☔ மழை 48 ☔

எதிரிகளை அழித்து குடிமக்களைக் காப்பது தான் முக்கிய அரசநெறியாக சங்க காலத்தில் கருதப்பட்டது. புறநானூற்றில் உள்ள நானூறாவது பாடலில் ஔவையார் எதிரிகளை வென்று வருபவனே தேர்ந்த அரசன் என்கிறார். சங்க காலத்தின் அரசநெறியும் போர்த்தத்துவமும் ஒழுக்கநெறி சார்ந்தே இருந்தது. சங்க இலக்கியங்கள் முறையற்ற போர் வரும் போது எவ்வாறு இராஜதந்திரிகள் செயல்பட்டு போரைத் தடுத்து நிறுத்தி, போரால் அவதிப்படவிருந்த மக்களைக் காத்தனர் என்றும் கூறியுள்ளன. சங்க இலக்கியங்கள் கூறும் அரசியல் தத்துவங்கள் காலத்தால் அழியாதவை மட்டுமன்றி எந்தக் காலத்திற்கும் பொருந்த கூடியவை என்றால் மிகையாது.

முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…

காணும் இடமெங்கும் மக்கள் வெள்ளம் மட்டுமே கண்களில் தட்டுப்பட்டது. தமிழ்நாட்டின் கடைக்கோடியிலிருந்தும் பக்தி என்ற ஒற்றையுணர்வால் உந்தப்பட்டு வெகுதூரம் பயணித்து வந்த கூட்டத்தின் மத்தியில் முக்தியின் புதிய சதாசிவன் ஆலயம் அரசனின் தலையில் சூடவிருக்கும் புத்தம் புதிய மகுடம் போல ஜொலித்தது.

வந்திருக்கும் பக்தர்களுக்கான இருப்பிடம் நுழைவுச்சீட்டிக்கேற்ப பிரிக்கப்பட்டிருந்தது. எனவே வி.ஐ.பிக்கள், அரசியல் பிரமுகர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பிரபல பாடகர்கள் கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட அலங்காரத்துடன் கூடிய மேடையில் நின்று லிங்காஷ்டகத்தை மனமுருகப் பாடிக்கொண்டிருந்தனர்.

பிரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பாஷித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவமுனி ப்ரவராச்சித லிங்கம்

காமதஹம் கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

அந்தப் பாடலில் மூழ்கி பக்தி வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தனர் வந்திருந்த மக்கள் அனைவரும்.

மேடையில் நடுநாயகமாக முக்தியின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்க அதன் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் கம்பீரமாக வீற்றிருந்தார் சர்வசிவானந்தா. சாந்தம் தவழும் முகம், கருணை பெருக்கெடுத்து ஓடும் விழிகள், எதற்கும் அலட்டிக்கொள்ளாத முதிர்ச்சியான உடல்மொழி! அத்துணையும் பல ஆண்டுகளாக யோகக்கலையைப் பயிற்றுவித்து அதைக் கடைபிடிப்பதன் பலன்!

அவர் அருகே போடப்பட்டிருந்த மற்றொரு இருக்கையில் அதே சாந்தம் ப்ளஸ் கருணையின் கலவையாக சர்வசிவானந்தா டூ பாயிண்ட் ஓ வெர்சனாக அமர்ந்திருந்தார் சர்வருத்ரானந்தா.

கூடவே தன்னால் கூட்டப்பட்டுள்ள மக்கள் சாகரத்தைக் குருவிடம் பெருமிதம் பொங்க காட்டிக்கொள்ளும் பேரார்வமும் அவர் முகத்தில் பொங்கியது.

தீர்க்கத்துடன் நான்கு திக்குகளிலும் அலைபாய்ந்த அவரது விழிகளில் பக்தர்கள் கூட்டமும் அவர்களை வழிநடத்தும் முக்தியின் முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் விழுந்தனர்.

கூடவே அரசியல் பிரமுகர்களுக்குக் காவலாக வந்திருந்த காவல்துறை அதிகாரிகளும் படவும் எந்தக் குற்றச்சாட்டுகளாலும் முக்தி என்ற பிரம்மாண்ட நிறுவனத்தை அசைக்க முடியாது என கர்வமாய் நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் ருத்ராஜி.

அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ரவீந்திரன் ருத்ராஜியின் காதில்

“சி.எம் நம்மளோட ஹெலிபேட்ல வந்து இறங்கிட்டாராம் ருத்ராஜி… சாந்தனுவோட மெசேஜ் வந்துடுச்சு… நம்ம போய் நேர்ல இன்வைட் பண்ணி அழைச்சிட்டு வந்துடலாமா?” என்று பவ்வியமாக வினவ ருத்ராஜியும் சரியென தலையசைத்தவர் தனது குருஜியிடம் முதல்வரை வரவேற்று அழைத்துவருவதாகச் சொல்லி விடைபெற்றார்.

மேடையிலிருந்து ஹெலிபேட் இருக்கும் இடம் வரை முதலமைச்சருக்காகவே பிரத்தியேகமாக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதன் இரு பக்கங்களிலும் தான் பக்தர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். அதன் நடுநாயகமாக ரவீந்திரனுடன் நடந்து வெளியேறிய ருத்ராஜியை கிரேனில் அமர்ந்து நகர்ந்தபடி தொடர்ந்தது இந்நிகழ்ச்சியை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த கேமராக்கள்.

ருத்ராஜியும் ரவீந்திரனும் இன்னும் சில தலைமை சீடர்களுடன் சேர்ந்து பூங்கொத்து சகிதம் ஹெலிபேடை அடைய அங்கே உதவியாளர், கருப்பு சீருடை அணிந்த பாதுகாவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சகிதம் நின்றிருந்தான் அபிமன்யூ, கூடவே அஸ்வினும்.

இருவரும் அவர்களின் வெள்ளை சட்டை கருப்பு ஜீன்சை இப்போது வரை விடுவதாக இல்லை. சிரத்திலிருக்கும் சிகை சால்ட் அண்ட் பெப்பராக மாறிய போதும் அந்தச் சீருடை மாறுவதாக இல்லை!

ருத்ராஜியும் மற்றவர்களும் பூங்கொத்துடன் அவனை எதிர்கொண்டவர்கள் அதை அவனிடம் வழங்கும் முன்னர் பறித்துக் கொண்ட பாதுகாவலர்களை அசூயையாகப் பார்த்தபடி புன்னகையை வரவழைத்துக்கொண்டு இரு கரம் கூப்பி வரவேற்றனர்.

“வெல்கம் டூ முக்தி ஃபவுண்டேசன் அவர் பிலவ்ட் சி.எம்” என்று அன்பு ததும்பும் குரலில் கூறி அவனது கரத்தைப் பற்றி குலுக்கினார் சர்வருத்ரானந்தா.

அபிமன்யூ மரியாதை நிமித்தம் புன்னகைத்தவன் “தேங்க்ஸ் ஃபார் இன்வைட்டிங் மீ ருத்ராஜி” என்றான்.

பின்னர் ரவீந்திரனும் ருத்ராஜியும் ஒரு பக்கம் வர பாதுகாவலர்கள் அரண் சூழ அஸ்வினுடன் சிவப்பு கம்பளத்தில் அடியெடுத்து வைத்து பிரம்மாண்ட மேடையை அடைந்தான் அபிமன்யூ.

மாநிலத்தின் முதலமைச்சரே நேரில் வந்ததும் பக்தர்கள் கூட்டத்தில் மெல்லிய பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக்கொண்டது.

அபிமன்யூ சர்வசிவானந்தாவிற்கு வணக்கம் தெரிவித்தவன் நேரே சதாசிவனின் கோவில் கோபுரத்தை நோக்கி கரம் கூப்பவும் கூட்டம் ஆர்ப்பரித்து “ஓம் நம சிவாய” என்று முழங்கிய தருணத்தில் கேமிராக்கள் அக்காட்சியை வளைத்து வளைத்து வீடியோவாக்கியது.

பின்னர் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கைகளில் பாதுகாவலர்கள் இடவலமாக பாதுகாப்பு கவசத்தைப் போல நிற்க அமர வைக்கப்பட்டனர் அபிமன்யூவும் அஸ்வினும்.

பக்தி பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டிருக்க ருத்ராஜியிடம் “எப்போ கோவில் திறக்குறதுக்கான சுபமுகூர்த்தம் ருத்ராஜி?” என்று வினவினான் அபிமன்யூ.

“இன்னும் பதினைஞ்சு நிமிசம் இருக்கு சி.எம் சார்… அதுக்குள்ள நீங்க ஒரு ஸ்பீச் குடுத்தா முக்தியோட மெம்பர்சான நாங்க ரொம்ப சந்தோசப்படுவோம்” என்றார் ருத்ராஜி.

“அஃப் கோர்ஸ்…  மை பிளஷர்” என்று புன்னகையுடன் பதிலளித்தவன் அவனது மறுபுறம் அமர்ந்திருந்த அஸ்வினின் காதில் ஏதோ சொல்ல அவனும் பூடகமாகச் சிரித்து வைத்தான்.

பின்னர் தனதருகே விறைப்புடன் நின்றிருந்த காவல்துறை ஆணையரின் காதை கடித்தவன் அவருக்கு ஏதோ கட்டளையிட அவரும் சரி சரியென தலையாட்டிவிட்டு தன்னிடம் இருந்த வாக்கி டாக்கியில் தனது சக காவலர்களுக்கு ஏதோ கட்டளையிட்டார்.

ஒரு வழியாக பக்தி பாடல்கள் முடிவடைய அபிமன்யூ பேசும் முறை வந்துவிட அவன் எழுந்து நின்றான். அவனது தோளில் ருத்ராஜி சால்வையைப் போர்த்த அதை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தவன் தன்னிடம் அளிக்கப்பட்ட மைக்கை வாங்கி கொண்டான்.

“எல்லாருக்கும் வணக்கம்!” என்று அவன் சொன்னது தான் தாமதம் கூட்டம் ஆர்ப்பரிக்கத் துவங்கியது.

அந்த ஆர்ப்பரிப்பு அடங்கும் வரை புன்னகையுடன் காத்திருந்தவனைத் திரையில் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர் ஜஸ்டிஷ் டுடேவினர். அவர்களது சேனல் திரையில் அல்ல! அந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப அவர்களுக்கு ஒன்றும் பைத்தியம் பிடிக்கவில்லையே!

அங்கே கஃபடேரியாவில் பொதுவாக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி திரையில் இன்னொரு செய்தி சேனலில் முக்தியின் கோவில் திறப்பு விழா நேரலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும். அதில் அபிமன்யூவின் மனைவி ஸ்ராவணியும் அடக்கம்!

திரையில் அபிமன்யூ ஆர்ப்பரிப்பு அடங்கியதும் பேச ஆரம்பித்தான். அதை அங்கிருந்த ஜனத்திரள் கேட்க ஆயத்தமானது.

“முதல்ல சதாசிவனோட கோவிலைத் திறந்து வைக்கிற இந்தப் புனிதமான காரியத்தை என் கிட்ட ஒப்படைச்ச ருத்ராஜிக்கு என்னோட நன்றி! எத்தனை ஆட்சியாளர்களுக்கு இந்தப் பேறு கிடைச்சிருக்குனு எனக்குத் தெரியல… ஆனா எனக்குக் கிடைச்சிருக்கு… தமிழர்களோட வரலாறுல ஆலயங்களும் அதுக்கு ஊழியம் செய்த மன்னர்களும் தவிர்க்கப்பட முடியாதவர்கள்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்!

ராஜராஜ சோழன்ல ஆரம்பிச்சு விஜயநகர மன்னர்கள் வரைக்கும் கோவில்களுக்கு அரசர்கள் செஞ்ச தொண்டு வார்த்தைகள்ல அடங்காதது! என்னால அந்தளவுக்குத் தொண்டு செய்ய முடியலனாலும் இந்தக் கோவிலை திறந்து வைக்கிற புனிதமான செயலை செய்யுறதுல நான் ரொம்ப சந்தோசப்படுறேன்!” என்று சொல்லி நிறுத்தவும் ருத்ராஜியின் இதழில் கர்வப்புன்னகை உற்பத்தியானது.

அதை திரையில் காணும் போதே யசோதராவுக்குக் கடுப்பானது. ரகுவோ “அது எப்படி யசோ எல்லாத்தயும் பண்ணிட்டு இவ்ளோ கெத்தா போஸ் கொடுக்குறாரு இந்த மனுசன்?” என்று கேட்க அவனருகே அமர்ந்திருந்த மேனகா திரையில் கேமராவின் உபயத்தால் தெரிந்த மக்கள் கூட்டத்தைக் காட்டினாள்.

“இத்தனை பேரோட நம்பிக்கைய ஜெயிச்சா அந்தக் கெத்து தானா வந்துடும்டா ரகு” என்றாள் அவள். அதுவும் உண்மை தானே!

திரையில் அபிமன்யூ மீண்டும் பேசத் தொடங்க அவர்கள் அமைதியாயினர், அவர்களோடு மேகமலையில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களும் தான்!

“ஆனா இந்தச் சந்தோசத்தை முழுமையா அனுபவிக்க முடியாத படி சமீபத்தில வந்த செய்திகள் என்னைத் தடுக்குது! ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, முக்தி ஃபவுண்டேசனோட நிர்வாகம் மேல வச்ச குற்றச்சாட்டுகளும், அதைத் தொடர்ந்து போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல முக்தி மேல ஃபைல் ஆன கம்ப்ளைண்ட்சும் என்னை சந்தோசமா இந்தக் கோவிலை திறந்து வைக்க விடமாட்டேங்கறது”

அபிமன்யூ இவ்வாறு கூறியதும் அங்கே முழுமையான அமைதி பரவியது! ருத்ராஜியின் முகம் கர்வத்தை விடுத்து குழப்பத்தையும் கோபத்தையும் பூசிக்கொண்டது.

அவரருகே இருந்த சர்வசிவானந்தாவோ என்ன இது என்பதை போல சிஷ்யரை பார்த்து வைக்க ரவீந்திரனின் மனதில் குளுமை பரவியது.

இத்தனைக்கும் காரணமான அபிமன்யூவோ தனக்கே உரித்தான அலட்சியம் கொட்டும் பாவனையுடன் பேச்சைத் தொடர்ந்தான்.

“சீசர்ஸ் ஒய்ப் மஸ்ட் பி அபவ் சஸ்பீசியன்னு ஒரு பழமொழி உண்டு… அது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்… நாங்க சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவங்களா இருந்தா மட்டும் தான் ஓட்டு போடுற மக்கள் எங்களை அரசியல்வாதியா மட்டுமில்லாம ஆட்சியாளரா மதிப்பாங்க… இப்போ முக்தி மேல இருக்குற குற்றச்சாட்டுகள் எதுவும் பொய்னு நிரூபிக்கப்படாத வரைக்கும் இந்தக் கோவிலை திறந்து வைச்சா என்னையும் சந்தேகக்கண்ணோட மக்கள் பாக்குறதுக்கான வாய்ப்பு அதிகம்!

இப்போவும் அப்பிடி தான் பாக்குறாங்கனு என் காதுக்கு நியூஸ் வந்துடுச்சு… ஒரு அரசியல்வாதியா எனக்கு ஓட்டு முக்கியம்னா ஒரு முதலமைச்சரா எனக்கு என் மக்களோட நம்பிக்கை முக்கியம்! அது உடையுறதை என்னால வேடிக்கை பாக்க முடியாது” என்று அவன் நிறுத்தவும் பக்தர்கள் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.

அது பெரும் எதிர்ப்பாக மாறும் முன்னர் கட்டுப்படுத்தும்படி அபிமன்யூ காவல்துறை உயரதிகாரிக்குச் சைகை காட்ட இவ்வளவு நேரம் தன்னார்வலர்கள் வசம் இருந்த கூட்டத்தினரின் கட்டுப்பாடு முழுவதையும் அங்கிருந்த காவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

திமிறிய தன்னார்வலர்களின் புஜத்தைப் பற்றி அழுத்தி அமர வைத்தவர்கள் “சி.எம் பேசிட்டு கிளம்புற வரைக்கும் யாரும் அசையக்கூடாது” என்று கட்டளையிட அங்கே பேரமைதி நிலவத் தொடங்கியது.

அதே நிலை தான் மேடையிலும்! இவ்வளவு நேரம் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு நிறுத்தவைக்கப்பட்டிருந்த கருப்பு பூனை படை அபிமன்யூவை சூழ்ந்து நின்று கொள்ள அஸ்வினின் கண்ணசைவுக்குப் பின்னர் காவல்துறையினர் மேடையிலிருந்த முக்தியின் முக்கிய பிரமுகர்களின் பின்னே நின்று கொண்டனர்.

அபிமன்யூ அஸ்வின் என்ற இருவரின் கட்டளைக்குப் பிறகு தான் அங்கிருப்பவர்கள் நகரக்கூட முடியுமென்ற நிலை!

ருத்ராஜியின் விழிகளில் பரிபூரண வெறுப்பு! சர்வசிவானந்தாவோ கௌரவமாய் தான் துவங்கிய முக்திக்கு நேர்ந்த அவலத்தை நேரிடையாகக் காணும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதற்கிடையே அபிமன்யூ மேடையில் இன்னும் பேச்சை முடிக்கவில்லை.

“ரொம்ப நாளா எல்லாருக்கும் இருந்த சந்தேகத்தை நான் தீர்க்க விரும்புறேன்… முக்தி ஃபவுண்டேசனோட நடவடிக்கைகள் மேல சமீபத்துல நிறைய புகார்கள் குவிஞ்சதால உளவுத்துறை அவங்களோட கிளைகளை ரகசியமா கண்காணிக்கிறதுக்கு நான் தான் ஆர்டர் போட்டேன்… அதோட அடிப்படைல அவங்களுக்குச் சிக்குன சாட்சியங்கள் எதுவும் முக்திக்குச் சாதகமா இல்ல… வரம்பு மீறி வனத்துறை நிலங்களை ஆக்கிரமிச்சதுல ஆரம்பிச்சு வரி ஏய்ப்பு வரைக்கும் முக்தி ஃபவுண்டேசன் பண்ணுன எல்லாமே உளவுத்துறையோட கண்காணிப்புல வந்துட்டு தான் இருக்கு… ருத்ராஜிங்கிற மிகப்பெரிய ஆளுமைய போற போக்குல விசாரிக்க முடியாதுங்கிறதால தான் கவனமா ஆதாரங்களை தேடுனாங்க அவங்க… இதுக்கு இடைல தான் மீடியா பீபிள் சிலரும் இந்த வேலைய ஆரம்பிச்ச விசயம் எங்களுக்குத் தெரியவந்துச்சு… முக்தியோட சேர்த்து அவங்களையும் உளவுப்படை கண்காணிக்க ஆரம்பிச்சாங்க”

இதைக் கேட்டதும் தான் ஸ்ராவணிக்கு தங்களது புனே பயணம் எப்படி அபிமன்யூவுக்குத் தெரியவந்தது என்பது புரிந்தது. அவளும் மேனகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதே நேரம் முக்தியில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்குமளவுக்கு அமைதியோ அமைதி!

“எங்களுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைச்சிருக்கு… இதுக்கு அப்புறமும் நான் ஏன் கோவில் திறப்பு விழாவுக்கு வர ஒத்துக்கிட்டேன்ங்கிற கேள்வி உங்க எல்லாருக்கும் வருதுல்ல… சில விசயங்களை நேரடியா நானே செஞ்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு… நான் நேரடியா செய்யப்போறேன்னு சொன்னது கோவிலைத் திறக்குற வேலை இல்ல… இங்க வனத்துறை நிலங்கள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டதா குவிஞ்ச புகாரை விசாரிக்கிறது தான்… இன்னும் கொஞ்ச நேரத்துல அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலங்களை அளக்குறதுக்கு வந்துடுவாங்க… காவல்துறையோட நேரடி மேற்பார்வைக்கு கீழ அந்த வேலை நடக்கும்… அடுத்து வரி ஏய்ப்பு பத்தின புகார்கள்… அதுக்கான வருமானவரி துறை அதிகாரிகளும் ஆன் தி வே… அவங்க கேக்குற டாக்குமெண்ட்சை எந்த தகறாறும் இல்லாம முக்தியோட அட்மினிஸ்ட்ரேசன் குடுக்குறாங்களா இல்லையானு கண்காணிக்கிற வேலைய போலீஸ் பாத்துப்பாங்க… அரசாங்கத்தோட விசாரணைக்கு ஒத்துழைப்பு குடுக்காதவங்களை பணி நேரத்துல கடமைய செய்ய விடாம தடுத்ததா கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணி அரெஸ்ட் பண்ணுறதுக்கான ஆர்டர்ல நான் நேத்தே சைன் பண்ணிட்டேன்… இவ்ளோவுக்கும் அப்புறமும் நான் ஏன் இங்க வந்தேன்னு நிறைய பேருக்குக் கேள்வி இருக்கும்…

முதலமைச்சர் முக்திக்கு ஆதரவா செயல்படுறார்னு நிறைய சலசலப்பு நான் பதவி ஏத்த தினத்துல இருந்தே எழுந்துட்டிருக்கு… அதுக்கு இன்னையோட ஒரு ஃபுல்ஸ்டாப் வைக்க விரும்புறேன்… மக்களுக்கு எதிராவும் சட்டத்துக்கு எதிராவும் செயல்படுறது யாரா இருந்தாலும் என்னோட அரசாங்கம் அவங்களை தண்டிக்க தயங்காது” என்று அழுத்தமாக முழங்கிவிட்டு ருத்ராஜியை அர்த்தபுஷ்டியுடன் பார்த்து வைத்தான்.

என்றோ ஒரு நாள் முக்தி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக அவனிடம் பேசியது அவரது நினைவில் அலையாய் எழுந்தது.

“இந்தப் பிரச்சனைக்காக போலீஸ் டிப்பார்ட்மெண்ட் முக்தி மேல கைவச்சாங்கனா முதல்ல மாட்டப்போறது உங்க கட்சி பிரமுகர் ஜெயசந்திரன் தான்… சோ கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க சி.எம் சார்”

“நீங்க எனக்கு செக் வைக்கிறீங்களா ருத்ராஜி?” இது அன்று அபிமன்யூவின் கேள்வி.

“நோ! உங்க கட்சிக்காரரை காப்பாத்துன முக்திய காப்பாத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்குனு நியாபகப்படுத்துறேன்” இது ருத்ராஜி அவனுக்கு அளித்த பதில்.

அந்தப் பதிலை இப்போது நினைத்துப் பார்த்த அபிமன்யூவின் மனமோ “எனக்கே செக் வச்சீங்கள்ல… அதோட விளைவு உங்க சாம்ராஜ்ஜியத்தோட அடித்தளத்துல இருந்து ஒரே ஒரு செங்கல்லை உருவப்போறேன் ருத்ராஜி” என்று சொல்லிக்கொண்டது.

அதை அவனது கண்கள் பிரதிபலிக்க அன்று அவன் பதுங்கியது தன்னை மொத்தமாக ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கே என்பதை இன்று புரிந்துகொண்டார் ருத்ராஜி.

அபிமன்யூவோ அலட்சியப்புன்னகையுடன் “இன்னொரு முக்கியமான விசயம்! இந்தப் புது சதாசிவன் கோவில் அனுமதியில்லாம வனத்துறை நிலத்துல கட்டப்பட்டதால இதை டெமாலிஷ் பண்ணுறதுக்கான ஆர்டர்லயும் நான் நேத்தே சைன் பண்ணீட்டேன்” என்று கூற மொத்தக் கூட்டமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

கோவிலை இடிக்கப்போகிறானா? இது மதவுணர்வுகளைப் புண்படுத்தும் காரியமல்லவா? இதை வைத்து ஒரு பிரச்சனையை உருவாக்க ருத்ராஜிக்கு அவனே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறானே என இந்த நேரலையை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த தயானந்த் திகைத்தார்.

ஆனால் இவன் மதியூகி என்பதால் கட்டாயம் இதற்கும் ஒரு தெளிவான பதிலை வைத்திருப்பான் என்று தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தார் அவர்.

அபிமன்யூ “நேத்து அறநிலையத்துறை சார்பா தமிழ்நாட்டுல இருக்குற ஆகமங்களை படிச்சு தேர்ந்த சிறந்த சிவாச்சாரியார்கள் கிட்ட ஆலோசனை கேட்டப்ப புது சதாசிவன் கோவில் சைவ ஆகம விதிகள் படி கட்டப்படலனு சொன்னாங்க… இதோட விளக்கம் அறநிலையத்துறை சார்பா இன்னும் கொஞ்சநேரத்துல மக்கள் கிட்ட வந்து சேரும்… அதனால ஆகம விதிய மதிக்காம கட்டுன இந்தக் கோவில்ல இன்னும் சதாசிவனும் மற்ற கடவுள்களும் ஸ்தாபிக்கப்படலங்கிறதால இதை இடிக்கிறதால யாரோட மதவுணர்வும் புண்படாதுனு நான் நம்புறேன்…

முக்தி மேல சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டா மொத்த ஃபவுண்டேசனும் அரசுடமையாக்கப்படுங்கிறதுல உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்… இங்க அனுமதி இல்லாம வனத்துறை நிலத்தை ஆக்கிரமிச்சு கட்டப்பட்ட கட்டுமானங்கள் எல்லாமே இடிக்கப்படும்… பழைய சதாசிவன் ஆதிசக்தி கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குக் கீழ கொண்டு வரப்பட்டு மக்கள் வழிப்பாட்டுக்கு ஓப்பன் பண்ணிடுவோம்… அடுத்து இங்க இருக்குற முக்தி வித்தியாலயாவோட மாணவர்கள் பத்தியும் அரசாங்கம் யோசிக்கும்… இதுக்கான விசாரணை எல்லாம் இன்னைல இருந்து முழுவீச்சுல ஆரம்பிக்கும்… அதுக்கான முழு அதிகாரத்தையும் நான் விசாரணை குழுவுக்கு குடுக்குறேன்… இது சம்பந்தமா முக்தியோட முக்கிய பிரமுகர்கள் எல்லாருமே விசாரணை வளையத்துக்குள்ள கொண்டு வரப்படுவாங்க… மற்ற மாநிலங்கள்ல இருக்குற கிளைகளை விசாரிக்க சி.பி.ஐ கிட்ட தமிழ்நாடு அரசு ஃபைல் பண்ணுங்கிறதையும் நான் இங்க தெரிவிச்சுக்க விரும்புறேன்… என்னை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு எது சரியோ அதை மட்டும் தான் நான் இதுவரைக்கும் செஞ்சேன்… இனியும் செய்வேன்… இது வரைக்கும் பொறுமையா என்னோட ஸ்பீச்சை கேட்டவங்க அதே பொறுமையோட காவல்துறைக்கு வேலை வைக்காம கலைஞ்சு போனா அது எல்லாருக்கும் நல்லது… நன்றி!” என்று இருகரம் கூப்பி வணங்கிவிட்டு கருப்பு பூனை படை சூழ அஸ்வினுடன் சிவப்பு கம்பளத்தின் மீதேறி ருத்ராஜியை அலட்சியப்படுத்திவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினான்.

அவன் செல்வதைக் கண்ட சர்வசிவானந்தா அதிருப்தியுடன் எழுந்தவர் மேடையை விட்டு அகல ருத்ராஜியின் நிலை பரிதாபமானது. இத்தனை ஆண்டுகளில் முக்தி என்ற மாபெரும் பிராண்டை உருவாக்கி அதன் பின்னே பெரும் கூட்டத்தைச் சேர்த்து வைத்த அந்த மனிதர் இன்று என்ன செய்வது என்றே புரியாத நிலையில் நின்றார்! அவரருகே மகனின் இறப்புக்கு முழுவதுமாய் நியாயம் கிடைத்த மகிழ்ச்சியை முகத்தில் காட்டாது நின்றார் ரவீந்திரன்.

அதன் பின்னர் காவல்துறையினர் முக்தி ஃபவுண்டேசனில் குவிக்கப்பட பக்தர்களை அவர்கள் வந்த வாகனங்களில் பத்திரமாக திருப்பி அனுப்பிவைக்கும் வேலை ஆரம்பித்தது.

காவல்துறையின் கட்டுப்பாட்டில் முக்தியின் முக்கிய பிரமுகர்களும் தன்னார்வலர்களும் அடக்கி வாசிக்க விசாரணை இனிதே ஆரம்பித்தது. கூடவே சர்வசிவானந்தா அன்றே அமெரிக்கா கிளம்பத் தயாராக ருத்ராஜி மீண்டும் தன் சகாக்களுடன் கான்பரன்சை ஆரம்பித்தார். எப்படியாவது இந்தத் தலைவலியிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளும் அவசரம் அவருக்கு!

மேகமலையில் நடந்த அனைத்தையும் நேரலையில் கண்ட நடுநிலைவாதிகள் முதலமைச்சரின் துணிகரமான இச்செயலைப் பாராட்ட ஸ்ராவணிக்கோ தன் கண்களையும் காதுகளையும் கூட நம்ப முடியவில்லை.

உடனே அபிமன்யூவை அழைத்தவள் பேசாமலிருக்கவும் அவனே பேச்சைத் துவங்கினான்.

“இப்போ ரிப்போர்ட்டர் மேடம்கு சந்தோசத்துல வார்த்தையே வரலயோ? ஏன் இத்தனை நாள் சைலண்டா இருக்கேன்னு கேட்டுட்டே இருந்தல்ல… இப்போ புரிஞ்சுதா என் அமைதியோட அர்த்தம்?” அமர்த்தலாக கேட்டவனை எண்ணி அவளுக்கு இப்போது பெருமிதமாக இருந்தது.

“அமைதிக்கு அர்த்தமும் புரிஞ்சுது… இதுக்குப் பின்னாடி வேற ஏதோ ஸ்ட்ராங்கான ரீசன் இருக்குனும் புரிஞ்சுது… டெல் மீ தி ரியல் ரீசன் பிஹைண்ட் யுவர் ஆக்சன்ஸ்” என்று அபிமன்யூவை அறிந்த மனைவியாக ஸ்ராவணி வினவ

“சொல்லாம விடமாட்டியே… சரி! உனக்கும் எனக்கும் இடைல இது வரைக்கும் சீக்ரேட் எதுவுமில்லை… இருக்குற ஒரே ஒரு சீக்ரேட்டையும் சொல்லிடுறேன்… முக்தி ஃபவுண்டேசனோட இம்ப்பார்டெண்ட் பெர்சனோட மகன் இறந்த கேஸ்ல ருத்ராஜிக்கும் எனக்கும் ஒரு ஆர்கியூமெண்ட் நடந்துச்சு… அதோட முடிவுல அவர் எனக்கு செக் வைக்கிற மாதிரி பேசுனதை என்னால பொறுத்துக்க முடியல… அபிமன்யூவையே மிரட்டுற அளவுக்குப் போனவரை சும்மா விட முடியுமா? அதோட விளைவு இன்னைக்கு அவரோட மொத்த சாம்ராஜ்ஜியத்தையும் புரட்டிப் போட்டுட்டு நான் நிம்மதியா சென்னைக்குக் கிளம்பிட்டிருக்கேன் மை டியர் ஒய்ப்” என்றான் அபிமன்யூ.

ஸ்ராவணிக்கு இப்போது தான் முழு விவரமும் புரிந்தது. எது எப்படியோ முக்தி ஃபவுண்டேசன் பற்றிய யோசனை அவளுக்கு அகன்றது. இனி தங்களது செய்தி சேனலை யாரும் தேவையின்றி அபவாதமாகப் பேசமாட்டார்கள் என்ற நிம்மதி அவளுக்கு.

அதே நேரம் லோட்டஸ் ரெசிடென்சியில் இதை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ஹேமலதா ஜானகியிடம் அவரது மருமகள் தீபாவைப் பற்றி கூறி வருந்திக் கொண்டிருந்தாள்.

“இந்த விசயமெல்லாம் முன்னாடியே வெளிய வந்திருந்துச்சுனா தீபாவோட வாழ்க்கை நல்லபடியா மாறிருக்கும்ல ஆன்ட்டி?”

“நம்ம யோசிச்சு என்ன ஆகப்போகுதும்மா? கடவுள் என்னவோ நினைச்சுட்டார் போல… என் மருமக வாழ்க்கைல ஒரு வெளிச்சம் வராதானு ஏங்கி ஏங்கியே நானும் போய் சேர்ந்துடுவேன் போல”

அப்பெண்மணியின் வருத்தம் நெஞ்சை சுட ஹேமலதா அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

எப்படியோ முக்திக்கு இனி முற்றுப்புள்ளி தான் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்க அன்று மாலை தீபாவின் எண்ணுக்கு முன்பின் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

குழப்பத்துடன் அவள் எடுத்துப் பேசவும் மறுமுனை தடுமாறியது.  பின்னர் நிதானமாக “நான் முகுந்த் பேசுறேன்” என்றது.

அதைக் கேட்டதும் தீபாவின் உலகம் ஒரு கணம் சுழல மறக்க கண்களோ கண்ணீரை மாலையாகப் பொழியத் துவங்கியது.

“முகுந்த்… நீங்களா? நீங்க எப்பிடி…” என்று தடுமாறியவள் அழுகையில் திக்கித் திணற

“நான் தான் தீபா… இத்தனை நாள் யாருக்கும் நான் உயிரோட இருக்குறத சொல்லல… இன்னைக்கு எனக்கு எந்தப் பயமும் இல்ல… நான் சென்னைக்கு வர்றேன் தீபா… இனிமே உன்னையும் என்னையும் யாரும் பிரிக்க முடியாது… அந்த முக்தியோட வரலாறு இனிமே குளோஸ் ஆயிடும் தீபா… அப்பாவ மட்டும் அவங்க கிட்ட இருந்து மீட்டுட்டா போதும்” என்றவன் தான் என எண்ணி புனே அலுவலகத்தில் திருட வந்தவர்கள் காவலாளியைக் கொலை செய்து விட்டதாக கூறினான்.

முக்தியின் புனே அலுவலகத்தில் தன்னை தங்க வைக்க முயன்றவர்களுக்கும் இந்தத் திருட்டில் பங்கு இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு இருந்ததால் அங்கே உண்மையில் நடந்த நிகழ்வுகள் முகுந்திற்கு தெரியவில்லை. அதை அறிந்தவர் அவனது தந்தை மட்டுமே!

அவர் மேகமலையில் முக்தி ஃபவுண்டேசனின் அலுவலகர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டு விழிப்பதையும் ருத்ராஜி சட்டப்படி தனக்கான பாதுகாப்பை தேடுவதையும் உள்ளூர பரவிய நிம்மதியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

மொத்தத்தில் அன்று ஊடகத்தில் விவாத கருப்பொருளாய் அபிமன்யூவின் அதிரடியில் கலங்கிப்போன முக்தி ஃபவுண்டேசன் மாறிப்போனது. அதன் உண்மை ரூபத்தை வெளிக்கொணர முயன்ற ஜஸ்டிஷ் டுடேவினர் ஆசுவாசப் பெருமூச்சுடன் அலுவலை முடித்துக் கொண்டு கிளம்ப அன்று யசோதராவைத் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்திருந்தான் சித்தார்த்.

காரணம் கேட்டதற்கு பிரபல ஹோட்டலில் நைட் டின்னர் என்ற ஒற்றை வார்த்தை சொல்லப்பட அவளும் நீண்டநாள் கழித்து அவனுடனான தனிமையை விரும்பி கிளம்பினாள். மொத்தத்தில் அனைத்து குழப்பங்களும் அகன்று அவர்களின் வாழ்க்கை பழையபடி இனிமையாய் நகரத் துவங்கியது.

மழை வரும்☔☔☔