உன்னுள் வசமானேன்…

           ⚠️ Copyright ©️ 2019 - 2026 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, without express written permission of the admin and the authors.

- legal team, ezhilanbunovels.com

அத்தியாயம் -15

தனீஷ் ஹாஸ்பிடலுக்கும், லாரா ஸ்கூலுக்கும் சென்றிருக்க நான்கு பெரியவர்களும் கவலையுடன் சன்யமிட் ஸ்வர்க்கில் கூடியிருந்தார்கள். எல்லோரின் முகத்திலும் கவலை டன் டன்னாக மண்டியிருந்தது. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது, குறை சொல்லி கொள்வதென்று புரியாத சூழ்நிலை. நால்வருக்கும் தெளிவாக தெரிந்த விஷயம் லாரா தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணமென்று.

அவள் தான் தவறே செய்யவில்லை, தான் பேசியது சென்ட் பெர்சன்ட் கரெக்ட் என்று ஒரே பிடியில் நிற்க, தனீஷ் ஒரேடியாக திருமணமே வேண்டாம் என்று விஷயத்தை முதல் நாளே ஊத்தி மூடிவிட்டான். அடுத்து என்ன செய்வது, விஷயத்தை எப்படி கையாள்வது என்று புரியாமல் நால்வரும் கூடி அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு மௌனித்திருந்தனர்.

“இப்படியே அமைதியா இருந்தால் இதுக்கு முடிவு தான் என்ன, அண்ணி தனீஷ் முடிவா என்ன தான் சொல்றான்… “

லாவண்யா தான் மௌனத்தை உடைத்தார் ஆதங்கம் தாளாமல்.

“ப்ச் எனக்கு என்ன பேசறதுன்னு புரியலை லாவண்யா. வெண்ணை திரண்டு வரும் பொழுது தாழியை உடைச்சி கதையா போச்சு, நம்ம பசங்க திருமணம். லாரா கொஞ்சம் அமைதியா போயிருக்கலாம். அவன் ஒரு டாக்டர். போதத்திற்கு ஹாஸ்பிடலில் கூடுதல் பொறுப்பையும் ஏத்துக்கிட்டு இருக்கான். அங்கு வர பெண்களிடம் பேசி தான் ஆகணும். ஆல்ரெடி எங்களிடம் அந்த பெண் சார்வியை பற்றி சொல்லி இருக்கான். ஒரு முறை கூட அந்த பெண் தனீஷ் பின்னால் சுற்றுகிற மாதிரி அவன் சொன்னதே இல்லை. ஆனால் லாரா தேவையில்லாமல் தேரை இழுத்து தெருவில் விட்டுட்டா. அது தான பிரச்சினையாயிடிச்சி…”

“எனக்கும் புரியுது ஸ்மிரிதி, என் பொண்ணு செய்யறது எல்லாம் தப்பு தான். அது எங்களுக்கே தெரியுது. ஆனால் லாரா பிடிவாதமா இருக்காளே தனீஷ் வேண்டுமென்று. இதை எப்படி சால்வ் செய்யறது. நீ ஏதாவது பேசேன் கரண். அமைதியா இருப்பதினால் தீர்வு கிடைக்க போறதில்லை…”என்றார் நிகில்.

“என்னை என்ன சொல்ல சொல்றே, நேற்று தனீஷ் க்ளியர் கட்டா சொல்லிட்டான். இனி ஒரு முறை லாராவுடன் திருமணம் என்ற பேச்சை எடுத்தால் நான் உங்களுக்கில்லைன்னு. அதுக்கும் மேலே என்ன செய்யமுடியும். எல்லாத்தையும் விட அவனுடைய ஆசை முக்கியமில்லையா. அவனை பற்றி தான் உனக்கு தெரியுமே நிகில், ரொம்ப தழைஞ்சி போறவன், கேரிங் மெண்டாலிட்டி உள்ளவன். அவனே கோபமாக பேசறான் என்றால் லாரா அவனை ரொம்ப வெறுப்பேத்தியிருக்கணும். ப்ச் என்ன செய்ய…? என்று புலம்பியபடி தலையில் கையை வைத்துக்கொள்ள ஸ்மிரிதிக்கும் ஒன்றும் புரியவில்லை.

“கரண் நம்ம உறவு நம்ம காலத்தோடு முடிஞ்சிடுமா , இதுக்கு தானா நாம இவ்வளவு கஷ்டப்பட்டோம்…”என்றவருக்கு ஆதங்கம் தாளவில்லை.

மீண்டும் சில கணங்கள் சகிக்க முடியாத மௌனம் அங்கு நிலவ மீண்டும் லாவண்யாவே ஒரு முடிவுடன் பேச்சை துவக்கினார்.

“அண்ணா, அண்ணி, நிகில் நாம இப்போ ஒரு முடிவு எடுத்தே ஆகணும். நடந்தது நடந்து போச்சு. இனி அதை பற்றி பேசி புலம்பி ஒன்றும் ஆக போவதில்லை. இனி என்ன பேசினாலும் தனீஷ் எங்க பொண்ணை ஏத்துக்க மாட்டான். அவன் தெளிவா முடிவு எடுத்துட்டான். அவனை தப்பு சொல்றதிலும் எவ்வித புண்ணியமுமில்லை. இந்த கல்யாணம் டிராப் ஆயிடிச்சு. அதுக்காக கவலைப்பட்டுக்கிட்டே இருந்தால் கால விரயம் தான் ஆகும். நமக்கு ஒரு தெளிவு கிடைக்காது…”

“சரி இப்போ என்ன சொல்ல வர்றே, அதை நேரடியா சொல்லு, எதுக்கு சுத்தி வளைச்சி பேசறே லாவண்…? என்று குறுக்கே புகுந்தார் அவரின் கணவர் நிகில்.

WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.

“அதுக்கு தான் வர்றேன் நிகி, இப்போ நாம லாராவுக்கு வேற இடத்தில் வரன் பார்த்தாகணும், அதே போல தனீஷுக்கும் பெண்ணை பார்க்கணும். இல்லையென்றால் இந்த பிரச்சினையிலேயே நாம உழன்றுக்கிட்டு இருக்க வேண்டியதா போய்டும். அடுத்த வேலை என்னென்று பார்க்கிறது தான் இப்போதைய நிலைமைக்கு புத்திசாலித்தனம். என்ன சொல்றீங்க மூன்று பேரும் …?

“ஹ்ம்ம் நீ சொல்றது சரியா தான் இருக்கு, ஆனால் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு லாவண்யா. நீ என்ன சொல்றே சிமி…”என்றார் மனைவியின் கருத்தை எதிர்பார்த்து.

ஸ்மிரிதி பேசும் முன் நிகில் பேசினார்.

“எல்லாம் சரி, லாவண் சொல்ற மாதிரி மூவ் ஆன் ஆகிறது நல்ல விஷயம் தான். ஆனால் ஒரு விஷயத்தை உன் தங்கச்சி மறந்துட்டா கரண். நாங்க பெத்து வைச்சிருக்கோமே பிடிவாதத்தின் மொத்த உருவம் லாரா, அவ தனீஷை விட்டு வேற ஒருத்தனை திருமணம் செய்ய சம்மதிப்பாளா, அதை யோசிச்சியா…?

“லுக் நிகி, உப்பை திண்றவன் தண்ணீரை குடிச்சே ஆகணும். அவ என்ன சம்மதிக்கிறது, தனீஷை போட்டு வாட்டியதுக்கு கிடைச்ச தண்டனைன்னு எடுத்துக்க வேண்டியது தான். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், ஓவரா செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்கோம். இப்படி விஷ பாட்டிலா வளர்ந்து நிற்ப்பான்னு யார் எதிர்பார்த்தா….?

“ஐயோ அண்ணி என்ன இது பெத்த பெண்ணை விஷ பாட்டில்ன்னு சொல்றீங்க. அவ சின்ன பொண்ணு, ஏதோ தெரியாம செய்துட்டா; இத்தோடு அவளை திட்டறதை விடுங்க. கேட்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கு…” என்று வக்காலத்து வாங்க லாவண்யா கசப்பாக புன்னகைத்தார்.

“அவளுக்கு உங்களை மாதிரி ஒரு மாமியார், தனீஷ் மாதிரி ஒரு நல்ல பிள்ளை கணவனாக வாய்க்க கொடுத்து வைக்கலை. ஏதோ சொல்வாங்களே நாய்க்கு முழு தேங்காய் ஓட்டுமான்னு; அப்படி தான் இருக்கு. தனீஷ் சொல்றமாதிரி அவள் என்ன செய்யறாள்ன்னு தெளிவா தெரிஞ்சு தான் எல்லாமே செய்யறா. இதில் ஏமாளிகள் நாம தான். என்னண்ணா சொல்றீங்க. நான் சொல்றது சரி தானே…?

“என்னமோ போம்மா நம்ம குடும்பத்துக்கு நேரம் சரியில்லை போல. யார் கண் பட்டதோ இப்படியெல்லாம் நடக்குது …”என்று மனது நொந்து பேச லாவண்யாவோ எதிர்மறையாக சிரித்தார்.

“அதென்ன இப்படி சொல்லிட்டீங்க, நம்ம குடும்பத்துக்கு யார் கண்ணும் பட வேண்டாம். நான் பெத்து வைச்சிக்கிறதே போதும் எல்லாத்தையும் கலைச்சி போட. லீவ் இட். நிகி மேட்ரிமோனி ஆபிஸ்க்கு போயிட்டு வரலாம். லாராவோடு டீடைல்ஸ் கொடுத்து அவளுக்கேற்ற மாப்பிள்ளையை பார்க்க சொல்லலாம். இதான் முடிவு. இனி பேசி பேசி தனீஷை கஷ்டப்படுத்தாதீங்க. மனம்போன போக்கில் பேசினால் அதன் கான்ஸிக்குவன்ஸை சந்திச்சு தான் ஆகணும். இது லாராவுக்கு வாழ்நாள் முழுவது ஒரு பாடம்…”

ஒரு பெருமூச்சோடு எழுந்தவர், “அண்ணி நீங்க வர்றீங்களா மேட்ரிமோனியல் ஆபிஸ்க்கு. அப்படியே தனீஷுக்கும் பெண்ணை பார்க்க சொல்லலாம் …”என, ஸ்மிரிதியின் விழிகள் கணவரிடம் பாய்ந்தது.

“இப்போ வேண்டாம் லாவண்யா, எது செய்யறதா இருந்தாலும் தனீஷிடம் பேசிட்டு தான் செய்யணும். நீங்க லாராவுக்கு வரனை தேடுங்க. இந்த வீட்டில் அவள் திருமணமாவாவது முதலில் நடக்கட்டும். அது தான் இப்போதையா நம் மனக்காயத்திற்கு மருந்து. சரி நீங்க கிளம்புங்க. நிகில் நான் சைட்க்கு போறேன். நீ போய் உன் வேலையை பார்…”என்று எழ, எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க சென்றார்கள்.

ஹாஸ்பிடல்…

ஹாஸ்பிடலில் நோயாளிகளின் வரவு அதிகமாக இருக்க, தனிஷ்க்கு மூச்சு விட கூட நேரமில்லாமல் பம்பரமாக சுழன்றுக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்து கிளம்பும் பொழுதே இன்று சார்வியிடம் போன் செய்து பேசவேண்டும் என்று முடிவு செய்திருந்தான். ஆனால் வேலை அவனை மூழ்கடித்துக்கொள்ள போன் செய்ய நேரமில்லாமல் போனது. லன்ச் ஹௌர்ஸ் தாண்டி தான் அவனுக்கு மூச்சு விட முடிந்தது. கான்டீன் சென்று ஒரு சாண்ட்விட்ச் வித் காஃபீ ஆர்டர் செய்துவிட்டு சார்வியின் நம்பருக்கு அழைத்தான்.

பல ரிங் சென்று கட்டாக, விஷ்வாவிற்கு அழைத்தான். சில பல ரிங்கிலேயே தொடர்பில் இணைந்தான்.

“ஹல்லோ டாக்டர், எப்போ ஊரிலிருந்து வந்தீங்க. ஹவ் ஸ் யுவர் ட்ரிப்…? என்று விசாரித்தான்.

“ஹ்ம்ம் நைஸ் விஷ்வா , அப்புறம் சார்வி மேடம் இன்னும் ஊரிலிருந்து வரலையா…?

“நோ டாக்டர், அவங்க இந்த வீகெண்ட் வந்துடுவாங்க, எதுவும் அவசரமா பேசணுமா…?

“நோ விஷ்வா, அவங்க வந்ததும் பேசிக்கிறேன். டெலிவரி வந்த குட்ஸ்ஸை இன்னும் நான் சூப்பர்வைஸ் செய்யலை. பார்த்துட்டு தான் சொல்றேன். பை …”என்று இணைப்பை துண்டித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் டூட்டிக்கு சென்றான்.

ஸ்கூல் …

தன் வகுப்பை முடித்துவிட்டு ஸ்டாப் ரூமில் அமர்ந்திருந்த லாராவின் முகம் தனீஷின் பேச்சை நினைத்து கடுகடுவென்றிருந்தது. ‘ஹவ் டேர் யூ தனீஷ், அவ பசையுள்ள பார்ட்டின்னு தெரிஞ்சதும் என்னை கழட்டிவிட்டுட்டு அவளுடன் கோர்த்துக்க என்னை அக்யூஸ் செய்யறீயா. அப்படி என்ன பெரிசா கேட்டுட்டேன் உன்னை, அவளுடன் ஏன் தேவையில்லாமல் பேசறேன்னு தானே கேட்டேன். என் காதலன் வேற ஒருத்தியோடு பேசினால் எனக்கு கோபம் வர தான் செய்யும். இதுவே நான் வேற ஒருத்தனோடு பேசிகிட்டு அவன் வீட்டுக்கு போனால் நீ சும்மா இருப்பியா. உனக்கொரு நியாயம், எனக்கொரு நியாயமா.

எப்படா சான்ஸ் கிடைக்கும் கழட்டி விடலாம் என்றிருந்த மாதிரி நான் உன்னை கண்டிச்சதும் உடனே வீட்டில் போய் நல்லவன் மாதிரி சீனை போட்டு திருமணத்தை நிறுத்தறே. உன்னை சும்மா விட மாட்டேன் தனீஷ். இந்த லாராவை ரொம்ப சீண்டிட்டே. என் அம்மாவே என்னை கைநீட்டி அடிக்கிற மாதிரி வைச்சிட்டே. இதோட பக்க விளைவுகளை நீ சந்திச்சே ஆகணும்…’

“அப்பப்பா இந்த பசங்களை மேய்க்கிறதுக்கு பேசாமல் பத்து மாடுகளை மெய்ச்சிட்டு போய்டலாம். எல்லாம் சரியான அறுந்த வாலுங்க…”புலம்பல் குரல் கேட்டு வேகமாக நிமிர்ந்தாள்.

இங்கிலிஷ் டீச்சர் ஸுவேதாவை கண்டதும் தன் முகத்தை அவசரமாக சரி செய்தாள்.

“ஏன் என்னாச்சு இந்தளவு புலம்பற அளவுக்கு…?

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அதையேன் கேட்கிறீங்க, ஹோம் ஒர்க் கொடுத்தால் சரியா செய்துக்கிட்டு வர்றதில்லை. டெஸ்ட் வைச்சாலும் நல்ல மார்க் எடுக்கிறதில்லை. கிளாஸில் பத்து ஸ்டூடண்ட்ஸ் தவிர எல்லாம் ஒப்பி அடிக்கிறதில் மன்னியா இருக்குங்க. எப்படி தான் இவங்களை பாஸ் பண்ண வைக்க போறேனோ. இதில் பேரன்ட்ஸ் மீட்டிங்கின் பொழுது ப்ரின்ஸி வந்து என்னை கிழி கிழின்னு கிழிக்கறாங்க. பேசாம வேலையை விட்டுட்டு போயிரலாம் போலிருக்கு.

ப்ச் அதை விடு, ஆமாம் நீ என்ன அதுக்குள்ளே ஸ்கூலுக்கு வந்துட்டே. ஒரு மாசம் தானே லீவ் போட்டே உன் பியான்ஸியோடு வெகேஷன் போறேன்னு. இரண்டு வாரம் தான் ஆச்சு. அதுக்குள்ளே போரடிச்சி போச்சா…?

ஸுவேதாவின் பேச்சில் நக்கல் கலந்திருந்ததோ என்ற சந்தேகம் எழ அவளை உற்று நோக்கினாள்.

“என்னாச்சு டீச்சர், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னையே பார்த்துட்டு இருக்கீங்க. உங்க பியான்சி என்ன சொல்றார். ஒரு நாள் வெளியில் உங்களை ஜோடியா பார்த்தேன். ஹ்ம்ம் சும்மா சொல்லக்கூடாது, உங்க பியான்சி செம ஹாண்ட்ஸம்…”என்று பாராட்டாக கூற, லாராவோ எரிச்சலோடு பார்த்தாள்.

‘ஆமாம்டி மத்தவளுடைய புருஷன் தான் உங்க எல்லோர் கண்ணுக்கும் அழகா தெரிவானுங்க. ஏற்கனவே ஒருத்தியால் நொந்து நூடுல்ஸ் ஆகி என் வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கு, இதில் இவ வேற …’

கிளாஸை முடித்துவிட்டு லேகாவும், சோஷியல் சைன்ஸ் டீச்சர் வித்யாவும் உள்ளே வந்தார்கள். ஏற்கனவே இருந்த டீச்சர்ஸ்க்கு மதிய வணக்கத்தை சொல்லிவிட்டு தத்தம் இடத்தில் அமர்ந்தார்கள்.

“ஹேய் லேகா இவங்களை பாரேன், சீக்கிரமா வெகேஷன் முடிச்சி வந்துட்டீங்களே, போரடிச்சி போச்சான்னு கேட்டதற்கு பதில் சொல்லாமல் என்னையே முறைச்சிக்கிட்டு இருக்காங்க. ஓகே லாரா அது உங்க பெர்சனல் …”என்று தன் பாடப்பிரிவு புத்தகத்தை பிரித்தாள்.

“எனக்கு ஜெர்மனி குளிர் ஒத்துக்கலை, அதனால் சீக்கிரமே திரும்பி வந்துட்டோம். இதை போய் பெரிய விஷயமா பேசறீங்க, எனக்கு கிளாசுக்கு நேரமாச்சு …”என்று விடுவிடுவென்று வெளியே செல்ல லேகா அவளை பார்த்து கேலியாக சிரித்தாள்.

“ஓ ஜெர்மனி போனாளா, ஹ்ம்ம் ரொம்ப பெரிய ஆள் தான். புளியம்கொம்பா தான் பிடிச்சிருக்கா போல …”என்று ஸுவேதா ஆதங்கப்பட, லேகா மீண்டும் கேலியாக சிரித்தாள்.

“அவ ஜெர்மனி போனது எல்லாம் சரி தான், ஆனால் குளிருக்காக திரும்பி வரலை. அவளுக்கும் அவ பியான்ஸிக்கும் ஏதோ முட்டிக்கிச்சி போல.. அவங்க திருமண பிளான் கூட கான்சல் ஆயிருச்சு. அதான் மூஞ்சை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வைச்சிருக்கா …”

“ஹேய் உனக்கெப்படி தெரியும் லேகா …”என்றாள் வித்யா ஆர்வத்துடன்.

காலையில் அவளுடைய டியர் ப்ரெண்ட் ஒருத்தி இருப்பாளே, பிரெஞ்சு டீச்சர் செலின், அவளோடு பேசிட்டிருந்ததை கேட்டேன். இது சரியான சிடுமூஞ்சி, யாருக்கும் எதையும் கிள்ளி கூட கொடுக்காது. பக்கா சுயநலம்; நம்மகிட்டேயே இப்படி இருக்கே, பாவம் அவனிடம் இது என்ன பேசிச்சோ, பயபுள்ள கிரேட் எஸ்கேப். இவளுக்கு நல்லா வேணும். பாரின் லேங்குவேஜ் டீச்சர் என்ற திமிரில் ஓவரா ஆடினா. அதான் இப்போ ஆண்டவன் ஆப்பு வைச்சிட்டான்…”என்றாள் கருவியபடி.

“ஹேய் நீ என்ன இப்படியெல்லாம் பேசறே, பாவம்டி அவ ஏற்கனவே பிரேக்அப் ஆனதில் நொந்து போயிருக்கா, அவளை போய் …”என்றவளை கையமர்த்தினாள் லேகா.

“நான் எதுவும் செய்யலை ஸுவேதா, அவங்கங்க விதைக்கிறதை அறுவடை செய்துக்கிறாங்க. நான் ஜஸ்ட் கேள்விப்பட்டதை சொன்னேன். நீ அவளுக்கு பாவம் பார்த்தால் கூட உன்னையும் எதிரியா நினைப்பா. ஜாக்கிரதையா இருந்துக்கோ…”என்று அறிவுறுத்த அதுவும் சரி தான் என்றாள் பரிதாபப்பட்டவள்.

அனுராக் நிவாஸ்…

வீட்டுல நுழைந்ததும் நுழையாததுமாக கைப்பையை தூக்கி போட, அது சோபாவின் மூலையில் சென்று விழுந்தது. தொப்பென்று சோஃபாவில் அமர்ந்து தலையை இரு கைகளாலும் தாங்கிக்கொண்டாள் லாரா . டிவியின் முன் அமர்ந்திருந்தாலும், மகளை பற்றிய கவலையிலும், யோசனையிலும் அமர்ந்திருந்தவர் சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்தார்.

மகள் அமர்ந்திருந்த கோலம் ஏதோ பிரச்சினை என்று உணர்த்த, அவளின் தோள் தொட்டு உசுப்பினார் என்னவென்று கேட்டு.

“விடும்மா, என் மீது யாருக்கு அக்கறை இருந்திருக்கு. இருந்திருந்தால் இப்படியெல்லாம் நான் அசிங்கப்பட நேர்ந்திருக்குமா …”என்று விஷயத்தை கூறாமலே பொரிந்து தள்ள லாவண்யா விழித்தார்.

“விஷயத்தை சொல்லு, யார் உன்னை என்ன சொன்னது. நீ ஸ்கூலுக்கு தானே போயிட்டு வர்றே …?

“ஆமாம் இதெல்லாம் நல்லா கேளு. இந்த தனீஷ் முட்டாள்…”என்று பேசிக்கொண்டிருந்தவள் தாயின் உக்கிரமான முறைப்பில் தன் வால்யூமை குறைத்தாள்.

“சரி சாரி மாண்பு மிகு மேதகு தனீஷ் இருக்காரே அவரால் நான் வேலை செய்கிற இடத்திலும் அசிங்கப்பட வேண்டியதா போச்சு. எல்லாம் என் தலையெழுத்து…” என்று தலையில் அடித்துக்கொள்ள லாவண்யா கோபத்துடன் அவளின் கையை பிடித்து தடுத்தார்;

“மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தானென்ற மாதிரி சொல்லாதே. தனீஷ் உன் ஸ்கூலுக்கு வந்தானா என்ன …? என்றார் குழப்பத்தோடு.

“ம்கூம் வந்துட போறான், எனக்கும் அவனுக்கும் பிரேக் அப் ஆயிடிச்சின்னு என்னுடன் வேலை செய்கிற சக டீச்சர்ஸ் கேலியா பார்க்கிறாளுங்க, நக்கலா பேசறாளுங்க. எனக்கு ஒரே அசிங்கமா போச்சு. எப்படி இனி அவளுங்க முகத்தில் முழிப்பேன்…”

“அது சரி உன் விஷயம் ஸ்கூலில் இருந்த மற்றவர்களுக்கு எப்படி தெரிஞ்சது, யார் உன்னை கேலியா பேசினது …?

“இதென்ன போலீஸ் ஸ்டேஷனா இல்லை வீடா…? எல்லாம் சொல்லி தொலைக்கிறேன். நான் என் பிரெண்ட் செலின் கூட காலையில் பேசிட்டிருந்தேன். அதை கேட்டிருப்பா போல அந்த லேகா. மதியம் எல்லா டீச்சரிடம் கேலியா சொல்லி சிரிச்சிட்டிருந்தா. வீணா போனவ …” என்று கருவ லாவண்யாவின் இதழ்களில் கேலி புன்னகை குடியேறியது.

“உன்னை யார் உன் விஷயத்தை செலினிடம் சொல்ல சொன்னது. இருட்டில் அக்கம் பக்கம் பார்த்து பேசு, பகலில் அதுவும் பேசாதேன்னு சொல்வாங்க. நீ ஸ்பானிஷ் டீச்சர் என்றதும் தமிழ் பழமொழியெல்லாம் மறந்துபோச்சு போல. லேகாவை ஏன் குத்தம் சொல்றே. மத்தவங்க வாய்க்கு அவல் கிடைச்சா மெல்ல தான் செய்வாங்க. நீ ஏற்கனவே லேகாவிடம் பிரச்சினை செய்தே இல்லையா. அவளுக்கு உன்னை நக்கல் செய்ய காரணம் கிடைச்சிருக்கு வைச்சி செய்யறா. அதை அனுபவிச்சு தானே ஆகணும். இப்போவாவது புரியுதா நீ செய்கிற செயல் பூமராங் மாதிரி உனக்கே திரும்புதுன்னு. இனியாவது புரிஞ்சிக்கிட்டு நட…”என்று உபதேசித்துவிட்டு உள்ளே சென்றார்.