☔ மழை 16 ☔

அரசியல் (Politics) என்பது ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. அரசியல் என்பதனுள், அரசு, அரசாட்சி, அரசை ஆளும் அரசன், நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உட்கூறுகள் பொதிந்திருக்கின்றன. நீதி இலக்கியங்களுள் திருக்குறள் அரசியல் பற்றி பேசும்பொழுது, மொழி, இனம், மதம், நாடு போன்றவற்றைச் சாராமல் உலகப்பொதுமறையாய் எல்லோருக்கும் பொருந்துவனவாய் பேசுகிறது. அரசு என்பதன் பொருளை அறியமுற்படும்பொழுது பல்வேறு கருத்துக்களும் அகராதிகள் தரும் விளக்கங்களும் அரசியல் குறித்த அடிப்படையை உணருவதற்கு அவசியமாகின்றன.

ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை

ஏழாண்டுகளுக்குப் பிறகு…

அன்று வெள்ளி கிழமை என்பதால் மிதமான பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருக்க மங்கலநாதமாய் ஒலித்தது அந்தச் சிவாலயத்தின் மணியோசை.

அர்ச்சகர் காட்டிய தீபங்கள் அடங்கிய மங்கல ஆரத்தி தட்டிலிருந்து எழுந்த ஒளியில் கருவறையில் இருந்த சிவலிங்கம் பளிச்சென்று தெரிய அதன் பின்புறம் வட்டவடிவத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்கள் ஒளிவட்டத்தை நினைவூட்டியது.

அனைவரும் கண் மூடி கருவறையில் உறைந்திருந்த சிவனை மனமுருகி வேண்டிக்கொண்டிருந்த நேரத்தில் கிள்ளை மொழியாய் ஒலித்தது ஒரு சிறுமியின் குரல்.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

கருவறையிலிருந்து வெளியே வந்த அர்ச்சகர் ஆரத்தியை அனைவர் முன்னும் நீட்ட கண்களில் ஒற்றிக்கொண்ட அச்சிறுமியின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டார் அவர்.

“நோக்கு நல்ல சாரீரம் குழந்தே! தெய்வ கடாட்சத்தோட தீர்க்காயுசா இருப்ப” என்று அவளை ஆசிர்வதிக்க அவள் பின்னிருந்து அணைத்தாள் அச்சிறுமியின் அன்னை.

“சர்மி அர்ச்சகர் தாத்தா விஷ் பண்ணுனதுக்கு தேங்க்ஸ் சொல்லு செல்லம்” அந்தக் கொஞ்சலான குரலுக்குச் சொந்தக்காரி யசோதரா! அருமையான சிவபுராண வரிகளைப் பாடிய அச்சிறுமி அவளின் செல்வமகள் சர்மிஷ்டா, அன்று அவளது ஆறாவது பிறந்தநாள். அதனால் தான் அன்னையுடன் ஆலயதரிசனம் காண வந்திருந்தாள் அவள்.

அவளுக்குப் பாட்டு பாடுவதில் பிடித்தம் அதிகம். விடுமுறை காலங்களை மதுரை பாட்டியின் வீட்டில் கழிக்கச் செல்பவள் ஒவ்வொரு முறையும் ஏதாவது பதிகத்தையோ ஸ்லோகத்தையோ கற்றுக்கொண்டு வருவது வாடிக்கை.

இம்முறை வைஷ்ணவி அவளுக்குக் கற்றுக்கொடுத்தது சிவபுராணத்தின் பாடல்கள்! குழந்தைகளின் மனம் பச்சை களிமண் போல, அதை நாம் எந்த உருவுக்கு வளைக்கிறோமோ அதுவாகவே அவர்கள் மாறிவிடுவர்.

சர்மிஷ்டாவின் மனதில் அவளது அம்மா பாட்டி பக்தி பாடல்கள் மூலம் இசையை பதியவைத்துவிட்டார். சும்மாவே ஏதாவது பாடலை முணுமுணுப்பவளுக்கு அவருடன் சேர்ந்து பக்தி பாடல்கள் பாடுவது பிடித்தும் போய்விட்டது.

குழந்தைகளுக்குத் தாங்கள் கற்றுக்கொண்டதை யாரிடமாவது செய்து காட்டி பாராட்டு வாங்குவது மிகவும் பிடிக்கும். விடுமுறை கழிந்து சென்னை வந்ததும் அப்பா பாட்டியிடம் அதே சிவபுராணத்தைப் பாடி காட்டியவளை அள்ளி அணைத்துக்கொண்ட சவிதா “இந்தச் சின்ன வயசுல என் பேத்திக்குத் தான் எவ்ளோ ஞானம்! அவங்கம்மாவுக்குத் தான் அது வருவேனானு அடம்பிடிக்குது” என்று கேலியாகக் குறைபட்டது வேறு விஷயம்!

அதே வழக்கத்தில் தான் கோவிலில் சிவபுராணத்தைத் தயக்கமின்றி பாடினாள் சர்மிஷ்டா. அர்ச்சகர் அதை பாராட்டிவிடவும் அவளுக்கு உற்சாகம் தாங்கவில்லை.

அவளருகே நின்றிருந்த சிறுவனிடம் ஹைஃபை கொடுக்கவும் அவன் தனக்கும் விபூதி பூசிவிடுமாறு தலையை நீட்டினான். அவன் சிகையை நெற்றியிலிருந்து ஒதுக்கினாள் அவனது அன்னை மயூரி.

அச்சிறுவன் மயூரி மாதவனின் மகன் பிரவின். சர்மிஷ்டாவை விட ஆறு மாதங்கள் மூத்தவன். மயூரி கூந்தலை ஒதுக்கிவிட்டதும் அவன் நெற்றியில் அர்ச்சகர் விபூதியைப் பூசினார்.

“வீட்டுக்குப் போவோமா?” என்று கேட்டபடி மகளின் கரம் பற்றிய யசோதராவின் முகம் சற்று தெளிவின்றி இருக்க பிரவினுடன் நடந்த மயூரி அவளது தோளை அழுத்தினாள்.

“சித்தார்த் கால் பண்ணுனாரா?”

குழந்தைகளுக்குக் கேட்காத குரலில் மெதுவாக வினவினாள் மயூரி.

இல்லையென தலையாட்டிய யசோதரா “மாதவன் கிட்ட பேசுனானா?” என்று மெதுவாகக் கேட்க மயூரியின் தலையும் மறுப்பாய் அசைந்தது.

“ருத்ராஜிய பாத்து அவர் சதாசிவன் கோயில் கட்டுறதை மையமா வச்சு யூடியூப் சேனல்ல இண்டர்வியூ எடுக்குறேன்னு சொன்னதோட சரி… ஒன் வீக் ஆகுது, இன்னும் காலும் வரல, ஆளும் வரல… அவனை சொல்லி குத்தமில்ல மய்யூ! அவனோட நம்பிக்கை குருட்டுப்பக்தியா மாறுற வரைக்கும் வேடிக்கை பாத்த என் மேல தான் தப்பு… சொல்லி திருத்துற ஸ்டேஜை எல்லாம் சித்து தாண்டிட்டான்… ஆனா அவன் இன்னைக்கு வந்துடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு… ஏன்னா சர்மிக்கு அவன் ப்ராமிஸ் பண்ணிருக்கான்… எப்போவும் அவளுக்குச் செஞ்ச ப்ராமிசை சித்து நிறைவேத்தாம இருந்ததில்ல” என்று நம்பிக்கையுடன் உரைத்த யசோதரா தோழியை அழைத்துக்கொண்டு காரில் அமர்ந்தாள்.

குழந்தைகள் பின்னிருக்கையில் அமர்ந்துகொள்ள காரை மயூரி ஓட்டத் துவங்கினாள்.

பின்னிருக்கையில் இருந்த குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி குதூகலத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.

“அப்பா எனக்கு ஆர்ட் மாஸ்டர் டெஸ்க் வாங்கித் தர்றேனு சொல்லிருக்காரே.. என் ப்ளேரூம்ல அதையும் வச்சிப்பேன்” என்று பெருமிதமாக பிரவினிடம் கூறினாள் சர்மிஷ்டா.

அவனோ “லாஸ்ட் டைம் வாங்குன கிச்சன் செட் என்னாச்சு சர்மி?” என்று வினவ

“கிச்சன் செட்டா? அது எனக்குப் பிடிக்கல பிரவி… இட்ஸ் போரிங்” என்று அலுத்துப் போன குரலில் பதிலளித்தாள் சர்மிஷ்டா.

“தாத்தா பிங்க் கலர் டென்ட் கிப்ட் பண்ணிருக்கார் பிரவி… அதுல பில்லோ இருக்கு, என் பார்பியவும் அதுல தூங்க வைக்கலாம்” என்று அடுக்கிக்கொண்டே சென்றவளின் பேச்சைக் கேட்டபடி முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள் யசோதரா.

“சர்மி நீ ஜித்து அங்கிள் கிட்ட கிப்ட் கேக்கலயா?”

“சித்தப்பா நான் கேக்காமலே வாங்கித் தருவார்டா பிரவி… இன்னொன்னு தெரியுமா? நம்ம யார் கிட்டவும் எதையும் கேட்டு வாங்க கூடாதாம்… அது பேட் ஹேபிட்னு மம்மி சொன்னாங்க”

“நான் டாடி கிட்ட ஸ்லாமின் ஸ்லக்கர்ஸ் கேட்டேனே, அதுவும் பேட் ஹேபிட்டா?” முட்டைக்கண்ணை விரித்து அவன் ஆச்சரியமாக கேட்க சர்மிஷ்டா அதற்கு பதில் தெரியாது விழிக்க அவர்களைப் பெற்ற அன்னையர் இருவரும் பிள்ளைகளின் உரையாடலைக் கேட்டுச் சிரிக்கத் துவங்கினர்.

குழந்தைகளும் அந்தச் சிரிப்பில் கலந்துகொள்ள யசோதரா பின்னே திரும்பி “பிரவி குட்டி! நீ டாடி மம்மி கிட்ட என்ன வேணாலும் கேக்கலாம்… பட் ஸ்கூல்லயோ வெளிய மீட் பண்ணுறவங்க கிட்டவோ எதையும் கேட்டு வாங்க கூடாது” என்று கூற

“திங்ஸா டாய்சா ஆன்ட்டி?” என்று கேட்டான் பிரவின்.

“எதுவுமே கேட்டு வாங்க கூடாதுடா செல்லம்… நீ ட்ரூவா ஹார்ட் ஒர்க் பண்ணுனா உனக்கு வேண்டியது எல்லாம் தானா கிடைக்கும்” என்றாள் யசோதரா.

“அது எப்பிடி கிடைக்கும்?” ஒரே குரலாய் கேள்வி பிறந்தது இருவரிடத்திலும்.

“இப்போ நீ டெய்லி ஹோம் ஒர்க் பண்ணி, க்ளாஸ்ல ரைம்ஸ் கவனிச்சு, எக்சாம்ல கரெக்டா ஆன்சர் பண்ணுனா தானே உனக்கு நல்ல க்ரேட் கிடைக்கும்?”

ஆமென தலையாட்டினர் இருவரும்.

“அப்பிடி பண்ணாம உங்க மிஸ் கிட்ட போய் ‘மிஸ் மிஸ் ப்ளீஸ் எனக்கு நிறைய மார்க் போடுங்க’னு கேட்டா உனக்குக் கிரேட் வருமா? வராதுல்ல… அதே மாதிரி தான், ஹார்ட் ஒர்க் பண்ணுனா உனக்கு வேணுங்கிறது உன் கிட்ட வந்துடும்… அதை நீ யார் கிட்டவும் கேக்க வேண்டிய அவசியமில்ல… புரிஞ்சுதா பட்டுக்குட்டீஸ்?” என்று இருவரது சிகையையும் அவள் எக்கி கலைத்துவிட அவர்கள் கிளுக்கி சிரிக்க ஆரம்பித்தனர்.

சிரித்து முடித்ததும் “மம்மி சித்தப்பா கூட சாரு ஆன்ட்டியும் வருவாங்களா? அவங்க கிட்ட என்னோட டென்ட்டை காட்டணும்” என்று ஆர்வம் ததும்பும் குரலில் வினவினாள் சர்மிஷ்டா.

“சித்தப்பாவும் ஆன்ட்டியும் ஈவினிங் கேக் கட் பண்ணுறப்போ வருவாங்கடா… அது வரைக்கும் நீயும் பிரவியும் உன்னோட ப்ளே ரூம்ல ஜாலியா விளையாடுங்க” என்றாள் யசோதரா.

அதன் பின்னர் குழந்தைகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள தோழிகள் இருவரும் சாருலதாவையும் இந்திரஜித்தையும் பற்றி உரையாட ஆரம்பித்தனர்.

“ஜித்து ஏதோ போட்டோஷூட்னு சொன்னானே! அவனோட தான் சாரு இருப்பா… ரெண்டும் வளந்தும் குழந்தையா சுத்துதுங்க… ஃபார்முலா ஒன் ரேசர் மாதிரியும், சோனி நேஷ்னல் போட்டோகிராபி அவார்ட் வின்னர் மாதிரியுமா நடந்துக்கிறாங்க?”

“எப்பிடியோ இன்னைக்குச் சாரு கிட்ட ஜித்து மாட்டிக்கிட்டான்”

நமட்டுச்சிரிப்புடன் காரைச் செலுத்தினாள் மயூரி. யசோதரா வெளிப்பார்வைக்குச் சிரித்தாலும் அவளது மனமெங்கும் சித்தார்த் எப்போது வருவான் என்பதிலேயே உழன்றது.

அவன் மேகமலைக்குச் சென்று அன்றுடன் ஒரு வாரம் கழிந்துவிட்டது. சென்றதிலிருந்து முதல் இரண்டு நாட்கள் இரவில் போனில் அழைத்துப் பேசினான். பின்னர் அந்தப் பேச்சுவார்த்தையும் நின்றுவிட சர்மிஷ்டா தான் அவனைத் தேட துவங்கினாள்.

குழந்தையிடம் பேச முடியாதளவுக்கு அப்படி அங்கே என்ன தலை போகிற காரியம் என்று யசோதரா பொருமினாலும் அவள் அவனிடம் பேச முயலவில்லை.

சர்வருத்ரானந்தாவின் அடுத்தத்த செயல்திட்டங்களில் மற்ற பிரபலங்களைப் போல அவனது பங்களிப்பையும் குறையாது அளித்துவந்ததில் யசோதராவுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மேகமலைக்குச் சென்றுவிட்டாலே குடும்பத்தை மறந்துவிடும் அவனது இந்தப் போக்கு தான் அவளுக்கு எரிச்சலை மூட்டியது.

ஏழு வருடங்களில் எத்தனையோ முறை அமைதியாகவும் அதட்டலாகவும் சில சமயங்களில் மிரட்டலாகவும் சொல்லி சொல்லி அவள் ஓய்ந்து போனது தான் மிச்சம்.

இப்போது கூட சர்வருத்ரானந்தா அவரது மேகமலை முக்தி ஆசிரமத்தில் கட்டிக்கொண்டிருக்கும் சதாசிவனுக்கான கோயில் வேலைகள் திறம்பட நடப்பதை பற்றியும் அதற்கு பக்தர்களும் பிரபலங்களும் அளித்திருந்த ஆதரவைப் பற்றியும் தம்பட்டம் அடித்துக்கொள்ள சர்வருத்ரானந்தா தேர்ந்தெடுத்த வழிமுறை தான் யூடியூப் சேனலில் சித்தார்த்துடன் நடத்தும் இந்த உரையாடல்.

அதாவது சதாசிவனுக்காக இவ்வளவு பொருட்செலவில் கோவில் கட்டுவது குறித்து அவர் கூறும் கட்டுக்கதைகளை பிரமித்துக் கேட்கவும், இந்தக் கேள்விகள் தான் கேட்கப்பட வேண்டுமென முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட வினாப்பட்டியலை ஏற்ற இறக்கத்துடன் ஏதோ அவனே கேட்பது போல பாவிப்பதும் தான் சித்தார்த்தின் வேலை. அதை அவனும் மகிழ்ச்சியாகத் தான் செய்தான்.

அவனது ஆன்மீக வழிகாட்டியுடன் இவ்வாறு உரையாடுவது அவனுக்குப் பிடித்திருக்க யசோதரா அதிலெல்லாம் தலையிடவில்லை. இத்தனை ஆண்டுகளில் முக்தி ஃபவுண்டேசன் மீது ஏகப்பட்ட வரி ஏய்ப்பு, சுரண்டல் புகார்கள் வந்த போதும் சித்தார்த்தின் நம்பிக்கை குறையவே இல்லை. அத்துடன் அந்த குற்றங்கள் எதற்கும் வலுவான ஆதாரங்கள் இல்லை.

ஆதாரங்கள் இருந்தாலும் அவை அரசாங்கத்தின் கண்களுக்கு ஆதாரங்களாவே தெரியவில்லை. எந்தப் பத்திரிக்கையும் சர்வருத்ரானந்தாவின் முக்தி ஃபவுண்டேசன் பற்றி வாயைத் திறக்க தயாரில்லை. காரணம் பக்தி தொடர், தத்துவ விளக்கம் என அவர் எழுதியவற்றை மாத சஞ்சிகைகளாக பதிப்பித்து மேல்தட்டினர் மத்தியில் பிரபலமாக இருந்தவரை நடுத்தரவர்க்கத்தினரிடம் ரட்சகராக அறிமுகப்படுத்தி வைத்தவை பத்திரிக்கைகள் தானே! பின் எப்படி அவர்களால் அவர் செய்யும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்க முடியும்?

இதனாலேயே சர்வருத்ரானந்தாவின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரது யோகாவை விட அவரது பேச்சும், அவரது தத்துவங்களும் திக்கெட்டும் பரவி முக்தி ஃபவுண்டேசனின் புகழை நிலை நாட்டியது.

முன்பிருந்ததை விட கணக்கிலடங்கா பக்தர்கள் அவரைத் தங்களது வழிகாட்டியாக, ஞானகுருவாக ஏற்றுக்கொண்டனர். அவரைத் தொடரும் இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாக முக்தி ஆசிரமத்தில் தங்குவதும், இளம்பெண்கள் யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியைகளாகவும், முக்தி வித்தியாலயாவின் ஆசிரியைகளாவும், துறவறம் ஏற்பதும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

இவ்வளவுக்குப் பிறகும் சர்வருத்ரானந்தாவின் மீது சித்தார்த்துக்கு நம்பிக்கை அதிகரிக்க காரணம் வேண்டுமா என்ன?

ருத்ராஜியிடம் அவனது நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க சித்தார்த்தின் மேகமலை விஜயமும் அதிகரித்தது. அந்த இடத்தின் அமைதி அவனைக் கவர்ந்திருக்கவேண்டும் என்பது யசோதராவின் ஊகம்.

ஆனால் ஏழாண்டுகளில் திரைத்துறையில் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகளை நடிகனாகவும் தயாரிப்பாளனாகவும் சமமாக கண்டுவிட்டவனுக்கு யோகாவும் அதைக் கற்றுத் தரும் ருத்ராஜியும் அவர் இருக்கும் முக்தியும் ஒரு இளைப்பாறுதலாக மாறிப்போனது.

அவனுக்குப் பிடித்த எதையும் செய்யக்கூடாதென யசோதரா தடுப்பதில்லை. அவன் மட்டுமா ருத்ராஜியிடம் இவ்வளவு பக்தியாக உருகுகிறான்?

அவளுடன் சேர்ந்து மயூரி, இந்திரஜித், ஹேமலதா இந்த நால்வரைத் தவிர்த்து அவர்களின் மொத்தக் குடும்பமும் சர்வருத்ரானந்தாவிடம் பெரும் நம்பிக்கை கொண்ட பக்தகோடிகள் தான். அதில் சாருலதாவும் சேர்த்தி.

அவளுக்கு இரு முறை சோனி வேர்ல்ட் போட்டோகிராபி அவார்ட் கிடைத்தது கூட ருத்ராஜியின் ஆசிர்வாதம் தான் என்பாள் சாருலதா. அதே போல தான் உதவி பேராசியராக இருந்த கௌதம் தனக்குக் கிடைத்த பணியுயர்வுக்கு அவரைக் காரணமாக்கி விட, மாதவனோ திரைத்துறையில் தனது வெற்றிகளுக்கெல்லாம் காரணம் சர்வருத்ரானந்தா தான் என்று அறிக்கை விடாது மட்டும் தான் பாக்கி.

இளையவர்களே இவ்வாறென்றால் பெரியவர்களான சாந்தநாயகி, சவிதா, நாராயணமூர்த்தி, சாந்தகோபாலனைப் பற்றி கேட்கவா வேண்டும்! இதில் யசோதராவின் தாயாரும், சித்தியும் கூட அடக்கம். இந்தக் கூட்டத்தில் சேராதவர்கள் என்றால் யசோதராவின் தந்தை, சித்தப்பா மற்றும் மாதவனின் தந்தை ரங்கநாதன் இந்த மூவர் மட்டுமே!

இப்படி சுற்றியுள்ளவர்களின் ருத்ராஜி புராணத்தில் தொலையாமல் நின்றவர்கள் தனக்குப் பிரியமானவர்களின் நம்பிக்கையைக் கேலி செய்யவோ தவறென்று சுட்டிக்காட்டவோ நினைத்ததில்லை.

அப்படி சுட்டிக்காட்டியிருந்தால் இந்நிலை வந்திருக்காதோ? பெருமூச்சு உதயமானது யசோதராவிடம்.

அதே நேரம் அவளது சிந்தனைகளின் நாயகன் மேகமலை முக்தி ஃபவுண்டேசன் ஆசிரமத்தின் சிக்ஷா தியான அறை என்ற பிரம்மாண்ட அறையில் சர்வருத்ரானந்தாவுடன் அமர்ந்திருந்தான்.

அவர்களிடம் இருந்து சற்று தொலைவில் நின்று அதை ஒளிப்படமாக்கிக் கொண்டிருந்தனர் இயக்குனர் குழுவினர்.

அந்த தியான அறையின் நடுவே இரண்டு மரத்தினாலான நீள் இருக்கைகள் போடப்பட்டிருக்க அதில் வீற்றிருந்தனர் சித்தார்த்தும் ருத்ராஜியும்.

ருத்ராஜியின் முகத்தில் வழக்கம் போல சாந்தம் தவழ்ந்தது. கடந்த ஏழாண்டில் முக்தி எட்டிப் பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றிருப்பதன் காரணகர்த்தா என்ற பெருமிதம் அந்த வதனத்தில் எந்த இடத்திலும் இல்லை. வழக்கமான எளிமை மிளிரும் உடையில் அருள் பொலியும் விதமாக அமர்ந்திருந்தார் அவர்.

அவரிடமிருந்து சற்று தள்ளி போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் சித்தார்த். ஏழாண்டு காலத்தில் வயது மட்டுமல்ல, அனுபவமும் கூடியிருக்க அவனது சிரத்திலும் தாடையிலும் இருந்த ரோமங்களில் சிலவற்றில் வெண்மை நிறம் விரவியிருக்க கண்களில் ருத்ராஜி மீதான மரியாதை ஆயிரம் மடங்கு அதிகரித்திருந்தது.

அவர்களை விட்டு சில அடிகள் தொலைவில் முக்தி ஃபவுண்டேசனின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், அங்கே தியானவகுப்பிற்கு வந்தவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருந்தனர்.

சித்தார்த் தனது செவியில் மாட்டிய மினியேச்சர் ஹெட்செட் மைக்கைச் சரிசெய்தபடி கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“வாழ்க்கைல ஜெயிக்கிற வரைக்கும் நமக்குள்ள இருக்குற ஃபயர் ஜெயிச்சிட்டோம்னு தெரிஞ்சதும் ஏன் மாயமா மறைஞ்சிடுது? வெற்றி சொந்தமாயிடுச்சுங்கிற கர்வத்துலயா? இல்ல அந்த வெற்றி நம்ம கையை விட்டு நழுவாதுங்கிற ஓவர் கான்பிடன்ஸ்லயா?”

ருத்ராஜி புன்னகையுடன் அவனை ஏறிட்டவர் “எதை நம்ம வெற்றினு நினைக்கிறோம்? நமக்கான குறிக்கோளை நம்ம அடைஞ்சுட்டோம்னா உடனே அது நமக்கு கிடைச்ச வெற்றினு நம்மளே சொல்லிக்கிறோம்… அந்த வெற்றி குடுத்த அபரிமிதமான போதைல நம்ம அடைஞ்ச குறிக்கோளைத் தாண்டி அடுத்த நிலை என்னனு யோசிக்கிற திறனை இழந்துடுறோம்… அந்த வெற்றி நிரந்தரம்னு நம்மளை நம்மளே ஏமாத்திக்கிறோம்… அது தான் தப்பு… இந்த உலகத்துல நமக்கு மட்டுமே சொந்தமானதுனு எதுவுமே கிடையாது… எல்லா பொருளும், எல்லா மனிதர்களும் என்னைக்கோ ஒருநாள் நம்மளை விட்டு போக தான் செய்வாங்க… அப்புறம் வெற்றி மட்டும் நம்ம கூடவே தங்கிடும்னு ஏன் தப்புக்கணக்கு போடணும்?

வெற்றி அடைஞ்சவங்க எப்போவுமே கொஞ்சம் பயப்படணும்… பாடுபட்டு கிடைச்ச அந்த வெற்றி கைநழுவிடுமோங்கிற அந்தச் சின்ன பயம் இன்னும் முன்னேறணும்ங்கிற பழைய ஃபயரை அணையவிடாம பாத்துக்கும்… வெற்றி குடுக்குற மமதைல தலை கால் புரியாம ஆடுறவங்க சீக்கிரமே அதை இழந்துடுவாங்க… இது தான் நிதர்சனம்” என்று பொறுமையாக வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்ற விதத்தில் பதிலளிக்க அந்த சிக்ஷா அறையே கரகோசத்தில் அதிர்ந்தது.

அது தான் அந்த உரையாடலின் இறுதி கேள்வி! அது முடிவடைந்ததும் அனைவரும் பார்வையாளர்களாய் அமர்ந்திருந்தவர்கள் வெளியேற அதன் பின்னர் சித்தார்த் ருத்ராஜியுடன் சேர்ந்து அந்த ஹாலை விட்டு வெளியே வந்தான்.

இருவரும் ருத்ராஜி தங்கியிருக்கும் அறையை நோக்கி நடைபோட்டனர். சற்று தொலைவில் சதாசிவனுக்காக எழுப்பும் ஆலயத்தின் கோபுரத்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட தஞ்சை பெரிய கோயில் பாணியில் எழுப்பப்படும் அந்த ஆலயத்தின் சிறப்பம்சமே அங்கே அமையவிருக்கும் ராஜகோபுரம் தான். அதை அவரது ஞானதிருஷ்டி மூலம் கனவில் கண்டதாக கூறியிருந்தார் ருத்ராஜி.

அவரின் கனவில் கண்ட வடிவத்தில் தான் கோபுரமும் எழும்பிக்கொண்டிருந்தது. கோவிலின் சுற்று பிரகாரங்கள், அதனுள் வைக்கப்படும் மற்ற கடவுளர்களுக்கான சிறு சிறு ஆலயங்கள் அனைத்தும் மார்பிளில் இழைக்கபட்டுக்கொண்டிருந்தன, உபயம் சில பல பெரிய தொழிலதிபர்கள்.

சித்தார்த்திடம் ஒரு வாரம் தன்னுடன் தங்கி கோயில் கட்டுமானம் தொடர்பாகவும் ஆன்மீகரீதியாகவும் அவன் செலவிட்ட நேரங்களுக்காக நன்றி கூறிய ருத்ராஜி அவன் சென்னைக்குச் செல்வதை தாமதப்படுத்திவிட்டதற்கு மன்னிப்பு வேண்ட சித்தார்த் அதிர்ந்துவிட்டான்.

“ருத்ராஜி ரவீந்திரனுக்கு மட்டும் திடீர்னு கையில அடிபடலனா சொன்ன டைம்கு இண்டர்வியூ முடிஞ்சிருக்குமே… இப்பிடிலாம் நடக்கும்னு நம்ம எதிர்பாத்தோமா? இதுக்குப் போய் மன்னிப்பு கேட்டு என்னை ஃபீல் பண்ண வைக்காதீங்க ப்ளீஸ்!”

ருத்ராஜி புன்னகைத்தவர் “தேங்க்யூ சித்தார்த்… உங்களோட சப்போர்ட் எப்போவுமே முக்திக்குத் தேவை” என்றார் இருகரம் கூப்பி.

“அதை நீங்க சொல்லவே வேண்டாம் ருத்ராஜி… முக்தி இஸ் மை செகண்ட் மதர் ஹோம்” என்றவனின் தோளில் தட்டியவர் பயணம் நல்லபடி அமையட்டும் என்று வாழ்த்திவிட்டு அகன்றுவிட சித்தார்த் அவன் தங்கியிருக்கும் வி.ஐ.பி ரிசார்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

செல்லும் வழியில் ஆங்காங்கே யோகா கற்றுக்கொள்ள வந்தவர்கள், அங்கேயே தங்கியிருந்து சேவை செய்பவர்கள் என மக்கள் நகர்ந்து கொண்டிருக்க முக்தி வித்யாலயாவில் பயிலும் மாணவச்செல்வங்களான குட்டி மலர்கள் வரிசையாய் அவர்கள் தங்கி இருக்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்க்கும் போது சித்தார்த்துக்குப் பொறாமையாக கூட இருந்தது. தனக்கு முக்தியைப் பற்றி தெரியவந்தது பின்னிருபதுகளில் தான். ஆனால் இந்தக் குழந்தைகளோ இப்போதே இங்கு வாழும் வரத்தை வாங்கிக் கொண்டு பிறந்திருக்கிறார்களே என்ற எண்ணமே அவர்கள் மீது அவனுக்குப் பொறாமை பிறக்க காரணம்!

அப்போது ஒரு சிறுமி தனது குட்டி குர்தா பைஜாமாவை அணிந்தபடி வேகமாக ஓடுவதைக் கண்டதும் அவனுக்குச் சர்மிஷ்டாவின் நினைவில் மனம் இனித்தது.

யசோதராவுக்கு அவனுக்கும் பிறந்த அவர்களது காதலின் சின்னம் அவள்! அப்பா என்று மிச்சமிருக்கும் மழலையுடன் அவள் அழைக்கும் கணங்கள் சித்தார்த்துக்கு இவ்வுலகில் வேறேந்த சந்தோசமும் தேவையில்லை என்ற மனநிறைவை ஏற்படுத்தும்.

இன்று அவளது பிறந்தநாள்! வழக்கமாக அவளுக்கான பரிசுடன் சர்மிஷ்டாவை முதன் முதலில் எழுப்புபவன் அவனாகத் தான் இருப்பான். இந்த வருடம் சர்வருத்ரானந்தாவின் ஆசிரம நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்தவனால் இறுதி நேர தாமதத்தால் சென்னைக்குச் செல்ல முடியாத நிலை. இதோ இப்போது கிளம்பினால் கூட இரவுக்குள் சென்றுவிடுவான் தான்!

ஆனாலும் அவளுடன் நாள் முழுவதும் இருக்கும் வாய்ப்பை இழந்துவிட்டானே! வருத்தம் மனதிற்குள் அலையாய் எழுந்து அடங்க அடுத்த கணம் யசோதராவும் வந்து போனாள்.

உடனே மொபைலை எடுத்தவன் தொடுதிரையில் இருந்த மிஸ்ட் கால்களை பார்த்ததும் அதிர்ந்தான். யசோதராவின் அழைப்புகள் தான் அவை.

உடனே அவளுக்கு அழைத்தான் சித்தார்த். ஆனால் அவனுடைய மனைவி அழைப்பை ஏற்கமாட்டேன் என கங்கணம் கட்டிய பிறகு அவன் என்ன ஆண்டவனே அழைத்தாலும் அவளது செல்பேசி மௌனிக்க மட்டுமே செய்யும்!

கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் அவளுக்கு அழைத்து ஓய்ந்தவன் “சே இடியட்… என்னைக்காச்சும் நான் எமர்ஜென்சினு கால் பண்ணப்போறேன்… அப்போவும் நீ இப்பிடி தான் அமைதியா இருக்கப்போற யசோ” என்று கடுகடுத்தவன் சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமானான்.

அடுத்தவர்களிடம் நற்பெயர் சம்பாதிக்க அனாவசியமாக நாம் செலவளிக்கும் நேரங்கள் தான் நமது அன்பிக்குறியவர்கள் நம்மை விட்டு விலகிச் செல்ல முக்கியக் காரணமாக அமையும். இதை சித்தார்த் உணர்ந்துகொள்வானா என்பது தான் மிகப்பெரிய கேள்வியே!

மழை வரும்☔☔☔