☔மழை 39☔

ஸ்டூடியோவில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்று வெண்ணிற ஃபோம் போர்ட் (white foam board). இந்த ஃபோம் போர்ட்கள் ஸ்டூடியோவினுள் வரும் இயற்கையான வெளிச்சத்தை புகைப்படத்தின் கருப்பொருளின் மீது திருப்பிவிடும் ரிஃப்லெக்ட்ராக பயன்படுகின்றன. இந்த ஃபோம் போர்ட்கள் புகைப்படத்திற்கான கருப்பொருள் மீது நிழல் படியாது தடுக்கும். இதை ரிஃப்லெக்டராக பயன்படுத்துவதால் புகைப்படம் நல்ல வெளிச்சத்துடன் பார்ப்பதற்கு தெளிவாக இருக்கும்.

                                                     -By Krysten Leighty in pixelz.com

“பெரியம்மா யசோக்கு இப்போ ஒர்க் கொஞ்சம் டைட்டா போகுது… அதான் உங்க போன் காலை எடுத்திருக்க மாட்டா… நீங்க ஏன் கண்ட கண்ட யூடியூப் சேனல்ஸ் வியூஸ்காக சொல்லுற அபத்தமான கதைகளை நம்புறீங்க? யசோவும் சித்து சாரும் அங்க போனது அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் கிட்ட டிவோர்ஸ் வேணாம்னு அட்வைஸ் பண்ணுறதுக்காக தான்”

மயூரி வைஷ்ணவியிடம் யசோதரா அவரது மொபைல் அழைப்புகளை ஏற்காதது குறித்து நீண்ட விளக்கம் அளித்துக் கொண்டிருந்தாள்.

யசோதராவும் சித்தார்த்தும் குடும்பநல நீதிமன்றத்திலிருந்து கிளம்பும் காட்சியை வைத்து வீடியோக்கள் வெளியிட்ட யூடியூப் சேனல்கள் “ஐயோ இந்த நடிகருக்கு நடந்த அநியாயத்தை பாருங்கள்” என்று வழக்கமான க்ளிக் பைட்டுடன் வைத்திருந்த தம்நெயில் ஒன்றை எதேச்சையாக வாசுதேவன் பார்த்துவிட்டதே அவரது சமீபத்திய வருத்தத்திற்குக் காரணம்.

பார்த்ததும் மனம் பதைத்துப் போனவர் மனைவியிடம் கூறிவிட அவரோ யசோதராவுக்கு அழைத்து ஓய்ந்து போனார். மகளிடமிருந்து எந்த எதிர்வினையும் வராதிருக்க மயூரியைப் பிடித்துக்கொண்டார் வைஷ்ணவி.

அவளும் சித்தார்த் யசோதராவின் விவாகரத்து என்ற எவரெஸ்ட் சிகரத்தை சமாளிப்பு என்ற எறும்பின் பின்னே ஒளித்து வைக்க முயன்று கொண்டிருந்தாள்.

“ஃப்ரெண்டோட டிவோர்ஸ் கேஸ் அங்க தான் நடக்குதுனு மாப்பிள்ளைக்கு எப்பிடி தெரியும்? அப்பிடியே தெரிஞ்சாலும் யசோ ஏன் அவரோட அங்க போனா? ரெண்டு பேரும் என் கிட்ட எதையாச்சும் மறைக்கிறீங்களாடி?”

வைஷ்ணவிக்கு இன்னும் முழுதாக நம்பிக்கை வராது போகவே “அன்னைக்கு மேடி டைரக்சன்ல அவர் நடிக்கிற ஆன்த்தாலஜி மூவியோட ஷூட்டிங் அங்க நடந்துச்சு பெரியம்மா… அதுல ஹீரோயின் ஜெர்னலிஸ்ட்… அவங்க ஆக்டிங் நேச்சுரலா இருக்கானு செக் பண்ணுறதுக்கு யசோவ மேடி தான் அங்க வரச் சொன்னார்… போன இடத்துல ஃப்ரெண்டோட டிவோர்ஸ் கேஸ் அங்க நடக்குதுனு தெரிஞ்சதும் சித்து சார் அவர் கிட்ட பேசப்போனார்… கூடவே யசோவும் போனா… இப்போவாச்சும் நம்புறீங்களா பெரியம்மா? இல்லனா மேடி கிட்ட பேசி உங்க டவுட்டை க்ளியர் பண்ணிக்கிறிங்களா?” என்று அருமையாக கதை கூறி அவரை நம்ப வைத்தாள் மயூரி.

எப்படியோ அவர் நம்பியும் விட சிறிது நேரம் பேசிவிட்டுத் திரும்பியவளை பார்த்து மெச்சுதலாய் புருவம் உயர்த்தினான் அவளருகே அமர்ந்திருந்த மாதவன்.

“நாட் பேட்… நீ அழகா பாடம் நடத்துவனு தெரியும்… ஆனா சின்ன லாஜிக் எரர் கூட இவ்ளோ அழகா கதை சொல்லுவனு இப்போ தானே தெரியுது… இதுவும் நல்லது தான்… ஃபியூச்சர்ல எனக்கு கதைப்பஞ்சம் வர்றப்ப உன் கிட்ட கதை கேட்டுக்கலாம்” என்று கேலி செய்தவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் மயூரி.

“சும்மா கிண்டல் பண்ணாதீங்க மேடி… திக்காம திணறாம பொய் சொல்லி பாருங்க… அப்போ தெரியும் என் கஷ்டம்” என்று நொந்து போன குரலில் அவள் கூற

“டெய்லி உன் கிட்ட பொய் தானே சொல்லுறேன்” என்று வாய்க்குள் முணுமுணுத்தான் அவன்.

“என்னது?” என்று அவள் முறைக்க

“ஒன்னும் இல்ல செல்லக்குட்டி… சும்மா சாங்கை ஹம்மிங் பண்ணுனேன்” என்று சமாளித்த மாதவன் சித்தார்த்துடன் பீச் ஹவுசிற்கு செல்வதாகக் கூறினான்.

“திடீர்னு ஏன் அங்க போறீங்க?” சந்தேகத்துடன் வினவினாள் மயூரி.

“வரிசையா மூவி கமிட் ஆகி அவன் டயர்ட் ஆயிட்டான்… அவனை வச்சு டைரக்ட் பண்ணி நானும் டயர்ட் ஆயிட்டேன்… அங்க போனா மனசு கொஞ்சம் நிம்மதியா ஃபீல் பண்ணும்” என்றான் அவளது கணவன்.

“அங்க போய் என்ன பண்ணுவிங்க? சின்னப்பசங்க மாதிரி வீடியோ கேம் விளையாடுவிங்க… இல்லனா இந்த வருசம் ரிலீஸ் ஆன அவ்ளோ மூவியையும் வரிசையா பாத்து தீர்ப்பிங்க… அப்புறம் வாழ்க்கைல கடலையே பாக்காத மாதிரி அதுல ஆட்டம் போடுவீங்க… எனி ஹவ், யோகா தியானம்னு போய் இருக்குறவங்களை டென்சன் பண்ணாம இருந்தா போதும்” என என்றைக்கோ முக்திக்குச் சென்றதை சுட்டிக்காட்டி குட்டு வைத்துவிட்டு அகன்றவளிடம் இருந்து தப்பித்த மாதவன் ஏதோ இதோடு விட்டாள் என்ற நிம்மதியுடன் சித்தார்த்தை மொபைலில் அழைக்க ஆரம்பித்தான்.

சித்தார்த் அழைப்பை ஏற்றவன் பீச் ஹவுசிற்கு மாலை சென்று கொள்ளலாம் என்று கூறியதோடு நாராயணமூர்த்தி ஆன்த்தாலஜி திரைப்படம் குறித்து நான்கு இயக்குனர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகச் சொல்லவும் மாதவனும் நாராயணமூர்த்தியின் தயாரிப்பாளர் அலுவலகத்துக்குக் கிளம்பினான்.

**********

ஜஸ்டிஷ் டுடே..

“இந்த ஆடியோல ருத்ராஜி சதாசிவன் டெம்பிள் இருக்குற இடத்துக்கு இன்னும் அப்ரூவல் வாங்கலனு சொல்லுறார்… வழக்கம் போல கட்டி முடிச்சிட்டு ஹில் ஏரியா கன்சர்வேசன் அத்தாரிட்டி (Hill Area Conservative Authority) கிட்ட அப்ரூவல் குடுக்குறதுக்கு அப்ளை பண்ணிருக்காங்களாம்… அப்ளை பண்ணுன டாக்குமெண்ட் எதுவும் அவரோட மொபைல்ல உள்ள மெயிலுக்கு ஃபார்வேர்ட் ஆகல” என்று ஸ்ராவணியிடம் அந்த ஆடியோவை போட்டுக் காட்டினாள் யசோதரா.

அதில் சர்வருத்ரானந்தா தான் பேசிக் கொண்டிருந்தார்.

“கட்டி முடிச்சதும் அப்ரூவல் வாங்குறது ஒன்னும் சிரமம் இல்ல… லாஸ்ட் டைம் வாலண்டியர்சுக்கான ரெசிடென்சி கட்டுறப்ப நம்ம அப்பிடி தானே அப்ரூவல் வாங்குனோம்… போன தடவை மாதிரி இந்தத் தடவையும் அடம்பிடிச்சாங்கனா கவர்மெண்ட் கிட்ட ஸ்பெஷல் அப்ரூவல் வாங்குவோம்… அரசாங்கம் நம்ம பக்கம் இருக்குறப்ப நம்ம ஏன் டென்சன் ஆகணும்? சொன்ன தேதில கோயிலைத் திறக்குறோம்… அதுல ஒரு மாற்றமும் இல்ல குருஜி”

அத்தோடு ஆடியோ முடிவடைந்தது. ஸ்ராவணி அதை கேட்டு முடித்தவள் அரசாங்கம் இம்முறையும் உதவும் என்ற உண்மையறிந்தவளாய் யோசனையில் ஆழ்ந்தாள்.

மேனகாவோ “இன்னும் என்னென்ன டீடெய்ல்ஸ் வேணும் யசோ? ஜித்து, ரகு, சாரு மூனு பேரும் அங்க போய் ரொம்ப நாளாகுது” என்று நண்பனைக் குறித்து கவலைப்பட்டாள்.

“டாக்ஸ் எவேசன், அன்-ஆதரைஸ்ட் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் பத்தி டாக்குமெண்ட்ரி எவிடென்ஸ் வேணும்… அதுவும் ரீசண்ட் எவிடென்ஸ் வேணும்… அது மட்டும் கிடைச்சிட்டா அவங்க மூனு பேரும் வேலைய முடிச்சிட்டுக் கிளம்பிடுவாங்க” என்றாள் யசோதரா.

கூடவே “இன்னைக்கு எதாச்சும் நியூ டீடெய்ஸ் டெர்மினல்ல ரிசீவ் ஆகிருக்கானு போய் செக் பண்ணணும்” என்று அவள் கூறவும் அனுராதா அவளது கேபினுக்குள் வரவும் சரியாக இருந்தது.

“சீஃப் உங்க மூனு பேரையும் கான்பரன்ஸ் ஹாலுக்கு வரச் சொல்லுறார் வனி… சீக்ரேட் மீட்டிங்காம்… அதான் மொபைல்ல கூப்பிடல… சீக்கிரமா வந்துடுங்க” என்று கூறவும் மூவரணி கான்பரன்ஸ் ஹாலுக்குச் செல்ல கிளம்பியது.

அங்கே விஷ்ணுபிரகாஷ் கூறிய செய்தியானது ஸ்ராவணியைத் தான் சோர்வடைய வைத்தது. முக்தி பவுண்டேசனின் கோயில் திறப்புவிழாவுக்கு முதலமைச்சர் செல்லக்கூடாதென உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட பொதுநல வழக்கில் தமிழ்நாடு அரசு தங்கள் தரப்பு வாதத்தை வைத்த விதத்தில் அனைவருக்கும் அதிருப்தி என்று கூறியவன் முதலமைச்சர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்வதை தடுக்க முடியாதென நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டதையும் சொல்லிவிட்டான்.

அங்கிருந்தவர்களின் மனதில் அடுத்த கேள்வி உதயமானது. தாங்கள் இவ்வளவு முயற்சி செய்து முக்திக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டி செய்தி வெளியிட்டால் அதை அரசாங்கம் தடை செய்யாது என்பதற்கு என்ன உத்திரவாதம் என்பது தான் கேள்வி!

அத்துணை ஆதாரங்கள் இருந்தாலும் அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதால் தான் இத்தனை நாட்கள் முக்தி ஃபவுண்டேசன் செய்த சில முறைகேடுகள் வெளியே வராமல் இருந்திருக்கும் என்ற ஐயமும் அவர்களுக்குள் உதயமானது.

சொல்லப் போனால் விஷ்ணுபிரகாஷிற்கும் அதே ஐயம் தான்! இருப்பினும் அரசாங்கத்தின் சமீபத்திய மக்கள் நலப்போக்கு கொடுத்த நம்பிக்கையில் தங்களது இந்த ஸ்டிங்க் ஆபரேஷனைத் தொடர்வோம் என்று அவனது குழுவினருக்கு தைரியம் கூறினான் அவன்.

வேலை பற்றிய கலந்துரையாடலில் அன்றைய பொழுது கழிந்துவிட மாலையில் வீட்டிற்கு கிளம்பும் நேரம் பீச் ஹவுஸிற்கு செல்ல முடிவெடுத்த யசோதரா ஹேமலதாவிடம் சர்மிஷ்டாவைக் கவனித்துக் கொள்ளுமாறு மொபைலில் கூறிவிட்டாள்.

அவள் அலுவலக தரிப்பிடத்திலிருந்து காரைக் கிளப்பும் போதே வானம் கருமேகங்களை உடுத்தி மின்னல் பூக்களைச் சூடிக் கொண்டது. பின் பாட்டு போல இடி முழக்கம் எழ “ப்ச்… இந்த நேரத்துலயா மழை பெய்யணும்?” என்று சலித்தபடி காரைச் செலுத்தினாள்.

அவள் பீச் ஹவுசை அடையும் முன்னர் மழை வலுபெற்றுவிட்டது. அவளது கெட்டநேரமோ என்னவோ கார் பீச் ஹவுசினுள் நுழைந்து கேட்டினை கடந்து தரிப்பிடத்திற்கு செல்லும் முன்னர் குலுக்கலுடன் நின்று கொண்டது.

அவள் சாவியைத் திருகி திருகி சோர்வுற்ற போதே மூளையில் இந்திரஜித்தின் குரல் வந்து சென்றது.

“பீச் ஹவுஸ்ல எதுவும் பிசாசு இருக்குமா அண்ணி? என்னோட கார் இதோட டூ டைம்ஸ் உள்ள போற நேரத்துல ரிப்பேர் ஆயிடுச்சு”

யசோதராவின் மனமோ இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத அந்தப் பிசாசினைக் கரித்துக் கொட்டத் துவங்கியது. காரோ கிளம்புவேனா என்று அடம்பிடித்தது.

“ப்ளீஸ் ப்ளீஸ் பெருமாளே! காரை ஸ்டார்ட் பண்ண வச்சிடுங்க”

சில நிமிடங்களுக்குப் பின்னர் அவளின் வேண்டுதலுக்கு அடைமழையிலும் கடவுள் செவி சாய்த்து விட்டதன் விளைவு கார் உறுமலுடன் ஸ்டார்ட் ஆனது.

“தேங்க்யூ பெருமாளே!” வானை நோக்கி நன்றி கூறிவிட்டுக் காரைத் தரிப்பிடம் நோக்கி செலுத்தினாள்.

மழையின் வேகம் குறையாத சலிப்பு, இவ்வளவு நேரம் அவளது கார் காட்டிய குறளி வித்தையால் அங்கே இன்னும் இரண்டு கார்கள் சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை.

உடை நனைவதற்குள் வேகமாக காரிடாருக்குள் நுழைய முயன்றவளின் முயற்சி தவிடுபொடியாகி வருணபகவானின் ஆசியால் இரண்டாம் முறை குளித்துவிட்டாள் யசோதரா.

தனது கோல்ட் ஷோல்டர் டியூனிக் டாப்பினை உதறியபடி விறுவிறுவென உள்ளே நுழைந்தவள் பணியாளர்கள் இன்னும் வீட்டிற்கு செல்லவில்லை போல என்று எண்ணிக்கொண்டவளாய் இந்திரஜித்தின் ஹேக்கிங் அறையின் பக்கம் திரும்பினாள்.

அப்போது “நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுற யசோ?” என்று சித்தார்த்தின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு அங்கேயே நின்றுவிட்டாள்.

இவன் இங்கே என்ன செய்கிறான்? காலடி வெகு சமீபத்தில் கேட்கவும் மழையின் குளிரையும் தாண்டி உள்ளுக்குள் பரபரப்பு இழையோடியது அவளுக்கு.

“ஏன் இப்பிடி மழைல நனைஞ்சிருக்க?” என்றபடி அவனது கரம் கோல்ட் ஷோல்டர் டியூனிக் டாப்பின் சிறிய வட்டத்தின் வழியே தெரிந்த அவளது தோளின் மீது படியவும் கரத்தின் வெம்மை அவளுள் பரவுவதை உணர்ந்தபடி திரும்பினாள் யசோதரா.

அவனிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று சடுதியாக யோசித்து முடித்துவிட்டு “காரை பார்க் பண்ணிட்டு வர்றப்ப மழைல நனைஞ்சிட்டேன்” என்றாள்.

“குடை வச்சிக்கக் கூடாதா?” அக்கறையில் குளித்த அந்தக் கேள்வியில் யசோதராவின் மனம் குளிர்ந்தது என்னவோ உண்மை! ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாதவளாய்

“இன்னைக்கு ரெயின் வரும்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?” என்று நொடித்துக் கொண்டாள்.

“நீ நியூஸ் சேனல்ல ஒர்க் பண்ணுறனு வெளிய யார் கிட்டவும் சொல்லாத, சிரிக்கப் போறாங்க… ரிப்போர்ட்டரா ஒர்க் பண்ணிட்டு வெதர் ரிப்போர்ட்டை கவனிக்காம விட்டிருக்கியே… அதை விடு, இந்நேரத்துல உனக்கு இங்க என்ன வேலை?”

கிண்டலடித்தாலும் வெகு கவனமாய் முதல் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தான் சித்தார்த்.

“ஏன் நான் இங்க வரக்கூடாதா? எனக்கு இங்க வர்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு… இன்னும் நான் மிசஸ் சித்தார்த் தான்” என்று வேகமாக பதில் அவளிடமிருந்து வரவே அதில் திருப்தியுற்றான்.

இருந்தாலும் அப்படியே விட மனமின்றி “மிசஸ் சித்தார்த்னு சொல்லுறப்ப புல்லரிச்சாலும் நீ காரணம் இல்லாம எங்கயும் வரமாட்டியேனு யோசிக்கிறப்ப லைட்டா டவுட் வருது” என்று கூறிவிட்டு அவளைக் கூர்மையாக பார்த்து வைத்தான்.

யசோதரா பதிலளிக்கத் தடுமாறவும் அவளைச் சங்கடப்படுத்த விரும்பாமல் உடை மாற்றுமாறு கூற “எனக்குத் தெரியும்டா… அந்த ரூம்ல தான் என்னோட டிரஸ் இருக்கு… நான் சேஞ்ச் பண்ணணும்னா நீ கொஞ்சம் வழி விடணும்” என்றாள் அவள்.

சித்தார்த் நகர்ந்து வழி விடவும் வழக்கமாக அவள் வந்தால் தங்கும் அறைக்குள் நுழைந்தாள் யசோதரா. உடைமாற்றி விட்டு வெளியே வந்தவள் சித்தார்த் அங்கே இல்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு இந்திரஜித்தின் ஹேக்கிங் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் டெர்மினலில் அன்று வந்து சேர்ந்த தகவல்களைத் தனது பென்ட்ரைவில் சேகரித்தவள் வழக்கம் போல பதிவான ஆடியோக்களைக் கேட்கத் துவங்கினாள்.

அதில் ருத்ராஜி பேசிய வார்த்தைகள் அவளுக்குள் பரபரப்பை உண்டாக்கிவிட்டது. அதைக் கேட்டு முடித்தவள் உடனே அழைத்தது சாருலதாவைத் தான்.

அவளிடம் ஆடியோவின் சாராம்சத்தை ஒப்பித்தவள் “இன்னைக்கு நைட் விட்டுட்டா நம்மளால அந்த டாக்குமெண்டை திரும்ப தேடவே முடியாது… டுமாரோ அதை லீகல் அட்வைசர் கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணணும்னு ருத்ராஜி பேசிருக்கார் சாரு… இன்னைக்கு நைட்குள்ள அந்த டாக்குமெண்டோட இமேஜ் வேணும்… டூ சம்திங்” என்று பரபரப்புடன் பேச சாருலதாவும் அவள் கேட்ட ஆவணத்தை யாருமறியாது படம் பிடிக்க ஒப்புக்கொண்டாள்.

அவளிடம் பேசிவிட்டு மொபைலை த்ரீ போர்த் ஷார்ட்சின் பாக்கெட்டுக்குள் வைத்தவள் டெர்மினலின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வெளியேறினாள்.

மனம் பரபரப்பின் உச்சத்தில் இருக்க மழை நின்றிருக்கும் என்ற எண்ணத்துடன் ஹாலுக்கு வந்தவள் அங்கே சித்தார்த்துடன் அரட்டை அடித்து கொண்டிருந்த மாதவனைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்தாள்.

“ரிப்போர்ட்டர் மேடம் வெளிய மழை கொட்டி தீர்க்குது…. இப்போ ஏன் அவசரமா கிளம்புறீங்க? மழை நின்னதுக்கு அப்புறம் கிளம்பலாம்”

அக்கறையோடு குறும்புத்தனம் மிளிர அவன் கூறிய விதத்தில் சித்தார்த் நகைக்க யசோதரா அவனை முறைத்தாள்.

“இப்போ எதுக்கு சிரிக்கிற? உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லயா? ஆ ஊனா இங்க வந்து டேரா போட்டுடிறீங்க… இப்போ எதுக்கு இங்க வந்திருக்கீங்க?”

“வேற ஒன்னுமில்ல… என் பொண்டாட்டி எனக்கு டிவோர்ஸ் குடுக்குறேன்னு சொல்லிட்டா… சோகம் தாங்காம புண்பட்ட மனசை பீர் குடிச்சு ஆத்துவோம்னு இங்க வந்தேன்”

கேலியாகப் பேசிய சித்தார்த் மட்டும் அப்போது தனியே சிக்கியிருந்தான் என்றால் யசோதராவின் கோபத்தீக்கு ஆளாகியிருப்பான். ஆனால் மாதவனும் உடன் இருந்ததால் தப்பித்துவிட்டான்.

“நீ சோகத்துல தண்ணி அடிக்க வந்த.. ஓகே… டைரக்டர் சார் எதுக்கு வந்திருக்கார்?”

“என்னைச் சோகத்துல தவிக்க விட்டுட்டு ஒதுங்கிப் போக அவன் ஒன்னும் என் பொண்டாட்டி இல்லயே.. நண்பனாச்சே, அதான் எனக்குக் கம்பெனி குடுக்க வந்திருக்கான்”

மாதவனை முந்திக்கொண்டு அமர்த்தலாக மொழிந்தவனைப் பார்த்து “ரிடிகுலஸ்” என்று கறுவி விட்டு வெளியேற முயன்றாள் யசோதரா.

ஆனால் சித்தார்த்தோ வழியை மறித்தவன் “மழை நின்னதுக்கு அப்புறம் போகலாம்… உனக்கு நனைஞ்சா ஒத்துக்காதுல்ல” என்று தீவிரக்குரலில் கூற வேறு வழியின்றி மழை நிற்கும் வரை காத்திருக்கத் தீர்மானித்தாள்.

குளிரின் தீவிரத்தால் சூடாய் காபி குடித்தால் தேவலை என்று மனசாட்சி கூக்குரலிட அங்கிருந்த சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் அங்கே சென்ற அடுத்த சில நிமிடங்களில் மாதவனை அங்கிருந்து கிளப்பினான் சித்தார்த்.

“டேய் கிராதகா, மழை பெய்யுதுடா… கொட்டுற மழைல நனைஞ்சிட்டுப் போனா எனக்கு கோல்ட் பிடிச்சிக்கும், ஃபீவர் வந்துடும்.. இது எல்லாத்துக்கும் மேல மய்யூ என்னை ஒரு வழியாக்கிடுவா… ப்ளீஸ்டா, மழை நின்னதும் போறேனே”

“நீ என்ன நடந்தா போக போற? கார் தானே உன்னை சுமக்கப் போகுது… இங்க இருந்து பார்க்கிங்குக்குப் போறப்ப லைட்டா மழைல நனைஞ்சா நீ ஒன்னும் செடி மாதிரி முளைச்சிட மாட்ட… ரெயின் இஸ் த கிப்ட் ஆஃப் காட்… கோ எண்ட் என்ஜாய்” என்று விரட்டாதக்குறையாக அவனை கிளப்பினான் சித்தார்த்.

மாதவனோ அவனைப் பொய்யாய் முறைத்தவன் “நல்லா இருக்குடா உன் நியாயம்.. உன் சம்சாரம் மட்டும் என்ன நடந்தா போகப் போகுது? அந்தம்மாவும் கார் வச்சிருக்குல்ல… கேவலமா சாக்குப்போக்கு சொல்லாத… நானே கிளம்புறேன்” என்று புலம்பியபடி கிளம்பினான்.

அவன் சென்றதும் சித்தார்த் புன்சிரிப்புடன் திரும்பியபோது அவர்கள் மூவருக்கும் காபி போட்டு எடுத்து வந்த யசோதரா மாதவனைத் தேடியபடி நின்றிருந்தாள்.

மழை வரும்☔☔☔