☔ மழை 6 ☔

“Fish eye lens என்பது பனோரமிக் மற்றும் அரைக்கோள புகைப்படங்களை பரந்த கோணத்தில் படம் பிடிக்க உதவுகின்றன. தட்டையான 180 டிகிரி கோணத்தில் படமெடுக்கக் கூடிய Fish Eye Lens அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைகழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”

                 -பெட்டர் போட்டோகிராபி பத்திக்கை, ஆகஸ்ட் 2020

ஹோட்டல் கோல்டன் கிரவுன் பார்ட்டி ஹால்…

ஜஸ்டிஷ் டுடேவின் ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் குழுமியிருந்த அந்த பார்ட்டி ஹால் ஜேஜேவென இருந்தது. யசோதரா வழக்கம் போல சாருலதாவை மட்டும் அழைத்து வந்திருந்தாள். ஹேமலதா இம்மாதிரி ஆரவாரங்களில் விருப்பமற்றவள் என்பதால் அவளும் அவளுக்குத் துணையாக மயூரியும் லோட்டஸ் ரெசிடென்சியிலேயே இருந்துவிட்டனர்.

விஷ்ணுபிரகாஷுடன் அமர்ந்திருந்த பூர்வி அவளது புரொடக்சன் குழுவில் இடம்பெற்றிருக்கும் ரகுவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“வர்தன் எங்க போனார் ரகு? கொஞ்சநேரத்துக்கு முன்னாடி கூட நான் பாத்தேனே”

“அவன் கேர்ள் ஃப்ரெண்ட் கால் பண்ணுச்சுனு போனான் மேம்… அவனும் ரொம்ப நேரம் கால் கட் பண்ணிட்டே இருந்தான்… இதுக்கு மேலயும் கட் பண்ணுனா வருங்கால வாழ்க்கை கேள்விக்குறி ஆகிடுமோனு பயந்துட்டான்… இது தான் தப்பிக்கிறதுக்கான சான்ஸ்னு தெரியாம போறான், ஐடியா இல்லாத பையன்” என்றான் ரகு.

அனுராதா அவனது புஜத்தில் கிள்ளவும் “பாத்தீங்களா? வலி தாங்குற வைரம் பாய்ஞ்ச கட்டையான என்னாலயே இவ கிள்ளுறதை தாங்கிக்க முடியல… வர்தன் வலி தாங்காத புள்ளை… அவனை நினைச்சா மனசெல்லாம் வலிக்குது” என்று வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டான் ரகு.

இதில் வராதவர் பட்டியலில் மேனகாவும் ஸ்ராவணியும் இடம்பெற அவர்களைப் பற்றி விசாரித்தான் விஷ்ணுபிரகாஷ்.

“வனியும் அபி சாரும் இன்னைக்குத் தான் டெல்லில இருந்து திரும்புனாங்களாம்… அவங்களுக்குள்ள எதோ சண்டையாம்… அதான் மேகி வரல… அந்தச் சண்டைகோழிகளுக்கு சமாதானப்புறா அவளும் அவ ஹப்பி அஸ்வினும் தானே” என்று பதிலிறுத்தாள் அனுராதா.

எதேச்சையாகத் திரும்பியவள் யசோதராவும் சாருலதாவும் சுலைகாவுடன் சேர்ந்து செல்பிக்களைச் சுட்டுத் தள்ளுவதையும் அதை பரிதாபமாக வேடிக்கை பார்த்தபடி சுலைகாவின் கணவன் ரஹ்மான் நிற்பதையும் பூர்வியிடம் காட்ட இருவரும் ஹைஃபை கொடுத்துவிட்டு நகைக்க ஆரம்பித்தனர்.

“ஹேய் பௌட் போஸ் குடுங்கப்பா” சாருலதா கூறவும் மூவரும் உதட்டைக் குவித்து செல்பி எடுத்த தருணத்தில் அவளின் தலையில் யாரோ குட்டினார்கள்.

“எவன் அவன்?” என்று பல்லைக் கடித்தபடி திரும்பியவள் அங்கே நின்றிருந்த இந்திரஜித்தைக் கண்டதும் அவன் தலையில் நறுக்கென்று குட்டினாள்.

“போடி குரங்கு… நான் வலிக்காத மாதிரி தானே குட்டுனேன்… நீ உன்னோட புல்டோசர் கைய வைச்சு கொட்டி என் தலைக்குள்ள குருவி பறக்குது” என்றான் இந்திரஜித் தலையைத் தடவியபடி.

“தலைக்குள்ள இடமில்லனா அங்க சுத்துற குருவிய உன் ஸ்பைக்குல கூடு கட்டிக்கச் சொல்லு”

“என் ஹேர்ஸ்டைல் உனக்குக் குருவிக்கூடு மாதிரியா இருக்கு? உன் தலைல தான் ஸ்பீட் ப்ரேக்கர் முளைச்சிருக்கு… சங்கி மங்கி” என்று கடைசிவார்த்தையில் இராகம் கூட்டி பாடினான் இந்திரஜித்.

தனது பஃப் ஹேர்ஸ்டைலை அவன் கலாய்த்ததில் சாருலதா கடுப்புற அவர்களுக்குள் சண்டை மூள்வதற்குள் சுலேகாவும் யசோதராவும் அவர்களைச் சமாதானம் செய்ய விழைந்தனர்.

அப்போது “உங்க செல்பில நானும் ஜாயின் பண்ணிக்கலாமா?” என்ற குரல் கேட்க அந்தக் குரலுக்குரியவன் இங்கே எப்படி வந்தான் என திகைப்புடன் திரும்பினாள் யசோதரா.

அங்கே வெண்ணிற சட்டையும் கருநீல ஜீன்ஸும், அதே கருநீலத்தில் ப்ளேசரும் அணிந்து வசீகரிக்கும் புன்னகையுடன் நின்றிருந்தான் சித்தார்த். என்ன தான் கோபம் இருந்தாலும் அவனது சிரிப்பின் முன்னே அந்தக் கோபம் மாயமாய் மறைய இமை தட்டாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள் யசோதரா.

“குட் கேர்ள்… அப்பிடியே போஸ் குடு பாப்போம்” என்றவன் இயல்பாய் அவளைத் தோளணைத்து செல்பிக்களைச் சுட ஆரம்பிக்க இந்திரஜித் தமையனுக்கு கட்டைவிரலை உயர்த்திக்காட்டிவிட்டு சுலேகாவையும் சாருலதாவையும் அழைத்துக்கொண்டு இடத்தைக் காலி செய்தான்.

அவர்கள் சென்ற பின்னர் யசோதரா அவனது கையைத் தட்டிவிட்டவள் “இங்க எப்பிடிடா வந்த? பார்ட்டி நடக்குதுனு உனக்கு எப்பிடி தெரியும்?” என்று கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தாள்.

“சாரு இருக்க பயமேன்! அவ ஜித்துக்கு இன்பார்ம் பண்ணி ஜித்து என் கிட்ட சொன்னான்… நானும் முதல்ல இங்க வரணுமானு யோசிச்சேன்… ஆனா வந்தது தப்பில்லனு இப்போ தானே புரியுது” என்றவனின் விழிகள் அவளை ரசனையுடன் அளவெடுத்தான்.

யசோதராவின் கரங்கள் தானாகவே அவள் அணிந்திருந்த கருப்பு நிற ஃபிட் அண்ட் ஃப்ளேர் கவுனை முட்டியைத் தாண்டி இழுத்துவிட ஆரம்பித்தது.

சித்தார்த் நமட்டுச்சிரிப்புடன் “ரொம்ப இழுத்துவிடவேண்டாம்… அது லெங்க்த்தே அவ்ளோ தான்… நாட் பேட்… இந்த டிரஸ் கூட நல்லா தான் இருக்குது” என்று கூறிவிட்டு மீண்டும் ரசனை ததும்ப பார்க்கவும்

“சிரிக்காதடா… சிரிச்சேனு வையேன் இதை உன் மூஞ்சில ஊத்திடுவேன்” என்று மற்றொரு கரத்தில் பிடித்திருந்த கோப்பையில் இருக்கும் பழச்சாறைக் காட்டினாள் யசோதரா.

சித்தார்த் அவளிடமிருந்து அந்தக் கோப்பையை வாங்கியவன் அதிலிருப்பது பழச்சாறு என்றதும் முகம் மலர்ந்தான்.

“என்னை மாதிரியே உனக்கும் ஆல்கஹால் பிடிக்காது போல… இதுக்குத் தான் சொல்லுறேன், வீ ஆர் மேட் ஃபார் ஈச் அதர்” என்றவனின் காலில் தனது கருப்பு நிற ஸ்டில்லட்டோ ஹீல்சால் மிதித்தாள் யசோதரா.

“அவ்வ்” என்று ஒற்றைக்காலை தூக்கி நொண்டியடித்தவனிடம் ஆட்காட்டிவிரலை நீட்டி “நீ பேசாத” என்று மிரட்டிவிட்டு விஷ்ணுபிரகாஷும் சகதோழர்களும் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி விரைந்தாள்.

சித்தார்த்தும் அவள் பின்னே விரைந்தான். சென்றவன் விஷ்ணுபிரகாஷிடமும் நாராயணனிடமும் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். இடையிடையே பார்வை யசோதராவின் பக்கம் சென்று மீண்டது. அவள் முறைத்தபடி அனுராதாவிடம் திரும்பிக்கொண்டாள்.

இங்கே கண்ணாமூச்சி விளையாட்டு நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் மாதவன் லோட்டஸ் ரெசிடென்சியின் F4 ஃப்ளாட்டில் மயூரி இரவுணவு சமைப்பதை கன்னத்தில் கையூன்றி பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளோ தவாவில் தோசையை ஊற்றியபடி அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

“நீங்க என்ன தான் சொன்னாலும் எனக்கு உங்க ருத்ராஜி மேல நம்பிக்கை வரல மேடி… அவர் மேகசின்ல எழுதுற கட்டுரைக்கும் அவரோட பேச்சுக்கும் அவர் நடந்துக்குற விதத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்ல… யசோ பாஸ்ட் ஒன் வீக்கா கலெக்ட் பண்ணுன டீடெய்ல்ஸ் எதுவும் அவரை நல்லவிதமா காட்டல… இந்த ருத்ராட்ச மேட்டரை விடுங்க… அவரோட ஆஸ்ரமத்துலயே நிறைய முறைகேடு நடக்குதுனு நிறைய சோஷியல் ஆக்விஸ்ட்ஸ் சொல்லுறாங்க… ஆனா உங்களை மாதிரி சினிஃபீல்ட்ல இருக்குறவங்க, கவர்மெண்ட்ல இருக்குற ஹையர் அபிஷியல்ஸ், பொலிடீசியன்ஸ் எல்லாரும் அவருக்கு சப்போர்ட் பண்ணுறீங்க… ஏன் இப்பிடினு எனக்குப் புரியவே இல்ல”

மாதவன் கன்னத்திலிருந்த கையை எடுத்துக்கொண்டவன் “சிம்பிள்! ஹீ இஸ் அவர் ஸ்பிரிச்சுவல் கைட்… அவர் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு மய்யூ… எங்க நம்பிக்கை எங்களுக்கு…. அதை அப்பிடியே விட்டுடேன் மய்யூ” என்று கண்களைச் சுருக்கி வேண்டினான்.

“அப்போ பஞ்சமா பாதகத்தைப் பண்ணி ஊரை ஏமாத்திட்டுக் கடவுள் கிட்ட சரணடைஞ்சுட்டா அந்த மனுசனை நீங்க நம்புவீங்க… ஒரு விசயத்தை புரிஞ்சுக்கோங்க, உங்களுக்கு அவரோட பேச்சும் யோகாவும் மனநிம்மதியைக் குடுக்குறதுங்கிறது உண்மை…. இவ்ளோ ஏன் நானும் யசோவுமே அந்த யோகா குடுக்குற மனஅமைதிய அனுபவிச்சவங்க தான்… ஆனா அதுக்குனு அந்த முக்தி ஃபவுண்டேசனோட தப்பை நாங்க அந்த யோகாவுக்காக மறைக்க நினைக்கலயே! அதை தான் உங்க கிட்ட எதிர்பாத்தேன்… எனி ஹவ், இன்னைக்கு இல்லனா என்னைக்காச்சும் அந்த மனுசன் செய்யுற தப்பு உலகத்தோட பார்வைக்கு வரும்… அப்போவும் உங்களை மாதிரி சிலர் அவருக்குச் சப்போர்ட் பண்ணுவாங்க… சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லங்க”

சலித்துக்கொண்டபடி தோசையைத் திருப்பியவள் “சாப்பிடுறீங்களா?” என்று கேட்க அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர மாதவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

“இது தான் மய்யூ! ஆர்கியூ பண்ணுனாலும் என் வயித்தைப் பத்தி யோசிக்கிறீயே” என்று சிலாகித்தவனின் பேச்சில் புன்னகைத்தவள் விசமத்துடன் அவனைப் பார்த்து

“காலியான உங்க மூளைய தான் என்னால நிரப்ப முடியல… அட்லீஸ்ட் காலியான வயித்தையாச்சும் நிரப்பலாமேனு ஒரு நப்பாசை தான்” என்று கூறிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினாள்.

மாதவனோ அதைக் கேட்டு நகைத்தவன் “நீ என்ன வேணாலும் திட்டு… சாப்பாடுனு வந்துட்டா நான் யார் கழுவி ஊத்துனாலும் கண்டுக்க மாட்டேன்” என்று சாப்பாட்டில் கண் பதித்தான். அதன் பின்னர் மயூரியும் அவனுடன் சாப்பிட அமர்ந்தவள் முக்தியைப் பற்றியோ ருத்ராஜியைப் பற்றியோ எதுவும் பேசினாளில்லை.

ஆனால் ஹோட்டல் கோல்டன் கிரவுனில் சித்தார்த் யசோதராவைச் சமாதானம் செய்ய என்னென்னவோ செய்து பார்த்தான். ஆனால் அவள் முறைப்பதை விடுத்து வேறெந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தவன் இந்திரஜித்திடம் பார்ட்டி முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பும்படி கூறிவிட்டு யசோதராவிடம் வந்தான்.

அவள் என்ன என்பது போல புருவம் உயர்த்த “உன் கிட்ட பேசணும்… கொஞ்சம் என்னோட வா” என்று கேட்டான் அவன்.

“ஏன் இங்க வச்சு பேசலாமே?”

“இங்க கொஞ்சம் சத்தமா இருக்குது யசோ” என்றவன் சுற்றியிருப்பவர்களைக் காட்ட யசோதராவும் அவனுடன் செல்ல சம்மதித்தாள்.

ஹோட்டலின் பார்ட்டி ஹாலை விட்டு வெளியே வந்தவள் “என்ன பேசப்போற?” என்று கேட்க

“காருக்குப் போய் பேசலாமா? பிகாஸ் இங்க சிசிடிவி கேமராஸ் அதிகம்” என்று கண்களால் அங்கிருந்த கேமராவைக் காட்ட அவளும் அவனுடன் ஹோட்டலின் தரிப்பிடத்தை நோக்கி சென்றாள்.

கூடவே “மேகமலைல இருந்து திரும்பி வந்ததுக்கு அப்புறம் எஸ்.ஜி சாரை மீட் பண்ணுனியா?” என்று கேட்டபடி சித்தார்த்தின் காருக்குள் முன்னிருக்கையில் அமர்ந்தாள்.

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த சித்தார்த் அதற்கு பதிலளிக்காது “சீட் பெல்டை போட்டுக்கோ” என்று கூற

“இங்க உக்காந்து பேசுறதுக்கு எதுக்கு சீட்பெல்ட் போடணும்?” என்று புரியாமல் கேட்டாள் யசோதரா.

“இல்லயே! நாம இப்போ பீச் ஹவுசுக்குப் போகப்போறோம்” என்று கூறியபடி காரைக் கிளப்பியவனை யசோதரா திட்டித் தீர்த்ததெல்லாம் வேறு கதை!

“பொய்சொல்லி, ஏமாத்துக்காரன், நீ உருப்படவே மாட்டடா” என்று பொறுமித் தீர்த்தபடி அவனை பட்பட்டென்று அடித்தவள் ஒரு கட்டத்தில் கை வலிக்கவும் கிள்ளி வைத்தாள்.

“ஏன் எனர்ஜிய வேஸ்ட் பண்ணுற? சேவ் யுவர் எனர்ஜி… பின்னாடி தேவைப்படும்” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டியவனின் பேச்சில் வாயைப் பிளந்தாள் யசோதரா.

“ஹீரோயிசமா? சகிக்கல சித்து” முகத்தைத் திருப்பிக்கொண்டவளின் முகம் பற்றி திருப்பியபடி மற்றொரு கையால் ஸ்டீயரிங்வீலை வளைத்தான்.

அழுத்தமாக மோவாயைப் பற்றிய கையின் உபயத்தால் யசோதராவின் முகம் அவனை நோக்கி திரும்பியது.

“ஒன்வீக் உன்னோட முகத்தை பாக்காம இருந்திருக்கேன்… இப்போ பக்கத்துலயே உக்காந்திருந்தும் அந்தப் பக்கமா திருப்பிக்கிறீயே டார்லிங்… இட்ஸ் டூ பேட்” என்று மூக்கைச் சுருக்கி சித்தார்த் கூற

“உன்னோட பீச் ஹவுசுக்கு நம்ம முழுசா போய் சேரணும்னா நீ என் முகத்தைப் பாக்குறதை விட்டு ரோட்டை பாத்து ஓட்டுறது தான் ஒரே வழி… ஆனா நீ அப்பிடி செய்ய மாட்ட… அதான் நானே திருப்பிக்கிட்டேன்” என்றாள் யசோதரா கேலி விரவிய குரலில்.

“என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணுறதுக்கு உன்னோட ஃபேஸ் தேவை இல்ல யசோ… உன்னோட ப்ரசென்சும், உன்னோட நியாபகமும் மட்டும் போதும்” என்று சித்தார்த் கூறவும் அவளுக்குள் உறைந்திருந்த கோபத்தையும் தாண்டி குறுகுறுப்பு பரவியது.

அதன் விளைவாக யசோதராவின் வதனம் சிவக்க காரினை கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி செலுத்தியவனின் கவனம் அவளது செந்நிறம் கொண்ட முகத்தின் அழகில் கலைந்தது. கலைந்த கணத்தில் சாலையிலிருந்து அவனது பார்வை யசோதராவின் பக்கம் திரும்ப அப்போது எதிரே வந்த காரில் மோத செல்ல “சித்து” என்று யசோதரா பதறிய கடைசி கணத்தில் எதிரே வந்த காரினைப் பார்த்துவிட்டான் சித்தார்த்.

காரின் ஸ்டீயரிங்வீலை ஒடித்து திருப்பியவன் மயிரிழையில் எதிரே வந்த காரில் மோதாமல் காரை ஓரங்கட்டினான். யசோதரா அச்சத்தில் முகம் வியர்க்க தலையைப் பிடித்தபடி கண்களை மூடிக்கொண்டாள்.

எதிரே வந்த காரும் வேகத்தைக் குறைத்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்து சித்தார்த் புருவம் சுழிக்க யசோதராவோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அந்தக் காரிலிருந்து இறங்கியவர்கள் சித்தார்த்தின் காரை நோக்கி வர கடைசி நொடியில் யசோதரா தலை நிமிர்த்தி வந்தவர்களைப் பார்த்து “நீங்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

மழை வரும்☔☔☔