அடங்காத அதிகாரா 23
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 23
இரவில் கண்ணயர்ந்தவன் தன் கைபேசியை சத்தமில்லாமல் வைத்திருக்க பதினொரு மணிக்கு மேல் அவனது லேண்ட்லைன் அலறியது. .மெல்ல கண்களை தேய்த்துக் கொண்டு எழுந்தவன் நேரத்தைப் பார்த்ததும் யார் இந்த நேரத்தில் என்ற சந்தேகத்துடன் அதனை ஏற்றான்.
“என்ன மருமகனே நல்ல தூக்கம் போல?” என்று வந்த கேள்வியில் அவன் இதழ்கள் தன்னைப் போல புன்னகைக்கத் துவங்கியது.
“சொல்லுங்க அத்தை” என்று சாய்ந்து அமர்ந்தவன் அவனுடைய தாய் மாமன் மனைவி அர்ச்சனா என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தில் காதை கூர்மையாக்க,
“ம்ம் அத்தை அத்தைன்னு கூப்பிடுறது எல்லாம் வாய் வார்த்தை தான் போல மருமகனே! என்ன இருந்தாலும் இரத்த சொந்தம் தான் உசத்தின்னு காட்டிட்டிங்க பார்த்திங்கல்ல!” என்று மனத்தாங்கலுடன் பேசினார்.
“என்ன அத்தை இப்படி சொல்லிட்டிங்க?” என்று நீரூபன் பதற,
“ஆமா இத்தனை வருசமா நீங்களும் நானும் எப்படி பேசிட்டு இருக்கோம்? என்கிட்ட வந்து ஒரு வார்த்தை சொல்லாம, பேசாத உங்க மா..மா…ரு.. அபிப்பிராயம் தான் முக்கியம்னு போய் பேசி இருக்கீங்க!” என்று சலிக்க ,
“அத்தை நான் அவர் மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தானே போய் அவர் கிட்ட முதல்ல கேட்டேன். பூமிகா மனசுல ஆசையை விதைக்க கூடாதுல்ல!” என்று அவரிடம் உண்மையும் பொய்யுமாக அவர் வருந்தாதவாறு கூறினான்.
“ஆமா இனிமே தான் விதைக்கணுமாக்கும், அங்க விதை விழுந்து, முளைச்சு, பயிராகி, அறுவடைக்கு தயாரா இருக்கு. என்னமோ உங்க மாமா மாதிரி எங்களுக்கும் கண்ணு தெரியாது, உலகம் புரியாதுன்னு நினைச்சு ரீல் ரீலா சுத்தாதீங்க மருமகனே!” என்றார் அர்ச்சனா.
குபீரென்று சிரித்துவிட்ட நீரூபன், “உங்க பொண்ணு உங்க கிட்ட சொல்லிட்டாளா?” என்று ஆர்வமாக கேட்க,
“தாய் அறியாத சூலா? எல்லார் முன்னாடியும் பல்லைக் பல்லைக் காட்டிட்டு தனியா போய் வெறிக்க வெறிக்க வானத்தைப் பார்க்கும் போது பெத்த தாய்க்கு தெரியாதா பிள்ளை மனசு எங்கேயோ சிக்கி வலியில் தவிக்குதுன்னு.”என்று அர்ச்சனா கூற,
“நானும் அவ மனசு தெரிஞ்சும் மாமாவுக்காக தான் அமைதியா இருந்தேன் அத்தை. ஆனா சமீபமாக எனக்கு ஒரு சந்தேகம், மாமாவுக்கு உண்மையிலேயே என் மேல தான் வருத்தமா? அம்மா இறந்து போக நான் காரணம்னு தான் மாமா என்னை வெறுத்தாரா?” என்று கேட்க,
“இதென்ன அபத்தம்? அவர் உன் அம்மாவை தங்கையா இல்ல, மகளா வளர்த்தார். அவளுக்கு கல்யாணம் ஆகி நீங்க பிறக்குற வரையிலும் அவருக்கு ஒரு வாழ்க்கையை அவர் நினைக்கவே இல்ல. ஆனா..” என்று இழுத்தவர்,
“எப்படி மகளை ஒன்னுமே தெரியாத குழந்தையா நினைச்சு இன்னிக்கு உன்னைப் பத்தி பேசினாரோ அதே போல தான் அவர் எல்லாரையும் நம்பிக்கிட்டு இருந்தார். அப்பறம் சில அடிகள் நம்மளை வெறுத்துப் போக வைக்கும்ல, அப்படி வெறுத்து தான் யார் பக்கமும் போகாம, உங்க அப்பாவோட எந்த சகவாசமும் இல்லாம, முடிஞ்ச வரை அவரே உழைச்சு பணம் சேர்த்து வீடு கட்டி.. ஹம்ம்..” என்று பெருமூச்சு விட்டார்
“அப்ப மாமா என்னை இத்தனை வருஷம் தவிர்க்க காரணம் என்ன அத்தை?” என்று இறுகிய குரலில் அவன் வினவியதும்,
“அதை யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு உன் மாமாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன். அதை நான் மீற முடியாது. அவர் தான் உங்களை மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டாரே, நீங்களே ஒருநாள் அவரை கேட்டு தெரிஞ்சுக்கங்க மருகமனே! ” என்று அவனை சமாதானம் செய்தவர் இலவச இணைப்பாக மாமாவின் மனதையும் உரைத்துவிட நீரூபன் முகத்தில் மட்டட்டற மகிழ்ச்சி.
“சரிங்க மருமகனே! சண்டை போட தான் கூப்பிட்டேன். மாமியாரும் மருமகளும் தான் அடிச்சுக்கணுமா என்ன? இனிமே வாங்க நீங்களும் நானும் மல்லுக்கு நிப்போம்.” என்று அவர் நமுட்டு சிரிப்பு சிரிக்க, நீரூபன் வாய்விட்டுச் சிரித்தான்.
அதே மகிழ்ச்சியான மனநிலையில் உறங்கியவன் காலை எழுந்து அன்றாடப் பணிகளை கவனிக்க இயலாதபடி வேறு ஒரு பிரச்சனை அவனை சூழ்ந்து கொண்டது.
அவனுக்கு அதை தீர்க்கவேண்டிய கட்டாயம் இருந்ததால் கிளம்பி அவனது புதிய பள்ளிக்குச் சென்றான்
அங்கே அவனை சந்திக்க சிலர் வந்து காத்திருக்க அவர்களை சந்தித்து அனுப்பிவிட்டு யோசனையோடு அமர்ந்திருந்தான்.
இது போன்றதொரு பிரச்சனையை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
இதுவரை அவன் எதற்கும் செய்தியாளர் சந்திப்பு வைத்ததோ தான் தந்தை பெயரை பயன்படுத்தியதோ கிடையாது. ஆனால் இன்றைய சூழலை வளர விட்டால் அது நாளை பெரிய பூதமாக மாறக் கூடும் என்ற எண்ணம் அவனை சிந்திக்க வைத்தது.
சிந்தனை வயப்பட்டவனாக கரஸ்பாண்டன்ட் அறையில் அவன் அமர்ந்திருக்க, ஆனந்த் அவனிடம் அனுமதி வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
“சார் நீங்க கேட்ட லிஸ்ட் ரெடி பண்ணியாச்சு. நீ பார்த்து பைனல் பண்ணிட்டா அவங்களுக்கு கால் லெட்டர் அனுப்பிடலாம்” என்று அவன் முன்னே சில கோப்புகளை வைத்தான்.
அதையே உற்று நோக்கிய நீரூபன், “உனக்கு இது சரியா வரும்ன்னு தோனுதா ஆனந்த்?” என்று வினவ, புரியாது விழித்தான் அவன்.
“என்ன டா நம்ம கிட்ட கேட்கிறார்ன்னு தோனுதா? இந்த சில நாட்கள்ல உன் வேலைத்திறன் ரொம்பவே அருமையா இருந்தது. புத்திசாலி தானே நீ! இந்த கேள்விக்கு பதில் சொல்லு. இந்த லிஸ்ட், இந்த ஐடியா, இந்த ஸ்கூல் இதெல்லாம் சரியா வருமா?” என்று அழுத்தம் திருத்தமாக வினவினான்.
“நீங்க கேட்கறதுனால சொல்றேன் சார். வேற எவனுக்கும் இந்த எண்ணம் வராது சார். உங்க நல்ல மனசு வராது. இப்படி கூட உதவ முடியும்னு இந்த டாக்குமெண்ட் பார்த்த பின்னாடி தான் சார் எனக்கு தெரியும். இதை நிறைய பேர் எதிர்ப்பாங்க. கண்டிப்பா கொடி தூக்கி கோஷம் போடுவாங்க. ஆனா இதை நீங்க நடத்திக் காட்டிட்டா புரட்சி சார்” என்று கண்களை துடைத்துக் கொண்டான்.
“எனக்கு நம்பிக்கை இருந்தது ஆனந்த். ஆனா எதிர்ப்பு ரொம்ப பலமா இருக்கு. அதுவும் நான் நினைச்சுப் பார்க்காத இடத்தில் இருந்து.” என்று அவன் தன் டேபிளில் கையூன்றி அதனை கோர்த்துக்கொண்டு தாடையை அதில் பதித்தான்.
“வரட்டும் சார். நீங்க ஒன்னும் யாரும் இல்லாத ஆள் இல்லையே! அவன் அவன் வார்டு கவுன்சிலர் பிரெண்ட்ன்னு சொல்லிட்டு ஊர்ல இல்லாத அலப்பறை செய்யுறான். ஆனா நீங்க முன்னாள் முதல்வர் பையன், கரன்ட் அபோஷிஷன் பார்ட்டி லீடர் பையன். உங்களுக்கு ஒன்னுன்னா மொத்த கட்சியும் வராதா?” என்று ஆனந்த் வேகமாக கேட்டான்.
“அப்படி யாரும் வந்து நிக்கிற நிலையை நான் உருவாக்க கூடாதுன்னு தான் ஆனந்த் என் அடையாளத்தை நானே உருவாக்கினேன்.” என்று சலிப்பான குரலில் கூறினான் நீரூபன்.
“சார் தப்பா நினைக்காதீங்க, சினிமாக்காரன் மூளை இப்படி தான் யோசிக்க சொல்லுது. நாம ஏன் இந்த விஷயத்தை அட்வர்டைஸ்மெண்ட் மாதிரி சின்னதா ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்க கூடாது. மீடியாவோ கோர்ட் கேசோ முதல்ல வந்தா நாம சொல்றது எடுபடாது. ஆனா நாமளே நேரடியா மக்கள் கிட்ட விஷயத்தை கொண்டு போயிட்டா? அவங்க சப்போர்ட் கிடைக்கும்.” என்று ஆனந்த கூற,
“சபாஷ். நான் நேத்ரா கிட்ட பேசுறேன். கேம்பெயின் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நம்ம ஸ்கூல் விளம்பரத்தை சோஷியல் மீடியால கொண்டு வருவோம் “என்று நம்பிக்கையுடன் கூறினான்.
“இப்ப இந்த லிஸ்ட் செக் பண்றீங்களா?” என்று ஆனந்த் சிரிக்க,
“பண்ணிட்டா போச்சு” என்று இலகுவாக அமர்ந்த நீரூபன்,
“உன் பிரெண்ட் என்னை லவ் பண்ணுற விஷயம் எனக்கு தெரியும். அவங்க அப்பா கிட்ட பேசிட்டேன். அவருக்கு சம்மதம் தான் போல. அத்தை சொன்னாங்க.”என்று அந்த காகிதத்தைப் பார்த்தபடி கூறினான்.
ஆனந்துக்கு மகிழ்ச்சியில் குதிக்க வேண்டும் போல இருந்தது. ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,
“ஐம் சோ ஹேப்பி ஃபார் போத் ஆப் யூ சார்” என்றபடி நின்றான்.
நிரூபன் சிரித்துவிட்டு விடைபெற, ஆனந்தும் தன் பணியைத் தொடர அலுவலகம் கிளம்பினான்.
அன்று திடீரென பெரிய நட்சத்திர நடிகரின் படத்திற்கான பாடல் ஒளிப்பதிவு வந்து விட்டது.
அதற்கான குரூப் டான்ஸர்களுக்கு நடன அசைவுகளை பொறுமையாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் பூமிகா.
அவள் எத்தனை முறை பயிற்றுவித்தும் சிலர் தாளத்தை விட்டுவிட, லேசாக எரிச்சல் அடைந்தவள்,
“நீங்க என்ன இன்னிக்கு நேத்தா பேக் அப் டான்ஸர்ஸா இருக்கீங்க. பீட் மிஸ் பண்ணாம ஆடத் தெரியாதா? அந்த ஸ்டாரோட ஃபேன் குரூப் படத்தை விட பாட்டை தான் தலை மேல் வச்சு ஆடுவாங்க. அவரோட காம்படிட்டர் ஃபேன்ஸ் இதான் சாக்குன்னு பேக் டான்ஸர் விடுற சின்ன மூவ்மெண்ட் கூட பார்த்து சோஷியல் மீடியால.போட்டு கலாய்ப்பாங்க. பிளீஸ் ஒழுங்கா ஆடுங்க.” என்று கத்திவிட்டு தான் போட்டிருந்த சட்டையை கழற்றி திரைப்பட பாடலுக்காக போடப்பட்ட செட்டுக்கு கிளம்ப வேறு சட்டைக்கு மாறினாள்.
காலை முதலே நீரூபனை பார்க்க இயலாத கோபமும் , தந்தை சம்மத்ம் தெரிவித்து விட்டதை அவனிடம் சொல்லி மகிழ முடியாத வேதனையையும் சகிக்க முடியாமல் பிராக்டிஸ் செய்ய போட்டுக்கொள்ளும் சட்டையில் நிற்காமல் ஒரு மணிநேரம் நடனமாடி களைத்து போயிருந்தாள். திடீரென மாஸ்டர் வேறு இவளை பேக் அப் டான்சர்களுக்கு பயிற்சி கொடுக்க சொல்ல, அவர்களும் திடீர் ஷெட்யூலில் குழம்பி தாளத்தை விட்டு, என்றும் இல்லாத திருநாளாக தேன் போல பேசும் பூமிகாவிடம் அன்று தேனீ கொட்டுவது போல வாங்கிக் கொண்டனர்.
எரிச்சலோடு உடை மாற்றும் அறையில் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டு செல்போனில் நீரூபனை அழைக்கலாமா வேண்டாமா என்று மனதில் அவள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க,
அவள் எண்ணத்தின் நாயகன் அவளை வீடியோ காலில் அழைத்திருந்தான்.
ஒரு நிமிடம் திகைத்தவள் சட்டென்று அதனை ஏற்றதும்,
“ஏய் பாப்பா என்ன பண்ற?” என்று முகத்தில் குறும்பு கூத்தாட வினவிய நீரூபன் பூமிகாவுக்கு முற்றிலும் புதியவன்.
அவள் “மாமா” என்று திணற,
“என்ன காலைல என்னை பார்க்க போயிட்ட, எத்தனை பேரை கடிச்ச? எவ்ளோ ஆக்ஸிடென்ட் கேஸ், வேற எதுவும் சீரியஸா நடக்கலையே!”என்று மேலும் அவளை கேலி செய்ய, இம்முறை “மாமா” என்று சிணுங்க ஆரம்பித்தாள்.
“உண்மையை சொல்லவா பாப்பா, எனக்கும் உன்னை பார்க்காம காலைல எந்த முடிவையும் சரியா எடுக்க முடியல. ஆனந்த் கிட்ட கூட ஐடியா கேட்டேன்” என்று அவன் கூற
“அவன் ஐடியா எதுவும் சரியா வொர்க் ஆகாது மாமா. நான் வேணா வரவா?” என்று ஆர்வமும் கேலியுமாக அவள் பேச,
“ஆபிஸ்ல தான் இருக்கான். அவன் கிட்ட சொல்றேன்.” என்று நீரூபன் சிரிப்பை அடக்கிக் கூற,
“நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன் மாமா. பிளீஸ் அந்த பம்பிளிமாஸ் கிட்ட மட்டும் போட்டுக் கொடுக்காதீங்க.” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
“என்ன கேட்டாலுமா? அப்பறம் பேச்சு மாறக் கூடாது..” என்று அவன் விஷமமாக சிரிக்க,
சில நிமிடங்கள் தொடர்ந்த அவர்கள் பேச்சில் அவள் முகம் மலர்ந்து விட, அவன் அழைப்பை துண்டித்ததும், நடனக் குழுவுடன் பாடலுக்காக அமைப்பக்கபட்ட செட்டிற்கு சென்றாள்.
அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் சட்டை அங்கே அவர்களுக்கு பயிற்றுவிக்க சிரமமாக இருக்க, சட்டென்று கேரவேன் சென்று இலகுவான சட்டைக்கு மாறி மீண்டும் அவர்களுக்கு பொறுமையாக கற்றுக் கொடுத்தாள்.
அவர்களும் திரைப்படத்திற்கு அணியும் உடையுடன் அவள் கற்றுத் தந்த அசைவுகளை சரியாக பிடித்து ஆடிவிட, அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
முன்பிருந்த சில தவறுகள் இப்பொழுதும் நிகழ்ந்தாலும் அவை பூமிகாவின் கண்களுக்குப் புலப்படாமல் போனது அவர்கள் செய்த மாற்றமா, அல்லது நீரூபன் செய்த வீடியோ காலின் மயமா? யார் அறிவார்?