☔ மழை 14 ☔

புகைப்படக்கருவியில் மூன்று விசயங்கள் முக்கியமானவை. அவை அபஷர் (aperture), ஷட்டர் ஸ்பீட் (shutter speed) மற்றும் ஐ.எஸ்.ஓ. அபஷர் என்பது நமது புகைப்படக்கருவியின் லென்சிற்குள் வெளிச்சம் பாய்வதற்கான வட்டமான வழியாகும். இந்த வழியில் வெளிச்சம் எவ்வளவு நேரம் பாயவேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் ஷட்டர் ஸ்பீட். ஐ.எஸ்.ஓ என்பது ஒரு புகைப்படத்தின் பிரகாசத்தைக் குறிக்கும்.

ஜஸ்டிஷ் டுடே…

தனது கேபினில் அமர்ந்து சமீபத்தில் முடித்த வேலையைப் பற்றிய குறிப்புகளை தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் யசோதரா. இன்னும் சில நிமிடங்களில் வேலை முடிந்துவிடும் என்ற நிலையில் அவளது கேபின் கதவு தட்டப்பட்டது.

யாரென நிமிர்ந்து பார்த்தவள் இந்திரஜித்தைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

“என்ன சர்ப்ரைஸ் விசிட்? உங்கண்ணா பக்கத்து ரெஸ்ட்ராண்ட்ல வெயிட் பண்ணுறாரா?”

“இல்ல அண்ணி… நான் ரகு அண்ணா கிட்ட ஹேக்கிங் பத்தி டீடெய்ஸ் கேக்க வந்தேன்… மாம் அண்ட் டாட் என்னை பி.ஜி அப்ளை பண்ணச் சொல்லுறாங்க… பட் ஐ அம் நாட் இன்ட்ரெஸ்ட்டட்… எனக்கு எதிக்கல் ஹேக்கிங் கோர்ஸ் படிக்கணும்னு ஆசை… அவரோட ஹேக்கிங் புராணத்தை மய்யூ அண்ணி சொன்னாங்க… அதான் அவர் கிட்ட கேட்டுக்கலாம்னு வந்தேன்”

“ஏன் சார் உங்களுக்கு நார்மலா டிகிரி கம்ப்ளீட் பண்ண பிடிக்கலயா?”

கேலியாகக் கேட்டபடி கணினியின் விசைப்பலகையில் அவள் விரல்கள் வேகமாக நடனமாடத் துவங்கியது.

“ப்ச்… பத்தோட பதினொன்னா நானும் டிகிரி முடிச்சு டாடியோட புரொடக்சன் ஆபிஸ்ல ஒர்க் பண்ணனுமா என்ன? என்னால அப்பிடி இருக்க முடியாது… ஐ லவ் ரேசிங்… நான் செய்யப் போற வேலை என்னோட ரேசிங்கை பாதிக்கக்கூடாதுல்ல… அதான் ஹேக்கிங்கை புரொபசனா செலக்ட் பண்ணிருக்கேன்”

கணினித்திரையிலிருந்து அவனை நோக்கி திரும்பியவள் கார் பந்தயம் மீதிருக்கும் காதலை அவனது கண்கள் பிரதிபலித்ததைக் கண்டுகொண்டாள்.

“ஓகே! ஹேக்கிங் முடிச்சா சைபர் செக்யூரிட்டி ஃபீல்ட்ல நல்ல ஃபியூச்சர் இருக்கு” என்ற யசோதரா மீண்டும் கணினி பக்கம் திரும்ப இந்திரஜித்தின் விழிகள் அவளது கணினியை அடுத்து ஆங்ரி பேர்ட் வடிவிலிருந்த பென் ஸ்டாண்டில் தொங்கிய ஸ்கூட்டி சாவியை நோட்டமிட்டது.

மேஜையில் தாளமிட்ட அவனது விரல்கள் மெதுமெதுவாய் நகர்ந்து டர்காயிஸ் நீல நிற வட்டத்தில் சிவப்பும் மஞ்சளுமாய் நூலால் செய்யப்பட்ட பறவைகள் அமர்ந்திருக்கும் அந்த கலைநயமிக்க கீ செயினைக் கபளீகரம் செய்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டது.

யசோதரா அதை கவனியாது வேலையில் மூழ்கியிருக்க வந்த வேலை இரண்டும் முடிந்ததால் கிளம்ப எழுந்தான் இந்திரஜித்.

“ஓகே அண்ணி! யூ கேரி ஆன் யுவர் ஒர்க்… நான் கிளம்புறேன்”

“ரகு கிட்ட பேசணும்னு சொன்ன?”

கேள்வியாய் புருவம் சுழிக்க கேட்டாள் யசோதரா. ஆனால் அவன் தான் வந்ததும் ரகுவிடம் விசயத்தை வாங்கிவிட்டானே! அத்துடன் அவனது மொபைல் எண்ணையும் வாங்கி கொண்டான். ஏதேனும் சந்தேகம் வந்தால் கேட்பதற்கு உதவியாக இருக்கும் அல்லவா!

அதை யசோதராவிடம் கூற “ரகுவோட ஃப்ரெண்ட் ஆனந்தும் எதிக்கல் ஹேக்கர் தான்… அவர் கிட்டவும் கன்சல்ட் பண்ணிக்கோ ஜித்து” என்று ஆலோசனை கூறி அவனை வழியனுப்பி வைத்தாள் அவள்.

அவளது ஸ்கூட்டி சாவியை இந்திரஜித் எடுத்துச் சென்றதையோ அவன் அவளது ஸ்கூட்டியை செக்யூரிட்டியின் அனுமதியுடன் அங்கிருந்து கிளப்பிச் சென்றதையும் யசோதரா அறியவில்லை.

அவள் மாலையில் வீட்டிற்கு செல்ல ஸ்கூட்டியைத் தேடிய போது தான் அது அங்கே இல்லையென்பதை அவள் கண்டுகொண்டாள்.

செக்யூரிட்டியிடம் அது குறித்து விசாரிக்க “நீங்க சொன்னிங்கனு மதியம் உங்களோட ரிலேட்டிவ் ஸ்கூட்டியை எடுத்துட்டுப் போனார் மேடம்” என்று கூறவும் அது இந்திரஜித்தின் கைங்கரியம் என்பதை புரிந்துகொண்டாள்.

உடனே போனை எடுத்து அவனை அழைக்கப் போன தருணத்தில் அந்த வளாகத்தினுள் நுழைந்தது கறுப்புநிற பி.எம்.டபிள்யூ. அதன் சொந்தக்காரன் யார் என்பதை அறிந்திருந்த யசோதரா “எல்லாம் உன் வேலை தானா?” என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டாள்.

கார் அவளருகே நிற்கவும் “ஹாய் யசோ… யாரைத் தேடிட்டிருக்க?” என்று ஒன்றுமே தெரியாத அப்பாவி போல கேட்டான் சித்தார்த்.

யசோதரா இடுப்பில் கையூன்றி அவனை முறைக்கவும் அவனது கண்கள் அவளது கரத்தின் மீது படிந்தது. வலக்கரத்தின் மோதிரவிரலில் அவன் அணிவித்த மோதிரம் சித்தார்த்தைப் பார்த்து கண் சிமிட்டியது.

அவர்களின் நிச்சயதார்த்தத்தின் போது அவன் அணிவித்த மோதிரம் அது.

“முறைக்காதம்மா… இந்தப் பக்கமா வந்தேன்… அப்பிடியே உன்னைப் பாத்துட்டுப் போகலாம்னு நினைச்சா நீ ஸ்கூட்டி இல்லாம தனியா நிக்குற… வாட் ஹேப்பண்ட்?” மீண்டும் அப்பாவியாய் வினவியவனைப் புன்சிரிப்புடன் எதிர்கொண்டாள் யசோதரா.

“என் ஸ்கூட்டிய காக்கா தூக்கிட்டுப்போயிடுச்சு சித்து… அதுவும் ஆறடிக்கு வளந்த ரேசர் காக்கா… அதை ஏவி விட்டவனும் இப்போ என் எதிர்ல தான் இருக்கான்” என்றபடி அவனைப் பார்க்க அவனோ கார்க்கதவைத் திறந்துவிட்டான்.

“கம் ஆன்… லெட்ஸ் கோ” என்கவும்

யசோதரா அதை மூடியவள் “நான் கேப் புக் பண்ணி வீட்டுக்குப் போய்க்கிறேன்” என்றாள் அமர்த்தலாக.

சித்தார்த் மெல்லிய திடுக்கிடலுடன் விழித்தவன் “கேப்ல போவீங்க… ஆனா உட்பியோட கார்ல வரமாட்டீங்க… ஏன் இந்த ஓரவஞ்சனை? இதுக்காகவா ஜித்துவ அனுப்பி உன்னோட தகரடப்பா ஸ்கூட்டிய கிட்னாப் பண்ண சொன்னேன்?” என்று அங்கலாய்க்க யசோதரா வாயைப் பிளந்தாள்.

“சரியான கிரிமினல்பயபுள்ள” என்று அவள் பற்களை நறநறவென கடிக்கவும்

“என் டாடி பாவம்… வருங்காலத்துல உனக்கு கண்ணுக்கு அம்சமா ஒரு புருசன் வேணும்னு யோசிச்சு என்னை பெத்தவர்மா… அவரைப் போய் ஏன் கிரிமினல்னு திட்டுற?” என்று குறும்பாகப் பேசி அவளை வாயடைக்கச் செய்தான் சித்தார்த்.

“நான் எங்கடா அவரைத் திட்டுனேன்?” கண்களை விரித்தவளை நமட்டுச்சிரிப்புடன் நோக்கியவன்

“இதோ இப்போ தானே திட்டுன, கிரிமினல் பையனோட புள்ளனு” என்று கூறிவிட்டு

ஒரு நொடி திகைத்துவிட்டு “ரொம்ப புத்திசாலினு நினைப்பா? இப்போ என்னடா வேணும் உனக்கு?” என்று நகைப்புடன் கேட்டாள் யசோதரா.

“பெருசா ஒன்னுமில்ல… என்னோட டூ ஹவர்ஸ் பேசிட்டு நைட் டின்னர் சாப்பிடணும்… அப்புறம் நானே குட் பாயா உங்க வீட்டுல நான் ட்ராப் பண்ணிடுவேன்” என்றான் அவன்.

அவள் காரில் அமராமல் நிற்கவும் “ஷப்பா, ஏன் இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டான லவ்வரா இருக்க யசோ? இன்னும் ஒன் வீக்ல மேரேஜ்… ஆனா நீ என் கூட டின்னர் சாப்பிட யோசிக்கிற… ஏன் காட் இந்தப் பொண்ணுக்கு என் மேல இரக்கமே வரமாட்டேங்கிறது?” என்று மேலே கண் உயர்த்தி புலம்ப இதற்கு மேலும் அவனைப் புலம்பவிடாது தடுக்க காரினுள் அமர்ந்தாள்.

“இந்த ஒன் வீக்ல ஒர்க்கை முடிச்சுட்டா நான் ஃப்ரீ ஆகிடுவேன்ல” என்று அவள் அமர்த்தலாகக் கூற

“அஹான்! இதுக்கு இடையில நீ என்னைப் பத்தி இவ்ளோ கூட யோசிச்சிருக்க மாட்டியே!” என்று ஆட்காட்டிவிரலின் நுனியைக் காட்டி குறைபட்டபடி காரைக் கிளப்பினான் சித்தார்த்.

யசோதரா கலகலவென நகைத்துவிட்டு “என்னோட ஒர்க்கை என் ப்ரெயின் பாத்துக்கும்… என்னோட சித்துவ என் ஹார்ட் பாத்துக்கும்” என்று நெஞ்சில் கைவைத்து அபிநயத்துடன் கூறவும்

“அப்பிடியா? கிட்ட வா, அந்த ஹார்ட் என்ன சொல்லுதுனு பாப்போம்” என்று குறும்பாக மொழிந்தபடி அவள் புறம் திரும்பியவனின் தாடையைப் பற்றி சாலையை ஆட்காட்டிவிரலால் காட்டினாள் யசோதரா.

“ஒழுங்கா பீச் ஹவுசுக்குப் போகணும்னா ரோடை பாத்து ஓட்டு” என கண்டிப்பான குரலில் அவள் கட்டளையிடவும் சித்தார்த்தும் சாலையில் கண்பதித்தான்.

திடீரென ஆச்சரியத்தில் புருவம் சுருக்கி “நம்ம பீச் ஹவுசுக்குப் போறோம்னு உனக்கு எப்பிடி தெரியும்?” என்று அவன் கேட்க

“ஆமா! இது பெரிய சிதம்பர ரகசியம் பாரேன்! நம்மளோட ப்ரைவசி பாதிக்கப்படாம டைம் பாஸ் பண்ணுறதுக்கு இந்தச் சிங்கார சென்னைல அதை விட்டா வேற இடமில்லயே… எங்கு நோக்கினும் உன் ஃபேன்ஸ் தொல்லை… அதுக்கு பீச் ஹவுஸ் மட்டும் தானே விதிவிலக்கு” என்று நமட்டுச்சிரிப்புடன் கூறினாள் யசோதரா.

சித்தார்த் மெச்சுதலாக அவளைப் பார்த்துவிட்டு காரை கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செலுத்தினான்.

பீச் ஹவுஸை அடைந்த இருவரும் முதலில் செய்த காரியம் கடலில் கால் நனைத்தது தான்.

நுரைப்பூக்களின் சில்லிப்பும், மணல் மங்கையின் குறுகுறுப்பும் அவர்களின் பாதங்களைத் தொட்டு உற்சாகத்தைச் சவ்வூடு பரவலாக பரவச் செய்ய கரங்களின் விரல்கள் வழக்கம் போல ஒன்றோடொன்று பிணைந்து தங்களுக்குள் இரகசியம் பேசிக்கொண்டன.

பின்னர் கடற்கரை மணலில் அமர்ந்தவர்கள் பேசிக்கொள்ள கதையா இல்லை!

“உனக்குக் கடல்னா ரொம்ப பிடிக்குமா சித்து?” சித்தார்த்தின் தோளில் சாய்ந்து கேட்டாள் யசோதரா.

“ரொம்ப பிடிக்கும் யசோ… அலையடிக்குற கடலை பாத்தா எவ்ளோ சோகமான மனநிலையும் மாறிடும்… ப்ளூ கலர் தண்ணிக்கு ஒயிட் கலர்ல லேஸ் பார்டர் வச்ச மாதிரி எவ்ளோ அழகா இருக்கு இந்த அலைகள்லாம்! இதை பாக்குறப்போ பூமிப்பொண்ணுக்கு கடல் ராஜா ஆசையா தன்னோட அலைகளால செஞ்ச புடவையைக் குடுக்க வர்றது மாதிரி இருக்குல்ல”

யசோதரா தலை நிமிர்த்தியவள் கண்களில் ஆச்சரியம் காட்டி அவனது கன்னத்தை தனது கரங்களில் ஏந்திக்கொண்டாள்.

“கலாரசிகன்யா நீ! எப்பிடி இதெல்லாம் உனக்குத் தோணுது? ப்ச்… நீ வேற லெவல் சித்து” என்று அவனது கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சவும் சித்தார்த்தின் இதழ்களில் புன்சிரிப்பு மலர்ந்தது.

சிரிப்பும் வெட்கமுமாய் அவர்களின் உரையாடல் தொடர இரவு வந்துவிட இருவரும் பீச் ஹவுசை அடைந்தனர்.

இரவுணவுக்குச் சமைக்கலாம் என்று அவர்கள் திட்டமிடும் போதே “அடேய் இன்னைக்கும் டூ மினிட்ஸ் நூடுல்ஸ் தானா?” என்று இருவரது மனசாட்சிகளும் அதிர்ந்து போயின.

ஆனால் அப்பேர்ப்பட்ட அதிர்ச்சியை மனசாட்சிகளுக்குக் கொடுக்க விரும்பாமல் “மேக்ரோனி செய்வோமா?” என்று கேட்டான் சித்தார்த். சொன்னதோடு அதற்கான வேலைகளில் இறங்கினர் இருவரும்.

வேகவைத்த மேக்ரோனியுடன் பேபி கார்ன், தக்காளி என காய்கறிகளை போட்டு எப்படியோ செய்து முடித்தவர்கள் ஆளுக்கொரு தட்டில் வைத்து சுவைத்த போது முகம் அஷ்டகோணலானது இருவருக்கும். ஒரே குரலில் “நாட் பேட்” என்ற வார்த்தையை இருவரும் சொல்ல அங்கே சிரிப்பு சத்தம் பலமாக கேட்டது.

இவ்வாறு கண்டிப்பான யசோதராவை சித்தார்த்தின் காதல் கனிவானவளாக மாற்றிவிட, பிடிவாதக்காரனான சித்தார்த் அவளுக்காக விட்டுக்கொடுப்பவனாக மாறிவிட இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணமான அவர்களின் காதல் அனைவரின் ஆசியுடன் திருமணத்தில் இணையும் நாள் அழகாய் மலர்ந்தது.

தன்னருகே பட்டுப்புடவையில் எழில் சிலையாக வந்தமர்ந்த யசோதராவிடம் காதலுடன் படிந்த சித்தார்த்தின் விழிகள் பேசிய வார்த்தைகளை அவளது கண்கள் மொழிபெயர்த்து விடவும் கண நேரத்தில் நாணச்சிவப்பேறியது அவளது கன்னங்களில்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் வீற்றிருந்த இருவரையும் பார்க்கும் போது அவர்களின் பெற்றோருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! இருவரும் வாழ்வின் விளிம்புநிலைக்குச் சென்று விரக்தியுடன் நாட்களைக் கழித்தவர்கள்!

இதோ அதே வாழ்க்கை அவர்களுக்குக் கொடுத்த இரண்டாம் வாய்ப்பை அவர்களின் காதலின் துணையால் வென்றவர்கள் இன்னும் சில நிமிடங்களில் அக்னிசாட்சியாக மணமுடிப்பதன் வாயிலாக இன்னும் உறுதியாக்கப்போகின்றனர்! இதில் பெற்றோருடன் அவர்களின் நண்பர்களுக்கும் சொல்லவொண்ணா ஆனந்தம்!

மயூரி – மாதவன், கௌதம் – ஹேமலதா இரு ஜோடிகளும் தங்களைப் போலவே இல்லறக்கடலில் நீந்த தயாராகும் சித்தார்த்துக்கும் யசோதராவுக்கும் எவ்வித குறைவுமில்லாத நல்வாழ்க்கை அமையவேண்டுமென மனதாற வேண்டிக்கொண்டனர்.

ஜஸ்டிஷ் டுடே அலுவலகத்திலிருந்து யசோதராவின் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். விஷ்ணுபிரகாஷும் பூர்வியும் நாராயணனுடன் பரிசுகளுடன் வருகை தந்து முன்னிருக்கையில் அமர்ந்து யசோதராவிற்கு கட்டை விரலை உயர்த்திக் காட்ட அவளது முகம் மகிழ்ச்சியில் விகசித்தது. ஸ்ராவணியும் மேனகாவும் அவரவர் புத்திரசெல்வங்களை அழைத்து வந்திருந்ததால் அவர்களுடன் விஷ்ணு பூர்வியை அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

சாருலதா அட்சதைக்கு நடுவே அமர்ந்திருந்த மாங்கல்யத்தை அவர்கள் அனைவரிடமும் ஆசி பெற்றுவிட்டு வந்து ஐயரிடம் நீட்ட அவர் அதை சித்தார்த்தின் கரங்களில் கொடுத்தார்.

அவனது கரத்தில் மின்னிய மஞ்சள் கயிறைப் பார்த்த யசோதராவின் கண்களில் சந்தோசம் ஜொலித்தது. அட்சதை தூவல்களுக்கிடையே தலைகுனிந்து மாங்கல்யத்தை வாங்கிக்கொண்டவளின் மனம் பூரிக்க அதை அணிவித்தவனின் கரங்கள் சிறு நடுக்கத்துடன் அவளது கழுத்தை வருடிச் சென்றது.

இத்தனை நாட்கள் இருந்த சித்தார்த் அல்ல அவன்! அவனுக்கென ஒருத்தி அவன் வாழ்வில் வந்துவிட்டாள்! இனி அவனும் அவளுமாய் சேர்ந்து அவர்களாய் வாழப்போகும் வாழ்க்கையில் அவர்களோடு சேர்ந்து அவர்களது காதலுக்கு மட்டுமே அனுமதி!

கண்ணோடு கண்ணினை நோக்கிய அத்தருணத்தில் மண்டபத்தில் சளசளப்பு கேட்டது. புதுமணத்தம்பதியினர் வாயிலை நோக்க அங்கே பாதுகாவலர்கள் சூழ ரவீந்திரனுடன் வந்து கொண்டிருந்தார் சர்வருத்ரானந்தா.

அவரைக் கண்டதும் சித்தார்த்தின் முகம் பிரகாசமுற அவனுக்குப் பின்னே நின்றிருந்த கௌதமும் மாதவனும் புன்னகையுடன் மணமேடையை நோக்கி வருபவரை மரியாதையுடன் வரவேற்றனர்.

சர்வருத்ரானந்தா அவரது வசீகரப்புன்னகையுடன் வந்தவரைப் பார்த்ததும் சித்தார்த் எழுந்திருக்க யசோதரா அரைமனதுடன் எழுந்தாள்.

அவருக்கு வணக்கம் தெரிவித்தவன் அவர் காலைத் தொட்டு வணங்க யசோதராவால் ஏனோ குனிந்து ஆசிர்வாதம் வாங்க முடியவில்லை. சித்தார்த் அதைக் கண்டு திகைத்து அவளை ஏறிட சர்வருத்ரானந்தா அதை பெரிதாக கருதவில்லை.

“ஆயுஸ்மான் பவ” என்று அவனை அட்சதை தூவி ஆசிர்வதித்தவர் நின்றிருந்த யசோதராவின் தலையில் கைவைத்து “தீர்க்கசுமங்கலி பவ” என்று கண் மூடி வாழ்த்தினார்.

யசோதரா வெறுமெனே கைகுவித்து நன்றி கூற புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த பரிசாக சதாசிவனின் உருவப்படத்தை அவர்களுக்கு அளித்தார்.

புகைப்பட ஃப்ளாஷ்கள் மின்ன நாராயணன் தம்பதியினரும் வாசுதேவன் தம்பதியினரும் அவரது வருகைக்கு நன்றி தெரிவித்தனர். சாந்தகோபாலனும் அவரது மனைவியும் பணிவுடன் அவரிடம் பேச்சு கொடுத்தனர்.

இதற்கிடையே மயூரி கிடைத்த இடைவெளியில் யசோதராவின் காதில் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

“என்ன யசோ நம்மளை சுத்தி இருக்குற எல்லாரும் இவரோட டிவோட்டியா இருக்காங்க… அப்பிடி என்ன தான் பண்ணுறார் இந்த ருத்ராஜி?”

“பொதுவா ஆன்மீகவாதிகள் மேல நம்பிக்கை வர்றதுக்குப் பெருசா காரணம் ஒன்னும் தேவையில்ல மய்யூ… ஏதோ இக்கட்டான சூழல்ல அவரோட வார்த்தைகளோ செய்கையோ இவங்களுக்கு ஆறுதலை குடுத்துருக்கும்… அதனால அவர் மேல அபிமானம் வந்திருக்கும்… அந்த அபிமானம் நம்பிக்கையா மாறிருக்கலாம்… ஆனா ஒன்னு, இவங்களை மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் முக்தி ஃபவுண்டேசன்ல பத்ராட்சத்தை என்ன இலந்தபழ விதையை கூட ருத்திராட்சம்னு சொல்லி ஏமாத்தி வித்துருவாங்க” என்று திருமணத்தின் இனிய மனநிலை அகல அவளும் கடுகடுத்தாள்.

அதிகநேரம் சர்வருத்ரானந்தாவால் அங்கே இருக்கமுடியாது என்பது அவர்கள் இருவருக்கும் தெரியும்! அவர்கள் நினைத்தபடி அவரும் ரவீந்திரனுடன் கிளம்பிவிட்டார்.

பின்னர் திருமணச்சடங்குகள் நடைபெற சித்தார்த்தின் அருகாமையில் கடுகடுப்பு நீங்கி இயல்புநிலைக்குத் திரும்பினாள் யசோதரா. அவனும் அதற்கு பின்னர் அவளை வேறு எதையும் யோசிக்கவிட்டால் தானே!

மாலை வரவேற்பு வரை சீண்டலும் கேலியுமாக நேரம் நகர்ந்தது. வரவேற்புக்குப் பின்னர் இரவைக் கழிக்க சித்தார்த் தேர்ந்தெடுத்திருந்த இடம் அவனது பீச் ஹவுஸ் தான்.

ஏனோ அந்த இடம் கொடுக்கும் ரம்மியமான உணர்வு வேறெங்கும் கிட்டியதில்லை அவனுக்கு. யசோதராவும் அவனுடன் அங்கே சென்ற பிறகு அவ்விடத்தின் அமைதியும் அழகும் அங்கிருந்த அலையடிக்கும் கடலின் பேரழும் சேர்ந்து இருவருக்கும் மையலை உண்டாக்கியது.

எதிர்பாரா நேரம் மழை வந்தாலும் அது பூமிக்கு நன்மையே பயக்கும். அதே போல எதிர்பாரா தருணத்தில் சித்தார்த் வாழ்வில் காதல் மழையாய் வந்த யசோதரா இன்று அவனது இல்லாளாய் அவனது சரிபாதியாய் அவனுடன் இருக்க வெளியுலகம் மறந்து போனது சித்தார்த்துக்கு.

அங்கே ஆட்சி செய்த மௌனத்தில் இதழ்களும் விரல்களும் இணைந்து காதல் சாம்ராஜ்ஜியத்துக்குள் அவர்களை அனுப்பி வைக்க இருவரும் ஈருடல் ஓருயிராய் மாறிப் போயினர்.

மோனநிலையில் உருகி கரைந்தவர்கள் இல்லற சாகரத்தில் மெதுவாய் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பிக்க வெளியே அலைகடல் நிலவொளியில் ஆர்ப்பரித்து தனது நுரை கரங்களால் மண்மகளை முத்தமிட்டது.

மழை வரும்☔☔☔