அடங்காத அதிகாரா 31
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 31
என்னையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் தன் காதலியை மனம் நிறைந்த காதலுடன் பார்த்து பார்த்து புன்னகைத்து விட்டு சாலையில் கவனத்தை செலுத்தினான் நீரூபன்.
“சான்சே இல்ல மாமா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?” என்று அவனை பத்தாவது முறையாக பாராட்டிக் கொண்டிருந்தாள் பூமிகா.
“இதெல்லாம் ஒன்னும் இல்லடா. இது ஒரு ஸ்கூல் தான். இது மாதிரி செயின் ஆஃப் ஸ்கூல்ஸ் ஆரம்பிக்கணும். அதுதான் என் ஆசை.” என்றான் அவளை பார்க்காமல் சாலையைப் பார்த்தபடியே.
வாகன நெரிசல் அன்று சற்று அதிகமாகவே இருக்க பூமிகா நீரூபனிடம் “கண்டிப்பா செய்வீங்க மாமா. அதுவும் தனியாரா இல்ல. கவர்மெண்ட் ஸ்கூல்ல செய்யறதுக்கு நாள் கூடிய சீக்கிரம் வரும். இன்னும் ஒரு வருஷத்துல சட்டமன்றத் தேர்தல் வருதுல்ல, என் மாமா முதலமைச்சர் ஆயிடுவாரு. அப்புறம் செயின் ஆப் ஸ்கூல் என்ன? தமிழ்நாடு பூரா இது மாதிரி ஸ்கூல்தான்!!!” என்று உற்சாகத்துடன் கூறினாள்
அவள் அப்படி கூறியதும் ஆராய்ச்சியாக அவளை ஒரு நொடி பார்த்தவன் “நீ சொன்ன விஷயத்தை என்னன்னு விசாரிக்க சொல்லி இருக்கேன். ஒருவேளை என் கண்ணுக்கு ஏதாச்சும் தப்பா தெரிஞ்சா என்ன செய்யணுமோ நான் செய்வேன். ஆனா ஒன்னு மறந்துடாத நீ என்ன சொன்னாலும் நான் நம்புவேன். நீ மூட்டிக் கொடுத்தன்னு நினைக்க மாட்டேன்”
ஆனால் அவளோ அதற்கு வேறு விளக்கம் கொடுத்தாள்.
“மாமா எப்பவுமே யாரையும் நூறு சதவிகிதம் நம்பாதீங்க. அது நானா இருந்தாலும் சரி. யாரா இருந்தாலும் சரி. மனசுல ஒன்னே ஒன்னு நல்ல ஆழமா பதிச்சு வெச்சுக்கோங்க. எல்லாருமே பொய் சொல்லுவாங்க. அவங்களுக்கு ஒரு கெடுதல் வந்துரும்னாலோ அவங்களுக்கு இதனால ஒரு பிரச்சனை வந்துரும்னாலோ பொய் சொல்ல ஒரு செகண்ட் கூட தயங்க மாட்டாங்க. நீங்க எப்ப ஒருத்தர நூறு சதவிகிதம் நம்புறீங்களோ அப்பவே நீங்க அவங்களுக்கு வல்நேரபில் ஆகுறீங்க” என்றாள் எங்கோ பார்த்தபடி.
“இது எப்பவும் நான் சொல்றதாச்சே. ஓய் பாப்பா உனக்கு எப்படி தெரியும்?” என்றான் சிந்தனையோடு.
“அச்சோ நேத்ரா அண்ணி எங்களுக்கு சொன்னத ஞாபகம் இல்லாம உங்க கிட்டயே சொல்லி மாட்டிக்கிட்டேனா!” என்று சிரித்தாள்.
“நீ எப்ப சீரியஸா பேசுற எப்ப சிரிக்கிறன்னு எனக்கு தெரியவே மாட்டேங்குது பாப்பா. நீ ‘பாப்பா’வா இல்ல சரியான ‘ஐயோ அப்பாவா'” என்று அவனும் அவளை கேலி செய்து கொண்டிருந்தான்.
பேச்சு நேத்ரா பக்கம் திரும்பயதும் ,”நேத்ரா இப்பல்லாம் ரொம்பவே பயப்படுறா. எல்லாம் அந்த ராஸ்கல்லால வந்தது. அவன் மட்டும் அவளை தேவை இல்லாம ஹராஸ் பண்ணலனா, இன்னிக்கு சின்ன சின்ன விஷயத்துக்கு கூட இவ்வளவு தயங்க மாட்டா” என்று நீ ரூபன் வருத்தமும் கோபமும் கலந்து தன் தங்கையின் மீதான அக்கறையை வெளிப்படுத்தினான்
பூமிக்காவோ “அண்ணிக்கு இந்த மாதிரி ஹாராஸ்மெண்ட், குத்தல் பேச்சு இதெல்லாம் புதுசில்ல. அவங்க நிறைய இதெல்லாம் ஃபேஸ் பண்ணி இருக்காங்க. இப்ப பிரச்சனை என்னன்னா அவரு உங்க பேமிலில ஒருத்தரா போனது தான். இப்போதைக்கு அவங்க அப்சட்டா தான் இருக்காங்களே தவிர அவங்க டிப்ரஷன் இல்ல. அவங்க டிப்ரஷன்க்கு போயிருந்தாங்கன்னா இந்நேரம் அவங்களால அவங்க பிசினஸ் ஹேண்டில் பண்ணி இருக்கவே முடியாது” என்று அவனை சமாதானம் செய்வதற்காக பொறுமையுடன் கூறினாள்.
“எஸ் யூ ஆர் ரைட். அவ டிப்ரஸ்டா இல்ல. ஆனா அதே நேரம் அவகிட்ட ஒரு மாற்றம் தெரியுது. எனக்கு அதுல விருப்பமில்லை. என் தங்கச்சி முன்னாடி எப்படி போல்டா இருந்தாளோ அதே மாதிரியே அவ இருக்கணும். அவன் கால ஒடச்சும் அவளுக்கு அந்த பதட்டம் போகலன்னா என்ன செஞ்சா அவளை பழையபடி மாறுவான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”
“மாமா அதெல்லாம் அண்ணி அவங்களே ஹாண்டில் பண்ணிப்பாங்க. காலேஜ் டைம்ல அவங்க பாக்காத பிராப்ளமா? ஆனா ஒன்னு சொல்றேன் கேளுங்க.
எங்க இன்டர் காலேஜ் வாலிபால் டீமுக்கு அப்ப அவங்க தான் கேப்டனா இருந்தாங்க. அப்ப இருந்த கோச் ஒரு பொண்ணு கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணாரு. அந்த பொண்ண அத பத்தி யார்கிட்டயும் சொல்லல. அண்ணி பெரிய இடத்து பொண்ணுன்னு அவங்க பக்கம் வராம வேற ரெண்டு மூணு பொண்ணுங்கள அவர் இப்படி ஹராஸ் பண்றது ஒரு நாள் அன்னிக்கு தெரிய வந்துடுச்சு.
நேரா ஸ்போர்ட்ஸ் கமிட்டில போயி ரிப்போர்ட் பண்ணிட்டாங்க. அந்த ஆளு இல்லவே இல்லைன்னு பொய் சொன்னான் அந்த பொண்ணுங்களும் பயந்துட்டு உண்மையை சொல்லல. கமிட்டி அண்ணியை நம்பல. அப்ப அண்ணி ரொம்ப போல்டா ‘உன்ன வாலிபால் விளையாட தானே சொல்லி தர சொன்னாங்க பொண்ணுங்களோட விஜைனால விளையாட சொல்லி தர சொல்லலையே?’ அவர் கண்ண பாத்து கேட்டுட்டாங்க.
கமிட்டியே ஆடிப் போயிடுச்சு. அந்த ஆள் மூஞ்சி போன போக்கே அவர் மேல தப்பு இருக்கிறது எல்லாருக்கும் புரிய வச்சுருச்சு. ஆனாலும் சமாளிக்க ட்ரை பண்ணுப்ப
‘பரவால்ல இப்ப நீங்க இவர் மேல ஆக்சன் எடுக்காம போங்க. இதே மாதிரி இன்னொரு பொண்ணு நாளைக்கு தைரியமா வந்து சொல்லுவா அப்பயும் எடுக்க மாட்டீங்க
நாலு பேர் அஞ்சு பேர் வந்து சொல்லும்போது தோணும்ல ஐயோ இவ முன்னாடிலிருந்தே செஞ்சிட்டு இருப்பார் போல இருக்கே இல்லன்னா இத்தனை தடவ பொண்ணுங்க ஏன் வந்து சொல்ல போறாங்க அப்படின்னு அப்ப நீங்க ஆக்சன் எடுப்பீங்க. ஆனா அதுக்குள்ள இவரு பல பொண்ணுங்க வாழ்க்கையிலும் கற்போடையும் விளையாடிருப்பாரு.’ எங்களுக்கு இது சாதாரண விளையாட்டு, ஆனா சில பொண்ணுங்க அவங்க குடும்பத்தை தூக்கி நிறுத்த ஸ்போர்ட்ஸ் கோட்டால வேலைக்கு சேர உயிரைக் கொடுத்து பிராக்டிஸ் பண்றாங்க. ஆனா இவர் அவங்க அவசியத்தை காட்டி தன் தேவையை பூர்த்தி பண்ணிக்க பார்க்கறாரு. இந்த மாதிரி ஆட்களுக்கும் பிணம் தின்னி கழுக்குக்கும் எந்த வித்தியாசமும் இல்ல’ன்னு கத்திட்டாங்க.
கமிட்டி மெம்பர்ஸ் முன்னாடி தைரியமா பேசிட்டாங்க அவங்களும் அவர் மேல ஆக்சன் எடுக்கிறதா இல்லையான்னு குழப்பத்துல இருந்தப்ப தான் நானும் எங்க காலேஜ் டீம்ல இருந்து ரெண்டு பேரும் அண்ணிக்கு சப்போர்ட் பண்ணி பேசினோம். அப்பதான் முதல் முதல்ல நான் கூட பிரண்டா ஆனேன். அண்ணி என்னோட கசின் அப்ப தெரியாது.” என்று நேத்ராவை பற்றி கூறினாள் பூமிகா.
“எனக்கு ஞாபகம் இருக்கு ஏதோ ஸ்போர்ட்ஸ் கமிட்டி பிரச்சனை நடக்குதுன்னு தெரியவந்து அவளை கூப்பிட்டு கேட்ட போது ‘ஐ ஹாண்டில்ட் மை செல்ப்’னு சொன்னா.அப்ப இருந்தா அந்த கான்ஃபிடென்ஸ் இப்ப என் தங்கச்சி கிட்ட ஏன் இல்ல?” என்று வருத்தமாக ஸ்டியரிங்கில் தலை சாய்த்திருந்தான். வாகனம் ட்ராபிக் சிக்னலில் நின்று கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்த பூமிகா,
“சரி மாமா நீங்க உங்களோட ஆபீஸ் வொர்க்ல கான்சன்ட்ரேட் பண்ணுங்க. நேத்து அண்ணிகிட்ட நான் பேசுறேன். எல்லாத்தையும் தலையில போட்டு குழப்பிக்காதீங்க” என்று பாசமாக அவன் தலையை வருடி கொடுத்தாள்.
அவனும் அவள் தன் மீது காட்டும் அக்கறை கண்டு வாய்விட்டு சிரித்து “என் செல்ல பாப்பா” என்று கன்னத்தில் செல்லமாக தட்டினான்.
காதல் என்பது உணர்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்தும் ஒன்றென்று யார் கூறினார்கள்?
அன்பையும் அக்கறையும் தேவையான நேரத்தில் பரிமாறி ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கும் அழகான புரிதல் தான் காதல்.
ஒரு வாரம் சென்ற விதம் தெரியாமல் நேரம் வேகமாக நகர்ந்தது.
அன்று மிகப்பெரிய மாநாடு ஒன்று வசீகரனால் ஏற்பாடு செய்யப்பட்டு, திருமூர்த்தி முதல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்து கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது.
கடந்த ஒரு வாரத்தில் வசீகரனின் விளம்பரங்களும் அவன் குறிப்பிட்ட படி நடத்திய வாக்கு சேகரிப்பு முறையும் மக்களிடையே திடீரென்று மறுமலர்ச்சி மக்கள் கழகத்தை பற்றி நல்லவிதமாக எண்ணுவதற்கு தூண்டுகோலாக இருந்தது.
சுவருக்கு சுவர் வண்ணங்கள் பூசி பெயர் எழுதாமல், கிடைக்கும் இடங்களில் எல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டாமல், ஒவ்வொரு வீட்டுக்கும் துண்டு சீட்டுகள் விநியோகம் செய்து ஓட்டு சேகரிக்காமல், அமைதியாகவும் தங்கள் தங்கள் கட்சி வேட்பாளர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக, மாநகராட்சி மேயராக பதவியேற்றால் என்ன மாற்றங்கள் செய்வார்கள் என்பதை பற்றி மட்டுமே முன்னுறுத்தி வாக்கு சேகரித்த காரணத்தால் அவர்களின் வாக்குறுதிகள் மக்களால் சிந்திக்கப்பட்டது.
இந்த சிறிய மாற்றத்தை பயன்படுத்தி திருமூர்த்தியின் மேல் மக்களுக்கு இருக்கும் அபிமானத்தையும் முன்னிறுத்தி வாக்கு வங்கியாக மாற்ற வசீகரன் முருகப்பனுடன் இணைந்து சில திட்டங்களை வகுத்துக் கொடுத்திருந்தான்.
அதில் அன்றைய நாள் நடைபெறவிருக்கும் மாநாட்டில் எந்த ஒரு இடத்திலும் எதிர்க்கட்சியை சாடாமல், அவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிடாமல் அவர்களுடைய நலத்திட்டங்களை நிறுத்திவிட்டு புதிய நலத்திட்டங்களை கொண்டு வருவோம் என்பது போன்ற வாக்குறுதிகள் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம் என்பதை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று முருகப்பன் தெளிவாக திருமூர்த்தி அழைத்து கூறியிருந்தார்.
“இதெல்லாம் சரியா வருமா அண்ணே? இத்தனை வருஷமா நாம அரசியல் பண்றோம் அவங்கள நாம பேசுறதும், நம்மள அவங்க பேசுறதும் புதுசா?” என்று திருமூர்த்தி கேட்க,
“அப்படி இல்ல தம்பி இன்னிக்கி உன் மேல மட்டும் தான் மக்களுக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கு. மத்தபடி கட்சி மேல நிறைய அதிருப்தி தான் இருக்கு. அதனால நீயும் இருக்கவனை குறைத்து பேசினா உன் மேல மதிப்பு குறைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு.
அந்த பையன் வசீகரன் இது பத்தி என்கிட்ட வந்து பேசினான். அவன் சொல்றதிலும் பாயிண்ட் இருக்கு. இந்த உள்ளாட்சி தேர்தல்ல நாம இத ட்ரை பண்ணி பார்ப்போம். இது சரியா வந்தா அடுத்த வருஷம் சட்டமன்ற தேர்தல்ல கண்டிப்பா நம்ம கட்சி தான் அதிக இடத்தை பிடிக்கும். எந்த விதத்திலும் காம்ப்ரமைஸ் பண்ணிக்காம இந்த ஒரு தரம் மட்டும் அவங்க சொல்றபடி கேட்போம்”
“அந்த பையன் மேல எனக்கும் நம்பிக்கை இருக்கு அண்ணே. புதுசா ஊராட்சிகளுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்திருந்தாப்ல. அதுல நம்ம எப்பவும் அணைக்கட்டை சரி பண்ணி தர்றோம், ஊர்ல இருக்கிற கிணறு தூர்வாரி தர்றோம், ரோடு போடுறோம் இதைத்தான் சொல்லுவோம். ஆனா அந்த பையன் இந்த தடவை ஊராட்சியிலும் பாதாள சாக்கடை திட்டம், மினி பஸ் வசதி, சாலை சீரமைப்பு, சூரிய மின்சக்தி தெருவிளக்கு இப்படி நிறைய கொடுத்திருந்தாப்ல. இந்த பையன் சொல்றத செய்யறதுல ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லண்ணே. சோலார் எல்லாம் வச்சா கழட்டி எடுத்து வித்துருவானுங்க. செஞ்சும் எந்த புண்ணியமும் இருக்காது. “என்று மக்களைப் பற்றி அறிந்தவராக கூறியிருந்தார்.
“அது அப்புறம் பார்க்கலாம் திருமூர்த்தி. இன்னைக்கு தேதிக்கு ஜெயிக்கிறது மட்டும்தான் குறிக்கோள். அந்த நேரம் அதை எப்படி தடுக்கிறதுன்றத பத்தி நம்ம பேசிக்கலாம். இன்னைக்கு மாநாட்டை சிறப்பா முடிச்சுட்டு வா.”என்று வாழ்த்தி இருந்தார்.
இதையெல்லாம் எண்ணிக்கொண்டிருந்து விட்டு எந்த அளவுக்கு கூட்டம் வரும் என்று யோசனையோடு தன்னுடைய கேரவனில் அமர்ந்திருந்தார் திருமூர்த்தி.
எந்த ஒரு ஊரிலிருந்தும் லாரி வைத்தோ ஆள் வைத்தோ யாரையும் அழைத்து வரக்கூடாது என்று தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததால் மக்களாக தாங்களே விருப்பப்பட்டு வந்ததில் அந்த மைதானத்தில் பாதி அளவுக்கு கூட்டம் சேர்ந்தது.
எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருந்த சில தொலைக்காட்சிகளை தொடர்பு கொண்டிருந்த வசீகரன் ‘அலைகடல் என மக்கள் திரண்டிருப்பதாக’ நொடிக்கு ஒரு முறை செய்திகளை ஒளிபரப்பு வைத்திருந்தான்.
அதோடு காலியிடங்கள் தெரியாதவாறு சரியான முறையில் மக்களை முன்னிருந்து பின் வரை அமர வைத்து அதை மட்டுமே வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்தான்.
அதனால் இந்த கட்சிக்கு மக்கள் பேராதரவு தருவதாக ஒரு பிம்பம் மெலிதாக உருவாகத் துவங்கியது.
செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த மக்களில் சிலர் ‘நேரில் சென்று பார்த்தால் என்’ என்று கிளம்பி வர துவங்கினர். மாலைதான் மாநாடு ஏற்பாடாகி இருந்தாலும் மதியம் முதலே கூட்டம் திரண்டு இருப்பதாக செய்திகள் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்ததால் மாலை 6 மணி அளவில் மைதானம் முழுவதுமாகவே கூட்டம் நிறைந்திருந்தது.
தான் நினைத்தது போலவே மக்களை வரவைத்து விட்ட மகிழ்ச்சியில் வசீகரன் இவை அனைத்தையும் தன்னுடைய சென்ட்ரல் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் அவன் அலுவலகத்தில் இருந்த டெக்னிக்கல் அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
மாநாட்டில் மக்களின் முன் பேச திருமூர்த்தி மேடையிலிருந்த மைக்கின் முன் வந்து நின்றார்.
கரகோஷம் அடங்க ஒரு நிமிடத்திற்கு மேல் ஆனது. அது ஆளுங்கட்சியை சற்று அசைத்துப் பார்க்கும் விதமாகவே அமைந்தது.
அவரும் வளவளக்காமல் பெரிய பெரிய உவமைகளோ கதைகளோ கூறாமல் இந்த முறை வித்தியாசமாகவும் முடிந்தவரை மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை ஊராட்சி மன்ற உறுப்பினர்களாகி தங்கள் வேட்பாளர்கள் கண்டிப்பாக செய்து முடிப்பார்கள் என்று உறுதியாக பேசிவிட்டு தன்னுடைய இருக்கைக்குச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதேபோல அவர்களுக்கு இதற்காகவே பிரத்தியேகமாக வேலையில் அமர்த்தபட்ட எழுத்தாளர்கள் மூலமாக எழுதப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த உரையை சற்றும் பிறழாமல் பேசி முடித்திருந்தனர்.
அவர்களுக்கும் தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால் சில விஷயங்களை கெடுபிடியாக இருந்தாலும் தாங்கிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று எதிர்க்கட்சியாக இருந்த கட்சிக்கு ஏற்படும் மக்களின் ஆதரவை ஒருவித பதட்டத்துடன் கவனித்துக் கொண்டிருந்த ஆளும் கட்சி தங்களுடைய வேலையை காட்டுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.