அடங்காத அதிகாரா 19

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள திடலில் கூட்டம் அலை மோதியது.

மறுமலர்ச்சி மக்கள் கழகம் என்று பெண்கள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருக்க, அதில் உரையாற்ற கட்சியின் மகளிர் அணித் தலைவியான அஞ்சனா வருவதாக இருக்க போலீஸ் படை அங்கே குவிக்கப்பட்டிருந்தது.

கட்சியில் ஆண்களுக்கு எந்த அளவுக்கு அஞ்சனாவை பிடிக்காதோ அதே அளவுக்கு பெண்களுக்கு அவளை பிடித்தது.

பெண் ஒருவர் வீட்டைத் தாண்டி அரசியலில் தடம் பதித்து ஆண்களுக்கு இணையாக போராடுவது அவ்வளவு சுலபமான விஷயமன்று.

அதிலும் அஞ்சனா படித்த பெண். தலைவரின் மகள், அவரின் அரசியல் வாரிசு என்று பெருமையோடு அவளை பின் தொடர்வர், குழந்தை இல்லை, கணவரை மதிப்புடன் நடத்துகிறார் என்ற காரணங்களை முன்னிறுத்தி சிலருக்கு அவள் மேல் பரிதாபமும் மரியாதையும் இருந்தது.

அன்று அஞ்சனா மதுரையில் உள்ள கட்சியின் அலுவலகத்திற்கு வந்து அந்த தொகுதி முக்கியஸ்தர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தாள்.

பலரும் மக்களுக்கு ஆளுங்கட்சி மேல் அதிருப்தி இருந்தாலும் நம்மை தேர்ந்தெடுக்க தயாராக இல்லை என்று கூறினர்.

அவள் அதற்கு காரணம் கேட்க, “தெரியலம்மா முன்னாடி கூட்டம், மாநாடு ஏற்பாடு பண்ணினா ஆளுங்க தன்னைப் போல வந்துடுவாங்கம்மா. ஆனா இன்னிக்கு சுத்தி உள்ள எல்லா கிராமத்துக்கும் மினி வேன் அனுப்பி, எல்லாருக்கும் இராத்திரிக்கு பிரியாணி தர்றதா சொன்னதும் தான் பாதி பேர் வந்தாங்க. இதுல பொம்பளைங்க நிறைய பேர் பாட்டில் இல்லையான்னு கேட்டுட்டு இருக்காங்களாம். இப்ப தான் நம்ம கட்சி பையன் போன் பண்ணி சொன்னான்.” என்று வருத்தமாக கூறினார்.

“நான் என்ன செய்யறதுன்னு பார்க்கறேன். நீங்களும் சும்மா கொடி கட்டி, பேனர் வச்சு, போஸ்டர் ஒட்டுறதோட நிறுத்தாம அப்பப்ப மக்களை சந்திச்சு நல்ல பேர் வாங்க பாருங்க. ஆளுங்கட்சி ஆளுங்கள வம்புக்கு இழுக்காம அவங்க செய்யாம விட்டத வீடியோ எடுத்து சோஷியல் மீடியல போட்டு, நம்ம ஐடி விங்குக்கு தகவல் சொல்லுங்க. அப்ப தான் அதை டிரெண்ட் பண்ணி அவங்களை ஓரங்கட்ட முடியும்.” என்று அவர்களுக்கு கட்டளை பிறப்பித்து கொண்டிருந்தாள்.

உச்சி வெயில் கொஞ்சம் இறங்கியதும் நாலு மணிக்கு கூட்டம் மாநாடு திடலை நோக்கி சாரை சாரையாக வரத் துவங்கினர்.

ஆட்டமும் பா இரண்டு மணி நேரம் கழிய, ஆறு மணிக்கு வரிசை கட்டி வந்த ஏழு கார்களில் நடுவில் இருந்த காரில் இருந்து இறங்கினாள் அஞ்சனா.

வெளீர் நிற சேலையில் கரைகளில் கட்சிக் கொடியின் நிறங்கள். பளிச்சென்று இருந்த அவளது வதனத்தில் மிதமிஞ்சிய நம்பிக்கையும் கர்வமும் இருந்தது.

கூட்டத்தின் அளவு அவளை அவர்களது கட்சி நல்ல இடத்தில் இருப்பதாக மாயையை ஏற்படுத்தியது. கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சொன்னதெல்லாம் மறந்து கர்வம் தலைக்கேற மேடையின் நடுவில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் சிலர் பேசிய பின் அவளை பேச வரும்படி அழைக்கும் போது, பெண் சிங்கம், கட்சியின் விடிவெள்ளி என்று பல அடைமொழிகள் கொடுத்து அவளது தலையில் கூடை கூடையாக ஐஸ் கட்டிகளை கொட்டினர்.

மேடையில் இருந்த மைக்கின் முன் நின்றவள் கட்சியின் மூத்த தலைவர்கள், தன்னுடைய தந்தை பற்றி எல்லாம் பெருமை பேசி அவர்களை புகழ்ந்து விட்டு,

“இன்றைய ஆட்சியில் மக்களுக்கு என்ன நல்லது நடக்கிறது என்று நானும் மைக்ரோஸ்கோப் வைத்து தேடுகிறேன். ஆனால் ஒன்றும் கண்களில் அகப்படவில்லை.

அவர்களது கட்சி ஆட்களுக்கு காண்ட்ராக்ட் கொடுப்பது, போட்ட சாலையையே மீண்டும் மீண்டும் தோண்டி போடுவது, என்று வேலை செய்வது போல காட்டிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் ஏதும் செய்யவில்லை.

ஆனால் நமது ஆட்சி இருந்தபோது சாலை இல்லாத பல கிராமங்களுக்கு சாலை வசதியும் மின்சார வசதியும் செய்து கொடுத்தோம். ஆனால் இன்று அந்த சாலைகள் பராமரிப்பு இல்லாமல் சேதமாகி இருப்பதை வரும் வழில் கண்ட என் கண்களில் கண்ணீர் பெருகியது.

செய்து வைத்த நல்லவைகளை போற்றி பாதுக்காக்க தெரியாத அரசு, மக்களுக்கு புதிய நலத்திட்டங்கள் ஏதும் அறிவிக்கவும் இல்லை. இதைப் பற்றி சமூக வலைதளங்களில் நாங்கள் பேசினாலும் எங்களை அவமானப்படுத்துவது போல இடுகை பதிவு செய்வது, பின்னூட்டமாக அதில் வன்மத்தை விதப்பது என்று அவர்கள் செய்வதெல்லாம் மக்களுக்கு கேடு மட்டுமே.

நமது ஆட்சி என்று மலர்கிறதோ அன்று தான் மக்களுக்கு மறுமலர்ச்சி கிடைக்கும்” என்று கையுயர்த்தி அவள் கூற,

பேச்சை முடித்தவுடன் கிடைக்கும் பிரியாணிக்காக பலரும் கை தட்டி அவளை வழியனுப்பி வைத்தனர்.

மாநாடு முடிந்து காரில் அவள் அடுத்த மாநாடு நடக்கும் குமரி மாவட்டத்துக்கு சென்று கொண்டிருக்கும் வேளையில், அவளது ஒற்றனாக இருக்கும் கட்சியின் தொண்டன் ஒருவன் அவளை அழைத்து,

“அம்மா இன்னிக்கு ஐயா யாரோ ஒரு கம்பெனி ஆளை வர சொல்லி பேசிட்டு இருந்தார் மா. ஏதோ தேர்தல் வேலையெல்லாம் அவங்க தான் செய்வாங்களாம். அவங்க கூட சேர்ந்து வேலை செய்ய தனியா ரெண்டு பேரை வரச் சொல்லி ஆள் அனுப்பி இருக்கார் மா.” என்று போட்டுக் கொடுத்தான்.

தன் தந்தை பல வருடங்களாக தன்னைக் கேட்காமல் எந்த முடிவும் எடுப்பதில்லை என்பதை அறிந்திருந்த அஞ்சனாவுக்கு இன்று அவர் தான் இல்லாத நேரத்தில் பெரிய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாநாட்டை ரத்து செய்துவிட்டு அவளால் சென்னை திரும்பவும் முடியாது. அவர் முடிவு செய்த பின் அதனை எதிர்த்து பேசுவது அவருக்கு தன் மேல் அதிருப்தியை ஏப்படுத்தும். என்ன செய்வது என்று சிந்தித்தவள் ராக்கியை அழைத்து விஷயத்தைக் கூறி அந்த இருவர் குழுவில் ஒருவராகவோ அல்லது மூன்றாவது நபராகவோ அவனை இணைந்து கொள்ளச் சொல்லி கட்டளையிட்டாள்.

அவனும் சரியென்று ஒத்துக்கொள்ள, இனி சென்னை திரும்பிய பின் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.


காலை எப்பொழுதும் போல எழுந்து பண்ணைக்கு சென்று வந்த நீரூபன், உணவை முடித்துக் கொண்டு அலுவலகம் செல்ல கிளம்பினான்.

இப்பொழுதெல்லாம் அலுவலகம் செல்லும்போது ஓட்டுநரை காரை செலுத்த பணித்துவிட்டு அலுவலக வேலையை மடிக்கணினியில் செய்வதை வழக்கப்படுத்தி இருந்தான். அன்று ஓட்டுநர் விடுமுறை எடுத்திருக்க அவனது ஜீப்பை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்ல அவன் கூறி இருந்ததால், அதுவும் வீட்டில் இல்லை. அலுவல் வேலைக்காக வாங்கிய ஆடி கார் அவனை வா வந்து ஓட்டு என்று வரவேற்க, காரில் ஏறி முக்கிய சாலையில் திரும்பும் நேரம் நின்று போனது.

இறங்கி பானட்டை திறந்து பார்க்க, அது இயக்கத்தை நிறுத்தியற்கான க
காரணம் அவனுக்கு புரியவில்லை.

மீண்டும் பானட்டை மூடிவிட்டு சர்வீஸ் சென்டருக்கு அழைத்து விட்டு ஓரமாக காரை நகர்த்தி அதன் மேல் சாய்ந்து நின்றான்.

சில நிமிடங்களில் மெக்கானிக் வந்து பார்த்து அதனை கேரேஜ் எடுத்துச் செல்ல வேண்டும் என்றதும் அன்று கேப்பில் சென்று விடும் எண்ணத்துடன் கைபேசியை எடுக்க,

“வருங்கால முதல்வர் கால் டாக்சில போகலாமா? என்னோட வாங்க உங்களை ஆபிஸ்ல சேஃபா ட்ராப் பண்றேன்” என்று பளிச் புன்னகையுடன் அழைத்தவள் பூமிகா தான்.

அவளைக் கண்டதும் அவனுக்கும் முகத்தில் புன்னகை அரும்பியது.

“நீயா என்னை ட்ராப் பண்ண போற?”என்று அவளது வெஸ்பாவை அவன் மேலும் கீழும் பார்க்க,

“ஏன் வருங்கால முதல்வர் கேப்ல போவாரு, என்னோட வர மாட்டாரா?” என்று நக்கல் செய்தாள்.

“ஏய் கத்திரிக்கா. ஏன் என்னை வருங்கால முதல்வர்ன்னு சொல்ற?”என்று கேட்க,

“வண்டில வாங்க. போகும் போது சொல்றேன்”என்று தோள்களை உலுக்க,

அவனும் எதுவும் பேசாமல் அவளது வண்டியில் ஏறிக்கொண்டான்.

“சொல்லு. நான் அரசியல்ல இல்ல. என்னை ஏன் அப்படி சொல்ற?” என்று ஆர்வமாக அவள் தோளில் தன் தாடையை பதித்து வினவினான்.

இன்று அவனது பார்வை செயல் எல்லாம் மாறி இருப்பதை கவனித்த பூமிகா,

‘நீங்க அரசியல்ல இப்போதைக்கு இல்ல மாமா அவ்வளவு தான். ஆனா வருவீங்க. உங்களால அதுல வராம இருக்க முடியாது.”என்று கூறினாள்.

“அதான் எப்படி?” என்று ஆர்வமாக அவளையே பார்க்க, அவளது ஹெல்மெட்டில் இருந்து வெளியே பறந்த கூந்தல் அவன் முகத்தில் வருடியது.

“மாமா மீனுக்கு நீந்த சொல்லித் தரத் தேவையில்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு மீனால ரொம்ப நாள் தண்ணியை விட்டு வாழ முடியாது. என்ன தான் வறண்ட நிலத்துல சேத்துக்குள்ள தன்னை அது அடக்கி உயிரோட வச்சிருந்தாலும். நீர் பாய்ந்து வரும்போது இயற்கையா அது துடுப்பை போட்டு நீந்த தான் செய்யும்.” என்று கூறினாள்.

“நீ சினிமால டான்ஸ் கோரியோ வொர்க் தானே பண்ற? வசனமெல்லாம் எழுதலையே?” என்று அவன் கேலியாக கேட்டான்.

“உங்களுக்கு உங்க பலம் தெரியும். தெரியாதது போல நீங்க என்ன நடிச்சாலும் உங்களை சுத்தி உள்ளவங்க நம்பலாம் மாமா. ஆனா எனக்கு உங்களை தெரியும்.” என்று அழுத்தமாக கூறினாள்.

எவ்வளவு தூரம் இவள் தன்னை அறிந்து வைத்திருக்கிறாள் என்று எண்ணி வியந்தவன்,

“பூமி நீ என்னை விரும்புறது எனக்கு தெரியும். ஆனா இது நடக்காது டாம்மா மனசுல ஆசை வச்சு நாளைக்கு ஏமாந்து போகாத.” என்று அவளுக்கு அவன் எடுத்துக் கூற,

“மாமா நான் சொல்லாமலே என் மனசு உங்களுக்கு புரிஞ்சுது இல்லையா, இதே போல என் காதலோட சக்தி என்னை உங்க கூட சேர்த்து வைக்கும்.” என்றவள்,

“என் அப்பாவுக்கு உங்களை பிடிக்காதுன்னு நினைச்சு தானே என்னை அவாய்ட் பண்றீங்க. ஆனா அவருக்கு உங்க மேல நிறைய பிரியம் இருக்கு. உங்க அப்பா மேல தான் கோபம். எதுக்கும் நீங்க சாதாரணமா என் அப்பாவை பார்த்து பேசுங்க.”என்று யோசனையோடு கூறினாள்.

“அப்படியா பாப்பா சொல்ற?” என்று அவன் வேகமாக வினவ,

அவனது விளிப்பில் விழி விரித்து பார்த்தபடி வாகனத்தை அவன் அலுவலக பார்க்கிங்கில் நிறுத்தினாள்.

இறங்கிக் கொண்டவன், அவளது கன்னத்தில் கை வைத்து, “ஒருவேளை நீ சொல்றது உண்மையா இருந்தா. நீ தான் பாப்பா மாமாவுக்கு பொண்டாட்டி.” என்று கூறிவிட்டு மந்தகாசமாக புன்னகை சிந்தினான்.

அவனது வதனத்தை உற்று நோக்கியவள், “மாமா இது கனவு இல்லையே!”என்று கண்கலங்க,

“உன்னை பிடிக்காம இத்தனை நாள் நான் அமைதியா இருக்கல பாப்பா. உன்னை உன் அப்பா கிட்ட இருந்து பிரிக்க கூடாது. அவர் ஏற்கனவே என் அம்மாவோட பிரிவை தாங்கிக்க முடியாம கஷ்டப்படும்போது புதுசா ஒரு வலியை நான் கொடுக்க கூடாதுன்னு நினைச்சேன். வேற எந்த காரணமும் இல்ல. யாருக்கு தான் இந்த சின்ன வாலை பிடிக்காம இருக்கும்?” என்று கன்னம் கிள்ளியவன்,

“இதெல்லாம் அப்படியே வை, நான் உன் அப்பா கிட்ட பேசிட்டு முடிவு சொல்றேன்.” என்று மாடிப் படியை நோக்கிச் செல்ல,

“அப்ப நான் பெருமையா வருங்கால முதல்வர் பொண்டாட்டின்னு சொல்லிக்கலாமா மாமா?” என்றாள் சத்தமாக.

அவன் தலை திருப்பி சிரித்து விட்டுச் செல்ல, “இங்க என்ன டி நடக்குது?” என்று கேட்டபடி அவளருகில் வந்தான் ஆனந்த்.