☔ மழை 24 ☔

“பூச்சிகள் உருவத்தில் மிகச்சிறியவை. ஆகவே அவற்றைப் படம்பிடிக்க சிறிது சிரமப்பட வேண்டும். அந்நாட்களில் இப்போது இருப்பது போல ‘மேக்ரோ லென்ஸ்கள்’ கிடையாது. ஆகவே பூச்சிகளைப் படம் பிடிக்க கேமராவின் லென்ஸ் பூச்சியில் இருந்து ஒன்றிரண்டு அங்குல தூரத்தில் இருந்தால் தான் பூச்சியின் நுண்ணிய பரிமாணங்கள் தெரியும். ஆனால் கேமராவின் லென்சோ ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் இருந்து எடுத்தால் தான் படம் சரியாகத் தெரியும்.  அப்படி எடுத்தாலோ பூச்சி ஒரு புள்ளியாகத் தெரியும்.  ஆகவே நிலமையைச் சமாளித்திட பெல்லோஸ்கோப் என்ற கருவியின் உதவி தேவை. துருத்தி போன்ற அக்கருவியில் உங்கள் கேமராவி லென்சை பொருத்தி ஒரு அங்குல தூரத்தில் இருந்து கூட படங்கள் பிடித்திடலாம்”

                -புகைப்பட அனுபவங்கள் புத்தகத்தில் கல்பட்டு நடராஜன்

முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…

அதன் முக்கியமான ஊழியர்கள் தங்கியிருக்கும் சனாதி ரிசார்ட் பகுதியில் தனித்து இருக்கும் குடில் போன்ற வீட்டிற்குள் நுழைந்தார் ரவீந்திரன். அங்கே அவரது முகஜாடையுடன் வருத்தம் தோய்ந்த வதனத்துடன் இருக்கையில் சாய்ந்திருந்தான் ஒரு திடகாத்திரமான வாலிபன்.

ரவீந்திரனைக் கண்டதும் எழுந்து நேராக அமர்ந்தவன் “என்ன விசயம்பா?” என்று சுரத்தேயின்றி வினவ

“சிக்ஷால உனக்காக பீபிள் வெயிட் பண்ணுறாங்க முகுந்த்… சீக்கிரம் எழுந்து ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அங்க வா… யோகா செஷனுக்கு டைம் ஆகுது” என்றார் அவர்.

அவரது மைந்தன் தான் முகுந்த். அவனுக்கும் அவருக்கும் இன்று வரை முக்தி தான் எல்லாமே! அங்கே இருக்கும் மற்ற பிரம்மச்சாரிகளைப் போல யோகா கற்று கொடுப்பது, ஆசிரமத்தின் வேலைகளைக் கவனிப்பது, முக்தி யோகாமையத்தின் வெளிப்புற வேலைகளைக் கவனிப்பது என முகுந்துக்கும் சில வேலைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

சில மாதங்களுக்கு முன்னர் வரை அவனும் இந்த வேலைகள் அனைத்தையும் குறைவின்றி செய்துவந்தவன் தான்! ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் இருந்து அவனது செயல்பாடுகளில் மாற்றம் வந்தது.

இதோ இப்போது வேலைகளைச் செய்ய கூட தவிர்க்கிறான்! அதற்கு காரணம் என்ன என்பது ரவீந்திரனுக்கும் தெரியும். ஆனால் அவரால் அவனுக்கு எந்த வித நம்பிக்கையையும் கொடுக்க முடியவில்லை. அவருக்கு இந்த அமைதியான வாழ்க்கை, மரியாதை, கௌரவம் என அனைத்தையும் கொடுத்தது முக்தி, அதன் இப்போதைய தலைமையான சர்வருத்ரானந்தா. அவருக்குப் பிடிக்காத எதையும் மைந்தன் முகுந்த் செய்வதில் ரவீந்திரனுக்கு விருப்பமில்லை.

ஆனால் முகுந்தின் பிடிவாதம் அவனது தந்தையின் நன்றியுணர்வை விட வலிமையாக மாறிவிட்டது. அவனை எவ்வாறு பழையபடி மாற்றுவது என்பது புரியாது குழம்பித் தவித்தார் ரவீந்திரன்.

அவரது மைந்தனோ சலித்துக்கொண்ட முகபாவத்துடன் எழுந்தவன் “ப்ளீஸ்பா! நான் இருக்குற மனநிலைல என்னால யோகால கான்சென்ட்ரேட் பண்ண முடியாது… ஜெய்ராமை அழைச்சிட்டுப் போங்க” என்றான்.

“என்னடா சொல்லுற? இது உன்னோட டெய்லி ஒர்க் தானே… செய்யுற வேலைல குறை வைக்கக்கூடாது முகுந்த்… இது ருத்ராஜி போட்டிருக்குற ரூல்… அதை மீறக்கூடாது” என்றார் ரவீந்திரன் கண்டிக்கும் தொனியில்.

அவனோ சலிப்பாய் உச்சுக்கொட்டியவன் “இங்க நான் மட்டும் தான் யோகா டியூட்டராப்பா? அதான் நூத்துக்கணக்குல ஏகப்பட்ட சிஷ்யர்கள் பிரம்மச்சாரிங்கிற பேர்ல இருக்காங்களே! அவங்கள்ல யாரையாச்சும் இன்னைக்கு அழைச்சுட்டுப் போங்க.” என்று நைந்த குரலில் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேற முனைந்தான்.

ரவீந்திரன் அவனது கரம் பற்றி தடுத்து நிறுத்தியவர் “லுக் முகுந்த்! முக்திக்குனு ஒரு மரியாதை கௌரவம் இருக்கு… உன்னால அது கெட்டுப்போக கூடாது… நான் கெட்டுப்போகவும் விடமாட்டேன்… மனுசனுக்கு நன்றியுணர்வு வேணும்டா… இன்னைக்கு ஆறடிக்கு வளந்து நிக்குறீயே, இது முக்தி போட்ட சாப்பாடுடா… உங்கம்மா என்னை விட்டுப் போனப்போ வாழ்க்கைல பிடிப்பில்லாம இருந்த எனக்கும் உனக்கும் ஆதரவு குடுத்தது முக்தியும் ருத்ராஜியும் தான்… அவருக்குப் பிடிக்காததை தயவுபண்ணி செய்யாத முகுந்த்” என்று கலங்கிய குரலில் பேச முகுந்திற்கும் துக்கத்தில் தொண்டை அடைத்தது.

“நீங்க ருத்ராஜி மேல வச்ச நன்றிக்காக என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச சந்தோசத்த தியாகம் பண்ண சொல்லுறீங்களே! இது எந்த விதத்துல நியாயம்பா? ஒரு நாள் இல்லனா ஒரு நாள் நீங்க இதுக்காக வருத்தப்படுவீங்க… ஆனா அப்போ நான் உங்க கூட இருக்கமாட்டேன்” என்று வலியுடன் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் முகுந்த்.

அவனது வலி ரவீந்திரனுக்கும் புரிந்தது. ஆனால் நன்றியுணர்ச்சி அவரது கையைக் கட்டிப்போட்டுள்ளதே! எனவே இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தார் அவர்.

அதே நேரம் முக்தி ஃபவுண்டேசனிலிருந்து ஒரு ஜீவன் வருத்தத்துடன் போனை எடுத்து யாரையோ அழைத்தது. அழைப்பு ஏற்கப்பட்டதும் அழுகையுடன் பேசத் துவங்கியது அந்த உருவம்.

“எனக்கு என்ன பண்ணணும்னு தெரியல அத்தை… அப்பா அம்மாக்கு அப்புறம் என்னை புரிஞ்சுக்கிட்டவங்க நீங்க தான்… உங்க ஆசிர்வாதத்தோட எல்லாம் நல்லபடியா முடியும்னு நினைச்சேன்… ஆனா ருத்ராஜிக்கு இதுல விருப்பமில்லத்தை… எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு… உங்களை தவிர வேற யார் கிட்டவும் என்னால ஷேர் பண்ணிக்க முடியாதுல்ல” பேசிய உருவத்தின் குரல் அழுகையில் உடைந்தது.

அப்போது “தீபா ஆதிசக்தி டெம்பிளுக்குக் கொஞ்சம் வாங்களேன்” என்று ஒரு இளம்பெண்ணின் குரல் அந்த உருவத்தை அழைக்க கண்ணீரைத் துடைத்துக்கொண்டது அவ்வுருவம்.

“இதோ வந்துட்டேன் நர்மதா” என்றபடி எழுந்த அந்த உருவம் பழுப்புவண்ண காட்டன் புடவை கட்டி நெற்றியில் சந்தன திலகம் வைத்து கூந்தலை கொண்டையாக முடிந்திருந்த ஒரு இளம்பெண் தான்! பெயர் தீபா!

கலங்கிய முகத்துடன் மொபைலை தனது உடமைகளை வைத்திருக்கும் வார்ட்ரோபில் வைத்து பூட்டிவிட்டு முக்தி ஃபவுண்டேசனின் ஆதிசக்தி கோயிலுக்குச் செல்லக் கிளம்பினாள் அந்தத் தீபா.

அதே நேரம் லோட்டஸ் ரெசிடென்சியில் ஹேமலதாவைக் காண வந்திருந்த மயூரி இலக்கியாவுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் கடைசி ஃப்ளாட் ஜானகி மின் தூக்கியை நோக்கி விரைவதைக் கண்டாள்.

முகத்தில் கவலை கொட்டிக் கிடக்க கையில் பேகுடன் சோர்வாக நடந்த அப்பெண்மணி மின் தூக்கியை அடைவதற்குள் மயங்கி விழுந்துவிட மயூரி அவரைத் தூக்கச் சென்றாள்.

கண் மூடிக்கிடந்தவரின் தலை அவர் வைத்திருந்த பேக்கின் மீது பட்டிருந்ததால் காயமின்றி தப்பித்துவிட்டார். மயூரி அவரது கன்னத்தைத் தட்டியவள் கண் விழிக்காது போகவும் இலக்கியாவைத் தண்ணீர் கொண்டு வரும்படி பணித்தாள்.

ஜானகியின் வாடிய முகத்தில் வியர்வை முத்துக்கள் துளிர்த்திருக்கவும் மயூரி தனது ஸ்கார்பினால் துடைத்துவிட இலக்கியாவும் தண்ணீருடன் வந்துவிட்டாள்.

அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தவள் மெதுவாய் அவர் கண் திறக்கவும் மெதுவாய் எழுப்பி அமர வைத்தாள்.

“ஆன்ட்டி என்னாச்சு? உங்க முகமே சரியில்ல… ஹெல்த் இஸ்யூவா ஆன்ட்டி?”

ஆதுரத்துடன் அவள் கேட்க அப்பெண்மணியோ ஏற்கெனவே இருந்த துக்கத்தோடு விழுந்த அதிர்ச்சியும் சேர்ந்துகொள்ள கண்ணீர் உகுக்க ஆரம்பித்தார்.

மயூரி அவரது கண்ணீரைக் கண்டு அதிர்ந்தவள் “அழாதீங்க ஆன்ட்டி… ஒன்னுமில்ல… வாங்க, உங்களை ஃப்ளாட்ல விடுறேன்” என்று கை கொடுத்து தூக்கி அவரைத் தாங்கியபடி நடந்து சென்று அவரது ஃப்ளாட்டை அடைந்தாள்.

அவரிடம் சாவியை வாங்கி கதவைத் திறந்தவள் மெதுவாக உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தாள். ஜானகி இன்னும் மனம் உடைந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்க அவரது மொபைல் அழைத்தது.

கண்ணீருடன் அழைப்பை ஏற்றவர் “சொல்லு தீபா” என்று தடுமாற்றத்துடன் பேச ஆரம்பித்தார்.

“இல்லம்மா… நான் வரல, உன்னைப் பாக்கத் தான் கிளம்புனேன்… ஆனா மயங்கி விழுந்துட்டேன்டா” என்றவரிடம் மறுமுனையில் இருந்த தீபா என்ன கூறினாளோ வாய் விட்டு அழ துவங்கினார்.

“பேசாம இங்க வந்துடும்மா… நான் இருக்கேன், நான் உனக்கும் அந்தப் பையனுக்கும் மேரேஜ் பண்ணிவைக்கிறேன்… அந்த ஆஸ்ரமம் உனக்கு வேண்டாம்டா… என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுக் கிளம்பிருந்தா நானே உன்னைத் தடுத்து நிறுத்திருப்பேனே… இப்போவும் ஒன்னும் கெட்டுப்போகல… சீக்கிரமா கிளம்பி வந்துடுடா… நான் அந்தப் பையனோட அப்பா கிட்ட பேசுறேன்” என்று தீபாவிடம் அழுகையோடு வேண்டினார்.

அதற்கு தீபா என்ன பதில் கூறினாளோ, ஜானகியின் கண்ணீர் நின்றுவிட்டது. சிறிய நிம்மதி பிறந்தது.

“சரிடா… நான் உங்க ரெண்டு பேருக்காக காத்திருப்பேன்… சீக்கிரம் வந்துடுங்க” என்று கூறிவிட்டு அழைப்பை முடித்தார்.

மயூரி நடந்த அனைத்தையும் நாடகம் போல கவனித்துக்கொண்டிருந்தவள் ஜானகிக்கு பொதுப்படையாக ஆறுதல் கூறவும் மனபாரம் பொறுக்காது இத்தனை நாள் யாரிடமும் சொல்லாத குமுறல்களை அவளிடம் கொட்டத் துவங்கினார்.

“என் மகன் இறந்ததும் தீபா உடைஞ்சு போயிட்டாம்மா… நடைபிணமா வேலைக்குப் போறதும், வர்றதுமா இருந்தா.. திடீர்னு ஒரு நாள் அவங்கம்மா வீட்டுக்குப் போறேன்னு சொன்னா… என்னால அவளைத் தடுக்க முடியல… அங்க போனதுக்கு அப்புறம் என்னை கான்டாக்ட் பண்ணவேல்ல… கிட்டத்தட்ட மூனு மாசம் கழிச்சு எனக்குக் கால் பண்ணுனா.. அப்போ தான் எனக்குத் தெரிஞ்சுது அவ முக்தி ஃபவுண்டேசனுக்கு மன அமைதிக்கு யோகா கத்துக்கப்போய் அந்த இடம் பிடிச்சதால அங்கேயே யோகா இன்ஸ்ட்ரக்சரா ஜாயின் பண்ணிட்டானு… அதுக்கு அப்புறம் அடிக்கடி என் கிட்ட பேசுவா… அப்பிடி ஒரு நாள் பேசுறப்ப தான் அங்க முகுந்த்னு ஒரு பையன் அவளை விரும்புறதா சொன்னா…

ரொம்ப மரியாதையான பையன், கண்ணியமா நடந்துக்கிறான்னு அவ சொன்னதை வச்சு எனக்கும் சந்தோசமா இருந்துச்சு… எங்க என் மகனுக்கு அப்புறம் அவ தனிமரமா போயிடுவாளோனு எனக்குள்ள இருந்த வருத்தம் காணாம போயிடுச்சு… அவங்க சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணுனாங்க… ஆனா அந்தப் பையனோட அப்பா இதுக்கு சம்மதிக்கலயாம்… காரணம் முக்தி ஃபவுண்டேசனொட சர்வருத்ரானந்தா தான்னு தீபா சொல்லுறா… முக்திக்கு வந்து காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட நியூஸ் வந்துச்சுனா அது அவரோட இன்ஸ்டிட்டியூசனை எல்லாரும் கேலியா பேச காரணமாயிடும்னு அவங்களை எச்சரிச்சாராம்… அந்தப் பையனுக்கு அதுல இஷ்டமில்லயாம்… ஆனா ரீசண்டா நிறைய தடவை அவங்களை கூப்பிட்டுக் கண்டிச்சதா தீபா சொன்னதும் மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சுமா… முகுந்த் இல்லனா செத்துடுவேனு சொல்லுறா அந்தப்பொண்ணு… இருபத்தாறு வயசு சாகுறதுக்கான வயசா? ஏற்கெனவே என் மகனை இழந்துட்டேன்.. இவளாச்சும் நல்லா இருக்கணும்னு தான் டெய்லி கடவுளை வேண்டிக்கிறேன்…

மானிங் என் கிட்ட பேசுனப்ப ரொம்ப அழுதாம்மா… அதான் அவளை அங்க இருந்து அழைச்சுட்டு வந்துடலாம்னு கிளம்புனேன்… என் மருமகளை இங்க அழைச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் அந்தப் பையனுக்கு மேரேஜ் பண்ணிவச்சிடுவோம்னு நினைச்சேன்… இப்போ அவளே என்னை வரவேண்டாம்னு சொல்லிட்டா… கூடிய சீக்கிரம் அவளும் முகுந்தும் முக்தில இருந்து நிரந்தரமா வெளிய வந்துடுவாங்களாம்… சீக்கிரமா அவங்க வந்துடணும்… அவளுக்கு ஒரு வாழ்க்கைத்துணை கிடைச்சிட்டா நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்”

மயூரிக்கு அவர் சொன்ன தகவல்கள் அனைத்தையும் கேட்டதும் தலை சுற்றியது. காதலிப்பது பெருந்தவறா? அடுத்தவர்கள் வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்கும் அதிகாரத்தை அந்த ஆன்மீகவாதிக்குக் கொடுத்தது யார்?

அத்தனை கேள்விகளையும் தனக்குள் மட்டும் கேட்டுக்கொண்டு ஜானகியை ஆறுதல் படுத்திவிட்டு இலக்கியாவை அழைத்துக்கொண்டு ஹேமலதாவின் ஃப்ளாட்டுக்குச் சென்றாள்.

ஹேமலதா இருவரும் எங்கே சென்றீர்கள் என்று விசாரிக்க ஜானகியின் துன்பத்தைப் பற்றியும், தீபாவின் நிலையைப் பற்றியும் மறைக்காமல் கூறிவிட்டாள் மயூரி.

அதை கேட்ட ஹேமலதாவுக்கு வயிற்றெரிச்சல் அடங்கவில்லை. காதலிப்பதோ தனக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதோ ஒன்றும் பஞ்சமாபாதகம் இல்லையே! ஏன் இந்த ஆசிரமம் நடத்தும் ஆசாமிகள் இப்படி அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடுகின்றனர் என குமுறி தீர்த்தவள் சர்வருத்ரானந்தாவின் ஆதரவாளர்களான கணவனையும் தங்கையையும் விட்டுவைக்கவில்லை.

“இனிமே ருத்ராஜி அப்பிடி ருத்ராஜி இப்பிடினு அவரோட பஜனைய பாடுனா அவங்க ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன்”

அந்நேரம் பார்த்து மகனுடன் வந்த கௌதம் ஹேமலதாவின் கோபத்தில் சிக்கிக்கொண்டான்.

“இனிமே அந்த ருத்ராஜிய பத்தி இந்த வீட்டுல யாரும் பேசக்கூடாது… பேசுனா நான் மனுசியா இருக்கமாட்டேன்”

இது தனக்கான எச்சரிக்கை என்பதை புரிந்துகொண்ட கௌதம் இந்தத் திடீர் எச்சரிக்கைக்கு என்ன காரணம் என்பது புரியாது விழிக்கவும் மயூரி அவனிடமும் அனைத்தையும் விளக்கி விட்டாள்.

கௌதமால் பதில் சொல்ல இயலாத நிலை. ருத்ராஜிக்கு ஆதரவாகப் பேசினால் காதலை எதிர்க்கும் பத்தாம்பசலி என அவனது மனைவி அவனுக்கு முத்திரை குத்திவிடுவாள். அதே நேரம் ருத்ராஜி மீதான அபிமானமோ அவரைக் குற்றம் சொல்ல இடமளிக்கவில்லை.

எனவே பொறுமையே பெருமை என்று ஒதுங்கி செல்ல விழைந்தவனை கடுப்பேற்றியது ஹேமலதா நந்தனுக்கு இட்ட கட்டளை தான்.

“நந்து கண்ணா! பூஜை ரூம்ல இருக்குற ருத்ராஜியோட போட்டோவ எடுத்துட்டு வாடா”

அவள் சொன்னதை தவறாது செய்து முடித்த நந்தனின் கரத்தாலேயே அதை குப்பைத்தொட்டியில் போட சொல்லவும் கௌதம் சீறத் துவங்கினான்.

“வாட் இஸ் திஸ் ஹேமா? பெரியவரோட போட்டோவ இப்பிடி டஸ்ட்பின்ல போட சொல்லுற? உனக்குப் பைத்தியமாடி?”

ஹேமலதா முறைக்கவும் மயூரி அவள் காதில் “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொல்லுறான் உன் புருசன்… நீ அவனைக் கவனி… இன்னைக்கு நீ கவனிக்கிறதுல ருத்ராஜி புராணம் இந்த வீட்டுல கேக்கவே கூடாது… நான் யசோ கிட்ட இந்த இன்பர்மேசனை சொல்லிடுறேன்… பை ஹேமா” என்று முணுமுணுத்துவிட்டு குழந்தைகளிடம் டாட்டா காட்டினாள்.

“குடும்பமா சாமியாரா? நீயே டிசைட் பண்ணிக்கோ கௌதம்” என்று எச்சரித்துவிட்டு வெளியேறினாள் அவள். அவள் செல்லும் போதே ஹேமலதா கௌதமிடம் வாதிடுவது அவள் காதில் கேட்டது. எப்படியும் ஹேமலதா தான் விவாதத்தில் ஜெயிப்பாள். அவர்களின் இத்தனை வருட மணவாழ்க்கை வரலாற்றில் இது தான் வாடிக்கை.

அடுத்து பேசவேண்டியது யசோதராவிடம். அவள் தானே முக்தி ஃபவுண்டேசன் பற்றி தகவல் சேகரிப்பவள். இந்த விசயம் அவளது புலனாய்வு குழுவுக்கு உதவியாக இருக்குமல்லவா!

ப்ளூடூத்தை காதில் மாட்டியபடி காரில் ஏறியவள் யசோதராவுக்கு அழைத்தபடி லோட்டஸ் ரெசிடென்சியை விட்டு வெளியேறினாள்.

யசோதரா அழைப்பை ஏற்கவும் அனைத்தையும் அவளிடம் ஒப்பித்தவள் “டூ சம்திங் யசோ! அந்த ஆன்ட்டி அழுறத பாக்க பாவமா இருக்குடி… விஷ்ணு சார் மூலமா அந்தப் பொண்ணையும் அந்தப் பையனையும் ஆஸ்ரமத்துல இருந்து வெளிய கொண்டு வரமுடியுமானு பாரு… ப்ளீஸ் யசோ” என்று வேண்டுகோள் வைத்தாள்.

யசோதரா அவள் சொன்ன அனைத்தையும் கால் ரெக்கார்டர் மூலம் பதிவு செய்தவள் “நான் இப்போவே சீஃப் கிட்ட பேசுறேன் மய்யூ… அந்த முகுந்த் ருத்ராஜியோட நிழல்னு சொல்லக்கூடிய ரவீந்திரனோட மகன் தான்… முக்தி ஃபவுண்டேசன் மேல அவனுக்கு விசுவாசம் ஜாஸ்தி… அவனே வெளிய வரணும்னு சொல்லுறான்னா எந்தளவுக்கு அவனோட காதலுக்கு அங்க எதிர்ப்பு இருந்திருக்கும்? இதை இப்பிடியே விடக்கூடாது… அவங்களை எதுவும் பண்ணுறதுக்குள்ள சட்டப்படி அவங்களை அங்க இருந்து வெளிய கொண்டு வந்துடுவோம்” என்றாள் நம்பிக்கையுடன்.

அவள் சொன்னால் சொன்னதை செய்து முடிப்பாள் என்ற நம்பிக்கையுடன் மயூரி அழைப்பைத் துண்டித்துவிட யசோதரா மொபைலுடன் விஷ்ணு பிரகாஷின் கேபின் கதவைத் தட்டினாள்.

உள்ளே சென்றதும் “சீஃப் நம்ம ஸ்டிங்க் ஆப்ரேசனோட (Sting Operation) முதல் ஸ்டெப்பை எடுத்து வைக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு… இதை கேளுங்க” என்று தனது மொபைலை அவனிடம் நீட்ட விஷ்ணுபிரகாஷ் அதிலிருந்த ஆடியோவைக் கேட்க ஆரம்பித்தான்.

கேட்டு முடித்ததும் யோசனையுடன் பேனாவால் மேஜையில் தட்டிக்கொண்டவன் “இது சம்பந்தமா அந்த லேடியோட ஆடியோவோ அவங்க மருமகளோட ஆடியோவோ கிடைச்சா நல்லா இருக்கும் யசோ” என்று கூற

“அதை நான் பாத்துக்கிறேன் சீஃப்… இந்தப் புரோகிராமை எவ்ளோ சீக்கிரம் டெலிகாஸ்ட் பண்ணுறோமோ அவ்ளோ சீக்கிரம் அந்தப் பொண்ணும் பையனும் பாதுகாப்பா வெளிய வருவாங்க” என்றாள் யசோதரா.

விஷ்ணுபிரகாஷ் தனது சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடியே “எல்லாம் சரி… ஆனா நம்ம ப்ரோகிராம் பாத்துட்டு போலீஸ் ஆக்சன் எடுக்குறாங்கனு வச்சுப்போம், ஆசிரமத்துக்குள்ள போனதும் அந்தப் பொண்ணோ பையனோ மாத்தி பேசிடக்கூடாது… ஏன்னா அங்க இதே மாதிரி இன்சிடென்ட்ஸ் நிறைய நடந்துருக்குமா” என்று கூறவும்

“இந்தத் தடவை அப்பிடி நடக்காதுனு நம்புவோம் சீஃப்” என்றாள் யசோதரா நம்பிக்கையுடன்.

இவ்வாறு முக்தி ஃபவுண்டேசனின் அடித்தளத்தை அசைக்கும் முதல் அடியை எடுத்து வைத்தனர் ஜஸ்டிஷ் டுடேவின் புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் குழு.

மழை வரும்☔☔☔