அடங்காத அதிகாரா 14

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 14

தனக்காக புதிய அலுவலகம் ஒன்றை ஆரம்பித்திருந்தான் நீரூபன். எல்லாவற்றையும் பண்ணையில் அமர்ந்து செய்ய முடியாத காரணத்தினாலும், வரும் உள்ளாட்சி தேர்தலில் தந்தைக்கு ஆதரவாக ஏதாவது செய்ய கண்டிப்பாக நகரத்திற்குள் இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவன் இதனைப் பற்றி நிறையவே யோசித்து இந்த முடிவை எடுத்திருந்தான்.

ஏற்கனவே இருந்த கட்டிடத்தை கம்பெனி பெயரில் வாங்கி புணரமைத்து தேவையான ஏற்பாடுகள் எல்லாமே மணீஷ் மூலம் செய்து விட்டான். ஆனால் இங்கே வராமல் பண்ணையில் இருந்தே அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது அவசியம் உணர்ந்து தயாராகி விட்டான்.

இரவில் நேரம் சென்று வந்த அவனை கவனித்த நாகரத்தினம் என்னவென்று வினவ,

“நாளைக்கு புது ஆபிஸ் போக போறேன் மா. ஏற்கனவே எம்பிளாயிஸ் வேலை பார்த்துட்டு தான் இருக்காங்க. எனக்கு தான் ஆபிஸ் மாதிரி சூழ்நிலை பிடிக்காம பண்ணையிலேயே இருந்தேன். இப்ப ஸ்கூல், டீ எஸ்டேட் இன்னும் மனசுல சில தொழில் துவங்குற ஐடியா இருக்கு அதான் இனி தவிர்க்க முடியாதுன்னு ஆபிஸ் அவதாரம்.” என்று கூறினான்.

“சரி தம்பி. நீ நல்லா தூங்கு, நான் காலைல கோவிலுக்கு போகறதுக்கு முன்னாடி வந்து பார்க்கறேன்.” என்று அவனை அனுப்பி வைத்தார்

படுக்கையில் வந்து விழுந்தவன் எண்ணம் எப்பொழுதும் போல அன்றைய நிகழ்வுகள் அவனது முடிவுகள் அதனைப் பற்றிய பரிசீலனைகள் என்று சுயஅலசலில் இருந்தது.

ராக்கேஷ் பற்றி சிந்தித்ததும் கைமுஷ்டிகள் இறுகத் துவங்கியது.

இவனென்ன மனிதன் என்ற எரிச்சலும் கூடியது. அஞ்சனாவிடம் அவன் தெளிவாக கூறிய பின்னரும் ராக்கேஷ் தன்னை தொந்தரவு செய்கிறான் என்றால் அவனுடைய அக்கா நினைப்பது போல அவன் அவளது கைப்பிடியில் இல்லை.

அஞ்சனாவைத் தாண்டி அவனது செய்கைக்கு இருக்கிறது என்பதற்கும் அதற்காக அவன் எந்த அளவுக்கும் செல்லக்கூடும் என்பதற்கு அடையாளமாக குடும்பத்தினர் மீதே அவனது வன்மம் வெளிப்படுகிறது.

இனி தன் தந்தை, நேத்ரா இருவரின் மீதும் தனியே கண்காணிப்பு வைக்க வேண்டுமென்று முடிவெடுத்து கொண்டான்.

நாளை என்னென்ன செய்ய வேண்டுமென்று மனதிற்குள் பட்டியல் போட்டுக் கொண்டான். என்ன தான் இதெல்லாம் பார்த்து நினைவுப்படுத்த பணியாளரை நியமித்து கொண்டாலும் நாமே நமக்காக வேலைகளை ஒதுக்கி செய்யும்போது கிடைக்கும் நிறைவு தனி என்பான் நீரூபன்.

இரவில் அயர்ந்து விடியலில் விழித்தவன் புத்துணர்வை உணர்ந்தான்.

அவன் பல் துலக்கும் போதே அறைக் கதவு தட்டப்பட்டது.

இந்த நேரத்தில் அன்னையைத் தவிர வேறு யாரும் வர வாய்ப்பில்லை என்றுணர்ந்தவன் முகத்தை அலம்பிக்கொண்டு அன்னையை வரவேற்றான்.

தன் முதுகின் பின்னே ஏதோ ஒளித்து வைத்துக் கொண்டு வந்தவர்,

“இன்னிக்கு ஆபிஸ் போகும்போது அம்மா தர்ற ட்ரெஸ் போட்டுட்டு போறியா?” என்று ஆசையாய் வினவினார்.

“வெள்ளை வேட்டி சட்டைக்கு நான் வாங்கினா என்ன நீங்க தந்தா என்ன? கொடுங்க மா” என்று சிரிக்க,

“இல்ல. நான் வேட்டி சட்டை வாங்கல. என் பிள்ளையை காலேஜ் படிக்கும்போது பார்த்தா மாதிரி பார்க்கணும். அதான் இதை வாங்கிட்டு வந்தேன்.” என்று முழு சூட் ஒன்றை அவன் முன்னே நீட்டினார் நாகரத்தினம்.

“அம்மா.. ஏன் இப்படி?” என்று திகைக்க,

“எனக்கு தெரியும். உன் அப்பா உன்னை அரசியலுக்கு கூப்பிட்டு நீ போகும் போது முதல்முதல்ல இந்த வெள்ளை வேட்டி சட்டையை போட்டுகிட்ட, பத்துநாள் உன்னை அதுல பார்த்தப்ப அப்படியே அரசியல்வாதியா என் மகன் மாறிட்டான்னு அவரும் நானும் பூறிச்சு போயிருந்தப்ப திடீர்னு அரசியல் வேண்டாம்னு சொல்லிட்ட. ஆனா இன்னிக்கு வரைக்கும் வேட்டி சட்டையை விடல.” என்று அவர் நிறுத்த,

அன்னையை ஆழ்ந்து நோக்கினான். “உனக்கு வேட்டி சட்டை போலவே அரசியலும் பிடிச்சு தான் இருக்கு. ஆனா யாருக்காவோ தள்ளி நிக்கிற. சரி தானே கண்ணு. போயிட்டு போகுது. நம்ம உடன்பிறந்தவளுக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறோம். ஆனா அப்பாவுக்கு அது புரியல. அரசியல் பிடிக்கல ஆனா இன்னும் வெள்ளை வேட்டி கட்டி என்னை எரிச்சல் படுத்தறான்னு நினைக்கிறார்.

நீ எங்க அவளுக்கு போட்டியா வருவியோன்னு உன் அக்கா நினைக்கிறா. எல்லாமே இந்த ரெண்டு துணி முடிவு பண்ணி உன் வீட்டு மனுஷங்களை எட்ட நிறுத்திடுச்சு.

நீ இந்த துணிக்கு மாறு. கொஞ்ச நாள் தான் எல்லாமே மாறும். அம்மா சொல்றேன்ல. இந்த வேட்டி சட்டை போட்டு உன் அப்பா இடத்தை நீ தான் ஒருநாள் நிரப்புவ. அது வரைக்கும் அதுக்கு ஓய்வு கொடுப்பா.” என்று அந்த சூட்டை கட்டிலில் வைத்துவிட்டு மகனை முகம் வழித்து திருஷ்டி எடுத்தார்.

“நான் கோவிலுக்கு கிளம்புறேன். நேத்து நேத்ரா பாப்பா உன்னை பார்த்து பேசணும்னு சொல்லிட்டு இருந்தது. என்னனு கேட்டுக்க தம்பி. எந்த காலத்துலயும் நீயும் அவளும் எனக்கு வேற இல்ல. அதை மட்டும் மறந்துடாத கண்ணு.” என்று வந்த கண்ணீரை மறைத்துக்கொண்டார்.

“அம்மா. நான் இந்த டிரேஸ் போட்டு தான் இன்னிக்கு ஆபிஸ் போவேன். ஆனா இதை எப்ப வாங்கினிங்க”? என்று சந்தேகமாக அவன் வினவ

“நீ முன்னாள் முதலமைச்சர் மகன், நான் முன்னாள் முதலமைச்சர் சம்சாரம். நான் போன் பண்ணி கேட்டா காலைல நாலு மணிக்கு கடையை திறந்து காட்ட மாட்டாங்களா?” என்றார் சிரிப்புடன்.

“நம்புறது போல இல்ல உண்மையை சொல்லுங்க” என்று கேலி செய்தான்.

“நீ முதல்ல பண்ணை வாங்கப் போனப்ப வாங்கி வச்சது. கொடுக்க நேரம் அமையல. இன்னிக்கு கொடுக்கறேன்.” என்று புன்னகைத்தார்.

“என் செல்ல அம்மா.” என்று அவரை வழியனுப்பி விட்டு, காலையில் வழக்கமான உடற்பயிற்சி யோகா எல்லாம் முடித்து அன்னை கொடுத்த உடையை அணிந்து கொண்டு தன் அலுவலகத்திற்கு கிளம்பினான்.

அந்த உடைக்கு ஜீப் சரிவராது என்று அன்று நேத்ராவின் ஆடி காரை எடுத்துக் கொண்டவன் அவளுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி அவள் சண்டையிடப் போகும் நிமிடத்திற்கு காத்திருந்தான்.

அலுவலக கட்டிடத்தில் காரை நிறுத்திவிட்டு காரிடாரில் அவன் நடந்து சென்றபோது அவனைப் பார்த்த யாரும் வாய் மூடவில்லை. அதிசயத்தை கண்டது போல வாய் பிளந்து பார்த்திருக்க, கம்பீரமாக நடத்து தன் அறைக்குள் சென்றான்


இது எதையும் அறியாத பூமிகா அவனைக் காண பண்ணைக்குள் மெல்ல நடந்து வந்தவளின் கருவிழிக கோலி குண்டுகளாக அங்கும் இங்கும் உருண்டு தன் மனதுக்கு பிடித்தவனைத் தேடியது.

உள்ளே வந்தபோது எப்பொழுதும் போல ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது.

நேராக அலுவல் அறைக்குள் அவள் நுழைய பழனி தாத்தா அன்றைய தினசரியை புரட்டிக் கொண்டிருந்தார்.

அவளைக் கண்டதும், “வாங்க சின்னம்மா” என்று அவர் சிரிக்க,

“உங்களுக்கு தெரியுது நான் தான் சின்னம்மான்னு ஆனா உங்க முதலாளிக்கு தெரியலையே தாத்தா. எங்க அவரு?” என்று கண்களை உருட்டினாள்.

அவளது பேச்சைக் கேட்டு சிரித்தவர், “தம்பி ஆபிசுக்கு போயிருக்கு மா.” என்று டேபிளை சுற்றி  வந்து அவளருகில் நின்றார்.

“எங்க யாரையும் காணோம்? இன்னிக்கு வேலை இல்லையா?” என்று சுற்றிப் பார்த்து வினவினாள்.

“பின்னாடி உள்ள நெல்லு கழனில வேலை நடக்குது. இங்க நேரமே முடிச்சு எல்லாரும் அங்க போயாச்சு.” என்று அவள் முகத்தை ஆராய்ச்சியாக நோக்கினார்.

“என்ன தாத்தா?”

“இல்ல தம்பி இல்ல. இன்னும் பேசிட்டு இருக்கீங்க, அதான் மனசுல என்ன ஓடுதுன்னு இது பார்த்தேன்.” என்று முன்னே வந்து பார்வையாளர் வந்தால் கொடுக்கவென்று எப்பொழுதும் சில் இளநீர் தயாராக சீவப்பட்டு இருக்கும். அதிலிருந்து ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினார்.

“அவர் இல்லையா? இப்ப தானே ஆபிஸ்ல இருக்காருன்னு சொன்னிங்க!” என்று அவனது தனிப்பட்ட அலுவல் அறையை அவள் கேள்வியாக நோக்கினாள்.

“அவர் புதுசா நிறைய பிஸ்னஸ் துவங்கி இருக்கார் மா. இது ஊரை விட்டு தள்ளி இருக்குல்ல. எல்லாரையும் இங்க அலைய சொல்ல முடியாது. அதான் அங்கேயே புதுசா ஆபிஸ் போட்டுட்டார் மா. தெரியாதா?” என்று அவளிடம் அவர் கேட்டபோது சற்று அவமானமாக இருந்தது பூமிகாவுக்கு.

அவள் முகத்தில் என்ன கண்டாரோ, “நீ கவலைப்படாத மா. தம்பிக்கு ஒருநாள் இல்ல ஒருநாள் உன் மனசு புரியும். ஆனா வயசுப் பொண்ணு இப்படி தேடி தேடி வந்தா உன்னை தப்பா நினைப்பாங்க. இது தொலைவா இருந்ததால நீ வந்து போனது பெருசா யாருக்கும் தெரியல. ஆனா ஊருக்குள்ள உள்ள கம்பெனி ஆபிஸ் பக்கம் அடிக்கடி போகாத மா. தம்பியோட அக்கா காதுக்கு நீ வந்து போறது போச்சுன்னா நீ வருத்தப்படுவ.” என்று கூறி அவள் குடித்துவிட்டு பிடித்துக் கொண்டிருந்த இளநீர் ஓட்டை வாங்கினார்.

“தாத்தா நீங்க தப்பா நினைக்கலனா மாமா இங்க வர்ற அன்னைக்கு மட்டும் எனக்கு தகவல் சொல்றீங்களா? என்னால மாமாவை பார்க்காம இருக்க முடியாது.” என்று அவரின் பட்டன் போனில் தன் எண்ணை பதிவேற்றினாள்.

ஆனால் அவரோ மறுப்பாக தலையசைத்து, “நீ அவரை ஆசைப்படலாம். நாளைக்கு அவரே உன்னை ஏத்துக்கலாம் இல்ல எதுவும் நடக்காமலும் போகலாம். நடுவுல மன வந்து புண்ணியமும் தேடிக்கல, பாவத்தையும் சேர்த்துக்கல தாயி. அவர் எனக்கு சோறு போடுற முதலாளி. எனக்கு அவருக்கு விசுவாசமா இருக்க தான் தெரியும். நாளைக்கே நீ அவரை கட்டிட்டு வந்து என்னை இதுக்காக வேலையை விட்டு அனுப்பினாலும் சரி. இதை நான் செய்ய மாட்டேன்” என்று கூறிவிட்டார்.

பூமிக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல்,

“பரவாயில்ல தாத்தா நான் ஏதோ கிறுக்குத்தனமா கேட்டுட்டேன். நீங்க என் நம்பரை வச்சுக்கோங்க. உங்களுக்கு தேவையான நேரத்தில் கூப்பிடுங்க.” என்று அவரது கைபேசியை கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்

வாடிய மலராக திரும்பிய தோழியை கண்டு ஆனந்த் என்னவென்று வினவினான்.

“மாமா சென்னையில ஆபிஸ் போட்டுட்டாராம். இனி அதிக நேரம் அங்க தான் இருப்பாராம்.” என்று கண்ணில் கண்ணீரை தேக்கி அவள் கூற,

“அப்பாடி. எனக்கு நிம்மதியா இருக்கு.” என்று பெருமூச்சு விட்ட நண்பனை கையிலிருந்த கைப்பையை கொண்டு சாத்து சாத்தென்று சாத்தினாள் பூமிகா.

“ஏன்டா ஏன்? நானே மாமாவை பார்க்க முடியாதுன்னு வருத்தத்துல இருக்கேன்.” என்று மூக்கை உறிஞ்ச,

“பைத்தியமா டி நீ? இவ்வளவு தூரம் டிரைவ் பண்ணி வந்து அவரை மூணு வருஷமா சைட் அடிச்சோம். இனி பக்கமா அடிக்கடி பார்க்கலாம்ன்னு பாசிட்டிவா நினைக்காம ஏன் டி அழுகற? அழுமூஞ்சி.” என்று அவளைத் திட்டினான்.

“நீ தான் லூசு. மாமா சென்னைக்குள்ள இருந்தா அடிக்கடி கண்ணுல வேணா படுவாரு. இங்க பார்த்தது போல பார்க்க பேச முடியுமா?” என்று கோபத்தை காட்டினாள்.

“ஏன் டி சென்னையில் உன் மாமா மௌன விரதம் இருப்பாரா?” என்று கேலி செய்தான் ஆனந்த்.

“விளையாடாத மச்சி. அங்க அப்பா, அஞ்சனா அண்ணி, ராக்கேஷ் அண்ணன், நேத்ரா அண்ணி, திரு மாமா எல்லாரும் இருப்பாங்க. யார் கண்ணுல மாட்டினாலும் பூமிகாவுக்கு ஜிங்கு சக்கா தான்” என்று சோக கீதம் வாசித்தாள்.

“ஏதாவது ஐடியா சிக்கும் டி. அப்பறம் உங்க அப்பாவ பத்தி ரொம்ப யோசிக்காத. அவருக்கு உன் திரு மாமாவை தான் பிடிக்கல. உன்னோட நீரூபன் மாமா மேல பாசம் இருக்.”கு என்று கூறினான்.

இது பூமிகாவுக்கு புதிய செய்தி. அதனால், “என்ன டா மச்சி சொல்ற?” என்று ஆர்வமாக,

“ஆமா உங்க மாமா அன்னைக்கு வாங்கித் தந்த பிரஸ்லெட்டை உன் அப்பா கிட்ட நான் கொடுத்ததா உங்க அம்மா சொல்ல, அவரு என்னைத் தனியா கூப்பிட்டு,

நீரூபன் எப்படி இருக்கான்? ஏன் உன்கிட்ட கொடுத்து விட்டான்னு நேரா கேட்டாரு டி” என்று கூறினான்.

“அடப்பாவி உளறி தொலைச்சிட்டியா? அவர் போட்டு வாங்கி இருப்பார் டா” என்று பூமிகா பதற,

“ஆமா, ஆனா நான் சொல்லல. அதுக்கு அவரு, என் மருமகன் மேல பாசம் இருந்தும் காட்ட முடியல. எல்லாத்துக்கும் அந்த திருமூர்த்தி தான் காரணம்ன்னு கோவமா சொல்லிட்டு போயிட்டார் டி. ஆக உன் திருமூர்த்தி மாமா ஏதோ வில்லத்தனம் பண்ணி இருக்காரு. அதை கண்டு பிடிக்கணும்.” என்றதும்,

அவள் அமைதியாக இருக்க, “என்ன டி அதிர்ச்சியா இல்ல ஆச்சரியமா?”

“அரசியல்வாதி அதெல்லாம் பண்ணலன்னா தான் ஆச்சரியம். மாமாவை எப்படியாவது பார்க்கணும்.” என்று அவள் சிணுங்க.

“பார்த்தா பத்தாது. சீக்கிரம் லவ்வை சொல்லு டி.” என்று அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.