☔மழை 40☔

அரசன் வழி தவறும் போது அஞ்சாது அவனுக்கு நல்வார்த்தைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தும் அமைச்சரின் சொற்கள் அவ்வரசனின் செவியில் கடுஞ்சொற்களாகத் தான் விழும். அதை ஏற்று நல்வழிக்குத் திரும்பும் அரசனையே மக்கள் விரும்புவர்.

செவிக்கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

முக்தி ஃபவுண்டேசன், மேகமலை….

சதாசிவனுக்கு எழுப்பப்பட்டிருந்த பழைய கோயிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பக்தர்கள், தன்னார்வலர்கள், யோகா கற்றுக்கொள்ள விரும்பி வந்திருந்தவர்களால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. முக்தியின் நாற்பக்கமும் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய அத்தருணத்தில் சதாசிவனுக்கு ஆரத்தி எடுத்தார் சர்வ ருத்ரானந்தா.

ஜடாடவி கலஜ்ஜல பிரவாஹபாவிதஸ்தலேகலேவலம்பிய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்டமட் டமட் டமட்தமன்னி நாதவட்டமர்வயம்சகார சந்த்ததாண்டவம் தனோத்து சிவ சிவம்

ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரிவிலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனிதகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகேகிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா

தெளிவான சாரீரத்துடன் பக்தர் குழு பாடிக் கொண்டிருக்க ஆரத்தி தட்டில் எரிந்து கொண்டிருந்த தீபத்தின் ஒளியில் சிவலிங்கத்தின் வெள்ளி நெற்றிக்கண் மினுமினுக்க பக்தி பரவசத்துடன் சிவ தாண்டவ ஸ்துதியில் மூழ்கியிருந்தாள் சாருலதா.

முக்தி ஃபவுண்டேசனுக்கே உரித்தான சீருடையில் நெற்றியில் சந்தன திலகம் மின்ன பக்தியில் கண்கள் பளபளக்க அவள் நின்ற கோலத்தைக் கண்டு இந்திரஜித்துக்கு ஒரு நொடி மெய் சிலிர்த்தாலும் அந்தப் பக்தி சதாசிவன் மீதிருந்திருந்தால் அவன் மகிழ்ந்திருப்பான். சாருலதாவின் விழிகளோ நேரே கையிலாயத்துக்குச் சென்று சிவனையே தரிசித்தது போன்ற பாவனையில் நோக்கிக் கொண்டிருந்தது சர்வருத்ரானந்தாவை அல்லவா! பின் அவனுக்கு எப்படி மெய் சிலிர்க்கும்!

“அடியே உன் பக்திவெள்ளத்துக்கு இல்லையா ஒரு எண்ட் கார்ட்? ஹே மகாதேவா! இதெல்லாம் பாக்குறதுக்கா என்னை இங்க நிக்கவச்ச?” என்று மனதின் குரலில் (மைண்ட் வாய்ஸ் மக்களே! மன் கி பாத் இல்லை) பேசுவது என்று எண்ணிக்கொண்டு சத்தமாகப் பேசிவிட்டான்.

அதைக் கேட்ட ரகுவோ “தம்பி சாரு இப்பிடி பக்தி பரவசத்துல இருக்குறதுலயும் ஒரு நல்லது இருக்குடா… இப்போ நம்ம வேலைய ஆரம்பிச்சா சரியா இருக்கும்டா” என்று தனது முழங்கையால் இடித்து கூற இந்திரஜித்தும் அதை ஆமோதித்தான்.

இருவரும் ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை இருக்கும் கட்டிடப்பகுதியை நோக்கி நகர ருத்ராஜி சதாசிவனுக்கு ஆரத்தி காட்டி முடித்திருந்தார். பின்னர் வழக்கம் போல தத்துவரீதியான உரையாடலுக்கான நேரம் ஆரம்பிக்க இனி ருத்ராஜி மற்றும் அவரது பக்தகோடிகள் யாரையும் இந்த ஆலயத்தை விட்டு அசைக்க முடியாது என்ற காரணத்தால் யசோதரா ஒப்படைத்த வேலையைச் செய்து முடிக்க ஆயத்தமானாள் சாருலதா.

அவள் மெல்ல நழுவுவதை கண்டுகொண்ட பிரியாவிடம் “எனக்கு அடிவயித்துல சம்திங் ராங் ரியா… இப்பிடியே கோயில்ல நின்னுட்டிருந்தா நல்லா இருக்காதுல்ல… நீ ருத்ராஜியோட ஸ்பீச்சை கேளு… எப்பிடியும் டுமாரோ மானிங் முக்தியோட யூடியூப் சேனல்ல இந்த ஸ்பீச் வீடியோவா வரும்ல…. அப்போ நான் பாத்துக்கிறேன்” என்று சமாதானம் உரைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அப்போதும் அவளுக்கு ருத்ராஜி மீது அசைக்க முடியாத நம்பிக்கை தான். யசோதரா சொல்வது போல அந்த ஆவணத்தில் பெரிதாக ஒன்றுமிராது என்ற எண்ணத்துடன் ஆவண அறையை நோக்கி நடை போட்டவளுக்கு அங்கே இந்திரஜித்தும் ரகுவும் அங்கே இருப்பது தெரியாது.

ஒருவழியாக நிர்வாகப்பகுதியிலிருந்த ஆவணங்கள் வைத்திருக்கும் கட்டிடத்தை அவள் அடைந்த போது அங்கே பகலைப் பழிக்கும் அளவுக்கு வெளிச்ச வெள்ளம். ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. வழக்கமாக அப்பகுதியில் இருக்கும் அலுவலர்கள் கூட அன்று பூஜையில் ஐக்கியமாகி விட்டதால் கண் சிமிட்டும் மின்விளக்குகளுடன் கூடிய கட்டிடங்கள் அன்று அனாதையாக நின்று கொண்டிருந்தன.

கட்டிடத்தின் முன்னே வந்து நின்றதும் தான் சாருலதாவிற்கு அதனுள் நுழைவது எப்படி என்ற பூதாகரமான கேள்வி மூளையில் உதித்தது.

“அடியே சாவியே இல்லாம தான் உள்ள நுழையறதுக்கு இல்லாத கதையெல்லாம் சொல்லிட்டு வந்தியா? தூ” என்று மனசாட்சி அவளை மானாவரியாக திட்டித் தீர்த்தது.

“ப்ச்! அவசரத்துல இதையெல்லாம் யோசிக்க மறந்துட்டேன்… இப்போ எப்பிடி நான் உள்ள நுழையுறது?” வாய்விட்டுப் புலம்பினாள் அவள்.

“ஹான், அண்டாகா கசம்! அபுகா ஹூக்கும்! திறந்திடு சீசேம்னு சொல்லு… கதவு திறக்கும்” நேரகாலமின்றி நக்கலடித்தது அவளது மனசாட்சி.

முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டவள் மனதில் துளிர்த்த நப்பாசையுடன் கதவை நெருங்கி கையை வைத்தாள். என்ன ஆச்சரியம்! மனசாட்சி சொன்ன மந்திரவார்த்தைகளின் தேவையின்றி கதவு தானாய் திறந்தது. உபயம் அவளுக்கு முன்னர் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்த ரகுவும் இந்திரஜித்தும்.

உள்ளே நுழைந்தவள் வருடவாரியாக இலக்கமிட்ட கதவுகளை விழிகளால் தடவியபடி நடந்தாள். இரண்டாயிரத்து இருபத்தியொன்று என்ற எண் பொறித்த கதவின் முன்னே நின்றவளின் கால்களைக் காட்டிலும் காதுகள் வேகமாக செயல்பட்டதன் விளைவு உள்ளே கேட்ட குரல்கள் அவளது செவிப்பறையைத் தீண்டியது.

அதில் இரண்டு குரல்கள் அவளுக்கு மிகவும் பரிச்சயமானவை! மூன்றாவதாக கேட்ட குரலும் பரிச்சயமே! ஆனால் அது சமீபகாலத்தில் கேட்டுப் பரிச்சயப்பட்ட குரலே! அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ரவீந்திரன்.

“இனியும் சமாளிக்க நினைக்காதீங்கப்பா… எதுக்கு இங்க வந்தீங்க?”

வெகு கறாராக ஒலித்த ரவீந்திரனின் குரலுக்குப் பின்னே ஒலித்தது ரகுவின் குரல்.

“இப்போ என்ன சார்? நாங்க இங்க எதுக்கு வந்தோம்னு தெரியணும்… அவ்ளோ தான? நாங்க இங்க ருத்ராஜியோட திருட்டுத்தனத்துக்கு ஆதாரம் தேடி வந்தோம்… என்ன பண்ணுவிங்க நீங்க? எங்க கழுத்தைச் சீவிடுவிங்களோ?”

தொடர்ந்து பேசியவன் இந்திரஜித்.

“உங்களுக்கு எதிரா ஆதாரம் திரட்டுன மத்தவங்கள மாதிரி நீங்க எங்களை மிரட்ட முடியாது ரவீந்திரன் சார்… ஏன்னா நாங்க ஒன்னும் சாமானிய மக்கள் இல்ல… ஹீ இஸ் ஒர்க்கிங் இன் அ மீடியா ஹவுஸ் அண்ட் ஐ ஆம் அ வெல்னோன் பெர்சன் அமங் பப்ளிக்… சோ எது பண்ணுனாலும் யோசிச்சு பண்ணுங்க”

இருவரின் பேச்சிலும் ரவீந்திரன் சீற்றமுற்று கோபம் கொள்வார் என்று எதிர்பார்த்த சாருலதாவிற்கு அமைதியே பதிலாய் கிடைக்க அதற்கு மேல் பொறுமை காக்க விரும்பாதவளாய் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

அவளைக் கண்டதும் இந்திரஜித்தும் ரகுவும் அதிர ரவீந்திரனோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளவில்லை. மூவரையும் நிதானத்துடன் ஏறிட்டவர் அந்த அறையில் சுவரோடு சுவராக இருந்த பெட்டகத்தைத் திறந்தார்.

அவர் எதையோ தேட ஆரம்பிக்க அந்த இடைவெளியில் இந்திரஜித்தின் விழிகள் சாருலதாவை எச்சரிக்கையுடன் ஏறிட்டது.

ஒரு புருவம் நேர்கோடாய் இடுங்க மற்றொரு புருவத்தைச் சுளித்து கண்களை உருட்டி அவன் காட்டிய சைகைக்கு அர்த்தம் இங்கிருந்து வெளியேறு என்பது தான். சாருலதாவோ தலையை வேகமாக இடவலம் அசைத்து முடியாதென மறுக்க ரவீந்திரனும் திரும்பிவிட்டார்.

திரும்பியவரின் கரத்தில் இருந்த வெண்ணிற காகிதம் ஏதோ விண்ணப்பம் போல இருந்தது. அதை இந்திரஜித்திடம் நீட்டியவர்

“இது தான் சதாசிவனோட புது கோயிலுக்கு பெர்மிசன் கேட்டு நாங்க அப்ளை பண்ணுன டாக்குமெண்ட்… இதை நாளைக்கு லீகல் அட்வைசர் கிட்ட குடுக்கப்போறோம்… சோ இப்போ விட்டா இதை உங்களால பாக்கவே முடியாது” என்று சாதாரணமாகக் கூற மற்ற மூவருக்கும் அதிர்ச்சி.

என்ன இந்த மனிதர் தங்களிடம் முக்கியமான ஆவணத்தை ஒப்படைக்கிறார்! இதற்கு பின்னே எதாவது தில்லுமுல்லு இருக்கிறதோ என்ற சந்தேகம் அவர்களுக்கு!

ரவீந்திரன் அவர்களது எண்ணப்போக்கைக் கண்டுகொண்டவர் மெல்லிய சிரிப்பை உதிர்த்தார். அதில் கோபமோ வெறுப்போ இல்லை! விரக்தி மட்டுமே நிறைந்திருந்தது.

“என்னடா இவன் முக்தியோட தீவிர விசுவாசி ஆச்சே, நம்ம கிட்ட ஏன் இந்த டாக்குமெண்டை குடுக்குறான்னு தானே யோசிக்கிறீங்க? உங்க மூனு பேருக்கு இன்னும் முகுந்தை மறந்திருக்காதுனு நினைக்கேன்” என்று முடித்தவரின் குரலில் இருந்த வலியில் இந்திரஜித் ஒரு கணம் திகைத்தான்.

இது நாள் வரை அவன் தான் அடிக்கடி முகுந்த் பற்றி நினைவூட்டுவான். அதை கேட்டு அவர் முகம் சுருங்கும். அவ்வளவு தான்! பெற்ற மகனை இழந்த தந்தையின் வருத்தம் அவ்வளவு தானா என்றெல்லாம் கூட எண்ணியிருந்தான் அவன்.

ஆனால் இந்த மனிதர் சோகம் முழுவதையும் மனதில் போட்டுப் புதைத்திருக்கிறார் என்பது இப்போதல்லவா அவனுக்குத் தெரிகிறது!

“என் மனசுல கத்தியா இறங்குன புத்திரச்சோகத்தோட வலிக்கு முன்னாடி இரத்தத்துல கலந்திருந்த விசுவாசம் மறைஞ்சிடுச்சு… நீங்க எல்லாரும் இங்க வந்தப்ப உங்க மேல எனக்கு எந்த டவுட்டும் இல்ல… ஆனா நாளாக ஆக மூனு பேரோட நடவடிக்கையையும் நான் வாட்ச் பண்ணுனேன்… என்னால என் மகனை திரும்ப உயிரோட கொண்டு வரமுடியாது… ஆனா அவனோட அநியாய சாவுக்குக் கணக்கு தீர்க்க முடியும்… அதான் உங்களை கண்டுக்காத மாதிரியே உங்களுக்கு உதவ ஆரம்பிச்சேன்…

நீங்க உங்கப்பா கிட்ட பேசணும்னு மிட்நைட்ல போன் கேட்டப்ப நான் நினைச்சிருந்தா என்னோட பெர்ஷனல் மொபைலை குடுத்திருக்கலாம்… ஆனா உங்க கவனம் ருத்ராஜி மொபைல்ல இருக்குறத கவனிச்சிட்டு தான் அந்தப் போனை குடுத்தேன்… அதே போல தான் முக்தியோட சைட், அட்மினிஸ்ட்ரேசன் ஏரியால இருந்த சிஸ்டம்ஸ்ல உண்டான குளறுபடியையும் கண்டுக்காத மாதிரி இருந்தேன்… இப்போ கூட இந்த ப்ளாக்கை லாக் பண்ணாம ஓப்பன் பண்ணி வச்சதும் நான் தான்”

ரவீந்திரன் பேசிய அனைத்தும் மூவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. இத்தனை நாட்கள் முக்தியைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொண்டிருந்த சாருலதாவின் நம்பிக்கை அவரது பேச்சால் சிறிதே ஆட்டம் கண்டது. ஏதோ தவறு இருப்பதால் தானே இம்மனிதர் இவ்வாறு முக்திக்கு எதிராக தங்களுக்கு உதவுகிறார் என்று அவளது மூளை அறிவுறுத்தியது.

ஒருவேளை முக்தியைப் பற்றி யசோதராவும் இந்திரஜித்தும் கொண்டிருந்த கருத்துக்கள் தான் உண்மையோ! எது எப்படியோ அவளிடம் யசோதரா ஒப்படைத்த கடமையான அந்த ஆவணத்தைப் புகைப்படம் எடுக்கும் வேலையை ஆரம்பித்தாள்.

புகைப்படம் எடுத்து முடிந்ததும் அவனை நோட்டமிட்டவளை வெளியேறுமாறு பணித்த இந்திரஜித் ரவீந்திரனை அழைத்துக் கொண்டு ரகுவோடு வெளியேறினான்.

“யாரும் பாக்குறதுக்கு முன்னாடி உங்க ரிசார்ட்டுக்குப் போயிடுங்க இந்திரஜித்… உங்களுக்கு இன்னும் எதாவது ஹெல்ப் வேணும்னா தாராளமா என்னை கான்டாக்ட் பண்ணுங்க” அவனது தோளை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் ரவீந்திரன்.

இந்திரஜித் ஒரு கணம் தயங்கிவிட்டு மனதிலிருப்பதை கேட்டுவிட்டான்.

“நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ணுறதால உங்களுக்கு ப்ராப்ளம் வருமே சார்… அதை எப்பிடி ஃபேஸ் பண்ணுவீங்க? ருத்ராஜிக்கு எதிரா நாங்க கலெக்ட் பண்ணுற ஆதாரம் அவரை மட்டும் அக்யூஸ்டா காட்டாது… அவருக்கு உதவியா இருந்த எல்லாரையும் சேர்த்து தான் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தும்… அதுல நீங்களும் ஒருத்தர்”

“இனிமே எனக்கு என்ன ஆனாலும் கவலை இல்ல இந்திரஜித்… வாழ்க்கைல எனக்குனு இருந்த பிடிப்பு என் முகுந்த் மட்டும் தான்… அவனையே இழந்துட்டேன்… சட்டம் எனக்கு எந்த தண்டனை குடுத்தாலும் தயங்காம ஏத்துப்பேன்… என்னை பத்தி கவலைப்படாம உங்க வேலைய முடிங்க… உங்களால ரொம்ப நாள் மத்தவங்க கண்ணுல மாட்டாம தப்பிக்க முடியாது… ருத்ராஜியோட பேக்போனா இருக்குற ஒவ்வொருத்தரும் என்னை விட அதிபுத்திசாலிங்க… இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காச்சும் உங்கள பத்தி அவங்களுக்குத் தெரியவந்துடும்… அதுக்குள்ள வேலைய முடிச்சிட்டுக் கிளம்பிடுங்க”

அக்கறையுடன் உரைத்த மனிதரிடம் ஆமோதிப்பாய் தலையசைத்துவிட்டுக் கிளம்பினர் இந்திரஜித்தும் ரகுவும்.

அதே நேரம் சாருலதா அவள் தங்கியிருக்கும் அறையில் அமர்ந்து யசோதராவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“உங்க மொபைலுக்குப் போட்டோவ வாட்சப் பண்ணிட்டேன்… மத்த விசயம் எல்லாம் சென்னைக்கு வந்ததும் சொல்லுறேன்… நீங்க ஜித்து கிட்டவும் அந்த டாக்குமெண்ட் பத்தி பேசிருந்தீங்களா?”

“ஆமா சாரு… இவ்ளோ ரிஸ்கான வேலைல உன்னைத் தனியா மாட்டிவிட யோசனையா இருந்துச்சு… அதான் ஜித்துவயும் ரகுவயும் அந்த டாக்குமெண்டை எடுக்க அனுப்பிவச்சேன்… நீங்க மூனு பேரும் யார் கண்ணுலயும் படாம வந்ததே போதும்… இனிமே உங்களுக்கு அங்க பெருசா எந்த வேலையும் கிடையாது… மத்தவங்க யாரும் உங்களை கண்டுக்குறதுக்கு முன்னாடி ஒவ்வொருத்தரா கிளம்பிடுங்க”

“ஓகே அக்கா… சீக்கிரமா சென்னைக்குக் கிளம்பிடுவேன்… பை அக்கா”

சாருலதா அழைப்பை முடிக்கவும் திரும்பிய யசோதரா அவள் பின்னே நின்று கொண்டிருந்த சித்தார்த்தின் மீது முட்டிக்கொண்டாள். அவளை அப்படியே தோளோடு அணைத்துக்கொண்டவனிடம் கடுகடுக்க போனவள் அவன் கேட்ட கேள்வியில் கண்கள் விரிய நின்றாள்.

“எந்த மூனு பேரைப் பத்தி பேசிட்டிருந்த யசோ? அவங்களுக்கு என்ன வேலை குடுத்திருந்த?”

அகன்ற கண்களின் கருவிழிகள் அசையாது நின்று அவனை தங்களுக்குள் இழுத்துக்கொள்ள எத்தனிப்பதை பிரயத்தனப்பட்டு தவிர்த்தவன் கேள்விக்கான பதிலை எதிர்பார்க்க யசோதராவோ அவனை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கத் துவங்கினாள்.

பின்னர் தான் இவன் என்ன என்னை கேள்வி கேட்பது என்ற இயல்பான சுபாவம் முரண்ட துவங்க “உனக்கு ஏன்டா நான் பதில் சொல்லணும்? இது என் புரொபசன் ரிலேட்டடான வேலை.. அதுல நீ தலையிடாத… ஓகே!” என மிரட்டல் விடுத்துவிட்டு வேகமாக நகர முற்பட்டாள்.

சித்தார்த் வேகமாக அவளது கரத்தைப் பிடித்து இழுத்ததில் மீண்டும் அவன் மீதே மோதி நின்றாள் யசோதரா. இழுத்த அதிர்ச்சியில் மீண்டும் விழி விரிய கருவிழிச்சுழலில் இம்முறை தவறாமல் சிக்கிக்கொண்டான் அவன்.

வெளியே இன்னும் மழை விட்ட பாடில்லை. நீண்டநேரம் பெய்த மழையுடன் இலவச இணைப்பாய் குளிர்க்காற்று வீச அந்த பீச் ஹவுசின் ஃப்ரெஞ்ச் விண்டோவின் கதவுகள் அதற்கு தாராளமாய் வழிவிட்டது.

மழையின் சோவென்ற இரைச்சல்! மேனியைத் தீண்டிச் சிலிர்க்க வைக்கும் குளிர்க்காற்றுடன் அவளது கரத்தை இறுக்கமாகப் பற்றியிருந்தவனின் உள்ளங்கை சூடும் சேர்ந்து கொள்ள வெகு நாட்களுக்குப் பின்னர் சித்தார்த்தின் அருகாமையில் யசோதராவின் உள்ளமும் உடலும் உருகத் துவங்கியது.

சித்தார்த்தோ ஏற்கெனவே விழிச்சுழலில் மாட்டிக்கொண்டவன் இப்போது முற்றிலுமாக தொலைந்து போனான். அவனது கரங்கள் காதலுடன் யசோதராவைத் தழுவிக்கொள்ள இது நாள் வரை கருத்து வேறுபாடு மட்டும் இருந்த இடத்தை இம்முறை அவர்களின் காதல் நிரப்ப ஆரம்பித்தது.

உருகியவளும் தொலைந்தவனும் சேர்ந்து இனி நடத்தப் போகும் காதல் தேடலுக்குச் சாட்சியாக வெளியே கொட்டித் தீர்க்க ஆரம்பித்தது வான்மழை!

மழை வரும்☔☔☔