☔ மழை 27 ☔

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

ஒரு காட்சியில் ஒன்றிப் போனால் மட்டுமே அந்த காட்சியில் இருந்து சிறந்த தருணத்தை ஒரு கலைஞனால் படம் எடுக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. புகைப்படக் கலையில் காத்திருத்தல் என்பது மிகவும் முக்கியம். அது மட்டுமே ஒரு நல்ல புகைப்படத்தை நமக்கு பெற்றுத் தரும். ஒரு காட்சி என்பது எண்ணற்ற ஃப்ரேம்களை கொண்டது. அவற்றில் ஒரே ஒரு சிறந்த ஃப்ரேமை வெளியே எடுப்பதுதான் மிகச் சிறந்த கலைஞனின் திறமை.

                                                                                   –செந்தில் குமரன் புகைப்படக்கலைஞர் (BBC News, 18.10.2019)

ஜி.வி.எம் படப்பிடிப்பு தளம்…

மாதவனின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்து கொண்டிருந்தது. அத்திரைப்படத்தில் சித்தார்த்திற்கு காவல்துறை அதிகாரி வேடம். அன்றைக்கு எடுக்கவிருந்த காட்சிப்படி ரெஸ்ட்ராண்ட் ஒன்றில் அவன் மப்டியில் அவனது காதலியுடன் அதாவது கதாநாயகியுடன் அமர்ந்து பேசவேண்டும்.

அப்போது வில்லன் அனுப்பி வைத்திருந்த ஆட்கள் அவனையும் கதாநாயகியையும் தாக்க முற்படுகையில் அவளையும் காப்பாற்றி அந்த ஆட்களையும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்யவேண்டும்!

இது வழக்கமாக தமிழ் சினிமாவில் எண்ணற்ற முறை எடுத்து சலித்த அரைத்த மாவையே அரைக்கும் காட்சி தான்! ஆனால் திரையரங்கில் ரசிகர்களின் விசில் பறக்கவேண்டுமென்றால் இம்மாதிரி அரைத்த மாவு காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றாக வேண்டுமே! அதுவும் கமர்சியல் படத்திற்கு இம்மாதிரி லாஜிக் இல்லாத அரைத்த மாவு காட்சிகள் கட்டாயம்!

இதை கேலியாக சுட்டிக்காட்டிய சித்தார்த் “டேய் ஸ்கிரீன் ப்ளேல சின்ன சேஞ்சாச்சும் பண்ணிருக்கியா? இல்லனா படம் ரிலீஸ் ஆன அன்னைக்கு ரிவியூ போடுறேன்னு சொல்லி நம்மளை கலாய்ச்சு தள்ளி கெத்தான மூவிய காமெடி மூவி ஆக்கிடுவாங்க மச்சி” என்று கேலி செய்தபடி அந்தக் காட்சிக்காக தயாரானான்.

“அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம் ஹீரோ சார்… நீங்க ரெடியா?” என்று அவனிடம் கேட்டுவிட்டு டச்சப் முடித்து வந்த நாயகியிடமும் கேட்க “ஐ அம் ரெடி மேடி சார்” என்றாள் அவள் உற்சாகமாக.

அடுத்த சில நொடிகளில் மாதவன் “ஆக்சன்” என்று முழங்க காட்சியைப் படமாக்க ஆரம்பித்தனர்.

கதைப்படி கதாநாயகி அவனிடம் ஏதோ ஒரு முக்கியமான விசயத்தை மறைத்திருப்பாள். அதற்காக தான் ரெஸ்ட்ராண்டுக்கு அழைத்தும் வந்திருப்பாள். அவன் அவளது எண்ணவோட்டத்தைக் கண்டுகொண்டு கேள்வி கேட்க வேண்டும்.

“சாக்கோ லாவா கேக் நல்லா இருக்குல்ல?” என்று குழந்தையாய் குதூகலித்தபடி அவள் சாப்பிடுவதைப் பார்த்தவன் யோசனையாய் முகத்தை வைத்துக்கொண்டான்

“நீங்க என் கிட்ட எதையும் மறைக்கிறிங்களா ஸ்ரீரஞ்சனி?” என்று கேட்டான். கதைப்படி நாயகியின் பெயர் அது.

“நான் உங்க கிட்ட என்ன மறைக்க போறேன் சார்? நீங்க சாப்பிடணும்னு சொன்னிங்க.. ரிலேட்டிவா வேற போயிட்டிங்க… அதான் சாப்பிட வாங்கனு கூட்டிட்டு வந்தேன்… இது ஒரு தப்பா ஸ்ரீதர் சார்?” என்று அங்கலாய்த்தாள் நாயகி. அத்திரைப்படத்தில் அவனது பெயர் ஸ்ரீதர்.

சித்தார்த் மறுப்பாய் தலையசைத்தவன் “நோ நோ! ஆக்சுவலா நான் மது சாரைப் பாக்குறதுக்காக தான் போனேன்… ஆனா நீங்க என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணுன மாதிரி இருந்துச்சே” என்று சொல்லவும் நாயகிக்கு அதிர்ச்சியில் விக்கல் வரவேண்டும்.

அவளும் விக்கல் வருவதைப் போல பாவித்து நடித்து முடித்தாள். சித்தார்த் தண்ணீரை எடுத்து நீட்டிவிட்டு கேக் துணுக்கை துடைக்க டிஸ்யூவை நீட்டவும் வில்லனின் ஆள் ஒருவன் கத்தியுடன் வரவும் சரியாக இருந்தது.

அதற்குள் சுதாரித்து எழுந்து சித்தார்த் அவனது மணிக்கட்டைப் பற்றிக்கொள்ள கதாநாயகி அரண்டு போய் நிற்க சண்டைக்காட்சி ஆரம்பமானது.

சண்டைபயிற்சி நிபுணர் சொன்ன அத்துணை ஸ்டண்ட்களையும் முறைப்படி நடித்து முடிக்கவும் மாதவன் “வெல்டன் கய்ஸ்” என்று பாராட்டினான்.

சித்தார்த் தனது டீசர்ட்டை இழுத்துச் சரிசெய்து கொண்டவன் ஸ்டண்ட்மேனிடம் அடி எதுவும் படவில்லையே என்று அக்கறையுடன் விசாரிக்க “அதுல்லாம் ஒன்னுமில்ல சார்… உங்களுக்கு முழங்கைல லைட்டா கிழிச்சிடுச்சு… அதுக்கு நான் தான் சாரி சொல்லணும்” என்று வருத்தத்துடன் கூற

“எத்தனை நாள் தான் இந்த மூவிக்காக நான் வேர்வை சிந்தி உழைச்சேன்னு ஒரே டயலாக்கை பேசுறது? ஒரு சேஞ்சுக்கு இரத்தம் சிந்தி உழைச்சேன்னு சொல்லிப்பேன்ல” என்று கேலி போல கேட்டுவிட்டு அவரது தோளில் தட்டிகொடுத்த சித்தார்த் மாதவனை நோக்கி சென்றான்.

அவனிடம் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று கேட்க அவனோ “நீ சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்டா… உன்னோட நடிப்புல எனக்கு எந்த வித்தியாசமும் தெரியல… பட் சாஷா யுவர் ஆக்டிங் இஸ் ஆசம்” என்று கதாநாயகியைப் பாராட்டினான்.

அந்த ஒரு காட்சியில் கதாநாயகனை திசைதிருப்புவது, தவறு செய்துவிட்டோமா என்று திருதிருவென விழிப்பது, வில்லனின் ஆட்களை கண்டு மிரள்வது என அனைத்து உணர்ச்சிகளையும் அவளது முகமும் கண்களும் அழகாக பிரதிபலித்திருந்தது.

சித்தார்த்தும் தன் பங்கிற்கு பாராட்ட அடுத்த காட்சிக்கான நடிகர்கள் தயாராக கதாநாயகி டச்சப் செய்ய சென்றுவிட்டாள்.

அந்தக் காட்சியில் சித்தார்த் நடிக்கவேண்டியது இல்லை என்பதால் ஓய்வாய் அமர்ந்து மொபைலை நோண்ட ஆரம்பித்தான் சித்தார்த். சில நிமிடங்கள் இப்படியே கழிய அவனது மொபைலுக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர் சாந்தகோபாலன் தான்.

எடுத்துப் பேசியவனிடத்தில் அவர் வைத்த கோரிக்கை சகுந்தலாவும் ராகேஷும் அவனையும் மாதவனையும் பார்க்க விரும்புகின்றனர் என்பதே! அதைக் கேட்டதும் சித்தார்த்துக்கு என்ன திடீரென்று என தோணியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஏனெனில் ராகேஷ் சிறைச்சாலையிலிருந்து பரோலில் வந்து அன்றுடன் பத்து நாட்கள் கழிந்திருந்தது. அந்தப் பத்து நாட்களில் சகுந்தலாவைச் சந்திக்க இருவரும் செல்லவில்லை. இல்லையென்றால் வாரம் ஒரு முறை சித்தார்த்தும் மாதவனும் அப்பெண்மணியைச் சந்திப்பது வழக்கம்.

சிறையிலிருந்து வந்த ராகேஷும் அந்நாள் வரை அவர்களைச் சந்திக்க எண்ணவில்லை. அன்னையுடன் மருத்துவமனைக்குச் செல்வது, இழந்த உடல்நலனை திரும்ப பெறுவதில் மட்டும் தான் கவனமாய் இருந்தான் அவன்.

இன்று திடீரென தங்களை சந்திக்க வேண்டுமென அவன் திடீரென கூறியதில் அவனுக்கு அதிர்ச்சி தான்! ஆனால் சாந்தகோபாலனிடம் மறுத்து பேச அவனால் இயலாதே!

எனவே அவரது இல்லத்திற்கு வருவதாக மாதவனுக்கும் சேர்த்து சித்தார்த்தே வாக்களித்து விட்டான்.

மாலையில் வீடு திரும்பும் போது மாதவனிடம் இவ்விசயத்தைக் கூறவும் அவன் ராகேஷைச் சந்திக்க சற்றே தயங்கினான்.

“எனக்கும் போக இஷ்டமில்லடா… ஆனா எஸ்.ஜி சாருக்காகவும் சகுந்தலாம்மாக்காகவும் போயே ஆகணும் மேடி… ராக்கி பாய் மனசு மாறி கூட நம்மளை பாக்க கூப்பிட்டிருக்கலாம்ல?”

மாதவன் இதற்கு மேலும் சித்தார்த்திடம் வாதம் செய்து அவன் நம்பிக்கையை உடைக்க விரும்பவில்லை. எனவே அவனுடன் சேர்ந்து படப்பிடிப்பு தளத்தை விட்டு கிளம்பினான் மாதவன்.

**************

ஜஸ்டிஷ் டுடே…

யசோதரா மைக்ரோசாப்ட் வேர்டில் ‘முக்தி வித்யாலயா’ என்ற தலைப்பில் தான் சேகரித்த விபரங்களை தட்டச்சு செய்து கொண்டிருந்தாள்.

அன்று அவள் சந்தித்த ஒரு பெண்மணி தனது மகனை அங்கே படிக்க அனுப்பி சில நாட்களில் அந்தச் சிறுவனுக்கு அல்சர் பிரச்சனை தீவிரமாகிவிட அவனை அழைத்துவந்து விட்டதாக கூறினார்.

நேரங்கெட்ட நேரத்தில் சாப்பாடு கொடுத்தது தான் இதற்கு காரணம் என்பது மருத்துவரின் கூற்று. அச்சிறுவனால் அங்கிருந்த உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் சமாளிக்க முடியவில்லை. இத்தனைக்கும் சாக்லேட் போன்ற திண்பண்டங்கள் எதுவும் அங்கே அனுமதியில்லை. அப்படி இருந்தும் குழந்தையின் உடல்நிலையில் பிரச்சனை வந்துவிட அவர் மகனைத் தன்னுடன் அழைத்துவந்து விட்டதாகக் கூறினார்.

யசோதரா அவரை ஆயாசத்துடன் பார்த்து “ஏன் மேடம் ஒரே மகனை அவ்ளோ தூரத்துக்கு அனுப்பி வைச்சீங்க? அவன் குழந்தை… அங்க இருந்த ரூல்சை ஃபாலோ பண்ணுறதுக்கு அவனோட வயசு ஒத்துழைக்கணும்ல… ஆறு வயசு பையனுக்கு ரெண்டு வேலை சாப்பாடு குடுத்து வேலையும் வாங்கி அதை வாழ்க்கை கல்வினு சொன்னா நீங்க வேற எதையும் யோசிக்காம சேர்த்து விடுவீங்களா?” என்று கேட்க அப்பெண்மணியோ தலையைக் குனிந்து கொண்டார்.

அவரிடமிருந்து ட்ராப்-அவுட்டிற்கான சான்று, பள்ளிக்கு கட்டணம் செலுத்திய ரசீது என அனைத்து ஆவணங்களையும் வாங்கிக்கொண்டு கிளம்பியவள் மதியத்திலிருந்து கடந்த பத்து நாட்களாக சேகரித்த விவரங்களை தட்டச்சு செய்து சேமித்தாள்.

என்ன தான் வேலையில் கவனமாக இருந்தாலும் அந்தச் சிறுவனின் முகமே அவள் மனக்கண்ணில் வந்து சென்றது. வேலையை முடித்துவிட்டுக் கிளம்பியவள் சித்தார்த்தின் மொபைலுக்கு அழைக்க அது ஸ்விட்ச் ஆப் என்று தகவல் வந்தது.

இப்போது ஏன் மொபைலை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறான் என்ற கேள்வியுடன் தனது கைப்பை மற்றும் கார் சாவியுடன் வெளியேறியவளுக்குக் காரணமின்றி ராகேஷின் நினைவு வந்தது.

ஒருவேளை அவனைக் காண சாந்தகோபாலனின் இல்லத்துக்குச் சென்றிருப்பானோ என்ற கேள்வி அவளுக்குள் உதயமாக அவளது மூளை அதற்கு வாய்ப்பில்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பதிலளித்தது.

அப்படி பார்க்கச் செல்பவன் ஏன் இந்தப் பத்து நாட்களில் செல்லவில்லை என மறுகேள்வி வேறு கேட்டது அவளின் மூளை. ராகேஷ் பரோலில் வந்த கடந்த பத்து நாட்களில் சித்தார்த்தும் மாதவனும் அவர்களின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினரேயன்றி அவனைப் பற்றி மூச்சு கூடவில்லை.

யசோதராவுக்கு இவ்வளவு பெரிய செய்தியை தன்னிடம் கணவன் மறைத்ததில் வருத்தம் இருந்தாலும் எங்கே தனக்குத் தெரிந்தால் பதற்றப்படுவோமோ என்று தானே சித்தார்த் மறைத்திருக்கிறான் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள் அவள்.

மயூரிடியிடமும் மாமனார் மாமியாரிடமும் கூட இதே சமாதானத்தைத் தான் யசோதரா கூறியிருந்தாள். இந்த விசயத்தில் இந்திரஜித் மட்டும் வழக்கம் போல “நீங்க முன்ன மாதிரி இல்லண்ணா” என்ற பாட்டை சோகமாகப் பாடிவிட்டு விலகிக் கொண்டான்.

எனவே நடந்ததை வைத்துப் பார்த்தால் கணவன் கண்டிப்பாக ராகேஷைக் காண சென்றிருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தாள் அவள். அந்த எண்ணம் மனதிற்குள் நிம்மதியை உண்டாக்க சவி வில்லாவுக்குச் செல்ல காரைக் கிளப்பினாள்.

அடுத்தச் சில மணிநேரங்களில் நடக்கப்போகும் விபரீதங்களை அவளும் அறியவில்லை. சாந்தகோபாலனின் இல்லத்தில் ராகேஷுடன் உரையாடிக் கொண்டிருந்த சித்தார்த்துக்கும் அது தெரியவில்லை.

சித்தார்த் வீட்டிற்குள் நுழைந்த கணத்திலிருந்து அதிசயிப்பது ராகேஷின் நிதானத்தைக் கண்டே. ஏனெனில் அந்நிதானம் அவனுக்கு கைவரா கலை. அப்படிப்பட்டவனா பார்வையில் செய்கையில் எல்லாம் நிதானத்தைக் கடைபிடிக்கிறான் என்ற ஆச்சரியம் அவனுக்கும் மாதவனுக்கும்.

ராகேஷோ சித்தார்த்தை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவன் கடந்த ஏழாண்டுகளில் வயது கொடுத்திருக்கும் முதிர்ச்சியோடு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக அவன் முகத்தில் நிரந்தரமாக உறைந்திருந்த புன்னகையை எண்ணி உள்ளுக்குள் பொருமினான்.

நான் சிறைசாலையின் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்க இவன் மட்டும் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்துவிடுவானா? ஏழாண்டு சிறை வாசத்திலிருந்து தற்காலிகமாக வெளியே வந்ததே இவனது சந்தோசத்தைக் குலைக்க தானே என்று எண்ணியவனின் உதட்டில் கோணல் சிரிப்பு உதயமானது.

சகுந்தலாவும் சாந்தகோபாலனும் மூன்று நண்பர்களும் பேசிக்கொள்ளட்டும் என ஒதுங்கிக்கொள்ள இப்போது ராகேஷோடு சித்தார்த்தும் மாதவனும் மட்டும் அமர்ந்திருந்தனர்.

ராகேஷ் கண்கள் கூர்மையுற சித்தார்த்தைப் பார்த்தவன் “அப்புறம் மச்சி, லைப் எப்பிடி போகுது?” என்று கேட்க மாதவனுக்கு என்னவோ சாதாரணமாகக் கேள்வியாகத் தோணவில்லை.

ராகேஷின் குரலில் ஒலித்த உணர்வுக்கு என்ன பெயர்? பொறாமை, கையாலாகாத்தனம், இயலாமை! எதுவாக வேண்டுமேனாலும் இருக்கலாம். ஆனால் அது கண்டிப்பாக நேர்மறை உணர்வல்ல என்பதை மாதவன் கண்டுகொண்டான்.

சித்தார்த்தோ தன்னை நோக்கி குயுக்தியுடன் கேட்கப்பட்ட கேள்வியின் மறைபொருளை அறியாதவனாக “எனக்கென்ன ராக்கி பாய்? மை டியர் லவ்வபிள் ஒய்ப் அண்ட் என் சர்மிக்குட்டியோட வாழ்க்கை சந்தோசமா போகுது” என்று கூற

“ஆனா நான் சந்தோசமா இல்லடா” என்று இறுக்கத்துடன் இடைவெட்டியது ராகேஷின் குரல்.

இம்முறை சித்தார்த்தால் அவனது மனவுணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே பேச்சை வளர்க்காது அமைதி காத்தான் அவன்.

ராகேஷின் குரல் பாம்பின் சீற்றத்துடன் ஒலித்தது.

“ஒரு காலத்துல சினிஃபீல்ட்ல நான் கிங்கா இருந்தேன்… அப்புறம் பெஸ்ட் ஹோட்டலியர்… அதுக்கு அப்புறம் என்னோட டார்க் பிசினஸ்லயும் நான் தான் ராஜா… ஆனா இது எல்லாத்தையும் நாசம் பண்ணி என்னை கம்பியெண்ண வச்சவளோட நீ சந்தோசமா வாழுறல்ல”

இப்போதும் சித்தார்த் பதிலளித்தான் இல்லை! தன்னருகே அமர்ந்திருந்த மாதவனின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

ராகேஷ் இருவரது கரத்தையும் தீப்பார்வை பார்த்துவிட்டு “இது வரைக்கும் நீ சந்தோசமா வாழ்ந்துட்ட சித்து…  இனிமே உன் வாழ்க்கைல உனக்குப் பிடிச்சவங்க ஒவ்வொருத்தரா உன்னை விட்டு போறத நீ பாப்ப… நான் பாக்க வைப்பேன்டா” என்று வெஞ்சினத்துடன் உரைக்க அதற்கு மேல் பொறுமையின்றி பாய்ந்தெழுந்த மாதவன் அவனது சட்டையைப் பிடித்தான்.

“வாயை மூடுடா… ஏழு வருசம் களி தின்னும் உன் கிரிமினல் புத்தி மாறலயே! நீயெல்லாம் திருந்தவே மாட்டனு நான் நினைச்சது சரி தான்… சித்து இதுக்கு மேல இவன் கிட்ட என்னடா பேச்சு? இவன் எக்கேடோ கெட்டு ஒழியுறான்… முதல் வேலையா இவனோட பரோலை கேன்சல் பண்ணுறதுக்கு என்ன உண்டோ அதை செய்வோம்” என்றான் கடுஞ்சினத்துடன்.

அவன் கையைத் தட்டிவிட்ட ராகேஷ் மீண்டும் கோணலாகச் சிரித்தவன் “யூஸ் இல்ல மச்சி… நான் செய்ய வேண்டிய எல்லாத்தையும் இந்தப் பத்து நாள்ல செஞ்சு முடிச்சிட்டேன்… சித்து உன்னோட பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும்? ஃபோர், ஃபைவ் ஆர் சிக்ஸ்? எதுவோ ஒன்னு! அல்பாயுசுல போகப்போறவ வயசை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன பண்ணப்போறேன்?” என்று பழிவெறியுடன் கூற சித்தார்த் கொதித்தெழுந்துவிட்டான்.

கோபத்துடன் ராகேஷின் கன்னத்தில் பளாரென அறைந்தவன் “என் பொண்ணை பத்தி ஒரு வார்த்தை பேசுனேனு வையேன், அடுத்த வார்த்தை பேசுறதுக்கு உனக்கு உயிர் இருக்காதுடா” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்டினான்.

ராகேஷோ அவன் அறைந்ததால் வலித்த கன்னத்தைப் பற்றிக்கொண்டவன் பைத்தியம் போல சிரித்தான்.

“கோவம் வருதாடா? உன் பொண்டாட்டியால ஏழு வருசம் ஜெயில்ல இருந்தேனே, எனக்கும் இப்பிடி தானே கோவம் வந்திருக்கும்? எவ்ளோ அவமானம், எவ்ளோ அசிங்கம்? எதையும் நான் மறக்கமாட்டேன்… உன் பொண்ணு, உன் பொண்டாட்டி, உங்கப்பா, அம்மா, தம்பினு ஒவ்வொருத்தரா மேலே போய் சேர்றதை நீ பாத்து துடிக்கணும்… நான் துடிக்க வைப்பேன்… உன் பொண்டாட்டி ரத்தம் சிந்துனதை ஏழு வருசத்துக்கு முன்னாடி பாத்தல்ல… அவ உயிர் பிழைப்பாளா பரலோகம் போவாளானு ஒவ்வொரு நிமிசமும் கலங்கி போயிருப்பல்ல, இனியும் துடிப்ப… உன்னால என் பரோல்ல கேன்சல் பண்ணமுடியும்… ஆனா நான் ஏற்பாடு பண்ணுன ஆள் உன் குடும்பத்த சிதைச்சு சாகடிக்கிறத உன்னால தடுக்க முடியாது… அதுல முதல் பழி உன் பொண்ணு தான்டா”

அவன் சொல்ல சொல்ல அவனைக் கொல்லுமளவுக்குக் கோபம் வந்தது சித்தார்த்திற்கு. மாதவன் அவனைத் தடுத்து நிறுத்த ராகேஷ் இன்னும் பேச்சை முடிக்கவில்லை.

“நீ என்ன நினைச்சடா? எனக்கு உடம்பு சரியில்ல, பழையபடி ஹெல்த் கண்டிசனை சரியாக்க தான் நான் பரோல்ல வந்தேன்னு நினைச்சியா? ஏழு வருச பகை எனக்குள்ள ஊறிப்போயிருக்கு… அதைத் தீர்த்துக்க தான் வந்திருக்கேன்… பத்து நாளா ஹாஸ்பிட்டல், செக்கப், ட்ரீட்மெண்ட்னு சுத்துன நேரத்துலயே உன் பொண்ணை மேல அனுப்ப ஆள் செட் பண்ணிட்டேன்டா… முடிஞ்சா அவளைக் காப்பாத்தி காட்டுடா… யுவர் டைம் ஸ்டார்ட் நவ்” என்று சவால் விட்டான் அவன்.

“ச்சீ! நிறுத்துடா… நீயெல்லாம் மனுச ஜென்மமே இல்ல… இதுக்கு மேல நீ ஃப்ரீயா சுத்த முடியாது” என்று ஆவேசத்துடன் கூறிய மாதவன் சித்தார்த்தை அழைத்துக்கொண்டு வெளியேற சாந்தகோபாலனும் சகுந்தலாவும் என்ன நேர்ந்ததோ என பதபதைத்துப் போயினர்.

எதிர்பட்டவர்களிடம் சித்தார்த் எதுவும் பேசாது கடந்துவிட மாதவனோ “அவன் கொஞ்சம் கூட மாறல எஸ்.ஜி சார்… இதுக்கு மேல அவன் வெளிய இருந்தா யாருக்கும் நல்லது இல்ல” என்று கூறிவிட்டு நண்பனைத் தொடர்ந்தான்.

சித்தார்த் கடுஞ்சினத்துடன் காரினுள் அமர அவன் இருக்கும் மனநிலையில் காரை எங்காவது இடிப்பது திண்ணம் என்பதால் மாதவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.

காரைக் கிளப்பியவன் ஸ்டீயரிங் வீலை வளைத்தபடி “டேய் அவன் வெத்து உதார் விடுறான்… அவனால ஒன்னையும் கிழிக்க முடியாது… நான் எஸ்.ஜி சார் கிட்ட பேசுறேன்” என்று கூற

“அவன் சொன்னா செஞ்சுடுவான்டா… என் கவலை அவனைப் பத்தி இல்ல… என் பொண்ணைப் பத்தி… யசோவ பத்தி… எனக்கு வந்த கனவு இவனோட பேச்சு எல்லாமுமா சேர்ந்து என்னால யோசிக்க முடியலடா” என்றவன் உடனே மொபைலை எடுத்து வீட்டிற்கு அழைத்தான்.

எடுத்தவர் சவிதா. அவரிடம் சர்மிஷ்டா வீட்டிற்கு திரும்பிவிட்டாளா என்று அவன் பதற்றத்துடன் கேட்க அவரோ பேத்தி இன்னும் வீடு திரும்பவில்லை என்றார்.

சித்தார்த் அழைப்பைத் துண்டித்தவன் “மேடி காரை சர்மியோட ஸ்கூலுக்கு விடுடா” என்று கூற கார் சர்மிஷ்டா படிக்கும் பள்ளியை நோக்கி விரைந்தது.

இனி ராகேஷின் பழிவெறி ஜெயிக்குமா அல்லது சித்தார்த்தின் பாசம் அதற்குள் சர்மிஷ்டாவைக் காக்குமா என்பதை விதி தான் தீர்மானிக்கவேண்டும்!

***********

லோட்டஸ் ரெசிடென்சி…

ஹேமலதாவும் சாந்தநாயகியும் அழுதும் அரற்றும் ஜானகிக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். அதே அறையின் மற்றொரு மூலையில் வெறிக்க வெறிக்க சுவரைப் பார்த்தபடி நின்றிருந்த தீபாவை சாருலதா இயல்புநிலைக்குக் கொண்டு வர போராடிக்கொண்டிருந்தாள்.

“இந்தப் பொண்ணு இப்பிடி ஒரு முடிவுக்கு வருவானு நான் நினைக்கவேல்ல ஹேமா… இப்போ இவ சூசைட் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடுமா? அந்தப் பையன் தான் திரும்பி வந்துடுவானா? இவங்கம்மா அப்பா என்னை நம்பி இவளை ஒப்படைச்சுட்டுப் போயிருக்காங்க, அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? இப்பிடி பூஞ்சைமனமா இருந்தா எங்களுக்கு அப்புறம் இவ எப்பிடி இந்த மோசமான உலகத்துல வாழுவாம்மா?”

“ஆன்ட்டி அவங்க ஏதோ மனகஷ்டத்தால இப்பிடி ஒரு முடிவு எடுத்துட்டாங்க… நம்ம தான் காப்பாத்திட்டோமே”

“நம்மளால அவ தற்கொலை பண்ணிக்க இருந்ததை தடுக்க தான் முடிஞ்சுது ஹேமா.. தற்கொலை பண்ணிக்கணும்னு அவ மனசுல பதிஞ்சிருக்குற எண்ணத்த நம்மளால அழிக்கவே முடியாது… தூக்கமாத்திரை இல்லனா என்ன, வேற வழில அவ முயற்சி பண்ணுவா”

சாருலதாவுடன் நின்றிருந்த தீபாவைப் பார்க்க பார்க்க ஹேமலதாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.  முதல் திருமணம் முடிவடைந்த விதம் அவளை ராசியில்லாதவள் என்று சுற்றத்தார் முணுமுணுக்க காரணமாய் அமைந்ததாலேயே ஜானகி அவளைத் தன்னுடன் வைத்துக்கொண்டார்.

இதோ கடவுள் அவளுக்கு அளித்த இரண்டாம் வாய்ப்பான காதலனும் தவறிவிட இனி தன் வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை என தற்கொலை முடிவுக்கு சென்றிருக்கிறாள்!

சாருலதாவையும் சாந்தநாயகியையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுமாறு வேண்டியவள் இந்நிகழ்வின் துக்கத்தை ஆற்றிக்கொள்ள மயூரிக்கு அழைத்துப் பேசியபடி தனது ஃப்ளாட்டிற்கு வந்தாள்.

அங்கே அவளது கணவன் சோபாவில் அமர்ந்திருந்தான். அன்று சற்று சீக்கிரமே கல்லூரி முடிவடைந்து விட்டது போல! கௌதம் ஹேமலதா மயூரியிடம் உரையாடுவதைக் கவனித்துவிட்டு

“யாருக்கு என்னாச்சு ஹேமா? எதுவும் பிரச்சனையா?” என்று வினவ ஹேமலதா மனம் பொறுக்காமல் அனைத்தையும் கொட்டிவிட்டாள். பேசும் போதே விழிகளில் நீர் துளிர்த்தது அவளுக்கு.

“காதலிச்சவன் இறந்து போறது எவ்ளோ பெரிய துன்பம் தெரியுமா?  அந்தப் பொண்ணைப் பாக்குறப்ப மனசு வலிக்குது கௌதம்” என்று கண்ணீர் விட்டவள் வேகமாக அதை துடைத்தும் கொண்டாள்.

“இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ருத்ராஜி தான்” என்றாள் அவள் சினத்துடன்.

கௌதம் எரிச்சலுடன் மனைவியை ஏறிட்டவன் “உனக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சா ஹேமா? இந்தப் பொண்ணு சூசைடுக்கு டிரை பண்ணுனதுக்கும் ருத்ராஜிக்கும் என்னடி சம்பந்தம் இருக்கு?” என்று பற்களைக் கடிக்க

“அவருக்கு இவங்க லவ் பத்தி தெரியவந்தப்பவே அங்கேயே கல்யாணம் பண்ணி வச்சிருந்தா ரெண்டு பேரும் முக்திக்கு உண்மையான ஸ்டாஃபா காலம் முழுக்க உழைச்சிருப்பாங்களே! ஆனா முக்தியோட பேர் கெட்டுப்போகும்னு சொல்லி அவங்களை பிரிச்சு, அந்தப் பையனை நார்த் இந்தியாக்கு அனுப்பி இப்பிடி அவன் செத்துப் போறதுக்கு இன்டேரக்டா காரணமா இருந்தவர் உங்க ருத்ராஜி தானே” என்று அவனுக்குச் சற்றும் குறையாத சினத்துடன் ஹேமலதா பதிலடி கொடுத்தாள்.

அப்போது தான் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் சாருலதா. அக்காவும் மாமாவும் சண்டையிடுவதில் அதிர்ந்தவள் இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டாள்.

“ஹேமுக்கா யாரோ ஒருத்தரோட பிரச்சனைக்கு நீங்க ரெண்டு பேரும் ஏன் சண்டை போட்டுக்கிறீங்க?”

ஹேமலதா அவளை முறைத்தவள் “ஏன்னா இந்த வீட்டுலயே அவரை கடவுளா நினைக்கிறவங்க இருக்கீங்கல்ல, உங்களுக்கு இப்போவாச்சும் புரியவச்சிட முடியுமானு பிரயத்தனப்படுறேன்டி… ஆனா செவுடன் காதுல சங்கு ஊதுன மாதிரி நீங்க எல்லாரும் அவருக்கு தான் சப்போர்ட் பண்ணுறீங்க” என்றாள்.

கௌதம் பொறுமையிழந்து போக சாருலதா இருவரையும் கவலையுடன் பார்த்தாள்.

ஹேமலதா தீர்மானமான குரலில் “இனிமே யாரும் முக்தி ஃபவுண்டேசனுக்குப் போறது, அந்தாளை பத்தி பேசுறது, அவரோட யோகா ப்ரோகிராம்ல கலந்துக்கிறதுனு இருந்தீங்கனா நான் மனுசியாவே இருக்கமாட்டேன்… சீ மனுசனா அவர்? இப்பிடி சின்னவங்க வாழ்க்கைய தன் நிறுவன பேருக்காக குலைச்ச மனுசன் நல்லாவே இருக்க மாட்டார்” என்று கோபமாய் உரைக்க

“வாயை மூடுடி” என்று அவளை நோக்கி கையை ஓங்கிவிட்டான் கௌதம்.

முகம் கண்கள் எல்லாம் சிவந்து அவன் நின்ற கோலம் சாருலதாவுக்குள் கிலியைப் பரப்ப ஹேமலதாவோ சிலையாய் சமைந்து போனாள்.

இந்த ஏழாண்டுகளில் எவ்வளவு அன்பும் அன்னியோன்யமுமாக வாழ்ந்தவர்கள்! யாரோ ஒருவருக்காக இன்று சண்டையிடுகிறார்கள்! கௌதம் அந்நாள் வரை ஹேமலதாவை அதிர்ந்து ஒரு வார்த்தை பேசியிராதவன் கை ஓங்கிவிட்டான்!

தான் செய்யவிருந்த காரியத்தின் தீவிரம் புரியவும் கையை இறக்கியவனை ஹேமலதா உணர்ச்சியின்றி வெறித்தாள். கௌதம் தனது சிகையைக் கோதிக்கொண்டவன் “ஹேமா” என்றபடி அவளருகே வர அவளோ ஒரு கையை நீட்டி தடுத்தாள்.

“பேசாதீங்க கௌதம்” என்று கடினக்குரலில் உரைத்தவளின் விலகலில் அவன் அதிர அதற்கு மேல் அங்கே நிற்க விருப்பமின்றி தனது அறையை நோக்கி ஓடிவிட்டாள் ஹேமலதா. சாருலதா சோகத்துடன் கௌதமை ஏறிட அவனோ சோபாவில் தொப்பென்று அமர்ந்தான்.

எப்படி ஹேமலதாவை அவன் கை ஓங்கினான் என்று கௌதமுக்கே புரியவில்லை. அவள் கண்களில் கண்ட விலகலில் அவன் உள்ளம் அடிபட்டுப்போனது.

மழை வரும்☔☔☔