அடங்காத அதிகாரா 03
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 3
“ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா
செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி
கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ
ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா”
ஹோம் தியேட்டர் 5.1 இல் பாடல் வீட்டையே அதிர வைத்துக் கொண்டிருந்தது.
சமையல் வேலையாக இருந்த அர்ச்சனா ஹாலுக்கு வந்து மாடியைப் பார்த்து கத்தத் துவங்கினார்.
“ஏய் வீடு டி இது. பாட்டு போட்டு வீட்டை ரெண்டு பண்ணிட்டு இருக்க, ஒழுங்கா அதை ஆஃப் பண்ணிட்டு கீழ வந்தா முழுசா வெளில கிளம்பி போவ. நான் மேல வந்தேன் நீ அவ்வளவு தான்.”என்று கத்திவிட்டு வேலையாளிடம்,
“இன்னும் ரெண்டு நிமிஷத்துல அவ அதை ஆஃப் பண்ணலன்னா நீ அதை ஆஃப் பண்ணு.” என்று கட்டளை பிறப்பித்து விட்டு மீண்டும் உள்ளே சென்றார்.
அவர் குரல் கேட்டு படுக்கையறையை விட்டு வெளியே வந்த அர்ச்சனாவின் கணவர் பாலரமணி மாடியை ஒரு பார்வை பார்த்துவிட்டு உணவு மேசையில் வந்து அமர்ந்தார்.
கணவர் வந்துவிட்டதை உணர்ந்து கையில் அவருக்குப் பிடித்த கிரீன் டீ எடுத்துக் கொண்டு அவர் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தார் அர்ச்சனா.
அப்பொழுதும் மேலே இருந்து பாடல் காதை கிழித்துக் கொண்டு கேட்டது.
“இவளை..” என்று எழுந்தவரை, கை பிடித்து தடுத்த பாலரமணி,
“உட்காரு அச்சு” என்று அமர்த்தினார்.
“தாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள்
மறக்குமா மறக்குமா நெஞ்சே
மழைத்துளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும்
கரையுமா கரையுமா கண்ணில்
ஹைதர் கால வீரந்தான் குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ
கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ யாரவனோ”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“ஆமா இப்படி ஒரு இம்சையை கல்யாணம் பண்ணிக்கிறதே பெருசு. இதுல இவளுக்கு குதிரையில வேற வரணுமா?” என்று நொடித்தார்.
அவர் பேச்சைக் கேட்டு பாலா சிரிக்க,
“சிரிக்காதீங்க. பிள்ளையா பெத்து வச்சு இருக்கீங்க? காலைல கிளம்பி அந்த ஆனந்த் பையன் கூட வெளில போனா சாயங்காலம் தான் வர்றா. எப்பவும் பாட்டு கூத்துன்னு இவளை சமாளிக்க முடியலங்க.” என்று சலித்தார்.
அப்பொழுது மாடியில் இருந்து துள்ளி குதித்து இறங்கி வந்தாள் அவள்.
“ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா”
“ஆமா பெரிய.. சுட்டி பொண்ணு” என்று மகளை அர்ச்சனா முறைக்க, பாலா வாய்விட்டுச் சிரித்தார்.
மாடியில் இருந்து மாஸ்மெல்லோ நிற ஸ்கர்ட்டும் பவுடர் ப்ளூ நிற முக்கால் கை டாப்ஸும் அணிந்து கூந்தலை உயர்த்தி மெஸ்ஸி பன் ஸ்டையிலில் கொண்டை போட்டிருந்தாள்.
முகத்தில் மேக்கப் எதுவும் இல்லை. வாயில் பாடலை முணுமுணுத்துக் கொண்டு வந்தவள்,
“குட் மார்னிங் டாடி” என்று தந்தையை பின்னால் இருந்து அணைத்து விட்டு அவளும் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.
உணவு மேசையில் இருந்த ஹாட்பாக்ஸ் அனைத்தையும் ஒவ்வொன்றாக திறந்து பார்த்தவள்,
“மேரி அக்கா எனக்கு ஒரு ஆம்லேட்” என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்துவிட்டு பூரி கிழங்கை தன் தட்டில் எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தாள்.
அர்ச்சனா அவளது செய்கையில் கடுப்பானவராக, “ஏன்டி காலைல இருந்து கத்திட்டு இருக்கேன். கொஞ்சம் கூட சட்டை பண்ணாம வந்து கொட்டிக்கிட்டு இருக்க” என்று அவளை நோக்கி எழுந்து வர,
“டாடி உங்க வைஃப் கிட்ட சொல்லி வைங்க, நான் ஒன்னும் இன்னும் எல்.கே.ஜி படிக்கிற பாப்பா இல்ல. எனக்கு இருபத்து நாலு வயசாகுது. நான் சினி ஃபீல்டுல சொன்னா ஐடென்டிஃபை பண்ணுற அளவுக்கு.. டான்ஸ் அசிஸ்டன்ட்டா இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் இரண்டு பூரிகளை வைத்துக் கொள்ளும்போது மேரி ஆம்லேட் எடுத்து வந்தார்
“சோ ஸ்வீட் மேரி அக்கா நீங்க.” என்று ஆம்லேட்டை பூரிக்குள் வைத்து இடையில் கிழங்கையும் சேர்த்து பூரியை சுற்றி ராப் மாதிரி கையில் பிடித்து உண்ண ஆரம்பித்தாள்.
அன்னையிடம் பேசிக்கொண்டிருந்ததை மறந்து உணவின் சுவையில் ‘ஆஹா’ என்று பாராட்டி உண்டு கொண்டிருக்க,
பாலரமணி மகளை கரிசனையாக நோக்கினார்.
மகளின் மனதும் அதில் இருக்கும் ஆசையும் புரிந்த மனிதர். மகளுக்காக என்று கேட்டால் உயிரையும் கொடுக்கும் அன்பு கொண்டவர்.
அவள் சாப்பிடும் அழகைக் கண்டு வெகுண்டு எழுந்தார் அர்ச்சனா.
“ஆமா சினிமா, பாட்டு கூத்துன்னு நீ செய்யற எதுவும் எனக்கு பிடிக்கல பூமிகா. ஒழுங்கா நாங்க பாக்கற பையனை கல்யாணம் பண்ணிட்டு குடும்பமா வாழற வழிய பாரு.” என்று அவள் மீது உண்மையில் இருந்த கோபத்தின் காரணத்தை வெளிப்படுத்தினார்.
பூமிகா என்ற அவளோ பூமி போல பொறுமையாக அன்னை பேச்சைக் கேட்டு கொண்டிருந்து விட்டு, டேபிள் மேல் இருந்த டிஷ்யூ பேப்பர் கொண்டு கையையும் உதடுகளையும் துடைத்துக் கொண்டாள். சமையலறையை நோக்கி,
“மேரி அக்கா ஆம்லேட் சூப்பர். தட்டை எடுத்து வாஷ் பண்ண போட்டுடுங்க எனக்கு நேரம் ஆகுது.” என்றவள்,
“பை டாடி” என்று எட்டி தந்தையின் நெற்றியில் முத்தம் பதித்து தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வாயிலை நோக்கி ஒயிலாக நடந்தாள்.
“ஏய் நில்லுடி. நான் பேசிட்டு இருக்கேன் நீ போயிட்டே இருக்க” என்று கோபமாக அர்ச்சனா எழுந்து வர,
“டாடி என் லட்சியம் பெரிய டான்ஸ் மாஸ்டர் ஆகுறது தான். சும்மா நீங்க காட்டுற காஞ்சு போனவனை கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டி பெத்து கஞ்சி காய்ச்ச நான் ஆள் இல்ல. இந்த டாபிக் இனிமே நம்ம வீட்ல வராதுன்னு நினைக்கிறேன்” என்று வெகு தீவிரமான குரலில் கூறியவள் வாயிலில் கேட்ட ஹார்ன் சத்தத்தில் “பை” என்று சொல்லிவிட்டு வாயிலைக் கடந்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அந்த பெரிய வீட்டின் வாயில் வரை நிதானமாக நடந்து வந்தவள், காவலாளி கதவைத் திறந்து விட்டு வணக்கம் வைக்க, புன்னகையை உதிர்த்து விட்டு, வெளியே வந்தாள்.
வெண்ணிற ஸ்கோடா காரில் ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமிப்பு செய்திருந்தான் அவளது ஆருயிர் நண்பன் ஆனந்த்.
“ஹாய் மச்சி” என்று அவளை நோக்கி அவன் கை உயர்த்த,
“வா மச்சி” என்று அவளும் அவனுக்கு ஹை ஃபை கொடுத்துவிட்டு சுற்றி வந்து காரில் ஏறினாள்.
“என்ன காலைலயே முகம் டார்க் எஃபெக்ட்ல இருக்கு. அம்மா செஞ்சு விட்டுட்டாங்களோ?” என்று தனுஷ் பாணியில் விரல்களைக் கொண்டு காமெடி செய்தான் ஆனந்த்.
“உஃப்” என்று காற்றை ஊதித் தள்ளிய பூமிகா,
“எங்க அம்மா கிட்ட மட்டும் டெரர் பீஸ் மாதிரி ஆக்டிங் பண்றதுக்குள்ள உள்ள நடுங்கிப் போகுது மச்சி. எப்படி தான் வில்லியா பலரும் வலம் வர்றாங்களோ தெரியல. நம்ம கேரக்டருக்கு அது செட்டே ஆகல மச்சி” என்று நக்கல் செய்தபடி அவன் தோளில் வலது கையைப் போட்டு இடது கையை காற்றில் அலைய விட்டபடி கால் மேல் கால் போட்டு அவள் அமர்ந்திருந்தத தோரணை கண்டு,
“நீயெல்லாம் ஆக்டிங் பத்தி பேசுற பாரு.. ஐயோ முடில டி” என்று அவளது கையைத் தட்டி விட்டு காரைக் கிளப்பினான்.
மூன்று ஆண்டுகளாக தினமும் காலையில் எங்கு செல்வார்களோ அந்த இடத்துக்கு அவள் சொல்லாமலே வாகனத்தை செலுத்தினான்.
இத்தனை நேரம் இருந்த விளையாட்டு மனநிலை மாறி சிறு தவிப்போடு அமர்ந்திருந்தாள் பூமிகா.
அதன் காரணம் அறிந்த ஆனந்தின் மனம் அவளுக்காக வருத்தம் கொண்டது.
மதிய உணவுக்கு பின்னான நேரத்தில் அந்த விசாலமான வீட்டின் கேட்டைக் கடந்து வாகனம் நிறுத்துமிடம் சென்று நின்றது அந்த தார் ஜீப்.
உள்ளிருந்து தாவி இறங்கினான் நீரூபன்.
வாயிலில் நின்ற காவலர்கள் மரியாதை நிமித்தம் வணக்கம் வைக்க, சிறு புன்னகையுடன் கடந்து வீட்டினுள் நுழைந்து மாடிப்படிகளில் ஏறினான்.
முதல் தளத்தை அடைந்ததும், அவன் அறையை நோக்கி நடக்க,
“நீரு” என்ற குரல் கேட்டு அப்படியே நின்றான்.
இந்த நேரத்தில் அவளை அவன் வீட்டில் எதிர்பார்க்கவில்லை என்பது அவன் நின்ற நிலையிலேயே தெரிந்தது.
அவனுக்குப் பின்னால் பட்டுச் சேலை சர சரக்க வந்து நின்றாள் அஞ்சனா தேவி.
மெதுவாக பின்னால் திரும்பிய நீரூபன், “சொல்லுங்கக்கா” என்று அமைதியாக கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நின்றான்.
“சாப்பிட வருவன்னு பார்த்தேன். இப்போ தான் வர்ற?” என்று கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்றாள் அஞ்சனா.
அஞ்சனா திருமூர்த்தியின் மூத்த புதல்வி. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் மூத்த தாரத்தின் முதல் மகள். நீரூபன் அஞ்சனாவின் உடன் பிறந்த தம்பி. திருமூர்த்தியின் ஒரே ஆண் வாரிசு.
அஞ்சனாவின் கேள்விக்கு பதில் கூறாமல், “உனக்கு இப்போ என்கிட்ட என்ன கேட்கணுமோ அதை நேரா கேட்கலாம்கா. நான் பதில் சொல்லுவேன். இந்த பார்மாலிட்டி கேள்வி எல்லாம் அவசியம் இல்ல.” என்று பொட்டில் அடித்தது போல பேசினான் நீரூபன்.
“ஹ்ம்ம்” என்று பெருமூச்சு விட்ட அஞ்சனா,
“நீ யாரையோ மிரட்டி இடத்தை எழுதி வாங்கினதா கேள்விப்பட்டேன்.” என்றாள் கைகளை கைப்பிடியில் ஊன்றியபடி.
“அக்கா நான் மகளிர் அணில யாரு என்ன பண்றாங்க, அரசியல் பண்ண நீ யாரை எப்படி வாயை அடச்சன்னு ஆள் விட்டு வேவு பார்த்துட்டு இருக்கேனா? இல்லல்ல.. டீசென்டா ஒதுங்கி இருக்கேன் தானே?” என்று கேள்வி மட்டும் கேட்டுவிட்டு,
“அம்மா எங்க? அவங்களை பார்க்க தான் இந்த நேரம் வீட்டுக்கு வந்தேன்.” என்று என்ன பேசினால் அஞ்சனா அங்கிருந்து கிளம்புவாளோ அந்த பேச்சுக்குத் தாவினான் நீரூபன்.
அவன் செய்கையின் பலனாக அஞ்சனா கோபம் கொண்டு தனது அறைக்கு திரும்பி நடந்தாள்.
அவன் அன்னை என்று விளிப்பது திருமூர்த்தியின் இரண்டாம் தாரமான நாகரத்தினத்தைத் தான்.
திருமூர்த்தியின் மூத்த தாரமான பாலசரஸ்வதி நீரூபன் பிறந்த இரண்டு நாட்களில் ஜன்னி வந்து இறந்து விட, கைக்குழந்தையான அவனையும் பத்து வயது மகளையும் தனியே பார்த்துக் கொள்ள இயலாமல் திருமூர்த்தி திருமணம் செய்து கொண்டவர் தான் நாகரத்தினம்.
பெயருக்கு ஏற்றார் போல அவர் குணமும் ரத்தினம் தான். நீரூபன் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட பெண்மணி. தான் இந்த வீட்டிற்குள் வர காரணமான நீரூபன் மேல் உயிரையே வைத்திருந்தார்.
திருமூர்த்தியுடன் வாழ்ந்தாலும் தனக்கென்று பிள்ளை பிறந்தால் நீரூபனை தன்னை அறியாமல் வெறுக்கும் சூழல் உருவாகுமோ என்று பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் அவர் வாழ்ந்து வந்தார்.
நீரூபனுக்கு ஏழு வயது ஆகும்போது அஞ்சனா பருவப் பெண் என்பதாலும் அதிகம் நீரூபனிடம் அவள் நெருங்கிப் பழகாததாலும் நாகரத்தினத்தைக் கண்டாலே அவளுக்கு பிடிக்காது என்பதாலும் இருவர் இருக்கும் திசைக்கு அதிகம் வர மாட்டாள்.
அப்பொழுது நீரூபன் நாகரத்தினத்திடம் தான் அன்போடு கொஞ்சி விளையாட தன்னுடைய தோழர்கள் வீட்டில் உள்ளது போல சின்னக் குழந்தை ஒன்று வேண்டும் என்று கேட்க, அதை கவனித்த திருமூர்த்தி நாகரத்தினத்தின் மனதை மாற்றி அதன் பின் பிறந்தவள் தான் நேத்ரா.
அஞ்சனாவை விட நீரூபன் பத்து ஆண்டுகள் இளையவன். நேத்ராவுக்கும் அவனுக்குமான இடைவெளி எட்டு ஆண்டுகள்.
அஞ்சனாவின் தற்போதைய வயது நாற்பத்தி இரண்டு, நீருபனுக்கு முப்பத்தி இரண்டு, நேத்ராவுக்கு இருபத்தி நான்கு.
நாகரத்தினத்தின் மீதும் நேத்ரா மீதும் நீரூபன் மிகுந்த அன்பு கொண்டிருந்தான். அஞ்சனாவை கண்டால் என்ன என்பதோடு அவன் பேச்சு நின்று போகும். அக்கா என்ற உரிமையும் பிரியமும் இருந்தாலும் அது அஞ்சனாவிடம் பிரதிபலிக்காத காரணத்தால் ஒதுங்கியே நின்றான் நீரூபன்.
அவனது குரல் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தார் நாகரத்தினம்.
“கண்ணு” என்று அன்போடு அழைத்து அருகே வந்தவரை “அம்மா” என்று தாவி அணைத்துக் கொண்டான் நீரூபன்.
“என்ன கண்ணு இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க? மதியம் சாப்பிட்டியா? அம்மா சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று கேள்விகளை அவர் அடுக்க,
“அதெல்லாம் சாப்பிட்டு முடிச்சுட்டேன். நான் வந்தது ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்க கிட்ட சொல்ல தான்” என்று நாற்பது கிலோ எடையுடன் இருந்த அவரை தூக்கி சுற்றி இறக்கினான் நீரூபன்.
“அச்சோ கண்ணு, அம்மாவுக்கு தலை சுத்துது.” என்று அவர் அவன் தோளைப் பிடிக்க, அவர் கன்னத்தில் கிள்ளி,
“நான் சொல்லிட்டு இருந்தேன்ல ஒரு பிரைவேட் ஸ்கூல் விலைக்கு வருதுன்னு அதை இன்னிக்கு வாங்கியாச்சு. இப்போ தான் அதையும் பண்ணைக்கு எதிர்ல இருக்குற நிலத்தையும் ரிஜிஸ்டர் பண்ணிட்டு வர்றேன்” என்று மகிழ்ச்சியாக கூற,
“ரொம்ப சந்தோஷம் கண்ணு. இதோ இப்போவே ஸ்வீட் செய்ய சொல்றேன்.” என்று அவரும் மகிழ்ச்சியாக அவனுக்கு நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு கீழே இறங்கிச் சென்றார்.
இவர்கள் பேச்சை தன் அறை வாயிலில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அஞ்சனாவின் முகம் கடுத்தது.