உன்னுள் வசமானேன் …
⚠️ Copyright ©️ 2019 - 2026 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, without express written permission of the admin and the authors.
- legal team, ezhilanbunovels.com
அத்தியாயம் -6
தனீஷை இன்னொரு பெண்ணுடன் சேர்த்து பார்க்கவே சார்வியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவனுடன் இருந்த பெண்ணின் கழுத்தை நெறிக்க கைகள் துறுதுறுத்தது. இருவரும் வண்டியில் அமர்ந்ததும் உடனே கிளம்பாமல் ரொமான்ஸ் பார்வை பார்ப்பதும், பேசுவதும் சார்வியின் அடிவயிற்றில் குமுட்டி அடுப்பை மூட்டியது.
“ஹேய் சாரு…சாரு…என்னடி தீவிரமா யோசிச்சிட்டு இருக்கே, சீக்கிரம் கிளம்பு…”
நிதன்யாவின் உலுக்கலில் தன்னிலைக்கு வந்தவள்,”எங்கே போகணும்…”என்றாள் புரியாமல்.
“சரியா போச்சு விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பானான்னு கேட்கிறா பார். அடியேய் என்னை பார்க்க வந்த மாப்பிள்ளை க்ராண்ட் சோலாவில் காத்திருக்கான். அவனை போய் பார்க்கணும். சீக்கிரம் வண்டியை எடு…”
சாருவின் விழிகள் தனீஷின் வண்டியை நோக்க, அது பறந்துவிட்டிருந்தது. உள்ளுக்குள் சலித்தபடி வண்டியை உசுப்பி மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்து போக்குவரத்தில் கலந்தாள். விழிகள் தான் சாலையில் பதிந்திருந்தே ஒழிய மனம் தனீஷையே தான் சுற்றி சுற்றி வந்தது.
“ஹேய் வண்டியை அனு வீட்டில் நிறுத்து, சோலா ஹோட்டல் போற வழி தானே…”என சாருவின் விழிகள் கேள்வியாக தோழியை நோக்கியது.
“ப்ச் கொஞ்சம் டச் அப் செய்துக்கணும்டி. சரி சரி நல்லா தான் இருக்கு, ஆனாலும் கொஞ்சம் டச் அப் செய்யறதில் என்ன பிரச்சினை. அதுக்கென்ன இப்படி முறைக்கிறே…”என்றாள் முனகலாக.
“ஹேய் பாவம்டி நீது, ஹோட்டலுக்கு போற வழி தானே என் வீடு. ஒரு கோட்டிங் மேக்கப் ஏத்திக்கட்டும், அப்படியே இந்த ட்ரெஸ்ஸையும் மாத்திக்கட்டும். இவளை பார்த்ததும் மாப்பிள்ளை அப்படியே பிளாட் ஆயிடனும்…” என்று அனுஷா சிரிக்கவும் நீதுவுக்கு முதல் முறையாக வெட்கம் வர அனுஷாவின் சிரிப்பு மேலும் அதிகமாகியது.
ஆனால் ஏனோ சாருவுக்கு தோழிகளின் பேச்சு காதில் ஏறவேயில்லை. சேனை கட்டிய குதிரை மாதிரி அனுஷா வீட்டில் வண்டி நின்றதும் இரு பெண்களும் இறங்கினார்கள்.
“வண்டியை பார்க் பண்ணிட்டு உள்ளே வாடி…”என்றவள் நீதுவை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, சாருவோ ஆயாசத்ததுடன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடினாள் தனீஷின் நினைவில்.
முதன் முதலில் தனீஷை கலாட்டா செய்யும் பொழுது அவளுள் எவ்வித எண்ணமும் இல்லை. அவன் அழகில், ஸ்டைலில் அயர்ந்து போனாலும் தன்னை யாராலும் கவிழ்த்துவிட முடியாது என்ற திமிரும் கர்வமும் நிறையவே அவளுள் இருந்தது. இருந்தும் அவனிடம் பேச வேண்டும் என்று தோன்ற போய் தான் வேண்டுமென்றே அவனை வம்பிக்கிழுத்தாள்.
WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.
ஆனால் அவனோ அவளை இகழ்ச்சியாக பேசி அவமானப்படுத்தவும் உள்ளுக்குள் கோப புயல் மய்யம் கொள்ள ஆரம்பித்தது. தனீஷ் அவர்களை முறைத்துவிட்டு அங்கிருந்து செல்லவும் சார்வியால் அந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவனுக்கு தான் யாரென்று தெரியவைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் தான் அதிகமானது. ஆனால் அவனின் வீட்டுக்கு சென்று அவனுக்கொரு காதலி இருக்கிறாள் என்ற தெரிந்தபிறகு பழிவாங்கும் எண்ணம் போய் அவளறியாத ஏதோ ஒரு உணர்வு உட்புகுந்து அவளை ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது.
அதற்கு பெயரிட தான் தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். தனீஷுடன் வேறொரு பெண்ணை சேர்த்து வைத்து பார்க்க மட்டும் விழிகள் விரும்பவில்லை.
“சார்வி …” என்றழைத்து யாரோ தன்னை தொடவும் சட்டென்று விழிகளை மலர்த்தினாள்.
“என்னம்மா காரிலே உட்கார்ந்துட்டே, உள்ளே வந்து ஜூஸ் குடிச்சிட்டு போ …” என்றழைத்தார் அனுஷாவின் தாய் வினிதா.
“இல்லை ஆன்ட்டி, இன்னொரு நாள் வர்றேன். நீதுவையும், அனுவையும் வரச்சொல்லுங்க ஆன்ட்டி…”
“ஒகேம்மா…”என்று உள்ளே செல்ல மீண்டும் சலிப்புடன் விழிகளை மூடிக்கொண்டாள்.
‘ஹேய் யாருடா நீ, எவ்வளவு சந்தோஷமா இருந்தேன். கவலை, அலுப்பு, சலிப்பு என்ற உணர்வுகளுக்கு அர்த்தம் தெரியாமல் சிட்டுக்குருவி போல ஜாலியா சுற்றிதிரிஞ்ச என்னை இப்படி எதிலும் பற்றில்லாமல் செய்துட்டே. என் வாழ்க்கையில் எத்தனை ஆண்களை சந்திச்சிருப்பேன். எத்தனை பேர் என்னை துரத்தி துரத்தி காதலை சொல்லியிருப்பாங்க, எத்தனை பேர் ஜொள்ளுவடிய பேசியிருப்பாங்க. சில பேர் நாசூக்காக ப்ரொபோஸ் செய்திருப்பாங்க. எல்லாவற்றையும் அலட்சியம் செய்து கடந்துபோன என்னால் உன்னை அப்படி சுலபமாக கடந்து போக முடியலையே.
இத்தனைக்கும் நீ ஒரு இன்ச் கூட புன்னகையை கொடுக்கலை, என்னை பார்த்தாலே உன் கோபமும், வெறுப்பும் தங்கத்தின் விலை போல ஜிவ்வென்று ஏறுது. என்னை ஒரு பெண்ணாக, அவ்வளவு ஏன் ஒரு மனுஷியாக கூட மதிக்கலை. ஆனாலும் நான் உன்னை நினைத்து ஏங்கறேன். உன் அருகாமைக்கு தவிக்கிறேன். நீ எனக்கு சொந்தமாகணும்ன்னு துடிக்கிறேன். ஐயோ இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் …’
“சாரு …சாரு …சார்வி …”
பலமாக உலுக்கப்பட உறக்கத்திலிருந்து விழிப்பவள் போல எழுந்தாள்.
“ஹேய் என்னடி ஆச்சு, உள்ளே வரசொன்னதற்கும் வரலை, காரிலே உட்கார்ந்துக்கிட்டு கும்பகர்ணி போல தூங்கறே. ஆர் யூ ஆல்ரைட்…”
அதற்குள் தன்னை சுதாரித்துக்கொண்டவள்,”நத்திங், போகலாமா…”என்றபடி வண்டியை உயிர்ப்பித்து க்ராண்ட் சோலாவை நோக்கி செலுத்தினாள்.
வழக்கம் போல தனீஷ் நினைவில் சார்வி அமிழ்ந்துவிட மற்ற இருவரும் பேசி சிரித்தாலும் அவ்வப்பொழுது இவளுக்கு என்னானது என்று பார்வையில் விசாரித்துக்கொண்டார்கள். போக்குவரத்தில் நீந்தி ஒருவழியாக நீது சொன்ன ஹோட்டலை அடைந்து வண்டியை நிறுத்தினாள். இரு பெண்களும் வண்டியிலிருந்து இறங்க சார்வி மட்டும் இறங்கவில்லை.
“நீங்க போயிட்டு வாங்க, நான் வண்டியிலே வெயிட் பண்றேன்…”என்ற சாருவை இருவருமே ஏக காலத்தில் முறைத்தார்கள்.
“உனக்கு என்னடி ஆச்சு, ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததிலிருந்து நீ சரியே இல்லை. சரி அதை பற்றி அப்புறம் பேசலாம். ஒழுங்கு மரியாதையா வாலெட்டிடம் கீயை கொடுத்துட்டு உள்ளே வா…”
“ப்ச் நீது அவள் டாடி ஏற்பாடு செய்த மாப்பிள்ளையை பார்க்க வந்திருக்கா. நாம எதுக்கு இந்த நேரத்தில் இடைஞ்சலா. அவள் போயிட்டு வரட்டும். நீயும் இங்கேயே இரு …”என அனு முறைக்க, நீதா அவளை பார்வையாலே அளந்தாள்.
“இல்லையே உன்னிடம் ஏதோ சரியில்லை. இதுவே பழைய சார்வியா இருந்திருந்தால் இந்நேரத்திற்கு என்னை பார்க்க வந்திருப்பவனை ஒரு வழி செய்திருப்பே. போதத்திற்கு அவனை நேரில் வந்து கலாய்த்தே ஓட விட்டிருப்பே. சம்திங் பிஷி. அனு இவ சரியில்லை. இந்த வேலையை முடிச்சிட்டு இவளுக்கு வேப்பிலை அடிக்க வேண்டியது தான். அனு வண்டியிலிருந்து சாவியை எடுத்து வாலெட்டிடம் கொடு. அப்புறம் அவளே இறங்கிடுவா …”
“நீது சொல்ற மாதிரி நீ சரியில்லை தான் சார்வி. அதை அப்புறம் பேசலாம். நீ சொன்னபடியே நீது அவனை பார்க்க போகட்டும். நாம ஜஸ்ட் ஒரு கப்பசினோ குடிக்கலாம் வா. கெட் டௌன் சாரு …”
இரு தோழிகளும் வற்புறுத்த விருப்பமே இல்லாமல் வண்டியை விட்டிறங்க, எங்கிருந்தோ முளைத்த மாதிரி வந்த வாலெட்டிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு மூவரும் உள்ளே சென்றார்கள். நீதுவின் பார்வை தன்னை பார்க்க வந்தவன் யாரென்று அலச, அவளை நோக்கி ஒரு டிப்டாப் இளைஞன் வரவும், நீதுவின் பார்வை மற்ற இருவரையும் தடவியது.
“ஹாய் நிதன்யா, ஐ ம் ஆரித்…”என்று சுவாதீனமாக கையை நீட்ட, நிதன்யாவும் சினேக புன்னகையுடன் கையை பற்றி குலுக்கினாள்.
அவனின் விழிகள் மற்ற பெண்களை நோக்கி கேள்வியாக பாய,”தே ஆர் மை ப்ரெண்ட்ஸ். சார்வி அண்ட் அனுஷா…”என்று அறிமுகப்படுத்த இருவருக்கும் கைகொடுத்தான்.
“ஓகே கைஸ், நீங்க பேசுங்க, நாங்க இதோ வர்றோம் …”என்று சார்வி நாசூக்காக அனுஷாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர, நீதுவுக்கே ஜெர்க் ஆனது சார்வியின் நடவடிக்கையில்.
அவளுடைய வாழ்க்கையில் நாசூக்கு என்ற வார்த்தைக்கே இடமில்லை. எல்லோரையும் சங்கடப்படுத்தி, அழ வைத்து, ஓடவிட்டே பழக்கமுடையவள் இன்று அமைதியின் சிகரமாக கையை குலுக்கியதோடு நில்லாமல் பேசுவதற்கு இடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி செல்கிறாளே …’
“மிஸ் நிதன்யா, என்னாச்சு உங்க தோழிகளையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க, வாங்க நம்ம டேபிளுக்கு போகலாம்….”என சிறு புன்னகையுடன் அவனுடன் சென்றாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
@@@
ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து மெனு கார்டை பார்க்காமலே பேரரரை அழைத்து இரண்டு ஹேசல்நட் காஃபி சொல்லிவிட்டு மௌனமாக கைபேசியில் பார்வையை புதைத்துக்கொண்ட தோழியை வினோதமாக நோக்கினாள் மற்றவள்.
போனில் தலையை புதைந்திருந்தவள் அனுஷாவின் பார்வை தன்னை குத்தவும் அலுப்புடன் நிமிர்ந்தாள்.
“வாட் ….!
“இங்கே என்ன நடக்குது, நீ என்னவோ நீது அவ வேலையை பார்க்கட்டும்ன்னு சொல்றே. போதத்திற்கு நீதுவை ஆரித்துடன் பேச ஸ்பேஸ் தர்றே. இதெல்லாம் உன் சுபாவமே இல்லையே. சம்திங் ராங். உண்மையை சொல்லு. என்னாச்சு உனக்கு…?
அனுஷா பேச பேச சார்விக்கே தான் மாறிட்டோமோ என்ற எண்ணம் எழ அதை தலையில் தட்டி அடக்கியவள், அப்படியே தோழியையும் வார்த்தையால் அடக்க முற்பட்டாள்.
“என்ன உளர்றே, ஒரு மனுஷி எப்பொழுதுமே ஒரே மாதிரி இருக்க முடியுமா, நாட் ஒன்லி தட் நீத்துவோட டாட் ஏற்பாடு செய்த விஷயம் இது, இதில் நம்ம கைவரிசையை காட்டினால் அவ்வளவு தான். அவருக்கு கோபம் வந்து நீதுவை நம்மிடம் பேச வேண்டாமென்று சொல்லிட்டா என்ன செய்யறது…”
ஒருவாறு திக்கி திணறி தன் மனதை மறைத்து கோர்வையாய் பொய் பேச அனுஷாவின் பார்வையோ கூறுபோட்டது.
தலையை சரித்து, “நம்பற மாதிரி இல்லையே, உன்னிடம் ஏதோ சரியில்லை. பார்க்கலாம் எவ்வளவு நாள் பூசணிக்காயை சோற்றிலே மறைக்கிறேன்னு. நீது வரட்டும் அப்புறம் வைச்சிக்கிறேன்…”
“ம்ம்ம் வைச்சிக்கோ …வைச்சிக்கோ. பெரிசா கண்டுபிடிச்சிட்டா ஷெர்லோக் ஹோம்ஸ்ன்னு நினைப்பு…”என்று முனக, அது தெளிவாகவே அனுஷாவின் காதில் விழுந்தது.
அவர்கள் ஆர்டர் செய்த காஃபியும் வர, அனுஷா தோழியின் மாற்றத்தை நினைத்தபடி பருக ஆரம்பித்தாள். சார்வியோ தனீஷின் நினைவில் கரைந்தபடி பருகிக்கொண்டிருந்தவளுக்கு ஹோட்டலின் உள்ளே வந்துக்கொண்டிருந்த தனீஷை கண்டதும் விழிகள் பளிச்சிட்டது. ஆனால் அடுத்த நொடியே அவளின் முகம் இறுகியது அவன் விரல்கள் காதலியின் விரல்களோடு பிணைத்திருப்பதை கண்டு.
“சா….”என்று அழைக்க முற்பட்டவள் அவளின் முகம் இறுகி அதில் கோபம் தாண்டமாடுவதை கண்டு புரியாமல் சார்வியின் பார்வையை தொடர தனீஷை கண்டு திடுக்கிட்டாள் அனுஷா.
‘ஹையோ இவன் எங்கே இங்கே வந்தான், இவனை கண்டாலே இவள் குணம் மாறுகிறாள். இதில் இவனை இங்கே பார்த்தால் மீண்டும் வம்புக்கு போய்விட போகிறாள். இனி சார்வி இங்கிருப்பது நல்லதல்ல என்று எண்ணியவளாக காஃபியை வேகமாக குடித்துவிட்டு எழுந்தாள்.
“சாரு லெட்ஸ் மூவ், நீது பேசிட்டு வரட்டும்…” என்று தோழியின் கையை பிடிக்க, அவளோ அனுவை இழுத்து அமர வைத்தாள்.
“சிட்டௌன் அனு, வெளியில் வெயிட் பண்றதுக்கு இங்கேயே உட்கார்ந்திருக்கலாம்…”
“ஆனால் சாரு …”என்றவள் விழிகள் தனீஷிடம் அவசரமாக பாய்ந்துவிட்டு தோழியிடம் தாவ, அவளோ நிதானமாக சிரித்தாள்.
“என்ன டாக்டரை இங்கே பார்த்ததும் அவரை கலாய்க்க ஆரம்பிச்சிடுவேன்னு பயமா, டோன்ட் பீ சில்லி. சரி அதை விடு நம்ம செட்டில் ஷெர்லி, இப்போ நீது இரண்டு பேருக்கும் திருமணம் ஏற்பாடு நடக்குது. எனக்கும் கூட டாட் திருமணத்தை பற்றி பேச ஆரம்பிச்சுட்டார். உனக்கு எப்போ…?
“ப்ச் இப்போதைக்கு இல்லை. அக்காவுக்கு அலையன்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க, அவங்களுக்கு முடிஞ்சதும் அப்புறம் எனக்கு தான். மினிமம் ஆறுமாசம் நான் சுதந்திர பறவை…”
“ஹ்ம்ம், இனிமே நீது கூட ஷெர்லி மாதிரி நம்முடன் சேர்ந்து சுத்த மாட்டான்னு தோணுது. இனி நீயும் நானும் தான். ப்ச் இவங்க இரண்டு பேரும் இல்லாமல் போரடிக்கும்…”
தோழி பேச பேச ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு ஏதோ நெருடியது. ஹாஸ்பிடலில் தனீஷை சீண்டிவிட்டு வெளியே வந்து காரில் அமர்ந்ததிலிருந்து தனீஷ் ஹோட்டலின் உள்ளே வரும் வரை சார்வி பேசவே இல்லை, முகத்திலும் யோசனை ரேகைகள். சிரிப்பே தொலைந்து போன மாதிரி ஒரு தோற்றம். ஆனால் இப்போ பழையபடி வளவளவென்று பேசறாள். சிரிக்கிறாள். ஆனால் பழைய அடாவடித்தனமோ, ஆட்டிட்யூடு இல்லை. என்ன ஆச்சு இவளுக்கு? ஒரு வேளை நீது சந்தேகப்பட்டபடி தானோ… சிந்தித்தபடி தோழியின் முகத்தை ஆராய, அவளோ புன்னகை மன்னியாய் செல்பீ எடுத்துக்கொண்டிருந்தாள் விதவிதமாய்.
“ஹேய் அனு, என்ன என்னையே குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்கே, கம் லெட்ஸ் டேக் செல்பீ…”என்றவள் தோழியை நெருங்கி நாக்கை துருத்தியபடி கிளிக் செய்ய, நீது அவர்களை நோக்கி வந்தாள்.
நீதுவை கண்டதும் அதுவரை சார்வியை பற்றி எழுந்த கேள்விகள், சந்தேகங்கள் ஆகியவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு அவளை ஆர்வமாக வரவேற்றாள்.
“ஹேய் வா, வா வந்து உட்கார். உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா, மாப்பிள்ளைக்கு உன்னை பிடிச்சிருக்கா…”
ஆர்வத்தில் படபடத்த அனுஷாவை அடக்கினாள் சார்வி.
“ஹேய் அவ முகத்தை பார்த்தாலே தெரியலையா இரண்டு பேருக்குமே செட் ஆயிடிச்சின்னு. முகம் வெட்கத்தில் சிவந்திருக்கு , மேடம் சந்தோஷத்தில் தத்தளிச்சிட்டிருக்காங்க. நீ கேனத்தனமா கேள்விகேட்டுட்டிருக்கே…”என அனுஷா ஆச்சர்யமாக நோக்க, நீதுவோ வெட்கத்தில் நெளிந்தாள்.
“வெயிட்…வெயிட்…உனக்கெப்படி தெரிஞ்சது நீதுவுக்கு இந்த மாப்பிள்ளை ஓகேன்னு. அந்தளவு மனுஷங்க மனசை புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டியோ…”
“சந்தேகம் இருந்தால் நீயே கேட்டுக்கோ…”என்று ஸ்டைலாக தோள்களை குலுக்கியவள், “ஓகே கிளம்பலாமா…” என்று எழ மற்ற இரு பெண்களும் எழுந்தனர்.
சில அடி நடந்தபிறகு ஏதோ தோன்ற அனுஷாவின் விழிகள் தனீஷ் அமர்ந்திருந்த டேபிள் நோக்கி தாவியது. அந்த இடம் காலியாக இருக்கவும் அனுவுக்கே தூக்கிவாரிப்போட்டது புரிந்த விஷயம்.
