☔ மழை 45 ☔

சங்ககால மன்னராட்சியில் சாதாரண குடிமகன் மன்னராக முடியாது. மன்னரின் வம்சாவழியினர் மட்டுமே அரசபதவிக்கு உரியவர்கள். இருப்பினும் அரசநெறிகளைப் பின்பற்றினால் மட்டுமே அவன் அரசனாக மக்கள் மத்தியில் மதிக்கப்படுவான். நெறி தவறி நடந்தால் மக்கள் ஆதரவை இழந்த ஒரு கொடுங்கோலனாக காலந்தள்ளலாமேயன்றி ஒரு மன்னராக செல்வாக்குடன் வாழ முடியாது.

ஜஸ்டிஷ் டுடேவின் ரியாலிட்டி செக் ஷோவில் முக்தி ஃபவுண்டேசனைப் பற்றிய முதல் தொகுப்பான ‘முக்தி ஃபவுண்டேசனின் வரிஏய்ப்பு தந்திரங்கள்’ வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. அதன் விளைவு அனைத்து ஊடகங்களின் கவனமும் முக்தி ஃபவுண்டேசனையும் ருத்ராஜியையும் சுற்றியே குவிந்தது.

ஜஸ்டிஷ் டுடேவினர் எதிர்பார்த்தது போல இந்த நிகழ்ச்சியைப் பற்றி நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகள் சமூக ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்தது. முக்திக்கு ஆதரவாக ஒரு சாரார் பேச மற்றொரு சாராரோ ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி முக்தி ஃபவுண்டேசனை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

எப்போதும் முக்திக்கு ஆதரவாக நிற்கும் பிரபலங்களும், உயர்மட்டத்தினரும் இம்மாதிரியான வரி ஏய்ப்புகள் நிறைய இடங்களில் சாதாரணம் தான் என்று அப்போதும் முக்திக்காக பரிந்து பேசி தங்களின் அபிமானத்தை நிரூபித்தனர்.

எல்லாம் இரண்டாம் பகுதியான ‘அனுமதி பெறாத கட்டுமானங்களும் முக்தி ஃபவுண்டேசனும்’ ஒளிபரப்பாகும் வரை தான். அப்பகுதி ஒளிபரப்பானதும் முக்தியின் ஆதரவாளர்களில் சிலரே அந்நிறுவனத்துக்கு எதிராக தங்களின் அதிருப்தியை முணுமுணுப்பாக வெளிப்படுத்த துவங்கினர்.

மூன்றாவது பகுதியான ‘மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமமும் (Environment Impact Assessment Authority) முக்தி நிறுவனமும்’ ஒளிபரப்பானதும் கொஞ்சம் நஞ்சமிருந்த சத்தமும் அடங்கியது. ஏனெனில் அதன் முடிவில் வெளியிடப்பட்ட ஆதாரங்கள் முக்தியின் ஆதரவாளர்களை தற்காலிகமாக அமைதியாக்கி விட்டன. அதிலும் சர்வருத்ரானந்தாவின் போன் ஆடியோக்கள் சாமானியர்களையும் சென்றடைய இனியும் முக்திக்கு ஆதரவாகப் பேசினால் தங்கள் மரியாதை கேள்விக்குறியாகிவிடும் என பிரபலங்கள் அமைதியாகி விட்டனர்.

அந்த ரியாலிட்டி செக் ஷோவானது எந்தளவுக்கு முக்தி ஃபவுண்டேசனையும் ருத்ராஜியையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதோ அதே போல அரசாங்கம் முக்தி ஃபவுண்டேசனுக்கு அளிக்கும் மறைமுக ஆதரவைப் பற்றியும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட ஆளுங்கட்சி தரப்பு அதிருப்தியில் கொதிக்கத் துவங்கியது.

அதன் விளைவு அமைச்சர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் பேட்டி கொடுக்கிறேன் பேர்வழியாக தங்களுக்கு முக்தி ஃபவுண்டேசன் மீது திடீரென உதயமான சந்தேகத்தை ஊடகங்களிடம் உறுதிபடுத்தினர்.

இத்தனைக்கு பிறகும் முதலமைச்சரின் தரப்பிலிருந்து முதல்வரின் மேகமலை பயணம் ரத்தாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது தான் ஆச்சரியம்!

அதே நேரம் மேகமலை ஆசிரமம் இந்த ரியாலிட்டி செக் ஷோவால் பரபரப்புக்கு இடமாகியது. சர்வருத்ரானந்தா தங்கள் வசமிருந்த ஆவணங்களின் புகைப்படங்கள் ஊடகம் வசம் சென்றது எவ்வாறு என்று குழம்பித் திகைத்தவர் முக்தியின் முக்கிய பிரமுகர்களை வைத்து கான்பரன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தார்.

முக்தியின் சட்ட ஆலோசகர், நிர்வாகப்பிரிவை கவனிக்கும் ரவீந்திரன், தன்னார்வலர்களின் தலைமை அதிகாரி, முக்தி ஃபவுண்டேசனின் ட்ரஸ்டிகள், சமூக ஊடக பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்ட அந்த கான்பரன்சில் ருத்ராஜியின் கோபமான குரலே அதிகம் கேட்டது எனலாம்.

காரசாரமான கேள்விகள் அவரிடமிருந்து வர எதற்கும் அவரது சகாக்களிடம் இருந்து பதில் வரவில்லை. பதில் தெரிந்த ஒரே நபரான ரவீந்திரனோ யாருக்கோ வந்த வாழ்வு என்பது போல அனைத்தையும் வேடிக்கை பார்த்தாரேயன்றி ருத்ராஜியின் பதற்றத்தைப் போக்க சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை.

இறுதியாக தனது ஆலோசனையாக அவர் வழங்கியது என்னவோ இனி நடக்கவிருப்பதை கவனிப்போம் என்பதே!

“முடிஞ்சு போனதை நினைச்சு குழம்புனா நேரம் தான் வேஸ்ட் ஆகும் ருத்ராஜி… இப்போ நம்ம பிரச்சனைய ஹேண்டில் பண்ணியாகணும்… முதல்ல அந்த நியூஸ் சேனல் முக்தி மேல சொன்ன அலிகேசனுக்கு நீங்க மறுப்பு தெரிவிச்சு அறிக்கை வெளியிடணும்… அது வீடியோவா இருக்கலாம்… இல்லனா நியூஸ் பேப்பர்ல ஃப்ரண்ட் பேஜ் ஆட் மாதிரி கூட குடுக்கலாம்… எப்பிடியோ நம்ம மேல சொன்ன குற்றம் எதுவும் உண்மையில்லனு நம்ம தரப்புல இருந்து ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டா தான் முக்தியோட ஃபாலோயர்சுக்கு உங்க மேல இருக்குற நம்பிக்கை உடையாம இருக்கும்”

ருத்ராஜி யோசனையுடன் தாடையைத் தடவியவர் ரவீந்திரனின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்.

“குட் ரவீந்திரன்… நீங்க சொன்ன மாதிரி தமிழ் அண்ட் இங்கிலீஸ் ரெண்டு லாங்க்வேஜ்லயும் வர்ற ஃபேமஸ் நியூஸ் பேப்பர்ஸ்ல டுமாரோ மானிங் முக்தியோட லெட்டர் பேடோட என்னோட மறுப்பு வெளியாகும்… அப்புறம் நம்ம சோஷியல் மீடியா பேஜ்லயும் அதை போஸ்ட் பண்ணிடணும்… இந்த புரோகிராமால சதாசிவன் கோவில் திறப்பு எந்த விதத்துலயும் பாதிக்கப்படக் கூடாது” என்றார் ருத்ராஜி காரியத்தில் கண்ணாக.

அந்தக் கோவில் திறப்புக்கென ஆன்லைன் பதிவு வழியாக நுழைவு கட்டணம் வசூலித்தாயிற்று! தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து பக்தர்கள் வரும் வண்ணம் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. மாநிலத்தின் முதல்வரில் ஆரம்பித்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வரை சிறப்பு விருந்தினர்களாக குறிப்பிட்டு விழா அழைப்பிதழை சமூக ஊடகங்களில் வெளியிட வேறு செய்தாயிற்று.

அத்தோடு பிரபல பாடகர்களில் ஆரம்பித்து நடனக்கலைஞர்கள் வரை அனைவரின் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுமென நிகழ்ச்சி நிரல் வேறு வெளியிடப்பட்டுவிட்டது. கூடவே மொழி பாகுபாடின்றி இந்தியாவின் அனைத்து திரைத்துறை பிரபலங்களும் முன்பதிவு செய்து விட்டதும் ருத்ராஜியின் நினைவை விட்டு அகலுமா என்ன!

இவ்வளவுக்குப் பிறகும் கோவில் திறப்புவிழா தடைபடுமாயின் அதற்கென அமெரிக்காவிலிருந்து சிறப்பு விமானத்தில் வருகை தரும் அவரது குருவும் முக்தி ஃபவுண்டேசனின் ஸ்தாபகருமான சர்வசிவானந்தா தன்னை பற்றி என்ன நினைப்பார்?

அத்தோடு இம்மாதிரி புகார்கள் முக்தி ஃபவுண்டேசன் மீது தொடுக்கப்படுவது ஒன்றும் புதிதில்லையே! தங்களது சட்டவியல் நிபுணர்களின் துணையோடு ஜஸ்டிஷ் டுடே மீது மானநஷ்ட வழக்கு போட்டால் விசயம் முடிந்தது.

கூடவே தனது தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டது தொடர்பாக காவல்துறையில் புகாரளித்துவிட்டால் பிரச்சனை அவர்களுக்குத் தானே!

இம்மாதிரி ஆயிரம் ஆயிரம் எண்ணங்களும் மூளையில் அணிவகுப்பு நடத்த சர்வருத்ரானந்தா பிரச்சனையிலிருந்து சுலபமாக வெளிவந்துவிடலாம் என மனப்பால் குடிக்க ஆரம்பித்தார்.

அதே நேரம் ரவீந்திரனோ சர்வருத்ரானந்தாவின் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஒரு வித திருப்தியுடன் வேடிக்கை பார்த்தார் எனலாம். ருத்ராஜி நினைப்பது போல இம்முறை பிரச்சனை அவ்வளவு எளிதில் தீரப்போவதில்லை என்பதை அறிந்தவர் ரவீந்திரன் மட்டுமே!

ருத்ராஜி சொன்னபடி பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களின் முகப்பு பக்கத்தில் முக்தியின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முக்தியின் ஐ.டி விங் முழுவீச்சில் செயல்பட்டு முகப்புத்தகம், டிவிட்டர், யூடியூப் என அனைத்து சமூக ஊடகங்களிலும் தீவிரமாய் வேலை செய்தது.

ஆனால் ஜஸ்டிஷ் டுடேவில் முக்தியைப் பற்றி தொடர்ந்து ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் முக்தி ஃபவுண்டேசனுக்கு பெரிய தலைவலியாக மாறியது.

அந்த நிகழ்ச்சியில் முதலில் பங்கேற்றதே யசோதரா தான். கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கு முன்னர் தனக்கு முக்தி ஃபவுண்டேசன் நடத்திய யோகா நிகழ்வில் ஏற்பட்ட அனுபவத்தையும் தான் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு பற்றியும் விலாவரியாகப் பேசியவள் இந்த ஸ்டிங்க் ஆபரேசனின் ஒரு பகுதியாக இருந்ததில் தனக்குப் பெருமை தான் என்று கர்வமாக உரைத்தாள்.

அவளைப் பற்றி அவதூறு பரப்ப வழியின்றி எதிரணியினர் தான் திகைத்தனர். ஏனெனில் அவளது கணவனும் பிரபல திரையுலக நட்சத்திரமுமான சித்தார்த் முக்தி ஃபவுண்டேசனின் நீண்டகால அபிமானி என்பது அனைவரும் அறிந்த உண்மை!

அவளைத் தொடர்ந்து ரகுவுடன் இந்திரஜித்தும் சாருலதாவும் கலந்துகொள்ள அதை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ருத்ராஜிக்கு உள்ளுக்குள் கொதித்தது. தனது ஆளுமைக்குட்பட்ட இடத்திற்கு வந்து ஆதாரங்களை அனாயசமாக இவர்கள் திரட்டியது தனது ஆட்களில் ஒருவருக்கு கூடவா சந்தேகத்தைக் கிளப்பியிருக்காது என்று எண்ணி எண்ணி பொருமியவர் ரவீந்திரனை அழைத்து விசாரித்தார்.

அவரோ “இவங்க மூனு பேரும் ஃப்ரெண்ட்ஸ்னு மட்டும் தான் என் கிட்ட சொன்னாங்க ருத்ராஜி… ஆனா இவ்ளோ சீப்பா ஸ்பை வேலை பாப்பாங்கனு நான் நினைச்சுக் கூட பாக்கல… நல்லதுக்குக் காலமில்ல ருத்ராஜி… இந்தப் பிரச்சனை முக்திக்கு திருஷ்டி பரிகாரம் போலனு நினைச்சுக்கோங்க… சீக்கிரமா நம்ம இதுல இருந்து வெளிய வந்துடுவோம்” என்று பேச்சை ருத்ராஜிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மாற்றிவிட்டார்.

அந்நிகழ்ச்சியை மாதவனின் இல்லத்தில் அவனுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். தனக்குத் தெரியாமல் எவ்வளவு பெரிய காரியத்தை தனது சகோதரன் செய்து முடித்திருக்கிறான் என்ற ஆச்சரியம் அவனுக்கு.

கூடவே அவனையும் சாருலதாவையும் தனது வேலைக்காக பயன்படுத்திக்கொண்ட மனைவி மீது எரிச்சல் உண்டானதும் உண்மை!

“யசோவோட வேலைக்கு இவங்க ஊறுகாவா? இவங்க மாட்டிக்காம வந்ததால பிரச்சனை இல்ல… சப்போஸ் அங்க இவங்க பண்ணுன தில்லுமுல்லு எல்லாம் ருத்ராஜிக்கு தெரிஞ்சிருந்தா என்ன ஆகிருக்கும்? இப்போ சேனல்ல வேற முகத்தைக் காட்டிட்டாங்க… இது அவங்களோட கரியரை கொஸ்டீன் மார்க் ஆக்கிடும்னு கொஞ்சம் கூட யோசிக்கலயா?”

ஆதங்கத்துடன் மாதவனிடம் பேசியவனை இடைவெட்டியது மயூரியின் குரல்.

“இப்போவும் உங்களுக்கு யசோ மேல தான் வருத்தம் வருதே தவிரே அந்த சோ கால்ட் ருத்ராஜி பண்ணுன தில்லுமுல்லு எதுவும் பெருசா தோணலல்ல சித்தார்த்”

அதை கேட்டதும் சித்தார்த் தர்மசங்கடத்துடன் அமைதியாகிவிட்டான். அந்த ரியாலிட்டி செக் ஷோ ஒளிபரப்பான தினத்திலிருந்து அவனுமே ருத்ராஜியா இப்படி என்ற ஆதங்கம் சூழ தான் வலம் வருகிறான்!

மாதவனோ “எங்களுக்கும் இது ஷாக் தான் மய்யூ… நாங்க பெருசா நினைச்சா ருத்ராஜியோட பிம்பம் எங்க கண்ணு முன்னாடியே உடைஞ்சு போனப்ப எங்களுக்கும் வருத்தமா தான் இருந்துச்சு… நாங்க நம்பி வருத்தப்படுறது இதோட ரெண்டாவது தடவை” என்று நண்பனுக்காக பரிந்து பேசினான்.

“அஹான்! இப்போவாச்சும் புத்தி வந்துச்சுனா சரி” என்று இருவருக்கும் சேர்த்து பேச்சிலேயே குட்டு வைத்தாள் மயூரி.

அவளை சித்தார்த் பரிதாபமாகப் பார்த்து விழிக்கவும் “போதும் சித்தார்த்… இப்போ முழிச்சு என்ன பிரயோஜனம்? இந்த மாதிரி சீட்டிங் பேர்வழிக்காக நீங்க யசோ கூட சண்டை போட்டது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு இப்போவாச்சும் புரியுதா? புரிஞ்சிருந்துச்சுனா இந்நேரம் நீங்க மன்னிப்பு கேட்டிருப்பீங்களே… எனக்கு யசோ மேல இருக்குற அதே அக்கறை தான் உங்க மேலயும் இருக்கு சித்தார்த்… உங்களோட ஒவ்வொரு செயல்லயும் அவ மேல இருக்குற அன்பும் காதலும் அழகா தெரியும்… அது ஒன்னு தான் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் தனித்தனி பாதையா மாறிடக்கூடாதேனு என்னை கவலைப்பட வைக்குது… இன்னும் ஒன் வீக் தான்… அம்மா அப்பா பெரியம்மா பெரியப்பா எல்லாரும் சென்னைக்கு வர்றாங்க… அப்போ நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணப்போறீங்க? என்னால இதுக்கு மேலயும் அவங்க கிட்ட பொய் சொல்ல முடியாது… ஜித்துவும் சாருவும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே முக்தில இருந்து பத்திரமா திரும்பி வந்துட்டாங்க… சோ அதை காரணம் காட்டி நீங்க அவளோட ஆர்கியூ பண்ணுறதை விட்டுட்டு எப்பிடி அவளை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறதுனு யோசிங்க… மேடி நீங்க தான் ஐடியா மன்னன் ஆச்சே… உங்க ஃப்ரெண்டுக்கு நல்லதா நாலு ஐடியா குடுங்க… ஏதாச்சும் பண்ணி பெரியம்மாவோட என்கொயரில இருந்து என்னை காப்பாத்துங்க மேடி… உங்களுக்குப் புண்ணியமா போகும்” என்று அறிவுரையில் ஆரம்பித்து கணவனிடம் வேண்டுகோள் வைப்பதில் முடித்தாள் மயூரி.

சித்தார்த் இப்போது மாதவனை நோக்க அவனோ “டேய் மூஞ்சிய அப்பிடி வைக்காதடா… உன்னை நம்பி ஐடியா குடுக்க நான் ரெடி… பட் அது ஃப்ளாப் ஆச்சுனாலோ பேக்ஃபயர் ஆச்சுனாலோ என்னை டின் கட்டமாட்டேன்னு பிராமிஸ் பண்ணு” என்றான் தனது வலதுகரத்தை விரித்து நீட்டியவாறு.

சித்தார்த் போலியாக ஆச்சரியம் காட்டி “அப்போ நீ என்னை நம்பலயா மேடி?” என்று கேட்க

“நம்புனேன்டா… எப்போ தெரியுமா? அன்னைக்கு கொட்டுற மழைல என்னை பீச் ஹவுசை விட்டு துரத்திவிட்டியே, அதுக்கு ரெண்டு நிமிசத்துக்கு முன்னாடி வரைக்கும் உன்னை நான் நம்புனேன்… ஆனா  நீ உன் பொண்டாட்டிய பாத்தா தலைகீழ மாறிடுவ… நான் குடுக்குற ஐடியாவ நீ ஃபாலோ பண்ணி, அதை பாத்து உன் சம்சாரத்துக்குக் கோவம் வந்து உன் கன்னத்துல பளார்னு ஒன்னு விட்டுச்சுனா நீ அதை அப்பிடியே எனக்குத் திருப்பிக் குடுப்ப… உனக்கு ஐடியாவும் குடுத்து அடியும் வாங்கணும்னு எனக்கென்ன தலையெழுத்தா?” என்று முறுக்கி பழைய பகையைத் தீர்த்துக் கொண்டான் மாதவன்.

பின்னர் மயூரியின் கொஞ்சலும் சித்தார்த்தின் கெஞ்சலும் சேர்ந்து அவன் மனதை மாற்றி மூளைக்கு வேலை கொடுக்கவே அதன் பின்னர் ஐடியாக்கள் அருவி போல கொட்டத் தொடங்கியது.

அதில் தனக்கேற்றதை தேர்ந்தெடுத்த சித்தார்த் எப்பாடுப்பட்டேனும் யசோதராவைத் தனது வாழ்க்கைக்குள் மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டான்.

அதே நேரம் ஜஸ்டிஷ் டுடேவில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கிளம்பவிருந்த இந்திரஜித்தையும் சாருலதாவையும் விஷ்ணுபிரகாஷ் நன்றி கூறி கஃபடேரியாவுக்கு யசோதராவுடன் அனுப்பி வைத்திருந்தான்.

கூடவே ரகுவும் அனுராதாவும் சேர்ந்து கொள்ள அவர்களது கலாட்டவில் கஃபடேரியா களை கட்டியது.

“காபி சூப்பர்கா” என்றபடி யசோதராவிடம் இதழாலும் தனக்கு எதிரே அமர்ந்திருந்த இந்திரஜித்திடம் விழிகளாலும் பேசிக்கொண்டிருந்தாள் சாருலதா.

கூடவே “ப்ரபோசலுக்கு நான் ஓகே சொல்லுறதுக்கு முன்னாடி என்னை பாக்கமாட்டேன்னு ஒருத்தன் சபதம் போட்டான்… அந்த மானஸ்தனை நீ எங்கயாச்சும் பாத்தியா ஜித்து?” என்று தாடையில் கைவைத்து யோசிப்பது போன்ற எமோஜியுடன் வாட்சப் மெசேஜ் ஒன்று அவனுக்குப் பறந்தது.

டொய்ங் என்ற சத்தத்துடன் வந்த செய்தியை வாசித்தவனின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு மலர அவனது விரல்களும் தட்டச்சு செய்ய ஆரம்பித்தது.

“அவன் சபதத்தை நீ சரியா புரிஞ்சிக்கலடி… நீ ஓகே சொல்லுற டேட்ல தான் உன்னை பாப்பேன்னு ஒரு அர்த்தம் இருந்தா, அவன் உன்னைப் பாக்குற டேட்ல நீ ஓகே சொல்லணும்னு இன்னொரு அர்த்தமும் இருக்கு அந்தச் சபதத்துக்கு… அக்கார்டிங் டு தட் சபதம் நீ என்னைப் பாத்துட்ட… சோ இப்போ உன்னோட டர்ன்… கம் ஆன், குயிக்கா ஐ லவ் யூ ஜித்துனு அழகா முட்டி போட்டு ரோஸ் குடுத்து ப்ரபோஸ் பண்ணு பாப்போம்” என்ற சொற்றொடர்களுடன் கருப்பு கண்ணாடி போட்ட எமோஜியை அனுப்பி கெத்து காட்டினான் இந்திரஜித்.

சாருலதா அதை வாசித்துவிட்டு அதிர்ச்சியில் கண்களை விரிக்கும் எமோஜியை அனுப்ப அவனோ பதிலுக்கு உதட்டைக் குவித்து முத்தமிடும் எமோஜியை அனுப்பி அவளை வெட்கி சிரிக்க வைத்தான்.

இருவரது மௌன சம்பாஷணையையும் விழிகளின் பரிபாஷையையும் இரகசியமாக கண்காணித்துவிட்ட யசோதரா “ஓ! கதை அப்பிடி போகுதா?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

கூடவே இருவரும் எதிர்பாராவண்ணம் மொபைலை பிடுங்கி “அண்ணி!” “அக்கா” என்று முறையே இந்திரஜித்தையும் சாருலதாவையும் ஒருங்கே அதிர்ச்சியுற வைத்தாள் அவள்.

இருவரும் அப்பாவிகளைப் போல உதட்டைப் பிதுக்க ரகு அவர்களுக்காக வக்காலத்து வாங்கினான்.

“பாவம் சின்னப்புள்ளைங்க… அறியாத வயசுல  தெரியாத்தனமா நம்ம முன்னாடியே கடலை போட்டுடுச்சுங்க… பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுரு யசோ… உசுரை பணயமா வச்சு நமக்காக போட்டோலாம் பிடிச்சுக் குடுத்த பிள்ளை அது… கொஞ்சம் கருணை காட்டும்மா”

“ம்ம்… ரகு சொன்னதுக்காக உங்க மொபைலை திருப்பிக் குடுக்குறேன்… ஆனா ஒன்னு, உங்களுக்குள்ள என்ன ஓடுதுனு எனக்கு ஒரு கெஸ் இருக்கு… அதை இப்போ சொல்ல மாட்டேன்… எல்லாம் ஓகே ஆன அப்புறமா சொல்லுவேன்… நான் கரெக்டா கெஸ் பண்ணிருந்தா எனக்கு என்ன கிப்ட் குடுப்பீங்க ரெண்டு பேரும்?” என்று அவர்களிடம் பேரம் பேச ஆரம்பித்தாள் யசோதரா.

“உங்களையும் சர்மியையும் வச்சு அழகா மாம் அண்ட் டாட்டர் போட்டோஷூட் ஃப்ரீயா பண்ணி தர்றேன்கா… ப்ராமிஸ்” என்று கழுத்தைத் தொட்டு சத்தியம் செய்தாள் சாருலதா.

அடுத்து இந்திரஜித்தை யசோதரா பார்க்கவும் “நீங்க ரொம்ப நாளா ஐபோனுக்கு மாறணும்னு சொல்லிட்டிருந்தங்கள்ல, உங்களோட கெஸ் மட்டும் கரெக்டா இருந்தா அந்த ஐபோனை நான் வாங்கித் தர்றேன் அண்ணி… காட் ப்ராமிஸ்” என்று தன் பங்குக்கு அவனும் சத்தியம் செய்ய இருவரது மொபைல்களையும் அவர்கள் வசம் ஒப்படைத்தாள் யசோதரா.

மொபைல் கைக்கு வந்ததும் இருவரும் ஆசுவாசப்பெருமூச்சு விட அதைப் பார்த்து யசோதரா நகைக்க அவர்கள் அனைவருக்கும் அந்த தினம் பரபரப்புடன் ஆரம்பித்தாலும் அழகான தருணங்களுடன் நகர்ந்தது.

யசோதராவின் மனதில் இனியாவது சித்தார்த் முக்தி ஃபவுண்டேசன், ருத்ராஜி போன்ற மாயைகளிலிருந்து விடுபடுவான் என்ற நிம்மதி பனிமூட்டம் போல இதமாகப் பரவியது. அதன் பின்னர் என்ன என்ற கேள்வி அவளுள் எழ அவளது மனசாட்சி முந்திரிக்கொட்டைத்தனமாக அக்கேள்விக்குப் பதிலளித்தது.

“நெக்ஸ்ட் என்ன? டிவோர்ஸ் கேஸை வாபஸ் வாங்க வேண்டியது தான்… இனியும் பிடிவாதம் பிடிச்சேனா உன்னை நானே உதைப்பேன் யசோ”

மிரட்டலுடன் வந்த பதிலில் யசோதரா சிரித்துக்கொண்டாலும் ஏதோ ஒரு வித தயக்கம் மட்டும் தீராத்தொல்லையாய் இன்னும் அவளுக்குள் உழன்று கொண்டிருந்தது. அந்தத் தயக்கத்தை உடைக்குமா சித்தார்த்தின் காதல்?

மழை வரும்☔☔☔