☔ மழை 23 ☔

நாட்டை ஆள்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாய்ச் செலவிட்டு பொருளனைத்தும் தீர்ந்தபின்பு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே பொருள்வேண்டி நிற்கும் நிலையை மிகக் கடுமையாக வள்ளுவர் சாடுகிறார்.  செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடத்தில் பொருள்வேண்டுதல் என்பது வழிப்போக்காகச் செல்பரிடம் வழிப்பறி செய்பவன் வேல்எனும் ஆயுதம் கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

                   “வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

                   கோலோடு நின்றான் இரவு”

ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை

சித்தார்த்தும் மாதவனும் ராகேஷ் பற்றிய எந்தத் தகவலும் குடும்பத்தினருக்கு இப்போதைய நிலையில் தெரியவேண்டாமென தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க இந்திரஜித்தோ சாருலதாவுக்குப் பரிசளிக்க வேண்டிய கேமராவைத் தேர்வு செய்துவிட்டான்.

அதை அவளுக்கு அளிக்கும் முன்னர் வாழ்த்து தெரிவிக்கவேண்டுமே! மொபைலை எடுத்தவன் அவளது செல்பேசி எண்ணுக்கு அழைக்க ஆரம்பித்தான்.

‘யார் அழைப்பது’ என்று காலர் டியூனில் சித் ஸ்ரீராமின் குரல் மிதக்க அதில் சற்று இலயித்தவன் பாடலைக் கேட்கும் ஆர்வத்தில் சாருலதா இன்னும் அழைப்பை ஏற்கவில்லை என்பதை சில நிமிடங்கள் கழித்தே உணர்ந்தான்.

யோசனையுடன் மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைத்துச் சலித்தவன் வேறு வழியின்றி ப்ரியாவுக்கு அழைத்தான்.

“ஹாய் ரியா! சாரு பிசியா இருக்காளா என்ன? என்னோட கால் அட்டெண்ட் பண்ணவேல்ல” என்று இந்திரஜித் வினவ

“இல்லையே! எங்களுக்கு ஆஃப்டர் நூன்லயே வேலை முடிஞ்சிடுச்சு… இனிமே அந்தக் கபிள்சோட கல்யாணத்துல தான் எங்களுக்கு வேலை இருக்கும்… அதுக்கு இன்னும் டூ டேய்ஸ் இருக்கு ஜித்து… இப்போ நாங்க தங்கியிருக்குற ரெஸ்ட்ராண்ட்ல சாப்பிட்டிட்டுருக்கோம்” என்றாள் ப்ரியா.

அப்படி என்றால் இன்னும் சில நாட்களுக்குச் சாருலதா குமரகத்தில் தான் தங்குவாள். அதன் அர்த்தம் என்னவென்றால் இன்னும் சில நாட்கள் கழித்து தான் அவனால் அவளைப் பார்க்கமுடியும். செல்பேசியைத் தான் எடுப்பேனா என்று அடம்பிடிக்கிறாளே!

ஆதங்கத்துடன் எண்ணிக்கொண்டவன் ஹேமலதாவை மொபைலில் பிடித்தான். திடுதிடுப்பென்று அவன் அழைத்ததால் முதலில் திகைத்த ஹேமலதா என்னவென வினவ அவனோ குமரகத்தில் சாருலதா தங்கியிருக்கும் ரிசார்ட்டின் விலாசத்தைக் கேட்டான்.

“என்னாச்சு ஜித்து? சாருக்கு எதுவும் பிரச்சனையா?” என்று ஹேமலதா பதறத் துவங்கினாள்.

“ஐயோ ஹேமாக்கா சாருக்கு ஒரு பிரச்சனையும் இல்ல… ஆக்ஸ்வலி அவளுக்கும் எனக்கும் குட்டிச் சண்டை… நான் அவ கூட பேசல… இன்னைக்கு அவளோட காம்படிசன் ரிசல்ட் பாத்துட்டுக் கால் பண்ணுனேன்… அட்டெண்ட் பண்ண மாட்றாக்கா… சோ” என்று அவன் இழுக்க

“சோ வாட்?” என்று பதில் கேள்வி கேட்டாள் ஹேமலதா.

“சோ நான் நேர்ல போய் அவளை விஷ் பண்ணிட்டு கிப்ட் குடுத்துட்டு வந்துடுறேனே” என்றான் அவன்.

ஹேமலதா ஒரு கணம் யோசித்தவள் பின்னர் விலாசத்தை ஒப்பித்தாள்.

“லேக் வியூ சில்வேனியா டூரிஸ்ட் என்க்ளேவ், குமரகம், ரிசார்ட் டெலிபோன் நம்பர்…” என்று ஹேமலதா முழு விவரத்தையும் கொடுக்க அவளது பேச்சை ஆடியோவாக பதிவு செய்துகொண்டவன்

“தேங்க்யூ சோ மச் ஹேமுக்கா… நான் குமரகம் போய் சாருவ சமாதானம் பண்ணி கிப்ட் குடுத்துட்டு வந்துடுறேன்” என்று உற்சாகத்துடன் மொழிந்தான்.

சொன்னபடி அவன் கிளம்பவும் தயாராக சித்தார்த்தும் மாதவனும் அவனைக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

“இப்போ இந்திரஜித்ங்கிற கப்பல் மலையாளக்கரையோரம் ஒதுங்க போறது வெறும் ஃப்ரெண்ட்ஷிப் தான் சித்து… இதை நம்ம நம்பித் தான் ஆகணும்” என்று மாதவன் விசமத்துடன் மொழிய சித்தார்த் அவனுக்கு ஹைஃபை கொடுத்தான்.

“நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம்” என்று அமர்த்தலாக பதிலளித்தவன் உடனே பயண ஏற்பாடுகளை ஆரம்பித்தான்.

அவனது சகோதரர்கள் இருவரும் ராகேஷின் பரோல் விவகாரத்தை மனதிற்குள் புதைத்துக்கொண்டனர். வீட்டிற்கு திரும்பிய பின்னரும் சித்தார்த் யசோதராவிடம் இது குறித்து மூச்சு கூட விடவில்லை. என்றோ ஒரு நாள் அவளுக்குத் தெரியப்போகும் விசயம் தான்! ஆனால் இப்போதைக்கு வேண்டாம்!

மாதவன் இவ்விசயத்தை இலகுவாக எடுத்துக்கொண்டான். ஆனால் ஏற்கெனவே குழப்பமேகங்கள் சூழ்ந்த சித்தார்த்தின் மனமோ அதைப் பூதாகரமாக்கி அவனை மருட்டியது.

அதன் விளைவு அன்றைய இரவு கனவிலும் ராகேஷ் வந்தான், ஆனால் இம்முறை அவன் தாக்கியது யசோதராவை அல்ல; சர்மிஷ்டாவை.

இம்முறையும் உறக்கம் தொலைந்து எழுதவனின் இதயம் தாறுமாறாக துடித்தது. உடனே எழுந்தவன் விறுவிறுவென நடந்து சர்மிஷ்டாவின் அறையை அடைந்தான்.

அங்கே குழந்தை அவன் வாங்கி கொடுத்த பிங் வண்ண டெடியைக் கட்டி அணைத்துக்கொண்டு மெத்தையில் துயில் கொண்டிருந்தாள். சித்தார்த் அவளின் பால் வதனத்தை நடுங்கும் கரங்களால் வருடிக்கொடுத்தான்.

இதே பூஞ்சிட்டை பிறந்த கணத்தில் கையில் ஏந்திய தருணம் அவன் கண்களுக்குள் வந்து செல்ல தானாய் அவன் விழிகள் நீரை சொரிந்தது. இந்தக் கண்ணீர் அவனது பயத்தின் விளைவு! ஒன்பதாண்டுகளுக்கு முன்னர் இளைய சகோதரனுக்காக கண்ணீர் வடித்தவன் இன்று தான் பெற்ற பெண்ணிற்காக கண்ணீரைச் சிந்துகிறான்!

தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாப்பதில் இன்று வரை சித்தார்த் தவறியதில்லை. இம்முறையும் தவறமாட்டேன் என உறுதியுடன் சொல்லிக்கொண்டவன் சர்மிஷ்டாவின் சிகையைக் கோதிவிட்டு நெற்றியில் ஆதுரத்துடன் முத்தமிட்டான்.

அவளைத் தூக்கிக்கொண்டவன் உறக்கம் கலையாமல் கவனமாகத் தங்களின் அறைக்குக் கொண்டு வந்து தனக்கும் யசோதராவுக்கும் நடுவில் படுக்கவைத்தான். அவன் எவ்வளவோ முயன்று அமைதியாக அனைத்தையும் செய்தாலும் யசோதராவின் விழிப்பை அவனால் தடுக்க முடியவில்லை.

விழித்தவள் அருகில் உறங்கும் மகளையும் அவளை கலங்கிய வதனத்துடன் கவனித்துக்கொண்டிருந்த சித்தார்த்தையும் பார்த்துவிட்டு அவனது தோளை அழுத்தினாள்.

“என்னாச்சு சித்து? சர்மி தூக்கத்துல பயந்துட்டாளா?”

புரியாமல் கேட்ட மனைவியிடம் அவன் எப்படி உரைப்பான் பயந்தவள் மகள் அல்ல; அவன் தான் என்பதை!

யசோதரா அவன் பரிதவிப்புடன் இருப்பதைக் கண்டுகொண்டவள் மெதுவாய் அவனிடம் பால்கனிக்கு வருமாறு சைகை காட்டினாள். மகளுக்குப் போர்வையைப் போர்த்தியவன் அறையை விட்டு வெளியேறும் மனைவியைத் தொடர்ந்தான்.

இருவரும் சென்று நின்ற இடம் பால்கனி. நள்ளிரவை வெளிச்சமாக்கும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கியிருந்த வெண்ணிலவும் அதற்கு துணையாய் கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் வானை அலங்கரித்துக் கொண்டிருந்த பொழுதில் காற்று சிலுசிலுவென வீசியது.

யசோதரா சித்தார்த்திடம் என்னவென வினவ அவனோ மீண்டும் அந்தக் கெட்டகனவு வந்ததாக முகம் கசங்க கூறினான். யசோதரா அவனது தோளில் ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தவள்

“சித்து உன் மனசுல இருக்குற பயம் தான் உனக்கு எதிரி… அதை அழிச்சிட்டா நீ நிம்மதியா ஃபீல் பண்ணுவ… வேணும்னா உன்னோட ருத்ராஜிய பாத்துட்டு வர்றீயா?” என்று கேட்க அவன் திகைத்தான்.

சமீபநாட்களில் அவரது பெயரை அவன் உச்சரிப்பதைக் கூட யசோதரா விரும்புவதில்லை. அப்படிப்பட்டவளே அவனை ருத்ராஜியைப் பார்க்கச் செல்கிறாயா என்று கேட்பது ஆச்சரியம் தானே! அவனது திகைப்பைக் கவனித்து அவளே பதிலளித்தாள்.

“உன்னோட ருத்ராஜி பண்ணுற மத்த காரியங்கள் தான் எனக்குப் பிடிக்காது… ஆனா முக்தில சொல்லிக்குடுக்குற யோகா மனநிம்மதிய குடுக்குதுங்கிற உண்மைய நான் எப்போவும் இல்லனு சொல்லமாட்டேனே… யோகா தான் உன்னை அமைதியாக்கும்னா தாராளமா அங்க போயிட்டு வா… ஆனா என்னையும் என் பொண்ணையும் டீல்ல விட்டுடாத… இன்னொரு விசயம், அந்த ருத்ராஜி சொல்லுறார்னு அவரோட முக்தி ஃபவுண்டேசன் சம்பந்தபட்ட எந்த புராஜெக்ட்லயும் நீ இனிமே நடிக்கவேண்டாம்… அவங்களுக்கான கேம்பைன் எதுலயும் கலந்துக்க வேண்டாம்.. இதை மட்டும் எனக்காக பண்ணு சித்து”

வேண்டுதலுடன் நின்றவளை கண்கள் பனிக்க பார்த்தான் சித்தார்த். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவனுக்காக இவ்வளவு தூரம் யோசிக்கும் அவனது காதல் மனைவியின் அன்பில் உள்ளம் கனிந்தது அவனுக்கு.

அவளது வதனத்தை கரங்களில் ஏந்தியவன் “என் மனசுல எப்போ பயம் வரும் தெரியுமா? எங்க எனக்கு நெருக்கமானவங்களை நான் இழந்துடுவேனோனு சந்தேகம் வர்றப்ப தான்… ஆனா நீ என் பக்கத்துல இருக்குறப்ப அந்த சந்தேகம் எனக்கு வராது யசோ… எனக்காக நீ யோசிக்கிறப்ப நான் உங்களை விட்டுட்டு எங்கேயோ போய் இருப்பேனா? எனக்கு நீயும் நம்ம பொண்ணும் நம்ம ஃபேமிலியும் பாதுகாப்பா இருக்கணும்… அவ்ளோ தான்… அதுக்காக நான் எதை வேணாலும் செய்வேன்” என்று உரைத்தவனைக் கண்களில் நிரப்பிக்கொண்டாள் யசோதரா.

எம்பி நின்று அவன் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு “என்ன நடந்தாலும் நான் உன்னோட இருப்பேன் சித்து… எந்தப் பிரச்சனையையும் ரெண்டு பேரும் சேர்ந்தே சமாளிப்போம்… நீ தனியா இருக்கேனு நினைச்சா தானே பயம் வரும்… உன் கூட நான் இருக்கேன்… இனிமே அந்தப் பயமோ கெட்டக்கனவோ உனக்கு வரவே வராது பாரேன்” என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு அவனைத் தோளோடு அணைத்துக்கொண்டாள்.

அவள் கொடுத்த நம்பிக்கையில் மனம் திடமுற சித்தார்த்தின் முகமும் தெளிந்தது. யசோதரா காற்று களவாடியது போக அவனது முகத்தில் மிச்சமிருந்த வியர்வைத்துளிகளை அவனது டீசர்ட்டின் நுனியால் துடைக்குமாறு கூறினாள்.

சித்தார்த்தோ “இதுக்கு தான் ஷேரி கட்டுனு சொல்லுறது… அப்பப்போ வேர்வையைத் துடைக்க, ஈரமான கையை துடைக்க ஈசியா இருக்கும்ல” என்று கூறிவிட்டு புறங்கையால் வியர்வையைத் துடைத்துக்கொண்டான்.

“அஹான், இனிமே நைட் தூங்குறப்போ உன் டீசர்ட்ல ஒரு கர்சீப்பை பின் குத்தி விடுறேன்… கெட்டகனவு கண்டு வேர்த்தா அதுல துடைச்சுக்கோ… இதுக்காக ஷேரிலாம் கட்ட முடியாதுப்பா” என்று அமர்த்தலாக உரைத்துவிட்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவர்கள் அங்கே துயில் கொண்டிருந்த அவர்களின் குட்டி ராஜகுமாரிக்கு அரணாகப் படுத்துக்கொள்ள இருவரது கரங்களும் அவளைப் பாதுகாக்கும் வேலியாக மாறி இணைந்து கொண்டது.

**************

லேக் வியூ சில்வேனியா டூரிஸ்ட் என்க்ளேவ், குமரகம்…

அன்றைய காலை பொழுதில் அந்த ரிசார்ட்டை சுற்றியிருந்த ஏரி நீரின் குளுமை ரிசார்ட்டுக்குள்ளும் நிறைந்திருந்தது. மரங்கள் அடர்ந்த பகுதியில் தனித்தனியே சிறு சிறு வீடுகளாய் அமைந்திருந்த அந்த ரிசார்ட்டைச் சுற்றி ஓடும் ஏரியில் செல்ல சிறு படகும் அதன் ஒரு கரைக்கும் மறுகரைக்கும் இடையே சிறிய பாலமும் அமைந்திருக்க காலை கதிரவனின் பொன்னிற கதிர்கள் அடர்ந்த மரக்கிளைகனூடே பிரவேசித்து ஏரி நீரை ஸ்பரிசித்தது.

அப்போது தான் விழி மலர்த்திய சாருலதா அவளது மொபைல் சிணுங்கவும் தொடுதிரையில் வந்த பெயரைக் கவனியாது எடுத்துப் பேசத் துவங்கினாள்.

“ஹலோ” இன்னும் உறக்கம் கலையவில்லை என்று கட்டியம் கூறியது அவளது குரல்.

“ஹாய் தூங்குமூஞ்சி குட் மானிங்” என்று உற்சாகமாக விழுந்த இந்திரஜித்தின் குரலில் உறக்கமெல்லாம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவிட பரபரப்புடன் தனது படுக்கையில் எழுந்தமர்ந்தாள் சாருலதா.

அவள் பேசும் முன்னரே “என்ன தூக்கம் தூர ஓடிடுச்சா? சென்னைக்கு வர்ற ஐடியா இருக்குதா இல்லயா?” என்று சீண்டலாய் கேட்டான் இந்திரஜித்.

சாருலதா அவன் தன்னுடன் சண்டையிட்டு முறுக்கிக்கொண்டு சென்றதை நினைவுபடுத்திக் கொண்டவள் அழைப்பைத் துண்டிக்க செல்ல உடனே இடையிட்டது அவனது குரல்.

“நீ காலை கட் பண்ணுனா நான் நேர்ல வருவேன்… எப்பிடி வசதி?”

இப்போதும் அவள் பேசாதிருக்கவே “ம்ம்… இது சரிவராது…. நீ பேசவே வேண்டாம்… நானே வர்றேன்” என்றபடி அவன் அழைப்பைத் துண்டித்தான்.

சாருலதா இன்னும் மிச்சமிருந்த கோபத்துடன் உதட்டைச் சுழித்துக்கொண்டவள் “அவனே வருவானாம்… எப்பிடி சென்னைல இருந்து ஹனுமன் மாதிரி பறந்து வருவானாக்கும்? போடா டேய் நீ அப்பிடி வந்து நின்னாலும் நான் உன் கிட்ட பேச மாட்டேன்” என்று பற்களைக் கடித்தபடி உரைத்துவிட்டு படுக்கையிலிருந்து எழுந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பின்னர் காபி கோப்பையுடன் வெளியே ஓடும் ஏரியை ரசிக்க விரும்பி ஒரு மிடறு சுவைத்துவிட்டு கதவைத் திறந்தவள் அங்கே ஷோல்டர் பேக்குடன் புன்னகைத்தபடி நின்ற இந்திரஜித்தைப் பார்த்ததும் வாயைப் பிளந்தாள்.

கையில் ஆவி பறக்கும் காபி கோப்பை! முட்டைக்கண்கள் விரிந்திருக்க செவ்விதழ்களின் வழியே முத்துப்பற்கள் தெரிய அவள் நின்ற கோலம் அவனுக்குச் சிரிப்பை மூட்டியது. கூடவே அந்த ஆவி பறக்கும் காபி கோப்பை அவன் கைக்கு இடம் மாறியது.

“டேய் நான் ஆல்ரெடி குடிச்சிட்டேன்டா”

அவளது பதற்றத்தைத் துளி கூட கண்டுகொள்ளாது சாவகாசமாக அவளைக் கையமர்த்தினான் இந்திரஜித்.

அடுத்த நொடியே அவன் இதழ்கள் காபியை சுவைத்து அருந்த துவங்க சாருலதா காபி பறிபோன கடுப்பில் அவனிடமிருந்து கோப்பையைப் பிடுங்க முயல அவனோ அவளுக்குப் போக்கு காட்டியபடி முழு கோப்பை காபியையும் காலி செய்துவிட்டு அவளிடம் வெற்றுக்கோப்பையை நீட்டினான்.

“காபி சூப்பர்! ஆனா காபிய எனக்கு முன்னாடி குடிச்ச மங்கியோட மூஞ்சி தான் பாக்க படுகேவலமா இருக்கு”

அவனது கேலியில் மெதுமெதுவாய் கோபச்சிவப்பு முகத்திலேற எம்பி அவனது சிகையைக் கலைத்தபடி சண்டையிட ஆரம்பித்தாள் சாருலதா.

“எருமை மாடே, காபி குடிக்கணும்னா ஆர்டர் பண்ணி குடியேன்… அதை விட்டுட்டு என் காபிய ஏன்டா பிடுங்கி குடிச்ச? போடா”

பதில் கூறாது கண்சிமிட்டிவிட்டு அவளது கரத்தை விலக்கியவாறு ரிசார்ட்டினுள் நுழைந்தான் இந்திரஜித்.

சாருலதா அவன் உள்ளே செல்வதைப் பார்த்துவிட்டு பதறியபடி அவனைத் தொடர்ந்தாள்.

“இந்த ரிசார்ட் ரொம்ப அழகா இருக்குல்ல… ஷ்ஷப்பா முதல்ல அலுப்பு தீர குளிக்கணும்… பை த வே, பாத்ரூம் எங்க இருக்கு?” என தேடுதல் வேட்டையை ஆரம்பித்தவனின் செய்கையில் சாருலதா வாயடைத்துப் போனாள்.

இறுதியாக அவனது தேடலின் விடை, அது தான் பாத்ரூமின் கதவைக் கண்டதும் அதை நோக்கிச் சென்றவனின் பாதையை மறித்தாள் அவள்.

“நீ ரொம்ப ஓவரா பண்ணுற ஜித்து… இது என்னோட ரூம்… இங்க நீ எதுக்கு வந்த? என் கூட சண்டை போட்டுட்டுப் பேசாம போனவன் தானே… இப்போ மட்டும் ஃப்ரெண்ட் மேல பாசம் நயாகரா ஃபால்ஸ் போல பொங்கிடுச்சோ?”

உஷ்ணத்துடன் அவள் பேசியதில் சிரித்த இந்திரஜித் சாவகாசமாக அவளருகே வந்தான். அவளின் கன்னங்களை இருபுறம் இழுத்துப் பிடித்தவன்

“எனக்கு உன் மேல எப்போவுமே பாசம், அன்பு ப்ளா ப்ளா ப்ளா எல்லாமே எக்கச்சக்கமா இருக்கு… அதான் நீ போனை எடுக்கலனதும் உன்னைத் தேடி ஓடி வந்துட்டேன் மங்கி” என்றான் குறும்புடன்.

சாருலதா அவன் பிடித்ததில் வலிக்கத் துவங்கிய கன்னங்களை விடுமாறு சைகை செய்ய பரிதாபப்பட்டு விடுவித்தான் அவன்.

அத்துடன் நிற்காது ஷோல்டர் பேக்கில் எதையோ தேட ஆரம்பித்தான். என்ன தேடுகிறான் என்று எட்டிப் பார்த்தவள் அவன் தேடிய பொருளை எடுத்துக்கொண்டு அவள் புறம் திரும்பவும் கவனியாதது போல நின்று கொண்டாள்.

இந்திரஜித் தான் வாங்கி வந்த பரிசான டி.எஸ்.எல்.ஆர் கேமராவுடன் அவளை நெருங்கியவன் ஒரு கரத்தால் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தவளின் மோவாயைப் பற்றித் தன் புறம் திருப்பினான்.

அலட்சியம் போல காட்டிக்கொண்டாலும் சாருலதாவின் கருவிழிகளில் மின்னிய ஆர்வம் அவன் கவனத்திற்கு தப்பவில்லை.

“என்னோட ஃப்ரெண்ட்டுக்கு கிடைச்ச வெற்றிக்கு ஜித்துவோட ஸ்மால் கிப்ட்… கோச்சுக்காம வாங்கிக்க மங்கி.. இல்லனா என் பிஞ்சு நெஞ்சு வெம்பி போயிடும்” என்று ராகத்துடன் சோகம் கூட்டி அவன் மொழிந்த விதத்தில் இருந்த கொஞ்சநஞ்ச கோபமும் துடைத்தெறிந்தாற் போல அகன்றுவிட கிண்கிணி நாதம் போல சிரித்தாள் அவள்.

வாங்கிக் கொள் என்று நீட்டியவன் கண்களில் தெரிந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று ஆராய்ந்து பார் என மூளையும் மனமும் தூண்டிவிட அதை ஓரங்கட்டிவிட்டு கேமராவை வாங்கிக் கொண்டாள்.

அதை ஆவலுடன் பார்த்த சாருலதாவின் விழிகள் அது என்ன வகை கேமரா என்பதை அறிந்ததும் ஆச்சரியத்தில் விரிந்தது.

“நிகான் ஏ.எஃப்.எஸ்… வாவ்! சூப்பரா இருக்குடா ஜித்து… ஆனா இது வெரி காஸ்ட்லி”

“சோ வாட்? என்னோட ஃப்ரெண்டுக்கு என் பணத்துல வாங்குனேன்… யூ நோ ஒன் திங்க்? கிப்ட் பண்ணுறப்ப விலைய பாக்கக்கூடாது” என்று சொன்னபடி அவள் நாசியை நிமிண்டியவன்

“இப்போவாச்சும் கோவம் போச்சா? இல்ல உன்னை சமாதானப்படுத்துறதுக்கு தோப்புக்கரணம், குட்டிக்கரணம் எதாச்சும் போடணுமா?” என்று கேட்க

“இப்போதைக்கு அந்த மாதிரி விபரீதமான பனிஷ்மெண்ட் எதுவும் குடுக்குற ஐடியா இல்லடா… பிகாஸ் இந்த தடவை நான் தான் தப்பு பண்ணிட்டேன்… நீ முதுகு ஒடிய வேலை பாத்ததோட கிரெடிட்ட அவனுக்குக் குடுக்காம ருத்ராஜிக்குக் குடுத்தது தப்பு தானே” என்று தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாள் அவள்.

“நானும் கொஞ்சம் ஓவரா தான் சீன் போட்டுட்டேன் சாரு… ஐ அம் சாரி” என்று இந்திரஜித் மன்னிப்பு வேண்ட இவ்வாறே மாறி மாறி மன்னிப்பு கேட்டுக்கொண்டனர் இருவரும்.

பின்னர் அவளுக்கு எதிர் ரிசார்ட்டை தான் புக் செய்திருப்பதாக கூறிய இந்திரஜித் அன்றைய தினம் போட்டோஷூட் இருக்கிறதா என கேட்க இல்லையென மறுத்தவள் அன்று பறவைகள் சரணாலயத்தைச் சுற்றி பார்க்கச் செல்வதாக கூறினாள்.

“நீ குளிச்சு ரெடியாகு… நானும் வர்றேன்… ரெண்டு பேரும் சேர்ந்து போறோம்… குமரகத்த கலக்குறோம்” என்று சொல்லிவிட்டு கரத்தை முஷ்டியாக்கி மடக்கி காட்ட சாருலதா தானும் கையை மடக்கி அவன் கையில் இடித்துக்கொண்டாள்.

சொன்னவன் அவனது உடமைகளுடன் வெளியே செல்ல சாருலதா தனது எதிர்புற ரிசார்ட்டை நோக்கி விரையும் அவனது முதுகைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவளது கரத்தில் தஞ்சமடைந்திருந்த கேமராவை ஆசையாய் வருடிக்கொடுத்தாள் சாருலதா.

அவளது பார்வையோ எதிர் ரிசார்ட்டின் கதவைத் திறப்பவனை ஆவலுடன் தழுவியது.

ஏன் சமீபகாலங்களில் இவன் எனக்குப் புதிதாய் தெரிகிறான்? எங்கள் நட்பில் இன்றளவும் எந்த மாற்றமும் நேரவில்லை. ஆனால் இவனைக் காணும் போது முன்பு போலன்றி இப்போதெல்லாம் என் இதயம் சிட்டுக்குருவியாய் படபடப்பது எதனால்?

தன்னைத் தானே சாருலதா கேட்டுக்கொண்ட தருணத்தில் எதிர் ரிசார்ட்டில் இந்திரஜித்தும் சாருலதா மீது தான் கொண்ட உணர்வை பரிசீலித்துக் கொண்டிருந்தான்.

குறுகுறு பார்வையுடன் இரட்டை ஜடையுடன் பள்ளி சீருடையில் கண்ட கணத்தில் தோழியாய் மனதில் பதிந்து போனவள், உரிமையாய் என் கரம் கோர்த்து வலம் வருபவள், அவளின் கோபமும் பாராமுகமும் என்னை ஏன் இந்தளவுக்குப் பாதிக்கவேண்டும்? முன்பெல்லாம் அவள் சிரிப்பைக் காணும் கணத்தில் என் இதழ்களும் அதே சிரிப்பை அணிந்துகொள்ளும். ஆனால் இப்பொதெல்லாம் அவள் இதழ் சிரிப்பில் மலர்வதை என் விழிகள் ரசிக்கத் துடிப்பது ஏன்? இரு உள்ளங்களிலும் வெவ்வேறு கேள்விகள் எழுந்தாலும் அவற்றின் சாராம்சம் என்னவோ அவர்களுக்குள் இருக்கும் நட்பு எனும் உறவின் மீது புதிதாய் மற்றொரு அழகான உணர்வு இனிப்பு மீது இருக்கும் சீனிப்பாகாய் மெல்ல மெல்ல படியத் துவங்கியது என்பது தான்.

மழை வரும்☔☔☔