☔ மழை 4 ☔
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
“மனிதர்கள் தமது அனுபவங்களைக் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் ஒலிகளை தான் நாம் மொழி என்கிறோம். அதே போல தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்படும் மற்றொரு ஊடகம் தான் புகைப்படம். எப்படி மொழிக்கென தனி இலக்கணம் உள்ளதோ அதே போல புகைப்படக்கலைக்கும் தனியே இலக்கணம் உள்ளது. இன்று புகைப்படக்கலை ஒரு சிறப்புக்கலையாக வளர்ச்சி பெற்றுள்ளது. வாழ்வில் நாம் சந்திக்கும் முக்கிய தருணங்களை ஆவணப்படுத்துவதில் புகைப்படங்களின் பங்கு அளப்பரியது”
“கொஞ்சம் ஆடாம இரேன் மய்யூ… இப்போ முடிஞ்சிடும்” என்றபடி மயூரியின் புருவங்களைத் திருத்திக்கொண்டிருந்தாள் ஹேமலதா. அவளது வானிட்டி அறைக்குள் வராமல் ஹால் சோபாவில் அமர்ந்து உருளைக்கிழங்கு சிப்சை கொறித்தபடியே யசோதராவுடன் சேர்ந்து அமேசான் ப்ரைமில் மூழ்கியிருந்தாள் சாருலதா.
திரையில் மாறனும் பொம்மியும் வசனம் பேசிக்கொண்டிருக்க “வாவ்! லைப் பார்ட்னர்னு ஒருத்தன் வந்தா மாறன் மாதிரி வரணும்” என்று சிலாகித்தாள் சாருலதா.
யசோதரா அசுவாரசியத்துடன் சிப்சை வாய்க்குள் தள்ளியவள் “ஹூம்! சினிமால இதெல்லாம் நடக்கும்… ஆனா ரியாலிட்டில சான்சே இல்ல… மென் ஆர் ஆல்வேய்ஸ் மென்… முதல்ல ஆமா ஆமானு தலையாட்டிட்டு அப்புறம் நீ அதை பண்ணாத இதை பண்ணாதனு கன்ட்ரோல் பண்ணுறதுல ஆம்பளைங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது… ஆனா அதுக்கு அவங்க வைக்குற பேர் அக்கறை… நம்மளை கண்ட்ரோல் பண்ணி இவங்க அக்கறை காட்டலனு யார் அழுதாங்களாம்?” என்று கேட்டுவிட்டு உதட்டை அலட்சியமாகச் சுழித்தாள்.
அதே நேரம் புருவம் திருத்தும் வேலை முடிந்து ஹேமலதாவும் மயூரியும் ஹாலுக்கு வர அவர்களின் காதில் யசோதராவின் பேச்சு விழுந்தது.
“என்னடி இன்னுமா உனக்குக் கோவம் தீரல?” என்றபடி ஹேமலதா யசோதராவின் சிப்சில் பங்குக்கு வர வேகமாக சிப்ஸ் பாக்கெட்டை ஒளித்த யசோதரா “என் சிப்ஸ் என் உரிமை… வேணும்னா கிச்சன்ல இன்னொரு பாக்கெட் இருக்கு… அதை உடைச்சு சாப்பிடு” என்றாள்.
இப்போது தான் முதிர்ந்த பெண்ணாய் தத்துவம் பேசினாள்; அடுத்த நொடியே சிப்ஸ் பாக்கெட்டுக்காக சண்டையிடுகிறாள். இவளைத் தாங்கள் புரிந்துகொண்ட அளவுக்குச் சித்தார்த் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்று ஒரே நேரத்தில் யோசித்தனர் மயூரியும் ஹேமலதாவும்.
“சிப்சை விடு… சித்துவ பத்தி பேசுவோம்… அவர் கால் பண்ணுனாரோ? எப்போ அவங்க எல்லாரும் திரும்பி வருவாங்களாம்? கௌதம் போனை எடுக்கவே மாட்றார் யசோ”
கடைசி வார்த்தையில் அவளது கவலையைக் கொட்டிக் கேட்டாள் ஹேமலதா.
யசோதராவோ அலட்சியமாகத் தோளைக் குலுக்கிவிட்டு “ஹூ நோஸ்? நான் அவன் கிட்ட பேசி ஒன் வீக் ஆகுது… என் கூட சண்டை போட்டுட்டுப் போனான்ல… எனக்குத் தெரிஞ்சு இந்தத் தடவை அவன் சாமியார் ஆகுறது கன்ஃபார்ம்” என்றாள் கடுப்புடன்.
“என்னடி சொல்லுற?” இம்முறை ஹேமலதாவும் மயூரியும் ஒரே நேரத்தில் அதிர்ந்தனர். ஏனெனில் சித்தார்த்துடன் சென்றவர்கள் அவர்களது வருங்காலம் அல்லவா!
“யசோக்கா போற போக்குல அவங்க ரெண்டு பேர் வாழ்க்கைலயும் கொஸ்டீன் மார்க் போடாதிங்க… பாவம் அவங்க ஷாக்ல கண்ணை கூட மூடல” நமட்டுச்சிரிப்புடன் கூறிவிட்டு யசோதராவுக்கு ஹைஃபை கொடுத்தாள் சாருலதா.
யசோதரா தோழிகளைப் பார்த்து சத்தமாக நகைத்தவள் “ஹேய் ஜஸ்ட் நான் விளையாட்டுக்குச் சொன்னேன்டி… உங்க ஆளுங்க யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராது… ஆனா அந்தச் சித்து சாமியார் ஆனாலும் இல்ல ஆசாமியா சுத்துனாலும் ஐ டோண்ட் கேர்” என்றவள் வெளியே நந்தனின் உற்சாகக்கூச்சலுடன் சாந்தநாயகியின் குரலும் கேட்கவும்
“ஆன்ட்டி வந்துட்டாங்க போல… இன்னைக்காச்சும் அந்த ஜோசியர் நல்ல தேதியா குறிச்சுக் குடுத்திருப்பாரா?” என்றபடி வாயிலை நோக்கினாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
சாந்தநாயகி நந்தனுடன் உள்ளே வந்தவர் “நாலு பேரும் இங்க தான் இருக்கீங்களா? நல்லதா போச்சு” என்ற பீடிகையுடன் சோபாவில் சாய்ந்தார்.
நந்தன் ஓடிவந்து சிப்சுக்காக வாயை ஆவென்று திறக்க சாருலதா அவனது வாயில் சிப்சைத் திணித்தபடி அவனை மடியில் அமர்த்திக்கொண்டாள்.
தனது சிப்ஸ் பாக்கெட்டை பெரியமனதுடன் அவனுக்கு நீட்ட “தேங்க்ஸ் சித்தி” என்றபடி சாப்பிட ஆரம்பித்தான்.
மயூரி சாந்தநாயகியிடம் தண்ணீர் டம்ளரை நீட்டியவள் திருமண தேதி குறித்தாயிற்றா என வினவ சாந்தநாயகி தண்ணீர் அருந்திவிட்டு நிம்மதியுடன்
“அடுத்த மாசம் பதினஞ்சுல கல்யாணத்தை வச்சுக்கலாம்னு ஜோசியர் சொல்லிட்டார்மா… கோயில்ல வச்சு சிம்பிளா முடிச்சிடலாமானு யோசிக்கேன்” என்றார் ஹேமலதாவைப் பார்த்து.
“சிம்பிளாவே வச்சுக்கலாம் ஆன்ட்டி… எதுக்கு வீண்செலவு?” என்றாள் ஹேமலதா.
இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம் மாறி அனைவரும் தீவிரமாகத் திருமணம் குறித்து உரையாட ஆரம்பித்தனர். சாந்தநாயகி நீண்டநாட்களுக்குப் பின்னர் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவரது கண்கள் ஆதுரத்துடன் நந்தனையும் ஹேமலதாவையும் மாறி மாறி நோக்கியது.
இனி மகனது வாழ்வின் வெற்றிடம் இந்த அருமையான பெண்ணால் நிரம்பிவிடும். பேரனுக்கு அன்னையும் கிடைத்துவிடுவாள். அதேநேரம் ஹேமலதாவின் முகத்தில் இப்போது இருக்கும் சிரிப்பும் பூரிப்பும் என்றும் மங்காது பார்த்துக்கொள்ளும்படி கடவுளிடம் சிறப்பு வேண்டுதல் வைத்தார்.
அன்றைய தினம் முழுவதும் திருமணப்பேச்சில் கழிய மாலை நேரம் யசோதராவைக் காண வந்தான் ரகு. கூடவே அனுராதாவும் வந்திருந்தாள். அவர்கள் ஜோடியாக வரக் காரணம் மறுநாள் ஜஸ்டிஷ் டுடேவுக்கு வரவிருப்பவளை மற்றவர்களுக்கு முன்னர் தாங்கள் சந்தித்துவிடவேண்டும் என்ற ஆர்வம் தான்.
அவர்களுடன் அரட்டை அடித்ததில் நேரம் இனிமையாய் கழிந்தது யசோதராவுக்கு.
“யசோ நீ ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததும் உனக்கும் சித்தார்த் சாருக்கும் மேரேஜ்ங்கிற நியூஸ் வரும்னு நாங்க வெயிட் பண்ணுனா அந்த மனுசன் ருத்ராஜியோட ஆஸ்ரமத்துல இருந்து இண்டர்வியூ குடுக்கிறாரு… பாவம் உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு அந்த மனுசன் கடைசில சாமியாரா தான் போவாரு போலயே.. பேரும் அதுக்கு ஏத்த மாதிரி சித்தார்த் யசோதரானு பொருத்தமா இருக்கு பாரேன்”
ரகு வழக்கம் போல கலாய்க்க யசோதராவிற்குச் சிரிப்பு தான் வந்தது.
“சேச்சே! காதலிச்சாலே மனுசங்களுக்கு எதையும் தாங்கிக்கிற மனப்பக்குவம் வந்துடும்… அப்பிடி இல்லனா உன் கூட இத்தனை நாள் அனு குப்பை கொட்டிருப்பாளா?” என்று அவனுக்குப் பதிலடி கொடுத்தாள் அவள்.
“அந்தப் பக்குவம் அவளுக்கு வந்ததே என் கிட்ட இருந்து தான்” என்று தனது டீசர்ட்டின் காலரை பெருமையுடன் இழுத்துவிட்டுக் கொண்டான் ரகு.
அனுராதா அவன் தலையில் குட்டியவள் “இவன் கிடக்குறான்… யசோ நீ வந்ததும் உனக்கு சர்ப்ரைசா வெல்கம் பார்ட்டி குடுக்கணும்னு நாங்க எல்லாரும் ப்ளான் பண்ணிருக்கோம் தெரியுமா?” என்று கண்களை உருட்டி கூற ரகு தலையிலடித்துக்கொண்டான்.
“அதான் நீயே சொல்லிட்டியே! அப்புறம் என்ன தெரியுமானு கேள்வி? இவளை மாதிரி ஒருத்திய வச்சுக்கிட்டு ஒரு சர்ப்ரைஸ் கூட ப்ளான் பண்ண முடியுதா?”
மயூரியும் யசோதராவும் கலகலவென நகைக்க அனுராதா அசடு வழிந்தபடி கைகளைப் பிசைந்தாள்.
யசோதரா அவளது தோளை அணைத்தவள் “சரி ரொம்ப சங்கடப்படாத அனு… நான் கண்டிப்பா உங்க சர்ப்ரைசை பாத்ததும் ஷாக் ஆவேன்… போதுமா?” என்று அவள் பங்குக்கு அனுராதாவைக் கலாய்த்து தள்ளினாள்.
சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பிவிட மயூரியும் யசோதராவுமாய் சேர்ந்து இரவுணவைச் செய்ய ஆரம்பித்தனர். அன்றைய ஸ்பெஷல் அக்கி ரொட்டி. ஹேமலதாவிடம் இருந்து யசோதரா என்றோ கற்றுக்கொண்ட கர்நாடக ரெசிபி அது.
வெண்ணிறத்தில் சுடப்பட்ட ரொட்டிகளை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் போதே யசோதராவின் மொபைல் சிணுங்கியது. தொடுதிரையில் வெண்பற்கள் மின்ன சித்தார்த்தின் முகத்துடன் அவன் பெயர் வரவும் தயவுதாட்சண்யமின்றி அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
அவன் மீண்டும் மீண்டும் அழைக்க அதன் விளைவாக அவளது மொபைல் தனது சேவையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டது, அதாவது போனை சுவிட்ச் ஆப் செய்து ஓரமாக வைத்தவள் எதுவும் நடக்காததை போல அக்கிரொட்டியைச் சுவைக்க ஆரம்பித்தாள்.
அதோடு விசயம் முடிந்தது என்றால் அழைத்தவனுக்கு என்ன மரியாதை இருக்கிறது? அவன் அடுத்து அழைத்தது மயூரிக்கு. மயூரி யசோதராவைப் போல இணைப்பைத் துண்டிக்கக் கூடாது என்பதற்காகவே மாதவனின் எண்ணிலிருந்து அழைத்தான் அவன்.
மயூரி அழைத்தது மாதவன் என்று எண்ணி அழைப்பை ஏற்று “ஹலோ மேடி” என்று ஆவலுடன் பேச மறுமுனையிலிருந்த சித்தார்த் “மய்யூ நான் சித்து பேசுறேன்… யசோ கிட்ட பேசணும் ப்ளீஸ்” என்று பணிவாக வேண்டுகோள் விடுக்க அவளும் நமட்டுச்சிரிப்புடன் யசோதராவிடம் நீட்டினாள்.
அவள் முறைக்க “சித்து பேசணுமாம்டி” என்றவள் கண்களால் இறைஞ்ச யசோதரா போனை வாங்கிக் கொண்டாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“என்னடா வேணும் உனக்கு?” சூடாக வந்து விழுந்தன வார்த்தைகள். ஆனால் மயூரி அமைதியென கண்களை மூடி சைகை காட்ட மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமனப்படுத்திக்கொண்டாள்.
மறுமுனையில் “உன் கிட்ட பேசணும் யசோ” என்றான் சித்தார்த்.
“சரி பேசு”
“யசோ நீ கோவப்படாம முக்தி ஃபவுண்டேசன்…” என்றவனின் பேச்சில் இடைமறித்தாள் யசோதரா.
“இங்க பாரு, அந்த ஃபவுண்டேசன் பத்தியோ அந்தச் சாமியார் பத்தியோ நீ ஒரு வார்த்தை பேசுனாலும் கால் கட் ஆயிடும்… பரவால்லயா?”
“ஓகே! நான் அதை பத்தி பேசல… என்னை பத்தி பேசணும்… என் லவ்வ பத்தி பேசணும்… அதையாச்சும் கேப்பீங்களா?”
“சொல்லு”
“நான் அன்னைக்குப் பேசுனது தப்பு இல்ல யசோ… அது ருத்ராஜி மேல எனக்கு இருக்குற நம்பிக்கை… எப்பிடி நீ ஒரு தப்பை பண்ணமாட்டேனு நான் நம்புறேனோ அதே மாதிரி தான் அவரும் சில தப்பை பண்ணமாட்டார்னு நம்புறேன்”
“இது தான் உன் லவ்வ பத்தி பேசுற லட்சணமா?”
“நான் பேசவர்றதை முழுசா கேளு யசோ… ருத்ராஜி மேல இருக்குற நம்பிக்கை தான் என்னை அப்பிடி பேசவச்சுது”
“ஓ! யாரோ ஒரு முன்னபின்ன தெரியாத சாமியாருக்காக நீ என்னைத் திட்டுவ… ஆனாலும் நான் அதை பெருசுபடுத்தாம உன்னோட காதல்ல உருகணும்… அப்பிடி தானே? அதுக்கு செல்ப் ரெஸ்பெக்ட் இல்லாதவ எவளாச்சும் சிக்குவா… அவளை லவ் பண்ணு… எனக்கு அவ்ளோ பெரிய மனசு இல்ல”
“என்ன பேசுற நீ? ஒரு காலத்துல நீ எஸ்.ஜி சாரையே சந்தேகப்பட்ட யசோ… அதை மறந்துட்டுப் பேசாத”
“ஏய் எஸ்.ஜி சாரும், இந்தச் சாமியாரும் ஒன்னாடா? நீ மேகமலைக்குக் கிளம்பிப் போன நாள்ல இருந்து நான் அந்தாளை பத்தியும் முக்தி ஃபவுண்டேசனைப் பத்தியும் ஓரளவுக்கு டீடெய்ல் கலெக்ட் பண்ணுனேன்… அந்த ஃபவுண்டேசனைப் பத்தி தேர்ட்டி பர்சென்டேஜ் பீப்பிள் தப்பா தான் சொல்லுறாங்க”
“பேலன்ஸ் செவன்டிய நீ கண்டுக்க மாட்டியே? ஏன் யசோ யாரையாச்சும் சந்தேகப்பட்டா அவங்க குற்றவாளினே தீர்மானிக்கிற? சட்டமே சந்தேகத்தோட பலனை குற்றம் சாட்டப்பட்டவங்களுக்குத் தான் குடுக்கச் சொல்லுது” என்று வாதிட்ட சித்தார்த்தின் பேச்சில் யசோதரா எரிச்சலுற்றாள்.
இதற்கு மேல் வாதிட அவளுக்கு விருப்பமில்லை.
“நான் இப்பிடி தான் பேசணும்னு டிசைட் பண்ணிட்டு தான் நீ எனக்கு கால் பண்ணுன போல… ஐ அம் சாரி… என்னால உன்னோட சோ கால்ட் ருத்ராஜிய பத்தி நல்லவிதமா நினைக்க முடியல”
இப்போது சித்தார்த்துக்கு கோபம் வந்துவிட்டது.
“ஏய் பன்னிரண்டாயிரம் ரூபாவுக்காக நீ அவ்ளோ பெரிய மனுசனை ஏமாத்துக்காரன்னு சொல்லுவியா? இப்போ என்ன தான் சொல்லுறடி?”
“அந்தச் சாமியாரோட முக்தி ஃபவுண்டேசன் மேல நான் கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போடத் தான் போறேன்… அதோட அந்தாளுக்குச் சப்போர்ட் பண்ணுற உன்னை மாதிரி ஒரு குருட்டுப்பக்தனோட இனிமே ஆர்கியூ பண்ணுறதுக்கு எனக்கு இஷ்டமில்ல” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள். கூடவே மயூரியின் மொபைலும் உறக்கத்தைத் தழுவியது.
சித்தார்த் பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டதில் எரிச்சலுற்றவன் “இடியட்” என்று கடுப்புடன் திட்டிக்கொண்டான்.
ஒரு புறம் அவனது காதலி. மறுபுறமோ அவனது வழிகாட்டியான ருத்ராஜி. அவனுக்கு மட்டுமல்ல, அவனுடன் இருக்கும் அனைவருக்குமே ருத்ராஜியின் மீது தனிமரியாதை. அதிலும் சித்தார்த்தின் பெற்றோருக்கு அவர் மீது தனி பக்தி. இவ்வளவு ஏன் சாந்தகோபாலன் கூட மகன் சிறை சென்றதால் உண்டான மனவிரக்தியைப் போக்க ருத்ராஜியின் முக்தியையே சரணடைந்தார்.
கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ருத்ராஜியுடன் நேரம் செலவளித்த அம்மனிதருக்கு அதன் பின்னர் தான் மனம் அமைதியானது என்பதை சித்தார்த்துடன் சேர்ந்து யசோதராவும் அறிவாள்.
ஆனால் கேவலம் பன்னிரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய ருத்திராட்சமாலையும், இணையத்தில் யாரோ ருத்ராஜியைப் பற்றி அவதூறு பரப்பிய கட்டுரைகளும் அவளது அறிவை மறைக்கிறது என சித்தார்த் எண்ணிக்கொண்டான்.
அதே சிந்தனையும் காட்டேஜின் வராண்டாவில் கண் மூடி அமர்ந்தவனின் அருகே கிடந்த இருக்கையை ஆக்கிரமித்தனர் கௌதமும் மாதவனும். தலையில் கைவைத்து சோர்ந்து போயிருந்தவனின் புலம்பலைக் கேட்ட பிறகு கௌதம் கூறிய உபாயம் இது தான்.
“யசோக்கு ருத்ராஜிய பத்தி பேசுறது பிடிக்கலனா இனிமே பேசாதீங்க சித்தார்த்… அதோட அபிஷியல் பேச்சை ரிலேசன்ஷிப்குள்ள கொண்டு வராதிங்க… யசோவும் ரெண்டையும் போட்டுக் குழப்பிக்கிற டைப் இல்ல… இப்போ நீங்க யோசிக்க வேண்டியது யசோவ பத்தி… ருத்ராஜிய பத்தி கவலைப்பட ஏதுமில்ல… ஏன்னா இதை மாதிரி எத்தனையோ கேசை அவர் பாத்திருப்பார்… நிர்வாகத்துல உண்டான கவனக்குறைவுனு சொல்லி அந்த ருத்திராட்சத்தோட விலைக்கு ஈடான அபராதத்தை குடுத்துட்டா கேஸ் முடிஞ்சிடும்… முக்திய பொறுத்தவரைக்கும் இந்த கேஸ் பத்தோட பதினொன்னு தான்… நீங்க ஓவரா யோசிக்காதீங்க… ரிலாக்சா உங்களை பத்தி யசோவ பத்தி யோசிங்க…
உங்க வருங்காலம் அவளோட தான்னு முடிவு பண்ணிட்டீங்க… அப்போ அவளோட சேர்த்து அவ ஃபாலோ பண்ணுற கொள்கைகளையும் ஏத்துக்கிட்டுத் தான் ஆகணும் சித்தார்த்… அவளும் உங்க நம்பிக்கைய குறை சொல்லலையே… அவளோட பாயிண்ட் ஆப் வியூவ தானே சொல்லுறா… நீங்க நம்புற ஒருத்தர அவ நம்பலங்கிறதுக்காக உங்களையும் அவ நம்பலனு அர்த்தம் இல்ல சித்தார்த்… ஷீ லவ்ஸ் யூ… அவ காதலை எப்போவும் குறைச்சு எடை போடாதீங்க, உதாசீனப்படுத்தாதீங்க… ஏன்னா ஒரு தடவை அவ உங்க கையை விட்டுட்டானா மறுபடி ஆயிரம் தடவை நீங்க முயற்சி பண்ணுனாலும் அவளோட கைய உங்களால பிடிக்கவே முடியாது”
கௌதம் சொன்னதோடு சித்தார்த்தின் முதுகில் ஆதரவுடன் தட்டிக்கொடுக்க அவனது முகம் தெளிவுற்றது. கூடவே மாதவனும் கௌதம் சொல்வதைப் போல முக்தியைப் பொறுத்தவரை இந்த வழக்கு ஒரு விசயமே இல்லை என்று நம்பிக்கையூட்ட சித்தார்த் நிம்மதியுற்றான்.
பின்னர் மூவருக்கும் இரவுணவு வந்துவிட கலகலப்பாக பேசியபடி உணவை அருந்தினர். மாதவன் இடையே மயூரிக்கு அழைக்க “நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பே அவனுக்குப் பதிலாக கிடைத்தது.
“ஏன் இப்போவே மய்யூ போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டா? எப்போவும் நான் குட் நைட் சொன்னா தானே தூங்கப் போவா?” குழப்பத்துடன் பேசியபடி பௌலில் வைத்திருந்த பழத்தை முட்கரண்டியால் குத்தி வாயில் போட்டுக்கொண்டான் மாதவன்.
“நான் அவ போனுக்குத் தான் கால் பண்ணுனேன் மேடி… யசோ அதுல தான் பேசுனா… கோவத்துல அவ தான் சுவிட்ச் ஆப் பண்ணிருப்பாடா”
அவன் சாதாரணமாகச் சொல்லவும் மாதவன் திகைத்துப் போனான்.
“டேய் நீங்க சண்டை போட்டதுக்கு நாங்க எதுக்குடா பேசாம இருக்கணும்? இதுல்லாம் அநியாயம்டா… தெய்வமே சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ… இல்லனா மறுபடியும் நான் பிரம்மச்சாரியா தான் நாளை கழிக்கணும்” என்றவனின் பேச்சில் சித்தார்த்தும் கௌதமும் சிரித்தனர்.
சித்தார்த்தைப் பொறுத்தவரை அவனுக்கு இனி முக்தி ஃபவுண்டேசன் மீது யசோதரா வழக்கு தொடுப்பதை எண்ணி எந்தப் பதற்றமும் இல்லை. அதே நேரம் ருத்ராஜியின் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கையும் பக்தியும் எள்ளளவும் குறையவில்லை. எனவே மறுநாள் சென்னை கிளம்புவதற்கான யோசனையுடன் உறங்க சென்றான் சித்தார்த்.
ஆனால் யசோதராவோ அவனுக்கு நேர்மாறான கருத்தோடு உழன்றாள். அவளைப் பொறுத்தவரை பக்திக்கும் முட்டாள்தனத்துக்கும் இடையேயான கோடு மிகவும் மெல்லியது. இந்நாள் வரை அவளுக்குக் கடவுள் மீது இருக்கும் நம்பிக்கையும் பக்தியும் அதே கோணத்தில் தான் இருந்தது. சித்தார்த் ருத்ராஜியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பக்தியை அவளால் அவ்வாறு பார்க்க முடியவில்லை. அதை கண்மூடித்தனமான நம்பிக்கையாகவும் முட்டாள்தனமாகவும் மட்டுமே அவளிடத்திலிருந்து பார்க்கும் போது அவளால் எடுத்துக்கொள்ள முடிந்தது.
இந்த இருவரின் வேறுபட்ட எண்ணங்கள் என்றாகிலும் ஒரே திக்கில் இணையுமா? அல்லது இணைகோடுகளாகவே அந்த எண்ணவோட்டங்கள் பயணிக்குமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
மழை வரும்☔☔☔