☔ மழை 21 ☔

ஒரு நல்ல படம் அலமாரி நிறைய உள்ள புத்தகங்களை காட்டிலும் சிறந்த விளக்கம் அளித்திடும் ஒரு பறவை அல்லது விலங்கை பற்றி என்பார் புகைப்பட நிபுணர் டி.என்.ஏ பெருமாள். அவரது கூற்றுப்படி பறவைகளைப் படம் பிடிக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று கூடுவழி (Nest Technique), மற்றொன்று டெலிபோட்டோ லென்ஸ் பொருத்திய கேமிராவால் எடுப்பது.

                -புகைப்பட நிபுணரும் தனது குருவுமான டி.என்.ஏ பெருமாள் பற்றி புகைப்பட அனுபவங்கள் புத்தகத்தில் கல்பட்டு நடராஜன்

“சிஸ்டம் செக்யூரிட்டி பக்காவா இருக்கு சாரு… இனிமே சைட்ல பிராப்ளம் வராது… உன்னோட ஹோஸ்டிங் கம்பெனி கிட்ட இந்தப் பிராப்ளம் பத்தி மெயில் அனுப்பிடு… மே பி அவங்களோட சர்வர் எதுவும் ஹேக் ஆகிருக்கலாம்… சைட்டை நான் ரெட்ரைவ் பண்ணிட்டேன்” என்றபடி நிமிர்ந்தான் இந்திரஜித்.

சாருலதா அவன் சொன்னதற்கு சரி சரியென தலையாட்டியவள் முந்தைய தினம் மாலை குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக இருந்த வலைதளம் இப்போது சரியானதில் நிம்மதியுற்றாள்.

அவளது இருக்கைக்குப் பின்னே கிடந்த சர்வருத்ரானந்தாவின் புகைப்படத்தை நோக்கி கைகூப்பியவள் “தேங்க்யூ சோ மச் ருத்ராஜி… எல்லாம் உங்களோட அருள் தான்” என்று கூற இந்திரஜித்திற்கு ஏகத்திற்கும் கடுப்பு.

“அடியே இவ்ளோ நேரம் உக்காந்து சரி பண்ணுனவன் நான்… ஆனா கிரெடிட் உன்னோட சோ கால்ட் ருத்ராஜிக்கா? மனசாட்சி இல்லயா உனக்கு? இனிமே உன் சைட் ஹேக் ஆச்சுனா என்னை கூப்பிடாத… உன்னோட ருத்ராஜி குடுத்த ருத்ராட்சமாலையை சிஸ்டம்ல மாட்டிவிட்டு அவரோட பஜனைய பாடு… சைட் தானா ரெட்ரைவ் ஆயிடும்.” என்று எரிச்சலுடன் மொழிந்து விட்டு அவன் எழவும் சாருலதா திருதிருவென விழித்தாள்.

பின்னர் வெளியெ செல்ல முயன்றவனைத் தடுத்தவள் “ஜித்து நீ கோச்சுக்கிட்டியா? நான் சும்மா சொன்னேன்டா… நீ வந்ததால தான் என் சைட் சரியாச்சு.. போதுமா? இப்போ ஹேப்பியா?” என்று சமாதானம் செய்யும் குரலில் கேட்க

“ஆணியே புடுங்க வேண்டாம்… எந்தப் பக்கம் திரும்புனாலும் அந்த ஆளைப் பத்தியே பேசி மனுசனை கடுப்படிக்காதிங்கடா… உன் பக்தி பாயாசத்த கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு… எதுக்கெடுத்தாலும் ருத்ராஜி புராணம் பாடாத” என்று படபடவென பொரிந்து தள்ளி அவளை மீண்டும் வாயடைக்க வைத்தான் இந்திரஜித்.

சாருலதா முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொள்ள அதைக் கண்டுகொள்ளாது கிளம்புவதில் குறியாக இருந்தான் அவன். பெற்றோர், தமையன் என அவனது வீட்டிலேயே ருத்ராஜி புகழ் பாடும் கூட்டமொன்று இருக்கிறதே! ஏற்கெனவே அவர்களது பஜனையிலேயே அவன் காது பஞ்சர் ஆகிவிட்டது. இதில் தோழியும் அவ்வபோது பாடுவது வழமை தான் என்றாலும் இன்றைய தினம் அவனது கடின உழைப்புக்கான பாராட்டும் ருத்ராஜிக்குச் செல்லவே இந்திரஜித்துக்குக் கோபம் வந்துவிட்டது.

சாருலதா அவனது கரத்தைப் பற்ற வரவும் விலக்கிக் கொண்டவன் “டுமாரோ குமரகம் போறல்ல… ஹேப்பி ஜர்னி” என்று முகம் பாராமல் உரைத்துவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து அகன்றான்.

அவனது இந்த திடீர் கோபமும் விலகலும் சாருலதாவை வினோதமான முறையில் பாதித்தது. சாஃப்ட் மில்லினியல் பிங்க் வண்ணப்பூச்சு கொண்ட அந்த அறை கூட இப்போது அவள் கண்களுக்கு இருளாகப் புலப்பட முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கையில் சரிந்தாள்.

அதே நேரம் இந்திரஜித்துக்குள் எந்த வருத்தமும் இல்லை. சாருலதாவின் ருத்ராஜி புராணத்தை அவனும் ஏழாண்டு காலமாக கேட்டுக்கொண்டிருக்கிறான் தான்! அவனது அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கும் சித்தார்த் இம்முறை பயிற்சியோட்டத்தில் இந்திரஜித் வெற்றி பெற்றதைப் பற்றி அறிய முடியாதளவுக்கு அவனுக்கு ருத்ராஜி பக்தி முத்திப்போய்விட்டது.

இத்தனைக்கும் யசோதராவிற்கு அவர் மீது அபிமானமில்லை. அவள் நினைத்திருந்தால் மெதுமெதுவாய் சித்தார்த் ருத்ராஜி மீதிருந்த அபிமானத்தை ஒரு எல்லைக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவள் தவறிவிட்டாள்! அதன் விளைவு தான் சர்மிஷ்டாவின் பிறந்தநாளை விட முக்தி ஃபவுண்டேசன் எழுப்பும் ஆலயம் பற்றிய சுயபுராணத்தை நேர்காணல் செய்வது முக்கியமென அவன் இருந்துவிடுமளவுக்கு நிலமை கைமீறி விட்டது.

அதே போல இந்திரஜித்தால் சாருலதாவின் விசயத்தில் கவனக்குறைவாக இருக்கமுடியாது அல்லவா! அப்படி விட்டுவிட்டால் அவன் பின்னாட்களில் யசோதராவின் நிலையில் நின்று வருந்தவேண்டும்! இவ்வாறு அவன் எண்ணமிடும் போதே அவனது மனசாட்சி விழித்துக்கொண்டு அவனை இடித்துரைத்தது.

சித்தார்த்தும் யசோதராவும் கணவன் மனைவி அல்லவா! நீயும் சாருலதாவும் அவ்வாறில்லையே! பின்னர் ஏன் இவ்வளவு தூரம் யோசிக்கிறாயடா என்று மனசாட்சி அவன் தலையில் குட்டவும் சடன் பிரேக்கிட்டு காரை நிறுத்தினான் இந்திரஜித்.

சிகையை அழுந்தக் கோதி சற்றே நிதானித்தான் அவன்.

“என்ன யோசிக்கிற ஜித்து? உன் சிந்தனை போற திசையே சரியில்ல… உன்னோட மைண்ட் காம்பஸ் உனக்கு ஏடாகூடமா திசை காட்டுதுடா… வழி தவறிடாத” என்று தனக்குத் தானே அறிவுரை கூறிக்கொண்டவன் “சாரு என்னோட ஃப்ரெண்ட்… ஃப்ரெண்ட் மட்டும் தான்” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு மீண்டும் காரைக் கிளப்பி வேகமெடுத்தான்.

**************

ஜஸ்டிஷ் டுடே…

அலுவலகம் முடிந்து ஊழியர்கள் கிளம்பும் நேரம். ஸ்ராவணியின் சிந்தனை முழுவதும் தயானந்த் கூறிய செய்திகளிலேயே உழன்றது. ஹேண்ட்பேகை எடுத்து மாட்டியவளின் மொபைல் தரையில் விழ யசோதரா அதை எடுத்து அவளிடம் நீட்டினாள்.

அப்போது மொபைலின் திரை ஒளிரவும் அதன் பின்னணியில் தெரிந்த வால்பேப்பரில் அபிமன்யூவுடன் அவளது புத்திரச்செல்வங்களான அதிதியும், ஆரவ்வும் மேனகா அஸ்வினின் புதல்வன் சூரியாவுடன் புன்னகை முகமாக நின்றிருந்தனர்.

யசோதரா இருவரது புகைப்படத்தையும் ஆர்வத்துடன் பார்த்தவள் “ரொம்ப சீக்கிரம் வளந்துட்டாங்கள்ல” என்று கேட்க

ஸ்ராவணி புன்னகையுடன் ஆமோதித்தவள் “அதியும் சூரியாவும் நெக்ஸ்ட் இயர் இந்தியன் யூனிவர்ச்சிட்டில ஜாயின் பண்ணிக்கவானு கேக்குறாங்க… ஆருவும் ஹையர் செகண்டரிய இங்கயே கன்டினியூ பண்ணுறேனு சொல்லுறான்… ஆனா எனக்கு அவங்களை இங்க படிக்க வைக்கிறதுல விருப்பமில்ல… யூ.எஸ்ல அவங்களை ஸ்ரவனும் வினியும் நல்லபடியா பாத்துக்குறாங்க… அவங்க பாதுகாப்புக்கும் அங்க எந்த குறையும் இல்ல… இங்க அவங்க வந்து ஒன் வீக் ஆகுது… திரும்பி அவங்க மூனு பேரும் யூ.எஸ் போற வரைக்கும் எனக்கு திக்திக்னு இருக்கும் யசோ” என்றாள் கவலையுடன்.

ஒரு அன்னையாகப் பெற்ற பிள்ளைகளை கடல் கடந்து அனுப்பிவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்களோ, சாப்பிட்டார்களா என்று ஏகப்பட்ட கேள்விகளுடன் வலம் வருவதில் உள்ள வேதனையை பல ஆண்டுகள் சுமக்கிறாள் ஸ்ராவணி.

ஆனால் என்ன செய்வது? அவளும் அவளது கணவனும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை ஏகத்துக்கும் சம்பாதித்து விட்டனர். எங்கே குழந்தைகளின் பாதுகாப்புக்குக் குந்தகம் வந்துவிடுமோ என்ற பயம் தான் மூன்று குழந்தைகளையும் அவளது சகோதரன் ஸ்ரவன் வசம் ஒப்படைத்ததற்கு காரணம்!

குழந்தைகளும் வளர்ந்து இன்று பதின்வயதில் நிற்கிறார்கள். கல்லூரி செல்லும் வயதை எட்டிய அதிதி தான் தந்தையை அதிகமாகத் தேடினாள் எனலாம். எப்படியாவது இந்தியாவில் இருந்துவிடமாட்டோமா என்று என்னென்னவோ முயற்சிகள் செய்தும் பெற்றோரின் அனுமதி கிடைக்காது போக அவளும் அவளது சகோதரர்களும் இந்தியக்கனவுகளுடன் கல்வியை அமெரிக்க மண்ணில் அன்று வரை தொடர்கின்றனர். இப்போது விடுமுறைக்காக இந்தியாவிற்கு வந்திருக்கின்றனர் மூவரும்.

ஸ்ராவணியின் நிலையைப் புரிந்துகொண்ட யசோதரா அவள் தோளில் ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தாள். சிறிது நேரத்தில் மேனகாவும் வந்துவிட அவர்கள் இருவரும் காரில் கிளம்பினர்.

யசோதரா தனது காரைக் கிளப்பி அவர்களுக்குக் கையசைத்துவிட்டு அகன்றாள். அவள் கார் கடந்து செல்வதைப் பார்த்தபடி மேனகா ஸ்டீயரிங் வீலை வளைத்து தங்கள் வீட்டிற்கு செல்லும் மார்க்கத்தில் செலுத்தினாள்.

ஸ்ராவணி தீவிர சிந்தனையினூடே “மேகி அபியும் அஸ்வினும் சதாசிவன் கோயில் திறப்புல கலந்துக்க போறோம்னு சொல்லுறாங்க… ஆனா இன்னைக்கு தயானந்தோட ஸ்பீச் பாத்ததுக்கு அப்புறம் அவங்க அங்க போறது அவங்களோட நேமையும் பார்ட்டியோட நேமையும் ஸ்பாயில் பண்ணும்னு தோணுதுடி… அவங்களை அங்க போகவிடமுடியாம தடுத்தாகணும்… ஆனா அவங்க நம்ம பேச்சை கேக்கவே மாட்டாங்களே” என்று அலுத்துக்கொள்ள

“அப்ப பசங்களை வச்சு பேசிப் பாப்போமா?” என்று கண்ணாடி பிரேமின் நடுவே ஜொலித்த கண்களுடன் வினவினாள் மேனகா.

ஸ்ராவணி மறுப்பாக தலையசைத்தவள் “குழந்தைங்க பேசுனா வேற எதாச்சும் சொல்லி பேச்சை மாத்துவானே தவிர கல்லுளி மங்கன் கேக்கவே மாட்டான்” என்று தனது கணவனை மனதில் வைத்து கடுப்புடன் வார்த்தைகளைத் துப்பினான்.

பேச்சினூடே வீடும் வந்துவிட்டது. உள்ளே நுழையும் போது சுபத்ராவுடன் ஏதோ வளவளத்துக் கொண்டிருந்தாள் அதிதி. ஸ்ராவணியைக் கண்டதும் முகம் மலர எழுந்தாள்.

“மம்மி நான் உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்… நேத்து மாதிரி இன்னைக்கும் மூவி பாப்போமா? ப்ளீஸ் மம்மி மாட்டேனு சொல்லிடாதிங்க” என்று ஸ்ராவணியின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள் அங்கே அமர்ந்திருந்த சூரியாவையும் ஆரவ்வையும் பார்த்து சமிக்ஞை செய்தாள்.

அதன் அர்த்தம் “நீங்களும் சொல்லுங்கடா” என்பதே! உடனே இருவரும் மேனகாவையும் ஸ்ராவணியையும் தங்களுடன் படம் பார்க்குமாறு கொஞ்ச ஆரம்பிக்க சுபத்ரா மருமகள்களை பேரப்பிள்ளைகளுடன் அனுப்பிவைத்தார்.

அவர்கள் சென்ற சிலமணி நேரத்தில் பார்த்திபனுடன் அஸ்வினும் அபிமன்யூவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வழக்கம் போல முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக வந்தவர்கள் வாயிலில் நின்றுவிட மற்ற மூவர் மட்டும் வீட்டினுள் நுழைந்தனர்.

நுழைந்ததும் பார்த்திபனின் விழிகள் பேரப்பிள்ளைகளைத் தேடியது.

“சுபிம்மா பசங்களை காணுமே? வெளிய போயிருக்காங்களா?”

“வனியும் மேனகாவும் வந்ததும் அவங்களோட மூவி பாக்கணும்னு இழுத்துட்டுப் போயிட்டாங்க… நேத்து மூவி பாத்த எக்ஸ்பீரியன்ஸை உங்க பேத்தி விலாவரியா சொன்னப்போவே நினைச்சேன் இன்னைக்கும் அது தொடரும்னு… அதே மாதிரி மருமகளுங்க வந்ததும் கூட்டிட்டுப் போயிட்டாங்க” என்றார் சுபத்ரா.

அதன் பின்னர் பார்த்திபன் சுபத்ராவுடன் நகர்ந்ததும் ஹால் சோபாவில் அக்கடாவென அமர்ந்தான் அபிமன்யூ. அவனருகே அஸ்வினும் அமர இருவரின் பேச்சும் அவரவர் தொகுதியைப் பற்றி திரும்பியது.

ஏழாண்டுகளுக்கு முன்னர் அவர்களது கட்சி தோல்வியைத் தழுவியதில் உடைந்து போன அபிமன்யூ அதன் பின்னர் ஸ்ராவணியின் அறிவுரையைத் தான் பின்பற்றினான்.

ஆளுங்கட்சியினரைக் கண்காணிப்பதும் அவர்களது பலவீனங்களை அடையாளம் காணுவதும் அஸ்வினின் வேலையாக மாறிப்போனது. அபிமன்யூவோ களத்தில் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை கண்கொத்தி பாம்பாக கவனித்து அதை மக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றான். கூடவே தங்களது கட்சியினரைப் பழையபடி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டான்.

அதே நேரம் பார்த்திபன் அறிவழகனின் ஆலோசனைப்படி கட்சியின் மேல்மட்டக்குழுவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். அத்துடன் கட்சியின் எதிர்காலமாக அபிமன்யூவியையும் அஸ்வினையும் மக்கள் மத்தியில் பதிய வைக்கும் முயற்சியை அறிவழகன் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் பலத்த நம்பிக்கையுடன் போட்டியிட்ட போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவன் அபிமன்யூவே!

எதிர்கட்சியாக இருந்த ஐந்தாண்டுகளில் அவன் உழைத்ததை வைத்தும், ஆளுங்கட்சியினரின் தவறுகளைச் சுட்டிக்காட்டியதை வைத்தும் மக்களின் வாக்கையும் தன் பக்கம் ஈர்த்தான்.

தேர்தல் முடிவும் அவர்களுக்குச் சாதகமாக வந்துவிட ஏகமனதாக முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டான்.

“அபிமன்யூ எனும் நான்” என்று ஆளுனர் முன்னிலையில் அவன் பதவியேற்ற நாளில் பார்த்திபனின் கனவு நனவாகிப் போனது.

“உன்னை நான் வச்சு பாக்க ஆசைப்படுற இடமே வேற அபி” என்று சொல்லித் தான் லண்டனின் படித்துக்கொண்டிருந்தவனை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அந்த இடம் அவனுக்குக் கிடைத்த தினத்தில் அவனைக் காட்டிலும் மகிழ்ந்தவர் பார்த்திபனே!

இதோ கடந்த ஈராண்டு கால ஆட்சியில் அவன் மீது எந்தக் குற்றமும் சொல்லவியலாத வகையில் கட்டுக்கோப்பாக மாநிலத்தையும் அமைச்சர்களையும் வழிநடத்துபவன் மீது அவருக்கே பிரமிப்பு!

அந்த வகையில் அஸ்வின் அவனுக்கு வலதுகரமாக இருந்து அபிமன்யூ தடுமாறும் தருணங்களில் அவனுக்கு வழிகாட்டினான். அத்துடன் அவனது மனைவியான ஸ்ராவணியோ அவன் செய்யும் தவறுகளைப் பாரபட்சமின்றி சுட்டிக்காட்டினாள்.

அதற்காக அவன் முற்றிலும் மாறிவிட்டான் என்று சொன்னால் அது மாபெரும் தவறு. அவன் இன்றும் அதே அபிமன்யூ தான். அவனது வெற்றிக்காகவும் கட்சிக்காகவும் அமர்ந்திருக்கும் நாற்காலிக்காகவும் எதையும் செய்ய தயாராய் இருப்பவன் தான்! ஆனால் முன்பு போல அதை பட்டவர்த்தனமாகச் செய்யவில்லை.

எந்தக் காயை நகர்த்தினால் எங்கே வெட்டலாம் என்பதை புரிந்துகொண்டு அரசியல் சதுரங்கத்தை கச்சிதமாக ஆடிக்கொண்டிருந்தான் அபிமன்யூ. அதன் விளைவு தான் ஏழாண்டுகளாக சர்வருத்ரானந்தாவுக்கு அவன் அளிக்கும் மறைமுக ஆதரவு.

இது குறித்து ஸ்ராவணி கேள்வி எழுப்பினால் “அந்த ஆள் செய்யுற காரியம் என்னைக்கு மக்களை பாதிக்குதோ அன்னைக்கு அவரை கவனிச்சுக்கலாம் வனி… அது வரைக்கும் அவரோட சேவை என் கட்சிக்குத் தேவை” என்பான் சர்வருத்ரானந்தாவைப் பின்பற்றும் பக்தர்கள் என்ற வாக்குவங்கியை மனதில் வைத்தபடி.

இப்போதும் அவனுக்கு முக்தி மீதோ சர்வருத்ரானந்தா மீதோ எந்தவித அபிமானமும் இல்லை. ஆனால் நீதி நேர்மை நியாயம் என்றெல்லாம் பேசி அவருக்கு அரசாங்கத்தரப்பிலிருந்து எந்த தொந்தரவையும் கொடுக்கவும் இல்லை.

‘நீ உன் வழியில் செல்; நான் என் வழியில் செல்கிறேன்’ என்ற கொள்கையைக் கடைபிடித்து அவனது அரசியல் வாழ்க்கையிலும் ஆட்சியிலும் மட்டுமே கவனம் செலுத்தினான் அபிமன்யூ.

இதோ இப்போதைய உரையாடலை முடித்துக்கொண்டு இரவுணவுக்கு அஸ்வினுடன் கிளம்பினான். குழந்தைகள் அங்கே இல்லை என்றதும் அவனது கண்கள் மனைவியையும் தேடியது.

“அவங்க மூவி பாத்துட்டே சாப்பிட்டுட்டாங்க அபி” என்றார் சுபத்ரா.

பின்னர் அவர்கள் சாப்பிட்டுவிட்டு கலைந்ததும் தனது அறையை அடைந்து இரவுடைக்கு மாறி மடிகணினியும் கையுமாக அமர்ந்த போது ஸ்ராவணி அறைக்குள் நுழைந்தாள்.

நுழையும் போதே “இன்னைக்கு ரியாலிட்டி செக் ஷோவோட கெஸ்ட் மிஸ்டர் தயானந்த்” என்ற பீடிகையுடன் தான் அவன் முன் வந்து நின்றாள்.

அவனோ புருவம் சுருக்கிவிட்டு புன்முறுவலுடன் “ஓ! சோ இன்னைக்கு உங்க ஸ்டூடியோல நல்லவர் ஒருத்தரோட காலடி பட்டுடுச்சு… ஸ்வீட் எடுத்துக் கொண்டாட வேண்டிய மொமண்ட்ல” என்று கூற

“ப்ச்! கிண்டல் பண்ணாத அபி… அந்த ஷோல அவர் பேசுனது முக்தி ஃபவுண்டேசனைப் பத்தி… அவங்க அங்க பண்ணுற தப்புகளோட லிஸ்ட் ரொம்ப பெருசு அபி… எப்பிடி உங்க கவர்மெண்ட் அவங்களை சும்மா விட்டு வச்சிருக்கு?” என்று ஆதங்கத்துடன் கேட்டபடி முகம் கழுவ குளியறை நோக்கிச் சென்றவள் உடை மாற்றிவிட்டு திரும்பிவந்தாள்.

வந்தவள் மீண்டும் தயானந்தை பற்றியோ முக்தியைப் பற்றியோ பேசக்கூடாது என்பதற்காகவே மடிகணினியில் முகம் கவிழ்த்திருந்தான் அபிமன்யூ.

ஆனால் ஸ்ராவணி அவன் தோளைத் தட்டியவள் அவன் நிமிரவும் “நீ முக்தி ஃபவுண்டேசன் கோயிலை ஒப்பன் பண்ணக்கூடாது அபி” என்றாள் தீர்மானமான குரலில்.

அபிமன்யூ திகைத்தவன் “ஏன்?” என்று ஒற்றைவார்த்தையாய் கேட்க

“அவங்க பண்ணுறது பூரா ஃப்ராட்தனம்… அது எல்லாம் தெரிஞ்சும் நீ அங்க போனா மக்கள் என்ன நினைப்பாங்க?” என்று வினவினாள் ஸ்ராவணி.

“என்ன நினைப்பாங்க வனி?” அசட்டையாக அடுத்த கேள்வி பிறந்தது அவனிடமிருந்து.

“சி.எம்மே அங்க போறார்னா அந்த சர்வருத்ரானந்தா நல்லவர் தான்னு நினைக்கமாட்டாங்களா?”

“நினைச்சா எனக்கென்ன வனி?” அலட்சியமாக மொழிந்தவன் கரங்களை உயரே தூக்கி சோம்பல் முறித்தபடி எழுந்தான். மடிகணினியை மேஜையில் வைத்து பூட்டியவன் கழுத்தை வலமும் இடமுமாகச் சுழற்றி அலுப்பை போக்க முயன்றான்.

அவனது அலட்சியத்தில் எரிச்சலுற்றாள் ஸ்ராவணி. மாநிலத்தின் முதலமைச்சர் மாதிரியா பேசுகிறான் இவன் என்ற கடுப்பு அவளுக்கு.

அதை மறைக்காமல் “கிரேட் பவர் கம்ஸ் வித் கிரேட் ரெஸ்பான்சிபிளிட்டி, யூ ஹேவ் டூ அண்டர்ஸ்டான்ட் யுவர் ரெஸ்பான்சிபிளிட்டி அபி” கடினக்குரலில் கூறினாள் ஸ்ராவணி.

ஆனால் எதிரில் நின்றவனோ சிரித்துவிட்டு “நேத்து நைட் நீயும் அதியும் ஸ்பைடர் மேன் மூவி பாத்த எஃபெக்ட் உன் பேச்சுல தெரியுது வனி” என்று கூறிவிட்டு சாவகாசமாக கவுச்சில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

ஸ்ராவணி அவனது கேலியில் கோபமுற்று முறைத்தாள்.

“ஷட்டப் மிஸ்டர் அபிமன்யூ! ஸ்டேட்டோட சி.எம் மாதிரி நடந்துக்கோங்க… இவ்ளோ இர்ரெஸ்பென்சிபிளா பேசுறதுக்காக உங்களை அந்த நாற்காலில உக்காரவைக்கல”

“நான் சி.எம்மா நடந்துக்க வேண்டிய இடம் அசெம்ப்ளி தான்… வீடு இல்ல… இங்க நான் வெறும் அபி… உன்னோட ஹஸ்பெண்ட் அண்ட் அதி ஆரவ்வோட அப்பா மட்டும் தான்… என்னோட சி.எம் பதவிய நான் வாசல்ல செருப்பை கழட்டுறப்போவே கழட்டி வச்சிட்டுத் தான் வீட்டுக்குள்ள வர்றேன்… ஆனா நீ தான் இங்கயும் ரிப்போர்ட்டர் ஸ்ராவணி சுப்பிரமணியமாவே நடந்துக்கிற… நம்ம முன்னாடியே இதை பத்தி நிறைய பேசிருக்கோம் வனி… ஒய் டோண்ட் யூ அண்டர்ஸ்டாண்ட்? அரசியல் பேச்சை வீட்டுல பேசாத… அப்பிடி பேசுனா வீட்டோட நிம்மதி போயிடும்”

“வீட்டோட நிம்மதில இவ்ளோ அக்கறை இருக்குறவன் பொண்டாட்டியோட பேச்சைக் காது குடுத்து கேக்கலாமே”

“வீட்டைப் பொறுத்தவரைக்கும் நீ ஒய்பா பேசுனா என் காதுல விழும்…. ரிப்போர்ட்டரா நீ என்ன கத்துனாலும் எனக்குக் காது கேக்காது வனி… ஐ அம் ஹெல்ப்லெஸ்”

இதற்கு மேல் பேச ஏதுமில்லை என்று கையை விரித்தவனை நிராசை ததும்பும் விழிகளால் ஏறிட்டாள் ஸ்ராவணி. ஒருவர் மற்றொருவரின் அலுவல் விசயத்தில் தலையிடமாட்டோம் என்பது திருமணத்திற்கு முன்னர் அவர்கள் எடுத்த முடிவு. அதை அவள் மீறிக்கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் வேறு வழியுமில்லை.

எப்போதுமே அபிமன்யூவின் அரசியல் நிலைபாடுகள் நீதி நேர்மை நியாயம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கேட்டால் சாணக்கிய நீதியைப் பற்றி பாடமெடுப்பான்.

இன்றோ இது பற்றிய விவாதம் இனி நேராத அளவுக்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டான். என்ன சொல்லி அவன் மனதை மாற்றுவது என்பது புரியாமல் குழம்பி போனாள் ஸ்ராவணி.

மழை வரும்☔☔☔