☔ மழை 3 ☔

யோகா என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோகாவின் ஒரு பகுதியே தவிர யோகா என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம். உடலை இறைவனின் இருப்பிடமாக எண்ணி தூய்மையாகவும் சக்தியுடனும் பராமரிப்பது ஹதயோகம். ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா என அவற்றை வகைப்படுத்தலாம்.

                                                                                                                                       -From vedic eye blogspot

மேகமலை…

தேனி மாவட்டத்தில் பள்ளத்தாக்குடன் கூடிய மலைப்பகுதி. காபி தோட்டங்கள், ஏரி, மலைச்சிகரங்கள் என இயற்கை அன்னை தனது முழு அன்பையும் கொட்டி பசுமையைக் காத்துவரும் பகுதி.

அதன் மலையடிவாரத்தில் இருநூறு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கம்பீரமாக நின்றிருந்தது ‘முக்தி ஃபவுண்டேசன்’ என்ற அந்த யோகாமையம்.

வாயிலில் முக்தி என்று கருப்பில் பொன்னிறம் பொறித்த எழுத்துக்களுடன் கூடிய பெயர்ப்பலகை பாறை போன்ற வடிவமைப்பில் நின்றிருக்க அதைத் தாண்டி உள்ளே சென்றால் நம்மை வரவேற்பது சதாசிவனுக்காக கட்டப்பட்டிருக்கும் ஆலயம் ஒன்று.

ஒரு பக்கம் அந்த யோகாமையத்தில் அலுவலகம் அமைந்திருக்கும் கட்டிடங்கள் வரிசை கட்டி நிற்க மறுபுறமோ குருஜி சர்வ ருத்ரானந்தாவின் சிஷ்யபிள்ளைகள் தங்கும் பகுதி மரக்கூட்டங்களுக்கு இடையே விரிந்திருந்தது.

சதாசிவனின் ஆலயத்தைத் தாண்டி சென்றால் யோகா செய்வதற்கான சகல வசதியுடன் கூடிய பெரிய ஸ்டூடியோ ஒன்றும், அதைத் தாண்டி ஆதிசக்திக்கான ஆலயம் ஒன்றும் வரும்.

இவையனைத்தையும் கடந்து சென்றால் மலைச்சிகரங்களை அருகே நின்று தரிசிக்கும் அளவுக்கு இருக்கும் உயரத்தில் சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டிருந்த கட்டிடம் தான் ‘முக்தி வித்யாலயா’ என்ற கல்விக்கூடம். அதில் சிறார் முதல் பதின்வயதினர் வரை படிக்கலாம். கல்வித்திட்டத்தை வகுத்தது முக்தி ஃபவுண்டேசன் தான்.

அங்கிருந்து நகர்ந்தால் மரங்கள் அடர்ந்த பகுதியில் வி.ஐ.பிக்கள் தங்குவதற்கான காட்டேஜுகளும், தன்னார்வலர்களுக்கான ஆடம்பர அறைகள் கொண்டு ரிசார்ட்களும் அணிவகுத்து நிற்கும்.

அந்த வி.ஐ.பி காட்டேஜின் வராண்டாவில் மலைக்காற்று சிகையைக் கலைத்து விளையாட உடலை உறுத்தாத காட்டன் குர்தா பைஜாமாவில் கழுத்தில் ருத்திராட்சமாலையுடன் நின்றிருந்தான் சித்தார்த்.

மேகமலை சிகரங்களை வெறித்த விழிகளுக்குள் இங்கே வரும் முன்னர் யசோதராவுடன் நேர்ந்த சண்டை படமாக ஓடியது. அதன் அடிப்படை காரணம் ஒரு ருத்திராட்சமாலை! அதிலிருந்த போலி ருத்திராட்சங்கள்!

அந்த நாள் அவன் கண் முன்னே விரிந்தது. விரியும் போதே அன்றைய தினத்தில் யசோதராவின் வார்த்தையிலிருந்த உஷ்ணம் மேகமலையின் சீதோஷ்ணத்தையும் மாற்றுவது போல உணர்ந்தான் அவன்.

அன்று யசோதராவின் பெற்றோர் மதுரையிலிருந்து வந்திருக்கும் தகவலை அறிந்து அவர்களைக் காண லோட்டஸ் ரெசிடென்சிக்கே நேரடியாகச் சென்றான் சித்தார்த். உடன் மாதவனும் இந்திரஜித்தும் இணைந்துகொள்ள அங்கே சென்றவனுக்கு கிடைத்த வரவேற்பெல்லாம் பிரமாதம் தான், யசோதராவின் முறைப்பைத் தவிர. ஏதோ புண்ணியத்திற்கு இந்திரஜித்தைப் பார்த்து மட்டும் சிரித்தாள் அவள். அவனும் சாருலதாவிடம் பேசுவதற்காக சென்றுவிட இப்போது சிரிப்பிலிருந்து முறைப்பு மோடுக்கு தாவினாள் அவள்.

சித்தார்த்தின் பார்வை அவள் கையில் வைத்து திருகிக்கொண்டிருந்த ருத்திராட்சமாலையின் மீது படிந்து மீண்டது. வாசுதேவன் மற்றும் வைஷ்ணவியின் இனிமையான பேச்சில் அவன் மூழ்கினாலும் மாதவன் வேறுபாட்டைக் கண்டுகொண்டான்.

உடனே உஷாராகி மயூரியைத் தனியாக வருமாறு கண் சிமிட்ட அவளோ ஆட்காட்டிவிரலை நீட்டி பத்திரம் காட்டினாள். அவள் வரமாட்டாள் என்பதால் “மய்யூ நேத்து டாடி கால் பண்ணுனப்ப உன் கிட்ட ஒரு இம்பார்ட்டெண்ட் மேட்டர் கேக்கணும்னு சொன்னார்… கொஞ்சம் வர்றியா?” என்று கேட்க வேறு வழியின்றி அவனுடன் நகர்ந்தாள்.

இருந்தாலும் “பெரியம்மா பெரியப்பா முன்னாடியே கண் ஜாடை காட்டுவீங்களோ? இதெல்லாம் நல்லதுக்கு இல்ல பாத்துக்கோங்க” என்று முணுமுணுத்தபடி வந்தவளைக் கண்டு மாதவன் அயர்ந்து போனான்.

“அம்மா தாயே! உன் கூட ரொமான்ஸ் பண்ணுறதுக்குத் தனியா அழைச்சிட்டு வரல… இருந்தாலும் உனக்கு இவ்ளோ பேராசை இருக்கக்கூடாது மய்யூ செல்லம்” என்று கேலி பேசி அவளின் கன்னத்தைப் பிடித்து இழுக்க

“இதுக்குத் தான் தனியா வரமாட்டேன்னு சொன்னேன்” என்று முறுக்கிக்கொண்டாள் மயூரி.

“ஓகே! நான் பாயிண்டுக்கு வர்றேன்… இன்னைக்கு ரிப்போர்ட்டரோட ஃபேஸ் சரியில்ல… அதுலயும் சித்துவ அவங்க பாத்த பார்வை இருக்கே அது தானோசை அவெஞ்சர்ஸ் பாத்த பார்வை மாதிரியே இருக்கு… எதுவும் பிரச்சனையா?” என்று சற்றே தீவிரக்குரலில் வினவினான் மாதவன்.

மயூரி பெருமூச்சுடன் முக்தி யோகா நிகழ்வில் நடந்த அனைத்தையும் விளக்க மாதவனோ இதற்கா இவ்வளவு கோபம் என்று வியந்தான். ஏனெனில் மாபெரும் நிறுவனங்களில் இம்மாதிரியான சிறு சிறு தவறுகள் நேர்வது இயற்கை! அதை பெரிதுபடுத்துவதால் என்ன ஆகிவிடப்போகிறது என்பது அவனது கேள்வி!

ஆனால் மயூரி யசோதராவின் சகோதரி அல்லவா! எனவே பொங்கிவிட்டாள்.

“எதுலயும் ஒழுங்கு இல்ல… எல்லாமே சீட்டிங்னா எங்களுக்கு எரிச்சல் வராதா? அதான் நானும் யசோவும் கன்ஸ்யூமர் கோர்ட்ல முக்தி ஃபவுண்ட்டேசன் மேல கேஸ் ஃபைல் பண்ணப்போறோம்” என்று தீர்மானமாக கூறி மாதவனைத் திகைக்க வைத்தாள்.

அதே நேரம் சித்தார்த்துக்கும் யசோதராவுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் உக்கிரதிசையில் சென்று கொண்டிருந்தது. மாதவனைப் போல அவனுக்கும் இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்ற மனநிலை தான். அதற்கு அடிப்படை காரணம், அவன் குருஜி சர்வருத்ரானந்தாவைத் தீவிரமாகப் பின்பற்றுபவன்.

ஆனால் யசோதராவோ இதை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை.

“உனக்காக நான் அந்த டொனேசன் ரிசிப்ட் ப்ராப்ளமை விட்டுட்டேன்… ஆனா இப்போ அவங்க டூப்ளிகேட் ருத்திராட்சத்தை பன்னிரண்டாயிரம் ஓவாக்கு எனக்கு வித்திருக்காங்கடா… இதுக்குப் பேரு பத்ராட்சமாம்… இந்த விதைய ருத்திராட்சம்னு நிறைய இடங்கள்ல ஏமாத்துறாங்களாம்… இப்போ சொல்லு, இந்த மாதிரி ஏமாத்துறதையும் நான் கண்டுக்காம விட்டுடணுமா?” கண்களில் கனல் தெறிக்க கேட்டவளை சமாதானம் செய்வது கடினம் என்பது சித்தார்த்துக்குப் புரிந்துவிட்டது.

ஆனால் முக்தியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க யாரோ விஷமிகள் சதி செய்திருக்கலாம் அல்லவா! அதை யசோதராவுக்குப் புரியவைக்க முயன்றான் அவன்.

“லிசன் முக்தியோட வாலண்டியர் அண்ட் மெம்பர்ஸ் கவுண்டிங் கிட்டத்தட்ட ஹாஃப் மில்லியனை நெருங்குது… தினசரி முக்தி ஃபவுண்டேசனுக்கு ஆயிரக்கணக்கானவங்க வந்துட்டுப் போறாங்க… அவங்கள்ல குருஜிய பிடிக்காத யாராச்சும் இதை பண்ணிருக்கலாமே யசோ… கண்டிப்பா இது அவரோட கவனத்துக்குப் போயிருக்காது”

“ஓ! உன் பாயிண்டுக்கே நான் வர்றேன்… நான் கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டு இதை அவரோட கவனத்துக்குக் கொண்டு வரப்போறேன்… இதுல நீ தலையிடாத சித்து… ப்ளீஸ்”

யசோதராவின் பிடிவாதம் சித்தார்த்தின் கோபத்தைத் தூண்டியது.

“நீ உன்னோட ரிப்போர்ட்டர் ஈகோவ திருப்திப்படுத்திக்க இவ்ளோ தூரத்துக்குப் போறதுல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்ல யசோ”

“ஐ அம் சாரி… இதுல உன் இஷ்டம் என்னனு நான் கேக்கவே இல்லையே… பன்னிரண்டாயிரத்தை அவங்க கிட்ட இழந்தது நான்… என்னை மாதிரி எத்தனை பேரை அவங்க ஏமாத்துனாங்கனு யாருக்குத் தெரியும்? எத்தனை பேரை உன்னை மாதிரி குருட்டு டிவோட்டீஸ் தடுத்து நிறுத்துனாங்களோ? இங்க பாரு, உன்னோட குருபக்திய உன்னோட வச்சுக்கோ… என் மேல அதை திணிக்க பாக்காத… நான் கேஸ் போடத் தான் போறேன்”

“இசிட்? அப்போ நீ கொஞ்சம் கூட என் வார்த்தைக்கு உணர்வுகளுக்கு மரியாதை குடுக்கமாட்ட? அப்பிடி தானே”

“இதே கேள்விய நானும் கேப்பேன் சித்து… ஆனா உன் கண்ணுல தான் ருத்ராஜி மேல வச்சிருக்குற முட்டாள்தனமான பக்தி பளிச்சுனு தெரியுதே… அப்போ எப்பிடி உனக்கு என்னோட எரிச்சல் புரியும்?”

“ஏய் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத நீ”

“அப்பிடி தான் பேசுவேன்டா… பக்திங்கிறது ஞானத்த விரிவாக்குறதுக்குத் தானே தவிர அறிவை அடகு வைக்குறதுக்கு இல்ல… நீ எமோசனலா பேசுறதை விட்டு பிராக்டிக்கலா யோசி… எந்தளவுக்கு நீ முட்டாளாகி நிக்குறேன்னு உனக்கே புரியும்”

சித்தார்த் சலிப்புடன் அவளைப் பார்க்க விரும்பாமல் திரும்பிக்கொண்டான். சிகையைக் கோதிக்கொண்டு இடுப்பில் கையூன்றி நின்றான்.

மனதில் வியாபித்திருக்கும் எரிச்சல் முகத்திலும் பிரதிபலித்தது. கிட்டத்தட்ட இருவரும் அவரவர் தரப்பை விட்டுக்கொடுக்கவில்லை.

“சோ நீ கேஸ் போடுற டிசிசன்ல இருந்து பின்வாங்க மாட்ட?”

“ஆமா”

“இம்பாசிபிள் யசோ… ஐ அம் டிஸ்-அப்பாயிண்டட்”

“தேங்க்யூ”

அதன் பின்னர் ஒரு நிமிடம் கூட அங்கே அவனது கால்கள் தங்கவில்லை. மாதவனை அழைத்துக்கொண்டு இந்திரஜித்துடன் வெளியேறினான் சித்தார்த்.

அன்றைய தினம் இறுக்கத்துடன் அவனை வழியனுப்பி வைத்த யசோதராவின் முகம் இன்று அவன் கண் முன் வந்தாட அவனது கரங்கள் அங்கிருந்த கம்பிகள் மீது படிந்து இறுகியது.

அப்போது பின்னே இருந்து அவனது தோளைத் தொட்டது ஒரு கரம். திரும்பிப் பார்த்தவன் அங்கே அவனைப் போலவே உடையுடன் வந்து நின்ற மாதவனைக் கண்டதும் பெருமூச்சு விட்டான்.

“என்ன மச்சி இப்பிடி தனியா வந்து நிக்குற? குருஜி இஸ் வெயிட்டிங் ஃபார் யூடா… கம் ஆன், லெட்ஸ் கோ”

“ஐ காண்ட் ஃபர்கெட் யசோ’ஸ் ஃபேஸ்டா… அவளும் நானும் ரிலேசன்ஷிப்ல இருக்குறோம்னு தமிழ்நாட்டுல எல்லாருக்குமே தெரியும்… இப்போ அவ முக்தி மேல கேஸ் போட்டா ருத்ராஜி என்னைப் பத்தி என்ன நினைப்பார்? எனக்கு அவரோட மனசு கஷ்டப்படுறத பாக்கமுடியாதுடா மேடி”

கண்கள் அலைபாய பேசினான் சித்தார்த். மாதவன் அவனது தோளில் கை போட்டு அரவணைத்தவன்

“எல்லா ப்ராப்ளம்ல இருந்தும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும்னு தானே இங்க வந்த… அப்புறம் ஏன் அதையே நினைச்சிட்டிருக்க? ரிப்போர்ட்டருக்கு எந்தளவுக்குக் கோவம் அதிகமோ அதே மாதிரி உன் மேல லவ்வும் அதிகம்டா சித்து… இப்போ வேற நீ சென்னைல இல்ல… சோ கண்டிப்பா உன்னைப் பத்தி யோசிப்பாங்க… நீ சென்னைல போய் இறங்குனதும் உன் மேல லவ் ரெயினை பொழியுவாங்க… இது நடக்கலனா என் பேரை நான் மாத்திக்கிறேன்” என்றான்.

சித்தார்த் அவன் சொன்ன விதத்தில் சிரித்தவன் அவனுடன் சேர்ந்து குரு சர்வருத்ரானந்தாவின் குடில் இருக்கும் பகுதியை நோக்கி நடைபோட்டான்.

அரை வட்டவடிவத்தில் சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்தின் வெளிய விரிந்திருந்த பசும்புல்வெளியில் சில குழந்தைகள் கால்பந்தை உதைத்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களை ஆகிருதியான ஐம்பந்தைந்து வயது மனிதர் ஒருவர் பழுப்புவண்ண குர்தா பைஜாமா அணிந்து நெற்றியில் சந்தனத்தால் திலகமிட்டு சாந்தமான முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரது கழுத்தை வளைத்திருந்தது சந்தனவண்ண சால்வை ஒன்று. அது காற்றில் படபடக்க ஐம்பதிலும் இன்னும் நரையேறாமல் கழுத்தளவு வளர்ந்திருந்தது அவரது சிகை. அவர் தான் யோகா குருஜி சர்வருத்ரானந்தா.

இந்த முக்தி ஃபவுண்டேசனை ஆரம்பித்த யோகா குரு சர்வசிவானந்தாவின் சிஷ்யர். முக்தியின் அமெரிக்க கிளையைக் கவனிக்க சர்வசிவானந்தா அங்கே செல்ல முடிவெடுத்த தருணத்தில் அவர் முக்தியை ஒப்படைத்தது சர்வருத்ரானந்தாவிடம் தான்.

இத்தனைக்கும் சர்வருத்ரானந்தா அவரிடம் யோக கலையைக் கற்றுக்கொண்டு அவருடன் தங்கியவர் தான். பின்னாட்களின் சர்வசிவானந்தாவின் நம்பிக்கைக்கு உரியவரானவர் முக்தியின் தலைமை குருவாக வந்ததும் முக்தியை வேறு உயரத்திற்கு கொண்டு சென்றார்.

கடந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் யோகா ஸ்டூடியோக்கள், கணக்கிலடங்கா பக்தர்கள் என சர்வருத்ரானந்தா தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டார்.

இன்றைய நிலமையில் அரசுப்பணியாளர்கள், ஆளும் வர்க்கத்தினர், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் என அனைவரின் பிரியத்துக்கும் உரியவர் தான் குருஜி சர்வருத்ரானந்தா. அவரைப் பின்பற்றும் எண்ணற்ற பிரபலங்களில் சித்தார்த்தும் மாதவனும் அடக்கம்.

அவரைப் பார்த்ததும் அவர்களின் விழிகளில் மரியாதை ஒட்டிக்கொள்ளும்.

இப்போதும் மரியாதையாக அவரருகே சென்று நின்றனர் இருவரும். அவர்களைக் கண்டதும் “வெல்கம்” என்று புன்னகை விரிய வரவேற்றார் சித்தார்த்தின் பிரியத்திற்குரிய ருத்ராஜி.

“குட் மானிங் ருத்ராஜி… இன்னும் சதாசிவன் டெம்பிளுக்குப் போகலயா நீங்க?”

மாதவன் கேட்டதும் அவனது தோளில் சினேகமாகக் கைபோட்ட ருத்ராஜி “உங்களுக்காக தான் வெயிட்டிங்” என்றவர் “மிஸ்டர் கௌதம் உங்க ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க… வாங்க கோயிலுக்குப் போவோம்” என்று அழைக்க சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த கௌதம் ஓடிவந்தான்.

அவனும் இந்த நண்பர்களுடன் முக்தி ஃபவுண்டேசனுக்கு வந்திருந்தான். அங்கேயே தங்கி முக்தி வித்யாலயாவில் பயிலும் குர்தா பைஜாமா அணிந்து ஓடி விளையாடிய குழந்தைகள் அவனுக்கு நந்தனை நினைவூட்டிவிட அவர்களுடன் விளையாட ஆரம்பித்துவிட்டான்.

இப்போது குருஜி அழைத்ததும் வந்தவன் மற்ற மூவருடன் சேர்ந்து சதாசிவனின் கோயிலை நோக்கி நடந்தான். கோவிலில் சதாசிவனுக்கு ஆரத்தி முடிந்ததும் வழக்கம் போல தியானம் யோகா என நாள் கழிந்தது.

மதிய நேரத்தில் மீண்டும் காட்டேஜை அடையும் முன்னர் ருத்ராஜியின் அலுவலக அறையில் மூவரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அடுத்த நொடி அது முக்தி ஃபவுண்டேசனின் டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைதள கணக்குகளில் இடம்பெற்றது.

சித்தார்த்துடன் மற்ற இருவரும் சென்ற பிறகு முக்தியின் சீருடையான பழுப்பு வண்ண குர்தா பைஜாமா சகிதம் வந்து நின்றார் ரவீந்திரன், குருஜியின் அந்தரங்க உதவியாளர். அவரது வலக்கரம் என்று கூட சொல்லலாம்.

“வாங்க ரவி… எல்லா யோகா யூனிட்டோட மேனேஜர்சையும் வீடியோ கான்பரன்ஸ்ல லிங்க் பண்ணி பேசணும்… அடுத்த மாசம் வெவ்வேறு மாவட்டங்கள்ல நடக்கப்போற யோகா ப்ரோகிராம் பத்தி அவங்களோட பேசணும்… இந்த மாசம் நமக்கான டார்கெட்டை நம்ம அடையணும் ரவி”

அவர் டார்கெட் என்று சொல்வது வேறு எதுவுமில்லை, யோகா நிகழ்வுகளின் மூலம் கிடைக்கும் வருவாயை தான். முக்தி ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளைக்கு நன்கொடை என்ற போர்வையில் வரும் வருவாய் பற்றிய கலந்துரையாடலைப் பற்றி தான் ருத்ராஜி கூறினார்.

முன்பு போல இந்தாண்டு வருவாய் வரவில்லை என்பது அவரது வருத்தம். அவரை நம்பி முக்தியை ஒப்படைத்துவிட்டு சென்ற சர்வசிவானந்தாவிடம் ‘பாருங்கள் என் சாதனையை’ என்று மார் தட்டிக்கொள்ள முடியாதல்லவா!

ரவீந்திரனோ அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளித்து விட்டு அன்றைய தினம் மாலையில் கல்லூரி ஒன்றில் அவர் சொற்பொழிவாற்ற வேண்டியதை நினைவூட்டினார்.

“நான் பேசவேண்டிய டாபிக்ல ரைட்டப் தயாரா?”

“எல்லாம் ரெடியா இருக்கு குருஜி… போன தடவை நீங்க நடத்துன உரையாடல்ல சுவாரசியம் கம்மினு வீயூவர்ஸ் சொன்னாங்கள்ல, அதான் ரைட்டரை மாத்திட்டோம்… வழக்கம் போல ஆன்மீகம், வெளிநாட்டு விவகாரம், அரசியல், சினிமானு எல்லாத்தையும் கலந்து ட்ரெண்டியா நாலு ஜோக்குகளோட பெரிய சொற்பொழிவு உங்களுக்காக தயாரா இருக்குது… ஜஸ்ட் நீங்க ஒரு தடவை வாசிச்சு மனப்பாடம் பண்ணுனா போதும்”

சொல்லிவிட்டு கைகட்டி நின்று கொண்டார் ரவீந்திரன். குருஜி சர்வருத்ரானந்தா ஏதேனும் தொலைகாட்சிக்குப் பேட்டியளிக்கவோ அல்லது கல்விநிறுவனங்களில் சொற்பொழிவாற்றவோ செல்லும் முன்னர் அங்கே பேசவேண்டியவற்றை எழுதி கொடுக்க தனியாக ஒரு எழுத்தாளர்கள் குழு இருந்தது. இது உலகத்திற்கு தெரியாத செய்தி.

ஏனெனில் சர்வருத்ரானந்தா என்றால் அவரது சுவாரசியமான வசீகரிக்கும் பேச்சு தான் யோகாவிற்கு அடுத்து சாமானிய மக்களுக்கு நினைவுக்கு வரும். அவர் தனது சொந்தக் கருத்தைப் பேசி ஒரு முறை ஐ.ஐ.டியில் மாணவர்களின் கேலிக்குள்ளாக அதிலிருந்து இந்த எழுத்தாளர் குழு என்ன எழுதிக்கொடுக்கிறதோ அதை மட்டுமே ஒப்பிக்க ஆரம்பித்திருந்தார்.

இது மட்டும் தான் இந்த உலகத்திற்கு தெரியாதா என்று நீங்கள் கேட்டால் இல்லையென்பதே பதில். ஏனெனில் இந்த யோகா குருஜி என்ற ப்ராண்டை உருவாக்க அவருக்கு ஐந்து வருடங்கள் பிடித்தது. அறிவில் சிறந்த ஆன்மீகவாதியாக மக்கள் முன்னே நிற்பவருக்குச் சுயமாகச் சிந்தித்து பேசத் தெரியவில்லை என்றால் அந்த பிம்பம் உடையுமல்லவா! அது மட்டுமா உடையும்? இன்னும் முக்தி ஃபவுண்டேசனின் பெயரில் நடக்கும் எண்ணற்ற செயல்பாடுகளின் பிம்பமும் உடையும்! என்ன அதற்கு இன்னும் நாள் இருக்கிறது! அது வரை யோகா குருஜி சர்வருத்ரானந்தா அறிவார்ந்த ஆன்மீகவாதியாகவே காட்சியளிக்கட்டும்!

மழை வரும்☔☔☔