☔ மழை 25 ☔

கார்பரேட் சாமியார்களின் பணபலம் சமூக செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காணிக்கைகளால் மட்டும் இந்தச் செல்வம் சேர்வதில்லை. இவர்கள் கல்லூரிகளையும் வர்த்த நிறுவங்களையும் நடத்துகிறார்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்கள் வாங்கிக்குவிக்கிறார்கள். நில ஆக்கிரமிப்புகள் மூலம் பெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். இது போன்ற கார்ப்பரேட் ஆன்மீக அமைப்புகள் வருமானவரி கணக்குகளுக்கு ஆட்படுத்தப்படுவதில்லை. செல்வாக்கு மிக்க மனிதர்களின் தொடர்பினால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கண்டுகொள்ளப்படுவதுமில்லை. சில கார்ப்பரேட் சாமியார்களுக்கு லட்சகணக்கான ‘பின் தொடர்பவர்கள்’ இருப்பதால் வாக்கு வங்கி அரசியல் காரணமாக ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் இவர்கள் சார்ந்த குற்றங்களில் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.

                                                         –எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தினகரன் 29.10.2019

யசோதரா விஷ்ணுபிரகாஷிடம் பேசிய அடுத்த நாளே தீபா தனது மாமியாரிடம் புலம்பும் ஆடியோவை ஜானகியின் சம்மதத்துடன் ஜஸ்டிஷ் டுடே தங்களது ரியாலிட்டி செக் ஷோவில் ஒளிபரப்பி விட அதன் எதிரொலி மற்ற ஊடகங்களில் எழுந்தது. அனைத்து செய்தி தொலைகாட்சிகளும் சமூக ஊடகங்களும் மாறி மாறி அந்த ஆடியோவை போட்டு காட்டியே மக்களிடம் அதிருப்தியை மெதுவாய் விதைத்தன.

அது வெகு வேகமாக வளர்ந்து சில அமைப்புகள் முக்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியது. டிவிட்டரில் ஹேஷ்டேக்குகள் ட்ரண்டாக ஆரம்பிக்க முக்தியின் மேலாண்மை இதை எதிர்கொள்ள திணறியது என்னவோ உண்மை!

நாடெங்கும் யோகாமையங்கள், உலகின் முக்கியமான மேற்கத்திய நாடுகளில் கிளைகள் கொண்ட ஒரு நிறுவனத்தால் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களைச் சமாளிக்க இயலவில்லை என்பது ஆச்சரியம் தான்!

அவர்களின் தொழில்நுட்பக்குழு, பக்தர்கள், பிரபலங்கள் மற்றும் சில அரசியல் தலைமைகள் முக்திக்கு ஆதரவாய் குதித்தாலும் காவல்துறையினர் முக்தியின் மேகமலை ஆசிரமத்துக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.

காவல்துறையில் புகார் கொடுத்தது சாட்சாத் ஜானகி தான்! அவருக்கு துணையாக தீபாவின் பெற்றோரும் உடனிருக்க காவல்துறையினர் முக்தி மேலாண்மையைக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

சர்வருத்ரானந்தா வழக்கம் போல சாந்தம் தவழும் முகத்துடன் சமயோஜிதமாகப் பதிலளித்தாலும் மற்றொரு பக்கம் முக்தியின் நற்பெயருக்குக் களங்கம் வராமல் தடுப்பதில் அதன் மேலாண்மை தீவிரமாக முயன்று கொண்டிருந்தது.

வழக்கறிஞர் குழுவின் ஆலோசனை ஒரு பக்கம் நடக்க மற்றொரு பக்கம் காவல்துறையினர் தீபாவை அழைத்து விசாரணை நடத்தினர். அவளோ தன்னை இங்கிருந்து அழைத்துச் சென்றால் மட்டும் போதுமென கூறினாளேயொழிய முகுந்தை பற்றி வாயைத் திறக்கவில்லை.

காவல்துறை அதிகாரி முகுந்த் எங்கே என்று விசாரிக்க அதற்கான பதிலை யோகா இன்ஸ்ட்ரக்சர்களின் தலைவராக இருந்தவர் அவன் வட இந்தியாவிலுள்ள முக்தியின் கிளைக்குப் புதிய செயல்திட்டத்தை வழிநடத்த சென்றிருப்பதற்காக கூறிவிட்டார்.

அதன் பின்னரும் முகுந்தை பற்றி தோண்டி துருவி காவல்துறையினர் விசாரிக்க அவனது தந்தை ரவீந்திரன் ஆபத்பாந்தவராக வந்து தனது மைந்தனை மொபைலில் அழைத்து காவல்துறையினரிடம் பேசும்படி பணித்தார்.

அவனும் பேசினான். தனக்கு தீபாவின் மீதிருந்த ஈர்ப்பு உண்மை தான் என்று ஒப்புக்கொண்டவன் ஆரம்ப நாட்களில் இருந்த ஈர்ப்பு இப்போது இல்லை எனவும் தனக்கு இப்போது முக்தி ஃபவுண்டேசனின் வளர்ச்சி தான் முக்கியம் என்றும் கூற தீபாவைத் தவிர மற்ற அனைவரும் அதிர்ந்தனர்.

முக்கியமாக ஜானகியின் கண்கள் கலங்கிவிட்டது. அவர் ஏதோ பேச வர அதற்குள் தீபா அவரது கரத்தை அழுத்தினாள். அவளை ஏறிட்டவரிடம் ஏதும் பேசாதீர்கள் என்று கண்களால் கெஞ்சினாள் தீபா.

அவரும் அமைதியாகிவிட சர்வருத்ரானந்தா அமைதியாக தீபாவை நோக்கியவர் “நீங்க தாராளமா உங்க பேரண்ட்ஸ் கூட கிளம்பலாம் தீபா… முகுந்த் முக்திக்கு சேவை செய்யுறது தான் தன்னோட நோக்கம்னு சொல்லிட்டார்ல… ஏ.சி.பி சார் இவங்களை அழைச்சிட்டுப் போங்க” என்று புன்சிரிப்புடன் கரம் குவித்தார்.

அவரது சிரிப்பைக் கண்ட தீபாவின் கண்களில் கிலி பரவ பதிலுக்கு கை கூப்பி நன்றி கூறிவிட்டு எவ்வளவு விரைவில் அங்கிருந்து கிளம்ப முடியுமோ அவ்வளவு விரைவில் பெற்றோர் மற்றும் மாமியாருடன் காவல்துறையினர் உதவியால் முக்தியை விட்டு வெளியேறினாள்.

அந்தச் செய்தி தொலைகாட்சிகளில் தவறாமல் இடம்பிடிக்க சிலர் முகுந்த் இப்படி மாறி பேசியிருக்ககூடாது என்று வாதம் செய்ய இன்னும் சிலரோ சர்வருத்ரானந்தா தீபாவின் விசயத்தில் நடந்து கொண்ட முறையை பாராட்டினர்.

அங்கிருக்க பிடிக்காதவர்களை முக்தி ஒன்றும் கட்டாயப்படுத்தி அங்கேயே அடைத்து வைத்திருப்பதில்லை எனவும் சர்வருத்ரானந்தா அமைதி வழியில் நடக்கும் ஆன்மீகவாதி எனவும் அவர்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் கர்வத்துடன் வீடியோ வெளியிட்டது வேறு கதை!

இத்தகவல்கள் அமெரிக்காவில் இருக்கும் சர்வசிவானந்தாவின் காதுகளை அடைந்ததும் அவரிடம் விளக்கமளித்தவர் ரவீந்திரன் தான். தனது மகன் செய்த தவறின் விளைவு தான் இந்தப் பிரச்சனை என்றும், சர்வருத்ரானந்தா அவனை வட இந்தியாவிற்கு அனுப்பி பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்துவிட்டார் என்றும் பாராட்ட வேறு செய்தார் அம்மனிதர்.

வட இந்தியாவிற்கு சென்ற மகனுக்கு நேரப்போகும் அனர்த்தங்களை அவர் முன்கூட்டியே அறிந்திருந்தால் எப்பாடுப்பட்டேனும் அவனைக் காத்திருப்பார். ஆனால் விதி அவரைக் கண்ணீரும் கம்பலையுமாக புலம்ப வைக்க திட்டமிட்ட பிறகு அந்த மனிதரால் மட்டும் என்ன செய்யமுடியும்!

அதே நேரம் சென்னைக்குத் திரும்பிய தீபா மாமியாருடன் இருந்து கொள்வதாகக் கூறி பெற்றோரை அனுப்பிவைத்துவிட்டாள். ஏன் முகுந்த் இப்படி மாற்றி பேசினான் என்று ஆதங்கப்பட்ட ஜானகியிடம் சில நாட்கள் பொறுமை காக்குமாறு வேண்டிக்கொண்டவள் அந்த ஃப்ளாட்டிற்குள்ளேவே அடைப்பட்டாள்.

வெளியுலகமோ முக்தியைப் பற்றி தீவிரமாகப் பேசிக்கொண்டது. தீபாவைப் பத்திரமாக சென்னை அழைத்து வந்துவிட்ட தகவலை ஜானகியே மயூரியிடம் நிம்மதியுடன் பகிர்ந்துகொள்ள அவள் யசோதராவுக்கு நன்றி தெரிவித்தாள்.

அவளோ “ஹூம்! யார் யாரையோ அந்த குரூப் கிட்ட இருந்து காப்பாத்துறோம்… ஆனா நம்ம வீட்டு மனுசங்களை இன்னும் முழுசா அவங்க கிட்ட இருந்து பிரிக்கமுடியலயே மய்யூ! சித்து இப்போவும் இந்த நியூசை நம்ப மாட்றான்டி… மேடி சித்துவோட டிட்டோ… என்னோட மாமியார் மாமனாரோ அந்த தீபா சின்ன விசயத்தை பெருசுபடுத்திட்டதா சொல்லுறாங்க… என்னத்த சொல்ல? ஸ்டிங் ஆபரேசனுக்காக எங்க டீம் டே அண்ட் நைட் முக்தி பத்தி டீடெய்ல் கலெக்ட் பண்ணிட்டிருக்கோம்… ஸ்ட்ராங்கான டாக்குமெண்ட்ரி எவிடென்ஸ் கிடைச்சா நல்லா இருக்கும்” என்றாள் பெருமூச்சுடன்.

“இப்போ தானே ஆரம்பிச்சிருக்கீங்க, போக போக எல்லாம் உங்க கைக்கு வரும்” என்றாள் மயூரி.

யசோதராவிடம் பேசிவிட்டு அவள் வகுப்பிற்கு செல்ல ஆயத்தமாக ஜஸ்டிஷ் டுடே அலுவலகத்தில் அவர்களின் ஸ்டிங்க் ஆபரேஷனுக்கான குழு மட்டும் கான்பரன்ஸ் ஹாலில் அமர்ந்திருந்தது.

விஷ்ணுபிரகாஷ் தங்களின் முதல் அடியில் கிடைத்த வெற்றிக்கு வாழ்த்து கூறியவன் அடுத்தடுத்த திட்டங்களை விவரித்தான். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு ரகு கூறியது ஒன்றே ஒன்று தான்.

“சீஃப் என்ன தான் சட்டவிரோதமா அங்க பில்டிங் கட்டுறாங்க, இன்கம்டாக்ஸ்ல ஏமாத்துறாங்கனு சொன்னாலும் நமக்கு ஸ்ட்ராங்கான டாக்குமென்ட்ரி எவிடென்ஸ் வேணும்னா வீ ஹேவ் டூ விசிட் தேர்… கண்ணால பாத்து ஆராய்ஞ்சு கிடைக்குற ஆதாரம் தான் நின்னு பேசும் சீஃப்”

அவன் கூறிய கருத்தை நாராயணன் ஆமோதித்தார்.

“அப்பிடி நேர்ல விசிட் பண்ணுறவங்க ஒன்னு மீடியால வராத ஃபேஸா இருக்கணும்… இல்லனா முக்தியோட பக்தர்களா இருக்கணும்… அவங்க நமக்காக வேலை செய்ய ஒத்துக்கணும்” என்றான் ரகு.

மேனகாவும் ஸ்ராவணியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள யசோதராவும் சுலைகாவும் தங்களில் யாரும் நேரில் சென்று பார்க்க முடியாது என்பதால் யாரை குழுவில் இணைக்கலாம் என்ற யோசனையில் இறங்கினர்.

அடுத்தடுத்த திட்டங்களைப் பற்றி ஆளுக்கொரு யோசனை சொல்ல அன்றைய மீட்டிங்கில் வைக்கப்பட்ட அனைத்து யோசனைகளையும் அனுராதா குறித்துக்கொண்டாள்.

“மொத்தம் நாலு விதமான ப்ளான்ஸ்… இதுல எது நமக்கு பெஸ்ட்டான ரிசல்டை குடுக்கும்னு அனலைஸ் பண்ணி அதையே ஸ்டார்ட் பண்ணுவோம்” என்று கூறிய நாராயணன் யார் யாருக்கு என்னென்ன வேலை என்று பிரித்துக் கொடுத்துவிட்டார்.

வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கும் பொறுப்பு வழக்கம் போல ஸ்ராவணிக்கும் மேனகாவுக்கும் வழங்கப்பட ஆவண ரீதியான ஆதாரங்கள் சேகரிப்பை யசோதரா தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டாள்.

ரகு புரொடக்சன் டீமில் இருந்தாலும் ஹேக்கிங்கில் கில்லாடி என்பதால் இணையதளங்களில் இருந்து இரகசிய தகவல்களைத் தோண்டி எடுக்கவும் முக்தி ஃபவுண்டேசனின் தளங்களை அலசி ஆராயவும் அவனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

அனுராதா கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் வகைப்படுத்த பூர்வி அதை ஸ்க்ரிப்டாக மாற்றும் பணியை ஏற்றுக்கொண்டாள். எடிட்டிங் வேலை வழக்கம் போல நாராயணனுக்குத் தான். முடிவாக அதை தொலைகாட்சியில் பேசி மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் பணி சுலைகாவிற்கும் விஷ்ணுபிரகாஷிற்கும் வந்து சேர்ந்தது.

நாராயணன் வேலையைப் பிரித்துக்கொடுத்த பிறகு விஷ்ணுபிரகாஷ் வழக்கம் போல அறிவுரை கூற ஆரம்பித்தான். அதை பொறுமையாக கேட்டுக்கொண்டனர் அனைவரும்.

“உங்க ஒவ்வொருத்தருக்கும் ஹெல்ப் பண்ணுறதுக்கு நீங்க அபிஷியலாவோ அன்-அபிஷியலாவோ நம்பகமான வெளியாட்களை வச்சுக்கலாம்… எனக்குத் தெரிஞ்சு யசோக்கும் ரகுவுக்கும் மட்டும் தான் அவுட்சைடர் ஹெல்ப் தேவைப்படும்னு நினைக்கேன்” என்றான் அவன்.

ரகுவும் யசோதராவும் அர்த்தபுஷ்டியுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேற யசோதராவிடம் பேசியபடி வந்தான் ரகு.

“எனக்கு தெரிஞ்சு முக்திக்கு எங்க இருந்து ஃபண்ட் வருது, அந்த ஃபண்ட் வச்சு அவங்க என்னென்ன பண்ணுறாங்க, சப்போஸ் சட்டத்தை ஏமாத்திருக்காங்கனா அது என்னென்ன வழில இந்த எல்லா கேள்விக்கும் நீ ஆதாரம் கலெக்ட் பண்ணணும் யசோ… உன்னோட ஆதாரத்தோட அடிப்படைல தான் நான் வேலைய ஆரம்பிக்க முடியும்”

“ஆமா ரகு! அதான் எங்க இருந்து ஆரம்பிக்கலாம்னு யோசிக்கேன்… ம்ம்… அட அவரை எப்பிடி நான் மறந்தேன்?” என்று ஆச்சரியத்துடன் கூறியவள் மொபைலின் தொடுதிரையில் ஒரு எண்ணை தேடி எடுத்து அழைக்கத் தொடங்கினாள்.

அழைப்பு மறுமுனையில் ஏற்கப்பட்டதும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் அந்நபரைச் சந்திக்கவரலாமா என்று அனுமதி கேட்கவே அவரும் இரண்டு நாட்கள் கழித்து சந்திக்கலாம் என்று கூறிவிடவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தவள்

“அடேய் ரகு என்னோட வேலை ஆரம்பிச்சிடுச்சுடா… நான் இன்னும் டூ டேய்ஸ் கழிச்சு தயானந்த் சாரை மீட் பண்ணப்போறேன்” என்றாள்.

அவரிடமிருந்து அடிப்படை ஆதாரங்களைத் திரட்டிவிட்டால் முதல் கட்ட வேலைகள் முடிந்துவிடுமென அவள் மனதில் ஒரு திட்டம் போட விதியோ அவளது கணவனின் வாழ்வில் இன்னொரு திட்டத்தைத் தீட்டிவிட்டு அவர்களை விலக்கி வைக்கும் தருணத்திற்காக காத்திருந்தது.

***********

இரண்டு நாட்களுக்குப் பிறகு, லேக் வியூ சில்வேனியா டூரிஸ்ட் என்க்ளேவ், குமரகம்…

ரிசார்ட் அறையில் வேகமாக டிசைனர் தாவணியைச் சுற்றிக் கொண்டிருந்தாள் சாருலதா. அடர்பச்சையும் மஞ்சளுமான வண்ணத்தில் ஆங்காங்கே பொன்னிற வேலைபாடுகள் மட்டும் செய்யப்பட்ட தாவணியை அணிந்து முடித்தவள் காதுகளில் முத்துக்களாலான சந்த்பலியை அணிந்து கொண்டாள்.

கரங்களில் இரட்டை வளையல்கள், கழுத்தை ஒட்டி சிறிய ஆரம், அலையாய் தோள்களில் புரண்ட கூந்தல், நெற்றியில் ஒற்றை கல் பொட்டாக மிளிர இதோ அவள் திருமணத்திற்கு செல்ல தயாராகிவிட்டாள்.

அவள் திருமண நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தான் செல்கிறாள். ஆனால் அவளும் அவளது தோழர்களும் கட்டாயம் பாரம்பரிய உடையில் தான் வரவேண்டுமென்பது மணமகளின் அன்பான வேண்டுகோள்.

கல்யாணப்பெண்ணே கேட்கும் போது மறுக்க முடியுமா? அவளும் அவளது தோழர்களும் கோட்டயத்திற்கு சென்று உடைகளை வாங்கிக்கொண்டனர்.

ப்ரியா கேரளா பாணி கசவு புடவையை வாங்கிக்கொள்ள சாருலதாவின் கரமும் பொன்னிற பார்டரிட்ட சந்தனவண்ண புடவையை எடுக்க சென்ற கணத்தில் இந்திரஜித் அது வேண்டாமென பிடிவாதம் பிடித்து வாங்கியது தான் இந்த டிசைனர் தாவணி.

“என் கிட்ட கசவு ஷேரி கிடையாது ஜித்து… அதையே வாங்கிக்கிறேன்டா” என்று சிணுங்கியவளிடம்

“அங்க வர்ற மேக்சிமம் கேர்ள்ஸ் இந்த ஷேரி தான் கட்டியிருப்பாங்க… நீயும் பத்தோட பதினொன்னா அதை கட்டிட்டு நிக்கப் போறியா?” என்று கேலியாக கூறிவிட்டு அந்த தாவணியை எடுத்து அவள் கரங்களில் திணித்தான் இந்திரஜித்.

இப்போது தன்னை கண்ணாடியில் பார்த்தபோது இந்திரஜித்தின் தேர்வைப் பாராட்ட தோணியது சாருலதாவிற்கு. அதற்குள் கதவு தட்டப்பட “வந்துட்டேன் ரியா” என்றபடி ஓடினாள் அவள்.

கதவைத் திறந்ததும் ப்ரியா புடவையில் தயாராய் நின்றிருந்தாள்.

“நான் எப்பிடி இருக்கேன் யசோ?”

“ம்ம்ம்… பாக்குறதுக்கு கோட்டயம் புஷ்பநாத் கதைல வர்ற யட்சி மாதிரி இருக்க”

“அடியே” என்று அவள் பற்களை நறநறவென கடிக்க

“அவ்ளோ அழகா இருக்கேனு சொன்னேன் செல்லக்குட்டி” என்று அவளின் மோவாயைக் கிள்ளி தன் உதட்டில் முத்தமிட்டுக் கொண்டாள் சாருலதா.

“ஹான், அந்தப் பயம் இருக்கட்டும்” என்றவள் “அதுல்லாம் சரி, எங்க ஜித்துவ காணும்?” என்று விழிகளைச் சுழற்ற இப்போது பற்களைக் கடிக்கும் வேலையைத் தனதாக்கிக் கொண்டாள் சாருலதா.

அந்தச் சத்தம் ப்ரியாவிற்குள் கிலியைப் பரப்ப “நம்ம கூட வந்த ஆளை காணுமேனு அக்கறைல கேட்டேன் செல்லக்குட்டி” என்று அவளைப் போலவே மோவாயைக் கிள்ளி முத்தமிட்டு சமாளித்தாள் அவள்.

சாருலதா கண்களைச் சுருக்கி உன்னை நான் நம்பவில்லை என்று சொல்லாமல் சொல்ல அதற்குள் சுரேஷும் ஆகாஷும் வேஷ்டி சட்டையில் வந்து சேர்ந்தனர்.

அனைவரின் கரங்களிலும் உபகரணங்கள் வீற்றிருக்க கிளம்பலாம் என்று முடிவெடுத்தக் கணத்தில் “ஹலோ கய்ஸ் நானும் வந்துட்டேன்” என்ற அறிவிப்புடன் வந்தான் இந்திரஜித்.

வந்தவனின் விழிகளை மறைத்திருந்த கூலர்சைக் கழற்றுமாறு சாருலதா கட்டளையிடவும் கழற்றியவன் இரு கரங்களையும் விரித்து “நான் எப்பிடி இருக்கேன்?” என்று கேட்க அதற்கு சாருலதாவை முந்திக்கொண்டு பதிலளித்தாள் ப்ரியா.

“யூ ஆர் சோ ஹான்ட்சம் ஜித்து”

அதற்கு இந்திரஜித்திடமிருந்து ஒரு மந்தகாசப்புன்னகையும் சாருலதாவிடமிருந்து முறைப்பும் பரிசாகக் கிடைக்க முன்னதை ஏற்று பின்னதை காணாதது போல இருந்துகொண்டாள் ப்ரியா.

“போதும் போதும்! ஆல்ரெடி முகூர்த்தத்துக்கு டைம் ஆகுது… கிளம்புவோமா?” என்று சாருலதா அதட்டலுடன் தனது உபகரணங்கள் அடங்கிய பேக்கைத் தூக்கிக் கொள்ள

“வெயிட்டா இருக்குமே சாரு… நான் வச்சிக்கிறேன் சாரு” என்று அவள் மனதைக் குளிரவைத்தான் இந்திரஜித்.

ஆனால் அந்தக் குளிர்ச்சியை உணரும் முன்னரே ப்ரியா சத்தமாகப் பாடுவது காதில் விழ சாருலதா மீண்டும் எரிமலையானாள்.

He is so cute
He is so sweet
He is so handsome
He is so cool
He is so hot
He is just awesome

“ஏய் பாதைல கண்ணை வச்சு போடி… இல்லனா ஏரிக்குள்ள விழுந்துடப் போற… ஹான்ட்சம்மாம் ஹாண்ட்சம்… நீ சென்னைக்கு வா மகளே!” என்று அவள் கடுகடுக்க இந்திரஜித் நமட்டுச்சிரிப்பை அடக்கியபடி அவளுடன் நடந்தான்.

அவர்கள் ஏற்பாடு செய்திருந்த டாக்சி திருமணம் நடக்கவிருக்கும் மண்டபத்தை அடையும் வரை அந்த நமட்டுச்சிரிப்பு மறையவில்லை.

மண்டபத்தை அடைந்ததும் மணப்பெண்ணின் அறைக்குள் சென்று புகைப்படம் எடுக்கும் வேலையை ப்ரியா கவனித்துக்கொள்ள மணமேடையை படமாக்கும் வேலை சாருலதாவிடம் வந்தது.

அவளும் ஆகாஷும் தத்தம் உபகரணங்களுடன் மணமேடையை அடைந்தனர். அங்கே இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஆளுயர நிலவிளக்குகள் பூச்சரங்களுடன் நின்றிருக்க அவற்றை அடுத்து கேரள பாரம்பரியப்படி பித்தளை நாழியில் நெல்லைக் குவித்து அதன் மீது தென்னம்பாளையை வைத்திருந்தனர்.

தோழியுடன் நின்ற இந்திரஜித் அந்த தென்னம்பாலையை கிள்ள முயல “டேய் அதை ஏன்டா கிள்ளுற?” என்று அவசரமாக இடைமறித்தாள் சாருலதா.

“என்னதுனு பாக்குறதுக்குத் தான்”

“இது தென்னம்பாளைடா… பாத்ததே இல்லையா? இந்தப் பக்க மேரேஜ்ல இது கம்பெல்சரியா வைப்பாங்க… இதை ‘நெல்பறா’னு சொல்லுவாங்க” என்று அவனிடம் விளக்கியபடியே எளிமையிலும் அழகாக ஜொலித்த மணமேடையைப் புகைப்படமாக்கினாள் சாருலதா.

மணமேடைக்குக் கீழே வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்த விருந்தினர்களை படம் பிடிக்க அவள் கேமராவை உயர்த்தவும் இவ்வளவு நேரம் தாவணி முந்தானை மறைத்திருந்த சிற்றிடை இப்போது பளிச்சென்று தெரிய இந்திரஜித்தின் பார்வை அவள் இடை பக்கம் சென்று விட்டது.

குறும்புத்தனம் ஓவர்டோஸ் ஆகி அவன் அடித்த சீட்டியொலியில் சாருலதா கவனம் கலைந்தவள் அவனது பார்வை தனது இடையை வலம் வருவதைக் கண்டு ஒற்றைக்கரத்தால் அவனது தாடையைப் பற்றி நேராக திருப்பினாள்.

“மூஞ்சிய பாரு… மென் வில் ஆல்வேய்ஸ் பி மென்”

அவள் கடுப்புடன் முணுமுணுத்துவிட்டு கவனமாக முந்தானையை இழுத்துப் பிடித்துச் செருகிவிட்டுப் படம்பிடிக்க ஆரம்பித்தாள். இந்திரஜித் மாட்டிக்கொண்டாலும் கெத்தை விட மனமில்லாதவனாக முணுமுணுக்கும் இதழ்களில் பார்வையைப் பதிக்க சாருலதா அதையும் ஓரக்கண்ணால் கண்டுவிட்டாள்.

படம்பிடிக்கும் பொறுப்பை ஆகாஷிடம் ஒப்படைத்தவள் அவனை தனியே அழைத்துச் சென்றுவிட்டாள்.

“என்னடா பண்ணுற நீ?” நேரடியாகக் அவள் கேட்க

“ஒன்னுமில்லயே” என்று தோளைக் குலுக்கினான் இந்திரஜித். கூடவே முகத்தை வேறு பரிதாபமாக வைத்துக்கொண்டான்.

“ஏய் செய்யுறதையும் செஞ்சுட்டு மூஞ்சிய அப்பாவி பையன் மாதிரி வைக்காதடா.. அப்புறம் அன்னைக்கு மாதிரி கடிச்சு வச்சிடுவேன்” என்று அவனது கையை இழுக்க

“நான் இன்னும் எதுவுமே செய்யலயே சாரு” என்று மீண்டும் அவன் பரிதாபமாகச் சொன்னாலும் கண்கள் விசமத்தில் மிளிர்ந்து அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அவளுக்குப் புரியவைத்துவிட அவனது தோளில் பட்பட்டென்று அடித்தாள் சாருலதா.

“சை! டபுள் மீனிங், டர்டி மைண்ட் ரெண்டும் கலந்த கலவை நீ… ஒழுங்கு மரியாதையா இங்கயே நின்னும் மேரேஜ் ரிச்சுவல்ஸை வேடிக்கை பாரு… என் வேலையை தொந்தரவு பண்ணுனேனு வையேன், ஐ வில் கில் யூ” என்று மிரட்டிவிட்டு அகன்றாள் அவள்.

இந்திரஜித் அங்கேயே அமர்ந்து அவள் புகைப்படம் எடுப்பதையும் ஆகாஷ் வீடியோ எடுப்பதையும் பார்க்க ஆரம்பித்தான்.

திருமணச்சடங்குகள் மெதுவாய் ஆரம்பித்தது. புரோகிதர் வந்துவிட அடுத்த சில நிமிடங்களில் மங்கலநாதம் ஒலிக்க மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட்டனர். பின்னர் மாப்பிள்ளையை மணமேடையில் அமர்த்தி மற்ற சடங்குகள் ஆரம்பமானது.

நல்ல நேரம் நெருங்கியதும் பெண்ணின் தந்தை மகளை கரம் பற்றி அழைத்து வர அவள் மணமேடையில் நின்று வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு மணமகன் அருகே அமர்ந்துகொண்டாள்.

மாங்கல்யதாரணம் முடிந்ததும் அங்கிருந்த துளசி மாலையை மாற்றிக்கொண்டு ஹோமகுண்டத்தை வலம் வந்தனர் மணமக்கள்.

இந்த அனைத்து நிகழ்வுகளையும் அட்லாண்டிஸ் மக்கள் அழகாய் கேமராவில் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்துத் தள்ள திருமணச்சடங்குகள் இனிதே நிறைவுற்றது.

அதன் பின்னர் சில பல புகைப்படங்கள் எடுக்கப்பட திருமண விருந்து ஆரம்பித்தது. அதையும் புகைப்படம் எடுக்க வேண்டுமல்லவா? முதலில் ப்ரியாவையும் ஆகாஷையும் சாப்பிட அனுப்பிய சாருலதா சுரேஷுடன் சேர்ந்து அதை படம்பிடித்தாள்.

“ஜித்து என்னோட சாப்பிட வர்றீங்களா?” ப்ரியா அழைத்த கணம் அவளை முறைத்தவள்

“ஒழுங்கா இலைய பாத்து சாப்பிடுடி… சேட்டா இவளுக்குக் கொஞ்சம் தோரன் வைங்க” என்று அவளுக்குப் பரிமாறும்படி பணித்துவிட்டு வேலையில் ஆழ்ந்தாள்.

இந்திரஜித்தோ அவள் கண்ணும் கருத்துமாக வேலை செய்வதை கன்னத்தில் கை வைத்து ரசனையுடன் பார்க்க ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் சென்றதோ அவன் அறியான்! சாருலதா அவனது தோள் தொட்டு சாப்பிட வரும்படி அழைக்கவும் கனவிலிருந்து விழிப்பவன் போல எழுந்தவன் அவளருகே சாப்பிட அமர்ந்தான்.

என்ன பரிமாறினார்கள், எதை சாப்பிட்டான் என்று எதுவும் அவன் மனதில் பதியவில்லை.

“இந்த உப்பேறி நல்லா இருக்குல்ல” என்று ரசித்து சாப்பிட்டவளின் முகபாவனை தான் அவன் மனதில் பதிந்து போனது. சாருலதா தான் கேட்ட எதற்கும் உம் தவிர வேறெந்த பதிலும் அளிக்காதவனைத் திகைப்புடன் பார்த்தவள் அவனது விழிகளில் தெரிந்த ரசனையைக் கண்டதும் நாணத்தில் முகம் சிவந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

மொத்தத்தில் அந்த நான்கு நாட்கள் அவர்கள் இருவருக்கும் அவர்களின் நட்பையும் தாண்டிய உறவை இனிதே அறிமுகப்படுத்தி வைத்துவிட சென்னை திரும்பும் போது அவர்களையும் அறியாது இந்திரஜித்தும் சாருலதாவும் மனதால் நெருங்கிவிட்டிருந்தனர்.

மழை வரும்☔☔☔