அடங்காத அதிகாரா 05

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 5

பூமிகா நீரூபனின் அத்தை மகள். நீரூபனின் பெற்ற தாயான பாலசரஸ்வதியின் உடன் பிறந்த தம்பி பாலரமணியின் மகள் தான் பூமிகா.

பூமிகா நீரூபனின் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். நீரூபன் மனதில் காதலியாக இடம் பிடிக்க அவளும் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு இருக்கிறாள்.

இன்று அவனை எதிர்பாராமல் சந்தித்ததில் அவளுக்கு சொல்லத் தெரியாத மகிழ்ச்சி.

கனவுகளுடன் அவள் அவன் பின்னால் செல்ல ஆசைப்பட, அதை நினைவாக்கிக் கொண்டிருந்தான் அவளது நண்பன் ஆனந்த்.

“ஏன் டி என் உயிரை வாங்கற? அவர் தான் ஏதோ பிஸ்னஸ் விஷயமா வந்திருக்கேன்னு சொல்றாருல.. இருந்தும் ஏன் இப்படி ஃபாலோ பண்ண சொல்ற?” என்று சலிப்பும் எரிச்சலுமாக கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆனால் அதெல்லாம் காதில் விழாத அளவுக்கு காதல் வானில் சிறகடித்து கொண்டிருந்தாள் பூமி.

அவள் பதில்  சொல்லாமல்  இருப்பது கண்டு பக்கக் கண்ணாடி வழியாகக் கண்டவன் அவளது விழிகளில் இருந்த மயக்கம் கண்டு தலையில் அடித்துக் கொண்டு வாகனத்தைச் செலுத்தினான்.

நீரூபனின் வாகனம் கடற்கரையில் சென்று நிற்பதை கவனித்த ஆனந்த்,

“பூமி அவர் பிஸ்னஸ் மீட்டிங்னு தானே சொன்னாரு? ஆனா பீச்சுக்கு வந்திருக்கார் டி.” என்று யோசனையாகக் கூறினான்.

“இருக்கட்டும் டா. எங்க வந்தாலும் அவரை நான் பார்த்துட்டே இருப்பேன்.” என்று கனவில் அவள் பதில் கூற,

“சரியான லூசு” என்று  திட்டிவிட்டு வாகனத்தை சரியாக நிறுத்திவிட்டு அவளை இறங்கச் சொன்னான்.

அவளும் இறங்கி காற்றில் பறந்த தன்  கூந்தலை காதுக்குப் பின் ஒதுக்கினாள்.

“என்ன டா பீச்சுக்கு வந்திருக்கோம்?” என்று சுற்றுப்புறம் உணர்ந்து வினவ, அவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தான் ஆனந்த்.

அவன் பார்வையை வைத்தே இதைப் பற்றி அவன் ஏற்கனவே ஏதோ சொல்லி இருக்கிறான் அதை அவள் கவனிக்கவில்லை என்று உணர்ந்து கொண்ட பூமிகா உதடை இழுத்து ஒரு புன்னகையை அவனிடம் உதிர்த்து,

“சாரி மச்சி” என்று கூற,

“போய் தொலை டி. அவர் அதோ அங்க நடந்து போறாரு பாரு” என்று  நீரூபனை காட்டினான் ஆனந்த்.

அவன் கன்னத்தில் அன்பாய் கிள்ளிய பூமி, அவனது கரத்தையும் சேர்த்தே இழுத்துக்கொண்டு அவன் காட்டிய திசையில் நடக்க, புலம்பியபடி தன் தோழியுடன் நடந்தான் ஆனந்த்.

கடல்காற்றின் குளுமையை ஆனந்தமாக அனுபவித்தபடி நின்றிருந்தான் நீரூபன். அவனது வேட்டி காற்றில் படபடத்தாலும்  அவனது கவனம் வசீகரன் வருகிறானா என்று பார்த்தபடி இருந்தது.

தன் தங்கை அவனை காதலிப்பதாக தன்னிடம் வந்து கூறியபோது அவனுக்கு கோபமெல்லாம் வரவில்லை. அவன் யாரென்று வினவியதோடு அமைதியானான்.

அதன் பின் அவன் வசீகரனைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டவை திருப்தி அளிக்க, தங்கையிடம் தனக்கு சம்மதம் என்று கூறிவிட்டான். இதெல்லாம் நடந்தேறி ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். ஆனால் நேத்ரா வசீகரனிடம் இதைப் பற்றி கூறவே இல்லை.

நீரூபன் தான் இதைப் பற்றி கூற வேண்டாம் என்றும் அவனை தன்னிடம் பேச அனுப்பும்படியும் கூறி இருந்தான்.

இதோ நேத்ரா அவன் சொன்னதை  செவ்வனே செய்து விட்டாள்.

அழகிய ஃபார்மல் உடையில் நிதனமாக நடந்து வந்தான் வசீகரன். அவனது அலையலையான கூந்தல் காற்றில் பறந்தது.

தன் தங்கை காதல் செய்தவனை அண்ணன் ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

வசீகரன் தன் பயத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு நீரூபன் முன் வந்து நின்றான்.

“ஹலோ சார். ஐ ஆம் வசீகரன்.”என்று கையை நீட்டினான்.

அதனை உறுதியான தன் கரம் கொண்டு பற்றிக்கொண்ட நீரூபன், “சொல்லுங்க வசீகரன்” என்று அவன் கேட்ட விதத்தில் அவனுக்கு பயம் தொண்டை வரை அடைத்தாலும் புன்னகையை சிந்தியபடி,

“அது வந்து சார், நான் சின்னதா ஒரு கம்பெனி ரன் பண்ணுறேன் சார். ஸ்டார்ட் பண்ணி கொஞ்ச மாசம் ஆகுது.” என்று தயங்க,

“உங்க பிஸ்னஸ்க்கு ஏதாவது உதவி வேணுமா?” என்று உதட்டில் சிரிப்பை  மறைத்து வைத்து வினவினான்.

“இல்ல சார். அது வந்து.. நான்.. உங்க தங்கச்சி” என்று தொடர்பில்லாமல் தொடர்பு படுத்த முயன்றான்.

இதற்கு மேல் அடக்கி வைக்க இயலாமல் நீரூபன் வாய் விட்டு சிரித்தான்.

அவனது சிரிப்புக்கான காரணம் புரியாமல் வசீகரன் விழிக்க,

“வசீ, என்னால முடியல பா.”என்று சிரித்தபடி அவன் தோளில் கை போட்டு,

“நேத்ராவை லவ் பண்ணுறேன்னு மூணு வார்த்தையில் சொல்ற விஷயத்தை போட்டு இந்த இழு இழுக்குற? நீ எப்படி நேத்ரா கிட்ட லவ்வை சொன்ன?” என்று கேட்க,

கண்கள் வெளியே வந்து விழுந்துவிடும் போல ஆச்சரியத்தில் அகலமாக திறந்து பார்த்தான் வசீகரன்.

“பேருக்கு ஏத்த மாதிரி பார்த்ததும் ஆளை மயக்குற மாதிரி வசீகரமா தான் இருக்க. ஐ லைக் யூ.” என்று அவனது கன்னத்தில் நீரூபன் கிள்ளி வைக்க, வசீகரனுக்கு மயக்கம் வராத குறை தான்.

“உங்களுக்கு எல்லாமே தெரியுமா சார்?” என்று மென்று விழுங்கி அவன் வினவ,

“முன்னாடியே தெரியும் வசீ. அண்ட் ஒன் மோர் திங். பிஸ்னஸ் பண்ணற நீ இவ்வளவு தயக்கத்தோட இருந்தா முன்னேற முடியாது. எப்பவும் தைரியமா இருக்கணும். இல்ல அப்படி இருக்குற மாதிரி  காட்டிக்கணும். புரியுதா?”என்று வினவ,

வசீகரன் கொஞ்சம் பயம் தெளிந்தவனாக, “இல்ல சார் உங்க கிட்ட தான் இவ்வளவு பயம். ஆபிஸ் விஷயம் எல்லாம் நல்லா ஹேண்டில் பண்ணுவேன்.” என்று கூறினான்.

நீரூபனும் சிரித்துக் கொண்டு, “பார்த்திருக்கேன் பா. உன் பிஸ்னஸ் மீட்டிங், உன்னோட ஆபிஸ் எல்லாமே பார்த்திருக்கேன்.” என்றதும்,

ஆச்சரியத்துடன், “எப்படி சார்?” என்று கேட்க,

“இன்னும் என்ன சார்? உரிமையா மாமான்னு கூப்பிடு, இல்ல அத்தான்னு கூப்பிடு.”என்று நிரூபன் அவன் முதுகில் தட்ட,

நம்ப முடியாத அதிர்ச்சியுடன் புன்னகைத்தான் வசீகரன்.

அதன் பின் இருவரும் பிஸ்னஸ் விஷயங்கள் பல பேசிக் கொள்ள, வெளியில் இருந்து பார்த்தபோது தெரிந்த முரட்டுத்தனமான நீரூபனை வசீகரன் உணரவே இல்லை. அத்தனை அன்பும், பிரியமும் உடையவனாக இருந்தான் அவன்.

வசீகரன் தன் பயம் மறந்து அன்பானவனோடு மனம் விட்டு பேசி சிரிக்க, இதை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பூமிகாவும் ஆனந்தும் அவர்களின் பேச்சு புரியாமல் போனாலும் அது தொழில் முறை சந்திப்பு இல்லை என்பதை புரிந்து கொண்டனர்.

“என்ன டி இவர் பிஸ்னஸ் மீட்டிங்னு சொன்னாரு, ஆனா ஒரு பையனை தோளோடு சேர்த்து பிடிச்சு இந்த சிரி சிரிக்கிறாரு. எனக்கு ஒன்னும் புரியல டி பூமி. பார்த்துக்கோ.” என்று எச்சரிக்கை செய்ய,

“டேய் என்ன சொல்ல வர்ற? கொன்னுடுவேன் உன்னை.” என்று மிரட்டிய பூமிகாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.


கட்சி அலுவலகம் எப்பொழுதும் போல பரபரப்புடன் காணப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்க சில நாட்களே இருக்கும் நிலையில் இதைப் பற்றி பேச கட்சியின் முக்கிய ஆட்களை அழைத்திருந்தார் திருமூர்த்தி.

அவர்களுக்கான பிரத்யேக ஆலோசனை அறையில் அவர்கள் அமர்ந்திருக்க,

“ஐயா நமக்கு இந்த உள்ளாட்சி தேர்தல்லயும் சாதகமான சூழல் இல்லைங்க. என்னோட எண்ணம் என்னன்னா, நம்ம தம்பியை அரசியலுக்கு கொண்டு வந்தா இளைஞர்கள் எல்லாம் நம்ம பக்கம் சீக்கிரமா வர வாய்ப்பு இருக்குங்க” என்று முதுகை அரை வட்டமாக குனிந்து நின்று தன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தற்போதைய எதிர்கட்சித் தலைவரான திருமூர்த்தியிடம் கூறிக் கொண்டிருந்தார் அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான கோதண்டம்.

“நீ சொல்றது நல்ல யோசனை தான் கோதண்டம். ஆனா தம்பி அரசியல் பக்கம் வர மாட்டேன்னு ரொம்ப தெளிவா சொல்லிட்டான். அதுவும் இல்லாம எனக்கு அரசியல் வாரிசா என் மக அஞ்சனா இருக்கும் போது அவனை இப்போ கூப்பிடுறது நல்ல முடிவா எனக்கு தோணல.” என்று திருமூர்த்தி முடிவாகக் கூறிவிட்டார்.

“புரியுதுங்க ஐயா. ஆனாலும் தம்பி கிட்ட கடைசியா ஒரு தடவை பேசிப் பாருங்க. இள ரத்தம் உள்ள வந்தா கட்சிக்கு பெரிய பலம்.” என்று அவர் சொல்லும்போதே தொண்டையை கணைத்தபடி உள்ளே நுழைந்தாள் அஞ்சனா தேவி ராக்கேஷ் குமார்.

“என்ன கோதண்டம் அண்ணே. ரொம்ப நேரமா ஏதோ பலமான ஆலோசனை போல. நான் வந்ததும் அப்படியே அமைதியா ஆனா மாதிரி தெரியுதே!” என்று தன் பட்டுச் சேலையை சரி செய்தபடி அஞ்சனா தேவி வினவ,

“இல்லங்க மா, நம்ம தம்பி… அரசியலுக்கு வந்தா..” என்று இழுக்க,

“அதெல்லாம் நான் கூப்பிட்டு பார்த்துட்டேன். அவன் வர முடியாதுன்னு சொல்லிட்டான். இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை? உள்ளாட்சி தேர்தலா இல்ல எந்தம்பி அரசியலுக்கு வர்றதா?” என்று நேரடியாக அவள் கேட்டதும் ஏதும் பேசாமல் தலையை தொங்க விட்டபடி நின்றுவிட்டார் அவர்.

அவருக்கு அஞ்சனாவை ஆரம்பத்தில் இருந்த பிடிக்காது. பெண்பிள்ளை என்பதை தாண்டி, அவளது பல செயல்பாடுகள் கோதண்டம் போன்ற பல மூத்த அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் இருந்தது.

கட்சித் தலைவருடன் மனம் விட்டு பேசக் கூட முடியாமல் அஞ்சனா எப்பொழுதும் தடுப்பு சுவராக நிற்பது பிடிக்காமல் முகத்தை சுளித்துக் கொண்டு, அதை கட்டிக் கொள்ளாமல் இருக்க தலையை தொங்க விட்டிருந்தார்.

“நீ கிளம்பு கோதண்டம்” என்று அவரை அனுப்பிவிட்டு தன் மகள் புறம் திரும்பினார் திருமூர்த்தி.

“விடு அஞ்சு. எல்லாரும் ஆசைப்படுறது தான். ஆனா அவன் தான் சொல்லிட்டான்ல எனக்கு விருப்பம் இல்லாததை நீங்க தலைகீழா நின்னாலும் செய்ய மாட்டேன். நான் விரும்பறதை நீங்க நடுவுல பூந்து கெடுத்தாலும் நடத்தாம விடமாட்டேன்னு.
சின்ன வயசுல இருந்தே அவன் பிடிவாதம் நமக்கு தெரியாதா. அடங்குற ரகமா அவன். அதுவும் இல்லாம சொல்பேச்சு கேட்காதவன் அரசியலுக்கு லாயக்கு இல்லம்மா. நீ அப்பா சொன்னா சரியா இருக்கும்ன்னு கேட்ப, ஆனா அவன் அப்படி செய்ய மாட்டான். அதுனால எப்பவும் நீ தான் மா என் அரசியல் வாரிசு.” என்று எழுந்து மகளை தோளோடு அணைக்க,

“இப்போ இப்படி சொல்லிட்டு நாளைக்கே உங்க அந்த பொண்டாட்டி மக அரசியலுக்கு வர ஆசைப்பட்டான்னு இழுத்துட்டு  வர மாட்டீங்களே!” என்று கறார் குரலில் வினவினாள் அஞ்சனா.

திருமூர்த்தி சிரித்தபடி, “அவ அவங்க அண்ணன் மாதிரி தான் மா, இதுல எதுலையும் நுழைய அவளுக்கு விருப்பமும் இல்ல, இதைப் பத்தின அறிவும் இல்ல. அவ கம்பியூட்டரை தட்டி கோடில சம்பாதிக்க தான் லாயக்கு.” என்று அகலாமாகச் சிரித்தார்.

தந்தையுடன் சிரிப்பில் இணைந்த அஞ்சனாவுக்கு தெரியவில்லை அவர்களை தானே இதற்குள் இழுத்து வருவோம் என்று.