☔ மழை 50 ☔ (Final)

ஆன்மீகவாதிகள் தலைமைப்பண்பில் சிறந்தவர்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள், திறன் வாய்ந்த பேச்சாளர்கள், ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் ஆதரவாளர்களிடம் அன்பைப் பொழிந்து அவர்களுக்கு உதவுவதற்காகவே தொண்டு நிறுவனங்களை நடத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள். இயந்திரமயமான வாழ்க்கையில் மக்கள் தங்களுக்கான இளைப்பாறுதலைத் தேடி ஓடுகின்றனர். அவர்களுக்கு இம்மாதிரி ஆன்மீகவாதிகளின் ஆசிரமங்கள் புகலிடமாக அமைகின்றன. ஆன்மீகவாதிகள் தங்களது ஆன்மீக ஞானம், மனோதத்துவ பேச்சுகள் மற்றும் சில அற்புதங்கள் மூலமாக ஆதரவாளர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்களை விதைக்கின்றனர். இந்த நேர்மறை எண்ணங்களே மக்களை அவர்களை நோக்கி ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பே நாளடைவில் கண்மூடித்தனமான பக்திக்கு அடிகோலி அந்த ஆன்மீகவாதிகளிடம் அவர்களை ஏமாறவும் வைக்கிறது.

-A world of Godmen lovers by Dr.Yogesh Sharma on August 13, 2020 in The Times of India

மெட்ராஸ் மோட்டார் ரேஸ் தடம், இருங்காட்டுக்கோட்டை

இந்தியன் நேஷனல் கார் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் MRF Saloon Seriesன் குவாலிஃபையிங் ரவுண்டிற்கான போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்கவிருந்தது.

போல் பொசிஷனில் நின்றிருக்கும் தனது ஆரஞ்சு வண்ண சலூன் வகை பந்தயக்காரை பார்த்தபடி நின்றான் இந்திரஜித். அவனது விழிகள் வெண்ணிறக்கோடுகள் பாயும் ரேஸ் தடத்தையும் பார்வையாளர்கள் அமரும் ஆரங்கையும் மாறி மாறி பார்த்தது.

அவன் தேடிய ஆள் அங்கே வரவில்லை. அதற்கு பதிலாக ரகு அவனுக்குக் கையசைத்தான். இது வரை கார்பந்தயத்தைப் பார்த்ததில்லை என்று அவன் எதேச்சையாகச் சொல்லவும் அவனை அழைத்திருந்தான் இந்திரஜித்.

அவனும் ரேஸ் ஆரம்பிக்கும் முன்னரே வந்துவிட்டான். ஆனால் இந்திரஜித் அவனது தோழிக்காக இல்லை இல்லை இப்போது அவள் காதலி அல்லவா!

இந்திரஜித் அவனது காதலியான சாருலதாவுக்காக காத்திருந்தான். அவள் வருவாளா இல்லையா என்று தெரிந்து கொள்ள முந்தைய இரவு அவளது மொபைலுக்கு அழைத்த போது அவள் அழைப்பை ஏற்கவில்லை.

மீண்டும் மீண்டும் முயற்சி செய்து இந்திரஜித் சோர்ந்து போனான். ஆனால் அவன் மனம் கட்டாயம் சாருலதா வருவாள் என்று நம்பியது.

இதோ இன்னும் சில நிமிடங்களில் ரேஸ் ஆரம்பிக்கப் போகிறது. இது வரை சாருலதா இல்லாமல் சென்னையில் நடக்கும் எந்தக் கார்பந்தயத்திலும் கலந்து கொண்டதில்லை. அந்த ரெக்கார்டை இன்று சாருலதா பிரேக் செய்துவிடுவாளோ என்ற பயம் அவனுக்கு!

போட்டி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு வரவும் இனியும் காத்திருக்க முடியாத நிலை! ஹெல்மெட்டுடன் காருக்குள் அமர்ந்தான் இந்திரஜித். எதற்கும் ஒரு முறை பார்வையாளர் அரங்கத்தை பாரேன் என்று அவனது மனம் அவனைப் பிராண்டி எடுக்கவும் இந்திரஜித்தின் விழிகள் அந்தப் பக்கம் திரும்பியது.

அங்கே ஏற்கெனவே இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருந்தது. அந்த அதிகரித்த எண்ணிக்கைக்குக் காரணமான நபர் அணிந்திருந்த எலுமிச்சை மஞ்சளில் சிவப்பு ரோஜாக்கள் இட்ட காட்டன் லாங்க் டாப் அவனுக்கு என்றோ நடந்த உரையாடலை நினைவூட்டியது.

“என்னடா டாப் இது? சைனீஷ் லேடிஸ் போட்டுக்குற லாங் கவுன் மாதிரி இருக்கு… கலரை பாரேன்… ஏதோ மாரியாத்தா கோயில்ல கூழ் ஊத்தப் போற மாதிரி எல்லோ கலரை செலக்ட் பண்ணிருக்க… உன் டேஸ்ட் உன்னை மாதிரி மொக்கையா இருக்கு ஜித்து”

“அடியே இந்த வருசத்தோட ட்ரெண்ட் கலரே லெமன் எல்லோ தான்… எவ்ளோ அழகான டாப்ப செலக்ட் பண்ணிருக்கேன், அதை போய் கிண்டல் பண்ணுற… நீயும் உன் ரசனையும் போடி மங்கி”

அன்று எந்த டாப்பை கேலி செய்தாளோ அதே டாப்பை அணிந்து புன்னகை ஒட்டியிருக்கும் செவ்விதழ் பூவாய் விரிந்திருக்க பார்வையாளர்கள் பகுதியில் ரகுவின் அருகே அமர்ந்திருந்தாள் சாருலதா. கரங்களில் எதையோ வைத்திருந்தாள். தூரத்திலிருந்து பார்த்ததில் அவனுக்கு என்னவென தெரியவில்லை.

ஆனால் அவள் வந்த மகிழ்ச்சியில் கார் பந்தயம் ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு இந்திரஜித்தின் செவிகளில் விழுந்ததும் அவன் கரங்களில் அந்தச் சலூன் கார் பறக்க ஆரம்பித்தது.

அதே நேரம் ரகுவின் அருகே அமர்ந்திருந்த சாருலதா வழக்கமான குதூகலத்துடன் அமர்ந்திருந்தாள். இந்திரஜித்தின் ஆரஞ்சு வண்ண கார் மற்றைய கார்களை முந்தும் போது எப்போதும் போல “கம் ஆன் ஜித்து… யூ ஆர் த வின்னர்” என்று கரங்களை வாயருகே குவித்து உற்சாகமாக கத்தினாள் அவள்.

அவளருகே அமர்ந்திருந்த ரகுவையும் கத்துமாறு கூற அவனோ “இன்னைக்கு நான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலம்மா… இப்போ அண்ணன் இருக்குற நிலமைல இவ்ளோ ஃபோர்ஸா கத்த முடியாது” என்று வயிற்றில் கைவைத்து பரிதாபமாக கூறினான் ரகு.

“போங்கண்ணா! யூ ஆர் வேஸ்ட்” என்று மூக்கைச் சுருக்கி கூறிவிட்டு மீண்டும் “ஃபாஸ்ட் ஜித்து ஃபாஸ்ட்” என்று கத்த ஆரம்பித்தாள்.

கார்கள் விர்விர்ரென்று வேகமெடுத்து சீறிப் பாய்ந்து கொண்டிருக்க இந்திரஜித்தின் கார் மற்ற கார்களை படிப்படியாக முந்தியது.

சில நிமிடங்கள் மட்டுமே மிச்சமிருந்த ரேஸில் அவனது கார் இன்னும் சில கார்களை மட்டுமே முந்த வேண்டியது பாக்கி. இந்திரஜித் எப்போதும் வேகமாக முந்திச் செல்பவன் இம்முறை திடும்மென மற்ற கார்களை முந்த விட்டு நிதானமாக ஓட்டவும் சாருலதாவுக்குப் பதற்றம் ஆரம்பித்து விட்டது.

அதற்கு பலியானது அவளருகே அமர்ந்திருந்த ரகு தான்.

“என்னண்ணா இவன் இவ்ளோ ஸ்லோவா டிரைவ் பண்ணுறான்? அந்த ப்ளாக் கலர் கார்க்காரன் வேற அடிக்கடி முந்துறானே! பெருமாளே! அந்தக் கார் டயர் பங்சர் ஆகிடணும்பா” என்று கண்ணை மூடி வேண்டிக்கொண்டாள் அவள்.

“க்கும்! அப்பிடி பங்சர் ஆகணும்னா ஜித்துக்கு முன்னாடி போற எல்லா காரோட டயரும் பங்சர் ஆகணும்மா… கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு… அவன் எல்லா காருக்கும் பின்னாடி போயிட்டான்” என்றான் ரகு.

“என்னது?” என்று அதிர்ந்து கண்களை திறந்து பார்த்தவள் ரகு சொன்னதை போலவே இந்திரஜித்தின் கார் கடைசியாக வருவதைக் கண்டதும் நெஞ்சில் கைவைத்தபடி சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“எம்மா தங்கச்சி இப்பிடி முகத்தை வைக்காத… ஐயா பெருமாளே இதுக்காகவாச்சும் அந்தப் பயலோட காரை முன்னாடி வர வை தெய்வமே!” என்று அவளது சோகவயப்பட்ட முகத்தைக் காண சகியாது ரகுவும் கடவுளிடம் வேண்டிக்கொண்டான்.

இருவரது வேண்டுதலுக்குக் கடவுள் செவி சாய்த்தாரோ இல்லையோ டெலிபதியில் அதை உணர்ந்ததை போல இந்திரஜித் காரின் வேகத்தைக் கூட்டினான்.

இவ்வளவு நேரம் மற்றவர்களை முந்த வைத்து வேடிக்கை பார்த்தது போதுமென காரை ரேஸ் தடத்தில் பறக்க வைத்தவன் ரேஸ் முடியும் வினாடியில் அனைவருக்கும் முன்னே சென்று எம்.ஆர்.அஃப் என்று எழுதப்பட்டிருக்கும் அரைவட்டவடிவ வளைவைத் தாண்டி சென்றுவிட்டான்.

கடைசி வினாடியில் அனைவரையும் முந்தி இம்முறையும் வெற்றி வாகையைச் சூடியவனாக இந்திரஜித் காரிலிருந்து இறங்கினான். அக்காட்சியைக் கண்டதும் சாருலதா உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க இம்முறை ரகுவும் அவளுடன் சேர்ந்து கொண்டான்.

கோப்பையை உயர்த்தி இந்திரஜித் போட்டோவுக்குப் போஸ் கொடுக்க அதை ஸ்போர்ட்ஸ் சேனல்களின் கேமராக்கள் ஃப்ளாஷ் மின்ன படம் பிடிக்க ஆரம்பித்தன. சாருலதா தனது மொபைலில் போட்டோ எடுக்கும்படி ரகுவிடம் வேண்டிக்கொள்ள அவனும் அக்காட்சியைப் புகைப்படமாக்கினான்.

இந்திரஜித் வெற்றி கோப்பையுடன் ஆரஞ்சும் வெண்ணிறமும் கலந்த சீருடையும் தொப்பியும் அணிந்து மெதுவாய் நடந்து பார்வையாளர்கள் பகுதியை அடைந்தான். சாருலதாவின் விழிகள் பெருமிதம் பொங்க அவனை பார்க்க இதழைக் குவித்து முத்தமிடுவது போல அவன் சைகை செய்யவும் அதே விழிகளை உருட்டி மிரட்டி சுற்றி இருப்பவர்களைக் காட்டினாள் அவள்.

ரகுவோ மகிழ்ச்சியுடன் அவனை அணைத்தவன் “ஒரு நிமிசத்துல என்னையும் பெருமாள் கிட்ட பெட்டிஷன் போட வச்சிட்டடா.. ஆல் த பெஸ்ட்” என்று வாழ்த்த

“தேங்க்யூ அண்ணா… நீங்க விஷ் பண்ணிட்டீங்க… ஆனா உங்க பக்கத்துல நிக்குறவங்க கண்ணை மட்டும் தான் உருட்டுறாங்க… இவ்ளோ கஷ்டப்பட்டு லாஸ்ட் மினிட்ல ஜெயிச்சிருக்கேன்… எனக்கு எதுவும் கிப்ட் கிடையாதா?” என்று சாருலதாவிடம் கேட்காமல் ரகுவிடம் பூடகமாய் பேச

“எப்பா சாமி, உன் எதிர்ல தானே சாரு நிக்குறா… நீயே கேளு” என்றான் ரகு.

இந்திரஜித் தன்னெதிரே கரங்களை பின்னே கட்டியபடி நின்று கொண்டிருந்த சாருலதாவை நெருங்கியவன் கோப்பையைப் பிடித்திருந்த கரத்தால் அவளை இடையோடு சேர்த்து அணைத்தபடி

“ரொம்ப கஷ்டப்பட்டு கப் ஜெயிச்சிருக்கேன்… என்னைக் கொஞ்சம் கவனிக்கலாமே” என்று கொஞ்சலாய் கேட்க

“அஹான்! கவனிக்கலாமே! முதல்ல கொஞ்சம் தள்ளி நிக்கிறீயா? எல்லாரும் நம்மளை வேடிக்கை பாக்குறாங்க” என்றாள் சாருலதா அவனை தள்ளி நிறுத்தியபடி.

இந்திரஜித் முகத்தைச் சுருக்கிவிட்டு “போடி! எப்போவும் தள்ளி விடுறதையே பொழைப்பா வச்சிருக்க… ஜெயிச்சவனுக்கு கிப்ட் குடுக்கணும்ங்கிற கர்டசி கூட தெரியல… ஹேமாக்கா வளர்ப்பை கொஸ்டீன் மார்க் ஆக்குற நீ” என்று குறைபட்டான்.

சாருலதா நமட்டுச்சிரிப்புடன் அவனை ஏறிட்டவள் அப்படியா என்பது போல புருவத்தை உயர்த்திவிட்டு கரங்களை பின்னே கட்டியபடியே முழந்தாளிட்டாள்.

இந்திரஜித் கண்களில் ஆர்வம் மின்ன அடுத்து என்ன என நோக்கும் போதே பின்னே கட்டிய கரங்களை விடுவித்தவள் அதில் பிடித்திருந்த ஒற்றை சிவப்பு ரோஜாவை அவனிடம் நீட்டி

“ஐ லவ் யூ ஜித்து… என் ப்ரபோசலை அக்செப்ட் பண்ணிக்கோ ப்ளீஸ்” என்று தலையைச் சரித்து வினவவும் அவர்களைச் சுற்றியிருந்த கூட்டத்தின் கண்கள் அவர்களை வலம் வர ஆரம்பித்தது.

இந்திரஜித் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி பேசுவதறியாது நின்றவன் இக்காட்சியை ரகு வீடியோ எடுப்பதையும் சுற்றி இருந்த பார்வையாளர்கள் தங்களுக்குள் குறுகுறுப்புடன் நகைப்பதையும் உணர்ந்த பின்னர் முகம் விகசிக்க குனிந்து சாருலதாவின் தோளைப் பற்றி எழுப்பினான்.

ரோஜாவை வாங்கிக்கொண்டு மீண்டும் கோப்பையுடன் சேர்த்து அவளை அணைத்தவன் “இவ்ளோ கியூட்டா ப்ரபோஸ் பண்ணுனதுக்கு அப்புறம் நோ சொல்லுற அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரன் இல்ல… லவ் யூ சோ மச்” என்றவன் தனது இதழ்களை மென்மையாக அவள் கன்னத்தில் பதித்தான்.

இம்முறை சாருலதா அவனைத் தள்ளி விடவில்லை. மாறாய் அவளது இரு கரங்களும் கூட்டணி வைத்து அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டது.

“ஓகே ஓகே போதும்பா… வீடியோ எடுத்தாச்சு” என்ற ரகுவின் குரலில் விலகியவர்கள் அப்போதும் கோர்த்திருந்த கரங்களைப் பிரிக்கவில்லை.

“இந்த வீடியோவ உங்க அக்காக்கள் அண்ட் மாமாக்கள் எல்லாருக்கும் அனுப்பி வச்சிட்டேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் அடிச்சு பிடிச்சு வீடியோ கால்ல வருவாங்க பாரேன்” என்ற ரகுவின் பேச்சில் இருவரும் அதிர அவன் சொன்னது போலவே அவர்கள் மட்டும் பேசிக்கொள்ளும் வாட்சப் குரூப்பில் வீடியோ கால் வந்தது.

எடுத்ததும் “என்னடி நடக்குது அங்க?” என்று மிரட்டிய ஹேமலதாவும் “ப்ச்! ரொம்ப மிரட்டாதடி… பாவம் சின்னப்பொண்ணு பயந்துடப்போகுது… எனிவே ஜித்து நான் முன்னாடியே கெஸ் பண்ணுனது இதை தான்… சோ ஐஃபோன் சீக்கிரமா வரணும் சொல்லிட்டேன்… சாரு மேடம் சீக்கிரம் நானும் சர்மியும் போட்டோஷூட்டுக்கு ரெடியாகுறோம்” என்று ஆதரவாய் பேசி தனது பரிசுப்பொருட்களை நினைவூட்டிய யசோதராவும், “சின்னப்பொண்ணு வளர்ந்து ஃபைவ் மினிட்ஸ் ஆகுது யசோ… நம்ம கூட இவ்ளோ ரொமான்டிக்கா ப்ரபோஸ் பண்ணல… ஆனா நம்ம பாத்து வளர்ந்த பொண்ணு பின்னி பெடலெடுத்துட்டால்ல” என்று சிலாகித்த மயூரியும் அவர்கள் இருவரையும் வெட்கிச் சிரிக்க வைத்தனர் என்றால் அவர்களின் கணவர்மார்களோ முன்னெச்சரிக்கை பாடங்களை வரிசையாக எடுக்க ஆரம்பித்தனர்.

“வெல்கம் டு கமிட்டட் பீபிள் சங்கம்” என்று வரவேற்ற மாதவன் ஆகட்டும்!

“சாருக்கு என்ன பிடிக்காதுனு கேட்டு தெரிஞ்சு வச்சுக்க ஜித்து… அவளுக்கு ஒன்னு பிடிக்கலனு சொல்லிட்டானா யோசிக்காம அதை நீயும் அவாய்ட் பண்ணிடு… சில மாச அனுபவத்துல நான் கத்துக்கிட்ட லெசன் இது தான்” என்று அக்கறையாய் மொழிந்த கௌதம் ஆகட்டும்!

“உன்னை விட சாரு அழகா ப்ரபோஸ் பண்ணுனாடா… அந்தப் பொண்ணு கிட்ட இதெல்லாம் கத்துக்க… அப்புறம் இன்னொரு விசயம், இனிமே சிங்கிள்டா கெத்துடா, முரட்டு சிங்கிள்னு வாட்சப்ல ஸ்டேட்டஸ் வைக்கிறதை விட்டுரு… இல்லனா அடியும் முரட்டுத்தனமா விழும் தம்பி” என்று கிண்டல் செய்த சித்தார்த் ஆகட்டும்!

அனைவருமே அவர்களின் காதலை நிறைந்த மனதுடன் வரவேற்றனர். இருவருமே அவர்கள் கண்ணெதிரே நண்பர்களாய் இருந்து காதலுக்குள் நுழைந்தவர்கள் அல்லவா!

இந்திரஜித் அன்று இரட்டை வெற்றிகளை ருசித்த களிப்புடன் ஓய்வறைக்குச் சென்று உடை மாற்றிவிட்டுத் திரும்பியவன் வழக்கம் போல கோப்பையை சாருலதாவிடம் ஒப்படைத்தான்.

“போலாமாண்ணா?” என்று கேட்டபடியே ரகுவையும் அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் அவன்.

செல்லும் போதே ரகுவும் சாருலதாவும் ரேஸில் ஏன் திடீரென அவன் வேகத்தைக் குறைத்து கடைசி இடத்திற்கு சென்றான் என வினவியபடியே நடந்தனர்.

“அதுக்கு இவ தான் காரணம்ணா… நான் நேத்து நைட் கால் பண்ணுனப்ப அட்டெண்ட் பண்ணல…. ரேஸ் கோர்சுக்கும் லேட்டா தானே வந்தா… அதுக்கு குட்டி பனிஷ்மெண்ட் குடுக்க வேண்டாமா? அதான் ஸ்பீடை குறைச்சு ஸ்லோவா வந்தேன்… மேடம்கு நான் தோத்து போறது பிடிக்காது… கண்டிப்பா இவ டென்சனாவானு தெரியும்… என்னை நேத்துல இருந்து டென்சனா சுத்த விட்டதுக்கும் இதுக்கும் டேலி ஆயிடுச்சுண்ணா” என்று பதிலளித்த இந்திரஜித் கார் கதவைத் திறக்க ரகு உள்ளே அமர்ந்தான்.

ஆனால் அவன் சொன்னதை கேட்டு கடுப்புற்ற சாருலதாவோ “அண்ணா இந்தக் கப்ப கொஞ்சம் வச்சுக்கோங்க” என்று பின்னிருக்கையில் அமர்ந்த ரகுவிடம் கோப்பையை நீட்ட

“ஏன் செல்லகுட்டி உனக்குக் கை வலிக்குதா?” என அக்கறை மேலிட வினவினான் இந்திரஜித்.

ரகு கோப்பையை வாங்கிக் கொண்டு “இனிமே தான்டா வலிக்கப் போகுது… அப்பிடி தானே தங்கச்சிமா?” என்று சாருலதாவிடம் வினவ

“ஆமாண்ணா” என்று பதிலளித்தவள் தனது முழு நீள டாப்பின் ஸ்லீவை முழங்கை வரை ஏற்றிவிட

“ஏய் எதுக்கு ஸ்லீவை சுருட்டுற?” என்று கண்களில் கலவரம் மின்ன கேட்டான் இந்திரஜித்.

“என்னை டென்சனாக்கி விளையாடுனதுக்கு உனக்கு கிப்ட் குடுக்க வேண்டாமா டியர்?” என்றவள் அவனது மார்பில் பட்பட்டென்று அடிக்கத் துவங்க ரகு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

இந்திரஜித் அவளைத் தடுக்க முயன்றபடியே “இந்த ராட்சசி கிட்ட இருந்து இப்பிடி உருண்டு புரண்டு சிரிக்கிறது பெரிய மனுசனுக்கு அழகு இல்லண்ணா… ப்ளீஸ் சேவ் மீ” என்று கத்த

“தம்பி அந்தப் புள்ளை எப்போ முட்டிக்கால் போட்டு ரோசாப்பூவ நீட்டுனப்ப நீ சிரிச்சிக்கிட்டே வாங்குனியோ அப்போவே இந்த மாதிரி கிக் பாக்சிங்குக்கான ரைட்சையும் அவளுக்குக் குடுத்துட்டேனு அர்த்தம்… இனிமே உடம்பை இரும்பாக்கிக்க வேண்டியது நீ தான் ஜித்து” என்று கலாய்த்தான் ரகு.

இனி அவனிடம் உதவி கேட்டு பிரயோஜனம் இல்லை என புரிந்து கொண்ட இந்திரஜித் அவனை அடிக்கும் சண்டைக்காரியிடமே சரணடைந்தான்.

“அம்மா தாயே! தெரியாம உன்னை டென்சனாக்கிட்டேன்… இனிமே இப்பிடி ஒரு இன்சிடெண்ட் நம்ம வாழ்க்கைல நடக்கவே நடக்காதுடி மங்கி… ஐ அம் சாரி… ரொம்ப அடிக்காதடி.. எனக்கு வலிக்கவேல்ல, உன் கை தான் வீணா வலிக்கப் போகுது” என்றான் இந்திரஜித்.

சாருலதா அடிப்பதை நிறுத்தியவள் அவனது ஹென்லே டீஷர்ட்டை இறுக்கமாய் பற்றி இழுத்து “இது தான் லாஸ்ட் டைம்… இனிமே இப்பிடி நடக்க கூடாது… ப்ரபோஸ் பண்ணுன டேட்லயே உன் கூட ஃபைட் பண்ண எனக்கு விருப்பம் இல்லாததால் நீ தப்பிச்ச ஜித்து” என்று ஆட்காட்டி விரலை நீட்டி மிரட்ட குறுஞ்சிரிப்புடன் அந்த விரலில் முத்தமிட்டான் அவன்.

சட்டென விரலை மடக்கியவள் “எனக்குக் கோவம் போகல” என்று கூற உடனே அவள் கையில் முத்தமிட்டான் அவன்.

வேகமாக கையை டாப்பில் துடைத்த சாருலதா “இப்போவும் கோவம் போகல” என்று ஆகாயத்தைப் பார்த்து கூற அவளை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான் இந்திரஜித்.

அவளோ அவனது ஹென்லே டீசர்ட்டை இழுத்து அதில் கன்னத்தைத் துடைத்துக் கொண்டு “இப்போவும் போகல” என்று கூற

“அடுத்த கிஸ்ல போயிடும் பாரேன்” என்று விசமமாய் உரைத்தபடி அவளது கன்னங்களை ஏந்தியவன் இதழ் நோக்கி குனியவும் சாருலதா புன்சிரிப்புடன் “இல்ல இல்ல… கோவம் போயிடுச்சு” என்று விலக முயல இந்திரஜித் விடாமல் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தான் விலகினான்.

காரின் உள்ளே இருந்து “அடேய்களா உங்களோட ஃபைட்டிங் அண்ட் கிஸ்சிங் செஷன் முடிஞ்சுடுச்சுனா காரை எடுங்கடா” என்ற ரகுவின் குரல் கேட்கவும் இருவரும் சிரித்தபடி காரில் அமர்ந்தனர்.

அடுத்தச் சில நொடிகளில் இந்திரஜித்தின் கார் இருங்காட்டுக்கோட்டையைத் தாண்டி பறக்க ஆரம்பித்தது. அவனருகே புன்னகை முகமாய் அமர்ந்திருந்த சாருலதாவின் கரத்துடன் தனது கரத்தைப் பிணைத்திருந்தவன் இனி எப்போதும் அக்கரத்தை விடுவதில்லை என தீர்மானமாய் எண்ணிக்கொண்டான்.

இந்திரஜித் சாருலதாவின் வாழ்க்கையில் நட்பதிகாரம் அன்றிலிருந்து இனிதே காதலதிகாரமாய் மாறிப்போனது. அவர்களின் இந்த சாசுவதமான காதலதிகாரத்தை முழுவதும் அறிய காத்திருங்கள் ‘வந்தாயே மழையென நீயும் மூன்றாவது பாகத்திற்காக!’

இரண்டாம் பாகம் இனிதே நிறைவுற்றது!