☔ மழை 2 ☔

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

லைட்பெயிண்டிங் என்பது போட்டோகிராப்பியில் புகைப்படம் எடுக்கும் ஒரு முறை. லாங் எக்ஸ்போசர் செட்டிங்கில் ஷட்டரை திறந்து வைத்து நம் விருப்பப்படி டார்ச், மொபைல் டிஸ்பிளே இப்படி லைட்களை வைத்து பெயிண்ட் செய்வது போல் செய்து புகைப்படங்கள் எடுக்கலாம். இதில் நிறைய அட்வான்ஸ் லெவல்கள் உள்ளன. அதில் முக்கியமானது பிக்சல் ஸ்டிக் லைட்டுகளை வைத்து புகைப்படம் எடுக்கும் முறை.

                                          -சரவணவேல், புகைப்பட கலைஞர்

முக்தி யோகா மையம், வளசரவாக்கம்…

குல்மொஹர் மரங்கள் குடைபிடிக்க இரண்டு மாடிகளுடன் நின்றிருந்தது அந்த யோகா மையம். ‘முக்தி யோகா சென்டர்’ என்ற அறிவிப்பு பலகையில் சாந்தமான முகத்துடன் சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் சித்தார்த்தின் ஆஸ்தான குருவான சர்வ ருத்ரானந்தா.

கட்டிடத்தின் கீழ்பகுதியில் வாகன தரிப்பிடத்தில் காரை நிறுத்திய மயூரியும் யசோதராவும் செக்யூரிட்டியிடம் நுழைவுக்கட்டணம் செலுத்துமிடம் பற்றி விசாரிக்க அவரோ யோகா நிகழ்வு நடக்கும் இடத்தின் கீழே உள்ள அலுவலக அறையைக் காட்டினார். அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இருவரும் அந்த அலுவலக அறையை நோக்கி நடைபோட்டனர்.

சுமார் ஆறு கட்டிடங்கள் அடங்கிய அந்த வளாகம் முழுவதுமே முக்தி ஃபவுண்டேசனுக்குச் சொந்தமானது தான். மேல்தளம் மட்டும் யோகா ஸ்டூடியாவுக்காக கட்டப்பட்டதால் ஒரே அறையாக நீண்டிருக்கும்.

கீழ்த்தளத்தில் உள்ள அலுவலக அறை அந்த யோகா சென்டரின் தலைமை பொறுப்பாளருக்கானது. அதை அடுத்து ‘முக்தி ஷாப்பிங்’ என்ற பெயரில் முக்தி அறக்கட்டளையின் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள், முக்தியின் சின்னம் பொறிக்கப்பட்ட உடைகள், சிறு சிறு நகைகள், கைவினைப்பொருட்கள், வழிபாட்டுப்பொருட்கள் போன்றவை விற்கப்படும்.

மயூரியும் யசோதராவும் சென்றடைந்தது அலுவலக அறையை. அந்த அறையின் நடுநாயகமாக குரு சர்வ ருத்ரானந்தா சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போன்ற பெரிய புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருக்க அதன் கீழே அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது. ஊதுபத்தியின் சுகந்த நறுமணமும், மலர் மாலைகளின் வாசமுமாய் நுழையும் போதே மனதிற்குள் அமைதியை உண்டாக்கும் விதமாக அமைந்திருந்தது அந்த அலுவலகம்.

அங்கே இருந்த தலைமை பொறுப்பாளரும் சரி, மற்ற அலுவலர்களும் சரி, சாந்தமே உருவமாக இருந்தனர். நுழைவுச்சீட்டு வழங்கும் நபர் இரு கரம் கூப்பி “வாங்க சகோதரி” என்று இன்முகத்துடன் வரவேற்றார்.

யசோதராவுக்கு அந்த இடத்தின் அமைதியும் அவர்களின் சாந்தமும் பிடித்துப்போய் விட பதிலுக்குக் கரம் கூப்பியவள் அவரிடம் எழுநூறு ரூபாயை நீட்டினாள்.

அந்த மனிதர் ரூபாய் நோட்டுகளை எண்ணிவிட்டு “பேலன்ஸ் ஒன் ஹன்ட்ரெட் அண்ட் ஃபிஃப்டி ருபீஸ்?” என்று புன்னகையுடன் கேட்க மயூரி புருவம் சுருக்கினாள்.

“செவன் ஹன்ட்ரெட் தானே என்ட்ரி ஃபீஸ்?”

தோழியர் இருவரும் ஒரே குரலில் கேட்க அந்த மனிதரோ “இல்ல மேடம்… என்ட்ரி ஃபீஸ் எய்ட் ஹன்ட்ரெட் அண்ட் ஃபிஃப்டி” என்றார் அதே சாந்தத்துடன்.

யசோதராவோ கையில் வேறு எந்தப் பணத்தையும் எடுத்துவரவில்லை.

“ஓகே சார்… யோகா செஷன் எப்போ ஆரம்பிக்கும்? நான் அது முடிஞ்சதும் ஏ.டி.எம்ல வித்ட்ரா பண்ணி குடுத்துடுறேனே” என்றாள் அவள்.

“சாரி மேடம்.. என்ட்ரி ஃபீஸ் குடுக்காம நீங்க உள்ளே போகமுடியாது”

மயூரி என்ன செய்வது என்று விழியால் கேள்விக்கணை தொடுக்க அவளது மொபைலை வாங்கிய யசோதரா உடனே அழைத்தது சித்தார்த்தை தான்.

“நீ என் கிட்ட என்ட்ரி ஃபீஸ் செவன் ஹன்ட்ரெட்னு தானே சொன்ன… ஆனா இங்க அதிகமா கேக்குறாங்க சித்து… நான் கேஷ் எதுவும் கொண்டுவரல… நானும் மய்யூவும் வீட்டுக்குத் திரும்பப் போறோம்”

“யசோ யசோ! அவசரப்படாத ப்ளீஸ்… இந்த யோகால நீ கலந்துகிட்ட ரெஃப்ரெஷ்சா ஃபீல் பண்ணுவேனு தான் நான் உன்னை அதுல கலந்துக்கச் சொன்னேன்… ஒன்னுமில்ல, ஜே.எம் சார் கிட்ட நான் கேஷ் குடுத்துவிடுறேன்… வெயிட் பண்ணி யோகா செஷன்ல கலந்துக்கோ”

இதற்கு மேல் அவள் தான் என்ன செய்வாள்? ஜெகன்மோகன் வரும் வரை காத்திருந்தனர் அவளும் மயூரியும்.

அரைமணி நேர காத்திருப்பிற்கு பின்னர் ஜெகன்மோகன் வந்ததும் அவரிடம் பணத்தை வாங்கி நுழைவுக்கட்டணம் செலுத்திவிட்டு அவரை அனுப்பிவைத்தனர் இருவரும்.

அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் தான் யசோதராவைப் பொங்கி எழச் செய்தது. வேறு ஒன்றுமில்லை, நுழைவுக்கட்டணம் செலுத்தியதற்கு கொடுத்த ரசீதில் அந்த எண்ணூற்று ஐம்பது ரூபாயை கட்டணமாக குறிப்பிடாது அதை முக்தி ஃபவுண்டேசனுக்கு அளிக்கும் நன்கொடை (donation) என்று குறிப்பிட்டிருந்தனர். இதில் வரிவிலக்கு கோரும் வருமானவரி சட்டத்தின் 80G பற்றிய குறிப்பு வேறு!

“என்ன சார் இது? நான் உங்களுக்கு பே பண்ணுனது என்ட்ரி ஃபீஸ்… கரெக்டா சொன்னா இந்த யோகால கலந்துக்க நான் குடுத்த ஃபீஸ் இது… இதை எப்பிடி நீங்க டொனேசன்னு காட்டி 80G ரிசிப்ட் குடுக்கலாம்?”

“மேடம் எங்க முக்தியோட யோகா ப்ரோகிராம் எல்லாத்துலயும் இது தான் வழக்கமா ஃபாலோ பண்ணுற மெத்தட்”

“ஏன் சார் டொனேசன்ங்கிறது நம்ம விரும்பி ஒரு ஷேரிட்டிக்கு உதவி மனப்பான்மையோட குடுக்குற பணம்… ஆனா நீங்க வாங்குன ஃபீஸ் நீங்க குடுக்குற யோகா சர்வீசுக்கு… அதை எப்பிடி வாலண்டியர் டொனேசன்னு நீங்க சொல்லலாம்?”

அந்த நபர் சாந்தமான முகத்துடன் சிரித்தாரேயன்றி பதில் கூறவில்லை. அவள் கேட்ட கேள்வி நியாயமானது என அவருக்கும் தெரியும். ஆனால் நெடுநாட்களாக அவர்களின் நிறுவனத்தில் வழக்கத்தில் உள்ள நடைமுறை இது தானே!

வாக்குவாதத்தின் முடிவில் மீண்டும் சித்தார்த்தை அழைத்தாள் யசோதரா.

“என்னடா உலகமகா பித்தலாட்டமா இருக்கு? அவங்க வாங்குனது என்ட்ரி ஃபீஸ்… ஆனா டொனேசன் குடுத்ததா ரிசிப்ட் குடுக்காங்க… இதுக்கு மேல என்னால இங்க இருக்கமுடியாது சித்து”

“ஒரு ரிசிப்ட் வச்சு சண்டை போட்டே ஆகணுமா யசோ? இது சின்ன விசயம்… லீவ் இட்”

“இதே மாதிரி சின்ன சின்ன விசயத்தைக் கண்டுக்காம விடுறது தான் பெரிய தப்புக்குக் காரணமா இருக்கும் சித்து”

“ஊப்ஸ்! முடியல… ஒரு சின்ன விசயத்துக்கு இவ்ளோ ஆர்கியூ பண்ணுறீயே? கொஞ்சம் ஆர்டினரி மனுசியா பிஹேவ் பண்ணு யசோ”

அவனது சலித்துப் போன குரலில் சற்றே அமைதியுற்றவள் “சாரி சித்து… நான் சண்டை போடல… ஆனா இதுக்கு மேல எதாச்சும் நடந்துச்சுனா நான் பொறுமையா இருக்கமாட்டேன்” என்று கூறிவிட்டு பெரியமனதுடன் யோகா ஸ்டூடியோவை நோக்கி மயூரியுடன் நடந்தாள்.

மேல்தளத்தில் விரிந்திருந்த யோகா ஸ்டூடியோ சந்தனவண்ணப்பூச்சிலிருந்த சுவரில் ஆங்காங்கே வரையப்பட்டிருந்த யோகிகளின் உருவங்களுடன் அமைதியாய் இருந்தது. அந்த நீண்ட ஹாலில் யோகா செய்பவர்கள் அமர்வதற்காக காவி வண்ண விரிப்பு நீளமாக விரிக்கப்பட்டிருந்தது.

அதில் ஏற்கெனவே அமர்ந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் அதே சந்தனவண்ணத்தில் தொளதொள சுடிதார் அணிந்த பெண்மணி ஒருவர். கூந்தல் கழுத்தோடு நின்றிருக்க நெற்றியில் சந்தனத்தால் சிறிய திலகமிட்டிருந்தவரின் முகத்தில் தான் எவ்வளவு சாந்தம்!

ஒருவேளை இந்த முக்தி யோகா மையத்தில் நுழையும் போதே சாந்தமாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்துவிடுவார்களோ என்று தங்களுக்குள் பேசியபடி அவரை நோக்கிச் சென்றனர் மயூரியும் யசோதராவும்.

அவரிடம் தங்களது நுழைவுச்சீட்டைக் காட்ட அவர் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி அமரும் இடத்தைக் காட்டவும் இருவருக்கும் ஆச்சரியம். அதைக் கண்டுகொண்டவரோ தான் இதற்கு முன்னர் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் மேலாண்மைப்பிரிவில் பணிபுரிந்ததாகக் கூறினார்.

பின்னர் ஏன் இங்கே வந்தீர்கள் என்று கேட்டால் குருஜியிடம் யோகா பயின்றபோது உண்டான நிம்மதிக்கு முன்னால் கார்பரேட் நிறுவன உயரதிகாரி வேலை ஒன்றுமே இல்லை என்பதால் அதை ராஜினாமா செய்துவிட்டு முக்தி ஃபவுண்டேசன் அமைந்திருக்கும் மேகமலை ஆசிரமத்தில் தங்கிவிட்டதாக கூறினார்.

யசோதராவுக்கு இதையெல்லாம் நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பம். ஆனால் தங்களிடம் பொய் சொல்லி இப்பெண்மணிக்கு என்ன இலாபம் என்ற கோணத்தில் யோசித்தவள் அதன் பின்னர் அவரிடம் அதிகம் பேசாமல் மயூரியை அழைத்துக்கொண்டு அவர்களது இடத்தில் சென்று அமர்ந்தாள்.

அந்த அறையின் நடுவிலும் குரு சர்வருத்ரானந்தாவின் படம் மலர் மாலை தீப அலங்காரம் சகிதம் வைக்கப்பட்டிருந்தது. அதன் இடப்பக்கத்தில் இருந்த பெரிய எல்சி.டி டிவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

யோகா பயிற்றுவிக்கும் பெண்மணி முதலில் அங்கிருந்த பூஜை செய்வதற்கான பொருட்களை வைத்து ஏதோ சிறிய பூஜையைச் செய்துவிட்டு யோகாவை ஆரம்பித்தார்.

அதற்கு முன்னே தொலைகாட்சியில் சில வழிமுறைகள் பற்றிய வீடியோ ஓடவிடப்பட்டது. அதில் யோகாவை ஆரம்பிக்கும் முன்னர் உடலின் மூட்டுகளை தயார் செய்யும் ‘உப யோகா’வை எப்படி செய்வது என்ற வழிமுறையை செய்து காட்டினார் குருஜியின் சிஷ்யர்களுள் ஒருவர்.

கைகளின் மணிக்கட்டினை சுழற்றுவது, கழுத்தைச் சுழற்றுவது என சிறிய சிறிய பயிற்சிகளை அவர் கற்றுக்கொடுக்க யோகா நிகழ்விற்கு வந்தவர்களும் அதை செய்ய ஆரம்பித்தனர்.

அன்றைய யோகா நிகழ்வு உப யோகா பயிற்சியோடு முடிந்தது. மறுநாள் ஹதயோகாவும் அதற்கு மறுநாள் சூரியகிரியாவும் பயிற்றுவிக்கப்பட மூன்று நாட்களில் யசோதராவும் புத்துணர்ச்சியாகத் தான் உணர்ந்தாள்.

அங்கே பயிற்றுவிக்கப்பட்ட யோகாவில் அவளால் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மெய்யாகவே மூன்று நாட்களில் அலைபாய்ந்த அவளின் மனம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததை அவளாலும் மயூரியாலும் உணர முடிந்தது.

“மனசு லேசான மாதிரி ஃபீல் ஆகுது யசோ… நம்ம ஹேமாவையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமோ?”

“நானும் அதையே தான் யோசிச்சேன் மய்யூ”

இருவரும் பேசிக்கொண்டே வெளியேற எத்தனிக்கையில் யோகா பயிற்றுவித்த பெண்மணி அவர்களிடம் வந்தார். அவருக்கு இருவரும் வணக்கத்தைப் போட அவரோ இந்த யோகா நிகழ்வினால் அவர்களிடம் உண்டான மாற்றம் பற்றி சில வார்த்தைகள் கூற இயலுமா என்று பணிவுடன் கேட்டார்.

“நீங்க எங்க கிட்ட சொல்லலனாலும் பரவால்ல… உங்க சோஷியல் மீடியா அக்கவுண்ட்ல முக்திய டேக் பண்ணி உங்களோட யோகா எக்ஸ்பீரியன்சை ஷேர் பண்ணிக்கிட்டீங்கனா வீ வில் ஃபீல் வெரி ஹேப்பி”

“இப்போ டெஸ்டிமோனி குடுக்குற அளவுக்கு டைம் இல்ல மேடம்… பட் கண்டிப்பா டிவீட் போடுறேன்” மனநிறைவுடன் கூறிவிட்டு கீழ்த்தளத்தை அடைந்த இருவரும் அப்படியே காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தால் இதன் பின்னர் நடக்கப்போகிற எந்த நிகழ்வுகளுமே நடந்திருக்காது.

ஆனால் யசோதராவின் அமைதியுற்ற மனமோ முக்தி ஷாப்பிங் என்ற கட்டிடத்தை நோக்கி அல்லவா அவளைச் செல்லத் தூண்டியது.

“மய்யூ அந்த ஆர்கானிக் புராடக்ட்சை பாத்துட்டு நல்லா இருந்தா வாங்குவோமா? நமக்கும் ஹனி காலியா போயிட்டுடி”

“அங்க வந்து சண்டை எதுவும் போடமாட்டீயே?” முன்னெச்சரிக்கையுடன் வினவினாள் மயூரி.

“கோவமா? இந்த யோகா செஷனுக்கு அப்புறம் என் மனசு அவ்ளோ சாந்தமா இருக்குடி… இனிமே நோ ஃபைட், நோ கோவம்… ஒன்லி அமைதி, சாந்தம் மட்டுமே”

அவளது பேச்சை நம்பி முக்தி ஷாப்பிங் கட்டிடத்துக்குள் நுழைந்த மயூரி சொன்னபடி தேன் மற்றும் மஞ்சள்பொடியை வாங்கிய போது தான் அந்நிகழ்வு நடந்தது.

“வாங்க மேடம்! யோகா செஷன் முடிஞ்சதும் இங்க வராம இருந்துடாதீங்க… நாங்க ஷேல் பண்ணுற எல்லாமே ஆர்கானிக் புராடெக்ட் தான்” என்றபடி வந்தார் ஷாப்பிங் பகுதியின் பொறுப்பாளர்.

யசோதரா சரியென தலையசைக்கவும் அவர் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவரது நேரம் அங்கிருந்த ருத்திராட்ச மாலைகளைக் காட்டினார் அந்தப் பொறுப்பாளர்.

“இது முக்தில இருக்குற சுயம்பு லிங்கம் முன்னாடி வச்ச பூஜை பண்ணுன ருத்திராட்ச மாலை… எங்க கிட்ட இருக்குற ருத்திராட்சங்கள் எல்லாமே இமயமலை பகுதிகள்ல இருந்து பர்சேஸ் பண்ணுனது மேடம்… அதுலயும் இதோ ரெண்டு ருத்திராட்சம் ஒட்டியிருக்குற மாதிரி இருக்குதே இந்த ருத்திராட்சம் சிவன் சக்தியோட அம்சம்… இதை கௌரிஷங்கர்னு சொல்லுவாங்க”

யசோதராவின் தந்தை வாசுதேவனுக்குப் பக்தி அதிகம். எனவே அவருக்காக சிறிய ருத்திராட்சங்களின் நடுநாயகமாக கௌரிஷங்கர் கோர்க்கப்பட்ட மாலையை வாங்கினாள் அவள். அதை வாங்கும் போதும் நன்கொடை ரசீது தான் கொடுக்கப்பட்டது.

ஆனால் மூன்று நாட்கள் யோகாவின் பலனாக அவளுக்குக் கோபமே வரவில்லை. இதுவும் ஏதோ அலுவலக ரீதியான சிறு தவறு என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு அவருக்கு நன்றி கூறியவள் மயூரியுடன் கிளம்பினாள்.

அவள் மயூரியுடன் லோட்டஸ் அப்பார்ட்மெண்டை அடைந்த பின்னர் யோகா நிகழ்வின் சிறப்புகளை ஹேமலதாவிடம் கூற சாந்தநாயகியும் அவளும் அடுத்த முறை அதில் கலந்துகொள்ளலாம் என்று ஆர்வத்துடன் கூறினர்.

சரியாக அந்நேரத்தில் சித்தார்த் போனில் அழைத்தான். யசோதரா புன்சிரிப்புடன் அவனது அழைப்பை ஏற்கவும் மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

“யோகா புரோகிராம் எப்பிடி போச்சு யசோ?”

“நாட் பேட்… பட் நிஜமாவே ஐ ஃபீல் பெட்டர் நவ்”

“அதுக்குத் தான் நீ அங்க போகணும்னு நான் ஆசைப்பட்டேன்… த்ரீ டேய்ஸ் செஷன்ல இவ்ளோ ரெஃப்ரெஷ்சா ஃபீல் பண்ணுறல்ல, நீ மட்டும் ருத்ராஜிய மீட் பண்ணி அவர் கண்டெக்ட் பண்ணுற யோகா ப்ரோகிராம்ல கலந்துக்கிட்டா இதை விட பெட்டரா ஃபீல் பண்ணுவ… நான் நெக்ஸ்ட் வீக் மேகமலைக்குப் போறேன்… மேடம் ஃப்ரீயா இருந்தீங்கனா என்னோட தாராளமா வரலாம்”

“நோ வே! நெக்ஸ்ட் வீக் நான் மறுபடி ஆபிஸ் போகணும்… சீஃப் கிட்ட இதை பத்தி ஆல்ரெடி பேசிட்டேன்… சோ இந்தத் தடவை நீ மட்டும் போயிட்டுவா… பை”

“ஏய் யசோ! என்னமா உடனே காலை கட் பண்ணுற?”

“ஏன்டா யோகா, ஸ்வாமிஜினு பேசுறவன் கிட்ட நான் வேற என்னடா பேசமுடியும்?”

“அது வேற டிப்பார்ட்மெண்ட்… இப்போ நம்ம லவ் மேட்டருக்கு வருவோம்” என்றான் சித்தார்த்.

“நம்ம லவ்வா? நான் எப்போடா உன்னை லவ் பண்ணுறேன்னு சொன்னேன்?” அமர்த்தலாக வினவினாள் யசோதரா. கூடவே விருந்தாளியாக வந்த சிரிப்பை அவன் கண்டுகொள்ளாமல் அதை மௌனமாக விழுங்கிக்கொண்டாள்.

“நீ இப்பிடியே சொல்லிட்டிருந்தேனா கட்டாயம் ஒரு நாள் சாமியாரா போயிடுவேன்… அப்புறம் நீ உக்காந்து குமுறி குமுறி அழுவ”

அவனது பதிலைக் கேட்டதும் விழுங்கிய சிரிப்பு மீண்டும் வெளிப்பட கலகலவென நகைத்தாள் யசோதரா.

“நான் உன்னை நினைச்சு அழுவேனா? அதுவும் குமுறி குமுறி அழுவேனா? வாய்ப்பில்ல ராஜா… இப்பிடியே பகல்கனவு காணாம போய் அந்தச் சாமியாரை இண்டர்வியூ பண்ணி அதை உன் டிவிட்டர்ல ஷேர் பண்ணு… அதுக்கு தானே அங்க போற”

“அவர் ஒன்னும் சாமியார் இல்ல… ஹீ இஸ் யோகா குரு… ஒன்னு குருஜினு சொல்லு… இல்லனா என்னை மாதிரி ருத்ராஜினு சொல்லு”

“அஹான்! அவர் வெறும் யோகா குரு மட்டும் தானா? ஏதோ அவதாரம்னு கேள்விப்பட்டேனே” கேலியாக யசோதரா கேட்கவும் மறுமுனை அமைதியுற்றது.

“என்னாச்சு மிஸ்டர் சித்தார்த்? சத்தமே இல்ல! வெறும் யோகா குரு தான் டொனேசன் வாங்கி தன்னோட ஆசிரமத்துல கோயில் கட்டுறாரா?”

இப்போதும் பதில் இல்லை. அவனுக்குப் பதில் தெரியாததால் உண்டான அமைதி அல்ல அது. அவனது ஆன்மீக வழிகாட்டியை யசோதரா கிண்டல் செய்ததால் உண்டான கோபத்துடன் கூடிய அமைதி அது.

அந்த அமைதியை உடைத்தவன் “நீ இப்போ ரிப்போர்ட்டர் யசோதராவா பேசுனா நானும் ருத்ராஜிய நம்புறவனா ஆன்சர் சொல்லுவேன்… அதனால உனக்கும் எனக்கும் மனஸ்தாபம் கூட வரலாம்… சோ இந்தப் பேச்சை இதோட விட்டுடுவோம்” என்றான்.

“ம்ம்… அதுவும் சரி தான்… எனக்கு உன் ருத்ராஜியோட எந்தப் பிரச்சனையும் இல்ல… ஆனா அவர் வெறும் யோகா குரு மட்டுமில்ல… ஹீ இஸ் அ காட்மேன்… இப்போ இல்லனாலும் இன்னும் சில வருசங்கள்ல அவர் அப்பிடி மாறுவார்… அப்போ அவரைப் பாத்துக்கலாம்” என்று யசோதராவும் பேச்சை முடித்துவிட்டாள்.

அதன் பின்னர் இருவரும் பொதுவான விசயங்களையே பேசினர். சித்தார்த் தன்னுடன் மாதவனையும் கௌதமையும் மேகமலை ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறினான்.

“ஏன் ஜித்துவ மட்டும் விட்டுட்ட? அவனையும் கூட்டிட்டுப் போய் கோஷ்டி கானம் பாட வேண்டியது தானே?”

“அவனுக்கு காலேஜ்ல எக்சாம் இருக்குதாம்… இல்லனா அவனையும் கூட்டிட்டுப் போகலாம்… ஹான், மாம் அண்ட் டாட் உன் பேரண்ட்ஸ் கிட்ட பேசணும்னு சொன்னாங்க”

“என்ன திடீர்னு? ஏய் நீ எதாச்சும் குட்டி கலாட்டா பண்ணுறீயா சித்து?”

“ஐய் கண்டுபிடிச்சிட்டியே! நானே தான் அவங்களை தூண்டிவிட்டேன்… பின்ன என்னவாம்? நீ எப்போ என்னை லவ் பண்ணுறேன்னு ஒத்துக்கிறது, எப்போ நம்ம மேரேஜ் நடக்குறது?” ஆதங்கத்துடன் கேட்டான் சித்தார்த்.

“நீ கமிட் ஆன மூவிய முடிடா… அப்புறம் மேரேஜ் பத்தி யோசிக்கலாம்” என்றாள் அவள் முடிவாக. ஆனால் அவளது பெற்றோரை சென்னைக்கு அழைப்பதற்கு மட்டும் ஒப்புக்கொண்டாள்.

இரு தினங்கள் கழித்து மதுரையிலிருந்து வந்த வாசுதேவனும் வைஷ்ணவியும் மகள் மீண்டும் அலுவலகம் செல்லவிருப்பதால் அவளுக்கு ஆலோசனைகளை வாரி இறைக்க அவளோ முக்தி ஷாப்பிங்கில் வாங்கிய ருத்திராட்சமாலையை தந்தைக்கு லஞ்சமாக கொடுத்து அவரை அமைதியாக்கினாள்.

“உங்க பொண்ணுக்குத் திடீர்னு என்ன யோகா மேல நாட்டம்?” சந்தேகத்துடன் கணவரிடம் கேட்டார் வைஷ்ணவி. அங்கேயும் அவள் வேலை விசயமாகச் சென்றிருப்பாளோ என்ற ஐயம் அவருக்கு. அதை வெளிப்படையாகச் சொல்லவும் யசோதராவுக்குச் சிரிப்பு தான் வந்தது.

“என்னம்மா நீ இப்பிடி பண்ணுறீயேம்மா? யோகா க்ளாஸ்கு போறப்போ நான் வெறும் யசோதரா மட்டும் தான்… இன்வெஸ்டிகேட்டிவ் ஜெர்னலிஸ்ட்ங்கிற அடையாளத்தோட போறதுக்கு அங்க என்ன தீவிரவாதமா நடக்குது?”

விளையாட்டாய் கேட்டவளின் முதுகில் அடி விழுந்தது. அதைக் கண்டு மயூரி நகைக்க அவளை யசோதரா முறைத்துவைத்தாள். இதற்கிடையே ருத்திராட்ச மாலையை வாங்கிய வாசுதேவன் அதை கழுத்தில் அணியாது கூர்ந்து நோக்கியபடி அமர்ந்திருந்தார்.

“என்னப்பா இது உங்களுக்குப் பிடிக்கலயா?” யோசனையுடன் கேட்டாள் யசோதரா.

“நீ வாங்கி குடுத்த எதுவும் எனக்குப் பிடிக்காம இருக்குமாடா?”

“அப்போ ஏன் பெரியப்பா இவ்ளோ யோசிக்கிறீங்க?” இது மயூரி.

“ஏன்னா இந்த மாலைல இருக்குறது உண்மையான ருத்திராட்சமே இல்ல” என்று கூறிவிட்டு அதை டீபாய் மீது வைத்துவிட்டு தனது மூக்குக்கண்ணாடியைக் கழற்றி சட்டையில் துடைத்துவிட்டு மீண்டும் அணிந்தார் வாசுதேவன்.

மயூரியும் யசோதராவும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மயூரியோ “எப்பிடி இது ஒரிஜினல் இல்லனு சொல்லுறீங்க பெரியப்பா? அந்த சூப்பர்வைசர் எங்க கிட்ட இது இமயமலைப்பகுதில இருந்து வாங்குனதுனு சொன்னாரே” என்று ஆற்றாமையுடன் வினவ

வாசுதேவன் மீண்டும் அந்த மாலையைக் கையில் எடுத்து அதன் மையத்தில் இரண்டு ருத்திராட்சங்கள் ஒட்டியது போன்றிருக்கும் இணைப்பைக் காட்டி “இதை பாத்தீங்களா?” என்று அவர்களிடம் கேட்டார்.

யசோதரா அதைப் பார்த்துவிட்டு “இதை கௌரிசங்கர்னு சொன்னார்பா அந்த சூப்பர்வைசர்…  சிவனும் சக்தியும் சேந்த அம்சம்னு சொன்னார்… இதோட விலை மட்டுமே பத்தாயிரம்பா” என்றாள்.

கௌரி சங்கர் என்பது இரண்டு ருத்திராட்சங்கள் ஒட்டி ஒரே மையப்பகுதியுடன் இருக்கும் வடிவம். அதாவது ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் போல காணப்படும். இது சிவசக்தியின் அம்சமாக கருதப்படுகிறது.

கௌரி ஷங்கர்

யசோதராவின் தந்தையும் இதை அறிவார். ஆனால் அவர் கையில் இருக்கும் ருத்திராட்சம் உண்மையில் இரண்டு ருத்திராட்சங்களை பசை கொண்டு ஒட்டி செயற்கையாகத் தயாரிக்கப்பட்டது என்பதை அவர் அறிந்துகொண்டாரே! அதை மகளிடம் கூறியும் விட்டார் வாசுதேவன்.

“இது கௌரிசங்கர் இல்லம்மா… நேச்சுரலா மரத்துல வளருறப்பவே இரண்டு ருத்திராட்சவிதை ஒட்டி வளர்ந்தா தான் அதை கௌரிசங்கர்னு சொல்லுவாங்க… இது அப்பிடி இல்லடா, ரெண்டு விதையை கட் பண்ணி க்ளூ போட்டு ஒட்டிருக்காங்க… இங்க பாரு, க்ளூ தெரியுதா? இந்த மாதிரி இப்போ நிறைய ஃபோர்ஜெரி நடக்குதும்மா… இதுல இன்னொரு ஏமாத்துவேலையும் இருக்கு” என்றபடி சோபாவில் சாய்ந்துகொண்டார் அவர்.

யசோதரா ஏற்கெனவே பன்னிரண்டாயிரத்துக்கு வாங்கிய ருத்திராட்சமாலையில் இருந்த தகிடுதத்தத்தில் திகைத்துப் போனவள் அடுத்து என்ன என்று கேள்வியுடன் நோக்கினாள்.

“இதுல இருக்குறது ருத்ராட்சமே இல்ல… பாக்குறதுக்கு ருத்திராட்சம் மாதிரி இருக்குற இந்த விதையோட பேர் பத்ராட்சம்… இதை தான் இப்போ ருத்திராட்சம்னு சொல்லி நிறைய இடங்கள்ல ஏமாத்துறாங்க… மய்யூம்மா உங்கப்பா ஒரு தடவை இதே மாதிரி வாங்கி ஏமாந்திருக்கார்டா… அப்போ தான் எனக்கு இந்த விவரமே தெரியும்”

வாசுதேவன் சொல்லி முடிக்கவும் வைஷ்ணவி பன்னிரண்டாயிரம் வீணாகிவிட்டது என புலம்ப மயூரியோ யசோதராவின் முகத்தில் இப்படி ஏமாந்து போனோமே என்ற கழிவிரக்கம் சூழ்வதைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியும், யசோதராவின் இந்தக் கழிவிரக்கம் இன்னும் சில நிமிடங்களில் எரிச்சலாக மாறும். பின்னர் கோபமாக உருவெடுக்கும். அந்தக் கோபத்தின் இலக்காக இருப்பது முக்தி ஃபவுண்டேசன் என்றால் பரவாயில்லை. ஆனால் யசோதராவின் கோபம் இலக்கு மாறி சித்தார்த்தை தாக்கிவிட்டால் என்னவாகும்?

மழை வரும்☔☔☔