☔ மழை 34 ☔

அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை வள்ளுவர் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு”என்ற குறளின் மூலம் உரைக்கிறார். அதாவது அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார்.

ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை

ரகு இந்திரஜித்தின் ஹேக்கிங் அறைக்குள் வந்தவன் அங்கிருந்த டெர்மினல்களையும் 42U கேபினட்களையும் பார்த்துவிட்டுப் பிரம்மித்தான்.

“பக்காவா செட்டப் பண்ணிருக்கடா ஜித்து… இதை வச்சு பல வேலைகளை முடிக்கலாமே”

உற்சாகமாய் பேசிய ரகுவிற்குள் இருந்த ஹேக்கர் விழித்துக்கொண்டான். இந்திரஜித் அவனை அமர வைத்தவன்

“அண்ணா சர்வர் ஸ்டோரேஜ்னு எல்லாமே ரொம்ப பக்காவா இருக்கு… இந்த சாப்ட்வேரை இது வரைக்கும் ரெண்டே ரெண்டு தடவை போலீஸ் டிப்பார்ட்மெண்டுக்காக யூஸ் பண்ணிருக்கேன்… கொஞ்சம் காஸ்ட்லி சாப்ட்வேர் தான்… சோ மாட்டிக்கமாட்டோம்” என்று ஆப்பரேட்டர் டெர்மினலின் திரையை ஒளிரவிட்டான்.

அதன் பெயர் என்ன என்று இந்திரஜித் கூறியதும் ரகுவுக்கு ஆச்சரியம். மிகவும் நம்பகமான ஹேக்கிங் வேலைகளுக்காக சில நாடுகளில் அரசாங்கம் பயன்படுத்தும் மென்பொருள் அது!

(பெயரைச் சொல்ல விரும்பவில்லை மக்களே! ஏன்னா கதை படிச்சு இங்க நிறைய பேருக்கு கிரிமினல் ஐடியா வந்துடுதுனு சொல்லுறாங்க. சோ அதுக்கு நான் கற்பனைப்பெயர் குடுக்குறேன். கூடவே அந்த மென்பொருள் அரசாங்கத்திற்கு மட்டுமே விற்கப்படும். கதைக்காக நான் தனிப்பட்ட மனிதர்களுக்கு விற்றதை போல் காட்டியிருக்கிறேன்)

“வாவ்! பீனிக்சாடா? ஐ கான்ட் பிலீவ் திஸ்” என்று அதிசயித்தான் ரகு.

“ஆமாண்ணா… ஆப்பரேட்டர் டெர்மினல்ல இருந்து சம்பந்தப்பட்ட பார்ட்டியோட வாட்சப்புக்கு மெசேஜ் அனுப்புனா அந்த மெசேஜ் ஆட்டோமேட்டிக்கா டிவைசை ட்ரிக்கர் பண்ணி சாப்ட்வேரை இன்ஸ்டால் பண்ணிடும்… அது இன்ஸ்டால் ஆகுறத டிவைஸ் ஓனரால கண்டுபிடிக்கவே முடியாது… இன்ஸ்டால் ஆனதும் சாப்ட்வேரோட ஏஜெண்ட் ஒன்னு அந்த மொபைல்ல பேசுற கால்ஸ், அனுப்புற மெசேஜஸ், எடுக்குற போட்டோஸ், வீடியோஸ், வீடியோ கால்ஸ், கேலண்டர் பண்ணுன டேட்ஸ், மெயில், ப்ரவுசிங் ஹிஸ்டரினு எல்லாத்தையும் கலெக்ட் பண்ண ஆரம்பிக்கும்… ஆனா இந்த வேலை எதுவும் மொபைல் யூசரோட பார்வைக்கு வராது… எல்லா டேட்டாவையும் கலெக்ட் பண்ணி இது ஸ்டோர் பண்ணி வச்சுக்கும்… அந்த ஸ்டோரேஜ் அளவு மொபைல் மெமரில வெறும் ஃபைவ் பர்செண்டேஜ் தான் வரும்…

சோ நம்ம போன்ல எதோ ஒன்னு இடத்தை அடைக்கிதுனு கூட நம்மளால உணர முடியாது.. இது எல்லாத்தயும் கலெக்ட் பண்ணி நம்மளோட ஆப்பரேட்டர் டெர்மினலுக்கு அந்த ஏஜெண்ட் அனுப்பி வச்சிடும்…     அது போக அந்த மொபைலோட லொகேசனை இந்த ஏஜெண்ட் ட்ராக் பண்ணிட்டே இருக்கும்… அப்போ வர்ற கால்சையும் ரெக்கார்ட் பண்ணிடும்… நம்ம வேலை முடிஞ்சதும் ஆப்பரேட்டர் டெர்மினல்ல இருந்தே மொபைல்ல இருக்குற சாப்ட்வேர் ஏஜெண்டை அன்-இன்ஸ்டால் பண்ணிடலாம்… அந்த அன்-இன்ஸ்டலேசன் நடந்து முடிஞ்சது கூட போனோட ஓனருக்குத் தெரியாது…

பின்னாடி எப்பேர்ப்பட்ட கில்லாடி கிட்ட மொபைலை குடுத்து ட்ரேஸ் பண்ண சொன்னாலும் இந்த பீனிக்ஸ் இன்ஸ்டால் ஆனதையோ டேட்டா கலெக்ட் பண்ணுனதையோ கண்டுபிடிக்கவே முடியாது… சப்போஸ் போன் ஓனருக்குச் சந்தேகம் வந்து மொபைல் டைரக்டரிய எக்ஸ்பர்ட் வச்சு நோண்ட ஆரம்பிச்சா பீனிக்சோட ‘செல்ஃப்-டிஸ்ட்ரக்ட் மெக்கானிசம்’ செயல்பட ஆரம்பிச்சி அந்த ஏஜெண்ட் அன்-இன்ஸ்டால் ஆயிடும்… சோ எக்ஸ்பர்ட் தேடுனா கூட இந்த ஏஜெண்ட் சிக்காது… அதுக்கு அப்புறம் மறுபடியும் ஆட்டோமேட்டிக்கா இன்ஸ்டால் ஆகிடும்.. சப்போஸ் ஆப்பரேட்டர் டெர்மினலுக்கு ரொம்ப நேரம் ஏஜெண்ட் கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வரலனாலும் ஆட்டோமேட்டிகா டிஸ்ட்ரக்ட் ஆகிடும்”

நீண்ட விளக்கவுரையை அளித்த இந்திரஜித் இதை வைத்து ருத்ராஜியின் மொபைலை தங்களால் ஹேக் செய்ய முடியும் என்றான்.

“அதுக்கு மொபைல் நம்பர் வேணுமேடா?” – ரகு.

“ஆமாண்ணா… சப்போஸ் ரீச்சபிள் டிஸ்டன்ஸ்னா மொபைல் நம்பர் தேவையில்ல… இங்க தூரம் ஜாஸ்தி… நம்ம அவரோட பெர்ஷனல் மொபைல் நம்பரை கண்டுபிடிக்கணும்… அதை வச்சு அவரோட மொபைல்ல பீனிக்சோட ஏஜெண்டை இன்ஸ்டால் பண்ணிடலாம்… அப்புறம் எல்லா விசயமும் தானா திரைக்கு வந்துடும்” என்று கூறிவிட்டு ஆப்பரேட்டர் டெர்மினலின் திரையைக் காட்டினான் அவன்.

“யசோ சொல்லுற டாக்குமெண்டரி எவிடென்சை நம்ம அங்க போய் தேடி எடுத்துடலாம்… அதுக்கு என் கிட்ட ஒரு ப்ளான் இருக்கு… அந்தப் ப்ளான்ல தான் சாரு வர்றா” என்ற ரகு தனது திட்டத்தை விவரித்தான்.

இந்திரஜித் முழுவதுமாக கேட்டுவிட்டு “சூப்பர் ப்ளான் அண்ணா.. கண்டிப்பா இந்தப் ப்ளான் ஒர்க் அவுட் ஆகும்” என்று ஹைஃபை கொடுத்தான்.

“இதுல நமக்கு இருக்குற பெரிய சவாலே ருத்ராஜி முக்தி சம்பந்தப்பட்ட டீடெய்ல்ஸை வச்சிருக்குற கம்ப்யூட்டர், லேப்டாப் நம்ம கைக்குச் சிக்கணும்… அடுத்து அவரோட பெர்ஷனல் மொபைல் நம்பர் நமக்கு வேணும்” என்றான் ரகு கவலையுடன்.

இந்திரஜித்திற்கும் அது தான் யோசனை. தங்களுக்கு அந்த உதவியைச் செய்ய யாராவது முக்தியில் கிடைப்பார்களா அல்லது தாங்களே தான் முயன்று உபாயத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமா என்பது தான் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்!

அவர்கள் அது குறித்து பேசியபடி அந்த ஹேக்கிங் அறையிலிருந்து இருவரும் வெளியேறி ஹாலுக்கு வந்த போது சித்தார்த்தின் குரல் இருவரது செவிகளிலும் விழுந்தது.

“ஹியரிங் நடக்கட்டும் மேடி… அங்க என்ன பேசணும்னு நான் ஆல்ரெடி யோசிச்சு வச்சுட்டேன்… யசோக்கு டிவோர்ஸ் குடுக்குற எண்ணம் இருக்கலாம்.. எனக்கு இல்ல… அவ ஆசைப்படுறானா நான் எதை வேணாலும் செய்வேன்… ஆனா இந்த டிவோர்ஸ் மட்டும் அவ என்ன டிரை பண்ணுனாலும் நான் குடுக்கப்போறதில்ல”

ஆணித்தரமாக மறுத்தவன் தம்பியுடன் அங்கே நின்ற ரகுவைப் பார்த்ததும் திகைத்துப் போனான். இருவரும் ஹேக்கிங் அறையிலிருந்து அரவமின்றி இங்கே வந்து நிற்பார்கள் என்று அவன் கனவா கண்டான்?

ரகுவோ அலுவலகமே கதியென கிடந்த யசோதராவை இத்தனை நாட்கள் புதிய புலனாய்வில் ஆர்வமாக இறங்கிவிட்டாள் என்று எண்ணியிருக்க அவளோ கமுக்கமாக கணவனைப் பிரிந்திருக்கிறாள். யசோதராவை நல்ல தோழியாக மட்டுமன்றி தங்கையாகவும் தான் அவன் கருதுகிறான். இந்தச் செய்தி அவனுக்கு வேதனையை அளித்தது என்னவோ உண்மை!

சித்தார்த்திடம் என்ன பேசுவது என்று அவனுக்குப் புரியவில்லை. ஏனெனில் அவனுடன் ரகுவிற்கு அவ்வளவாகப் பழக்கமில்லை. ஆனால் அந்தத் தயக்கத்தைப் பார்த்தால் இருவரும் பிரிந்துவிடுவர் என்பதால் வாய் திறந்து பேச ஆரம்பித்தான்.

“இப்போ வரைக்கும் டிவோர்ஸ் பத்தி எங்க கிட்ட யசோதரா ஒரு வார்த்தை கூட சொல்லல சித்து சார்… அவ இந்த முடிவை எடுக்க என்ன காரணம்னு எனக்குத் தெரியல… ஆனா கோர்ட், ஹியரிங்னு நீங்க அலையுறது மீடியா கண்ணுல பட்டுச்சுனா உங்களுக்கோ யசோக்கோ பெருசா பாதிப்பில்ல… ஆனா சர்மியோட நிலமைய நினைச்சுப் பாருங்க… உங்களுக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நான் உங்களோட பழகுனதில்ல… ஆனா யசோ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்… அவ லைப்ல எனக்கு அக்கறை இருக்கு சார்… டூ சம்திங் டு ஸ்டாப் திஸ் டிவோர்ஸ்… இல்லனா பாதிக்கப்படப்போறது உங்க பொண்ணு தான்”

சித்தார்த் பெருமூச்சுடன் அவனை ஏறிட்டு “யூ ஆர் ரைட்… ஐ ஹேவ் டு டூ சம்திங்… இல்லனா பாதிக்கப்படப்போறது சர்மி மட்டுமில்ல… நானும் தான்… ஏன்னா எனக்கு உங்க ஃப்ரெண்ட் மாதிரி லவ்வ விட செல்ஃப் ரெஸ்பெக்ட் முக்கியம்னு வீம்பு பிடிக்கத் தெரியாது… என் மனசு இப்போவும் யசோக்காக தான் துடிக்குது ரகு… அவளுக்கு நான் முக்கியமில்லாம போயிருக்கலாம்… ஆனா அவளும் என் மகளும் தான் என்னோட வாழ்க்கையே! அவங்களை விட்டுட்டு தனியா இருந்து நான் என்னத்த சாதிக்கப்போறேன்?” என்று தீர்மானமாக உரைத்தான்.

ரகு நிம்மதியாய் புன்முறுவல் பூத்து “நீங்க செய்வீங்கனு நம்புறேன் சார்… ஆனா அதுக்கு முன்னாடி நீங்க ஒரு விசயத்தை யோசிங்க… என்ன காரணத்துக்காக யசோ உங்கள பிரியணும்னு டிசைட் பண்ணுனானு யோசிங்க… அந்தக் காரணத்தைக் கண்டுபிடிங்க… இனிமே அதே தப்பை பண்ணாதிங்க… என்னடா இவன் நம்ம தப்பு பண்ணுன மாதிரி பேசுறானேனு கோச்சுக்காதீங்க… கிட்டத்தட்ட நைன் இயர்ஸ் யசோவ எனக்குத் தெரியும்… அவ அடுத்தவங்க பக்கம் இருக்குற நியாயத்தை யோசிக்கிறவ… அப்பேர்ப்பட்டவ பிரிவு பத்தி யோசிச்சிருக்கானா கண்டிப்பா அவ பக்கம் தப்பிருக்காதுனு நான் நம்புறேன்” என்று கூற

“தப்பு என் மேல தான்… அதை நான் தான் சரிபண்ணணும்” என்று மெதுவாய் கூறினான் சித்தார்த்.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாதவனும் இந்திரஜித்தும் அவன் எந்தத் தவறை சொல்கிறான் என்ற குழப்பத்தில் இப்போது ஆழ்ந்துவிட்டனர்.

*************

ஜஸ்டிஷ் டுடே…

தனது கேபினில் சாருலதாவை அமரவைத்துவிட்டு விஷ்ணுபிரகாஷிடம் ஒரு முக்கியமான தகவலைத் தெரிவிக்க சென்றிருந்தாள் யசோதரா.

அவள் வரும் வரை அந்தக் கேபினை தனது முட்டைக்கண்களை உருட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சாருலதா. இன்னும் சில தினங்களில் அவளும் இந்திரஜித்தும் முக்தி ஃபவுண்டேசனின் மேகமலை ஆசிரமத்துக்குச் செல்லவேண்டும்.

அதற்கு முன்னர் என்ன திட்டம் என்பதை அவளிடம் விவரித்துவிடலாம் என்பதற்காக தான் யசோதரா அவளை இங்கே வரவழைத்திருந்தாள்.

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனோ?” என்று கேட்டபடி வந்தாள் யசோதரா.

சாருலதா புன்னகைத்தபடி மறுப்பாய் தலையசைத்தவள் “நான் உங்க கேபினை வேடிக்கை பாத்தேன்கா… ரொம்ப நீட்டா தூசி தும்பு இல்லாம இருக்கு” என்றாள்.

“தேங்க்ஸ் டு ஹவுஸ் கீப்பிங் டீம்” என்று சொன்னபடி அமர்ந்த சாருலதா “காபி ஆர் டீ?” என்று கேட்க

“ரெண்டுமே வேணாம்கா… ஆக்சுவலி எனக்கு நீங்க குடுக்கப்போற வேலைய செய்யுறதுக்கு நான் எக்சைட்டா இருக்கிறேன்… சொல்லுங்க, என்ன உங்க ப்ளான்?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் சாருலதா.

கைகளில் இருந்த டேபில் அவள் கூறப்போகும் திட்டத்தைச் சுருக்கமாகக் குறித்துக்கொள்ள தயாரானாள்.

“நீ ஸ்பெஷலா எந்த வேலையும் செய்ய வேண்டாம் சாரு… நீ எப்போவும் போல போட்டோஷூட்ல கான்சென்ட்ரேட் பண்ணு… அதுக்கு இடைல சின்ன ஃபேவர் பண்ணுனா மட்டும் போதும்… முக்தி சம்பந்தப்பட்ட லீகல் ஒர்க்சை பண்ணுறவங்க யார், அது சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்ஸ் யாரோட பொறுப்புல இருக்கு, அதோட ஹார்ட் அண்ட் சாப்ட் காப்பிசை எங்க வச்சிருக்காங்க இது சம்பந்தப்பட்ட டீடெய்ல்ஸ் மட்டும் கலெக்ட் பண்ணணும்… முடிஞ்சா போட்டோ எடுக்கணும்… இதை ஏன் உன் கிட்ட குடுக்குறேன்னா அங்க கேமரா அலவ்ட் இல்ல… பட் நீ கொண்டு போக முடியும்… உன்னோட போட்டோஷூட்டுக்கு யூஸ் பண்ணுற எக்யூப்மெண்ட்சோட ஜித்துவோட திங்சையும் சேர்த்து பேக் பண்ணிடு… முக்கியமான எவிடென்ஸ் எதுவும் சிக்கிச்சுனா அதை போட்டோ எடுத்துடு… அவ்ளோ தான்” என்றாள் யசோதரா.

சாருலதா அனைத்தையும் கேட்டுவிட்டுத் தலையாட்டினாள். அவள் செய்யவேண்டிய அனைத்தையும் விளக்கியவள் எக்காரணம் கொண்டும் அங்கிருக்கும் சிஷ்ய பிள்ளைகளின் கவனத்தைக் கவராது அனைத்துக் காரியங்களையும் செய்து முடிக்கவேண்டும் என்று எச்சரிக்கை செய்தாள்.

“அக்கா இன்னைக்கு ஈவினிங் ஆபிஸ் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிடாதிங்க… குட்டீஸ் எல்லாரையும் அழைச்சிட்டுப் பீச்சுக்குப் போறோம்… என்ஜாய் பண்ணுறோம்.. ஓகேவா?” என்று ஆர்வத்துடன் அவள் கேட்க யசோதரா தனது பேனாவைச் சுழற்றி யோசித்தாள்.

அவள் இருக்கும் மனநிலையில் இவ்வாறெல்லாம் வெளியே சுற்ற அவளுக்கு மனம் ஒப்பவில்லை. அப்படியே வெளியே சென்றாலும் அவளால் சிறியவர்களைப் போல அதில் இலயிக்க முடியாது.

வீணாகத் தன்னால் அவர்களின் சந்தோசம் கெட்டுவிடக்கூடாதே என்ற எண்ணம் தான்!

ஆனால் சாருலதா பிடிவாதமாய் அவள் வந்தே தீரவேண்டுமென அன்புக்கட்டளையிடும் போது அவளால் மறுக்க முடியாது போயிற்று.

“நான் இன்னும் கொஞ்சநாள்ல முக்தி ஃபவுண்டேசனுக்குப் போனேன்னா வர்றதுக்கு குறைஞ்சதும் ஒரு மாசமாச்சும் ஆகும்… அது வரைக்கும் நினைச்சு பாத்து சந்தோசப்படுறதுக்கு ஒரு மொமண்டை எனக்குக் குடுக்க மாட்டீங்களா அக்கா? நீங்களும் வந்தா தான் அந்த ஹேப்பி மொமண்ட் கம்ப்ளீட் ஆகும்கா” என்று செல்லம் கொஞ்ச வேறு செய்ய யசோதரா சம்மதித்தாள்.

சாருலதாவிற்கு வாக்களித்து அனுப்பி வைத்தவள் அன்று மாலை சொன்னது போலவே மெரீனா பீச்சிற்கு சென்றாள். அங்கே ஹேமலதாவும் மயூரியும் குழந்தைகள் சகிதம் வந்திருந்தனர்.

சாருலதாவுடன் அவர்களை அனுப்பிவிட்டு மூன்று தோழிகள் மட்டும் ஓய்வாய் கடற்கரை மணலில் அமர்ந்தனர். மாலை நேர கடல் காற்றும் சீறிப்பாய்ந்து பாதம் தொட்டு மணற்பூக்களை வாரியிறைக்கும் அலைகளும் காணக் காண திகட்டவில்லை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மூவரும் ஒன்றாய் சேர்ந்து கடற்காற்று வாங்குகின்றனர்.

மயூரி காற்றில் கலைந்த சிகையை ஒதுக்கியபடியே குழந்தைகள் விளையாடுவதைக் காட்டி

“எவ்ளோ சந்தோசமா இருக்காங்கள்ல, இந்தச் சந்தோசத்துக்கு நம்மளால என்னைக்குமே குந்தகம் வந்துடக் கூடாது” என்றாள் குறிப்பு காட்டி.

அந்தக் குறிப்பு யாருக்காக காட்டப்பட்டதோ அவள் அதைப் புரிந்துகொண்டாள். புரிந்துகொண்டதோடு மட்டுமன்றி புன்னகைக்கவும் செய்தாள்.

“என் பொண்ணோட சந்தோசத்துக்கு என்னால எப்போவுமே பிரச்சனை வராது மய்யூ” என்று நம்பிக்கை ததும்ப அவள் பேசிய விதம் ஒரு கணம் ஹேமலதாவையும் மயூரியையும் திகைக்க வைத்தது.

மயூரி சுதாரித்துக்கொண்டு “நீ சர்மியோட அப்பாவ அவ கிட்ட இருந்து பிரிச்சிருக்க யசோ… உனக்கு அது இன்னுமா புரியல?” என்று கேட்க

யசோதரா ஏதோ சொல்ல வாயெடுத்தவள் பின்னர் சுதாரித்து “நான் ஒன்னும் சர்மிய பாக்கவே கூடாதுனு சித்துவ தடுத்து நிறுத்தலயே… அவன் மகளை எப்போ வேணும்னாலும் வந்து பாக்கலாம்னு சொல்லிட்டேன்… இந்த டிவோர்ஸ் எங்களோட உறவை முடிச்சிக்கிறதுக்கு தான்… சர்மிக்கு என்னைக்கும் அவன் தான் அப்பா” என்றாள்.

மயூரி அவசரமாக ஏதோ பேச வர அவளைக் கையர்த்திய ஹேமலதா தான் பேசிப் பார்ப்பதாக சமிக்ஞை செய்தாள்.

“தென் வாட் அபவுட் யூ?” என்று நிதானமாக அவள் வினவியதில் யசோதரா ஒரு கணம் யோசித்தாள்.

பின்னர் பொங்கி அடங்கும் கடலைப் பார்த்தாள். கண்கள் வெறிக்க முகத்தில் விரக்தி தெறிக்க பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாளேயன்றி அவள் பதிலளிக்கவில்லை.

காதலித்தவனை மணந்து ஏழாண்டுகள் சந்தோசமாக வாழ்ந்தவளுக்கு அந்த உறவை முறித்துக்கொள்வது ஒன்றும் இனிப்பு சாப்பிடுவது போல இல்லை! சொல்லப்போனால் அவளுக்குத் தான் வலியும் வேதனையும் அதிகம்! இந்த மணமுறிவுக்கு முந்தைய சம்பவங்களில் மனதில் அடிவாங்கியவள் அவளே!

ஆனால் வலியும் வேதனையும் அனுபவிக்க அனுபவிக்க மனம் அதற்கு பழகிக்கொள்ளும். ஆரம்பக்கட்டத்தில் உச்சமாய் இருக்கும் வேதனை காலப்போக்கில் அதன் வீரியத்தை இழந்துவிடும். வீரியமிழந்த வேதனைக்கு கண்ணீரை உண்டாக்கும் வலுவில்லை. எனவே தானே என்னவோ உறவு முறியும் நிலையில் கூட யசோதராவின் கண்ணீர் சுரப்பிகள் வேலை செய்யவில்லை. இதோ இப்போது நீ என்ன செய்யப் போகிறாய் என்ற ஹேமலதாவின் கேள்விக்கு அவளிடம் சரியான பதில் கூட இல்லை.

ஆனால் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்ற உறுதி மட்டும் அவளுள் நிறைந்திருந்தது. இந்த முடிவு மட்டுமே முக்தி ஃபவுண்டேசன் என்ற மாயையிலிருந்து சித்தார்த்தை விடுவிக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு.

அந்த உறுதியுடன் தன் முடிவை அறிவித்தவளை ஏமாற்றம் ததும்பும் விழிகளால் நோக்கினர் ஹேமலதாவும் மயூரியும். ஹேமலதா ஏதோ சொல்லவர அவளை நிறுத்துமாறு சைகை செய்தாள் யசோதரா.

“கௌதம் கை நீட்டுனத இன்னைக்கு வரைக்கும் உன்னால டைஜெஸ்ட் பண்ணிக்க முடிய… இப்போவரைக்கும் உன்னால அவன் கூட இயல்பா பேச முடியல… சித்தார்த் என்னைக் கைநீட்டி அடிச்சிருக்கான்… அதுவும் யாரோ ஒரு சாமியாருக்காக… என்னால எப்பிடி அதை மறக்க முடியும்? அப்பிடி மறக்கணும்னா அந்த வலியை மறக்கடிக்கிற அளவுக்கு பெரிய சந்தோசம் ஒன்னு என் வாழ்க்கைல வரணும்… அப்பிடி எதாவது வர்ற வாய்க்கும் காத்திருக்கேன்… சோ தேவையில்லாம எதையும் யோசிச்சு குழம்பாம இருங்க ரெண்டு பேரும்”

அழகாய் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் கடலின் மீது தன் கண்களைப் பதித்தாள் யசோதரா. கடலுக்குள் இறங்கும் கதிரவனின் ஒளி முற்றிலும் மறைந்து இருள் வியாபிக்கத் தயாரானது.

மழை வரும்☔☔☔