☔ மழை 26 ☔

நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்கநெறியில் பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும். இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது திருக்குறளின் அரசியல் நெறி.

                   “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

                   இறையென்று வைக்கப் படும்”

ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை

ஹோட்டல் கோல்டன் கிரவுன்…

பழச்சாறை அருந்தியபடி யசோதராவின் எதிரே அமர்ந்திருந்தார் தயானந்த். முக்தியின் மேகமலை ஆசிரமத்துக்குச் சென்று அங்கே தங்கியிருந்த அனுபவங்களை விலாவரியாக விளக்கிக் கொண்டிருந்தார் மனிதர்.

“கிட்டத்தட்ட அறுபது பில்டிங்ஸ் இருக்குது மேம்… அதுல முக்கால்வாசி ஹில் ஏரியா கன்சர்வேசன் அத்தாரிட்டி (Hill Area Conservative Authority) கிட்ட பெர்மிசன் வாங்காம கட்டுனது தான்… கட்டி முடிச்சிட்டு அப்ரூவல் வாங்குறது தான் அவங்க ஸ்டைல்… அரசாங்கத்தோட ஆதரவு இருக்குறப்ப அவங்க என்ன வேணும்னாலும் செய்யலாம் தானே!”

வெகு சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவர் பழச்சாறை இன்னொரு மிடறு அருந்தவும் யசோதரா யோசனையுடன் புருவம் சுருக்கினாள்.

“அந்த அறுபதுல வழிபாடு நடத்துற இடம் இருக்குறதால அரசாங்கம் தயங்குறாங்களா?”

“அதுல சதாசிவன் டெம்பிள் அண்ட் ஆதிசக்தி டெம்பிள் ரெண்டும் தான் வழிபாடு நடக்குற இடங்கள் மேடம்… மத்த எல்லாமே யோகா ஸ்டூடியா, தியான ஹால், ரிசார்ட்ஸ், அவங்களோட ஆன்லைன் போர்ட்டல்சை கண்காணிக்கிற ஐ.டி டீமுக்கான ஆபிஸ், ஸ்டாஃப் தங்கிக்கிறதுக்கான ப்ளேஸ் இப்பிடி சொல்லிட்டே போகலாம் மேடம்”

அவர் சொல்வதைக் கவனமாக கேட்டுக்கொண்ட யசோதரா அவர் எத்தனை நாட்கள் அங்கே தங்கினார் என்ற விவரத்தையும் வாங்கிவிட்டாள். ஏதேனும் வீடியோ ஆதாரங்கள் உள்ளதா என்று அவள் வினவ தயானந்த் இல்லையென்று தோளைக் குலுக்கினார்.

“அங்க போனதுக்குக் காரணம் அவங்க எப்பிடி எந்த யோகாமையத்தை நடத்துறாங்கனு தெரிஞ்சிக்கவும், சட்டத்தை ஏமாத்துன விதத்தை அனுபவப்பூர்வமா பாக்கவும் தான் மேடம்” என்றார் அவர்.

“என்ன சார் நீங்க வெறுமெனே போய்ட்டு வந்திருக்கீங்க? அட்லீஸ்ட் அங்க நடந்ததை உங்க போன் கேமரால ரெக்கார்ட் பண்ணிருக்கலாமே”

அதை கேட்ட தயானந்த் சத்தமாகச் சிரித்தவர் “மேடம் இன்னும் நீங்க என்னை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தயானந்த்னு நினைச்சுப் பேசுறீங்க… என் பதவியையும் அதிகாரத்தையும் நான் இழந்து பல வருசங்கள் ஆகுது… ரெக்கார்ட் பண்ணுறதெல்லாம் உங்களை மாதிரி இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்கள் செய்ய வேண்டிய வேலை… என்னால முடிஞ்ச விவரங்களை நான் உங்களுக்குச் சொல்லுறேன்… மத்த வேலைகளை நீங்க தான் பாக்கணும்” என்றார்.

“அதுவும் கரெக்ட் தான் சார்… நீங்க என்னோட மெயிலுக்கு டாக்மெண்ட்ஸை ஃபார்வேர்ட் பண்ணிருங்க”

“கவர்மெண்ட் என்னோட மொபைல் போன் ஸ்பீஸ்ல இருந்து எல்லாத்தையும் கவனிக்குது மேடம்… சோ எப்பிடி டார்க்நெட் கால் பண்ணுனேனோ அதே போல அதுல உள்ள மெயில் ஃபெஷிலிட்டியவே யூஸ் பண்ணுறேன்… உங்களுக்கு இங்க மெயில் ஐ.டி இருக்குதா?”

இப்போது சத்தமாகச் சிரிப்பது யசோதராவின் முறை. இருள் இணையத்தின் இண்டு இடுக்குகளில் நுழையுமளவுக்கு இப்போது அவளுக்கு அது அத்துப்படி.

“நான் சொல்லுறேன்… நோட் பண்ணிக்கோங்க” என்றவள் தனது மின்னணு அஞ்சல் முகவரியைக் கொடுத்தாள்.

தயானந்த் அதை செல்பேசியில் குறித்துக்கொண்டவர் “முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேன்… அங்க முக்தி வித்யாலயானு ஒரு ஸ்கூல் இருக்கு… அந்த சிலபஸ்சை யார் கிட்ட அப்ரூவல் வாங்கி டீச் பண்ணுறாங்கனு தெரியல… பாவம் அங்க நிறைய குழந்தைங்க படிக்காங்க… அவங்க பேரண்ட்சுக்கு தன்னோட குழந்தை அந்த ஸ்கூல்ல தங்கி படிக்கிறதுல ரொம்ப பெருமை… ஆனா குழந்தைங்க படுற கஷ்டம் அவங்களுக்கு மட்டும் தானே தெரியும்… அதோட அங்க ஃபாலோ பண்ணுற சிலபஸ்சை படிக்கிற குழந்தைங்க ஹையர் செகண்டரி முடிஞ்சு வெளிய வர்றப்ப அவங்களால மத்த ஸ்டூடண்ட்ஸ் கூட கம்பீட் பண்ணி ஹையர் ஸ்டடீஸ்ல சேர முடியாது, அவங்களால ஜாப்லயும் பெருசா ஜொலிக்க முடியாது… ஆனா அங்க ஃபீஸ் மட்டும் அதிகம்” என்று கூடுதல் தகவலொன்றை கூறிவிட்டு அங்கே படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும் பாடத்திட்டத்தையும் விளக்க யசோதராவுக்கு இத்தனை நாட்கள் சித்தார்த் அந்தப் பள்ளி குழந்தைகளை எவ்வளவு பாக்கியசாலிகள் என்று சிலிர்த்த கணங்கள் நினைவுக்கு வந்தது.

அட என் அப்பாவி கணவனே! இப்படியா கண்மூடித்தனமாக நம்பித் தொலைப்பாய் என்று மனதிற்குள் சித்தார்த்தின் குருட்டுநம்பிக்கையை நொந்து கொண்டாள்.

அனைத்து ஆவண பிரதிகளையும் அவளது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைத்துவிடுவதாக கூறிய தயானந்த் இந்தப் புலனாய்வில் தனது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கும்படி கூற யசோதரா அவருக்கு மனதார நன்றி கூறிவிட்டுக் கிளம்பினாள்.

அன்று ஜஸ்டிஷ் டுடே அலுவலகத்திற்கு சென்றவள் முக்தி ஃபவுண்டேசனின் இணையத்தளத்தையும் இதற்கு முன்னர் யாரெல்லாம் அந்நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளனர் என்ற விவரத்தையும் தேட ஆரம்பித்தாள்.

தயானந்த் கூறியபடி இத்தனை நாட்களில் ஏகப்பட்ட முறைகேடுகளில் முக்தி ஃபவுண்டேசனின் பெயர் அடிபட்டிருந்தது. இன்னொன்றையும் மறுக்க முடியாது, அது என்னவென்றால் ஏழாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட முக்தியின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்திருந்தது.

அங்கிருந்து வெளியே வந்தவர்கள் அந்த தொண்டு நிறுவனம் மீது கொடுத்த புகார்கள் ஏராளம்! அங்கே நடந்த பூஜைகளுக்காக செலவிட்ட பணத்திற்கு வழக்கம் போல நன்கொடை ரசீது கொடுத்த அவலங்களோ அனேகமாக நடந்தேறியிருந்தது.

இதற்கு மேல் சட்டத்திற்கு புறம்பாக கட்டிய கட்டிடங்கள் வரிசையில் சர்வருத்ரானந்தா அவரது கனவில் கண்டு திட்டமிட்டு கட்டிய சதாசிவனுக்கு அர்ப்பணிக்கவிருக்கும் புதிய ஆலயமும் இடம்பெற்றிருந்தது.

இதை திறந்து வைக்கத் தான் முதலமைச்சரே முக்தி ஃபவுண்டேசனுக்குச் செல்லவிருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் முணுமுணுத்துக்கொண்டிருந்தன.

அனைத்து விவரங்களையும் கோர்வையாக எடுத்து தொகுத்தவளுக்குத் தலை சுற்றியது. ரகுவிடம் தான் சேகரித்த தகவல்கள் பற்றி அவள் பகிர்ந்துகொண்டாள்.

“இது எல்லாமே ஓல்ட் டேட்டாஸ் ரகு… ரீசண்டா அவங்க பண்ணுன திருட்டுத்தனத்துக்கு டாக்குமென்ட்ரி எவிடென்ஸ் எல்லாமே அவங்க கிட்ட மட்டும் தான் இருக்கும்… அது நம்ம கைக்குக் கிடைக்கணும்… அதுக்கு நம்மாள் ஒருத்தர் முக்தி ஃபவுண்டேசனுக்குப் போகணும்… எந்த ஆதாரமும் ஈசியா சிக்கிடாது… அது அவங்களோட பெர்சனல் டிவைஸ்ல இருக்கலாம்… அந்த டிவைஸ் சிஸ்டமோ, லேப்டாப்போ அல்லது க்ளவுட் ஸ்டோரேஜாவோ கூட இருக்கலாம்… எங்க இருக்குனு ஊர்ஜிதப்படுத்த முடியாத அந்த ஆதாரங்கள் பத்தி விவரம் தெரிஞ்ச நபர் ஒருத்தர் நமக்கு உதவணும்… அவர் ருத்ராஜிக்கு நெருங்கிய நபராவும் இருக்கணும்… அவரோட நம்பிக்கைய ஜெயிச்சவராவும் இருக்கணும்… அந்த நபரோட உதவியால நம்ம அனுப்பப் போற ஆள் கரெண்ட் எவிடென்ஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணணும்… சோ அங்க இருந்து நமக்கு ஆதாரத்தை சேகரிச்சுக் குடுக்குற ஆள் அங்கயே கொஞ்சநாள் தங்கியே ஆகணும்… கண்டிப்பா என்னால போக முடியாது… எனக்குப் பதிலா யாரை அனுப்புறதுங்கிறது தான் என் முன்னாடி இருக்குற பெரிய கேள்வி”

ரகு ஆழ்ந்து யோசித்தவன் “ஒன்னு பண்ணேன் யசோ! முதல்ல ருத்ராஜிக்கு நெருங்குன நபர்களை பத்தி டீடெய்ல் கலெக்ட் பண்ணு… அதுல யார் ருத்ராஜி மேல அதிருப்தியா இருக்காங்கனு பாத்து நம்ம அடுத்த அடிய எடுத்து வைப்போம்” என்றான்.

யசோதராவுக்கும் அதுவே சரியென்று தோண ருத்ராஜிக்கு நெருக்கமான நபர்களைப் பற்றி விவரங்களைச் சேகரிக்கும் பணியை ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்தாள்.

அன்று மாலை ஹேமலதாவைக் காண லோட்டஸ் ரெசிடென்சிக்கு சென்றவள் நந்தனும் இலக்கியாவும் விளையாடுவதை ஆதுரத்துடன் பார்த்தபடி ஹேமலதா அளித்த காபியைப் பருகிக் கொண்டிருந்தாள்.

“சர்மிய பாத்து நாளாச்சு யசோ… கமிங் சண்டே அவளையும் அழைச்சிட்டு வா… எல்லாருமா சேர்ந்து பீச்சுக்குப் போவோம்”

“பீச் இஸ் போரிங்மா… நம்ம வி.ஜி.பி போவோம்” விளையாட்டில் ஒரு காதும் இவர்களின் பேச்சில் மறு காதும் வைத்திருந்த நந்தன் தனது விருப்பத்தைப் பதிவு செய்தான்.

“ஆமாம்மா.. ஸ்டாச்சு மேனை பாக்கணும் போல இருக்கு… நெக்ஸ்ட் சண்டே கிஸ்கிந்தாவுக்குப் போவோம்” என்று தன் பங்குக்கு அடுத்த வாரத்திற்கான திட்டத்தையும் முன்கூட்டியே தெரிவித்தாள்.

இருவரது கோரிக்கைகளுக்கும் தலையாட்டி வைத்தனர் யசோதராவும் ஹேமலதாவும்.

அப்போது தான் அந்தச் சத்தம் கேட்டது. யாரோ ஒரு பெண் பெரும் வேதனையுடன் கதறும் சத்தம் அது. அதைக் கேட்டு குழந்தைகள் திடுக்கிட யசோதரா அவர்களைத் தனது அணைப்புக்குள் கொண்டு வந்தாள்.

“ஹேமா என்னனு போய் பாரு… பசங்களை நான் பாத்துக்கிறேன்” என்றாள் அவள்.

ஹேமலதா வெளியேற திடுக்கிட்டு பயந்த குழந்தைகளை அதிர்ச்சியிலிருந்து மீட்க முயன்றாள் யசோதரா.

“ஒன்னுமில்லடா… யாரோ கால்ல அடிபட்டிடுச்சும்மா… இன்ஜூரி வலிக்கும்ல… அதான் அவங்க அழுறாங்க”

குழந்தைகளின் அதிர்ச்சி மட்டுப்பட அவர்களுக்குச் சாப்பிட ஃப்ரிட்ஜில் ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்தவள் சாக்லேட் சிப்ஸ் குக்கிகள் இருக்க அதை ஒரு தட்டில் போட்டவள் பெரிய தம்ளரில் பாலுடன் வந்து அமர்ந்தாள்.

“குக்கீஸை காலி பண்ணுங்க பாப்போம்… அப்புறமா ஆன்ட்டி உங்களுக்குக் கதை சொல்லுறேன்” என்று அவள் கூறவும் பயம் விலகி இருவரும் இயல்புக்கு வந்தனர்.

குழந்தைகள் குக்கியை பாலில் குளிப்பாட்டி உண்டுகொண்டிருக்க யசோதராவோ ஹேமலதா எப்போது திரும்புவாள் என்று வாயில் கதவை சிறு பதற்றத்தோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குக்கி காலியாகவும் ஹேமலதா உள்ளே வரவும் சரியாக இருந்தது. வந்தவளின் வதனத்தில் வருத்தத்தின் சாயல் ஒட்டியிருக்க குழந்தைகளிடம் இன்னும் சில குக்கிகளைக் கொடுத்துவிட்டு இருவரும் பால்கனி பக்கம் நகர்ந்தனர்.

“என்னாச்சு ஹேமா? யாருக்கு என்ன பிரச்சனை? அவங்க சத்தம் போட்டு அழுததும் எனக்கு ஹார்ட் நின்னுப் போச்சுடி”

“லாஸ்ட் ஃப்ளாட் ஜானகி ஆன்ட்டியோட மருமக பொண்ணு தீபா தான் அழுதது… அவ பிரச்சனை இப்போ தான் முடிஞ்சுதுனு நிம்மதியா இருந்தாங்க அந்த ஆன்ட்டி… ஆனா அந்தப்பொண்ணு விரும்புன பையன் நார்த்துக்குப் போனான்ல, அவன் அங்கேயே இறந்துட்டானாம்… தூங்கிட்டிருந்தவனை யாரோ கழுத்தை நெறிச்சு கொலை பண்ணி எரிச்சிருக்காங்கடி… எப்பிடியாச்சும் அவன் வருவான்னு காத்திட்டிருந்தவளுக்கு இது எவ்ளோ பெரிய அதிர்ச்சியா இருக்கும்? அதான் அழுறா… அவ அழுறத பாக்க முடியல யசோ… அந்தப் பையனும் அவளும் பிரிஞ்சப்போவே அந்த ஆன்ட்டி உடைஞ்சு போயிட்டாங்க… அவனும் அந்தப் பொண்ணை மறந்துட்டேன்னு சொல்லிட்டான்… சொல்லி சில நாள்லயே அவன் இறந்துட்டான்னா அவளுக்கு எப்பிடி இருக்கும்?”

“என்னமோ நடந்திருக்கு ஹேமா… அந்தப் பையனோட ஃபாதர் முக்தி ஃபவுண்டேசன்ல பெரிய ஆள்… ருத்ராஜிக்கு நெருக்கமானவர் கூட… அவரோட பையனை யார் கொலை பண்ணிருப்பாங்க? அவனை திடீர்னு நார்த் இந்தியாக்கு அனுப்புனதையே மீடியால சந்தேகப்பட்டு பேசுனாங்க… இப்போ அவன் இறந்தே போயிட்டான்… அவனுக்கு என்ன நடந்துச்சுங்கிற விசயமும் அவனோட மறைஞ்சு போயிடுச்சு”

பரிதாபமாக உச்சுக் கொட்டினாள் யசோதரா. சில நிமிடங்கள் ஹேமலதாவிடம் உரையாடிவிட்டு கிளம்பியவளிடம் வி.ஜி.பியை மறந்துவிடக் கூடாதென்று சொல்லி அனுப்பிவைத்தனர் நந்தனும் இலக்கியாவும்.

யசோதரா கனத்த மனதுடன் சவி வில்லாவை அடைந்தவள் அங்கே தொலைகாட்சியில் முகுந்தின் மரணம் குறித்த செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்ததைக் கண்டதும் மீண்டும் இறுக்கத்தைப் பூட்டிக்கொண்டாள்.

மகனது இறப்புச்செய்தி கேட்டு ரவீந்திரன் இடிந்து போய் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள், சர்வருத்ரானந்தா முகுந்திற்கு அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் எல்லாம் வரிசையாக வர யசோதரா அதற்கு மேல் அக்காட்சியைக் காண விரும்பவில்லை.

நாராயணமூர்த்தியும் சவிதாவும் இறந்த முகுந்திற்காக வருத்தப்பட அவளோ சர்மிஷ்டாவை அன்றைய வீட்டுப்பாடத்தை முடிக்குமாறு கட்டளையிட்டுவிட்டு தனது வேலையில் மூழ்கிப்போனாள்.

சித்தார்த் படப்பிடிப்பு முடிந்து திரும்பியவன் மனைவியும் மகளும் உரையாடிக் கொண்டிருப்பதை செவியுற்றபடி உடையை மாற்றி ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

“ஹாய் லேடிஸ்! என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும்?” என்று கேட்டபடி அவர்களின் உரையாடலில் தானும் இணைந்தவன் மகள் கேட்கும் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்குப் பதிலளித்தபடி யசோதராவை நோட்டமிட அவளோ அவர்களின் பேச்சில் செவியைப் பதித்து கண்களை மடிக்கணினியில் பதித்திருந்தாள்.

சர்மிஷ்டா சித்தார்த்தின் மடியில் அமர்ந்திருந்தவள் “எனக்கு பப்பி வேணும்பா… ஷானுவோட வீட்டுல த்ரீ பப்பீஸ் இருக்குதாம்” என்று தனது மூன்று விரல்களை விரித்துக் காட்டி கண்களை உருட்டியபடி பேசினாள்.

சித்தார்த் மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன் “சர்மி குட்டிக்கு மூனு பப்பி போதுமா? இல்ல நிறைய வேணுமா?” என்று அவளைப் போலவே கேட்க

அவள் மோவாயைத் தட்டி யோசித்துவிட்டு “அப்போ எனக்கு டென் பப்பீஸ் வேணும்… நாளைக்கு வாங்குவோமா?” என்று ஆசையாய் கேட்க

“அச்சோ டென் ரொம்ப கம்மிடா” என்று வருத்தப்பட்டான் சித்தார்த்.

இவர்களின் உரையாடலைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்டாள் யசோதரா.

“அவ தான் குழந்தை, தெரியாம கேக்குறானா நீயும் அவளுக்குப் பின்பாட்டு பாடாத சித்து… ஒரு வீட்டுக்கு ஒரு நாய்க்குட்டி போதாதா? ஒன்னு வளத்தா தான் அதை செல்லப்பிராணி வளர்ப்புனு சொல்லமுடியும்… நீ சொல்லுற மாதிரி பத்து நாய்க்குட்டி வளத்தா அதுக்கு பேர் நாய்கள் சரணாலயம்” சலித்தக் குரலில் சொன்னபடி கண்களை மடிக்கணினியை விட்டு எடுக்காதவளைப் பார்த்து சத்தம் போட்டுச் சிரித்தனர் சித்தார்த்தும் சர்மிஷ்டாவும்.

அவள் இருவரையும் முறைக்கவும் கப்சிப்பானவர்கள் பின்னர் அவள் காதின் செவிப்பறை அடேய் போதுமடா பேச்சை நிறுத்துங்கள் என்று கர்ஜிக்கும் வரை சளசளத்துக் கொண்டே இருந்தனர்.

இரவுணவின் போது சர்மிஷ்டாவுக்கு நாய்க்குட்டி வாங்கித் தருவதாக சித்தார்த் வாக்களிக்கவும் அவளுக்குக் கொண்டாட்டம். இந்திரஜித் அவன் பங்கிற்கு பூனைகுட்டி வேண்டுமா என்று கேட்டு யசோதராவின் முறைப்பை வாங்கி கட்டிக்கொண்டான்.

நாராயணமூர்த்தியோ “டேய் யசோக்கு பெட் அனிமல்ஸ்னா ஒத்துக்காதுனு தெரிஞ்சும் ஏன்டா வம்பு பண்ணுறீங்க?” என்று மருமகளுக்குப் பரிந்து பேச

“ஆனா என் பொண்ணுக்குப் பிடிக்கும்ல… சர்மி குட்டிக்கு என்ன பிடிக்குதோ அது எல்லாருக்கும் பிடிச்சு தான் ஆகணும்” என்று சித்தார்த் கட்டளை போல பேச

“அப்பிடியாடா மகனே? இன்னைக்கு உனக்கு சந்திராஷ்டமம்னு மானிங்கே ராசிபலன்ல சொன்னாங்க… அப்போ நம்பல… இப்போ நம்புறேன்” என்ற சவிதா சித்தார்த்தை முறைத்தபடி உணவருந்திய யசோதராவைக் கண்ணால் காட்டவும் அவன் அமைதியே உருவாகி சாப்பிட ஆரம்பித்தான்.

சர்மிஷ்டா உறங்கியதும் தங்களின் அறைக்கு வந்தவன் அங்கே இன்னும் யசோதரா மடிக்கணினியுடன் மல்லு கட்டுவதைப் பார்த்து இலேசாக எரிச்சலுற்றான்.

“போதும் யசோ… மீதி வேலைய நாளைக்குப் பாத்துக்கலாம்” என்றவன் அவளது அனுமதியின்றி மடிக்கணினியை மூடி வைக்க யசோதரா வேறு வழியின்றி அவனிடம் அதைக் கொடுத்தாள்.

அதை அங்கே கிடந்த மேஜையில் வைத்துவிட்டு அவளிடம் வந்தவன் “ரொம்ப தீவிரமா ஒர்க் பண்ணுறத பாத்தா எதோ பெரிய விவகாரமா இருக்கும் போல… இந்தத் தடவை உங்க சேனலோட டார்கெட் யாரு?” என்று கேலியாக வினவ

“அது அபிஷியல் சீக்ரேட்… வெளிய சொன்னா தெய்வகுத்தமாயிடும்” என்று கண்ணைச் சிமிட்டிய யசோதரா இவ்வளவு நேரம் மடிக்கணினியின் விசைப்பலகையுடன் ஒட்டி உறவாடியதில் வலிக்கத் தொடங்கிய விரல்களை சொடுக்கிக் கொண்டாள்.

அடுத்த நொடியே முகுந்தின் மரணம் குறித்து அவனிடம் வினவ “ப்ச்… நல்ல பையன்… இது சாகுற வயசே இல்ல… ரவீந்திரன் சார் கிட்ட ஆப்டர் நூன் பேசுனேன்… மனுசன் உடைஞ்சு போயிட்டார்.. சோகத்துலயே பெரிய சோகம் புத்திரச்சோகம் தான் யசோ… நம்ம கல்லு மாதிரி இருக்குறப்ப நம்ம பெத்த பிள்ளைங்களுக்கு எதாச்சும் ஆச்சுனா அதுக்கப்புறம் ஏன் நம்ம மட்டும் ஏன் உயிரோட இருக்கணும்னு சொல்லி அழுறார்… இத்தனை வருசத்துல அவர் சிரிச்சோ அழுதோ நான் பாத்தது இல்ல… வேலைல கரெக்டா இருக்குற மனுசன்… அவரை மாதிரி தான் முகுந்தும்… அவங்கப்பாக்கு முக்தில அவ்ளோ செல்வாக்கு இருந்தாலும் மத்த சிஷ்ய பையனுங்க எப்பிடி சிம்பிளா இருப்பாங்களோ அதே மாதிரி தான் அவனும் இருப்பான்… இவ்ளோ சீக்கிரம் அவன் இறந்திருக்க வேண்டாம்” என்று வருத்தத்துடன் முடித்தான் சித்தார்த்.

சில நிமிடங்கள் மௌனம் அங்கே ஆட்சி செய்தது. யசோதரா முக்தி ஃபவுண்டேசனில் ருத்ராஜிக்கு நெருக்கமானவர்கள் யாரென மெதுவாய் வினவ் சித்தார்த்தோ உள்ளர்த்தம் அறியாது ரவீந்திரனோடு சேர்ந்து சட்ட ஆலோசகர், ஆடிட்டர், தொழில் சம்பந்தப்பட்ட அறிவுரை வழங்கும் மேலாண்மை ஆலோசகர் இன்னும் சில முக்கிய அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டான்.

யசோதரா அனைத்தையும் கேட்டுக்கொண்டவள் இதில் தன்னால் அணுகக்கூடிய நபர் யாரென்ற சிந்தனையில் மூழ்கத் துவங்கினாள். அப்போது தான் திடீரென முக்தி வித்யாலயாவின் நினைவு வந்தது. அதைப் பற்றி தான் கேள்விப்பட்டதாக தயானந்த் கூறியவற்றை கூட்டி குறைத்து கணவனிடம் கூற சித்தார்த்தோ பொங்க ஆரம்பித்தான்.

“உனக்கு மட்டும் ஏன் நெகட்டிவ்வான பாயிண்டா வந்து சிக்குது யசோ? அந்தக் குழந்தைங்க சின்ன வயசுலயே பெரியவங்க மாதிரி மெச்சூர்டா வளர்றாங்க… சங்கீதம், யோகா, நடனம், தற்காப்புக்கலைனு எல்லா விசயமும் அங்க சொல்லிக் குடுக்குறாங்க… ஏட்டுக்கல்வியை விட வாழ்க்கை கல்வி முக்கியம்னு அங்க போய் பாத்ததுக்கு அப்புறம் தான் நான் புரிஞ்சுக்கிட்டேன்… மஹிமானு ஒரு ஏழு வயசு பொண்ணு எவ்ளோ அழகா கீர்த்தனை பாடுறா தெரியுமா? எனக்கு அவளைப் பாக்குறப்ப நம்ம சர்மி நியாபகம் தான் வரும்” என்று சிலாகிக்க

“எல்லாம் சரி தான் சித்து… ஆனா நீ சொல்லுற டான்ஸ், மியூசிக், யோகா, செல்ப் டிபென்ஸ் எல்லாமே மத்த ஸ்கூல்லயும் கத்துக்குடுக்குறாங்க, ஆனா அது எல்லாமே எக்ஸ்ட்ரா கரிக்குலார் ஆக்டிவிட்டீஸ்… மெயினா கத்துக்க வேண்டிய லாங்வேஜ், மேத்ஸ், சயின்ஸ், எகனாமிக்ஸ் இது எதையும் கத்துக்காத குழந்தை இந்த போட்டி நிறைஞ்ச உலகத்துல எப்பிடி சர்வைவ் பண்ணும் சித்து? உலகம் எங்கயோ போயிட்டிருக்கு சித்து… அதுக்கேத்த மாதிரியான எஜூகேசனை குழந்தைகளுக்குக் குடுக்கணுமே தவிர நீ சொல்லுற எஜூகேசன் சிஸ்டமை குடுக்குறது வேஸ்ட்” என்றாள் யசோதரா தடாலடியாக.

சித்தார்த் அவளை வினோதமாகப் பார்த்தவன் “எத்தனை பேரண்ட்ஸ் தங்களோட பசங்களுக்கு அங்க சீட் கிடைக்காதானு காத்திருக்காங்க தெரியுமா?” என்று ஆதங்கத்துடன் வினவ

“அது அவங்கவங்க சொந்த விருப்பம்… ஆனா அந்த ஸ்கூல்ல படிச்சா தான் கௌரவம்னு நினைச்சு குழந்தைங்களோட படிப்பை டீல்ல விடுறது நல்லாவா இருக்கு? நீ சொல்லுற முக்தி வித்யாலயால ஸ்டூடண்ட்சுக்கு ஏகப்பட்ட ரூல்ஸ் இருக்குனு கேள்விப்பட்டேன்… என்னைப் பொறுத்தவரைக்கும் அளவுக்கு மிஞ்சிய கட்டுக்கோப்பான வாழ்க்கைக்கு அர்த்தம் அடக்குமுறை… அந்த அடக்குமுறைல வளர்ற குழந்தை அதை விரும்பாது… எப்போடா அதை விட்டு வெளிய வருவோம்னு தான் காத்திருக்கும்.. இது குழந்தையோட எதிர்காலத்துக்கு நல்லது இல்ல” என்று கூற வழக்கம் போல சித்தார்த் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

அதற்கு மேல் வாதிட விரும்பாமல் இருவரும் உறங்க சென்ற போது நேரம் நள்ளிரவை எட்டியிருந்தது.

அதன் பின்னர் வந்த நாட்களில் யசோதரா தனது வேலையில் மூழ்கிப்போனாள். அடிப்படை வேலையாக முக்தி வித்யாலயாவில் இருந்து டிராப்-அவுட் ஆன குழந்தைகள் பற்றிய விவரத்தைச் சேகரிக்க ஆரம்பித்திருந்தாள். அதோடு ருத்ராஜிக்கு நெருக்கமானவரான ரவீந்திரனை பற்றிய செய்திகளையும் திரட்டிக்கொண்டிருந்தாள்.

அதே நேரம் சாந்தகோபாலன் ராகேஷின் பரோலுக்கு விண்ணப்பித்தார். சிறைத்துறை டி.ஜி.பியிடம் ஒப்புதல் கிடைக்காவிட்டால் நீதிமன்ற பரோலில் எடுத்துவிடலாம் என மனைவிக்கு நம்பிக்கை கொடுத்திருந்தார் அவர்.

சகுந்தலா மகனை நீண்டநாள் கழித்து காணும் ஆவலுடன் காத்திருக்க அவரது ஆசைப்படி சிறைத்துறை டி.ஐ.ஜி ராகேஷை பரோலில் விட அனுமதித்துவிட்டார். கடந்த ஏழாண்டுகளில் சிறை விதிகள் எதையும் அவன் மீறியதில்லை என்பதாலும், இது வரை அவன் பரோலுக்கு விண்ணப்பித்ததில்லை என்பதாலும் அவனுக்கு பரோல் கிடைப்பது எளிதானது.

அவனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட அந்தப் பரோல் காலகட்டத்தில் மருத்துவமனைக்குச் செல்ல மட்டுமே அவனுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கூடவே சாந்தகோபாலனின் இல்லத்திற்கு காவலர்களும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இத்தனை கெடுபிடிகளுடன் ராகேஷ் பரோலில் வெளியே வந்தான். ஏழாண்டுகள் வெளியுலகைக் காணாதவனின் கண்கள் அங்கே தெரிந்த மாற்றங்களை வியப்புடன் பார்த்தது. சாந்தகோபாலனின் இல்லத்தை வந்தவடைந்தவனைக் கண்டதும் சகுந்தலாவின் கண்களில் கண்ணீர் அருவியாகப் பெருக்கெடுத்து ஓடியது. சாந்தகோபாலனுக்கும் மகனைக் கண்டதில் சிறிய மகிழ்ச்சி உண்டானாலும் அவன் செய்த தவறுகளை அவரால் மறக்கமுடியவில்லை.

சகுந்தலாவோ கணவரின் இளக்கமற்ற பார்வையைச் சந்தித்ததும் அவனை அணைத்துக்கொண்டவர் “எப்பிடிப்பா இருக்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்க

“நல்லா இருக்கேன்மா” என நிதானத்துடன் வெளிவந்தது அவனது குரல்.

இந்த நிதானம் அவனது இயல்பல்ல! எப்போதும் பரபரப்பும் படபடப்புமாக இருந்தவன் அவன்! இத்துணை பொறுமையும் நிதானமும் கைவரக் காரணம் ஏழாண்டு சிறைவாசமாகக் கூட இருக்கலாம் என்பது சாந்தகோபாலனின் எண்ணம்!

மெலிந்த அவனது தேகமும் இலக்கின்றி விரக்தியைப் பூசிக்கொண்டு அலையும் கண்களும் அவனது நிலையை அவருக்கு உணர்த்தியது. என்றாலும் ஏதோ ஒரு தயக்கம் அவனிடம் நெருங்காதே என சாந்தகோபாலனைத் தடுத்தது.

ராகேஷும் அதைப் புரிந்துகொண்டவனாக குறுஞ்சிரிப்புடன் அவரைக் கடந்து அந்த வீட்டில் அவனது அறையாக ஏழாண்டுகளுக்கு முன்னே இருந்த அறையை நோக்கிச் சென்றான்.

வந்தவன் ஓய்வெடுக்கட்டும் என மனைவியிடம் கூறியவர் அவன் எழுந்ததும் மருத்துவரை வரவழைத்து உடல்நிலையைப் பரிசோதித்து விடலாம் என்று கூறிவிட்டு அகன்றார்.

வந்தவனின் மனநிலை என்னவென அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்த ஏழாண்டு சிறைவாசம் அவனை சிறிதளவேனும் மாற்றியிருக்கும் என்ற நம்பிக்கையுடன் மாதவனையும் சித்தார்த்தையும் கான்பரன்ஸ் காலில் இணைத்தவர் ராகேஷ் வீட்டிற்கு வந்துவிட்ட தகவலைக் கூறினார்.

இருவரும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கவில்லை என்றாலும் ஒரு காலத்தில் அவர்களிடையே இருந்த நட்பைக் காரணம் காட்டி அவனது சேமநலனை விசாரித்தனர். எது எப்படியோ ராகேஷின் வருகை அவர்கள் மூவருக்கும் ஏதோ ஒரு வகையில் குழப்பமான மனநிலையைப் பரிசாக அளித்தது என்னவோ உண்மை!

மழை வரும்☔☔☔