☔ மழை 15 ☔

“வெற்றுக்கால்களும் எளிமையுமாக உலகவாழ்க்கை எனும் லௌகீக வாழ்க்கையை வெறுத்து இமயமலைச்சாரலில் தியானம் செய்யும் சாதுக்களின் காலம் மலையேறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபலங்களாகவும், புகழ் வெளிச்சத்தில் உலா வருபவர்களாகவும், அரசியலையும் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களையும் கட்டுப்படுத்துபவர்களாகவும் சாமியார்கள் உருமாறிவிட்டனர். துறவறமும் லௌகீக வாழ்க்கையும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது. அத்துடன் அன்பை மட்டும் போதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்தச் சாமியார்களின் பணப்பசியானது மனிதகுலத்திற்கு அமைதியைத் தராது; சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை மட்டுமே உருவாக்கும். இங்கே நம்பிக்கைக்குப் பதில் சுய ஆராய்ச்சியே அவசியமாகிறது”

                                         -ராகுல் சிங், Youth ki awaaz public forum

தமிழகத்தில் தேர்தல் சூடு பறக்க ஆரம்பித்தது. ஆளுங்கட்சியின் சார்பாக இம்முறையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அறிவழகன் தான். அந்தக் கட்சியில் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றால் அது அவர் மட்டும் தான்.

எனவே அபிமன்யூவோடு கலந்தாலோசித்து கட்சித்தலைவரான பார்த்திபனும் அவரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். அதன் பின்னர் உட்கட்சி பூசல்கள் ஏதுமின்றி ஆளுங்கட்சியினர் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். என்ன தான் அவர்கள் ஜெயசந்திரனின் ஊழலை மூடி மறைத்திருந்தாலும் அந்த ஆடியோ டேப் வெளியானதால் மக்கள் மத்தியில் அவர்கள் மீது உண்டான கசப்புணர்வு நீங்கியதாக தெரியவில்லை.

கருத்துக்கணிப்புகளும் ஆளுங்கட்சிக்கு எதிராகவே இருக்க அபிமன்யூவோ அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. வழக்கம் போல தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்தவன் முன்னை விட அதிக முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டான்.

அவனது உழைப்புக்குப் பலனளிக்கும் தேர்தல் நாளும் வந்தது. வழக்கத்தை விட அந்த வருடம் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கையும் பதிவான ஓட்டுக்களின் சதவிகிதமும் அதிகம் என தேர்தல் ஆணையம் கர்வத்துடன் செய்தி வெளியிட்டது.

ஒவ்வொரு கட்சியினரும் இது தங்களுக்கான வாக்கு என்று எண்ணி திருப்திப்பட்டுக்கொண்டனர். எப்படி இருந்தாலும் தேர்தல் முடிவு வரும் வரை அவர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் தான் உலாவி வந்தனர்.

இறுதியில் வாக்கு எண்ணும் நாளும் வந்தது. ஆளுங்கட்சி எதிர்கட்சி என அனைவரும் வாக்கு எண்ணும் மையத்தில் காத்திருந்தனர். தபால் வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சி முன்னிலை வகிக்க அபிமன்யூவிற்கு இம்முறை தங்களது ஆட்சி தான் என்ற நம்பிக்கை பிறந்தது.

அவனது விரல்கள் தானாக சர்வருத்ரானந்தா கொடுத்த ருத்திராட்ச மாலையைத் தடவிக்கொண்டது. ஆம்! ஜெயசந்திரனின் பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்ததிலிருந்து அவருக்கும் அபிமன்யூவிற்கும் ஒரு இணக்கமான உறவு நிலவி வந்தது. இம்முறை ஆளுங்கட்சி ஜெயிப்பதையே அவரும் விரும்பினார்.

ஆனால் தங்களை யார் ஆளவேண்டுமென முடிவு செய்யும் அதிகாரம் அரசியல்வாதியின் கரத்திலும் இல்லை; ஆன்மீகவாதியின் கரத்திலும் இல்லை; அதை தீர்மானிப்பவர்கள் மக்கள் தானே! அவர்கள் தங்களது தீர்ப்பை ஆட்காட்டிவிரலில் மை வைத்த தினத்திலேயே வாக்கு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி எழுதிவிட்டனரே!

ஆனால் என்ன, மக்களின் தீர்ப்பு ஆளுங்கட்சிக்குச் சாதகமாக வரவில்லை. ஊழல்வாதியின் குரலைக் காதால் கேட்ட பிறகும் அந்த ஊழல்வாதிக்கு அடைக்கலம் தரும் கட்சியை மக்கள் எப்படி ஆதரிப்பார்கள்? எனவே இம்முறை அறுதி பெரும்பான்மையுடன் வென்றது எதிர்கட்சியே!

பெரும் நம்பிக்கையுடன் இருந்த அபிமன்யூவால் இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவனது தொகுதியில் அவன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருந்தான். ஆனால் ஆட்சிக்கட்டிலில் அமரும் வாய்ப்பை அவனது கழகம் இழந்துவிட்டதல்லவா! எனவே அந்த வெற்றிக்கனி அவனுக்கு ருசிக்கவில்லை.

அவனால் கட்சியின் தோல்விமுகத்தைக் காண சகியாது வீட்டிற்கு திரும்பியவன் அறைக்குள் அடைபட்டான். அவனது அன்னை சுபத்ரா வெகுநேரம் கதவைத் தட்டியும் திறக்காமல் இருக்கவே அவர் பதறி அஸ்வினுக்கு அழைத்தார்.

அவனும் வந்து கதவை உடைப்பதாக மிரட்டியும் பிரயோஜனமில்லை.

“வெற்றியும் தோல்வியும் கலந்தது தானே வாழ்க்கை! இவன் எப்போ அச்சு இதை புரிஞ்சுப்பான்?” அங்கலாய்த்தபடி நின்ற சுபத்ராவை அவரது அறைக்கு அழைத்துச் சென்றான் அஸ்வின்.

“மா! நீங்க டென்சன் ஆகாதீங்க… நான் ஸ்ராவணிக்குக் கால் பண்ணுறேன்… அவங்க வந்து பேசுனா தான் இவன் சரியாயிடுவான்” என்றவன் ஸ்ராவணிக்கு மொபைலில் அழைத்தான்.

அவளோ ஜஸ்டிஷ் டுடேவில் நேரலையில் தேர்தல் முடிவைக் கண்டுவிட்டாள். இந்நேரம் கணவனின் நம்பிக்கை நொறுங்கியிருக்கும் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ கலக்கத்துடன் தான் வேலையைத் தொடர்ந்தாள்.

அஸ்வின் அழைக்கவும் பதறிப்போய் அழைப்பை ஏற்றவள் விசயம் அறிந்ததும் விஷ்ணு பிரகாஷிடம் அனுமதி பெற்றுவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினாள்.

வீட்டை அடைந்தவளை சுபத்ராவின் கலக்கமான குரல் வரவேற்க அவளைக் கண்டதும் அஸ்வின் ஓடோடி வந்தான்.

“ப்ளீஸ் டூ சம்திங் வனி… எனக்கு ரொம்ப டென்சனா இருக்கு”

மேனகாவின் பிரசவத்திற்குப் பிறகு அஸ்வின் கலங்கி இதுவரை ஸ்ராவணி பார்த்ததேயில்லை. அவனே பதறுகிறான் என்றால் அபிமன்யூவின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும்?

வேகமாக படிகளில் ஏறி அவர்களின் அறைவாயிலில் நின்றவள் “அபி கதவை ஓபன் பண்ணு ப்ளீஸ்… எங்களுக்குப் பயமா இருக்குடா… அஸ்வினும் ஆன்ட்டியும் பதறுறது உனக்குப் புரியலயா அபி? நீயே உடைஞ்சு போயிட்டனா அங்கிளுக்கு யார் ஆறுதல் சொல்லுறது?” என்று பார்த்திபனைக் குறித்து அதட்டல் தொனியில் கத்தவும் கதவு திறந்தது.

கலைந்த சிகை, சிவந்த கண்கள், திறந்திருந்த வெள்ளை சட்டையின் மேல் பொத்தான்கள், தோல்வியில் கறுத்த முகத்துடன் நின்றவனைப் பார்த்ததும் “குடிச்சிருக்கியா?” என்று கேட்டாள் அவள்.

அவனோ “ரொம்ப இல்ல வனி… ஜஸ்ட் ஹாஃப் பாட்டில் தான்” என்று குழறலுடன் பதிலளித்தான் அவன்.

சுபத்ரா நீண்டநாளுக்குப் பின்னர் மகன் நின்ற கோலத்தில் கதறி அழத் துவங்க “மா அழாதிங்க” என்றபடி அவர்களை நோக்கி அடியெடுத்து வைக்கச் சென்றவனை ஸ்ராவணியின் கரங்கள் தடுத்து நிறுத்தியது.

அதோடு அஸ்வினிடம் சுபத்ராவை அழைத்துச் செல்லும்படி பணித்தவள் “மா போகாதீங்கம்மா… நான் தோத்துட்டேன்மா” என்று புலம்பிய அபிமன்யூவைத் தன்னுடன் அறைக்குள் இழுத்துச் சென்றாள்.

உள்ளே சென்றதும் அவனை இருக்கையில் அமர்த்தியவள் அவன் முன்னே முழந்தாளிட்டு நின்றாள்.

“ஏன் அபி இப்பிடிலாம் நடந்துக்கிற?” கேட்டவளின் கண்களில் கண்ணீர் பளபளத்தது.

அவர்களின் கொள்கை வேறு; குணநலன்கள் கூட எதிரெதிர் துருவம் தான். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் காதல் அன்றும் இன்றும் அவர்களை பிணைத்திருக்கும் விதத்தில் எந்த வேறுபாடும் இல்லை.

“நான் தோத்துட்டேன் வனி” இப்போது அவனது கண்ணிலும் கண்ணீர்! அவளைத் தவிர வேறு யாரிடமும் எதிலும் தோற்றுப் பழகாதவன் இந்தத் தோல்வியில் உடைந்து போனான்.

ஸ்ராவணி அவனது கண்ணீரைத் துடைத்தவள் “சோ வாட்? இந்த ஃபைவ் இயர்சோட உலகம் அழிஞ்சிடப்போகுதா? அடுத்த தடவை நீ ஜெயிப்ப அபி… முடிஞ்சதை நினைச்சு நீயும் கஷ்டப்பட்டு எங்க எல்லாரையும் கஷ்டப்படுத்தப் போறீயா?” என்று கேட்க அவனது கரங்கள் அவளது வதனத்தை ஏந்திக்கொண்டது.

“நீ அழுறீயா வனி? ரொம்ப நாளுக்கு அப்புறம் மறுபடியும் நான் உன்னை அழ வச்சிட்டேன்ல… ஐ அம் சாரி வனி… நோ நோ… சாரியெல்லாம் உன்னோட கண்ணீருக்கு ஈடு இல்ல… ஸ்லாப் மீ” என்று அவளது கரங்களால் அவனது கன்னத்தில் மாறி மாறி அடித்துக்கொள்ள

“அபி ஸ்டாப் இட்… வாட் ஆர் யூ டூயிங்? நான் அழலடா… ப்ளீஸ் ஸ்டாப் அபி” என்று அழுத்தத்துடன் கூறி அவனைத் தடுத்து நிறுத்தினாள் ஸ்ராவணி.

அபிமன்யூ அடிப்பதை நிறுத்திக்கொள்ளவும் அவனிடம் ஆறுதலாகப் பேசியவள் “அபி நீ கொஞ்சநேரம் தூங்கி ரெஸ்ட் எடு… நான் எங்கயும் போகமாட்டேன்” என்று கூறவும் அமைதியாய் கண் மூடி உறங்கத் துவங்கினான் அவன்.

அவனது கரங்கள் அவளது கரத்தை இறுக்கமாகப் பற்றியிருந்த விதத்தில் அவனுக்கு எந்தளவுக்கு தனது அருகாமை நிம்மதியளிக்கிறது என்பதை உணர்ந்த ஸ்ராவணி அவனது சிகையை வருடிக் கொடுத்தபடி அவனருகே அமர்ந்துகொண்டாள்.

இத்தனை ஆண்டுகளில் எத்தனை வாக்குவாதங்கள் வந்தாலும் அவர்கள் இருவரும் கலங்கியதில்லை. இன்றைய சூழல் முற்றிலும் புதிது இருவருக்குமே!

அதே நேரம் ஆளுங்கட்சி தோல்வியுற்றதில் அதிக அதிர்ச்சியுற்றவர் சர்வருத்ரானந்தாவும் ஒருவர். இனி ஆட்சியில் அமரவிருக்கும் கட்சி பழைய ஆட்சியின் ஊழல்களைக் குடைய ஆரம்பித்தால் ஒவ்வொன்றாக நூல் பிடித்து கடைசியில் முக்தியில் வந்தல்லவா நிற்கும்!

இன்று வரை எண்ணற்ற தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், மேல்தட்டு வர்க்கத்தினர், சினிமாத்துறை பிரபலங்கள் என அனைவரையும் தனது பக்தர்களாக மாற்றிவைத்திருந்தவர் ஜெயசந்திரன் வாயிலாக அரசியல்வாதிகளிடமும் நெருக்கமாக ஆரம்பித்திருந்தார்.

அதிலும் அபிமன்யூவின் கட்சி ஜெயித்தால் முக்தி ஃபவுண்டேசனின் மேகமலை நிறுவனத்தை இன்னும் விரிவாக கட்டவும், அவர்களுக்கு இன்னும் பலமான கட்டமைப்புகளை உருவாக்கவும் வழி பிறக்கும் என்றெல்லாம் அவர் கண்ட கனவுகள் பொய்க்கனவுகளாய் அல்லவா போய்விட்டன!

“ரவீந்திரன் இந்த பொலிட்டிக்கல் பார்ட்டி நம்ம பக்கம் திரும்பிடக்கூடாது.. அதுக்கு என்ன பண்ணலாம்?”

“இப்போ ஆட்சிக்கு வரப்போற கட்சியோட தலைமைக்கு நெருக்கமானவர் தான் தணிகாசலம்… அவரோட டொனேசன்ல தான் கட்சியே இயங்குதாம்… அந்த மனுசன் நம்ம முக்தியோட தீவிரபக்தர்… அவரை வச்சு இவங்களை கவனிச்சுக்கலாம் ருத்ராஜி”

“ம்ம்… நம்ம கொஞ்சநாளுக்கு யோகால மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுவோம்… குருஜி கிட்ட இருந்து கால் எதுவும் வரலயே?”

ரவீந்திரனிடம் இது குறித்து விசாரிக்க காரணம் சர்வருத்ரானந்தாவின் சொந்த உபயோகத்திற்கான மொபைல் ரவீந்திரன் வசம் தான் இருக்கும். அவரது சொந்த உபயோகத்திற்கான கணினியையும் ரவீந்திரனால் மட்டுமே இயக்க முடியும்.

தனது நிழலாக ரவீந்திரனை வைத்திருந்த சர்வருத்ரானந்தாவிற்கு அவர் மீது ஆயிரம் மடங்கு நம்பிக்கை! ரவீந்திரனும் அந்த நம்பிக்கைக்குப் புறம்பாக எந்தக் காரியத்தையும் செய்ததில்லை.

வெறும் ஏழாயிரம் ரூபாய் சம்பாத்தியத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி நடுத்தரவர்க்க வாழ்க்கையை வாழ்ந்த கணத்தில் மனைவியை இழந்த அந்த மனிதருக்கு ஒற்றை மகனுடன் அடைக்கலம் கொடுத்தது சர்வருத்ரானந்தா தான்.

அவரிடம் யோகா கற்றுக்கொள்ள வந்தவர் மேகமலையில் முக்தி ஃபவுண்டேசன் பெரியளவில் உருவான தருணத்தில் முக்திக்குச் சேவை செய்கிறேன் என்று அங்கேயே தங்கிவிட்டார். ஒரு கட்டத்தில் சர்வருத்ரானந்தாவிற்கு வலது கரமாக மாறிப்போனார்.

அதோடு அவரது மைந்தனும் அங்கிருந்த நூற்றுக்கணக்கான பிரம்மச்சாரி இளைஞர்களுடன் சேர்ந்து முக்தியில் யோகா பயிற்றுவிப்பாளராக சேவை செய்து கொண்டிருந்தான்.

அங்கிருந்த ஊழியர்களில் ரவீந்திரனை தான் சர்வருத்ரானந்தா நம்பினார். அவரைத் தனது உதவியாளராக அமர்த்திக்கொள்ள முக்கியக் காரணம் சர்வருத்ரானந்தாவும் மனைவி மக்களை விபத்தில் இழந்தவர் தான். ஒரு காலத்தில் சர்வசிவானந்தாவிடம் யோகா கற்றுக்கொள்ள வந்தவர் எப்படி சர்வசிவானந்தாவின் வலதுகரமாகவும் நம்பிக்கைக்குரிய சிஷ்யனாகவும் மாறினாரோ அதே போல தனது வலதுகரமாக ரவீந்திரனை மாற்றிக்கொண்டார் அவர்.

தினசரி சர்வசிவானந்தாவிடம் முக்தியின் நிர்வாகம் பற்றி அவர் பேசுவது வழக்கம். அந்த அழைப்புகள் இன்னும் சில முக்கியமான நபர்கள் மட்டும் பேசும் மொபைல் எப்போதும் ரவீந்திரன் வசம் தான் இருக்கும்.

அன்று சர்வசிவானந்தா அழைக்கவில்லை என்றதும் அமைதியுற்ற சர்வருத்ரானந்தா ரவீந்திரனிடம் மறுநாள் தணிகாசலத்தை முக்தி ஃபவுண்டேசனுக்கு அழைக்கும்படி கட்டளை பிறப்பித்துவிட்டுத் தனது அறையை நோக்கி நடைபோட்டார்.

யார் ஆண்டாலும் தனக்கோ தனது முக்தி ஃபவுண்டேசனுக்கோ எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சர்வருத்ரானந்தாவிற்கு தணிகாசலம் வாயிலாக இனி ஆட்சிக்கு வரப்போகும் கட்சியைக் கவனித்துக்கொள்ளலாம் என்ற நிம்மதி உண்டானது.

************

அபிமன்யூ மெதுவாக உறக்கம் கலைந்தவன் தன்னருகே அமர்ந்தவாறு கண்ணுறங்கியிருந்த ஸ்ராவணியைப் பார்த்ததும் குற்றவுணர்ச்சியில் குமைந்தான்.

பின்னர் மெதுவாக அவளது கன்னத்தைத் தட்டி எழுப்பினான்.

“வனி”

அவனது கரத்தின் ஸ்பரிசத்தில் கண் விழித்தவள் அவன் முகம் கலங்கியிருப்பதைப் பார்த்ததும் “குளிச்சிட்டு வா அபி… கொஞ்சம் பேசணும்” என்றாள் நிதானமாக.

அவள் சொன்னதைக் கேட்டு குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் வந்தவன் அவளருகே அமர ஸ்ராவணி அவனது கரத்தை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள்.

“இன்னும் வருத்தமா இருக்குதா?” தலைசரித்து கேட்டவளைத் தன்னருகே இழுத்து அமரவைத்துக்கொண்டான் அவன்.

“கொஞ்சம் வருத்தமா இருக்கு வனி… என்னால இதை மறக்க முடியாது”

“நீ இதை மறக்க கூடாது அபி” என்றாள் அவள் உறுதியான குரலில்.

அபிமன்யூவின் முகத்தில் வியப்பு தனது ரேகையைப் பதிக்க அவன் நம்ப இயலாமல் கேட்டான்.

“நீயா பேசுற வனி?”

“நான் தான் பேசுறேன் அபி… இந்தத் தோல்விய நீ மறந்துடவே கூடாது… இதுக்கு என்ன காரணம்னு யோசி… அந்தக் காரணத்தையும் மறக்க கூடாது… லாஸ்ட் டைம் பண்ணுன எதோ ஒரு தப்புக்கு இந்தத் தோல்வி உனக்குப் பரிசா கிடைச்சதா நினைச்சுக்கோ… இந்த ஃபைவ் இயர்ஸ் ஆப்போசிசனா இருந்து உன்னால மக்களுக்கு என்ன பண்ணமுடியுமோ பண்ணு! ஆளுங்கட்சி எந்த இடத்துல கோட்டை விடுறாங்கனு கவனிச்சு அவங்கள கேள்வி கேளு…

முக்கியமா இந்த ஃபைவ் இயர்ஸ் உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச மக்களுக்காக உழைக்க ஆரம்பி அபி… நீயும் அங்கிளும் சேர்ந்து உங்க கட்சி ஆளுங்களை காப்பாத்துனது, கட்சி கௌரவத்தை காப்பாத்துனதுலாம் போதும்.. எதிர்கட்சியா இருந்து இந்தத் தடவை மக்களை பத்தி யோசிங்க… நீங்க அவங்களை பத்தி யோசிச்சா அடுத்த தடவை ஈ.வி.எம் முன்னாடி நிக்கிறப்போ அவங்களுக்கு நீங்க மட்டும் தான் நியாபகம் இருப்பீங்க! குடிமக்களை வருந்தவிடாம காக்குறவன் தான் நல்ல ஆட்சியாளன்னு திருவள்ளுவரே சொல்லிருக்கார் அபி… அப்பிடிப்பட்ட ஆட்சியாளன் யார் தப்பு பண்ணுனாலும் அதை கண்டிக்கனுமே தவிர செஞ்சவன் நம்ம ஆள்னு நினைச்சு காப்பாத்துறது தப்பு” 

நீண்டவுரையாக அவள் பேசிமுடிக்கவும் அபிமன்யூவின் முகம் தெளிந்தது. அவளது நெற்றியில் முத்தமிட்டவன் “தேங்க்யூ சோ மச்” என்று நம்பிக்கை ததும்ப உரைத்தான்.

அதே நம்பிக்கையுடன் தனது வழக்கான வெண்ணிற சட்டை கருப்புநிற பேண்டிற்கு மாறியவன் அஸ்வினுடன் கட்சி அலுவலகத்துக்குக் கிளம்பினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் கட்சி அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவழகன், பார்த்திபனுக்குத் துணையாக அவனும் அமர்ந்திருப்பதைப் பார்த்து சுபத்ராவுடன் ஒன்றாக அமர்ந்து தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ராவணி நிம்மதியுற்றாள்.

“இந்தத் தோல்விய மக்களோட தீர்ப்பா நினைச்சு ஏத்துக்கிறோம்… வரப்போற ஐந்து வருடங்கள்ல பலமான எதிர்கட்சியா இருந்து ஆளுங்கட்சியோட பணிகளை கண்காணிப்போம்… அதே நேரம் கட்சியோட கொள்கைகளுக்குப் புறம்பா நடந்துக்குறவங்களை களையெடுக்க தயங்கமாட்டோம்”

உறுதியாகப் பேசிய கணவனைப் பார்த்து அந்தக் கணம் ஸ்ராவணிக்குப் பெருமையாக இருந்தது. இம்முறை தோற்றால் என்ன? அடுத்த முறை இதை விட பன்மடங்கு வலிமையுடன் அவர்களின் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அவளுக்கு! அதே நம்பிக்கை தொலைகாட்சியில் பேசிக்கொண்டிருந்த அபிமன்வியூவின் வதனத்திலும் பிரதிபலித்தது.

***********

பாம்குரோவ் ரிசார்ட், ஆலப்பி உப்பங்கழி…

காடு போல அடர்ந்திருந்த அந்த பசுமையான தோட்டத்தின் நடுவே தனித்து அமைந்திருந்தது ஒரு கேரளாபாணி ரிசார்ட். அங்கிருந்த மரங்களிடையே நடந்து சென்றால் படகுகள் நிறுத்தபட்டிருக்கும் அழகிய ஏரி ஒன்று அந்த ரிசார்ட்டை சுற்றி ஓடும்.

அதன் கரையில் அமர்ந்து ஏரியில் கிடந்த ஆகாயத்தாமரை கொடிகளையும் ஏரிநீரின் அலைகளால் மெதுவாய் தலையாட்டியபடி அசையும் சிறிய கருப்புநிற மரப்படகுகளையும் ரசித்தபடி மொபைலுடன் அமர்ந்திருந்தனர் சித்தார்த்தும் யசோதராவும்.

இருவரும் தேனிலவுக்காக ஆலப்புழாவுக்கு வந்திருந்தனர். மாலை நேரத்தில் அங்கே அமர்ந்து சூரியன் மறையும் அழகை ரசித்தபடி ஏரி நீரில் காலை அலம்பிக்கொண்டு அமர்ந்திருந்தவர்களின் கவனம் யசோதராவின் கரங்களிலிருந்த மொபைலில் ஓடிய செய்தியின் மீது தான் இருந்தது.

அதில் அபிமன்யூ பேசிக்கொண்டிருந்தான். கடந்த ஆட்சியின் தவறுக்காக மக்கள் கொடுத்த தீர்ப்பாக எண்ணி இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக அவன் கூறவும் யசோதராவுக்கு ஆச்சரியம்!

“வாட் அ சேஞ்ச் ஓவர்! அபி சார் ரொம்ப ஆட்டிட்டியூடான ஆள்னு வனி மேம் சொல்லுவாங்க… பட் ஒரு தோல்வி மனுசனை பக்குவப்படுத்திடுச்சு பாரேன்” வியப்புடன் இயம்பினாள் யசோதரா.

சித்தார்த் ஆமோதிப்பாய் தலையசைத்தவன் “யூ ஆர் ரைட்… ஆட்சில இருக்குறவங்க தன்னோட இமேஜை பத்தியும், கட்சியைப் பத்தியும் மட்டும் கவலைப்பட்டு மக்களோட பிரச்சனைகளை கவனிக்காம விட்டா அவங்களுக்குத் தோல்வி தான் பரிசா கிடைக்கும்னு இன்னைக்கு அபிமன்யூ சாருக்குப் புரிஞ்சிருக்கும்… கண்டிப்பா அவரோட இந்த மாற்றம் அவரை வேற லெவலுக்குக் கொண்டு போகும் யசோ” என்றான்.

“நாட் பேட் ஹீரோ… உனக்கும் பொலிட்டிக்கல் நாலேட்ஜ் இருக்குதே”

“அரசியல் அறிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் இருக்கணும் யசோ… அரசியல்வாதிங்க மட்டும் தான் அரசியல் பேசணும்னு எந்த கட்டாயமும் இல்ல, அவங்களை ஆட்சியாளரா உக்காரவைக்கப் போற சாதாரண குடிமகன் ஒவ்வொருத்தனும் அரசியலைப் பத்தி பேசணும்… எதைப் பத்தியும் கவலைப்படாம ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்குக் கவலை இல்லனு இருக்குறவன் நான் இல்ல”

யசோதரா அதைக் கேட்டுவிட்டு மீண்டும் போனில் மூழ்கப்போக அவளது போனைப் பிடுங்கி தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டான் சித்தார்த்.

பரிதாபமாகப் பார்த்தவளை எழும்புமாறு கட்டளையிட்டவன் அவள் எழுந்து நிற்கவும் தனது கரங்களில் அள்ளிக்கொண்டான்.

“ஆல்ரெடி இருட்ட ஆரம்பிச்சிடுச்சு… இனியும் இங்க இருக்குறது சேப்டி இல்ல… இனிமே நோ மொபைல்” என்று பொய்யாக மிரட்டியபடி ரிசார்ட்டை நோக்கி முன்னேறினான் அவன்.

“எனக்குப் போரடிக்கும் சித்து” சிணுங்கிய யசோதராவின் நெற்றியில் செல்லமாக முட்டியவன்

“ரிசார்ட்டுக்குள்ள போனதும் நமக்கு வெளியுலகமே மறந்துடும்… அப்புறம் எப்பிடி போரடிக்கும்?” என்று விசமத்துடன் கேட்டுவிட்டு அதற்கு பதிலாக யசோதராவின் கன்னத்தில் நாணம் குடியேறுவதை ரசித்தபடி தேனிலவை இன்னும் அழகாக மாற்றும் எண்ணத்தில் அவளைச் சுமந்தபடி நடைபோட்டான். மிக நீண்ட இல்லற சாகரத்தின் சிறு துளியான அந்தத் தேனிலவு இனிமையாக நகர்ந்த அந்நேரத்தில் வானிலவும் அங்கிருந்த ஏரியில் தன் பிம்பம் பார்த்து நாணி மேகப்போர்வைக்குள் முகம் புதைத்துக்கொண்டது.

மழை வரும்☔☔☔