அடங்காத அதிகாரா 13

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 13

நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்த தோழியை முறைத்துக் கொண்டிருந்தான் ஆனந்த்.

அவனை வரவழைத்து அமர வைத்து அவள் வேடிக்கை காட்டுவது என்னவோ மாறி மாறி தெரியும் அவளது முகபாவங்களைத் தான்.

பொறுமையிழந்த ஆனந்த், “நான் கிளம்பவா?” என்று வண்டி சாவியை எடுத்தான்.

“மச்சி சும்மா இரு. நானே டென்ஷன்ல இருக்கேன்” என்று சிணுங்கிய தோழியை தயவுதாட்சண்யம் பார்க்காமல் பின் தலையில் பட்டென்று ஒரு அடி அடித்தான்.

“அவ்ளோ தான் உனக்கு சொல்லிட்டேன். நான் வேலை இல்லாதவன் தான். ஆனா வெட்டிப்பய இல்ல டி. இந்நேரம் நாலு புரொட்யூசர் ஆபிஸ்ல போய் நின்னிருந்தா ஒரு இடத்தில கதை சொல்ல அபாயின்ட்மெண்ட் கிடைச்சிருக்கும்.” என்று மெல்லிய கோபத்துடன் உரைத்தான்.

கண்களில் கண்ணீர் குளம் போல தேங்க, “நான் என்ன செய்ய மச்சி, மாமாவை பார்க்காம என்னால இருக்க முடியல. அவங்க ஃபார்ம்முக்கும் போக முடியாது. வீட்டு பக்கம் போகலம்ன்னா எப்பவும் கட்சி அளுங்க இருந்துட்டே இருக்காங்க. நேத்து முழுக்க என்னால டான்ஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியல. அவர் முகமே மனசுல ஓடிட்டு இருந்தது.” என்று தலை கவிழ்ந்து வாய் விட்டு அழத் துவங்கினாள்.

அவளை அப்படிப் பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது. சிறுவயது முதலே அவளைப் பார்க்கும் அவனுக்கு அவள் அழுகையை கண்ட தருணங்கள் எல்லாம் அரிதிலும் அரிது தான். அப்படி இருக்க, காதல் நோயின் வலியில் அழுது கரைபவளைக் காண மனதுக்கு பாரமானது .

“ஏய் எழுந்திரு டி. என்ன புதுசா அழுகை எல்லாம்? என்னைக்காவது யாராவது செய்யாதன்னு சொன்னா கேட்டுருக்கோமா? இப்ப என்ன புதுசா நல்லவங்க மாதிரி அவங்க சொன்னதும் கேட்டு பேசாம இருக்கணுமா? கிளம்பு உன் மாமாவை ஃபார்ம்ல போய் பார்த்துட்டு வருவோம்.” என்று கைப் பற்றி இழுத்தான்.

பூமி அமைதியாக இருக்க, “ஏய் வா டி. ஏதாவது சாக்கு சொல்லலாம். பார்த்துட்டு வரலாம் வா என் செல்லம்ல” என்று கன்னத்தை கிள்ளி அழைத்தான்.

கண்ணீரை துடைத்தவள், “நம்மளை வர வேண்டாம்னு சொன்னவங்க முகத்துல முழிக்க கூடாது தானே ஆனந்த். அதானே ரோஷமுள்ள யாரும் செய்யுற காரியம். ஆனா மாமா என்னை கவனிக்காம போக போக, வர வேண்டாம்னு என் நல்லதுக்குனு சொல்ல சொல்ல எனக்கு ஏன் அவர் மேல இவ்வளவு காதல் வருதுன்னு தெரியல டா.” என்று அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் உகுத்தாள்.

அவளை அழுகையிலிருந்து மீட்க எண்ணியவன் உடனே அவளிடம், “உன் மாமாவை முதல்ல பார்த்த நாள் நினைவு இருக்கா உனக்கு? என்று கேலியாக கேட்க,

“ச்சீ போடா. அதை நினைச்சாலே சங்கடமா இருக்கு. “என்று  சிறுவயதில் மொட்டை தலையுடன் இருந்த வெட்கத்தில் முகம் மூடினாள்.

“அடியே பைத்தியமே. நான் உன் அம்மா சொன்னதை சொல்லல. நீ காலேஜ்ல அவரை பார்த்ததை சொல்றேன்.” என்று இடித்தான்.

“ஊப்ஸ் அதுவா.. ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடிட்டு இருக்கும்போது டான்ஸ் ஹாலுக்குள்ள அப்படியே நடந்து வந்தார். என் டான்ஸ் மெதுவாக ஆரம்பிச்சு ஏதோ ‘ஸ்லோமோ’ மாதிரி இருந்தது.. நான் அவர் கண்ணை மட்டும் தான் பார்த்தேன். அவ்வளவு தான். நான் ஃப்ளாட். இன்னிக்கு வரைக்கும் மனசுல அவர் தூரத்துல நடந்து வந்தா அதே எபெக்ட் தான்.” என்று சிலாகித்துக் கூறினாள்.

இவளின் பேச்சுக்கு இடையே ஆனந்த் கொண்டு வந்திருந்த அவனுடைய நண்பனின் சாண்ட்ரா காரில் ஏறி பண்ணைக்குக் கிளம்பி இருந்தனர்.

“நீ தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அழுதது. இப்ப மூஞ்சியை பாரு பளீச்ச்… ன்னு மின்னுது. எல்லாமே மாமா செய்யும் மயமா?” என்று கேலி செய்தான்.

“மச்சி நம்ம வாழ்க்கையை இவங்க கூட பகிர்ந்து வாழணும்னு ஏதோ ஒரு நொடி தோணும். அந்த நொடில இருந்து அவங்க தான் நம்ம வாழ்க்கையே! இதெல்லாம் லவ் ஃபீல் மச்சி. உன்னை மாதிரி ஆளுக்கு புரியாது” என்று வம்பிழுக்க,

“தேவை தான் டி. காலேஜ் படிக்கும் போதுல இருந்து வந்த எந்த லவ் பிரபோசலையும் ஏத்துக்காம எப்பவும் உன்னோட சுத்திட்டு இருக்கேன்ல என்னை நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ” என்று முறைத்தான்.

“ஹலோ. நீ சொல்றத பார்த்தா உன் டிஷிஷனுக்கு நான் தான் காரணம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு.” என்று சண்டைக் கோழியாக அவள் சடைக்க,

“இல்லன்னு வேற சொல்லுவியா நீ? ஏய் நம்ம கூட படிச்ச பொண்ணுங்க, ஜூனியர்ஸ் இப்படி யார் கூடவாவது நான் கிளோசா பேசி இருக்கேனா டி. பொண்ணுங்க எங்க? பசங்க கூடவே அதிகமாக பேச முடியல.” என்று சலித்துக் கொண்டான்.

“அப்படி பேச விடாம யாருங்க உங்களை தடுத்தது?” என்று பூமி சண்டைக்கு தயாராக,

“வேற யாரு? நீ தான் டி. எப்பவும் மச்சி மச்சின்னு நீயே தானே என்னை சுத்தி இருந்த, ஆல் கலர்புல் பட்டர்பிளைஸ் ஆர் கான்.” என்று போலியாக வருந்தினான்.

“அடேய். புளுகுணி. நானும் நீயும் அந்த காலேஜ் குட்ட செவுத்துல உட்கார்ந்து போற வர்ற பொண்ணுங்களுக்கு மார்க் போடல. நீ உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்ன பொண்ணுங்களுக்கு நான் போய் லெட்டர் கொடுக்கல. ஏன் டா?” என்று அவன் தலைமுடியை பிடித்து ஆட்ட ஆரம்பித்தாள்.

நல்லவேளையாக ஆனந்த் பண்ணையின் வாயிலில் காரை நிறுத்தி இருந்தான்.

“யார் இல்லன்னு சொன்னது? ஆனா லெட்டர் கொடுத்த பொண்ணு கிட்ட ஒருநாளாவது பேச விட்டியா? அவங்களே வந்தாலும் துரத்தி விட்டுடுவ.” என்று ஆனந்த் பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள,

“அதுக்கு என்ன செய்ய உன் ரசனை லட்சணம் அப்படி. உன்னை மாதிரி ஒருத்தனை அப்படி கண்ட பொண்ணு கூட எல்லாம் கோர்த்து விட முடியாது. என் நண்பனுக்கு ஏத்த ஏஞ்சல் கிடைக்க நான் உதவி செய்தேன்.” என்று கெத்தாக கூறினாள்.

“சரி டி நல்லவளே! எங்க அந்த ஏஞ்சல்?” என்று நக்கலாக வினவினான் ஆனந்த்.

“அவ எங்கேயோ பொறுப்பில்லாமல் சுத்திட்டு இருக்கா மச்சி. இன்னும் கண்ணுல சிக்கவே இல்ல. கிடைக்கட்டும் நல்லா சண்டை போடுறேன்.” என்று கூற,

கையெடுத்து கும்பிட்டவன், “போதும் ஆத்தா. நீங்க இத்தனை வருஷம் செஞ்ச சேவையே போதும். இல்லாத ஒருத்தியை தேடி போய் சண்டை போடுவாளாம். வாயாடி இது?” என்று தலையைப் பிடித்து ஆட்டினான்.

“மச்சி மச்சி மெதுவா. ஹேர்ஸ்டைல் கலஞ்சிடும்” என்றதும் ஆனந்த் முறைக்க, பூமி தப்பித்தோம் பிழைத்தோம் என்று காரிலிருந்து இறங்கினாள்.

உள்ளே சென்று நீரூபனை பார்க்க வேண்டும். முடிந்தால் மனதில் இருப்பதை கூறி விட வேண்டும் என்ற முடிவுடன் அவள் உள்ளே செல்ல, காரில் சாய்ந்து நின்று தன் தோழியை ஆதுரத்துடன் நோக்கினான் ஆனந்த்.

அழுதுகொண்டு வந்தவள் அவன் பேச்சை மாற்றியதும் உள்ள அழுகை மறந்து சண்டையிட்டதை எண்ணி சிரித்துக் கொண்டான்.

கல்மிஷமில்லாத இவள் மனதிற்காக விரும்பியவனை அடைந்திட வேண்டும் என்று அவளுக்காக கடவுளிடம் விண்ணப்பம் வைத்தான்.


நேத்ராவின் புதிய அலுவலகத்தில் வேலைக்கான நேர்காணல் நடந்து கொண்டிருந்தது.

நேத்ரா எதிலும் நேரடியாக சம்மந்தப்பட்டுக் கொள்ளாமல் நடப்பதை வீடியோ கான்பரன்ஸ் முறையில் கவனித்துக் கொண்டிருந்தாள்.

பணித் தேர்வுக்காக தனியே ஒரு குழுவை அவள் ஏற்பாடு செய்திருந்தாள். ஏற்கனவே நீரூபன் அவளுக்கு சொன்னது போல அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை வேலையில் அமர்த்திக்கொள்ள அவளும் தயங்கவில்லை.

பணம் ஒரு பொருட்டல்ல. மனதில் நினைப்பவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கும் அளவுக்கு அவளிடம் பணம் இருக்கிறது. இல்லையென்றால் அண்ணன் கொட்டிக் கொடுப்பான். ஆனால் பிரச்சனை அதுவல்ல. வேலை செய்பவர்களிடம் அவள் எதிர்பார்க்கும் நேர்மை, தெளிவு, கட்சி வேலை என்று தெரிந்தாலும் அது எந்த இடத்திலும் குறைவின்றி நடக்க வேண்டும் என்று எண்ணினாள்.

புதிதாக பொலிடிகல் கேம்பையின் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றை வசீகரன் பெயரில் பதிந்திருந்தாள்.

முதலில் அவனுக்கு அதில் விருப்பமில்லை தான் ஆனால் இனி அவன் வாழ்க்கை நேத்ரா தான் எனும்போது அவளது குடும்பத்துடன் பின்னிய அரசியல் சூழலை அவனால் தவிர்க்க இயலாது என்று புரிந்து கொண்டான்.

வசீகரன் எந்த விதத்திலும் இப்பொழுது திருமூர்த்தி குடும்பத்திற்கோ அவரது கட்சிக்கோ சம்பந்தம் இல்லாதவன். அதனால் எந்த பிரச்சனையும் இன்றி எடுத்த காரியத்தை திரைமறைவிலிருந்து செய்து முடிக்க முடியுமென்று நேத்ரா நம்பினாள்.

ஆட்களை தேர்ந்தெடுக்க ஒரு எச். ஆர் நிறுவனம், சரியான முறையில் கருத்தை வெளியிட மொழியில் ஆளுமை உள்ள எழுத்துப்பணி நிறுவனம், விளம்பரங்கள் தயாரிக்க விளம்பர நிறுவனம், புதிய மெட்டுகளில் பாட்டமைக்க இசையமைப்பு குழு.

இப்படி ஒவ்வொரு தேவைக்கும் அது சார்ந்த நிறுவனங்களை ஒப்பந்த முறையில் தேர்ந்தெடுத்து, வேலைகளை பிரித்துக் கொடுக்க, செய்த வேலைகளை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள, ஒவ்வொரு தனி வேலைகளையும் இணைத்து தேவையான வடிவத்தைக் கொடுக்க என்று தனித் தனி ஊழியர்கள், டிசைனிங், வீடியோ எடிட்டிங் செய்ய தனி குழுவான ஊழியர்கள், செய்தவற்றை சமூகவலைதளங்களில் பதிவேற்ற, அதை பல ஆன்லைன் குழுக்கள், கட்சி சார்ந்த இடங்களில் பகிர தனி ஊழியர்கள்,  சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க பொறுமையும், நிதானமும் நிறைந்த ஊழியர் குழு என்று அட்டவணை போட்டு வேலைக்கு ஆட்களை எடுக்க எச்.ஆர் நிறுவனத்தை பணித்திருந்தான் வசீகரன்.

அவனை அவர்களிடம் பேச வைத்தவள் நேத்ரா. ஆனால் அவளுக்கு எல்லாவற்றிருக்கும் தேவையானவர்கள் கிடைத்தாலும் பெரிய ஓட்டையாக அவள் எண்ணியது, சரியான அரசியல் அறிவுடன் இதனை சீர்படுத்த ஒருவர் வேண்டும் என்பதே!

வலைதளங்களில் வரும் வன்மம் நிறைந்த பின்னூட்டங்களுக்கு ஊழியர் பொறுமையாக பதில் தரலாம் ஆனால் அரசியல் சார்ந்த கேள்விக்கு சரியான புள்ளி விபரங்களுடன் பதில் தருவது தான் சாமர்த்தியம்.

அதை எங்கிருந்து எப்படி கொண்டு வருவது என்று சிந்தித்தபடி வீடியோ கான்பரன்ஸ்சில் நிகழும் நேர்முகத் தேர்வை கவனித்தாள்.

சிறு இடைவெளி எடுத்துக் கொள்வதாக எச்.ஆர் நிறுவனம் அறிவிக்க, காதில் இருந்த  ஏர் பாடை கழற்றி வைத்துக் கொண்டு சிந்தனையோடு திரையை வெறித்துக் கொண்டிருந்தாள்.

வசீகரன் அந்த நேரத்தில் அலைபேசியில் அழைக்க, எடுத்து,

“சொல்லு வசீ” என்றவள் குரல் எப்பொழுதும் உள்ள உற்சாமற்று இருக்க வசீகரனுக்கு லேசாக எரிச்சல் வந்தது.

“நேத்ரா என்ன இப்படி சலிப்பா பேசுற? ரெண்டு நாளா பிஸ்னஸ் தவற வேற டாபிக் பேசவே இல்ல. ஒரு நாளைக்கு குறைந்தது பத்து தடவை காரணமே இல்லாம இரண்டு பேரும் ஐந்து நிமிஷமாவது ஏதாவது பேசுவோம். ஆனா நீ நேத்து கால் பண்ணியது எல்லாமே வேலைக்காக மட்டும் தான். ஐ ஆம் டோட்டலி டிஸ்சப்பாயின்டட்.” என்று மனதில் இருந்ததை மறைக்காமல் கூறி விட்டான்.

அவன் பேசிய விதத்துக்கு நேத்ராவிற்கு கோபம் வந்து அவனிடம் சண்டையிட்டிருக்க வேண்டும். ஆனால் அவளோ,

“இந்த செட்டப் ரெடி பண்ற வரை தான் இவ்வளவு தலைவலி வசீ, சரியான டீமா செட் பண்ணிட்டா, தினமும் நான் என் ஆபிஸ்ல பார்க்கறது போல மேற்பார்வை பார்த்திட்டு, தேவைக்கு மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு பழைய மாதிரியே இருந்துப்பேன். நான் சொல்லாமலே இதெல்லாம் நீ புரிஞ்சுக்குவன்னு நினைச்சேன் வசீ. உனக்கும் ஆயிரம் டென்ஷன் இருக்கும் நானே சொல்லி இருக்கணும். சோ வாட்? இப்ப சொல்லிட்டேன். எனக்காக கொஞ்சம் சப்போர்ட் பண்ணி வசீ பிளீஸ்.” என்றாள் வருத்தத்துடன்.

அதுவரை அவள் தன்னிடம் தனிப்பட்ட பேச்சுக்கள் பேசவில்லை, நேரம் செலவழிக்கவில்லை என்று எண்ணிக்கொண்டு சுணங்கியவன் அவளுக்கு தேவையான நேரத்தில் மனதளவில் தோள் கொடுக்காமல் இருக்கிறோம் என்று உணர்ந்தான்.

‘சாரி ஐஸ். நான் ஏதோ.. உன்னை மிஸ் பண்ணின தாட்ஸ்ல அப்படி பேசிட்டேன். உனக்கு என்ன வேணுமோ சொல்லு டி நான் செய்யறேன்.” என்று அவளிடம் பணிந்தான்.

“எப்பவும் என்னோட வசீயா இரு. புது பிஸ்னசோ, டென்ஷனோ எதுவும் நம்ம காதல்ல இருந்து நம்மளை தள்ளி வச்சிடாது வசீ. இன்னும் காலேஜ் டைம் லவ்வர்ஸ் மாதிரி திங்க் பண்ணாம நார்மலா இரு. என் அப்பாவோட அரசியல் எந்த சூழல்லயும் நம்ம காதலை பிரிக்கவோ, இடைவெளி ஏற்படுத்தவே செய்யாது. நான் உனக்கு தான். அதை முழுசா நம்பு வசீ.”என்று காதலுடன் கூற,

“லவ் யூ டி ஐஸ். சாரி ஃபார் மை பிஹேவியர்.” என்றான் வசீகரன்.

“இதெல்லாம் சப்ப மேட்டர் டா. ஈவினிங் ஃப்ரீயா? இனிமே நாம வெளில மீட் பண்ண முடியாது. எனி ஸ்பெஸிஃபிக் பிளேஸ் ஃபார் பிரைவேட் மீட்டிங்?” என்று கேட்க,

“நீ ஏன் என் வீட்டுக்கு வரக் கூடாது?”  என்று கேட்டு அவளிடம் வசைகளை வாங்கிக் கட்டிக் கொண்டான் வசீகரன்.