அடங்காத அதிகாரா 27

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 27

கட்சி அலுவலகம் செல்லும் வரை கூட அஞ்சனாவுக்கு பொறுமை இருக்கவில்லை.

கைபேசியில் விடாது தந்தையை அழைத்துக் கொண்டிருக்க, அவரோ புகைப்படம் எடுக்கத் துவங்கியதும் அதனை அமைதிக்கு மாற்றியவர் எல்லாம் முடிந்ததும் முற்றிலும் நீக்க மறந்தே போயிருந்தார்.

கடும் சினத்துடன் அவள் கைகள் நீரூபனின் எண்ணை அழுத்த விழைந்தது

ஆனால் இரண்டு முறை அவனிடம் அவள் பட்ட அவமானம் இம்முறை அவளை அமைதியாக இருக்கச் சொல்லிற்று.

அவளது கார் கட்சி அலுவலகத்தில் நுழைந்ததும் பாய்ந்து தன் தந்தையிடம் சென்றாள்.

அவரோ மகளின் வரவை எதிர்பார்த்து இருந்தவர் போல வா அஞ்சனா சீக்கிரம் டச் அப் பண்ணு போட்டோ எடுக்கணும் என்றதும் ஓரளவு அவளது கோபம் மட்டுப்பட்டது.

சரி மூணாவது ப்ளோர் தானே நான் போயி போட்டோ சூட் முடிச்சிட்டு வரேன் பா என்று அவள் மாடிப்படி நோக்கி நடக்க,

இல்லம்மா அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க நீ வந்ததும் நம்ம கோதண்டம் பையனோட ஐ ஃபோன்ல உன்ன போட்டோ எடுத்து அனுப்பச் சொல்லி சொல்லிட்டு போயிருக்காங்க என்றதும், விடுபட்டிருந்த கோபம் மீண்டும் அவளை ஆட்கொண்டது.

என்ன விளையாடுறீங்களா? அது எப்படி என்ன போட்டோ எடுக்குறதுக்குள்ள அவங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு கிளம்பலாம் நீங்க எப்படி அவங்கள போக அனுமதிச்சீங்கப்பா? என்று சற்று அவள் குரலை உயர்த்தினாள் .

அமைதியா இரு அஞ்சு அவங்க சொன்ன நேரம் காலைல எட்டரை மணி இப்ப மணி பார்த்தியா கிட்டத்தட்ட ஒரு மணிக்கு மேல ஆகுது அவங்களும் வந்ததுல இருந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு கிளம்புற கடைசி நிமிஷம் வரைக்கும் பார்த்துட்டு தான் போனாங்க. சொல்லப்போனால் நான் தான் போக சொன்னேன். எலக்சனுக்கு இன்னும் 20 நாள்தான் இருக்கு அதுலயும் கடைசி ரெண்டு நாள் கேம்ப் பண்ண முடியாது. இப்ப ஆரம்பிச்சா தான். அதனாலதான் அவங்க கிளம்பனும்னு சொன்னப்ப நான் உங்களை தடுக்கல. அவங்க போயி டிஜிட்டல் வேலையெல்லாம் முடிக்கிறதுக்குள்ள உன்னோட போட்டோவை அனுப்பிட்டா அவங்க உன்னோட போட்டோவ வச்சு கேம்ப்பெயின் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க என்று அவளை சமாதானம் செய்ய முயன்றார்.

ஆனால் அதெல்லாம் அஞ்சனா காதில் ஏறி இருக்க வேண்டுமே இன்னும் கோபம் நிறைந்தவளாக “ஆமா உங்க மாப்பிள்ளை அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தாலும் நான் இங்க நேரத்துக்கு போட்டோ எடுக்க வந்திருக்கணும் இல்லையா?”என்று நக்கலாக வினவினாள்.

என்னம்மா சொல்ற ராகேஷ் அடிபட்டுடுச்சா எப்படி இருக்கான் எந்த ஹாஸ்பிடல் ஏன் யாரும் எனக்கு தகவல் சொல்லவில்லை என்று மெல்லிய பதற்றத்தோடு வினவினார்.

பயப்படாதீங்க பா அவருக்கு ஒன்னும் இல்ல உங்க எலக்சனுக்கு எடுபுடி வேலை பார்க்க வந்திடுவாரு. என்று கூறியவள்,

என்னோட பழைய போட்டோ வச்சு விளம்பரம் எல்லாம் பண்ண சொல்லுங்க நான் வீட்டுக்கு போறேன் எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்கிறது என்னை நானே அவமானப்படுத்திக்கிற மாதிரி இருக்கு. என்று வெளியேற முயன்றாள்.

என்னம்மா இவ்வளவு கோவப்பட்டா எப்படி?நம்ம ஆள கூப்பிட்டு ஏற்பாடு செய்திருந்தால் ‘இரு அஞ்சனா வந்தா தான்’ அப்படின்னு நான் சொல்லலாம் மொத்தத்தையும் காண்ட்ராக்ட் மாதிரி அந்த கம்பெனிக்கு கொடுத்தாச்சு அவன் சொன்ன நேரத்துல நம்ம நிக்கணும் அப்பதான் நம்மளை ஜெயிக்க வைக்க முழுசா வேலை செய்வான். புரிஞ்சுக்கோ இனிமே நேரம் தவறாமல் வந்து சேரு” என்று மகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

திருமூர்த்தி போகும் அவளை பெருமூச்சுடன் அவர் பார்த்திருக்க அவருக்கு சற்று தள்ளி நின்றிருந்த கோதண்டம் மனதில் ‘போ போ கொஞ்சம் கொஞ்சமா உன்னை ஓரங்கட்டாம விடுறதில்ல எப்படி சாமர்த்தியமா உங்க அப்பா பக்கத்துல இருந்துகிட்டு எங்க எல்லாரையும் நீ ஒதுக்கி இருப்ப உன்னை ஒதுக்கும்போது மட்டும் அவமானமா தெரியுதா?’ என்று குத்தலாக நினைத்துக் கொண்டார்.

தலைவரின் முகத்தில் தெரியும் குழப்பத்தையும் அவர் விட்ட பெருமூச்சையும் கண்டு “ஐயா அஞ்சனா கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. நல்ல வேளை நீங்க கூப்பிட்டதும் நீரூபன் தம்பி வந்துச்சு அப்படியே தம்பிய அரசியலுக்குள்ள இழுத்து விடுங்க.” என்று அவருக்கு வழி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

திருமூர்த்தியும் லேசாக தலை அசைத்தவர் “அதெல்லாம் அவனை இழுக்கலாம், ஆனா அதுக்கு அப்புறம் நீயும் நானும் சொல்றத அவன் கேட்க மாட்டான். அப்ப பரவாயில்லையா உனக்கு?’ என்று அழுத்தமாக வினாவினார் நீரூபனின் முழுமையான குணமறியாத கோதண்டம் ,

“அது எப்படிங்க ஐயா அவருக்கு தான் அரசியல் தெரியாதே அப்ப நாம சொல்லிக் கொடுத்தா தம்பி சரின்னு கேட்டுக்கும். நீங்கதான் ரொம்ப யோசிக்கிறீங்க.” என்று தலைவரை சமாதானம் செய்வது போல அவன் வந்தால் எல்லாம் சரியாகும் என்பதை அவர் மனதில் ஆழமாக பதித்துவிட்டு சந்திரனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.


அன்றைய பொழுதின் அயர்வையெல்லாம் அடித்து நீருடன் செல்லும்படி குளித்து முடித்தவள் தன் இரவு உடைக்குமாறி வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

மனம் ஏனோ சிறு பிள்ளை போல துள்ளலுடன் இருந்தது. காலையில் அவள் எதிர்பாராத விதமாக நேருபனை சந்தித்ததோடு அவனது கைப்பிடிக்குள் அடங்கி இருந்த ஒவ்வொரு நொடியும் எண்ணத்தில் தேனாய் தித்தித்தது.

கண்கள் மையலால் சொருகிக் கொள்ள கைகள் தன்னையும் அறியாமல் கைபேசியில் உள்ள புலனத்தில் அவனது கடைசி வருகை நேரம் எப்பொழுது என்பதை ஆராய முற்பட்டது கண்களை மெல்ல திறந்து நேரத்தை பார்க்க அதுவோ அவன் தற்பொழுது இணையத்தில் இணைந்துள்ளான் என்பதை வெளிப்படுத்தியது வெட்கச் சிரிப்பு வெகுவாய் வந்து அவளை ஒட்டிக்கொள்ள பேசலாமா வேண்டாமா என்று மனதின் உரம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

அவளது தீர்ப்பு வருவதற்குள் அவனுக்கு பொறுமை இல்லை போல அவனே அவளை அழைத்து விட்டான் கைபேசியில் அவனுக்கு என்று பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த அழைப்பொலி வரை முழுவதும் ரீங்காரமிட்டது.

‘நீயும் நானும் சேர்ந்து செல்லும் நேரமே நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே’ என்று மையலாய் குரல் ஒலித்தது.

அழைப்பை ஏற்று அவள் காதில் பொருத்த அவளுக்கு மேல் அவன் காதலில் திளைத்துக் கொண்டிருந்தான்.

“பாப்பா நீ என்ன என்னவோ பண்ணிட்ட. தள்ளி இருந்த வரைக்கும் இப்படி எல்லாம் நான் உன்ன தேடினதே இல்லை. இப்போ வேலை எதுவுமே ஓட மாட்டேங்குது. மனசு பூரா நீ தான் மாரத்தான் மாதிரி ஓடிக்கிட்டு இருக்க. உன்னை நிறுத்த என்ன வழி? நீயே சொல்லு.” என்று கிண்டலாக அவளிடம் கேள்வி எழுப்பினான்.

அவளோ “மாரத்தான்ல ஜெயிச்சிட்டேன்னா நானே நின்னுடுவேன் மாமா” என்று நக்கல் அடித்தாள்.

“அதுவும் ஓகே தான். அப்போ ரெண்டு வருஷம் நிக்காம நீ ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.” என்று வாய் விட்டு சிரிக்கலானான்.

“ஐயோ கால் எல்லாம் வலிக்கும்” என்று அவள் அலற,

“நான் எதுக்கு இருக்கேன்? மருந்து போட்டு விட்டா போச்சு” என்று பொருளற்ற பேச்சுக்களையே இருவரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

காதல் மெத்தப் படித்த மேதாவியையும் புத்தியில் கூர்மையானவர்களையும் தனக்கென்று சொந்தமானவர்களிடம் பேசும்போது மட்டும் கிறுக்குத்தனமாகவும் பொருளற்ற பேச்சுக்களாகவும் பேச வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.

அப்படித்தான் இரவு உணவுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட அவர்களுடைய பேச்சு ஒரு மணி நேரம் வரை ஒன்றுமே இல்லாத விஷயங்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

“சரி நாளைக்கு காலைல நான் பண்ணைக்கு போகணும் நீ அதுக்கு முன்னாடியே வந்துடு நாம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்” என்று நிருபன் அவளை அழைக்க,

அவள் இங்கே விழி விரிப்பதை அங்கிருந்து அறிந்தவன் போல “பார்த்து பார்த்து கண்ணு வெளியில் வந்துட போகுது” என்று சிரித்து வைத்தான் .

“இதெல்லாம் அநியாயம் மாமா இப்படி திடீர் திடீர்னு நீங்க ரெமோவா மாறினா நான் என்ன பண்றது? நீங்க சீரியஸ் மாமாவா இல்ல சிரிப்பு மாமாவா?” என்று கேலியில் இறங்கினாள்.

“அதை நாளைக்கு காலைல வந்து நேர்ல நீயே தெரிஞ்சுக்கோ” என்று இரவு வணக்கத்துடன் அழைப்பை முடித்துக் கொண்டான். அவன் வைத்து விட்டாலும் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்களில் காதல் அலையலையாக அடித்துக் கொண்டிருந்தது.

எழுந்து எப்பொழுதும் போல பால்கனியில் நின்றபடி வானத்தில் இருந்த நிலவை ரசித்துக் கொண்டிருந்தாள்.

“விட்டா நிலாவ புடுங்கி சாப்பிடுவ போல இருக்கு” என்று பின்னால் இருந்து அவளது அன்னை அர்ச்சனா அவளை கேலி செய்ய,

“என்ன அதிசயம் என் மாமியார் என்னைத் தேடி ரூம் வரைக்கும் வந்திருக்க? அதுவும் திட்டாம கிண்டலா வேற பேசுற? இந்நேரம் மழை வந்தா நான் நிலாவை எப்படி ரசிக்கிறது?” என்று அன்னைக்கு சமமாக வாயாடினாள்.

“பேசுவ பேசுவ இதுவுன் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ.. உன் மாமா உன் கிட்ட பேச ஆரம்பிச்சதும் வெறிக்க வெறிக்க வானத்தை பார்க்கிற வேலை குறைஞ்சு போச்சுல்ல. அதுல கொஞ்சம் எனக்கு கேலி செய்ய பயன்படுத்தறியா?” என்று அர்ச்சனா அவளது தாடையில் இடித்தார்.

“என்னது என் மாமாவை நெனச்சு வானத்தை வெறித்தேனா ?அப்பா சொல்லி தான் மாமாவே தெரியும்” என்று அவள் புழுகுமூட்டையை அவிழ்த்து விட,

“போதும் போதும் மூட்டை கட்டி வை. உன் நாத்தனார் கிட்ட உபயோகப்படும்” என்று மீண்டும் அவளை வாரி விட்டவர்.

“நீ வருத்தப்படும் போதெல்லாம் எதையாவது திட்டி, ஏதாவது வேலை சொல்லி உன்ன அந்த எண்ணத்தில் இருந்து வெளியில கொண்டு வந்து நான் வாங்குன பட்டம் ‘மாமியார்’ என்றது தான். அம்மா மாமியார இருக்காங்கன்னா அது மகளோட நல்லதுக்காக தான் இருக்கும். இது இப்ப புரியாது உனக்கு. உனக்கு ஒரு பொண்ணு பொறக்கும் இல்ல அப்ப தெரிஞ்சுப்ப “என்று மகளை ஆதுரமாக தலையை நீவி விட்டார் .

அன்னையின் பேச்சைக் கேட்டு பல்லைக் காட்டி சமாளித்து இரவு வணக்கம் சொல்லி அங்கிருந்து தப்பிச் சென்றாள் பூமிகா.


மறுநாள் காலை ஏழு மணிக்கு முன்பாக மகள் கிளம்பி உணவு மேசைக்கு வரவும்,

“இந்த நேரத்துல டிபனுக்கு நான் எங்கடி போவேன்?” என்று சலிப்பாக கேட்ட அர்ச்சனா அவளுக்கு சத்து கஞ்சி மட்டும் கொடுத்து “போற வழியில ஏதாவது சாப்பிடு” என்று அனுப்பி வைத்தார்.

தன் இரு சக்கர வாகனத்தை எடுத்து நீருபனின் பனை நோக்கி செலுத்த துவங்க சற்று தொலைவில் நீரூபன் அவனது காரில் அவளுக்காக காத்திருந்தான்.

எப்பொழுதும் அவனை வேட்டி சட்டையிலும் அல்லது ஆஃபீஸ் செல்லும் பேண்ட் சட்டையிலும் பார்த்து பழகியவளுக்கு இன்று அவன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டும் டீசர்ட்டும் அவனை மேலும் இளமையாகவும் கவர்ச்சியாகவும் காட்டியது. அவனை அப்படியே விழுங்கி விடுவது போல பூமிகா பார்த்துக் கொண்டிருக்க,

“போதும் போதும் உங்க அம்மா குடுக்காத டிபனுக்கு பதிலா என்ன முழுங்கிடாதே” என்று கேலி செய்து அவளை காரில் ஏற்றுக்கொண்டு பண்ணை நோக்கி பயணித்தான்.

பண்ணையை அடைந்ததும் முன்பக்கத்தில் ஆளரவம் இல்லாமல் இருக்க அவளது கைகளைப் பற்றிக் கொண்டு நடக்கலானான். அவனது ஸ்பரிசம் அவளுக்கு கூச்சத்தையும் வெட்கத்தையும் ஏற்படுத்தி இருக்க அவளது முகம் வெட்கச்சிவப்பில் சிவந்து போனது. அதை ரசித்தபடி

“எப்படி சின்ன புள்ள மாதிரி குதிச்சு ஆடவும் செய்ற, போ போன்னு விரட்டினாலும் பின்னாடியே வந்து மனசுக்குள்ள இடம் பிடிக்கிற, வருத்தமா இருந்தா தட்டிக் கொடுத்து தேத்தி விடுற, கோவமா இருந்தா சமாதானம் பண்ணி சரியா சிந்திக்க வைக்கிற, உனக்குள்ள எப்படி இத்தனையும் இருக்கு?” என்று வியந்தபடி நிருபன் வினவ,

“வீட்டுக்கு ஒத்த பிள்ளையா இருந்து பாருங்க அப்ப புரியும் நமக்கு நாம தான் துணை அப்படின்னும் போது ஆறுதலும் நாமதான் சொல்லிக்கணும் தேறுதலும் நாமளே தான் பண்ணிக்கணும். மறுபடியும் எழுந்திருச்சு ஓட எனர்ஜியையும் நாமே தான் ஏற்படுத்திக்கணும். எல்லாமே நமக்கு நாமே செஞ்சு பழகும் போது நம்மள அறியாம ஒரு சீரியசான பர்சன் வந்துடுறாங்க. அப்படியே நடமாடினா நம்ம பக்கத்துல கூட யாரும் வர மாட்டாங்க. அதுக்கு தான் எப்பவும் ஜாலி வேஷம். நாம சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கும்போது நம்மள சுத்தி ஒரு கூட்டம் இருக்கும் நம்ம சந்தோஷம் அவங்களையும் ஒட்டிக்கும் அவங்க சந்தோஷம் நமக்கும் ஒட்டிக்கும். ஒரு செயின் ரியாக்ஷன்.” என்று சிரித்தாள்