அடங்காத காதல் காற்றே – 1
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
கனவின் வழியே
காட்சியாகிறாய்
நிஜத்திலெங்கோ
மறைந்தாட்சி
புரிகிறாய்
வளியுருவானவளே …!
“கெட்டி மேளம் கெட்டி மேளம்…!” ஐயரின் குரலை கேட்டதும் வாத்தியங்களை இசைக்க, நின்று கொண்டிருந்த மணமகன், தன் வலிய கரங்களில் இருந்த தாலியை மேலே உயர்த்திக் காட்டி, அவள் மயில்கழுத்தில் சூட்டும் முன் அவளது மீன் போன்ற அஞ்சனமிட்ட அம்பகங்களை காண, அவனை ஏமற்றாமல் அதில் காதலை மட்டும் காட்டினாள். அதை சம்மதமாய் ஏற்று பொன் தாலியைக் கட்டித் தன்னவளாக்கினான்.
வெற்று மார்பின் குறுக்கே பூணலை அணிந்து கழுத்தில் அங்கவசத்திரம் பின் மாலைகளும் தொங்க, பக்கத்தில் அரக்கு கலர் புடைவையில் மடி சார் வழி கட்டி கழுத்தில் அவனணிவித்த பொன்தாலியோடு ஆபரணங்களும் மாலைகளும் அவளது பேரழகில் ஒரு பங்கை வகித்தன …!
முதலில் இருவரையும் ஊஞ்சலில் அமர்த்தி, பாட்டு பாடியவர்கள் பாலும் பழமும் குடுத்தார்கள்… ஒரு மோதிரத்தை பானையில் இட்டு மணமக்களின் கைகளை விட்டு தேடச் சொல்ல, இருவரும் கைகளை உள்ளே விட்டு, விழிகள் இரண்டையும் பார்த்து காதல் செய்தனர். மற்றவர்களின் கேலி பேச்சில் தன் நிலைக்கு வந்தவர்கள், மீண்டும் மோதிரத்தை தேட, அவளே கண்டு பிடித்தது போல அவள் கைகளில் பிறர் அறியா வண்ணம் உள்ளுக்குள்ளே அவன் திணிக்க, அவனை வியப்பாக பார்த்தவளை கண்ணடித்து சிவக்க வைத்தான்அவன். மோதிரத்தை அவன் விரலில் அணிவித்தாள்.
இதர சடங்குகளை முடித்த பின், பந்தியில் இருவர் அமர்ந்து உண்ண, வழக்கமாக ஊட்டி விடும் போட்டோ சூட் சடங்கும் சரியாக நடந்தது. தன்னவனுடன் வலது பாதத்தை, தன் புகுந்த வீட்டில் எடுத்து வைத்து நுழைந்தாள். விளக்கேற்றி பூஜை முடிந்த பின், வந்தவர்களுக்கு இரவு விருந்தளித்து வழியனுப்பி வைத்தனர்.
அவள் கண்ணை கசக்கி கொண்டு தாயின் முன் நின்றாள். இருவரும் அழுது வடிய, ஆறுதலாக அவனும் நான்கு வார்த்தைப் பேசி, அவரை வழியனுப்பி வைத்தவன், தன்னவளை தேற்றி உள்ளே அழைத்து வந்தான்.
முதலிரவுக்கு அவளை அலங்கரித்தவர்கள், கேலி பேச்சுக்களுடன் அவனது அறையில் அனுப்பி வைத்தனர். கதவை தாளிட்டு தன் மன்னவனை தேட, அவனோ தன்னை அரும்பாடு பட்டு சாதாரணமாக காட்ட முயன்று தோற்றான்.
காதலித்து கரம் பற்றினாலும் முதல் முறையாக ஒரே அறையில் அவளை சந்திக்க நேர்கையில் பெண்ணவளை விட, கூச்சத்தலிருந்தான் அவன். அவள் அருகே வந்து பால் செம்பை மேசையில் வைத்தவள், திரும்பி தன் கணவனை பார்க்க, அவன் முகமோ அந்த ஏ.சி அறையிலும் உப்பு நீரால் நனைந்து இருந்தன.
“அச்சுச்சோ, ஏண்ணா உங்க முகம் இப்படி வேர்த்திருக்கு…?” பதறி போனவள், தன் முந்தானையால் வியர்வையை துடைத்து விட்டாள்.
“நி… நி…” அவள் பெயரை உச்சரிக்கவே நாக்கு நர்த்தனங்களாட, பெண்ணவளின் அருகாமை ஏதோ செய்ய, நர்த்தனங்கள் ஆடிய நாக்கை இதழோடு பெண்ணவள் சிறையெடுத்து, அவனோடு மெத்தையில் சரிந்தாள். அவனுக்கு பதில் அவளே தொடங்கி வைத்தாள் அக்கட்டில் விளையாட்டை.
“எக்ஸ் க்யூஸ் மீ…!” பக்கத்திலிருக்கும் நபர் அழைக்க, “பச்…” தன்னவளை தன்னிடமிருந்து விலகிக் கொண்டு” என்னய்யா…?” என்று வினவிய பின்னே தெரிந்தது அவை எல்லாம் கனவென்று.
பேய் முழிமுழித்தவன், கனவில் கரைந்து போய் பக்கத்தில் அமர்ந்தவனின்
வலது கால் மேல் தன் இடது காலை படர விட்டிருந்தான்… மனுஷன் எவ்வளவு
நேரம் தான் வலியை பொறுப்பான்?அதான் அவனது காலை அகற்றச் சொல்லி அழைத்தவன் அவனது கனவை “கட் பண்ணி தொடரும்” போட வைத்தான்.
“ஸாரி” என்றவன் காலை சரியாக வைத்துக் கொண்டான் . ” இட்ஸ் ஓகே” என்றான் பெருந்தன்மையாக,
பின் சீட்டில் அமர்ந்து மீண்டும் அந்தக் கனவை தொடரலாம் எண்ணியவனுக்கு தூக்கமே வரவில்லை… ‘அடேய் சாகரா! இந்தக் கடவுள் டீஸரை(கனவை) எல்லாம் நல்லா தான் குடுக்கறார், ஆனா, மெயின் பிக்சரை தான் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸ் டேட் இழுத்தது போல இழுக்குறார். எப்போ தான் அந்த நாளை கொடுப்பாரோ ” என்று புலம்பினான்.
விமானம் தரையிறங்க போவதாக பணிப்பெண் மூலம் அறிந்திட, வெகு நாட்களுக்கு பின் தன் சொந்த மண்ணை காண போகும் வியப்பில் இருந்தான் சாகரன்.
விமானம் தரையிறங்க, பயணிகள் இறங்க ஆரம்பித்தனர், அவனும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கி வந்தான்.
சோதனை படலம் முடிந்து வெளியே வந்தவனை மதுரை மண் அன்போடு அழைத்தது… புலர்ந்து புலராத காலை வேளை அது… விமான நிலையம் மட்டுமே என்றும் விடிந்தது போல இருந்தது. வெளியே வந்தவனை விடிந்தும் விடியாத வானம் வரவேற்க, அதை ரசித்தவன் காலை காற்றை நுகர்ந்து ‘O2’ என உதட்டை அசைத்து மெல்ல புன்னகைத்தவன், விழிகளை சாலையில் அலச, அவன் முன்னே காரொன்று வந்த நின்றது.
“வெல்கம் சாகரா…!” வண்டியை விட்டு இறங்காமல் சொன்னான் பார்த்தசாரதி. “தேங்கியூ அத்திம்பேர்” புன்னகைத்து விட்டு வண்டியில் ஏறினான்.
“என்ன சாகரா, வெளிநாட்ல இருந்து வெள்ளைக்காரியோடு வருவேன்னு பார்த்தா இப்படி சிங்கிளா வந்திருக்கியே …! “
“அத்திம்பேர், என் சொத்து வேணும்ன்னா டேரக்டா கேளுங்கோ, அத விட்டுட்டு என்னை வீட்டை விட்டு தொரத்த பார்க்கிறேளே, வெள்ளைக்காரியோடு வந்து மிஸ்டர் வரதராஜன் என்னை வெள்ளையனே வெளியேறுனு சொல்லவா… போங்கோ !!”என்று அலுத்துக்கொள்ள,
“ஹாஹா, சாகரா, எந்தக் காலத்துல இருக்க நீ? இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜமாகிட்டுஇருக்கு டா. அடுத்து வர ட்ரெண்ட்ஸ் எல்லாம் காதல் கல்யாணம் தான். ஆரேஞ்சு மேரேஜ் சொன்னா, ஆ- ன்னு வாயை தான் பொலப்பா…! “
“உண்மை தான் அத்தி, ஆனா, இந்த வெள்ளைக்காரி எல்லாம் ஓவர். நமக்கு எப்போமே தமிழ்நாட்டு தேவதைகள் தான்…” ரசனையோடு சொன்னவனின் வார்த்தையை குறித்து வைத்துக் கொண்ட சாரதி,
“நோக்கும், காதல் திருமணத்துல விருப்பம் இருக்கு போல…” எனப் போட்டு வாங்க,
“இருந்து என்ன பிரோஜனம்? இன்னமும் நம்ம ஆத்துல பழைய பஞ்சாங்கத்தை வச்சிருக்கோமே…! அவா இருக்கிற வரைக்கும் காதல் கல்யாணம் நம்ம வீட்டு காம்போண்டை கூட நெருங்க முடியாது அத்தி…!” உண்மையை உறக்க சொல்ல,
” பின் பக்க வாசல் வழியா வந்துக்க வேண்டுயது தான் சாகரா” அவனை ஏத்தி விட,
“அத்தி, உண்மையை சொல்லுங்கோ, என்னை பிக்கப் பண்ண வந்தேளா? இல்லை பேக்கப் பண்ண வந்தேளா? என்னை தூண்டி விடுறது போல இருக்கு உங்க பேச்சு…!”
“இல்லன்னா மட்டும் நீ, வீட்ல பாக்கற பொண்ண கல்யாணம் பண்ணிப்ப பாரு!! சாகரா, உனக்கும் எனக்கும் ரெண்டு வயசு தான் வித்தியாசம். அதுனால உன்னையும் உன் எண்ணத்தையும் நானறிவேன்… அத்தை அனுப்பிய அத்தனை பொண்ணுங்க போட்டோவை பார்த்துட்டு வேணான்னு சொல்லும் போதே நேக்கு உன் மேல டௌட் இருக்கு. நீ வந்ததும் தீர்த்துக்கலாம் இருந்தேன். சொல்லு யார் அந்தப் பொண்ணு…?”
காற்றில்லாடிய சிகையை சரி செய்தவன், தன் பதிலை எதிர்பார்த்திருக்கும் தமக்கையின் கணவனுக்கு மர்மச் சிரிப்பையே பதிலாகத் தந்தான்.
“இருக்கு, பெரிய சம்பவம் இருக்கு, மிஸ்டர் வரதராஜனின் கோர தாண்டவத்தை விரைவில் காணலாம் போலயே…! ” என எதிர்காலத்தை எண்ணிக் கூற, சிரித்தான் சாகரன்.
விதியை யாரால் கணிக்க முடியும்.
நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர் தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால் காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்!
~ நம்மாழ்வார்
மதுரை மாவட்டத்தை சேர்ந்த திருமோகூர்
ஊரில் அக்கார் நுழைய, அந்த
அக்ரஹாரத்தை ரசித்தவாறே வந்தான். திண்ணை வைத்த வீடுகள் வரிசையாக தன் பழமை மாறாது கம்பீரமாக நின்றன. அதில் அவன் வீடும் இருந்தது.
காரிலிருந்து இறங்கியவன், தன் வீட்டை கர்வத்துடன் பார்த்தான்… என்னதான் வழுக்கும் தரை, ஹைடெக் வீட்டில் வசித்துவிட்டு வந்தாலும் மனம் காட்டாந்தரைக்கு தானே ஏங்கியது.
தன்னை கண்டதும்’ சாகரா ‘ என்றழைக்கும் தமக்கையை அணைத்தவன், குசலம் விசாரித்து விட்டு பின் பக்க வழியே சென்று குளித்து விட்டு சாரதி கொண்டு வந்த வேஷ்டியையும் நீல நிற சட்டையையும் அணிந்து முன் பக்கமாய் உள்ளே நுழைந்தான்.
வாசலில் இட்ட, சிறு பாதமும் தன் அன்னையின் குரலும் அவனை ஈர்க்க, அதில் மயங்கி, பாதத்தோடு பாதம் வைத்து உள்ளே நடந்தான்.
நீல நிறத்தவனின் முன்னமர்ந்து, “குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா” என்ற பாடலை மனமுருகி பாடிக் கொண்டிருந்தார் கண்ணம்மா. அதனை தூணில் சாய்ந்தவாறு அன்னையின் குரலையும் வதனத்தையும் ரசித்தான்.
பக்கவாட்டில் நிற்கும் தன் மகனைக் விழி விரித்து ஆச்சர்மாய் கண்டவர், அவ்வரிகளை அவனுக்காகப் பாடினார்.
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா…!
அதரங்கள் முறுவலிக்க குறும்பாய் அவரைப் பார்த்து கண்ணடித்தான், அக்கண்ணம்மாவின் கண்ணன்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
“சித்திதிதி…”பல்லைக் கடித்தாள் அதிதி.
“என்னடீ இப்ப உனக்கு பிரச்சனை?” அவளும் அவ்வாறு கேட்க,
“என்னை ஏன் டார்ச்சர் பண்ற?
“நான் என்ன டீ உன்னை டார்ச்சர் பண்றேன்?” எனக் கேட்டவள், அதிதியின் கன்னத்தில் ரோஸ் பவுடரைத் தடவினாள்.
அவளது கையை தட்டிவிட்டவள், “எனக்கு ஏன் கிருஷ்ணன் வேஷம் போடுற? நான் கேர்ள்னு உனக்கு தெரியாதா? ” குட்டி கண்ணனை போல அலங்கரித்திருந்த அதிதி கோபத்தில் கேட்க,
“இன்னைக்கு கிருஷ்ணன் ஜெய்ந்தி டீ, வீட்ல இருக்க குழந்தைக்கு கிருஷ்ணன் வேஷம் போடுறது வழக்கம், போன வருஷம் உனக்கு போட்டோமே ஞாபகம் இல்லையா உனக்கு?” எனக் கேட்டவாறு அவளை மேலும் அலங்கரிக்க,
“விவரம் தெரியாத என்னை பிடிச்சு, வேஷம் போட்டீங்க சரி, இப்பையும் ஏன் எனக்கு போடுறீங்க?”
“ஓ… அப்ப மேடமுக்கு விவரம் தெரிஞ்சிருச்சா?”
“ஆமாம்” எனத் தலையை ஆட்டினாள். “அப்படி என்ன டீ உனக்கு விவரம் தெரிஞ்சது, கொஞ்சம் சொல்லு கேட்போம்…” என்றாள் இடையில் கைவைத்து நின்று.
“தெரியும், க்யூட்டா இருக்க என்னை கிருஷ்ணன் வேஷம் போட்டு, என் கூட செல்பீ எடுத்து இன்ஸ்டால போட்டு நீ லைக்ஸ் வாங்க தானே இப்படி பண்ற? எனக்கு தெரியும் சித்தப்பு எல்லாம் சொல்லிடுச்சு… என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? ” என எகிறினாள் அந்தச் சின்னக் குட்டி.
‘அடேய் கிராதகா போட்டு கொடுத்துட்டானே,” M ” ஃபாலோவர்ஸ் வர வைக்கலாம் பார்த்த விடமாட்டான் போல…! இப்போ இவளை எப்படி சமாளிக்கறது…?’ என எண்ணியவள், “ஈஈஈஈஈஈ” வாயெல்லாம் பல்லாக இளித்து வைத்தாள் மிருதுளா.
“கேவலமாக இளிக்காத சித்தி… என் பெர்மிஸன் இல்லாமல் என் போட்டோவை மிஸ் யூஸ் பண்றனு, ஏர் பேபி கிட்ட சொல்லி உன் மேல் கேஸ் போட சொல்றேன்…” தன் வயதுக்கு மீறி
பேச்சை பேசினாள் அதிதி.
“அடிங்கு… கேஸ் போடுவீயாமே கேஸூ. எங்க போடுறீ பார்க்கலாம், நான் உன் அம்மாவை விட, நல்ல லாயரா பார்த்து எனக்காக வாதாட சொல்லுவேன் டீ… இவ, அம்மா மட்டும் தான் ஏதோ பெரிய லாயர் மாதிரி பேசுற, போ டீ…!!!” என்று அசட்டையாக தோளை குலுக்க,
“என் பக்கம் தான் நியாயம் இருக்கு, கண்டிப்பா தீர்ப்பு எனக்கு சாதகமாக தான் வரும் உன்னை ஜெயில்ல தூக்கி போட சொல்றேன்…” அவளிடம் மேலும் வம்பை வளர்க்க, இருவரும் முட்டிக் கொண்டிருந்தனர். அந்தக் அறைக்குள் நுழைந்த பானுமதி இருவரையும் முறைத்தார்.
“ரெண்டு பேரும் சக்களத்தி மாதிரி சண்டை போடுட்டு இருக்கீங்க சாமி கும்பிட நேரமாச்சு, கீழ இறங்கி வரீங்களா?”எனவும் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு கீழே இறங்கினார்கள்.
அனைவரும் அங்கே கூடியிருக்க, உலகையே வாயில் அடைத்த அந்தப் பரந்தாமனின் சிலைக்கு மாலையிட்டு, இனிப்பு பண்டங்களை எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன… அக்கம் பக்கத்தினரும் அவர்களுடன் அப்பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையை ஆரம்பிக்க,
“பானு, இன்னும் ஏர் பேபி வரல, அதுக்குள்ள ஏன் ப்ரோகிராம் ஸ்டார்ட் பண்ற?”
“உன் ஏர் பேபி எப்போ வர, நாங்க எப்போ கும்பிட அதி? வீட்டுக்கு வந்த கெஸ்ட் எல்லாரும் வெய்ட் பண்றாங்க, அவங்களை காக்க வைக்கிறது தப்பு, அவ நடுவுல வந்து பூஜையில கலந்துப்பா, இப்போ நம்ம சாமி கும்பிடலாம்…” என தென்றல் பொறுமையாக கூறவும், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஓரமாக நின்றுக் கொண்டாள் அதிதி.
அனைவரும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொள்ள, அதற்குள் வாசுதேவ், அவளை நெருங்கி தூக்கிக் கொண்டான்.
“ஃபயர் பேபி, ஏர் பேபி பெரிய லாயர் இல்லையா, அதுனால அவளுக்கு நிறைய வேலை இருக்கும். அவ வர லேட்டாகும். அதுக்குள்ள, இந்தப் பலகாரம் எல்லாம் குட்டி குட்டி ஆண்ட் வந்து திருட்டிட்டு போயிடும். அப்றம் யாருக்கும் எதுவுமே இருக்காது, வெறும் தட்டை தான் நாம சாப்பிடணும்…
நம்ம என்ன பிளான் பண்ணோம் நிறைய சாப்பிடணும் தானே? வெறும் தட்டையா, நாம சாப்பிட? ஏர் பேபி வந்து, எங்க எனக்கு ஸ்வீட்னு கேட்டா எதை நீ கொடுப்ப? ஃபரஸ்ட் நாம சாமி கும்பிடுவோமா, அதுக்குள்ள ஏர் பேபி வந்திடுவாளாம், அப்றம் மூணு பேரம் மட்டும் சேர்ந்து சாப்பிடுவோமா, ஓகேவா”சிறு பிள்ளையாய் அவன் கூறவும், மகுடம் சூட்டிருந்த அக்குட்டியின் தலை அழகாய் ஆடியது.
அக்கம் பக்கத்தினரோடு சேர்ந்து குடும்பம் மொத்தமும் கிருஷ்ணனை வழிபட்டனர். பின் வந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்க, அந்தக் குட்டியும் தன் சின்னஞ்சிறு கைகளால் இனிப்புகளை கொடுத்தாள்.
ஒரு பெண்மணி, அவளிடம் ‘பெயரை கேட்டு’ பின் “உன் அம்மா அப்பா எங்கே ?”எனக் கேட்க, அனைவரும் அதிர, வாசலில் கோபமாக நின்றிருந்தாள் நிழலி.