அடங்காத அதிகாரா 04
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 4
தன்னுடைய அறையில் சஞ்சலம் நிறைந்தவளாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் அஞ்சனா.
நீரூபனின் செயல்கள் அவளுக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்திருந்தது.
அதிலும் அவன் தைரியமாக நில அபகரிப்பு, தொழில் பெருக்கம் என்று தன் வழியில் செல்லச் செல்ல, அது அரசியல் நோக்கி அவன் வைக்கும் அடிகளோ என்ற எண்ணம் அழுத்தமாக அஞ்சனாவை ஆட்கொண்டது.
அன்னையின் மறைவுக்குப் பின் நாகரத்தினத்தின் வரவால் கோபம் அதிகமான அஞ்சனா தந்தையை மாற்றாந்தாயிடம் நெருங்க விடாமல் இருக்க எப்பொழுதும் அவரை ஒட்டிக் கொண்டே அலைந்தாள்.
அந்த வயதில் அரசியல் பற்றியெல்லாம் அவளுக்கு கவனம் இருக்காது என்ற நினைப்பில் திருமூர்த்தியும் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவளையும் அழைத்துச் செல்வார்.
அரசியல் பேச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அஞ்சனாவின் மனதில் இறங்கிக் கொண்டிருந்தது. அவள் அரசியல்வாதி மகள் என்ற எண்ணம் மாறி அவளே அரசியல்வாதியாக உருவெடுக்க ஆரம்பித்தாள்.
அவளது அரசியல் ஆர்வத்தைக் கண்டு திருமூர்த்தி முதலில் தயங்கினாலும் நீரூபனின் வயதை கருத்தில் கொண்டு முடிந்தவரை அஞ்சனாவை தனக்கு பின் கொண்டு வந்து விட்டால், நீரூபன் வளர்ந்து அரசியலுக்கு வரும்போது அவனுக்கு தோள் கொடுத்துக் கற்றுக் கொடுக்க அஞ்சனா இருப்பாள் என்று நம்பி திருமூர்த்தி அவளை அவள் போக்கில் விட்டு அரசியல் நிலவரம், ஆட்களை கணித்தல், கையாள்தல் போன்றவற்றை அஞ்சனாவுக்கு கற்றுக் கொடுத்தார்.
அஞ்சனா தானே தலைவராக வந்து அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது அவர் அறியாத உண்மை.
பிறந்தது முதலே நாகரத்தினத்திடம் வளர்ந்ததால் அவன் மனதில் அவர் அன்னை என்ற ஸ்தானமும் நேத்ராவை தன் உயிர் தங்கையாக எண்ணினான் நீரூபன்.
அஞ்சனாவிடம் எட்டியே பழகியதால் எதையும் அவ்வளவு எளிதில் அவளிடம் சொல்லிக் கொள்ள மாட்டான். வளர்ந்து வந்த பின் தந்தை தன்னை அரசியலில் நுழைக்க நினைப்பதை கவனித்து அவனும் ஆர்வமாக அவருடன் கிளம்ப, அதை அஞ்சனா தடுத்த விதத்தில் அவளது எண்ணத்தை புரிந்து கொண்டு அரசியலில் கால் பதிக்காமல் ஒதுங்கிக் கொண்டான்.
பிடித்த படிப்பைப் படித்தான். விரும்பிய தொழில்களைச் செய்தான். தவறென்று கண்டால் வேங்கையாய் வெகுண்டான். அன்பு கொண்ட இடத்தில் அமைதியின் உருவாய் கரைந்தான்.
ஆனால் இவனது எந்த குணமும் அஞ்சனா அறியாதது. அறிந்து கொள்ள அவள் விழையவும் இல்லை. அவளது எண்ணமெல்லாம் தான் அரசியலில் கோலோச்ச வேண்டும் என்பதே.
இப்பொழுதும் அவனது செயல்களின் காரணம் விளங்காது தவிப்புடன் அவள் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, அவளது கணவன் கோபமாக அறைக்குள் நுழைந்தான்.
ராக்கேஷ் குமார் அவளுடன் கல்லூரியில் ஒன்றாகப் பயின்றவன். அவளது அழகையும் பணத்தையும் கண்டு அவள் பின்னே காதல் என்று திரிய, தன் பேச்சுக்கு முழுமையாக அடிபணிபவனா என்று பல முறை சோதித்துவிட்டு அதன்பின் திருமூர்த்தியிடம் கூறி திருமணத்தை முடித்து வீட்டோடு அவனை தங்க வைத்து விட்டாள். அவனும் மாமனார் பணத்தை பெருக்கிக் காட்டுகிறேன் என்று நல்ல மருமகனாக பணக் கணக்குகளை பார்த்து குடும்பத்துக்கு பேருதவி ஆற்றி வருகிறான்.
கணவன் கோபமாக வருவதைக் கண்டு, “என்ன ராக்கி ஏன் இவ்வளவு கோபம்? எதுவும் காண்ட்ராக்ட் பிரச்சனையா?” என்று சரியாக கணித்து கேள்வி எழுப்பினாள்.
“ஆமா அஞ்சு. நான் மாமா கிட்ட அவ்வளவு தூரம் சொன்னேன் அந்த மழை நீர் கால்வாய் காண்ட்ராக்ட் நம்ம ஆளுங்களுக்கு தான் கிடைக்கணும். அப்ப தான் இந்த உள்கட்சி தேர்தலுக்கு நமக்கு எல்லாம் சரியா இருக்கும்னு. ஆனா மாமா அதை பெருசா எடுக்கல. இப்போ பாரு அதை ஆளுங்கட்சி ஆளுங்க எடுத்தாச்சு. அவனுங்க கால்வாய் வெட்டி சிமெண்ட் போட சிமெண்ட் மூட்டைன்னு சொல்லி பணத்தை கொண்டு தொகுதி முழுக்க கொடுத்தா என்ன பண்ண முடியும்? ஜெய்க்கணும்னு சொல்றது மட்டும் போதாது அஞ்சு, கொஞ்சம் நமக்கு தேவையானதை கவனிக்கவும் செய்யணும்.” என்று கோபத்துடன் இரைந்தான்.
“சரி விடு ராக்கி. நான் என்ன பண்றதுன்னு பாக்கறேன்.” என்று சொல்லிவிட்டு அவள் நடையைத் தொடர்ந்தாள்.
“நீ ஏன் அஞ்சு இப்படி இருக்க?” என்று அருகே அவன் வர,
“நீரு நேத்து ஒரு லேண்டை மிரட்டி எழுதி வாங்கி இருக்கான். அந்த பெரிய பிரைவேட் ஸ்கூல் ஒன்னு விலைக்கு வந்ததுல்ல, நீ கூட வாங்கணும்னு சொன்னியே. அதை அவன் வாங்கிட்டான். இப்போ தான் அந்த பொம்பளை கிட்ட துள்ளி குதிச்சு சொல்லிட்டு இருந்தான்.” என்று எரிச்சலாகக் கூறினாள்.
“என்ன சொல்ற? அந்த ஸ்கூலை வாங்கிட்டானா? நான் நேத்து பேசினப்ப கூட அந்த ஆள் வித்துடதா சொல்லவே இல்லையே!” என்று புரியாமல் மெத்தையில் தொப்பென்று அமர்ந்தான் ராக்கேஷ்.
அவன் அந்த பள்ளியை தன் பெயரில் வாங்கி தனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள்ள எண்ணி இருந்தான். அந்த கனவுக் கோட்டையை நீரூபன் கலைப்பான் என்று அவன் எண்ணவே இல்லை. அவனுக்கு அது பெரும் ஏமாற்றமாக இருந்தது.
நீரூபன் பிறந்தது முதலே பணக்காரன். அவன் தந்தை அவனுக்காக கோடிகளில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார். அப்படி இருக்க இவனும் தொழில் தொழிலென்று பணத்தைப் பெருக்குவதைக் காணக் காண ராக்கேஷுக்கு ஆத்திரம் பிறந்தது.
சிலர் மேல் காரணமே இல்லாமல் வெறுப்பு தோன்றும். அவர்கள் செய்யும் நல்லது கூட நமக்கு கோபத்தையும் எரிச்சலையும் கொடுக்கும். ராக்கேஷ் மனதில் நீரூபன் அப்படிப்பட்ட இடத்தில் தான் இருந்தான்.
அவரவர் இடத்தில் இருந்தே அடுத்தவரை கணிப்பவருக்கு யாருடைய வலியோ, கஷ்டமோ அன்போ புரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தன்னையும் தன் நலத்தையும் பற்றித் தான்.
வசீகரன் தன் செல்போனில் இருந்த அந்த எண்ணைப் பார்ப்பதும் பின் செல்லை மேஜையில் வைப்பதுமான இருந்தான்.
அவன் மனம் பயத்தில் வெளியே குதித்து விடும் போல படபடவென்று துடித்துக் கொண்டிருந்தது.
அவன் நேத்ராவிடம் பல முறை பேசிப் பார்த்துவிட்டான். அவள் இம்மியும் அசரவில்லை.
“நம்ம காதலுக்காக எங்க அண்ணன் கிட்ட கூட பேச முடியாதா உன்னால?” என்று கடைசியில் கோபமாகப் பேசி அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
அதன் பின் அவன் எவ்வளவு முயன்றும் அவள் அழைப்பை ஏற்கவில்லை. அதனால் வெறுத்துப் போனவனாக நீரூபனுக்கு அழைக்க ஆயத்தமானான்.
செல்லை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தவன் மனதில் நீரூபனிடம் சந்திக்கச் கேட்க என்ன காரணம் சொல்வது என்பதே பெரும் குழப்பத்தைத் கொடுத்தது.
முதலில் காதலைப் பற்றிப் பேசாமல் தொழில்முறை சந்திப்பு என்று சொல்வோம் என்ற முடிவுக்கு வந்தான்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அழைப்பை மேற்கொண்டான்.
தன்னுடைய ஜீப்பில் கல்வி அலுவலரை சந்திக்க சென்று கொண்டிருந்த நீரூபன் மொபைலில் அழைப்பு மணி ஒலிக்க அதனை எடுத்து யாரென்று நோக்கினான்.
அதில் தெரிந்த வசீகரனின் எண்ணைக் கண்டதும் சிரித்தபடி வாகனத்தை ஓரமாக நிறுத்தினான்.
போனைப் பார்த்தபடி, ‘ஒரு வழியா தைரியம் வந்து போன் பண்ணிட்டான் போல இருக்கே!’ என்று வாய்விட்டு சிரித்து பின் குரலை செருமியபடி அழைப்பை ஏற்றான்.
“ஹலோ” என்று கிணற்றில் இருந்து கேட்கும் குரலாக வசீகரனின் குரல் இருக்க,
“எஸ்.” என்ற ஒற்றை வார்த்தையில் அவனை திணற வைத்தான் நீரூபன்.
“சார் நான்.. என் பேர் வசீகரன்.” என்று தயங்கித் தயங்கி பேசியதைக் கண்டு நீரூபனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கியபடி,
“சோ? என்ன விஷயமா என்னை காண்டாக்ட் பண்ணி இருக்கீங்க?” என்று சாதாரணமாக வினவினான் நீரூபன்.
ஆனால் அதற்கே வியர்த்து விட்டது வசீகரனுக்கு.
“சார் உங்களை நேர்ல பார்த்து கொஞ்சம் பேசணும். அபாயின்ட்மென்ட் கிடைக்குமா?” என்று மென்று விழுங்கி கேட்டு விட்டான்.
“நேர்ல மீட் பண்ணனுமா? என்ன விஷயமா? எதுனாலும் போன்ல சொல்லுங்க மிஸ்டர் வசீகரன்.” என்று கேட்க,
“இல்ல சார் நேர்ல பார்த்தா கொஞ்சம் பெட்டரா..” என்று இழுக்க,
“பெட்டரா எக்ஸ்பிளைன் பண்ண முடியுமா?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான் நிரூபன்.
வசீகரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவன் தயங்கிக் கொண்டே பதில் பேசாது அமைதியாக இருந்தான்.
“ஓகே. நான் இப்போ மெரினா பீச்சுக்கு பக்கத்துல இருக்கேன். கொஞ்சம் ஃப்ரீ தான். உடனே வந்தா மீட் பண்ணலாம்.” என்று வேகமாக கூறினான் நீரூபன்.
வசீகரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“சார்” என்று கைக்கடிகாரத்தைக் கண்டவன் “அரை மணி நேரம் ஆகும் சார் பரவாயில்லையா?” என்று தயக்கமாக வினவ,
“ஒன்னும் பிரச்சனை இல்ல, எனக்கு பக்கத்துல ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு வெயிட் பண்ணுறேன். நீங்க வாங்க” என்றதுடன் பேச்சை முடித்துக் கொண்டு அழைப்பைத் துண்டித்தான்.
வசீகரனுக்கு திக்கென்று இருந்தது. காரணம் கேட்டவன் உடனே வா என்று வரசொன்னதும் அவனுக்கு உடம்பில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அவன் சந்திக்க மறுநாள் நேரம் கொடுப்பான் அதற்குள் என்ன பேசவேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி அழைப்பை மேற்கொண்டவன் இப்படியான திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை.
இன்னும் அரை மணிநேரம்.. இல்லை இருபத்து ஐந்து நிமிடங்கள் தான் இருக்கிறது. அவனிடம் எப்படி அவனது தங்கையை தான் விரும்புவதாகவும் மணக்க சம்மதிக்க கோரியும் கேட்பதென்று தெரியாமல் வேகமாக தன் வாகனத்தை நோக்கிச் சென்றான். அவன் அலுவலக கண்ணாடியில் அவனது பிம்பத்தைக் கண்டவன் தலையில் அடித்துக் கொண்டு தன் அறை நோக்கி ஓடினான்.
முட்டி அருகில் கிழிந்த ஜீன்சும், டீஷர்ட்டில் ஐ டோண்ட் கேர் என்ற வாசகமும், தலையை வாரி பல மாதங்கள் ஆனது போல பரட்டை தலையுமாக அவன் பிம்பத்தைக் கண்டு அவனே அவனைக் காறி உமிழ்ந்து கொண்டான்.
அறைக்குச் சென்றவன் ஆழ்ந்த நீல நிற பார்மல் பேண்ட்சும் வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்து தலையை ஜெல் கொண்டு வாரி, ஃபார்மல் ஷுவை அணிந்து கொண்டான்.
மீண்டும் வண்டியை எடுக்கச் சென்றவன் திரும்பி வந்து அவனது கப்போர்ட்டில் இருந்த ஃபைலைத் தேடி எடுத்துக் கொண்டு நீரூபன் கூறிய இடத்துக்கு விரைந்தான்.
அரை மணி நேரம் ஆகும் என்று வசீகரன் கூறி விட்டதால் பக்கத்தில் இருந்த காபி ஷாப்புக்கு சென்று ஒரு கோல்ட் காபியை ஆர்டர் கொடுத்த நீரூபன் தன் செல்போனில் யாருக்கோ குறுந்தகவல் அனுப்பிவிட்டு புன்னகை தவழும் முகத்துடன் அமர்ந்திருந்தான்.
அவனுக்கு பின்னால் இருந்த டேபிளில் தன் தோழமைகளோடு அமர்ந்து கொட்டம் அடித்துக் கொண்டிருந்த பூமிகா எதற்கோ திரும்பிப் பார்க்க நீரூபன் அங்கே அமர்ந்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தவளாக, தன் தோழர்களிடம் இதோ வருகிறேன் என்று கூறி நகர்ந்தவள், நீரூபன் முன்னே குதித்து வந்து நின்றாள்.
அவனுக்கு மிக அருகில் வந்து “மாமா” என்று அவள் குதிக்க, கையில் அப்பொழுது தான் எடுத்த கோல்ட் காபி அவளது கூச்சலில் தடுமாறி அவன் மீதே கொட்டப் பார்த்தது.
சுதாரித்து அதனை மேசையில் வைத்துவிட்டு கோபத்துடன் எழுந்த நீரூபன் அங்கே குறும்பு வழியும் கண்களுடன் நிற்கும் பூமிகாவைக் கண்டு பூவாய் மலர்ந்து சிரித்தான்.
“என்ன டி குள்ளக்கத்திரிக்கா, இப்படியா வந்து குரங்கு குட்டி மாதிரி குதிப்ப?” என்று அவள் தலையில் செல்லமாகக் குட்டினான்.
அவள் தலையைத் தேய்த்து விட்டபடி, “உங்களை பார்த்ததும் ஒரு குஷில வந்து குதிச்சுட்டேன் மாமா” என்று அழகாக புன்னகை புரிந்தாள்.
தான் வந்திருக்கும் வேலை நினைவுக்கு வந்தவனாக,
“நான் பிஸ்னஸ் விஷயமா ஒருத்தரை பார்க்க வந்திருக்கேன் பூமிகா. நாளைக்கு காலைல ஃபார்ம்ல பார்க்கலாம்” என்று அவளுக்கு நீரூபன் விடை கொடுக்க முனைய,
தன் அத்தை மகனை ஓரக்கண்ணில் ரசித்தபடி மனம் முழுவதும் நிராசையுடன் நடந்தாள் பூமிகா.