிளம்பறேன்” என்றாள் அறிவிப்பாக.
பூஜை அறையில் இருந்து வந்தவளை தான் அத்தனை நேரமும் கவனித்தபடி இருந்தான் அவளின் உடன்பிறப்பு.
அவளின் தவிப்பும், தவிர்ப்பும் உடன் அழுகையை அடக்கிய முகமும் அவனுக்கு புதியது இல்லை என்றாலும் இன்றும் அது அவ்வாறே இருக்க, கோபம் துளிர்த்தது அவனிடம்.
“ஏழு கூட ஆகல. அதுக்குள்ள கிளம்பீட்ட? சாப்பிட்டு வெயிட் பண்ணு, நானே இன்னிக்கு கொண்டு போய் விடுறேன்” என்றான் முகாரி.
“தேவையில்ல, உன் வேலையை நீ பார்த்தா போதும்” என்று பட்டென்று சொன்னவள் யாரையும் பாராது வாசல் நோக்கி செல்ல,
“கல்யாணி, நில்லுடீ. நல்லநா அதுவுமா இப்படி தான் இருப்பியா? சாப்பிட கொள்ளாம எதுக்கு இப்படி அவன கத்திட்டு ஓடுற” என்ற அன்னையின் பேச்சு அவள் பின்னூடு வர, ஒரு நொடி நின்ற அவள் கால்கள் மீண்டும் நடந்தது.
அதில் மேலும் கோபம் கொண்டவன் வேக எட்டில் தங்கையில் கைப்பற்றி கிட்டத்தட்ட வீட்டிற்குள் இழுத்து வந்திருந்தான் அத்தனை ஆத்திரத்தோடு.
“ஸ்ஸ்” என்று மெல்ல வலி தாங்காது சொல்லியவளை சோபாவில் தள்ளியவன் அவளை முறைக்க, “இத்தன அழுத்தம் கூடாது குட்டி” என்றான் இருபொருள் படும்படி.
அவன் செயலால் மனது கலங்கினாலும் நிமிந்து அமர்ந்தவள் அன்னையை பார்க்க, அவரோ உணர்வற்ற முகத்துடன் மகளை பார்த்திருந்தார்.
அவரின் அத்தோற்றமும் நிலையும் அவளை உலுக்க, “அம்மா” என்றபடி அவரிடம் சென்றாள், பூர்வி கல்யாணி. மனோவின் பூவி!
“இன்னிக்காவது மனோ..” என்றவரின் பேச்சை பாதியில் தடை செய்தவள்,
“வேற ஏதாவது பேசு” என்றுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளின் முகத்திலேயே கண்ணை வைத்திருந்தவர் அப்போதான் அதை கவனித்தார் போல், பூர்வியை பூஜை அறை நோக்கி இழுத்துச் சென்றார்.
“முரா, பிரசாதம் எடுத்துட்டு வா.” என்று மகனிடம் சொல்லியவர்,
“ஒரு கில்லு துளசி இலைய பிரசாதத்து மேல வைச்சுட்டு, சுவாமிக்கு தீபம் காட்டு கல்யாணி, சீக்கிரம்” என்று அவளை அவசரப் படுத்தினார் அவர்.
அவளும் தாயின் சொல்படி கேட்டு நடக்க, சுவாமியின் முன்பு விழுந்து வணங்கியவளின் நெற்றி வகிட்டில் அன்று மனோரஞ்சன் வைத்த குங்குமத்தை இன்று அவன் சார்பில் தன் மகளுக்கு சூடினார் அவனின் அத்தையான மோகினி.
கீர்த்தனங்கள் தொடரும்..