உன்னுள் வசமானேன்….
⚠️ Copyright ©️ 2019 - 2026 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, without express written permission of the admin and the authors.
- legal team, ezhilanbunovels.com
அத்தியாயம் -20
சார்வி பார்க்க ஆசைப்பட்ட கோவில் வந்ததும் ஒவ்வொரு சிற்பங்களையும் ரசித்து பார்த்தாள். கஜுராஹோ கோவில் சிற்பங்கள் என்றாலே ஆபாசமாக இருக்கும், பார்க்க கண் கூசும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் அப்படியெதுவும் தெரியவில்லை. எல்லாமே கலைநயம் மிக்க சிற்பங்களாக தான் இருந்தது.
“எப்படி கண்ணா இருக்கு கோவில் …”
“செம கிளாசிக் டாட், இந்த கோவிலை இடிக்க எப்படி தான் மொஹலாயர்களுக்கு மனசு வந்ததோ…”
“அதான் மனுஷ மனங்களின் சிக்கல், தன்னிடம் இல்லாத ஒன்று அடுத்தவர்களிடம் இருக்கக்கூடாதென்ற சுயநலம் தான் அழிவுக்கே காரணம். இத்தனைக்கும் இது உலக அதிசயங்களில் ஒன்றாக யுனெஸ்கோ தேர்வு செய்திருந்தது. சரி வா மற்ற கோவில்களையும் பார்க்கலாம்…” என்றவர் மகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு கோவிலாக சுற்றி பார்த்தபடி அதன் தல வரலாறுகளை மகளுக்கு சொல்லிக்கொண்டிருக்க சார்வியின் மனது தனீஷை நோக்கி பாய்ந்துவிட்டிருந்தது.
அவருடன் இந்த கோவிலுக்கு வந்து கைகள் கோர்த்துக்கொண்டு சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை எழ, தூக்கி வாரி போட்டது. ஹையோ என்ன மாதிரி ஆசை இது. நான் இப்படி நினைச்சேன் என்று தனிஷ்க்கு தெரிஞ்சாலே அசிங்கமாயிடும், அதுவும் லாராவுக்கு தெரிஞ்சால் அவ்வளவு தான் பிரச்சினை பூதாகாரமாக வெடிக்கும். முதலில் என் மனசை கட்டுக்குள் கொண்டு வரணும்…
“என்ன கண்ணா ஏதோ தீவிரமா யோசிக்கிற மாதிரி இருக்கு, என்னாச்சு…?
தந்தையின் கேள்விக்கு பதிலாக பெருமூச்சு தான் எழுந்தது.
“நத்திங் வாங்க போகலாம்…”என்றவள் அங்கிருந்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் இடங்களை சுற்றி பார்த்துவிட்டு ரிஸார்ட்க்கு திரும்பினார்கள்.
ரெபிரெஷாகி இரவு உடையில் மாறி ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வர அவளின் கைபேசி சிணுங்கியது அனுஷாவின் அழைப்பில். தோழியின் அழைப்பு என்றதுமே முகம் புன்னகையை பூசிக்கொண்டது.
“சொல்லுடி, எல்லோரும் எப்படி இருக்கீங்க…?
பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு, மாலை கடற்கரையில் தனீஷை சந்தித்து, அவனுடன் ஹோட்டலில் அமர்ந்து பேசியதை கூற சார்விக்கு ஆச்சர்யமாக இருந்தது, அதே சமயம் மனதிற்கு இதமாகவும் இருந்தது.
WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.
“தனீஷ் உன் காதலை பற்றி விசாரிச்சதும் எனக்கு நாக்கு நுனி வரைக்கும் வந்துடுச்சி உன் மனதில் தனீஷ் இருக்காருன்னு சொல்ல. ஆனால் உன்னை கேட்காமல் எப்படி சொல்றதுன்னு தான் சொல்லலை…”என்றாள் சிறு ஏமாற்றத்துடன்.
அனுஷா தன் காதலை தனீஷிடம் சொல்ல ஆசைப்பட்டிருக்கிறாள் என்றதும் மனது பதறியது.
“தேங்க் காட் அனு, நல்லவேலை செய்தே. இனியாவது ஜாக்கிரதையா இரு. அவசரப்பட்டு உளறி வைக்காதே. சரி தனீஷ் என்னை பற்றி விசாரிச்சாரா…”
“நல்லா கேட்கிறே பார் கேள்வியை. அவர் உனக்கு கால் பண்ணாராம், நீ வெளியூர் போயிருக்கே என்றதும் போரடிச்சி போய் வெளியே பீச்க்கு வந்தாராம். அநேகமா உன்னிடம் பேச ஆசைப்பட்டிருக்கணும். என்ன பேச நினைச்சிருப்பார் சாரு…”
தனீஷ் இமிகிரேஷனின் பொழுது அழைத்தது நினைவு வர அவளின் செவ்விதழ்களில் மோன புன்னகை ஒன்று மலர்ந்தது. அனு கேட்ட மாதிரியே என்ன பேச நினைச்சிருப்பார் என்னிடம். இல்லை வழக்கம் போல மன்னிப்பு கோரும் படலத்தை ஆரம்பிப்பாரா…’
யோசிக்கும் பொழுதே புன்னகை சிரிப்பாக மலர எத்தனிக்க தோழி தொடர்பில் இருக்கிறாள் என்ற நினைவு வந்தது.
“அப்புறம் என்ன சொன்னார் அனு…”
“ப்ச் லாராவை நம்பி ரொம்ப ஏமாந்துட்டாராம். நம்ம ப்ரெண்ட்ஷிப்பை நினைச்சி பொறாமையா இருக்காம். சும்மா சொல்ல கூடாது மனுஷன் உன்னை பற்றி பேசும் பொழுது அவர் கண்ணு, உதடு எல்லாமே பேசுது. சாரு நான் ஒன்று சொன்னா கேட்பியா…?
“என்ன…?
“அஃப்கோர்ஸ் நான் தான் தனீஷ் பற்றி யோசிக்காதே, அவருக்கு ஒரு கேர்ள் ப்ரெண்ட் இருக்காள்ன்னு சொன்னேன். ஆனால் இப்போ அவர்களுக்குள் பிரேக் அப் ஆயிடிச்சு. உன் லைனும் கிளியர் ஆயிடிச்சு. தனீஷ் மனசும் உன்னை தேடுதுன்னு நினைக்கிறேன். இது தான் சரியான நேரம் அவரிடம் உன் மனதை சொல்லிடேன். நீங்க ரெண்டு பேரும் தான் மேட் பார் ஈச் அதர் மாதிரி இருப்பீங்க. என்னடி சொல்றே…”
அனுஷா சொன்னதும் அவளுள்ளும் ஆசை எட்டி பார்த்தது. ஆனால் அது சரி வராதென்று உள் மனசு அறிவுறுத்த தன் ஆசையை புதைத்துக்கொண்டாள்.
“இல்லை அனு, நானாக என் மனசை சொல்ல மாட்டேன். அவர் மனதில் நான் இருந்தால் நிச்சயம் அதை என்னிடம் கன்வே செய்வார். அப்பொழுது பார்க்கலாம். இல்லை அவர் சொல்லாமல் போனாலும் வருத்தப்பட மாட்டேன். இனி ஒரு முறை என் டாடை கஷ்டப்பட விடமாட்டேன்.
“சரிடி உனக்கு எது தோணுதோ அதை செய், நீ உன் வேலையை முடிச்சிட்டு வா, நேரில் பார்க்கலாம். குட் நைட்…”
பதிலுக்கு இரவு வணக்கம் கூறி தொடர்பை துண்டித்துவிட்டு தனீஷை பற்றிய யோசனையில் அறையை விட்டு வெளியே வந்து வீட்டின் பின் பக்கம் அமைந்த லானில் அமர்ந்திருந்த தந்தையின் பக்கத்தில் அமர்ந்தாள்.
“என்னடா கண்ணா முகம் வாட்டமா இருக்கு, கோவிலில் கூட நீ திடீர்ன்னு அமைதியாயிட்டே. உன் மனதில் என்னதான்டா ஓடுது. இந்த அப்பாவிடம் சொல்லேன். முடிந்தால் ஹெல்ப் பண்றேன்…”
“பெரிசா ஒன்றுமில்லை டாட், சரி காஃபி எடுத்துட்டு வரட்டுமா…”என்று எழுந்த மகளின் கையை பிடித்தமர்த்தினார்.
“அதெல்லாம் இப்போ வந்துடும். நீ சொல்லு, அனுவிடம் பேசிட்டிருந்தே போல…”
“ஹ்ம்ம், தனீஷை பீச்ல சந்திச்சாங்களாம், அவர் என்னை பற்றி விசாரிச்சாராம். அதான்…” என்றவள் அதற்கு மேல் சொல்ல தயங்கி நிறுத்த ஷரத் மகளை ஊக்குவித்தார்.
அனு சொன்னதை முழுமையாக சொல்லி,”நான் எப்படி டாட் என் மனதை அவரிடம் சொல்ல முடியும். இப்போ அவர் வாழ்க்கையில் யாரும் இல்லை தான். ஆனால் லாராவுக்கும், அவருக்கும் பிரேக் அப் ஆகியிருக்கிற இந்த நேரத்தில் நான் காதலை சொன்னால் அவர் என்ன நினைப்பார், லாரா என்ன நினைப்பா; தனீஷ் குடும்பம் என்ன நினைப்பாங்க. அதை தான் அனுவிடம் சொல்லிட்டிருந்தேன். தனீஷை நினைக்க மாட்டேன்னு சொல்லிட்டு அடிக்கடி அவரை பற்றி நினைக்கிறேன், சாரி டாட்…”என்றாள் மனப்பூர்வமாக.
மகளின் கையை எடுத்து தன் கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டார்.
“உன் நினைப்பை தான் தவறுன்னு சொல்ல மாட்டேன், தனீஷ் வாழ்க்கையில் ஒரு பெண்ணிருந்து அவர்களை தொல்லை செய்தால் தான் தவறு. இப்போ அவர் தனிமரம். இருந்தாலும் நீ நினைக்கிறது சரி தான். கொஞ்ச நாள் போகட்டும், நானே தனீஷ் வீட்டில் பேசறேன், அதற்கு முன்னால் தனீஷ் மனதில் நீ இருக்கியான்னு நாம தெரிஞ்சிக்கணும். அவசரப்பட்டு முடிவெடுத்துட்டு கஷ்டப்படக்கூடாது. புரியுதா கண்ணா…”என்றார் மகளின் கன்னத்தை வாஞ்சையாக வருடி.
“டாட்…”என்று உணர்ச்சிவசப்பட, அவளின் நயனங்களில் கண்ணீர் பூக்கள் மலர, அதை ஒரு விரலால் சுண்டிவிட்டார்.
“என் பெண்ணுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேண்டா தங்கம். எனக்கு எப்பொழுதும் நீ சந்தோஷமா இருக்கணும். அதுக்கு தானே இவ்வளவு சொத்து சேர்த்து வைச்சிருக்கேன். அதை உன் புருஷன், புள்ளைகுட்டியோட சேர்ந்து சந்தோஷமா அனுபவிக்க வேண்டாமா. நீ கவலைப்படாமல் இரு. எல்லாமே நல்லதாவே நடக்கும்…”என சந்தோஷ புன்னகையுடன் தலையை உருட்டினாள்.
“சரி நாளை மார்னிங் நாம உஜ்ஜைன் போறோம். அங்கே மஹாகாளேஷ்வர் கோவில், கால பைரவர் கோவில், சதி தேவியோட ஷக்தி பீடம் அப்புறம் இஸ்கான் கோவில் இதெல்லாம் பார்த்துட்டு அப்புறம் பன்னா போய்டலாம். அங்கேயும் சில கோவில்கள், கோட்டைகள் இருக்கு. அதையும் பார்த்துட்டு நம்ம வேலையை முடிச்சிக்கிட்டு ஊருக்கு கிளம்பிடலாம், ஓகே வா…” என சார்வி தந்தையின் தோளில் நிம்மதியாக சாய்ந்துக்கொண்டாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
சென்னை… சன்யமிட் ஸ்வர்க்…
வண்டியை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைய அவனை எதிர்க்கொண்டார் ஸ்மிரிதி.
“எங்கே போயிட்டே தனீஷ், உனக்கு ரிங் போயிட்டே இருந்தது, எடுக்கவே இல்லை…”என்று படபடத்தார்.
“என்னாச்சு, பீச்க்கு போயிருந்தேன். என்னை ஏன் தேடினீங்க…?
“என்னப்பா கேள்வி இது, இன்னைக்கு லாராவை பெண் பார்க்க வந்திருந்தவங்களுக்கு அவளை ரொம்ப பிடிச்சி போச்சு. மாப்பிள்ளை அடுத்த மாசமே ஆஸ்திரேலியா போவதால் நேரமில்லைன்னு சொல்லி உடனேயே கடைக்கு போய் பட்டுப்புடவை, நகை வாங்கி வந்து சின்னதா கைதாம்பூலம் மாத்திக்கிட்டாங்க. திருமணம் இன்னும் மூன்று வாரத்தில் செய்கிற மாதிரி இருக்கும்…”
“சரி என்னை எதுக்கு தேடினீங்க…?
“கைதாம்பூலம் மாத்திக்கலாம் என்றதும் உன் மாமாவும், அத்தையும் நீ இருந்தால் நல்லா இருக்கும்ன்னு கேட்டாங்க. அதான் அழைச்சேன்…”என்றதும் தனீஷுக்கு எரிச்சலாக இருந்தது.
“மாம் இதில் நானிருந்து என்ன பண்ண போறேன், சம்மந்தப்பட்டவளுக்கு பிடிச்சிருந்தா போதும்…”
“லாராவுக்கு பையனை பிடிச்சிருச்சி, நான் கூட பயந்துட்டே இருந்தேன், ஏதாவது பிரச்சினை செய்வாளோன்னு. நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கலை. எப்படியோ எல்லாமே நல்லபடியா முடிஞ்சிருச்சு. இனிமே உனக்கு வரன் பார்க்க ….”என்று பேசிக்கொண்டிருந்தவர் மகனின் ஊசி பார்வையில் பேச்சை நிறுத்தினார்.
“தனீஷ்…”
“ஆல்ரெடி சொல்லிட்டேன், நானாக எதுவும் சொல்லாத வரை எதையும் நீங்க செய்யக்கூடாது. அது சரி பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கிறது இருக்கட்டும், மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடிச்சிருக்கா, அவளிடம் பேசி பார்த்தானா மாப்பிள்ளை…”
“ஏன் அப்படி கேட்கிறே…?
“மாம் உங்களுக்கு ஏனென்று காரணம் தெரியாதா. பாவம் பையன் ஆள் மெழுகு பொம்மை மாதிரி இருக்குன்னு ஏமாந்துட்டான் போல. உள்ளே நாலு கான்ஜுரிங், ஏழெட்டு காஞ்சனா இருக்குன்னு பாவம் பையனுக்கு தெரியலை. ஹ்ம்ம் யார் பெத்த பிள்ளையோ அவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்…”என்றவன் மடியேறி தன் அறைக்கு செல்ல, ஸ்மிரிதி தான் சிலையாகி போனார் மகனின் பேச்சில்.
தன் தோளில் ஓர் கரம் படியவும், தன்னிலை வந்து திரும்ப, கரண் தான் நின்றிருந்தார்.
“என்ன கரண் இப்படி பேசிட்டு போறான், இவன் சொல்ற மாதிரி லாரா இருந்தால் அந்த பையனின் கதி என்ன…?
“விடு சிமி, அதெல்லாம் லாரா மேனேஜ் பண்ணிக்குவா. அவளுக்கு தனீஷ் மீது என்ன கோபம், அவன் வேறொரு பெண்ணிடம் பேசறான் என்று தானே, ஆனால் பெண் பார்த்துட்டு போனவனுக்கு தனீஷ் மாதிரி பெண்களிடம் பேசற மாதிரி வேலையில்லையாமல் இருக்கலாம். அதனால் லாரா அவனிடம் சண்டை போட வாய்ப்பில்லை…”என கணவனை பார்த்து ங்கே என்று விழித்தார்.
“புரிஞ்சி தான் பேசறீங்களா, நம்ம தனீஷ் மட்டும் ஊரிலிருந்த பெண்களிடம் பேசிட்டு திரிஞ்சானா, சண்டை போடணும்ன்னு நினைச்சிட்டா காரணம் எதற்கு…?
“தாயே சரணம், நான் தெரியாமல் சொல்லிட்டேன். விடு லாராவை திருமணம் பண்ணிக்கிறவன் பாடு, அவன் பார்த்துக்குவான். நீ மனசை போட்டு குழப்பிக்காதே. சரி தனீஷ்க்கு பெண் பார்க்க ஆரம்பிக்கலாமா…?
“ம்ஹீம் இப்போ தான் சொல்லிட்டு போறான், அவன் சொல்லும் பொழுது பார்த்தால் போதும்ன்னு. ஹ்ம்ம் என்னவோ எல்லாம் நல்லபடியா நடந்தால் சரி…”
ஸ்மிரிதி புலம்பியபடி உள்ளே செல்ல, கரண் தோட்டத்து பக்கம் நகரத்தார்.
தனீஷின் அறை…
சார்வியின் தோழிகள் பேசியதையே மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு அனுஷாவின் பேச்சில் முரண்பாடு எட்டி பார்க்க ஆரம்பித்தது. அதன் விளைவாக சார்வியை சந்தித்த முதல் சந்திப்பிலிருந்து நினைவுகளை தட்டி விட்டான். முதல் சந்திப்பில் அவளின் பார்வையில் திமிரும், ஆணவமும், எகத்தாளமும் இருந்தது நன்றாகவே தெரிந்தது. போலீஸ் வந்ததும் நான் கம்பளைண்ட் செய்ததும் அவளின் முகத்தில் அப்படியொரு கோபம்.
இரண்டாம் சந்திப்பில் தோழிகளோடு வந்திருந்தாலும் அவர்கள் தள்ளியே நின்றார்கள். சார்வி மட்டும் தான் என்னிடம் வம்பிழுத்தாள். அதுவும் என் கையை பிடித்து நெஞ்சில் வைத்துக்கொண்டாள். நான் தான் பதறினேன், ஆனால் அவளுள் புதிய ஆடவனை தொடுகிறோம் என்ற பதட்டம் கொஞ்சம் கூட இல்லை. அப்புறம் லாரா சொன்னாளே என்னை தொடர்ந்து ஹோட்டலுக்கு வந்திருக்கிறாள் என்று. யோசிக்க யோசிக்க தனீஷுக்கு சார்வியின் உடல் மொழியிலிருந்து ஒரு விஷயம் புரிந்தது. ஆனால் அது சரியா, தவறா என்று தான் கணிக்க முடியலை.
மூன்றாம் சந்திப்பில் டோட்டலாக வேறு ஆளாக மாறியிருந்தாள். ஆனால் இம்முறை அவள் என்னிடம் அதிகம் பேச முயற்சிக்கவும் இல்லை, வம்பிழுக்கவும் இல்லை. அதன் பிறகு எந்தவொரு சந்திப்பிலும் சார்வி சின்னதாக கூட வார்த்தைகளை விடவில்லை. அவள் மனதை தெரிவிக்கவில்லை. முதல் இரண்டு சந்திப்பில் நடந்ததை வைத்து எப்படி அவள் மனதில் நான் இருக்கிறேன் என்பதை உறுதி செய்வது. உண்மையிலேயே லாரா சொன்ன மாதிரி அவள் என்னை தொடர்ந்து ஹோட்டலுக்கு வந்திருந்தால் அடுத்த சந்திப்பிலும், பேச்சிலும் அவளுடைய மனது வெளிப்பட்டிருக்குமே. ஆனால் அப்படி எதுவும் நடக்கலையே.
பிராங்பர்ட்டிலும் சரி, மதியம் லன்ச்க்கு போன பொழுதும் சரி என்னை தள்ளி வைச்சி பேசினது மாதிரி தான் தெரிஞ்சது. இரண்டுக்கும் ஒத்து போகவே இல்லையே. முதல் சந்திப்பை கூட விட்டுவிடலாம், அது ஒரு எதார்த்தமான சந்திப்பு. ஆனால் ஹாஸ்பிடலில் வந்து வம்பிழுக்கவேண்டிய அவசியமென்ன, ஹோட்டலுக்கும் பின்தொடர்ந்து ஏன் வரணும். ஒரு வேளை என்னிடம் அவள் பேச ஆசைபட்டாளா…ஒண்ணுமே புரியலையே, ஹையோ இதை எப்படி தெளிவுபடுத்திக்கிறது…
