அடங்காத அதிகாரா 20

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தன் முன்னே காட்டப்படும் புள்ளி விபரங்களை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தான் வசீகரன்.

எதிரே இருந்த டிஜிட்டல் போர்டில் கட்சிப் பணிகள், அதில் இருக்கும் இடர்பாடுகள், ஏற்கனவே வந்த கருத்துக்கணிப்பு முடிவுகள், எடுக்க வேண்டிய அதிரடி முடிவுகள் என்று தொகுதி வாரியாகப் பிரித்து அதிநுணுக்கமான விபரங்களைக் கூட அளித்திருந்தது அவர்களின் நிறுவன புள்ளியியல் துறை.

அதனை மெச்சிக் கொண்டு வசீகரனுக்கு விளக்கிக் கொண்டிருந்தாள் நேத்ரா.

“ஏன் ஐஸ், இப்ப நீ சொல்ற மாதிரி ஒரே போஸ்டர் டிசைன், ஒரே மாதிரி விளம்பரங்கள் எல்லா ஊருக்கும் எப்படி பொருந்தும்?” என்று அவளிடம் சந்தேகம் கேட்டான்.

“இப்ப நீ கட்சியோட ஆழமான இடத்தில் கேள்வியை வச்சிருக்க. ஒவ்வொரு தொகுதிக்கும் முக்கிய புள்ளி மாறுபடுறாங்க. ஆனா போஸ்டர் டிசைன் பண்ணி மார்கெட் பண்றது யார் காசு கொடுக்குறானோ அவனோட ஆளுங்க தான். அப்ப கட்சி முக்கிய புள்ளி போட்டோவுக்கு இணையா அவனும் போட்டுக்கறான். இதையே காட்டி ஊருக்குள்ள பெரிய ஆளுன்னு இல்லாத அலப்பறை பண்ணி, கட்சி பேரை கெடுக்குறான். இதை தடுக்க தான் இந்த போஸ்டர் டிசைன் பாலிசி.”

“இப்ப மட்டும் எப்படி இது தடுக்க முடியும்ன்னு நீ நினைக்கிற? பணம் அவன் தானே கொடுக்கணும்? அப்ப அவன் போட்டோ போடதானே செய்வான்?”

“அதான் இல்ல. கட்சி ஆளுங்க போஸ்டரை கண்டவனை அடிக்க சொல்றதால் தான் இந்த பிரச்சனை வருது. தொகுதி செலவுக்கு பணம் கொடுத்தா அதையும் பாக்கெட்ல போட்டுட்டு, இப்படி ஆளுங்களை வளர விட்டிருக்காங்க. இப்ப நாம ஒரு மாடலை கொடுத்து இப்படி தான் செய்யணும். மாற்றம் இருந்து அது தலைமை கண்ணுல பட்டா நடவடிக்கை எடுப்போம்னு சொன்னா, அவங்க அதை ஃபாலோ பண்ணி காசு கொடுக்கறவன் கிட்ட சொல்லி செய்ய முடியாது. ஏன்னா அவனுக்கு பலன் இல்லாததை அவன் செய்ய மாட்டான்.”

“வேற வழி இல்லாம இவங்களே தான் அதை தயார் செய்யணும். அப்படித்தானே?” என்று வசீகரன் கேட்க,

“எஸ். நாளைக்கு என் அப்பாவை இம்ப்ரஸ் பண்ண நான் சொல்லி இருக்குற இந்த நாலு பாயிண்ட் போதும். விளம்பரம், உள்கட்சி விதிமுறை, அதை கண்காணிக்க குழு, வேட்பாளர் தேர்வு முறை. இதுல மட்டும் சரியா நடந்தா கண்டிப்பா உள்ளாட்சி தேர்தலை தட்டி தூக்கிடலாம்.”என்று நேத்ரா உறுதியாகக் கூறினாள்.

“ஏன் ஐஸ் உனக்குள்ளே இப்படி ஒரு அரசியல் ஞானம் இருக்கறது தெரியாம போச்சு பாரு. எப்படி டார்லிங் இப்படி எல்லாம் யோசிச்ச?” என்று அவன் அவள் அருகில் வந்து நிற்க,

“நான் எங்க டா யோசிச்சேன்? இதெல்லாம் அண்ணா சொன்னது. சிம்பிளா சொல்லி, இதை வச்சு ரெடி பண்ணி மெயில் அனுப்பு, வேற பாயிண்ட் இருந்தா நான் சேர்த்து தர்றேன்னு சொன்னாங்க. காலைல அனுப்பினேன். ஓகே சொல்லிட்டாங்க. அதான் உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணி நாளைக்கு அப்பாவை பார்க்க அனுப்பலாம்னு கூப்பிட்டேன்.” என்று மீண்டும் டிஜிட்டல் போர்டில் கண் பதித்தாள்.

“உன் அண்ணா ரொம்ப ஜீனியஸ். அவரை புரிஞ்சுக்க தான் முடியல. ஆனா பார்த்தாலே நமக்கு ஒரு வைப்ரேஷன் கிடைக்குது.”என்று ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தான்.

“எப்படி டா இப்படியா?” என்று அவனை முன்னும் பின்னும் அசைத்துக் காட்டி நேத்ரா கேலி செய்ய,

“ஓய் ஐஸ் லொள்ளு தானே உனக்கு ?”என்று அவளை நோக்கி அவன் வர அவள் விலகி ஓடினாள்.

முன்னிரவு நேரம் என்பதால் அலுவலக முடிந்து அனைவரும் கிளம்பி இருக்க,
ஆளில்லாத அந்த அலுவலகத்தில் இருவரும் ஆட்டம் காட்டி விளையாட, நீண்ட நாட்களுக்குப் பின் இருவரும் சிரித்துக் கொண்டே பின்னாலிருந்து அணைத்தான் வசீகரன்.

வசீகரனின் சூடான மூச்சுக் காற்று பட்டதும் நேத்ரா கண்களை மூடிக்கொண்டு,

“வசீ இது ஆபிஸ் டா” என்று முனக,

“தெரியுது, அதான் யாரும் இல்லையே!” என்று அவளை அணைப்பில் இருந்து விலக்கமால் கூறினான்.

அவளுக்கு அவனை விட்டு விலக மனமில்லை. அவனுக்கு அவளை விட்டுவிடும் எண்ணமில்லை.

இருவரும் அமைதியான அந்த மோன நிலையை அனுபவித்தனர்.

கல்லூரி நாட்களில் எந்த தடையுமின்றி காதலில் ஓடி ஆடி மகிழ்ந்து இருந்தனர்.

நேத்ராவின் தொழில் பிரவேசம் இருவருக்குள்ளும் செலவான நேரத்தை கொஞ்சம் கடித்து எடுத்துக் கொண்டது.

அவளுக்கு இணையாக அவனும் தொழிலில் கால் பதிக்க, நெருக்கப் பொழுதுகள் குறைந்து செல்போனில் காதல் வளர்த்து வாரம் மூன்று முறை சந்தித்துக் கொண்டனர்.

இப்பொழுது இந்த புதிய கம்பெனியால் அவர்கள் சந்தித்துக் கொண்டாலும் காதல் கனிந்த பார்வைகள் எல்லாம் வெகுவாக குறைந்து வேலையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வர, இன்று தான் இருவரும் இறுக்கம் தளர்ந்து தங்களை இறுக்கிக் கொண்டுள்ளனர்.

அவளது வாசனை நுகர்ந்தவன், “சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும் ஐஸ். ஐ பெட்லி நீட் யூ.” என்று காதில் முணுமுணுக்க,

“அண்ணா கிட்ட சொல்றேன் டா” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினாள் நேத்ரா.

சட்டென்று விலகியவன், “ஏன் டி ஏன்?? மாமா என்னை தப்பா நினைக்கவா?” என்று முறைக்க,

அவள் சிரிப்பு சத்தம் அவ்வறை முழுவதும் நிறைந்தது.


அலுவலகத்தில் அமர்ந்து பைல்களை பார்த்து கையொப்பமிட்டுவிட்டு மனைவியின் கட்டளைப்படி மதிய உணவுக்கு வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் திருமூர்த்தி.

அவர் முதல் தளத்தில் உள்ள தன் உதவியாளரை அழைத்து அடுத்த நாள் சந்திக்கவிருக்கும் வசீகரன், மற்றும் இருவர் பெயரை சொல்லி சந்திப்பு நேரத்தை உறுதி செய்து வைக்குமாறு கூறிவிட்டு திரும்ப, அவரை நோக்கி வந்து கொண்டிருந்தான் ராக்கேஷ்.

அவனைக் கண்டு சிறிய புன்னகை உதிர்த்தவர்,

“என்னப்பா எதுவும் புது காண்ட்ராக்ட் வருதா? ஆபிஸ் பக்கம் வந்திருக்க?” என்று அவன் வருகைக்கு காரணம் விளம்ப,

“இல்ல மாமா உங்களை பார்க்க தான் வந்தேன்” என்று அவருடன் இணைந்து நடந்தான்.

“சொல்லுங்க” என்று பேசிக்கொண்டே அவரும் நடக்க,

“ஏதோ கார்ப்பரேட் கம்பெனிக்கு நம்ம உள்ளாட்சி தேர்தல்ல ஜெயிக்க வைக்க..”என்று இழுக்க

“ம்ம் என் ஆபிஸ்லையே ஆள் வச்சு பார்க்கறியா பா? நீயா இல்ல என் பொண்ணா?” என்று அரசியல் சாணக்யன் என்பதை நிரூபித்தார்.

“ஐயோ மாமா ஆள் எல்லாம் வைக்கல. நேத்து வந்தேன். இந்த மாதிரி கம்பெனி ஆள் வர்றாங்கன்னு கேள்விப்பட்டேன். சரியா தெரியாம கேட்கக் கூடாதுனு தான் முழுசா கூட கேள்வியை முடிக்கல.” என்று அவனும் தான் நரித்தனத்தைக் காட்டினான்.

“ஆமா பா. ஒரு கம்பெனிக்கு வேலையை கொடுத்துட்டேன். அவங்க சொல்றபடி செய்து நாம ஜெயிச்சா பர்சண்டேஜ் பேசிஸ்ல கமிஷன் வாங்கிப்பாங்க. பேசினா வரை நல்லா பண்றாங்க.” என்று நிறுத்திக் கொண்டார்.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நானும் அவங்க கூட சேர்ந்து வேலை செய்யலாமா மாமா?”என்று பணிவுடன் வினவினான்.

சற்று நேரம் சிந்தித்தவர், “நாளைக்கு ரெண்டு பேரை வரச் சொல்லி இருக்கேன். நீங்களும் வாங்க, அந்த கம்பெனி எம்.டி வசீகரனும் வருவாரு. பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.” என்று கூறினார்.

“ஏன் கேட்டேன்னா மாமா, அடுத்த சட்டமன்ற எலெக்ஷன்ல எம்.எல்.ஏ சீட் கேட்கலாம்ன்னு இருந்தேன். இப்ப இருந்தே கட்சி வேலையெல்லாம் செய்தா தானே சரியா இருக்கும்.” என்று அவன் மனதில் இருந்ததை நைசாக அவரிடம் கூறிவிட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவர் திகைப்பார், கோபம் கொள்வார், குறைந்தபட்சம் ஏதாவது சொல்வார் என்று ராக்கேஷ் எதிர்பார்த்திருக்க,

அவரோ ‘நான் பழுத்த அரசியல்வாதியடா!’ என்று அவனுக்கு கூறும் வகையில் சிரிப்புடன்,” மதியம் சாப்பிட வீட்டுக்கு போறேன் வர்றீங்களா?” என்று வினவினார்.

“இல்ல மாமா” என்று திணறலாக பதிலுரைத்துவிட்டு விடைபெற்றான் ராக்கேஷ்.


ஆனந்த் அந்த பூங்காவின் இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

பூமிகா முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு என்னவென்று அவன் வினவியதற்கு அப்பறம் மீட் பண்ணும்போது சொல்றேன் மச்சி என்று டாடா காட்டி சிட்டாக பறந்து விட்டாள்.

அவனால் நீரூபனிடம் சென்று என்னவென்று வினவ முடியாது அதனால் மதியம் முதலே அவளை கைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்தான்.

ஒரு கமர்ஷியல் படத்தின் கானாப் பாடல் காட்சி படமாக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் கைபேசியை சைலண்ட் மோடில் வைத்துவிட்டு நடனக் குழுவுக்கு அசைவுகளை கற்றுக் கொடுத்து கொண்டிருந்தாள் பூமிகா.

மாலை மங்கிய பின் தான் அன்றைய ஷெட்யூல் முடிவுக்கு வந்திருந்தது.

இனி நள்ளிரவில் நாயகன் நடமாடும் காட்சியை அவளது குருநாதர் பார்த்துக் கொள்வார் என்பதால் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு வண்டியை எடுக்க வந்தவள் கைபேசியை கவனிக்க ஆனந்தின் அழைப்புகள் கண்டு அவனை தொடர்பு கொண்டாள்.

“சொல்லு மச்சி, எதுக்கு இத்தனை கால் பண்ணி இருக்க?” என்று வினவியபடி வாகனத்தை பின்னே நகர்த்தினாள்.

“எங்க டி இருக்க பூகம்பம்?” என்று கோபத்தில் குதித்தவனிடம்,

“டேய் மாமா கண்டிஷன் போட்டு வேலைக்கு சேர்த்தார்ன்னு நீ சொன்னதால் தான் டா உன்னை டிஸ்டர்ப் பண்ணாம வண்டில நானே போயிட்டு வந்துட்டு இருக்கேன்.” என்று உதடு பிதுக்கி பரிதாபமாக கூறினாள்.

“ஆமா நான் டிரைவர் வேலை பார்த்ததுக்கு பலன் கிடைச்ச பின்னாடி நான் எதுக்கு இடைஞ்சலா?” என்று எரிந்து விழுந்தான்.

“மச்சி ஏன் இவ்வளோ சூடா இருக்க?”என்று பாவமாக கேட்டவளிடம்,

“நான் இங்க பக்கத்துல கார்ப்பரேஷன் பார்க்ல வெயிட் பண்றேன். பத்து நிமிஷத்துல வர்ற.” என்று அழைப்பை துண்டிக்க நண்பனின் கோபத்துக்கு காரணம் தெரியாமல் வேகமாக அவன் குறிப்பிட்ட பார்க்கை நோக்கிச் சென்றாள்.

அவள் வாகனத்தை நிறுத்தும் போதே அவளைக் கண்டு அவன் வேகமாக எழுந்து வந்தான்.

“என்ன மச்சி ஏன் அவ்வளவு கோபம்?” என்று அவனை பார்த்து அவள் வினவ,

“காலைல என்ன நடந்தது?” என்று ஆர்வமாக வினவினான்.

“என்ன ஆச்சு? ஒன்னும் இல்லையே!” என்று தோளை குலுக்க,

“அப்படியே ஒன்னு வச்சேன்னு வை, மூஞ்சில வடாபாவ் சைசுக்கு வீக்கம் வந்துடும். பொய் சொல்ற?” என்று காதைப் பிடித்துத் திருகினான்.

“விடு மச்சி விடு.. ஐயோ வலிக்குது டா. மாமாவுக்கு என் லவ் புரிஞ்சிடுச்சாம் மச்சி. என் அப்பாவுக்காக விலகி நிக்கிறாராம்.” என்று வலியுடன் வேகமாகக் கூறினாள்.

அவள் கூறி முடித்ததும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஆனந்த்,

“ஏய் பூமி.. சூப்பர் டி. ஐம் சோ ஹேப்பி ஃபார் யூ.” என்று அவள் உச்சியில் முத்தம் பதித்தான்.

அவள் அவன் தோள் வளைவில் தலையால் முட்டி, “காது வலிக்குது டா பிசாசு.” என்று சிரித்துக் கொண்டே கூற,

“என்னை காலைல இருந்து என்ன என்னனு தலையை பிச்சிக்க வச்சதுக்கு இது கூட இல்லன்னா எப்படி டி? அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். நீ வெட்கமெல்லாம் பட்டுட்டு போன, விஷயம் என்னனு தெரியாம எனக்கு எப்படி இருந்திருக்கும்?” என்று கேட்க,

இன்னும் அவன் கை வளைவில் கொண்டிருந்தவள், “அப்பா கிட்ட பேசிட்டு அவர் முடிவை சொல்றேன்னு சொன்னார் டா. அதான் உன்கிட்ட சொல்லி நீ இப்படி சந்தோஷப் பட்டு, அப்பறம் என் அப்பா ஏதாவது சொல்லி.. ம்ச் சரியா வரலன்னா நான் கூட மாமாவை நினைச்சுகிட்டு வாழ்ந்திடுவேன் டா. ஆனா நீ என்னை நினைச்சு ரொம்ப கஷ்டப்படுவ. அதான் எல்லாம் தெரிஞ்ச பின்னாடி சொல்ல நினைச்சேன்.” என்று அவன் கண்களை பார்த்துக் கூறினாள்.

அவனது தாடையை அவளது உச்சியில் பதித்தவன், “அப்படி எல்லாம் நடக்காது டி. நான் உன் காதலை மூணு வருஷத்துக்கும் மேல பார்த்துட்டு இருக்கேன். நீ அவர் மேல வச்சிருக்கறது காதல், பாசம், அன்பு எல்லாம் தாண்டி அவர் மேல உனக்கு ஒரு.. ஒரு.. ஆராதனை உணர்வுன்னு சொன்னா சரியா இருக்குமா? ஆண்டாள் அரங்கனை எந்த பிரதிபலனும் இல்லாம காதலிச்சது போல, கடவுள் மேல நாம வைக்கிற அந்த பரிபூரண நம்பிக்கை போல, நீ உன் மாமாவை பரிபூரணமா மனசுல நிறைச்சு வச்சிருக்க டி.

உன் காதல் வேற மாதிரி டி. உன் அப்பா அதுக்கு குறுக்க நிக்க மாட்டார். அவரோ இல்ல எதுவோ குறுக்க வந்தாலும் உனக்காக நான் அதை உடைக்க முதல் ஆளா வருவேன் டி.” என்று கூறினான்.

“டேய் என்ன டா இவ்ளோ சென்டிமென்ட்டா பேசுற? படத்துக்கு டயலாக் எழுத முடியாத குறையை என்கிட்ட போக்கிக்கிறியா டா நண்பா?” என்று சூழ்நிலையை இலகுவாக்க அவனை கேலி செய்தாள்.

“சொல்லிக்க. நான் உன்னை திட்ட மாட்டேன். இன்னிக்கு நான் சந்தோஷமா இருக்கேன். வா ஐஸ்கிரீம் வாங்கித் தர்றேன்” என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் சற்று தள்ளிச் சென்று “உன் காசுல” என்று சொல்ல,

“அடேய்” என்று அவனை துரத்த ஆரம்பித்தாள்.