☔ மழை 12 ☔

புகைப்படம் எடுப்பதில் ஸ்போர்ட்ஸ் மோட் நகரும் பொருட்களைப் படமெடுக்க உதவும். நகரும் பொருளொன்றின் நகர்வை படமெடுக்க உதவுகிறது இந்த ஸ்போர்ட்ஸ் மோட். இந்த முறையில் படமெடுக்க கேமரா ஷட்டர் மூடும் வேகம் முக்கியமானது. அதாவது அந்த கேமரா எவ்வளவு வேகமாக அந்த நகரும் பொருளை படம்பிடிக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப் பொருளின் புகைப்படம் தெளிவாக வரும்.

                                        -Jim Miotke in his book ‘Better Photo Basics’

லோட்டஸ் ரெசிடென்சி…

வழக்கமான பரபரப்பின்றி இலகுவாக கல்லூரிக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான் கௌதம். ஹேமலதா காலையுணவை முடித்துவிட்டு நந்தனுக்கு எப்படி சிந்தாமல் சாப்பிடவேண்டும் என்று பயிற்றுவித்துக் கொண்டிருந்தாள்.

“இந்த பீஸை இப்பிடி தேங்காய் பால்ல டிப் பண்ணி வாய்ல போட்டுக்கணும்” என்று ஆப்பத்தினை சிறு விள்ளலாக பிய்த்து தேங்காய் பாலில் தோய்த்து அவனுக்கு ஊட்டினாள் ஹேமலதா.

“ஓகே மம்மி… இனிமே நானே சாப்பித்துக்கிறேன்” என்று ‘ட’கரம் வராத நந்தனது உச்சரிப்பில் புன்சிரிப்பு மலர்ந்தது அவள் இதழில்.

அப்போது உள்ளே வந்த சாருலதா “அக்கா இன்னைக்கு ஆன்ட்டி தக்காளி சட்னி வித்தியாசமா பண்ணுனாங்க… இந்த பாக்ஸ்ல இருக்கு” என்றபடி டப்பர்வேரில் போட்டு எடுத்து வந்திருந்த தக்காளி சட்னியை தமக்கையிடம் நீட்டினாள்.

“வாசனையே ஆளைத் தூக்குதே” என்ற ஹேமலதா அவளைச் சாப்பிட அழைக்க அவளோ தானும் சாந்தநாயகியும் ஏற்கெனவே காலையுணவை முடித்துவிட்டதாகக் கூறிவிட்டு நந்தனுக்கு ஊட்டிவிடவா என்று வினவினாள்.

“நோ! அவன் ஸ்கூலுக்குப் போற அளவுக்கு வளந்துட்டான்.. இனிமே அவனே சாப்பிடுவான்” என்றாள் ஹேமலதா.

நந்தன் அதற்கு மேலும் கீழுமாகத் தலையாட்ட சாருலதா அவனது சிகையைக் கலைத்தவள் “நந்துகுட்டி அவ்ளோ பெரிய பையனா வளந்துட்டியா? டேய் சித்திக்கு ஒரு வாய் குடுடா” என்று அவனது குட்டி கரங்கள் நீட்டிய ஆப்பத்தை வாங்கிக்கொண்டாள்.

அப்போது கௌதம் வரவும் “குட் மானிங் மாமா” என்றவளுக்கு அவனும் காலை வணக்கம் கூறிவிட்டு அமர்ந்தான்.

அவனுக்கு ஆப்பத்தை பரிமாறிய ஹேமலதா “இன்னைக்கு ஈவ்னிங் வர்றப்போ சூப்பர்மார்க்கெட்ல நாட்டுச்சர்க்கரை வாங்கிட்டு வாங்க கௌதம்… நந்துக்கு இனிமே ஒய்ட் சுகர் குடுக்கவேண்டாம்” என்று கூற சரியென்றவன்

“நீ இன்னும் சாப்பிடலயா? உக்காரு, என்னோட சேந்து சாப்பிடு” என்று அக்கறையுடன் அவளுக்குப் பரிமாற ஆரம்பித்தான்.

ஹேமலதா அப்புறம் சாப்பிடுவதாகக் கூற “நானும் ரெண்டு மாசமா உனக்குப் பண்ணுற சேம் அட்வைஸ் தான்… ஆனா நீ கேக்கவே மாட்ற… இனிமே மூனு பேரும் ஒன்னா தான் சாப்பிடப்போறோம்… புருசன் சாப்பிட்டதுக்கு அப்புறமா சாப்பிட்டு பதிபக்திய நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல… அதோட எல்லாருமா சேர்ந்து சாப்பிடறப்போ இருக்குற சந்தோசத்துக்கு முன்னாடி நீ பரிமாறி நான் சாப்பிடணும்ங்கிற யூஸ்லெஸ் ஆசைகள் ரொம்ப அல்பமா தோணுது ஹேமா” என்று பேராசிரியருக்கே உரித்தான தேர்ந்தெடுத்த சொற்களுடன் நீண்ட விளக்கத்தைக் கொடுத்து முடிக்க அதன் பின்னரும் மறுக்க மனமின்றி அவனருகே கிடந்த இருக்கையில் அமர்ந்து அவன் பரிமாறுவதைச் சாப்பிட ஆரம்பித்தாள்.

“இன்னைக்கு மதியம் வந்துடுவீங்கள்ல?”

“ஆமா… பட் டூ ஓ க்ளாக் ஆகும் ஹேமா… ருத்ராஜியோட கொஞ்சநேரம் பேசிட்டு வர்றேனே”

ஹேமலதா ஆமோதிப்பாய் தலையசைக்க “ருத்ராஜியா? அவர் உங்க காலேஜுக்கு எதுக்கு வர்றார் மாமா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் சாருலதா.

“மோட்டிவேஷ்னல் ஸ்பீச்காக அவரை காலேஜ் மேனேஜ்மெண்ட் வரவழைச்சிருக்காங்க… ஹிஸ் ஒரேசன் இஸ் ஆல்வேஸ் ஆசம்” என்றான் கௌதம்.

“அப்போ நானும் வரவா மாமா? எனக்கு அவரைப் பாக்கணும் போல இருக்கு” அதீத ஆவல் காட்டி வினவிய தங்கையைக் கேள்வியுடன் பார்த்தாள் ஹேமலதா.

கௌதம் சரியென்றவன் “பட் நான் அவரோட பேசிட்டுத் தான் வீட்டுக்கு வருவேன்” என்று கூற

“இட்ஸ் ஓகே மாமா… காலேஜ்ல தான் ஜித்து இருப்பானே… நான் அவனோட வீட்டுக்கு வந்துடுவேன்” என்று உடனடி தீர்வை முன்மொழிந்தாள் சாருலதா.

கௌதம் அவளை அழைத்துச் செல்ல சம்மதிக்கவும் “தேங்க்யூ மாமா… நான் போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று புள்ளிமானாய் துள்ளிக் குதித்து ஓடினாள்.

“சித்தி நானும் வர்றேன்” என்றபடி அவள் பின்னே ஓடினான் நந்தன்.

“இவளால ஃபைவ் மினிட்ஸுக்கு மேல ஒரே இடத்துல இருக்கமுடியாது… இவ எப்பிடி உங்க ருத்ராஜியோட மோட்டிவேஷ்னல் ஸ்பீச்சை முழுசா கேக்க போறா?” என்று கிண்டல் செய்த ஹேமலதாவை புன்சிரிப்புடன் ஏறிட்டான் கௌதம்.

“அவரோட பேச்சு அந்த மாதிரி ஹேமா… நீயும் வர்றீயா?”

“ஐயா சாமி என்னை விட்டுடுங்க… எனக்கே ஒன் வீக்கா டயர்டா இருக்கு… அங்க வந்தேன்னா உங்க ருத்ராஜியோட ஸ்பீச் எனக்குத் தாலாட்டு மாதிரி தான் கேக்கும்… அப்பிடியே தூங்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல… அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி தூங்குறதுக்கு நான் வீட்டுலயே தூங்கிக்கிறேனே”

குறும்பாக மொழிந்துவிட்டு நாக்கைத் துருத்தியவளின் கன்னத்தில் கிள்ளியவன் “இன்னைக்கு ஈவ்னிங் டாக்டரைப் போய் பாத்துடுவோம்” என்று கூற

“இது ரெகுலரா வர்ற டயர்ட்னெஸ் தான் கௌதம்… எனக்கு ஹெச்.பி கவுண்டிங் கம்மி” என்றாள் ஹேமலதா வெகு சாதாரணமாக.

“அது ஒன்னும் நீ சொல்லுற அளவுக்கு சாதாரண பிரச்சனை இல்ல… இன்னைக்கு ஈவ்னிங் டாக்டர் கிட்ட போறோம்… அவ்ளோ தான்” என்று முடிவாகக் கூறிவிட்டு அவன் தட்டுடன் சமையலறையை நோக்கிச் செல்ல ஹேமலதா அவனுக்குத் தன் மீது இருக்கும் அக்கறையை எண்ணி உள்ளம் உருகியவளாக தட்டிலிருந்த கடைசி விள்ளல் ஆப்பத்தை சாப்பிட்டு முடித்தாள்.

பின்னர் சாருலதா தயாராகி வர கௌதம் அவளை அழைத்துக்கொண்டு கிளம்பியவன் ஹேமலதாவிடம் கையசைத்து விடைபெற்றான்.

“நீங்க என்ன கிண்டர் கார்டன் ஸ்டூடண்டா மாமா? இல்ல, இன்னும் டாட்டா காட்டுற பழக்கம் மாறலையே! அதான் கேட்டேன்” என்று அவனைக் கலாய்த்தபடி கிளம்பினாள் சாருலதா.

இருவரும் கல்லூரியை அடைந்த போது அங்கே உள்ளரங்கை நோக்கிச் செல்லும் பாதையில் மாணவர்கள் சாரிசாரியாக சென்று கொண்டிருந்தனர்.

கௌதம் சாருலதாவைத் தங்களது டிப்பார்ட்மெண்டுக்கு அழைத்து வர அங்கே இருந்த மயூரி அவளை அங்கே எதிர்பாராததால் திகைத்தாள்.

“நீ இங்க என்ன பண்ணுற?”

“ருத்ராஜியோட ஸ்பீச்சை கேக்க வந்திருக்கா” பதில் வந்தது கௌதமிடமிருந்து.

மயூரி தலையிலடித்துக் கொண்டவள் “இந்த மோட்டிவேஷ்னல் ஸ்பீச் கேக்குறதுக்கு போரடிக்கும்னு என் கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ் புலம்பிட்டிருக்காங்க… நீ வாண்டட்டா வந்து சிக்கிட்டீயேடி” என்று கூற

“அவளாச்சும் வளர்றப்போவே மெச்சூரிட்டியோட வளரட்டுமே” என்றான் கௌதம் நமட்டுச்சிரிப்பை மறைத்தபடி.

அவனுக்கு சாருலதா அவனுக்கு ஹைஃபை கொடுக்க இருவரையும் முறைத்த மயூரி “அப்போ நாங்கள்லாம் இம்மெச்சூர்ட்னு இன்டேரக்டா சொல்லுறீயா?” என்று பொறும

“சேச்சே! இதை நான் சொல்லலை… மேடி தான் அடிக்கடி இப்பிடி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்” என்று மாதவனை சிக்கவைத்துவிட்டு தப்பித்துக்கொண்டான் கௌதம்.

மயூரி அதற்கு மாதவனைத் திட்டித் தீர்க்க துறைக்குள் வந்த பேராசிரியைகளும் இந்தக் கலாட்டாவைக் கேட்டுச் சிரிக்க துறைத்தலைவர் அனைவரையும் உள் அரங்கிற்கு செல்லும்படி பணித்தார்.

மயூரியும் கௌதமும் சாருலதாவுடன் பேசியபடி உள் அரங்கை அடைந்தனர். மாணவர்கள் வரிசையாக அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் கல்லூரி முதல்வரும் தாளாளரும் வருகை தர அவர்களின் நடுநாயகமாக தனது சாந்தம் தவழும் வதனத்தில் மின்னும் தேஜஸுடன் அந்த உள் அரங்கின் மேடையை அடைந்தார் யோகா குரு சர்வருத்ரானந்தா.

அவரைக் கண்டதும் மாணவர் மத்தியில் சளசளப்பு எழுந்து அடங்கியது. வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு வரவேற்புரையை ஒரு பேராசியர் முடித்து வைக்க அந்த நிகழ்வின் நாயகனான சர்வருத்ரானந்தா தனது உறையை ஆரம்பித்தார்.

வழக்கமான இலகுவான பாணியில் ஆரம்பித்த அவரது உரையின் மையக்கருத்தே இளைஞர்கள் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஊன்றி கவனிக்கவேண்டும் என்பது தான்.

“இன்னைக்கு இருக்குற ஜெனரேசன் தங்களுக்குனு ஒரு கோல் செட் பண்ணிட்டு அதை நோக்கி ஓடுறாங்க… அந்த ஓட்டத்துல தனக்கு முன்னாடி ஓடுற நபரை முந்தணும்னு பிரயத்தனப்படுறாங்க… தனக்குப் பின்னாடி வர்றவங்களை பாத்து ஏளனமா சிரிச்சுட்டு முன்னேறுறாங்க… ஆனா தன் கூட தனக்கு சமமான வேகத்துல ஓடுற சகமனுசங்களை கவனிக்கத் தவறிடுறாங்க… அந்த சகமனுசங்க அவங்களோட பெற்றோரா இருக்கலாம், அவங்களோட நண்பர்களா இருக்கலாம், அவங்களை சுத்தி இருக்குற மனுசங்களா இருக்கலாம், இல்லனா அவங்களோட வாழ்க்கைத்துணை குழந்தையா கூட இருக்கலாம்…

இவங்க யாரையும் கவனிக்காம செட் பண்ணுன கோலை நோக்கி ஓடுறப்போ ஒரு கட்டத்துல வயோதிகம் காரணமா அவங்களோட பேரண்ட்சை இழந்துடுவாங்க… நண்பர்களும் பொறுத்து பாத்துட்டு இவங்களை மறந்துடுவாங்க… குழந்தைகள் தன்னோட பேரண்ட் கிட்ட எதிர்பாத்த அன்பு கிடைக்காதுனு அவங்களை விட்டு விலகிடுவாங்க… வாழ்க்கைத்துணையோ மனசளவுல இந்த மாதிரி மனுசங்களை விட்டு தூரமா போயிடுவாங்க… இப்பிடி தனக்கான மனுசங்களை இழந்துட்டு அந்த மனுசன் தன்னோட இலக்கை அடைஞ்ச பிறகு அந்தச் சந்தோசத்தை பகிர்ந்துக்க அவனுக்குனு யாருமே இருக்க மாட்டாங்க… இதை இப்போ இருக்குற இளைஞர்கள் புரிஞ்சிக்கணும்… எந்திரத்தனமான உலகத்தோட ஓட்டம் உங்களுக்கான நபர்கள் கிட்ட இருந்து உங்களை பிரிச்சிடாம பாத்துக்க வேண்டியது உங்களோட பொறுப்பு… அந்தப் பொறுப்பை மறந்துடாதீங்க”

இந்த இயந்திரமயமான உலகம் கொடுக்கும் அலைபாய்தலில் இருந்து மனதைக் காக்க யோகாவின் பங்கு என்ன என்பதை அடுத்த உரையாக ஆரம்பித்தார் சர்வருத்ரானந்தா.

மிக நீண்ட உரையாக சென்றாலும் இடையிடையே அவரது அக்மார்க் நகைச்சுவையும் சேர்ந்துகொள்ள ஒரு மணி நேரத்துக்கு மேலும் நீண்ட அந்த உரையில் மாணவர்கள் அனைவரும் மூழ்கிப்போயினர். அந்தப் பேச்சுத்திறமை சர்வருத்ரானந்தாவுக்கே உரித்தான தனிச்சிறப்பு.

உரையாற்றி முடிந்ததும் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டார் அவர். மாணவர்களும் தத்தம் ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெற மைக் சாருலதாவின் கைக்கு வந்தது.

அவள் எழுந்து நின்று முதலில் அவருக்கு வணக்கம் சொன்னவள் பின்னர் நிதானமாகத் தனது ஐயத்தைக் கேட்டாள்.

“ஹாய் ருத்ராஜி! ஐ அம் சாருலதா… எனக்கு ரொம்ப நாளா இந்த டவுட் இருக்கு… ஏன்னா நான் மீட் பண்ணுன மேக்சிமம் பெர்சன்ஸ் யோகா பத்தி பேசி நான் கேள்விப்பட்டிருக்கேன்… இந்த ஃபாஸ்ட் மூவிங் வேர்ல்ட்ல மனசை அமைதிப்படுத்துறதுக்கு யோகா மட்டும் தான் வழியா? மியூசிக் கேக்குறது, புக்ஸ் படிக்குறது கூட மனசை அமைதி ஆக்கும் தானே”

அமைதியாய் இருந்த அரங்கிற்குள் அவளது குரல் கணீரென ஒலிக்க மேடையிலிருந்த ருத்ராஜியின் முகத்தில் புன்னகை!

“ரொம்ப சரியான கேள்வி தான் சாருலதா… நீங்க சொல்லுற மாதிரியே மியூசிக்கும் மனசை அமைதிப்படுத்தும்… புத்தகவாசிப்பும் மன அமைதியை குடுக்கும்… இசை ஞானம், வாசிப்பு ஞானம் மாதிரி யோகாவும் ஒரு வகையான ஞானம் தான்… அந்த யோகஞானம் நமக்குள்ள இருக்குற கசடுகளை நீக்கி மெய்ஞானத்தை அடையுறதுக்கு உதவியா இருக்கும்”

அவரது விளக்கம் புரிந்தும் புரியாமலும் இருக்க சாருலதா அமர்ந்தாள். பின்னர் அடுத்தடுத்த நபர்கள் கேள்விகளைக் கேட்க இப்படியே நேரம் மதியம் வரை ஓடிவிட்டது.

இறுதியாக நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற சாருலதாவை மயூரி வசம் ஒப்படைத்துவிட்டு சர்வருத்ரானந்தாவுடன் முதல்வர் அறைக்குக் கிளம்பினான் கௌதம்.

மயூரி சாருலதாவுடன் பேசிக்கொண்டே வணிகவியல் துறையை அடைந்தவள் இந்திரஜித்துடன் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.

அதே நேரம் முதல்வர் அறையில் கௌதமிடம் சினேகம் ததும்பிய வார்த்தைகளுடன் உரிமையாகப் பேசிக்கொண்டிருந்தார் சர்வருத்ரானந்தா.

“ஒய்ப், குழந்தை எல்லாரும் எப்பிடி இருக்காங்க கௌதம்?”

“எல்லாருமே நல்லா இருக்காங்க ருத்ராஜி… உங்களை பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்… இன்னைக்கு உங்க கிட்ட கொஸ்டீன் கேட்ட சாருலதா என் ஒய்போட சிஸ்டர் தான்… ரொம்ப புத்திசாலியான பொண்ணு”

“யா! ஷீ இஸ் வெரி பிரில்லியண்ட்… அவங்க வயசு ஸ்டூடண்ட்ஸ் கேட்ட கேள்விக்கும் அவங்களோட கேள்விக்கும் நிறைய வித்தியாசம் இருந்துச்சு… என்னோட ஆசிர்வாதம் அந்தக் குழந்தைக்கு எப்போவும் உண்டு” என்றவர் அவருடன் அமர்ந்திருந்த ரவீந்திரனைப் பார்க்க அவர் ஒரு ருத்திராட்ச மாலையை ருத்ராஜியிடம் கொடுத்தார்.

அதை கையில் வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டவர் “இது நம்ம முக்தி சதாசிவனோட சன்னதில வச்சு பூஜை பண்ணுன ருத்திராட்சமாலை… சென்னைல நான் சந்திக்கப்போற முக்கியமான நபர்களோட ஃபேமிலி மெம்பர்சுக்காக கொண்டு வந்தேன்… நீங்களும் எனக்கு முக்கியமான நபர் தான் கௌதம்… இதை என்னோட ஆசிர்வாதமா உங்க சிஸ்டர் இன் லாவுக்குக் கொடுத்திடுங்க” என்று கௌதமிடம் நீட்ட அவன் அதை பயபக்தியுடன் வாங்கி கொண்டு நன்றி நவிழ்ந்தான்.

அதன் பின்னர் அவனுடன் பேசிவிட்டு ரவீந்திரனுடன் கிளம்பினார் சர்வருத்ரானந்தா. அன்றைய தினம் மதியம் சாந்தகோபாலனின் இல்லத்தில் உணவருந்துவதாக வாக்களித்திருந்தார் அவர்.

எனவே சாந்தகோபாலனின் இல்லத்திலிருந்து அனுப்பி வைத்திருந்த காரில் அவரும் ரவீந்திரனும் கிளம்பினர். காரில் செல்லும் போதே ரவீந்திரனிடம் தங்களது முக்தி ட்ரஸ்ட் மூலம் செய்யவிருக்கும் அடுத்த புராஜெக்ட் பற்றி கேட்டுக்கொண்டே வந்தார் அவர்.

“எல்லாம் பக்காவா முடிஞ்சிடுச்சு ருத்ராஜி… நமக்கு வர வேண்டிய ட்வென்டி பர்சென்டேஜ் வந்தாச்சு… இனிமே மக்கள் கிட்ட இதை விளம்பரப்படுத்த வேண்டியது மட்டும் தான் பாக்கி… அதுக்கான பிள்ளையார் சுழியை நீங்க தான் போடணும்” என்று ரவீந்திரன் பணிவன்புடன் வேண்டிக்கொள்ள

“அதுக்குத் தானே சென்னை வந்திருக்கோம்… எனிஹவ் அரசாங்க தரப்புல இருந்து எந்த நெருக்கடியும் வராதுனு கன்ஃபர்ம் பண்ணிட்டீங்களா ரவீந்திரன்?” என்று வினவினார் ருத்ராஜி.

“ஆளுங்கட்சித்தலைமை நமக்கு சப்போர்ட்டா இருக்கு ருத்ராஜி… நம்ம தைரியமா காரியத்துல இறங்கலாம்” என்று அறுதியிட்டுக் கூறினார் ரவீந்திரன்.

ஒரு மாதமாக அலைந்து திரிந்து அந்த புராஜெக்டுக்காக உழைத்தவர் ரவீந்திரன் தான். இது சம்பந்தமாக சென்னைக்கும் தேனிக்கும் மாறி மாறி அலைந்து இதோ அந்த புராஜெக்ட் ஆரம்பிக்கும் தருவாயில் உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை இந்த புராஜெக்ட் ஏற்கெனவே முடிந்தது போல தான்.

அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் ஜெயசந்திரன் அபிமன்யூவின் முன்னே பவ்வியத்துடன் அமர்ந்திருந்தார். அவனுடன் அமர்ந்திருந்த அஸ்வின்

“சாரோட கிரீன் அக்ரோ லிமிட்டட்ல இருந்து நம்ம கட்சிக்கு டொனேசன் வந்தாச்சு அபி… மானிங்கே அமவுண்ட் முழுசா நம்ம அக்கவுண்ட்ல கிரெடிட் ஆயிடுச்சு” என்றான்.

அபிமன்யூவின் புருவம் மெச்சுதலாக உயர ஜெயசந்திரன் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

“இவனுக்குக் குடுக்கவேண்டியத குடுத்தாச்சு… அந்தாளு ரவீந்திரன் சொன்னபடி அவங்க ட்ரஸ்டுக்கு ட்வென்ட்டி பர்செண்டேஜ் குடுத்தாச்சு… இனிமே உள்ளதை அவரும் அவரோட ட்ரஸ்டும் பாத்துப்பாங்க” என்ற நிம்மதி அவருக்கு.

அபிமன்யூவோ அன்று அவருடன் நட்சத்திர ஹோட்டல் அறையில் சந்தித்த ரவீந்திரன் பேசிய பேச்சை நினைவு கூர்ந்தான்.

“எங்க முக்தி ஃபவுண்டேசன்ல ஆர்கானிக் அக்ரிகல்சர் மெத்தட் தான் ஃபாலோ பண்ணுறோம்… சோ எங்களால இந்த புராஜெக்டை ஈசியா செஞ்சு முடிக்கமுடியும்… முதல்ல இதை பத்தி செலிப்ரிட்டீஸ் மூலமா விளம்பரம் பண்ணுவோம்… அப்போ தான் ஸ்டேட் முழுக்க இந்த புராஜெக்ட் பத்தி பொதுமக்கள் பேசுவாங்க… அப்புறமா இந்தப் புராஜெக்டுக்கான ஃபண்டை கலெக்ட் பண்ணுவோம்” என்று அவர் புள்ளிவிவரத்துடன் கணக்கு போட்டு சொன்ன பிறகு தான் ஜெயசந்திரனின் ஊழல்பணம் நன்கொடை என்ற பெயரில் முக்தி ஃபவுண்டேசனுக்குள் நுழைந்தது.

ரவீந்திரனின் மேற்பார்வையில் வழக்கப்படி அதில் இருபது சதவிகிதத்தை தங்களது முக்தி ஃபவுண்டேசனுக்கு கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதத்தை அந்த புராஜெக்டுக்கான கான்ட்ராக்ட்டை எடுத்திருக்கும் கம்பெனி என்ற போர்வையில் ஜெயசந்திரனின் மகன் டைரக்டராக பதவி வகிக்கும் அவர்களின் பினாமி கம்பெனியான கிரீன் அக்ரோ லிமிட்டடிற்கு கொடுக்கப்பட்டது.

அதற்காக அளிக்கப்பட்ட தொகையில் பாதி கட்சிக்கு நன்கொடையாக அளிக்கப்பட இனி ஜெயசந்திரனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சியுடையதாக மாறிவிட்டது. அதற்கு தான் பொறுப்பு என்று அபிமன்யூ கூறிவிட ஜெயசந்திரன் நிம்மதியானார். ஆனால் அவரைக் காப்பாற்றியதால் இன்னும் சில மாதங்களில் கட்சிக்கு நேரப்போகிற அவலநிலையை அபிமன்யூ அன்று அறிந்திருக்கவில்லை.

மழை வரும்☔☔☔